ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘

This entry is part 20 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பயணம் ஜூன் இதழில், தேவராஜ் விட்டலன் ‘ வாசிப்பை நேசிப்போம் ‘ என்கிற பகுதியில் தில்லி புத்தகச் சந்தையில் வாங்கிய ‘சேவல் கட்டு’ நாவலை விவரித்திருக்கிறார். நல்ல புத்தகங்களைப் பற்றி படித்தவுடன் ஏற்படும் அற்புத உணர்வை விட அதிர்வுதான் அதிகம் ஏற்பட்டது எனக்கு.

சேவல்கட்டு கதை இதுதான். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடக்கும் கதை. பிரதான பாத்திரங்கள் சேவுகபாண்டியன் என்கிற ஆப்ப நாட்டு ஜமீந்தார். சேவல் சண்டையில் தோற்றுப் போகும் சேவுகப்பாண்டியன், நிறையச் சேவல்களை வளர்த்து, சேவல் சண்டைக்காக ஊர் ஊராகத் திரிந்தே உயிரை விடுகிறார். சேவல் சண்டைக்கு தந்தையுடன் செல்லும் மகன் போத்தையா, தந்தையின் நிறைவேறாத ஆசையை முடிக்க எண்ணுகிறான். சேவல் சண்டைக்காகவே சொத்துக்களை இழந்த சேவுக பாண்டியனின் மகன் போத்தையாவும் ஊர் ஊராக அலைகிறான். சேவல் சண்டைக்கு பெயர் பெற்ற கொம்பூதியிலிருந்து கோழிகளையும் முட்டைகளையும் வாங்கி வந்து சண்டைக் கோழிகளைத் தயார் செய்கிறான். கடைசியில் வென்றும் விடுகிறான். ஆலமரக் கொப்புகளிலிருந்து சேவுகபாண்டியன் தன்னைப் பெருமிதத்துடன் பார்ப்பதாக எண்ணிக் கொள்கிறான் போத்தையா.

ஆடுகளத்தோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால். சேவுகபாண்டியனை மாற்றி குழந்தையற்ற பெரியவர் ( வ.ஐ.ச. ஜெயபாலன்) ஆக்கிவிட்டார்கள். அதனால் தனுஷ் வளர்ப்பு மகன் போல சித்தரிக்கப்படுகிறார். ஆங்கிலேய ஆட்சிக்காலம் என்பதை தற்காலத்துக்கு மாற்றி, ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக்கி விட்டார்கள் தப்சியை. வன்மம், குரோதம், நபும்சகத்தனம், இளம் மனைவி மேல் கள்ள உறவு பற்றிய சந்தேகம் என்று நல்ல கதையைக் கொச்சைப் படுத்தி அவார்டும் வாங்கி விட்டார் வெற்றிமாறன்.

வசந்தபாலனிடமாவது, ‘அரவான்’ சு.வெங்கடேசனின் ‘ காவல் கோட்டத் ‘திலிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லுகிற நேர்மையும் தைரியமும் இருந்தது. வெற்றிமாறன் ‘நேர்மை’ இப்படி வெளிப்படுகிறது. பரிசு வாங்கியவுடன் அவர் சொன்னது: ‘ இந்தக் கதைக்குச் சொந்தம் நானல்ல! இந்த ஐவர்தான் ‘ என்று தன் துணை இயக்குனர்களைக் காட்டியது. ஒரு வேளை தவசியின் கதை என்று ஓர் பிரச்சினை எழுந்தால், தான் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற அவரது பண்புக்கு இன்னொரு அவார்டே கொடுக்கலாம்.

அவுட் ஆப் கோர்ட் செட்டில்மெண்ட் மாதிரி தவசிக்கு ஏதாவது தொகை கொடுத்திருந்தால், படம் வெளியாகும் வரை வாயைத் திறக்கக் கூடாது என்று கட்டளையும் போட்டிருந்தால் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படி ஏதும் தெரியாத பட்சத்தில் இது உழைப்புத் திருட்டு என்றே படுகிறது.

இதுவும் கூட கவனிக்கப்படாமல் போயிருக்கும் என்றே எண்ணியிருப்பார் மாறன். அவருக்கு எப்படித் தெரியும் மல்லாங்கிணரிலிருந்து வரும் சிறு பத்திரிக்கை ஒன்றில் இது வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் என்று.

வெற்றிமாறன் தனுஷை வைத்து எடுக்கப்படும் அடுத்த படத்திற்கு கதை இன்னும் முடிவாகவில்லையாம். தவசி வேறு ஏதாவது புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாரா என்று பார்த்து, வெளிவரும் முன்பே வாங்கி வந்துவிடுவது மாறனுக்கு பின்னால் வரும் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

0

Series Navigationசாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    நல்பதிவு. வெற்றிமாறனின் முதல்படமே, உலக திருட்டு விடயம் தான். இதில் இவர்கள் வேறு அவார்ட் இயக்குனர்கள். கேவலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *