இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

author
0 minutes, 4 seconds Read
This entry is part 7 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com)
உதட்டில் ஒன்றோடும்
உள்ளத்தில் வேறொன்றோடும் 
புரட்டுக்கள் புரியாத 
புனித மனம் கொண்டோருக்கு 

இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. 

கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் தனது ஆசியுரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். 

மலையக மண்ணின் மங்கை – கவிஞை
செல்வி எச்.எப். ரிஸ்னா என்பா(ள்)ர்
நிலையிலா உலகில் தன் பெயர் நிலைத்திட
நெஞ்சமர் கவிதை நிறையவே தந்தார்.

திறந்த கதவுள் தெரிந்தவை என்ற தலைப்பிட்டு கவிஞர் ஏ.இக்பால் அவர்கள் தனது அணிந்துரையில் ஒப்பீடு, குறியீடு இவ்விரு முறைகளிலும் குறியீடுதான் கருத்தை செம்மையாக வெளிப்படுத்தும். இப்படிமம் வாசகனை உணரவைக்கும். இக்கருத்தை இத்தொகுதியில் அதிகம் காணலாம். ரிஸ்னாவின் கவிதைகளில் கற்பனை, புதிய பார்வை, பாதிப்பு மூன்றும் கலந்துள்ளன என்கிறார். 

நீ வாழ்வது மேல் (பக்கம் 13) என்ற கவிதை போலி முகம் காட்டிப் பழகும் மனிதர்களுக்கு சாட்டையடியாக விழுந்திருக்கிறது. தன்னை நல்லவன் என்று காட்டிக்கொண்டும், தனக்கு உதவியவர்களை மறந்தும் வாழும் பலருக்கு இக்கவிதை பொருத்தமான அறிவுரையைப் பகிர்ந்து நிற்கிறது. நாம் பழகும், அல்லது பழகிய பலரில் நமக்குத் தெரியாமலேயே பொறாமைக் குணம்கொண்டு குழிவெட்டுபவர்கள் இருக்கின்றார்கள். அத்தகையவர்களை கண்டாலே விலக வேண்டும் என்கிறார் கவிஞர்.

அரிதாரம் பூசாமல்
பழகு – தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக் காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு..
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!

கற்பு என்பது ஆண்வர்க்கத்துக்கும், பெண் வர்க்ககத்துக்கும் பொதுவானது. ஆனால் பெண்கள் சருக்கினால் சரித்திரம், ஆண்கள் சறுக்கினால் சம்பவம் என்று கணித்து வைத்திருக்கிறது இந்த குருட்டு சமூகம். எதுவென்றாலும் உத்தமமமானவர்கள் ஆண்களிலும் இருக்கிறார்கள். பெண்களிலும் இருக்கிறார்கள். அத்தகைய தூய மனம் கொண்ட ஒரு ஆணின் மனது மழை ப்ரியம் (பக்கம் 16) என்ற கவிதையில் இவ்வாறு திறந்திருக்கிறது. 

நகம் கூட உனைத் தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை..
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!

பெற்Nறூரை, குடும்பத்தினரை, சொந்த ஊரை எல்லாம் விட்டு இன்று தலை நகரில் வந்து தமக்கான அடையாளத்தை பலர் பதிய வைக்கின்றார்கள். அவ்வாறு தனது ஆளுமையை பதிய முனையும் பலபேர்களில் கவிஞரும் ஒருவர் என்பது இக்கவிதையினூடே புலப்படுகின்றது. உம்மாவுக்கு (பக்கம் 17)

உம்மா!
பிடிக்கவில்லை..
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!
…………….
…………….
என் வாழ்க்கையின் 
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்..
அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!

ஒரு பெண் சுமங்கலியாய் வாழும் போது வாழ்த்தும் பலபேர் அவள் அமங்கலியாகிவிட்ட பின்பு திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற இடத்துக்கும் அண்ட விடுவதில்லை. சபிக்கப்பட்டவர்கள் போன்று அவர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். தனது துணைவிக்கு அவ்வாறானதொரு நிலைமை வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டும் மரண அவஸ்தையிலிருக்கும் அன்புக் கணவனின் வேண்டுகோளாக ஒரு வீணை அழுகிறது (பக்கம் 30) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய காலத்தில் விதவைகள் மறுமணம் புரிவது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். 

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே..
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகளில் பல சந்தக் கவிதையாக எழுதப்பட்டிருப்பவை. இது அவரது தனித்துவ அடையாளமாகும். ஓசை நயமும், சந்தமும் இணைந்து எழுதப்படும் கவிஞரின் எல்லா கவிதைகளும் தங்கு தடையின்றி எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. முதல் முறை வாசிக்கும்போதே மனதைத் தொட்டுவிடும் வல்லமை ரிஸ்னாவின் கவிதைகளுக்கு உண்டு. அவ்வாறான ஒரு கவிதையின் சில வரிகள் இதோ… (மரணத்தின் தேதி – பக்கம் 45)

இத்தனை நாள் 
பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம் 
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு 
என் உயிரின் 
அந்தம் வரை ஓடும்!

கவிதைத் தொகுதியின் மகுடக் கவிதையாக விளங்கும் இன்னும் உன் குரல் கேட்கிறது (பக்கம் 60) என்ற கவிதை ஓர் ஆத்மாவின் தேடலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கவிதையின் கருத்துக்களில் சொட்டும் ஈரம் மனதிலும் கசிந்துவிடுகிறது. இதோ சில வரிகள்… 

ஷநீ தான் என் எல்லாமே|
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு!

குயிலே! 
உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய் 
கேட்டுக்கிட்டிருக்கு!

மனசாட்சி இல்லாமல், அல்லது சட்டத்து புறம்பான செயல்கள் நம் கண்முன் தினமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான சில விடயங்களைத் தொட்டுக்காட்டி கடல் கொண்டு போகட்டும் (பக்கம் 66) எனும் கவிதை எழுதப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து 
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின் அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படித்தான் வந்ததென்றால்
கடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்!!!

பூ மலர்வது, பொழுது புலர்வது… இப்படி எல்லாமே ஒரு கவிஞனுக்கு உவகையளிப்பன தான். அவ்வாறு பிறப்பவைகள் கூட காலப்போக்கில் பனியின் தொடுகையாகவும், தணலின் சுடுகையாகவும் மாறிப் போகின்றன என்று தனதுரையில் கூறியிருக்கும் நூலாசிரியர் கவிதைகளில் அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோஷம், மலையகம் சார் பிரச்சனைகள், சமூக அவலம், சீதனக்கொடுமை, சுனாமி போன்ற உணர்வுகளும் கலந்திருக்கின்றன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர்; – இன்னும் உன் குரல் கேட்கிறது 
நூலின் வகை – கவிதைகள்
நூலாசிரியர் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
தொலைபேசி – 0775009222, 0719200580
விலை – 180 ரூபாய்
Thanking You.

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Series Navigationமீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறதுமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *