பஞ்சதந்திரம் தொடர் 54

This entry is part 24 of 35 in the series 29 ஜூலை 2012

முட்டாளுக்குச் செய்த உபதேசம்

‘’ஏதோ ஒரு காட்டில் மரக்கிளையில் கூட்டைக் கட்டிக்கொண்டு ஒரு பக்ஷ¢ தம்பதிகள் வசித்து வந்தன. ஒரு சமயம் தை மாதத்தில் காலமற்ற காலத்தில் பெய்த மழையில் நனைந்து இளம் காற்றினால் உடல் நடுங்கிய ஏதோ ஒரு குரங்கு அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தது. பற்கள் வீணை வாசித்துக் கொண்டு, மிகவும் பரிதாபகரமாக கைகளையும் கால்களையும் ஒடுக்கிக்கொண்டு இருக்கும் அதனிடம் பெண் குருவி இரக்கத்துடன் சொல்லிற்று:

கால்களையும் கைகளையும் பார்த்தால் மனிதனுக்கு இருப்பது போலிருக்கிறது. குளிர் காற்றினாலடிக்கப்பட்டால், மூடனே, நீ ஏன் ஒரு வீடு கட்டிக் கொள்ளக்கூடாது?

அதுவும் அதைக் கேட்டு யோசித்தது.

‘’ஐயோ, தன்னிடம் திருப்தி அடைபவர்களேயன்றோ இந்த உலகம். இந்த அற்பப் பெண்குருவி கூடத் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்கிறது.

இவ்விதம் சொல்வது நியாயம்தான்:

தன்னால் உண்டு பண்ணப்பட்ட கர்வம் யாருக்குத்தானிருப்பதில்லை? கால்களை உயரத் தூக்கிக் குருவி ஆகாயம் விழும் என்ற பயத்தில் படுக்கிறது.

இவ்விதம் எண்ணிக் குரங்கு அதனிடம்,

“ஏ ஊசிமூஞ்சியே, நடத்தைக் கெட்டவளே, துப்புக் கெட்டவளே, பண்டிதை என்று நினைப்பவளே, பேசாமலிரு. இல்லையெனில் உன்னை விடற்றவளாகச் செய்துவிடுவேன்” என்றது.

இப்படி திட்டப்பட்டும் கூட பெண்குருவி திரும்பத் திரும்ப வீடு கட்டுவதைப் பற்றியே சொல்லிவந்தது. அப்பொழுது குரங்கு அந்த மரத்தின் மேல் ஏறி அதனுடைய கூட்டை துண்டு துண்டாகச் செய்து நாசமாக்கிற்று.

அதனால்தான் ‘யோசனை சொல்லத் தகாதவர்களுக்கு’ என்று நான் சொல்கிறேன் என்றது குரங்கு. அதைக்கேட்ட முதலை, ‘’நண்பனே நான் அபராதம் செய்தவனாக இருந்தும்கூட முன்பு நமக்குள் இருந்த நட்பை எண்ணிப் பார்த்து எனக்கு நல்ல உபதேசத்தைக் கொடு’’ என்றது.

‘’நான் உனக்குச் சொல்லமாட்டேன். மனைவியின் வார்த்தையைக் கேட்டு நீ என்னை சமுத்திரத்தில் எறிவதற்கு அழைத்துச் சென்றாய். உனக்கு மனைவி எவ்வளவு அன்பானவளானாலும் அதற்காக அவள் வார்த்தையைக் கேட்டு நண்பர்களையும் உறவினர்களையும் சமுத்திரத்தில் ஏன் எறிகின்றாய்?’’ என்றது குரங்கு.

அதைக்கேட்ட முதலை, ‘’அன்பனே, அது உண்மைதான். இருந்துங்கூட ‘நட்பு ஏழு வார்த்தையால் ஏற்படுகிறது’ என்பதை எண்ணி எனக்குக் கொஞ்சம் நல்லுபதேசம் செய். எவ்விதமெனில்,

நன்மையை விரும்பி மனிதர்களுக்கு உபதேசம் கொடுப்பவர்களை இவ்வுலகிலும் மறுவுலகிலும்கூட துக்கம் வந்தடையாது.

அதனால் எவ்விதத்தில் நான் தவறு செய்திருந்தாலும் எனக்கு உபதேசம் செய்து மன்னிப்புக் கொடு.
உபகாரம் செய்பவனுக்கு நன்மை செய்தால் அந்த நன்மையில் என்ன குணமுள்ளது? அபகாரம் செய்பவனுக்க்ய் நன்மை செய்தால் அந்த நன்மையை நல்லவர்கள் விரும்புகின்றனர்.

என்று சொல்லப்படுகிறது” என்றது முதலை.

அதைக்கேட்ட குரங்கு, “நண்பனே, அது உண்மைதான். இப்பொழுது நீ அங்கு சென்று அந்தப் பெரிய முதலையோடு சண்டை போடு. எவ்விதமெனில்,

அதிக பலசாலிகளை ஸாமத்தாலும் சமரஸத்தாலும், வீரனைப் பேதத்தாலும், நீசனை அற்ப தானத்தாலும் சமசக்தியுள்ளவனை தண்டத்தாலும் வெல்.

என்றது குரங்கு. ‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

ஆளுக்குத் தக்கபடி நட

ஒரு காட்டின் ஒரு பாகத்தில் மஹாசதுரகன் என்ற நரி இருந்தது. அது ஒரு சமயம் காட்டில் ஒரு செத்த யானையைப் பார்த்தது. ஆனால் அதனருகில் சுற்றியதே தவிர அதன் கடினமான தோலை அதனால் கிழிக்க முடியவில்லை.

அப்பொழுது அந்தச் சமயத்தில் இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டு ஒரு சிங்கம் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. சிங்கத்தைப் பார்த்து நரி பூமியில் தலை தொடும்வரை குனிந்து நமஸ்கரித்து தாமரை போன்ற கைகளைக் கூப்பிக் கொண்டு வணக்கத்துடன், ‘’ஸ்வாமி, நான் உங்களுடைய கோலேந்துபவன். உங்களுக்காகவே இந்தத யானையைக் காக்கிறேன். அதனால் இதை எஜமானர் சாப்பிடட்டும்’’ என்றது. அதற்குச் சிங்கம், ‘நான் பிறர் கொன்றதை ஒரு பொழுதும் சாப்பிடமாட்டேன். அதனால் உனக்கே இந்த யானையை நான் அளிக்கிறேன்’’ என்றது. அதைக் கேட்ட நரி சந்தோஷத்துடன், ‘’தங்கள் வேலையாட்களிடம் இவ்விதம் செய்தது சரியானதே’’ என்றது.

பிறகு சிங்கம் சென்றவுடன் ஒரு புலி வந்தது. அதைப் பார்த்ததும் நரி நிலைத்தது. ‘’ஒரு போக்கிரியை வணங்கி ஒதுக்கி விட்டேன். இப்பொழுது இதை எப்படி ஒதுக்குவது? நிச்சயம் இது ஒரு வீரன்தான். அதனால் பேதம் செய்தாலன்றி காரியசித்தியாகாது.

எங்கு சாமமும் தானமும் நடவாதோ அங்கு பேதம் செய்து வசப்படுத்து.

என்று சொல்லப்படுகிறது. மேலும் எல்லோரும் பேதத்திற்குக் கட்டுப்படுகின்றனர்.

வழவழப்பானதும், கடினமானதும் உருண்டையானதும், அழகானது மான முத்தைக்கூட அதன் ஹிருதயத்தைத் துளைக்கத் தெரிந்தால் நூலினால் கட்டலாம்.

என்று சொல்லப்படுகிறது’’ என்று எண்ணிற்று. இவ்விதமே தீர்மானித்து அதன் எதிரில் போய் சிறிது குரலைக் கரகரத்துக்கொண்டு பரபரப்புடன் சொல்லிற்று: ‘’மாமா, ஏன் நீ மரணத்தின் வாயிலில் நுழைந்திருக்கிறாய்? இந்த யானையை சிங்கம் கொன்றிருக்கிறது. என்னை இதற்குக் காலாக நியமித்து, ஸ்னானம் செய்வதற்தாகச் சென்றிருக்கிறது. அது போகும்பொழுது ‘இங்கு ஏதாவது புலி வந்தால் நீ ரகசியமாக எனக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தக் காட்டை நான் புலிகள் அற்றதாகச் செய்யவேண்டும். ஏனெனில் முன்பு நான் கொன்ற யானையை ஒரு புலி சாப்பிட்டு எச்சிலாக்கிவிட்டது. அந்தத நாளிலிருந்து ஆரம்பித்து புலிகளின் பேரில் கோபமாக இருக்கிறேன்’ என்று சொல்லிற்று’’

என்றது.

அதைக் கேட்டு நடுங்கிய புலி அதனிடம், ‘’மருமகனே, எனக்கு உயிர்ப்பிச்சை கொடு. அது இங்கு நேரம் கழித்து வந்தாலும் என்னைப் பற்றிய சமாசாரத்தை நீ அதனிடம் சொல்லாதே’’ என்று சொல்லி வேகமாக ஓட்டம் பிடித்தது.

பிறகு புலி சென்றபின் அங்கு ஒரு சிறுத்தை வந்தது. அதையும் பார்த்து நரி யோசித்தது. ‘’இந்தச் சிறுத்தையோ திடமான பல்லையுடையது. அதனால் இதனாலேயே இந்த யானையின் தோலைக் கிழிக்க வைக்கிறேன்.’’ இவ்விதம் தீர்மானித்து அதனிடம், ‘’ஏ சகோதரி மகனே, ஏன் உங்களைப் பார்த்து வெகுகாலமாயிற்று? என்ன, பசியாக இருப்பவன்போலக் காணப்படுகிறாய்? அதனால் என்னுடைய விருந்தாளியாக இரு.

‘’சமயத்தில் வருபவனே விருந்தாளி.’’

என்று சொல்லப்படுகிறது. இந்த யானையைச் சிங்கம் கொன்றிருக்கிறது. நானும் அதன் கட்டளையின் பேரில் இதைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வருவதற்கு முன்பு இந்த யானையினுடைய மாமிசத்தைச் சாப்பிட்டுத் திருப்தி அடைந்து சீக்கிரம் போய்விடு’’ என்றது நரி.

‘’மாமா, அவ்விதமெனில், எனக்கு இந்த மாமிசம் பிரயோசனமில்லை.

‘’வாழ விரும்புபவன் நூறு நண்பர்களைப் பார்க்கிறான்.’’ என்று சொல்லப் படுகிறது. அதனால் எது ஜீரணமாகுமோ, அதைத்தான் சாப்பிட வேண்டும். அதனால் நான் இங்கிருந்து செல்கிறேன்.’’

என்றது சிறுத்தை.

நரி சொல்லிற்று: ‘’ஏ தைரியமற்றவனே, நிம்மதியாக இருந்து சாப்பிடு. சிங்கம் தூரத்தில் வரும்பொழுது உனக்கு நான் தெரிவிக்கிறேன்’’ என்றது.  பிறகு சிறுத்தையும் அவ்விதமே செய்தது. அது தோலைக் கிழித்துவிட்டது என்று அறிந்ததும் நரி ‘’ஏ மருமகனே, போய்விடு போய்விடு! அந்தச் சிங்கம் வருகிறது’’ அதைக் கேட்டு சிறுத்தை வெகுதூரம் ஓடிவிட்டது.

பிறகு எப்பொழுது அது  சிறுத்தை செய்த துவாரத்தின் மூலம் சாப்பிட ஆரம்பித்ததோ அப்பொழுது மிகவும் கோபத்துடன் வேறு ஒரு நரி வந்து சேர்ந்தது. அதனைத் தனக்குச் சமமான பராக்கிரமம் உடையது என்று பார்த்து, ‘’அதிக பலசாலிகளை சாமத்தாலும்…’’ என்ற செய்யுளைச் சொல்லிக்கொண்டே அதை எதிர்த்துச் சென்று நன் பற்களால் அதைக் கிழித்துத் திக்குகளில் விட்டெறிந்து தான் மட்டும் சுகமாக வெகுகாலம் யானையின் மாமிசத்தைச் சாப்பிட்டது.

அவ்விதமே நீயும் உன் ஜாதியைச் சேர்ந்த சத்துருவை யுத்தத்தால் ஜயித்து திக்குகளுக்கு ஓட்டு. இல்லையெனில் பிறகு அவன் நன்றாக வேரூன்றி உனக்கே நாசத்தை உண்டு பண்ணுவான். எவ்விதமெனில்,

மாடுகளிடமிருந்து ஆகாரத்தையும் பிராமணனிடமிருந்து தவத்தையும் ஸ்திரீகளிடமிருந்து சபலத்தையும் சுயஜாதியினரிடமிருந்து பயத்தையும் எதிர்பார்!

விதவிதமான ஆகாரமும் சுலபமாகப் பெண்களும் கிடைக்கும். ஆனால் பரதேசத்தின் ஒரே தோஷம் சொந்த மனிதர்களே சத்துரு ஆவார்கள்.

என்றும் சொல்லப்படுகிறது’’ என்றது குரங்கு.

‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்ல

தாய்நாடே திருநாடு

ஒரு பட்டினத்தில் சித்திராங்கன் என்ற நாய் இருந்தது. அங்கு வெகுகாலமாகப் பஞ்சம் ஏற்பட்டது. ஆகாரமில்லாததால் நாய் முதலியவை தங்கள் குடும்பத்தை விட்டுச் செல்ல ஆரம்பித்தன. சித்திராங்கனும் பசியால் தொண்டை வறண்டுபோய் அந்தப் பயத்திலேயே வேறு தேசத்திற்குச் சென்றது. அங்கு ஏதோ ஒரு பட்டினத்தில் ஏதோ ஒரு வீட்டுக்காரி வீட்டைச் சரியாகக் கவனியாததால் தினந்தோறும் அவள் வீட்டில்  நுழைந்து அன்னம் முதல் பலவிதமான ஆகாரங்களைச் சாப்பிட்டுப் பரமதிருப்தியடைந்தது. ஆனால் அந்த வீட்டிலிருந்து நாய் வெளிவந்தவுடன் மற்ற கர்வமுள்ள நாய்கள் எல்லா திக்கிலிருந்தும் வந்து அதன் எல்லா அங்கங்களையும் பற்களால் கிழித்தன. அப்பொழுது அது எண்ணிற்று: ‘’சொந்த நாடே உசிதமானது. அங்கு பஞ்சம் இருந்தாலும் சுகமாக இருக்க முடியும். அங்கு ஒருவரும் சண்டை செய்ய மாட்டார்கள். அதனால் என் ஊருக்குத் திரும்புவது உத்தமம்’’ என்று. இவ்விதம் திர்மானித்து அது தன் ஊரை நோக்கித் திரும்பியது.

பிறகு தேசாந்திரம் சென்று திரும்பிய அதை அதன் உறவினர்கள் ‘’ஏய் எப்படிப்பட்ட தேசம்? ஜனங்கள் எப்படி நடந்து கொள்கின்றனர்? என்ன ஆகாரம்? அவர்கள் பழக்க வழக்கமென்ன? என்பதையெல்லாம் சொல்’’ என்று கேட்டனர்.

அது பதிலளித்தது: ‘’அந்த தேசத்தைப் பற்றி என்ன சொல்வேன்?

விதவிதமான ஆகாரமும் சுலபமாகப் பெண்களும் கிடைக்கும். ஆனால் பரதேசத்தின் ஒரே தோஷம் சொந்த மனிதர்களே சத்துரு ஆவார்கள்.

என்று முடித்தது குரங்கு.

முதலை அந்த உபதேசத்தைக் கேட்டு இறப்பதற்குத் தீர்மானித்துக் கொண்டு குரங்கினிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தன் வீட்டை  அடைந்தது. தன் வீட்டில் நுழைந்த துஷ்டனுடன் சண்டைசெய்து திடமான சித்தத்துடனும் பலத்துடனும் அதைக் கொன்று, தன் இருப்பிடத்தைத் திரும்பியடைந்து சுகமாக வெகுகாலம் வசித்தது.

வீரத்தைக் காட்டாமல் சோம்பலால் அடைந்த தனத்தால்  என்ன பயன்? மான்கூட தெய்வம் கொடுத்த புல்லைச் சாப்பிடுகிறது.

என்றொரு பழமொழி உண்டு.

அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் இங்கு முடிவடைகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு:

கிடைத்த பொருளை முட்டாள்தனத்தினால் இழக்கிறவன் துயரப்பட்ட வேண்டியதுதான். மூட முதலையைக் குரங்கு வஞ்சித்தது.

ஐந்து
கவனமற்ற செய்கை

இங்கே கவனமற்ற செய்கை என்ற பெயருடைய ஐந்தாவது தந்திரம் ஆரம்பமாகிறது.

அதன் முதல் செய்யுள் பின்வருமாறு:

நன்கு பார்க்காமலும் நன்கு அறியாமலும் நன்கு
செய்யாமலும் நன்கு சோதிக்காமலும் நாவிதன்
செய்ததுபோல் ஒருவனும் செய்யக்கூடாது.

அரசகுமாரர்கள் ‘’அது எப்படி?’’  என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்:

தெற்குப் பிரதேசத்தில் பாடலிபுத்திரம் என்ற நகரமிருக்கிறது. அங்கு மாணிபத்ரன் என்ற வியாபாரி வசித்து வந்தான். அவன் தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் இவை நான்கையும் செய்தும், விதிவசத்தால் அவனுக்கு தன நாசம் ஏற்பட்டது. பணநாசத்தால் அநேக அவமானங்கள் ஒன்றிற்கு மேலொன்றாக ஏற்பட்டதால் மிகுந்த கவலையடைந்து இரவில் யோசனை செய்தான். ‘’சீ, என்ன தரித்திர நிலை இது! எவ்விதமெனில்,

குணம், சுத்தம், பொறுமை, இரக்கம், அன்பு, குலம் – இவை யாவும் பணமற்ற புருஷனிடம் சோபிப்பதில்லை. மானம், தன்மதிப்பு, அறிவு, நல்லபுத்தி, கர்வம், இவை யாவும் மனிதனுக்குப் பணம் போனவுடன் உடனே நாசத்தையடைகின்றன.
எப்பொழுதும் குடும்பத்தை வகிக்கும் கவலையால் புத்திமான் களுடைய புத்தி-கூட வசந்தகாலக் காற்றினால் அடிக்கப்பட்ட குளிர்காலம் போல் தினந் தோறும் க்ஷ£ணமடைகிறது.

எப்பொழுதும், நெய், உப்பு, எண்ணெய், அரிசி, துணி, விறகு என்ற கவலையால் கூர்மையான புத்தியிருப்பவனுக்குக்கூட தனநாசம் ஏற்பட்டால் புத்தியும் நசிக்கிறது.

ஜலத்தில் நீர்க் குமிழிகள் எப்பொழுதும் ஏற்பட்டும் உடைவதும் போல் தனமற்ற இளைத்த புருஷர்கள் அண்டை அயலிலிருந்தாலும் சோபிப்பதில்லை.

பணக்காரர்கள் எதைச் செய்தாலும் எல்லாம் வெட்கப்படத் தக்கதானாலும் ஜனங்கள் அதை விரசமென்று சிரிப்பதில்லை. சமுத்திரம் கர்ஜித்தாலும் அதை யாரும் நிந்திப்பதில்லை.’’

இவ்விதமாக எண்ணி மறுபடியும் சிந்தித்தான். ‘’அதனால் நான் உபவாசமிருந்து உயிரை விடட்டுமா? பின் இந்தப் பணமற்ற வாழ்வால் ஏற்படும் துக்கத்தால் என்ன பயன்?’’ இவ்விதமே தீர்மானித்துத் தூங்கினான்.

அன்று அவன் கனவில் பத்மநிதி ஜைன சந்நியாசி உருவத்தில் பிரத்யக்ஷமாகி, ‘’ஏ வியாபாரியே, நீ இப்படி விரக்தியடையாதே. நான்தான் பத்மநிதி. உன்னுடைய முன்னோர்களால் சேர்க்கப்பட்டவன். அதனால் இந்த உருவத்திலேயே காலையில் உன்னுடைய வீட்டை வந்தடைவேன். அப்பொழுது நீ என் தலையில்  கட்டையால் அடித்துக் கொல்லவேண்டும். அதன்மூலம் நான் தங்கமயமாகக் குறையாத தனம் ஆவேன்’’ என்றது.

பிறகு காலையில் விழித்த அவன் அந்தக் கனவைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான். ‘’ஐயோ, இது கனவன்றோ! உண்மையாகவும் ஆகலாம், பொய்யாகவும் ஆகலாம். எனக்கு அது தெரியாது. நிச்சயம் இது பொய்யாகத்தான் ஆகவேண்டும். ஏனெனில், நான் இரவும் பகலும் எப்பொழுதும் பணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

வியாதியஸ்தனுக்கும் துக்கமுள்ளவனுக்கும் கவலையுள்ளவனுக்கும் காதலுள்ளவனுக்கும் குடிகாரனுக்கும் மதமுள்ளவனுக்கும் பலனற்ற கனவுகள் தோன்றுகின்றன.

என்று சொல்லப்படுகிறது.

இந்தச் சமயத்தில் அவனுடைய மனைவியின் நகங்களைச் சுத்தம் செய்வதற்காக ஒரு நாவிதன் வந்தான். அவன் நகத்தைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்யும்பொழுது ஜைன சந்நியாசி திடீரென்று தோன்றினார். அப்பொழுது மாணிபத்ரன் அவரைப் பார்த்துச் சந்தோஷமடைந்த மனதுடன், அருகிலுள்ள ஒரு மரக்கட்டையால் சந்நியாசியின் தலையில் அடித்தான் அவரும் தங்கமயமாக ஆகி அந்தக்கணமே பூமியில் விழுந்தார்.

உடனே வணிகன் அவரை வீட்டின் நடுவில் நிலைநிறுத்தி நாவிதனைச் சந்தோஷப்படுத்திச் சொன்னான்: ‘’நண்பனே, என் வீட்டில் நடந்ததை நீ ஒருவருக்கும் சொல்லக்கூடாது’’ என்று. நாவிதனும் அந்தச் சொல்லை ஏற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று யோசனை செய்தான். ‘’நிச்சயம் இந்த நிர்வாண சந்நியாசிகள் யாவரும் தலையில் கட்டையால் தட்டிக் கொல்லப்பட்டால் தங்கமயமாக ஆவார்கள். அதனால் நானும்கூட காலையில் அவர்களில் அநேகரை வரவழைத்து கட்டையால் அடித்துக்கொல்கிறேன். அதனால் நிறையத் தங்கம் கிடைக்கும்’’ என்று இவ்விதம் எண்ணிய அவனுக்குப் பகலும் இரவும் எவ்விதமோ நகர்ந்து சென்றது.

பிறகு காலையில் எழுந்து ஜைன விஹாரத்திற்குச் சென்று உத்தரீயத்தை இடுப்பில் கட்டி ஜைன சந்நியாசியை மூன்று முறை பிரதக்ஷ¢ணம் பண்ணி முழங்கால்களால் பூமியைத் தொட்டு நமஸ்கரித்து, வாயை உத்தரீயத்தின் நுனியால் பொத்திக்கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டு, உச்சஸ்தாயியில் இந்தச் செய்யுளைச் சொன்னான்:

மனதைப் பாவங்கள் செய்யாமல் உள்ளுறவே பரிசுத்தப்படுத்தி எவர்கள் ஞானசாலிகளாயிருக்கிறார்களோ அந்த ஜைனர்களே ஜெயிக்கின்றனர்.

எந்த நாக்கு ஜைனனைப் புகழ்கிறதோ, எந்த மனது அவரிடம் ஈடுபடுகிறதோ, எந்தக்கை அவருக்குப் பூஜை செய்கிறதோ அவை மட்டும் புகழத்தக்கவை.

இப்படிப்பட்ட வேறு பல செய்யுள்களால் பலவிதமாகப் புகழ்ந்து, பிறகு முக்கிய ஜைன பிக்ஷ¤வை அடைந்து கைகளும் முழங்கால்களும் பூமியில் பட நமஸ்கரித்து, ‘நமஸ்காரம், நமஸ்கரிக்கிறேன்’’ என்று சொல்லி, அவரிடமிருந்து தர்மத்தை அதிகரிக்க ஆசீர்வாதமும், பிரம்மசரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்திற்கு உபதேசமும் பெற்றான். பிறகு மிக்க வினயத்துடன் ‘’பகவானே, இன்று நடக்கும்பொழுது எல்லா முனி ஜனங்களுடன் என் வீட்டிற்கு வர வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டான்.

பிக்ஷ¤ சொன்னார்: ‘’ஏ சிஷ்யனே, தர்மத்தை அறிந்துங்கூட ஏன் இப்படிப் பேசுகிறாய்? நாங்கள் என்ன பிராமணர்களா எங்களை அழைக்க? ஏனெனில் நாங்கள் எப்பொழுதும் அந்தச் சமயத்தில் தோன்றியபடி சுற்றிவந்து பக்தியுடன் கூட சிஷ்யனைப் பார்த்து அவன் வீட்டிற்குச் செல்வோம். அதனால் சென்றுவிடு. மறுபடியும் இவ்விதம் சொல்லாதே’’ என்று.

இதைக் கேட்டு நாவிதன் ‘’பகவானே, நான் அறிவேன். அவ்விதமே செய்கிறேன். ஆனால் உங்களுக்கு அநேக சிஷ்யர்கள் சன் மார்க்கத்தில் இருக்கின்றனர். நானோ புத்தகங்களைச் சுற்றிவைக்கத்தக்க தோல் பைகள் தயார் செய்திருக்கிறேன். மேலும் புத்தகங்களை எழுதுவதற்கு எழுதுபவனுக்குக் கூலியும் கொடுக்கப்படும். அதனால் நீங்கள் உசிதமானதைச் செய்யுங்கள். ‘’இவ்விதம் சொல்லி நாவிதன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

அங்கு சென்ற இலவமரத்தாலான தடிகளைப் தயார் செய்து, கதவுகளுக்குப் பின்பு மூலையில் அவைகளை வைத்து, உச்சி சமயத்தில் மறுபடியும் விஹாரத்தின் வாயிலை அடைந்து நின்றான். அப்பொழுது எல்லோரும் வரிசைப்படி வெளிவருபவர்களை குருவாகப் பாவித்து பிரார்த்தித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் யாவரும் பையும் பணமும் கிடைக்கும். ஆகையால் மிகவும் பக்தியுள்ளவர்களான மற்ற சிஷ்யர்களைக்கூட விட்டுவிட்டு சந்தோஷத்துடன் நாவிதன் பின்பு சென்றனர். இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.:

ஆவலைப்பார்! தனியனாகவும், வீட்டைத் திரஸ்கரித்தவனாகவும் கையே பாத்திரமாகவும், திக்குகளே வஸ்திரமாகவும் உள்ளவன்கூட பேராசையால் உலகில் கட்டுப்படுத்தப்படுகிறான்.

பிறகு நாவிதனும் வீட்டின் நடுவில் அவர்களை நுழைவித்து கட்டையால் அடித்தான். அவர்களில் அடிப்பட்டுச் சிலர் இறந்தனர். சிலர் மண்டை உடைந்து கத்துவதற்கு ஆரம்பித்தனர். இதன் மத்தியில் அவர்கள் கத்தும் சப்தத்தைக் கேட்டு ஊரைக்காக்கும் காவலாளிகள், ‘’ஏய், ஊருக்கு நடுவில் இது என்ன பெரிய அமர்க்களம்? வாருங்கள், வாருங்கள்’’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் யாவரும் வேகமாகச் சென்று பார்த்தபொழுது அங்கு ஜைன பிக்ஷ¤க்கள் ரத்தத்தினால் நனைந்த உடம்புடன் நாவிதனின் வீட்டிலிருந்து ஓடுகிறதைப் பார்த்தனர். அவர்கள், ‘’இது என்ன?’’ என்று கேட்டனர்.

அவர்கள் நாவிதனின் விஷயம் முழுவதையும் நடந்தபடி சொன்னார்கள். அவர்களும் நாவிதனை பலமாகக் கட்டி, கொல்லப்பட்டவர்கள் போக மற்ற பிக்ஷ¤க்களுடன் நீதிஸ்தலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ‘’இது என்ன நீ இப்படி துஷ்டக் காரியத்தைச் செய்தாய்?’’ என்று நாவிதனைக் கேட்டார்கள். அவன்  பதிலளித்தாள்: ‘’பெரியவர்களே, என்ன செய்வேன்?’’ என்று கூறி, அவர்களுக்கு மாணிபத்ரனின் விஷயம் முழுவதையும் சொன்னான்.

அவர்கள் மாணிபத்ரனை அழைத்துவரச் சிலரை அனுப்பினர். அவர்களும் சென்று மணிபத்ரனை அழைத்துவந்தனர். நியாயாதிபதிகள் ‘’ஏ, குணவானே, நீ யாராவது பிக்ஷ¤வைக் கொன்றாயா?’’ என்று கேட்டனர். அப்பொழுது அவன் ஜைன பிக்ஷ¤வின் வரலாறு முழுவதையும் சொன்னான். அதற்கு அவர்கள் ‘’ஆஹா, நன்கு சோதிக்காமல் காரியம் செய்த இந்த துராத்மாவான நாவிதனைக் கழுவில் ஏற்றுங்கள்’’ என்று உத்தரவிட்டனர். அவ்விதமே செய்தபொழுது அவர்கள் சொன்னார்கள்:

நன்கு செய்யாமலும் நன்கு அறியாமலும் நன்கு கேட்காமலும் நன்கு சோதிக்காமலும் நாவிதன் செய்ததுபோல் ஒருவனும் செய்யக்கூடாது.

அல்லது, இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

நன்கு சோதிக்காமல் காரியம் செய்யாதே! செய்வதை நக்கு பரீக்ஷ¢த்துச் செய்! இன்றேல், பிறகு வருத்தம் ஏற்படும் – பிராம்மண ஸ்திரீயும், கீரியும் போல,

மாணிபத்ரன், ‘’அது எப்படி?’’ என்று கேட்க அவர்கள் சொன்னார்

தீர விசாரியாமல் ஒன்று செய்யாதே

ஏதோ ஒரு ஊரில் தேவசர்மா என்ற பிராம்மணன் இருந்தான். அவனுடைய மனைவி ஒரு புத்திரனையும் ஒரு கீரியையும் பிரசவித்தாள். பிறகு அவள் பிள்ளைப் பாசத்தால் பிள்ளைபோலவே கீரிக்கும் தன் பால், எண்ணெய் ஸ்நானம் முதலியவைகள் கொடுத்துப் போஷித்து வந்தாள். ஆனால் ‘’இது துஷ்ட ஜாதியாதலால் ஒருசமயம் பிள்ளைக்கு ஏதாவது கெடுதல் செய்யலாம்’’ என்று கீரியை அவள் நம்புவதில்லை. அல்லது இப்படிச் சரியாகத்தான் சொல்லப்படுகிறது:

கெட்ட நடத்தையுள்ளவன், குரூபி, முட்டாள், துக்கம் உண்டு பண்ணுபவன், போக்கிரியும் ஆனகெட்ட பிள்ளைகள் கூட மனதிற்குச் சந்தோஷத்தை உண்டுபண்ணுகின்றனர்.

அவள் ஒரு சமயம் பிள்ளையைப் படுக்கையில் பத்திரமாகப் போட்டு குடத்தை எடுத்துக்கொண்டு கணவனிடம் சொன்னாள்: ‘’ஏ உபாத்தியாயரே, நான் ஜலம் கொண்டு வருவதற்காகப் போகிறேன். இந்தப் பிள்ளையைக் கீரியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’’ என்று. மனைவி சென்றவுடன் பிராமணனும் வீட்டைக் காலியாக விட்டுத் தானும் பிச்சை எடுப்பதற்காக எங்கேயோ சென்றான்.

இந்தச் சமயத்தில் கருநாகம் ஒன்று ஒரு துவாரத்திலிருந்து வெளிவந்து விதிவசத்தால் அந்தக் குழந்தையின் தொட்டிலுக்கு அருகில் ஊர்ந்து சென்றது. அப்பொழுது கீரி அதைத் தன் இயற்கைச் சத்துருவாக எண்ணி, தன் சகோதரனைக் கொன்றுவிடும் என்ற பயத்தால் நடுவழியிலேயே எதிர்த்து, கெட்ட பாம்புடன் சண்டை செய்து அதைத் துண்டு துண்டாகச் செய்து வெகு தூரத்தில் எறிந்தது. பிறகு தன் பராக்கிரமத்தில் சந்தோஷமடைந்து, ரத்தம் சொட்டும் வாயுடன் தன் வீரச்செயலைக் காட்டிக்கொள்வதற்காக தாயை நோக்கிச் சென்றது. தாயும் ரத்தம் வழியும் வாயுடன் பரபரப்புடன் ஓடிவரும் அதைப் பார்த்து, ‘’நிச்சயம் இந்த துராத்மா என் மகனைத் தின்றுவிட்டது’’ என்று பயந்த மனத்துடன் கோபத்தினால் யோசியாமல் அதன்மேல் ஜலம் நிரம்பிய குடத்தை எறிந்தாள். குடம் விழுந்த மாத்திரத்திலேயே உயிரை இழந்த அந்தக் கீரியை அங்கே கவனிக்காமல் விட்டுவிட்டு அவள் வீட்டிற்கு வந்த பொழுது அங்கு  குழுந்தை அவள் விட்டுச் சென்றபடியே இருந்தது. தொட்டிலுக்கு அருகில் ஒரு பெரிய கருநாகம் துண்டு துண்டாகச் செய்யப் பட்டிருப்பதைப் பார்த்தாள். பிறகு உபகாரம் செய்த கீரிப்பிள்ளையை யோசியாமல் கொன்ற துக்கத்தினால் அவள் வருந்திய மனதுடன், தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டாள்.

இந்தச் சமயத்தில் பிராமணனும் சுற்றிவிட்டு எங்கிருந்தோ வாங்கிய பிச்சையுடன் வந்தபொழுது புத்திர சோகத்தினால் பீடிக்கப்பட்ட மனைவி அழுவதைப் பார்த்தான். ‘’பேராசை பிடித்தவனே நீ என் வார்த்தைபடி செய்யாததால் இப்பொழுது உன் கெட்ட காரியமாகிற மரத்தின் பிள்ளையின் சாவு என்ற பலத்தை அனுபவி, அல்லது இது மிகுந்த பேராசையால் குருடர்களுக்கு ஏற்படத்தான் செய்யும். எவ்விதமெனில்,

அதிக ஆசை இருக்கக்கூடாது. ஆசையை விடவும் கூடாது. அதிக ஆசைகொண்டவனின் தலையில் சக்கரம் சுற்றுகிறது.

என்றாள் அவள்.

பிராமணன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, மனைவி சொன்னாள்:

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போதுவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *