’ செம்போத்து’

This entry is part 25 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது அவனுடைய பிஸி நேரமாச்சே. நாங்கள் டா போட்டு பேசிக் கொள்ளும் பால்யகால சினேகிதர்கள்.
“டேய்! வேணு! ரெட்டேரியில வெளிநாட்டுப் பறவைங்க எக்கச்சக்கமாய் வந்து எறங்கியிருக்காம்டா. கெளம்பு.”.
வேலைகளை அப்படியப்படியே போட்டுவிட்டு சந்தோஷமாய் கிளம்பிவிட்டேன்.நான் ஒரு பறவை நேசன். ஆர்னித்தாலஜி சம்பந்தமாய் நிறைய தெரியும்..கோல்டன் ஈகிளைப் பற்றி உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கலாம்,ஆனால் அது வருஷத்திற்கு ஒரு முட்டைதான் இடும் என்கிற உபரி தகவல் எனக்குத் தெரியும். ஆல்பட்ராஸ் கடல் பறவையின் மூன்று வகைகளும் என் போட்டோ கலெக்‌ஷனில் இருக்கின்றன. கியூபன் பீஹம்மிங்ஸ் பறவை பத்தி தெரியுமா?, அதன் மொத்த எடையே இரண்டேஇரண்டு கிராம் தான். இப்படி என் மேதாவிலாசங்களை சொல்லிக்கிட்டே போகலாம். சமீபத்தில டால்ஸ்விட்டா என்ற அரிய வகை புறா ஒண்ணு, எஸ்! நம்புங்க சார்! ஒண்ணேஒண்ணு 1.63 கோடிக்கு ஏலம் போயிருக்கு. அது எனக்குத் தெரியும். உங்களுக்கு?.இன்னொரு விஷ்யம் சொல்லட்டுமா?. சில்லிமெட்-என்ற ஆர்க்டிக் பிரதேச பறவையினத்தில் ஆண் பறவைகள் தான் முட்டையிடும். இது எப்படியிருக்கு?. நான் இப்படியென்றால் நாகு—லோக்கல் பாடி.உள்ளுர் பறவைகளின் ஜாதகங்கள் அத்துப்படி.காக்கைக் குருவி எங்கள்ஜாதி, எனும் தலைப்பாகை கட்டாத பாரதி அவன்.
வயல் வரப்பில் நடக்க ஆரம்பித்தோம்.வாய்க்காலில் நீர் புரள்கிறது.சிலுசிலுவென்று ஈரக்காத்து. திட்டுத் திட்டாய் அறுவடைக்குக் காத்திருக்கும் விளைச்சல்கள். காற்றில் லேசாய் கவிச்சை வாடை. .நான் பிழைப்புத் தேடி சென்னையில் போய் செட்டிலாகிவிட்டவன்.,இங்கிருக்கும் வீட்டை விற்பதற்காக பத்து நாட்களாய் வந்து டேரா போட்டிருக்கிறேன்.பேரம் நடந்துக்கிட்டு இருக்கு. நாகு அப்படியில்லை.புரோகிதத் தொழில். சுற்றுவட்டாரத்திலிருக்கும் நாலைஞ்சி கோவிலைப் பிடிச்சி வெச்சிருக்கான் அர்ச்சகர். கோவிலுக்கு போகத்துக்கு ரெண்டு மூட்டை நெல்லு கட்டளை. அது போக அர்ச்சனைத் தட்டில் விழற காசும்,தேங்காய் மூடியும், மேஞ்செலவுக்குக் காணும். என்ற அளவில் சொந்த மண்ணே சுகம் என்று வாழ்பவன்.
“எப்படிடா?இந்த காய்ச்சல் காலத்தில கூட ஏரியில தண்ணி இருக்கா என்ன?.”
“இது ரெட்டை ஏரியோன்னோ? மூணு போகம் விளையும். அதோட இப்ப வெள்ளாமைதான் அத்துப் போச்சோல்லியோ.?. அதனாலதான் ஏரியில தண்ணி இருக்கு…ஹும்! இப்பல்லாம் கொழுத்தவன் தான் வெள்ளாம பண்ணுவன்”
“ஏன் அப்படி?.”
“கட்டுபடி இல்ல வேணு. இப்பல்லாம் கூலிக்கு ஆள் கிடைக்கிறதில்லை. வேர்வை சிந்தாத ஃபேக்டரி வேலை ஆப்பட்றது.. கார்மெண்ட்ஸ் ஃபேக்டரி, செல் கம்பெனி, பஸ்ஸுங்க ஊருகுள்ளேயே வந்து ஏத்திண்டு போறது.. அரசு தர்ற இலவசங்களினால .மனுஷாள் கிட்ட சோம்பல் அதிகமாயிட்டுதுடா. அதில்லாம ஆளாளுக்கு கரை வேஷ்டி கட்டிண்டு எத்துல ஏமாத்தி பிழைக்க கத்துண்டுட்டா.. ஐயாயிரம் செலவு பண்ணிட்டு, கடைசியில அறுத்து, ஒப்படிப்பு பண்ணிப் பார்த்தால் நாலாயிரம் கைக்கு வர்றதே துர்லபமாயிருக்கு. இதுக்கே பூச்சி பொட்டு கை வெக்காம இருக்கணும் வெள்ளாமை பண்ணாம இருந்தாலே ஆயிரம் ரூபா லாபந்தானே?..போதும்டா . எங்க கழனியக் கூட வித்துட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்..இதான் நேரம்.சிட்டியிலயிருந்து ஆளுங்க தினசரி கார்ல வந்து இங்க சுத்திண்டிருக்கா. ஏரிக்குக் கீழ பூமி வேகமா பேரம் ஆயிண்டிருக்கு. ஒண்ணுக்கு நாலா பணம். செண்ட்டு முந்நூறு ரூபா வித்ததெல்லாம் இப்ப ஐயாயிரம்.”—சிரித்தான்.
“ அம்மாம் விலை குடுத்து வாங்கி என்ன செய்றதா உத்தேசமாம்?.”
“ ஹ..ஹ…ஹ…அதில்லடா விஷயம். நோக்குத் தெரியாதா?. அங்க திருட்டுத்தனமா சம்பாரிச்ச கறுப்புப் பணத்த வெள்ளையாக்கிற வழிடா இது. .ரோட்டோர பம்ப்செட்லாம் எப்பவோ வித்தாயிடுத்து..”
இப்போது நாங்கள் ஏரியின் வடகோடிக்கு வந்துவிட்டோம்.உள்ளே அடர்ந்த காடாய் கருவேலமரங்கள். ஊடே நடக்கையில் நிழலின் குளிர்ச்சி.புற்றீசல்கள் போல கிளுவைகள்,சர்சர்ரென்று குறுக்கும் நெடுக்கும் பாய்ச்சல் காட்டுகின்றன. பறவைகளின் ஒலிகள் இங்கிருந்தே கேட்க ஆரம்பித்து விட்டன.நாகு சட்டென்று கையை உயர்த்தி என்னை அடக்கிவிட்டு, உற்றுக் கேட்டான்.
“கேக்றதோ?,குயில்டா, ஆண்குயில் கூவறது கேளு.”
“குக்கூ..குக்கூகூ…..”
“இப்ப அதனோட இனவிருத்தி நேரம். இன்னும் ஜோடி கிடைக்கல.”
“எப்படி சொல்ற?.”
“வேடிக்கையைப் பார்த்திண்டே இரு.”
நாகு கையை குவித்து வாயில் வெச்சி, அச்சு அசலாய் குயில் மாதிரியே குரல் குடுத்தான்.நாகு சின்ன வயசிலயிருந்தே இப்படித்தான்.மரங்களில் ஏறி விதவிதமான பறவைக் குஞ்சிகளைப் பிடித்து வந்து வளர்ப்பான். அதுங்க ரெக்கை முளைச்சவுடனே புர்ரென பறந்து ஓடிவிடும்.இவர்களுடையது ரொம்ப ஆச்சாரமான குடும்பம்.இதுக்காக இவங்கப்பா கிட்ட நிறைய அடி வாங்கியிருக்கான்.ஒரு தடவை இவன் வளர்த்த கிளிக்குஞ்சு தொட்டியில விழுந்து செத்துப் போச்சி.அப்படி அழுதான்.அத்தோட குஞ்சுகளை பிடிக்கிறதை விட்டுட்டான்.சொல்லப் போனால் பறவைகளைப் பற்றிய கொஞ்சநஞ்ச டேஸ்ட்டும் எனக்கு நாகு மூலந்தான் வந்திருக்கணும்.
“குக்கூ…குக்கூ…குக்கூ…”—துரத்திலிருந்து குயில் கூவியது. நாகுவும் விடவில்லை.பதிலுக்கு அதேபோல் குரல் கொடுத்தான். அதுக்கு இவன் குரல் சரியாக பிடிபடவில்லை போலும், இப்போது ஸ்தாயியை மாற்றி கூவிப்பார்த்தது. இவனும் அதே ஸ்தாயியில் குரல் கொடுத்தான். ஒரு ஐந்து நிமிடம் போல் இந்த விளையாட்டு தொடர்ந்தது. திடீரென அதன் குரல் அருகாமையில் கேட்க நாகு உஷாராகிவிட்டான். ஒற்றைகுரல் கொடுத்து நிறுத்திக் கொண்டான். அடுத்த நிமிடத்தில் குயில் சடசடவென்று பறந்து வந்து நாங்கள் நின்றிருந்த மரத்தில் வந்து உட்கார்ந்தது. மூச்சுக் காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். கூவயபடி மரத்தை சுற்றிச் சுற்றிப் பறந்தது. இரண்டு முறை கூவிப் பார்த்தது. சந்தேகமாய் தலையை சாய்த்து எங்களைப் பார்த்தது. நாகு சிரித்துக் கொண்டே என்னை இழுத்துக் கொண்டு நடந்தான்.
ஏரிக்கரைமேல் நின்று பார்க்க, கருவேல மரங்களின் மேல் வெள்ளைத்துணி போர்த்தினாற்போல அடைஅடையாய் பல ரகங்களில் நாரைகளும், ரோஸ் பெலிக்கான், ஊசிவால் வாத்துகள்,கூழைக்கடா, குக்கூஸ், இப்படி பலவிதமான பறவைகளும் காணப்பட்டன. அவைகள் போடும் கூச்சல்கள்,ஒரே இரைச்சலாக இருந்தது. ஊர் ஆட்கள் கும்பல் கும்பலாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எப்பவும் இவ்வளவு பறவைகள் இங்கே வந்ததில்லை..
“அப்பா எவ்வளவு பேர்ட்ஸ்?.—நாகு முகத்தில் அப்படியொரு சந்தோஷம். மதகுப் பக்கம் தனித்திருந்த ஒன்றிரண்டு மரங்களில் உள்ளூர் பறவைகள் கும்பலாய் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. நாகு கிட்டே சென்று நோட்டமிட்டுவிட்டு வந்தான்.
“உள்ளூர்காரங்கள்லாம் சண்டைக்குத் தயாராயிட்டா.. எல்லாத்துக்கும் கழுத்து ரோமம் சிலுத்துக் கிட்டு நிக்கிறது. ஒரே ராத்திரியில வந்து ஏரி முச்சூடும் ஆக்கிரமிப்பு பண்ணிண்டால், மண்ணின் மைந்தர்களுக்கு ஆக்ரோஷம் வராதா என்ன?.”
“நாகு! இது சைபீரிய நாரைங்கடா. ரஷ்யாவிலயிருந்து 4500 கி.மீ. பறந்து வருதுன்னா பார்த்துக்கோயேன். இதான் வலசை போறதுன்றது.”.
“ அப்படியா? இப்ப ஒரு விஷயம் சொல்றேன். தெரிஞ்சிக்கோ இங்க பொரிஞ்சி வரப்போற நாரைக் குஞ்சிகளுக்கு இப்பவே ஆபத்தும் ரெடியா வந்திடுத்துடா. ஆந்தைகளும் ,செம்போத்துகளும் அதோ அந்த மரத்தில வந்து எறங்கியாச்சு…அதோ காகம் சைஸ்ல, காகம் மாதிரியே கருப்பா, இறக்கையில பாதி பாக்கு கலர்ல தெரியறதா?.அதான் செம்போத்து. ஏமாந்தா போறும் மத்த கூடுகள்லயிருந்து முட்டைகளையும்,குஞ்சிகளையும் நிமிஷத்தில காலி பண்ணிரும். எமன்.”
அந்த நேரம் உரக்க சத்தம் போட்டு பேசிச் சிரித்தபடி ஒரு கும்பல் எங்களைக் கடந்து சென்றது.. பதறிவிட்டோம்.. ஒவ்வொருத்தன் கையிலும் செத்த நாரை தொங்குகிறது. நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தார்கள். நாகு அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“அய்யரே! ஒவ்வொண்ணும் இன்னா சைஸ் பார்த்தியா?.”
“டேய் சிகாமணி! வாணாண்டா.மஹாபாவம்டா. ரஷ்யாவிலயிருந்து 4500.கி.மீ. தூரம் பறந்து இங்க வருதுன்னு சொல்றா. . ராவும்,பகலும் எத்தினி நாள் பறந்திருக்கும்?.இப்படி வந்து அநியாயமாய் சாவக் கூடாதுடா. புண்ணியமாப் போகும் இதோட விட்ருங்கோ.”
அவர்கள் சிரித்தார்கள்.
“சாமீ! நேத்து ரெண்டை அடிச்சோம். ஒவ்வொண்ணும் மூணு கிலோவுக்கு கம்மியில்லை.லட்டுலட்டா அப்.ப்.பா..என்னா நெய் பசுமைன்ற.?.”—சொன்னவன் நாக்கை சப்புக் கொட்டினான்..எனக்கு அவனை அறையலாம் போல ஆத்திரமாய் வந்தது.
“யோவ்! இந்தப் பறவைகளை வேட்டையாடக் கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமா?. உங்களைப் பத்தி கலெக்டர் கிட்ட புகார்மனு கொடுக்கப் போறேன். போலீஸ் வரும் அப்ப சொல்லுங்க உங்க நெய் பசுமையைப் பத்தி.”
அவர்களில் முக்கியமானவனாகத் தெரிந்த ஒருத்தன் என்னை ஏற இறங்கப் பார்த்தான்.
“அய்யரே! என்னா ஆளு ரேங்கறான்?. சொல்லிவையி.”
“யோவ்! நானும் இந்த ஊரான் தான்.தெரியுமில்ல?.உதார் காட்றியா?.”
“உன் ஜாதகமே தெரியும் தம்பி. ஒரு காலத்தில உங்கப்பன் கரண்ட் ஆபீஸ்ல வேலை செஞ்சான்னா, நீ உள்ளூர்காரனா ஆயிடுவியா?.போடா சர்தான்.”
“இப்ப கலெக்டருக்கு தந்தி குடுக்கப் போறேன்,உன்னால ஆனதைப் பார்த்துக்கோ.”
கூட இருந்தவர்கள் டாய்! என்று நெட்டிக் கொண்டு வந்தார்கள். நாகு தடுத்து வேண்ட, அடங்கினார்கள்..
“சரிய்யா, நாங்க இனிமே கொக்கை சுடலப்பா சரியா?.”—முறைப்பாகச் சென்றார்கள்.
“வேணு! வாண்டாம், எதுவும் பேசாத. சாதிச் சாயம் பூசிடுவா. நீ வேற சாதியாச்சேல்லியோ?.இப்பல்லாம் ஸ்கூல் லெவல்லியே சாதி புத்தி வந்துடுத்து. நாம படிக்கிறச்சே யாராவது சாதியப் பார்த்தமா?.,இப்ப பார்க்கறா. வாத்தியார்ங்க கிட்டயே அந்த பிரிவினை வந்துடுத்து, ஈஸ்வரா! லோகம் கெட்டுடுத்துடா.”.
அடுத்த பத்து நாட்கள் முழுக்க நாகு பிஸி. வேதபுரீஸ்வரர் கோவில் திருவிழா வந்திட்டது. அபிஷேகம், ஸ்வாமி அலங்காரம், ஆராதனை, என்று நாகுவுக்கு நிற்க நேரமில்லை. நானும் மனித செம்போத்துகளிடமிருந்து வெளிநாட்டுப் பறவைகளை காப்பாற்றியே தீருவது என்று சங்கற்பம் செய்துக் கொண்டு, அலைந்ததில் ஒரு வாரம் கழித்துத்தான் கலெக்டரை நேரில் பார்த்து பெட்டிஷன் கொடுக்க முடிந்தது. அடுத்ததாய் ப்ளூகிராஸ் சொஸைட்டிக்கும், வனத்துறைக்கும் மனுவை அனுப்பியாகி விட்டது. நான் மட்டும் எப்பவாவது ஒரு எட்டு ஏரிக்கரைக்கு போய் வந்துக் கொண்டிருந்தேன்..
அவரவர் வேலையிலிருந்து விடுதலையான பின் வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நாகுவை இழுத்துக் கொண்டு பைனாகுலருடன் கிளம்பிவிட்டேன். இப்போது அங்கங்கே கிளைகளில் நிறைய கூடுகள் முளைத்திருந்தன.. பைனாகுலர் மூலம் பார்த்து நாகு குழந்தையைப் போல ஆனந்தக் கூச்சலிட்டான்.. பலவற்றில் சதைச் சுருணையாய் நாரைக் குஞ்சுகள் வெளிவந்திருந்தன. சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு சாய்ந்திருந்த அந்த மரத்தில் காட்டினான்..“க்யா…க்யா…க்க்யா…க்யா!……”— மூன்று நாரைக் குஞ்சுகள் கத்திக் கொண்டிருந்தன. ரோமங்கள் இன்னும் முளைக்க வில்லை. எந்நேரமும் சிவப்பு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு, க்யா…க்க்யா…க்யா……–ஐயய்யோ! இப்ப பார்த்து தாய் நாரை எங்க ஒழிஞ்சிதோ தெரியலியே., கூட்டுக்கு மேல்கிளையில் இரண்டு செம்போத்துகள் கமுக்கமாய் இருந்தன. அடுத்து ஒரே பாய்ச்சல்தான். எல்லாம் முடிந்துவிடும் திடீரென்று கர்.ர்.ர்.ர்.ரென்று பெரும் சத்தம். வேகமாக வந்த நாரையொன்று, முறம் போன்ற தன் இறக்கையினால் ஒரு அடி போட, செம்போத்துகள் இரண்டும் கதறிக் கொண்டு ஓடின, நாகு கைக் கொட்டி சிரித்தான். தாய் நாரை சற்று தூரத்திலிருந்து காவல் காக்கும் போல் தெரிகிறது..திரும்பும் போது பார்த்துவிட்டோம். கரைமேல நின்றுக் கொண்டு அந்த நாரையைத் தின்னும் கோஷ்டி ஏரிக்குள் நோட்டமிட்டுக் கொருந்தது. திக்கென்றிருந்தது. ஐயோ! என்ன செய்யப் போறானுங்களோ தெரியலியே. இவர்கள் முரட்டு மனிதர்கள். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று எல்லாவற்றையும் சாப்பிடக் கூடியவர்கள்.அவர்களை நோட்டமிட்டபடியே நடந்தேன்..
நான் கலெக்டரிடம் மனு கொடுத்து இன்றோடு பதினைந்து நாட்களாகிவிட்டன.. ஒரு நடவடிக்கையும் இல்லை. அதே சமயம் ஊர் ஆட்களும். இதுவரையிலும் வில்லங்கமாய் எதுவும் செய்யவில்லை. படித்தவன் ஏதாவது யோசனையாய் செய்து மாட்டிவிட்ருவான் என்று என்னைப் பற்றி அவர்களுக்கு பயம் இருந்திருக்க வேண்டும், என்றான் நாகு..
அன்று மதியம் வெய்யில் தீட்சண்யம் தாங்காம , குளிப்பதற்காக நானும் நாகுவும் தாமரைக் குளத்துக்கு போவயிலேதான் பார்க்க நேரிட்டது.. ஏரிக்கரைமேலே ஆட்கள் நடமாட்டம் தெரிகிறது, மேலே காக்காய் கூட்டங்கள். ஒரு வேளை மீன் பிடிக்கிறார்களோ?
“ இல்லையே. இன்னும் ஏரி ஏலம் விடலடா. ஏதோ வில்லங்கமா நடக்கிறதுடா.”—நாகு பதைத்தான். ஓடினோம். நெருங்கும் போதே பறவைகளின் பெருங் கூச்சல்.ஐயய்யோ! அந்த துஷ்ட ஜென்மங்கள் என்னவோ அட்டூழியம் பண்றாடா என்றான் நாகு. நாங்கள். ஓடி கரையேறினோம்.
“ஐயோ! ஈஸ்வரா! பகவானே!.”—நாகு தீனமாய் அலறினான்.
நாரைகளை துப்பாக்கியால் சுடமாட்டோம் என்றவர்கள், சுலபமான மாற்றுவழி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தனர். ஒரு தூக்கில் செத்த மீன்கள் இருந்தன. ஒருத்தன் ஒவ்வொன்றாய் எடுத்து, அதன் வாயை நீக்கி, பாட்டிலிலிருந்து இரண்டு சொட்டும், மீன் மேலே ஒரு சொட்டும், பூச்சி மருந்து திரவத்தை இட்டு, தரையில் போட, நடக்கப் போவதை நினைத்து நாகு பதறினான். சிறிது நேரத்தில் நாரைகள் ஆவலாய் வந்து கொத்தி விழுங்கின. சில நிமிஷங்களில் அவை பறக்க எத்தனித்து, தடுமாறி விழுந்து, மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்து, மேலெழும்பி, பொத்பொத்தென்று மயங்கி விழுந்தன. நாகு என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
அடுத்து நடந்தது இதைவிட கொடூரம்.அதை எப்படி விவரித்தாலும் நேரடிக் காட்சியாய் எங்களைத் தாக்கிய அளவு அதிர்ச்சி உங்களுக்கு ஏற்படாது. நாரைகள் மயங்கி விழுந்தவுடனே ஆட்கள் விரைவாக சூரிக் கத்தியுடன் ஓடிப் போய், குற்றுயிரும்,குலைஉயிருமாய் இருக்கையிலேயே சரக்கென்று அதன் கழுத்தை அறுத்து, அவைகள் படபடவென்று அடித்துக் கொண்டிருக்கையிலேயே, கழுத்திலிருந்து முன்பக்கமாய் கால்கள்வரையிலும் நீளமாய் கிழித்து, குடல்களை பிய்த்து எறிந்தார்கள்.. தாமதித்தால் கறியில் விஷமேறிவிடுமாம். நாரைகள் வந்து வந்து மயங்கி விழ விழ, அவைகள் அவசரமாய் அங்கேயே சுத்தப் படுத்தப் பட்டன.
“க்.க்யா…க்யா..க்யா….”—கூடுகளில் இன்னும் கண்களைக் கூட திறக்காத, ரோமங்கள் முளைக்காத, நாரைக் குஞ்சுகளின் கத்தல் இங்கே வரை கேட்கிறது. நேற்றுதான் முட்டையிலிருந்து வெளியே வந்த பச்சை மண்கள், தாயை எதிர்பார்த்து பசியுடன் கத்திக் கொண்டிருக்கின்றன, தாய்கள் மட்டுமில்லை, தந்தைகளும் உலைக்குப் போய்விட்டார்கள் என்பதை அறியாமல்.. நான் குமட்டிக் கொண்டுருந்தேன். நாகுவின் நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. உதடுகள் துடிக்க என்னையே வெறித்துக் கொண்டு நின்றான். இது போன்ற காட்சிகளை தன் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டான். சாகபட்சணியான எங்களை, இந்தக் காட்சிகள் கொடூரமாய் தாக்கின.
“அய்யரே! நாங்க சுடலய்யா., உன் தோஸ்துகிட்ட சொல்லிடு. வெய்யில் தாளாம அதுவாதான் செத்து விழுதுங்க. இல்லடா?..”
“ஆமாமா!.”—மற்றவன்கள் சிரிக்கிறார்கள். இந்த முரட்டு,.மனித செம்போத்துகளிடம் என்ன பேசமுடியும்?.
நாகுவை இழுத்துக் கொண்டு கிளம்பினேன். இந்தக் கொலைபாதகத்தை தடுக்க என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டேன். அங்கே ஃபைல்களில் உறங்கிக் கொண்டிருக்கும் நான் கொடுத்த மனு, தூசு தட்டப்பட்டு, எல்லா நிர்வாக சம்பிரதாயங்களையும் கடந்து, கலெக்டர் வந்து பார்வையிட்டு, நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்தான். ப்ளூகிராஸ்லாம் வந்து காவல் காக்கப்போறதுதான். ஆனால் அதற்குள் இங்கே பட்டணம் பறி போயிருக்கும். அப்புறம் என்ன?. இலங்கையில் நடந்த இனப்படுகொலை போல, நடந்த அநீதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதுடன் அரசு எந்திரம் வாயை மூடிக் கொள்ளப் போகிறது.. நாகுவை தாங்கியபடி நடந்தேன். சே! அட்ரோஷியஸ். சற்றுத் தொலைவில் அவர்கள் வீசியெறிந்த நாரைகளின் விஷக் குடல்களை இப்போது கும்பல் கும்பலாய் உள்ளூர் பறவைகள் தின்ன ஆரம்பித்திருந்தன.
“ஐயய்யோ!. கடவுளே!..யாராவது அதுங்களை காப்பாத்துங்களேன்..”———- நாகு கத்திக் கொண்டிருக்க, நான் அதுகளை காப்பாற்றமுடியுமா? என்று ஓடிக் கொண்டிருக்கிறேன்

——————————————————————————-

Series Navigationஅவளின் கண்கள்……மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

3 Comments

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      ராமவைரவன்,மற்றும் ரேவதி நரசிம்ஹன்-ஆகிய இருவர்களின் கருத்துகளுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *