ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்

This entry is part 13 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஸ்ரத்தா குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை நாடகங்கள் போடும். தொடர்ந்து 4 நாட்கள், ஒரே மேடையில், அதே நாடகம். பிறகு அவை டிவிடியாகத்தான் கிடைக்கும்.

ஆகஸ்ட் மாதம் 2ந்தேதியிலிருந்து 4 ம் தேதி வரை இரண்டு மணி நேரத்திற்கு 3 சிறிய நாடகங்கள் போட்டனர். நான் பார்த்த 2 நாடகங்கள் பற்றிய ஒரு பார்வை.

கடந்த இரண்டு முறையாக, சரித்திர புராண நாடகங்கள் போட்டதாலும், அரங்க நிர்மாணம் உன்னதமாக இருக்கும் என்றாலும், அவைகளோடு நான் ஒன்ற முடியாது என்பதால், நான் போகவில்லை. இம்முறை அப்படியில்லை. எல்லாம் நவீன சமூக நாடகங்கள்.

இரண்டாவதாகப் போடப்பட்ட நாடகம் “ அந்தரங்கம்”. தீப்தியும் நிக்கும் கணவன் மனைவி. இரண்டு பேரும் வேலைக்கு போபவர்கள். நிறைய சம்பாதிப்பவர்கள். தீப்தி நிக்கை விட கூடுதல் சம்பளக்காரி. மனைவியின் அந்தரங்க வெளிக்குள் கணவனும், கணவனின் அந்தரங்க வெளிக்குள் மனைவியும் பிரவேசிக்க முடியாத, கூடாத, மாடர்ன் தாம்பத்தியத்தைக் கண் முன்னே கொண்டு வருகிறார் ஆனந்த். விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் தன் தோழி நிர்மலாவுக்கு அனுப்பும் மின்னஞ்சலை, தவறுதலாக நிக்கிற்கு அனுப்பி விடுகிறாள் தீப்தி. அவன் பார்ப்பதற்கு முன், அதை டெலீட் செய்ய வேண்டிய கட்டாயம் அவளுக்கு. அவன் அலுவலகத்தில் நுழைந்து, அவன் வரும்வரை காத்திருந்து, விடாப்பிடியாக அவனை அதை டெலீட் செய்ய வற்புறுத்துகிறாள். அவர்கள் இடையே நடக்கும் சம்பாஷணை, ஒரு நவீன தம்பதியரின் வாழ்க்கை, எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடைசியில் தீப்தியே அதை டெலீட் செய்யப் பணிக்கிறான் நிக். வெளியேறும் தீப்தி, டெலீட் செய்யப்பட்ட மெயில் மீண்டும் உயிர் பெற வாய்ப்புண்டா என்று எழுப்பும் சந்தேகத்துடன் முடிகிறது நாடகம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நிக்கும் தனக்குத் தெரிந்தவரிடம் அதையே கோருவதுதான். நவீனத் தம்பதியினரிடம் பரஸ்பர நம்பிக்கை என்பது நூலிழை கூட இல்லை என்பதை பொட்டில் அறைவது போல் சொல்லியிருக்கிறார்கள். 3ல் இதற்கே முதலிடம்.

அடுத்த நாடகம் “ இரண்டாவது மரணம்” சுந்தரத்தின் 70 வயது தந்தை சாகக்கிடக்கிறார். டாக்டர் கையை விரித்து விடுகிறார். இதயம் மட்டும் வென்டிலேட்டர் உதவியுடன் துடித்துக் கொண்டிருக்கிறது. அதை நிறுத்தி அப்பாவை சாகடிக்க மகனுக்கு விருப்பமில்லை. அதனால் 4 வாரம், 3 லட்சம், மனைவியின் வெறுப்பு, அலுவலகத்தில் கெட்டபெயர் என்று ஏகத்துக்கு பிரச்சினைகள். பணப்பிரச்சினை அதிகமாகி, சுந்தரத்தின் இரண்டாவது குழந்தையின் உடல் நலம் கெட்டு, ( “ செத்துப் போனவரை பொழைக்க வைக்கறேன்னு இருக்கறவங்களைச் சாகடிக்கறீங்க” ) அலுவலகத்தில் வேலை போகும் நிலையில், விழித்துக் கொள்கிறான் சுந்தரம்.

“ 70 வசு வரைக்கும் பேத்திகளோட, மகனோட, மருமகளோட சந்தோஷமா இருந்திட்டீங்க.. போதும்பா.. சந்தோஷமா செத்து போயிடுங்க “ என்று வெண்டிலேட்டரை நீக்க அனுமதிக்கிறான் சுந்தரம். ஆனால் அதற்குள்ளேயே அப்பாவின் உயிர் பிரிந்து விடுகிறது. மெலோ டிராமா அதிகம் உள்ள இந்த நாடகம் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

முதல் நாடகம் “ மடி நெருப்பு “ காத்தாடி ராமமூர்த்தி நடித்தது. நகரமயமாக்கல் வயதானவர்களை எப்படிச் சங்கடப்படுத்துகிறது என்பதுதான் கரு. அதை நான் பார்க்கவில்லை. அதனால் நோ காமெண்ட்ஸ்.

0

கொசுறு

மாநகரப் பேருந்துகளின் கட்டண உயர்வு ஒரு சுமை என்றால், நமக்கு வேண்டிய பேருந்துக்கு காத்திருப்பதும், முக்கால் மணிநேரம் அதன் சுவடே தெரியாமல் கொக்கு போல் சாலையை எட்டி எட்டிப் பார்ப்பதும், பிராண அவஸ்தை. 12பி வண்டிக்கு மாலை 6 மணியிலுருந்து 6.45 வரை காத்திருந்து, அது மெல்ல ஊர்ந்து நாரத கான சபை அருகாமைக்கு போவதற்குள் முதல் நாடகம் முடிந்து விட்டது. 6.15 லிருந்து ஒரு குஸ்தி வீரனைப் போல் கால் மாற்றி, கால் மாற்றி, நின்று கொண்டிருந்த என் தோழன் முகம்மது அலிக்கு என்னால் கூடுதல் அவஸ்தை.

நாரத கான சபையின் வாசலில் இருக்கும் வுட்லாண்ட்ஸ் தோசை மாஸ்டர், கின்னசுக்கு விண்ணப்பிக்கலாம். சொன்ன இரண்டாவது நிமிடத்தில் அனைவருக்கும் சுடச்சுட மசால் தோசை! அதைவிட சூப்பர், சின்ன வெங்காயம் மிதக்கும் அளவில்லாத சாம்பாரும், அப்போது அரைத்த மாதிரியே இருக்கும் தேங்காய் சட்னியும். செம்மொழிப் பூங்காவைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, வுட்லாண்ட்ஸை தொடர்திருக்கலாம் கலைஞர் அரசு. கண்ணுக்கு விருந்தோடு வயிற்றுக்கும் கிடைத்திருக்கும்.

0

Series Navigationஒரு தாயின் கலக்கம்அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *