ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது.
அந்த கண்கள் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவனை அடையாளம் காட்டிக் கொடுத்தன.நான் அவனை அடையாளம் கண்டுக்கொண்டது அவனுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கலாம்.அவனது முகம் திகைப்பினால் வெளுத்திருந்தாலும் அவனுடையக் கண்கள் என்னை அடையாளம் கண்டுக்கொண்டதுப்போல் எனக்கு மட்டும் பரிச்சயமான மொழியில் சிரித்தன.அவனது விழிகளுடன் எனக்கிருந்த பரிச்சயம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.
“ஜனனியா?” திகைப்பின் ஊடே கேட்டான்.
“ஞாபகம் இருக்கா?” திடிர் அதிர்வில் பூரித்தேன்.
அவன் சிரித்தான்..,அதைவிட அவனது கண்கள் அழகாய் சிரித்தன.
“இம்.. ஞாபகம் இருக்கு.ஆனால் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறே..எப்படி என்னை கண்டுப்பிடிக்க முடிஞ்சது?”
நான் பதில் ஏதும் சொல்லவில்லை.அதற்கு அவனதுக் கண்கள் தான் காரணம் எனச் சொன்னாலும் அவனுக்குப் புரியாது.பல வருடங்களுக்கு முன்பு சிறுவனுமில்லாத… இளைஞனுமில்லாதத் தோற்றத்தில் பதிமூன்று வயது மாணவனாக புகுமுக வகுப்பிற்குள் நுழைந்தபோது அவனது கண்கள் இப்படிதான் குழப்பத்தில் இருந்தன.அதே குழப்பத்தை மீண்டும் இப்போது காண நேருவது ஒருவகையான குதூகலத்தைத் தருகின்றது.
ஆறு வருடங்களாக பயின்ற தமிழ்ப் பள்ளியை விட்டுப் பிரிந்து புதிதாக இடைநிலைப் பள்ளிக்குச் சென்றது வேற்று கிரகத்திற்குள் நுழைந்ததுப் போலிருந்தது.புகுமுக வகுப்பை இரு வகுப்புகளாகப் பிரித்திருந்தார்கள்.பள்ளித் தொடங்கிய இரண்டாவது நாளன்று பக்கத்து வகுப்பிலிருந்து அவனும் சாரதாமணி என்ற மாணவியும் எனது வகுப்பிற்குள் மாற்றப்பட்டார்கள்.
அவர்கள் இருவரும் தோட்டத்து தெலுங்குப் பள்ளியிலிருந்து வந்திருந்தார்கள்.அவர்களுக்குள் தெலுங்கில் உரையாடிக்கொண்டார்கள்.சாரதாமணிக்கு பூனைக்கண்கள்.அவை பெரியதாக இருந்தாலும் சற்று நேரம் உற்று பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.இதில் இன்னோரு வியப்பு அவனும் சாரதாமணியும் நான் பயணித்த அதேப் பேருந்தில் பயணித்தது.
அவன் அமைதியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவனை நல்லவன் என்று சொல்லமுடியாத வகையில் அவனது குணங்கள் இருந்தன.வகுப்பறைக்குள் அமைதியின் வடிவமாக இருக்கும் அவன் பேருந்தில் கூச்சலும் கும்மாளமாக நடந்துக்கொள்வான்.குறிப்பாக பேருந்தில் ஏறும் மாணவிகளையும் பேருந்துக்கு வெளியே நின்றுக்கொண்டிருக்கும் மாணவிகளையும் கேலி செய்து துன்புறுத்துவான்.
அந்த விதத்தில் அவன் மீது எனக்கு வெறுப்பும் அச்சமும் இருந்தன.இருந்தபோதிலும் கோபம் ஏற்பட்டதில்லை.அதற்கு காரணம் அவனது தங்கையாகவோ அல்லது தாய்யாக இருக்கலாம்.எங்களது குடியிருப்பை அடுத்துதான் அவனது தோட்டம் இருந்தது.புகுமுக வகுப்பிற்கு சென்றப் பிறகு தமிழ்ப் பள்ளியில் கற்று தந்த தேவார வகுப்பைத் தொடர முடியாமல் போனதால் தோட்டத்து கோவிலில் தேவாரம் பயின்று வந்தேன்.
அங்கு அவனது தங்கை அறிமுகமானாள். “அக்கா” என்று மழலை மாறாத குரலுடன் என்னருகில் வந்து அமர்ந்துக்கொள்வாள்.முடிந்தவரை தேவாரம் பாட முயல்வாள்.அவனோ பூனையப்போல் அமைதியாக அவனது அம்மாவுடன் அமர்ந்துக்கொள்வான்.
அவனைப் அப்படிப் பார்க்கையில் வியப்பாக இருக்கும்.அவனது அம்மாவின் முகத்தில் எப்போதும் சோகம் ததும்பும்.அனுதாபத்தை அள்ளிக் கொள்ள வைக்கும் முகமாக அது தோன்றியது!அவனின் அப்பா அவர்களை விட்டுவிட்டு அத்தோட்டத்து கங்காணி மகளுடன் ஓடிவிட்டதாக தோட்டத்தில் பேசிக்கொண்டார்கள்.
இப்படியொரு சோகத்தில் இருந்துக்கொண்டு ஏன் அவன் நண்பர்களோடு சேர்ந்து அட்டகாசம் செய்கிறான் என எனக்கு அடிக்கடி தோற்றும்.மறு ஆண்டில் ஒன்றாம் படிவத்தில் நுழைந்தோம்.மற்றப் பள்ளி மாணவர்களுடன், புகுமுகவகுப்பு மாணவர்களையும் இணைத்து வகுப்புகள் பிரிக்கப் பட்டன.நான் முதல் வகுப்பிலும் அவனும் சாரதாமணியும் இறுதி வகுப்புமாக பிரிந்தோம்..
எனது நெருங்கியத் தோழியான அன்பரசியும் அவனது வகுப்பில்…!அன்பரசி நல்ல நிறம்.பதிமூன்று வயது என்றாலும் பதினாறு வயதுக்குரிய பருவ எழில் அவளிடமிருந்தது.வகுப்பில் அவன் செய்யும் சேட்டைகளை இடைவேளை நேரத்தில் சாராதாமணியிடன் சேர்ந்துக்கொண்டு சொல்லிச் சிரிப்பாள்
.அவனிடத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லாததது எனக்கு வருத்தத்தை அளித்தது.அவன் நடக்கையில் சற்று தாங்கித் தாங்கி நடப்பான்.சிறு வயதில் அவன் கொய்யாமரத்திலிருந்து தவறி விழுந்ததால் எழும்பு பிசகி, அது முறையாக சிகிச்சை செய்யாத்தால் அவனது நடையில் அந்த ஊனம் இருந்தது.சாரதாமணி அவனுடன் சண்டையிட்டிக்கொள்ளும் போது அவனை ‘நொண்டி பாலா’ என்று அழைப்பாள்.அவனது தோட்டத்திலும் பலர் அவனை அவ்வாறு அழைப்பதைக் கேட்டிருக்கிறேன்.
அவனது பெயரைப் போன்று எதிர்காலமும் ஊனமாகிப் போய்விடப் போகிறது என்ற கவலை எனக்குள் கலக்கத்தைக் கொண்டு வந்தது.அதன் விளைவுதான் சாரதாமணிக்கும் அவனுக்கும் இடையில் ஏதோ புகைச்சல் ஏற்பட்டு சாரதாமணி என்னை தேடி வந்து உதவி கேட்டபோது மறுக்க முடியாமல் போனது.அதுவே இன்று வரை எனக்குள் ஆறாத வடுவாய் வலித்துக் கொண்டிருக்கின்றது.
“அவனுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுக்கணும்,யாரிடமாவது அறை வாங்கினால் தான் அவன் அடங்குவான்.அதுக்கு சரியான ஆள் அன்பரசிதான்.அன்பரசியை யாராவது உற்றுப் பார்த்தாலே எரித்து விடுவாள்.கடிதம் எழுதினால் சும்மா விடுவாளா?அப்படியோரு கடிதத்தை நீதான் எழுதி தரணும்.முடியுமா?”
சாரதாமணி கெஞ்சிய போது என்னால் மறுக்க முடியவில்லை.மிக கவனமாக கையெழுத்து தெரியாத வகையில் ஆங்கிலத்தில் அவனது பெயரையும் அன்பரசியின் பெயரையும் இணைத்து சில வாசகங்கள் கடிதமாக எழுதினேன். அதை அவன் எழுதியதுப் போல் எழுதி அவனது பெயருடன் முடித்தியிருந்தேன்.
அக்கடிதம் மிக கவனமாக ஒரு வெள்ளிக்கிழமையன்று அன்பரசியின் மேசைக்கு அடியில் புத்தகப்பை வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது.சாரதாமணி தான் அதை வைத்து விட்டு வந்தாள்.அது வெள்ளிக்கிழமை என்பதால் காலைப் வகுப்புகள் சீக்கிரமாக முடிந்து விடுவதும் மாலை வகுப்புகள் இரண்டு மணிக்கு மேல் தொடங்குவதும் எங்களது செயலுக்கு சாதகமாகிப் போனது.
இடைவேளை வரையில் நான் பெரும் தவிப்புடன் காத்திருந்தேன்.நான் பயந்ததைப் போன்றே சாரதாமணி இடைவேளையில் அன்பரசியை முந்திக்கொண்டு வெற்றிக் களிப்போடு வந்து நடந்ததை கூறினாள்.
“கடிதத்தை பார்த்ததும் அன்பரசி அதை சுக்கு நூறாக கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்து ஓங்கி ஒரு அறை விட்டாள். பாவம் அவன் ஆடிப்போயிட்டான்” சாரதாமணி சிரித்தாள்.
மாலையில் பேருந்தில் அவன் அழுதுக் கொண்டே இருந்தான்.தான் அப்படியொரு கடிதத்தை எழுதவில்லை என வாதிட்டு மீண்டும் மீண்டும் அழுதான்.சாரதாமணி யாரும் அறியாத வகையில் பொங்கி பொங்கி சிரித்துக் கொண்டு வந்தாள்.நானோ உள்ளுக்குள் அழுதேன்.அழுதழுது சிவந்திருந்த அவனது விழிகளை காணத் துணிவின்றி உள்ளுக்குள்ளவே மருகினேன்.
ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் முற்றாக மாறிப்போனான்.பேருந்தில் அவனின் ஆட்டம் பாட்டம் இல்லாதுப் போனது.யாரையும் கேலி செய்வதும் இல்லை.மூன்றாம் ஆண்டு தேர்வுக்கு பிறகு சில மாணவர்களுடன் அவன்,அன்பரசி…சாரதாமணி பள்ளி விட்டே காணாமல் போயிருந்தார்கள்.நானும் பக்கத்துத் தோட்டத்துக் கோவிலில் தேவார வகுப்பிற்குப் போகாததால் எனக்கு அவனைப் பற்றி சில ஆண்டுகள் வரை எதுவும் தெரியாது இருந்தது.
பின்னொரு சமையத்தில் சாரதாமணிக்கு திருமணமாகி விட்டதாகவும் அவன் அம்மா தங்கையுடன் தோட்டத்தை காலி செய்துவிட்டு போய்விட்டதாகவும் கேள்விப் பட்டேன்.அன்பரசியும் வேலைக் கிடைத்து வெளியூர் சென்றிருந்தாள்.அவனிடமோ அன்பரசியிடமோ உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேரமுடியவில்லையே என வருந்தினேன்.பல நாட்கள் அந்த விழிகள் அழுத காட்சியை நினைத்து அழுதிருக்கிறேன்
.அந்த விழிகளின் உயிர் துடிப்பு இன்று வரை எனது ஞாபகத்தில் இருந்தால் என்னவோ வாடகை வண்டியில் ஏறியமர்ந்ததும் அவனைக் கண்டுக் கொள்ள வைத்தது.
அவ்விழிகளின் உயிர் துடிப்பிலும் ஒளிச்சிதறலிலும் இன்றும் மாற்றம் இல்லாதது எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. அதே வேளையில் நடந்த உண்மையை சொல்ல இந்த வாய்ப்பை விட்டால் மாற்றொரு வாய்ப்பு அமையாது என உணர்ந்து மன்னிப்பு கேட்க அவனது கண்களை ஏறிட்டேன்.
ஓட்டுனர் இருக்கைக்கு முன் இருந்த கண்ணாடியை ஏறிட்டுப் பார்க்கையில் அவனும் என்னைப் பார்ப்பது தெரிந்தது.எனது பார்வையின் சங்கமத்தைத் தாங்க இயலாதுப் போல் அவன் பார்வையை சட்டென்று வேறுப்பக்கம் திருப்பிக் கொண்ட போது நான் வார்த்தைகளை இழந்தேன்.
அவனின் கண்கள்….
காற்றின் பலவந்ததிற்கு அசைந்தாடிடும் தீபத்தைப் பார்க்கையில் தவிப்பும் உள்ளுக்குள் இரக்கம் சுரப்பதுப் போல் ஒருவித உணர்வு ஏற்படுமே அதுப்போன்ற உணர்வுதான் அவளது கண்களை காண நேருகையில் எனக்கு ஏற்பட்டது.ஆரம்பத்தில் அது ஏனென்று புரியவில்லை.நன்கு சிந்தித்துப் பார்க்கையில் புரிந்ததுப் போல் தோன்றியது.அவளது கண்களில் அப்பாவித் தனம் இருந்தது.மொத்த துன்பத்தையும் அந்த கண்களுக்குள் பிழிந்ததுப் போன்று ஒருவகைச் சோக பாவம் அது!
.கிட்டத்தட்ட அம்மாவின் கண்களுடன் அவளது கண்களும் ஒத்திருந்தன.இதுதான் என்று சுரம் பிரிக்க முடியாத சோகத்திலோ அல்லது அதுப்போன்ற ஒரு சாயலிலோ அவளின் கண்கள் இரண்டும் முழுவதுமாக ஊறிக்கிடப்பதாய் தோன்றிற்றுஅம்மாவைப் போல் அவளுக்குள்ளும் சோகம் இருந்திருக்குமோ என எண்ணிக்கொள்வேன்.
பதினாறு வயதில் திருமணமாகி பதினெட்டு வயதில் கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுடன் அம்மா வாழ்வை இழந்துப் போனார்.அப்பா மிக சுயநலமாய்… அவரது வழியில் போய்விட்டார்.அம்மாவின் போராட்டம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
அம்மா அதிகம் பேசாதவர்.அதிர்ந்துப் பேசி அறவே கேட்டதில்லை.அவளும் அப்படிதான்.அவளின் சிரிப்புச் சத்தம் தோழிகளுடன் அவள் குதூகலித்திருக்கும் தருணங்களில் கூட கேட்காது.தேவாரம் பாடும் போது மட்டும் அவளது குரல் கணீர்ரென்று ஒலிக்கும்.கேட்கும் செவிகளைக் கட்டிப்போடும் அப்படியோரு காந்தக்குரல்…
எந்த வசீகரமும் இல்லாமல் அவளது அசைவுகள் என்னை வசீகரித்திருந்தன.அவளுடன் எவ்விதமான விகல்பமும் இல்லாமல் கண்ணியமான நட்புக்கொள்ள விரும்பினேன்.குழந்தை தனத்திற்கும் வாலிப்ப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் தோன்றும் எந்த உணர்வும் அப்பழுக்கற்றது.எந்த போலிகளையும் அவை கொண்டிருக்காது.
நண்பர்களோடு சேர்ந்துக்கொண்டு பள்ளிப் பேருந்தில் ரகளை செய்யும் போது அவளைப் பார்ப்பேன்.அங்கு நிகழும் சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுப்போல் வெளியில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.அவளது விழிகளை யதார்த்தமாக பார்க்க நேரிட்டாலும் அதில் கனிவு மட்டுமே இருக்கும்.என் செய்கைகள் அவளை வெறுப்பேற்றவில்லை என்பது எனக்கு நிம்மதியளிக்கக் கூடியதாக இருந்தது.
அந்த வேளையில் தான் அன்பரசியின் விவகாரம் நடந்தது.அன்பரசி அழகாய் இருப்பாள்.அப்படியொரு நிறமும் அந்த பதிமூன்று வயதில் அசாதாரணமாக வாய்ந்திருந்த இளமையும் அவளைக் கர்வம் கொள்ள வைத்திருக்க வேண்டும்.அவளிடம் வழிந்து நிற்பவர்களை பார்வையாலையே எரித்துவிட முயல்வாள்.
படிவம் ஒன்றிலிருந்து படிவம் ஆறு வரையிலும் அன்பரசிக்கு இரசிகர்கள் இருந்தார்கள்.அவர்களில் சில மாணவர்கள் அவளிடம் காதல் கடிதம் தந்து வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.மறு ஆண்டில் நான் அவளது வகுப்பு என்பதால் சில காதல் கடிதங்கள் பரிந்துரைக்கச் சொல்லி என் கரம் வந்ததுண்டு.நான் அதில் என்னை ஈடுப்படுத்திக் கொள்ளாதவாறு மிக கவனமாக நடந்துக் கொண்டேன்.
அதற்கு முக்கியக் காரணமே அன்பரசி அவளது தோழி என்பது தான். எவ்வளவோ கவனமாக இருந்தும் யாரோ விரித்த வலையில் நான் விழுந்தவனானேன்.என் பெயருடன் காதல் கடிதம் ஒன்று அவளுக்கு கிடைத்ததும் ஏதும் யோசிக்காமல் அன்பரசி என்னை ஓங்கி அறைந்து விட்டாள்.அதைக் கண்டு சாரதாமணி விழுந்து விழுந்து சிரித்தாள்.நான் சிறுவயது முதல் சாரதாமணியுடன் சேர்ந்தே வளர்ந்தவன் என்பதையும் மறந்து எள்ளி நகையாடினாள்.எனக்கு நேர்ந்த அவமானத்தை அழுகையில் மறைத்துக்கொண்டேன்.
மாலையில் பேருந்தில் அவளையும் சாரதாமணியைத் தவிர மற்ற அனைவரையும் என் நிலை பரிதாபப் பட வைத்தது.சாரதாமணி சிரித்ததை விட அவளின் மௌனம் என்னைக் கொல்லாமல் கொன்றது.அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் என்னை ஏற்றெடுத்துப் பார்ப்பதுக் கூட இல்லை.எப்போதும் அவளது முகத்தை ஏதாவது ஒரு புத்தகத்தினுள் திணித்துக் கொண்டிருந்தாள்.
அது என்னை ஒடிந்துப் போக வைத்தது.அதன் பின் எங்கள் பேருந்துக்குள் நான் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாத மாணவனாகிப் போனேன்.காலத்தின் நகர்ச்சி என்னை அவளிடத்தில் நெருங்க விடாமலே செய்துவிட்டது.
அதே காலம் இத்தனை வருடங்களுக்கு பிறகு என்னை வாகன ஓட்டியாகவும் அவளை அதே வாகனத்தில் பயணிக்கும் பயணியாகவும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.அவள் என்னை எப்படி கண்டுக்கொண்டாள் என்பது இப்போதைய எனது ஆச்சர்யம்.எனது வாகனத்தில் என் பெயரை கண்டிருப்பாளோ?
“சொந்த வண்டியா?”
“ஆமாம்”
“சந்தோசம்”அவள் தலையசைத்து சிரிப்பதைக் கண்ணாடி வழிக்கண்டேன்.
சொல்லி விட வேண்டும் மனதிற்குள் ஆராதிருக்கும் காயத்தை..சொல்லியே ஆகவேண்டும்.
“அன்பரசிக்கு சத்தியமா நான் கடிதம் எழுதலை,ஜனனி.” தொண்டை வரை வந்த வார்த்தைகள் அப்படியே அங்கேயே நின்றன.
அவள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாக சொன்னாள்.மனம் பதைப்பதைத்தது.சொல்ல முடியாமலே போய்விடுமோ?
குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தச் சொன்னாள்.நின்றதும் “எவ்வளவு?” என்றாள்.
“பரவாயில்லை,வேண்டாம்” என்றேன்.
“ஐயோ என்ன இது பாலக்கிருஸ்ணன் …?” இழுத்தாள்.
“பரவாயில்லைனு சொல்றேன் தானே?”
அவளின் கண்களை முழுமையாக ஏறிட்டேன்.கண்ணாடி கூண்டுக்குள் அவை சிறைப்பட்டுக் கிடந்தன.நன்றி சொல்லி விட்டு இறங்கி ஒருசில நொடிகள் தயங்கி நின்றாள், பின் தலையசைத்துவிட்டு நடந்துப்போனாள்.ஒருவிதமான வெறுமை என்னை ஆட்கொண்டது.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு எங்களுக்குள் இந்த சந்திப்பு நிகழ்ந்தும் சொல்ல நினைத்திருந்த உண்மையை சொல்ல முடியாமல் போனது மட்டும் அல்ல அவளது அப்பாவிதனமான, அம்மாவின் கண்களைப் போலவே ஒத்திருக்கும் கருமணிகளைக் கூட காண வாய்க்காமல் போய்விட்டதே?
(முற்றும்)
- அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்
- ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்
- வேதனை – கலீல் கிப்ரான்
- வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24
- நினைவுகளின் சுவட்டில் (96)
- கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
- முள்வெளி அத்தியாயம் -20
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37
- எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்
- இறப்பின் விளிம்பில். .
- ஒரு தாயின் கலக்கம்
- ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்
- அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்
- குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்
- தார் சாலை மனசு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி
- சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.
- ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘
- உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
- “ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”
- அவளின் கண்கள்……
- ’ செம்போத்து’
- மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை
- சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்
- வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
- மாத்தி யோசி…!
- ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்
- தொலைந்த காலணி..
- மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- 2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி
- பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்
- தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.
- பஞ்சதந்திரம் தொடர் 55
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று