நினைவுகளின் சுவட்டில் – 97

This entry is part 3 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாகப் பின்னடைந்திருந்த பிரதேசத்தின் தாற்காலிக முகாமில், சினிமா, இலக்கியம் ஓவியம் போன்ற கலை உலக விகாசங்களின் பரிச்சயத்தை அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து திறந்த ஒரு ஜன்னல் வழியே பெற்று வரும் பாக்கியத்தைப் போல், எனக்கோ நான் வேலை பார்த்து வந்த எலெக்ட்ரிகல் செக்‌ஷனில் இருந்த மற்ற எவருக்குமோ தோன்றாத சிந்தனைகளை, ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த ஒரு இன்னொரு எங்கள் சகாவுக்கு தோன்றியதை நினைத்தால் இன்றும் கூட வியப்பாகத் தான் இருக்கிறது. எப்படி இந்த மாதிரியெல்லாம் ஒரு கிராமத்தானுக்கு சிந்திக்கத் தோன்றுகிறது!, தோன்றியது மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்தி தன்னையும் மகிழ்வித்துக் கொண்டு எங்களையும் மகிழ்விக்க முடிந்திருக்கிறது! என்றும் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி சிந்திக்கவும் முடியும், அதைச் செயல்படுத்தவும் முடியும் என்பதை அந்த கிராமத்து வளமான கற்பனை கொண்ட மூளை எங்களுக்குக் காட்டிய பிறகும், கல்கத்தாவிலிருந்தும் தில்லியிலிருந்தும் இன்னும் இது போன்ற பெரிய நகர வாழ்க்கையிலிருந்து வந்துள்ள எங்கள் மற்ற சகாக்கள் எவருக்கும் அந்த வழியில் செயல்படத் துணிவில்லை. துணிவில்லை என்று சொல்ல முடியாது. செயல்படத் தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். “அட நீ 12 அடி லாங் ஜம்ப் தாண்டினாயா? எங்களால் முடியாத பெரிய காரியம் தான். வீரச் செயல்தான். சரி.  கைதட்டுகிறோம். ஆர்ப்பரிப்போம்”. அவ்வளவே. அது போல் தான்.

 

கிராமத்திலிருந்து வந்துள்ள அந்த எங்கள் அலுவலக சகாவின் பெயர் மறந்துவிட்டது. அவனுக்கு கல்கத்தாவிலும், தில்லியிலும் உள்ள வெளிநாட்டு தூதரகங்களிலிருந்து நிறையத் தபால்கள் வரும். அந்தந்த நாட்டு விசேஷ தினங்களை ஒட்டி இவன் வாழ்த்து அனுப்புவான். நம் குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போல, அவன் ஒவ்வொரு நாட்டு விசேஷ தினங்களையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டு அந்த தூதரகங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவான். இப்படி எத்தனை இந்தியர்கள், தனி மனிதர்கள் அனுப்புவார்கள்?. ஒரிஸ்ஸாவில் ஏதோ ஒரு புர்லா என்ற இடத்திலிருந்து ஒருவரிடமிருந்து வாழ்த்து வருகிறது என்றால், இந்த மனிதன் முக்கிய புள்ளியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்து அவர்களும் நன்றி தெரிவித்து பதில் தருவார்கள். சாதரண மக்கள் யாரும் இந்த மாதிரி சிரமமெடுத்து வாழ்த்துக்கள் அனுப்ப மாட்டார்கள் என்பது அவர்களது நினைப்பு. இதில் என்ன புண்யமா, புருஷார்த்தமா? ஒரு தம்படி வரும்படியும் கிடையாது. செலவு தான். ஆகவே அதுவும் சரிதான். மேலும், எல்லாம் அவன் வீட்டுக்குத் தான் வரும். அலுவலக முகவரியைத் தந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.

 

“பார், இன்னிக்கு வந்துள்ள கடிதத்தை” என்று காண்பிப்பான். அது ரஷ்யாவோ, ஹங்கரியோ இல்லை அமெரிக்காவோ ஏதோ ஒரு  நாட்டு கல்கத்தாவிலிருக்கும் கன்ஸல் ஜென்ரல் எழுதியிருப்பார்.

 

“தங்கள் குமாரனுடைய பிறந்த நாள் விழாவுக்கு கருணை கூர்ந்து எங்களை அழைத்ததற்கு நன்றி. தங்கள் அழைப்பு, நம் இரு நாடுகளின் அரசு மட்டுமல்ல, மக்கள் கூட கொண்டுள்ள நட்புணர்வின் அடையாளம் என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் உங்கள் குமாரனின் பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் பிரதிநிதியாக ஒருவரை அனுப்ப பெரிதும் விரும்பினாலும், எதிர்பாரா அவசர வேலைகளின் நிமித்தம் அவ்வாறு செய்ய வியாலாது போவதற்கு மிகவும் வருந்துகிறோம்.

 

தங்கள் குமாரனின் பிறந்த நாள் சிறப்புற நடைபெற எங்கள் வாழ்த்துக்கள்.

 

எதிர்காலத்தில் எப்போதும் எங்கள் ஒத்துழைப்பை உறுதி செய்து

 

தங்கள் உண்மையுள்ள,

 

………..

 

என்று ஏதோ சம்பிரதாயமாக வாழ்த்துச் சொல்லி இருக்கும் அந்த கடிதத்தில்.

 

எதுவாக இருந்தாலும், நம்ம அலுவலக நண்பனுக்கு எல்லா நாட்டு கன்சலேட்களிலிருந்தும் கடிதங்கள் வருகின்றன, அவனை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்பதில் அவனுக்கும் ஒரு சந்தோஷம் எங்களுக்கும் உற்சாகம்.

 

சாதாரணமாக அன்றாட அலுவலும் தொடர்பும் கொண்டுள்ள குத்தகைக்காரர்கள், கீழ்மட்ட ஊழியர்கள், தில்லியிலிருந்து வரும் கடிதங்கள், பலவற்றுக்கு நாங்கள் பதிலே தருவதில்லை. அந்தந்தக் கோப்பில் அவை சமாதியாகும். அதனால் எந்த உத்பாதமும் நேர்ந்ததில்லை. எங்கள் வேலைக்கோ, அலுவலகத்துக்கோ. அப்படியிருக்க நம்ம பக்கத்து நாற்காலி தாசுக்கு மாத்திரம் யார் யாரெல்லாமோ கடிதம் எழுதுகிறார்கள். இவன் வீட்டு விழாவுக்கு வாழ்த்து அனுப்புகிறார்கள்!

 

”ஏன்டா தாஸ், அவன் எவனாவது வந்து தொலைஞ்சான்னா என்னடா செய்வே? என்று கேட்டால், அவன் சிரிப்பான். இரண்டு மூன்று வருஷமா இதைச் செய்துகொண்டிருக்கிறேன். இது வரைக்கும் அது நடந்ததில்லை”. ஒரு பதில் கடிதம் போட்டால், அவர்களுக்கு நினைப்பு, பார், இவர்கள் எவ்வளவு அக்கரை கொண்டிருக்கிறார்கள், நம்ம அரசாங்கம் இப்படி நம்மை மதித்து பதில் தருகிறதா?” என்ற எண்ணத்தை பரப்புவதை விட்டு, இங்கு வருகிறார்களாக்கும்” அவர்கள் அளவுக்கு, ஒரு பயிற்றுவிக்கப்பட்ட ராஜ தந்திரி மாதிரி இவனும் இவ்வளவு தந்திர புத்தியோடு வேலை செய்கிறானே, என்று நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போவோம். இதோடு மட்டுமல்லாமல் அந்தந்த நாட்டு பிரசார புத்தகங்கள், துண்டுபிரசுரங்கள் எல்லாம் அவனுக்கு வந்து குவியும்.

 

எப்படித்தான் இங்கு புர்லாவில் உட்கார்ந்து கொண்டு, கல்கத்தாவில் இருக்கும் அத்தனை ஹைகமிஷன்களுக்கும் கன்சுலேட்டுக்களுக்கும் அவற்றின் முகவரி தெரிந்து எப்படி எழுதுகிறான்? இந்த சாதாரண முதல் அடி எடுத்து வைக்கவே எங்களுக்கு தெரியாது விழித்தோம். கேட்டால் ஒரு நமட்டுச் சிரிப்புத் தான் அவனிடமிருந்து வரும்.

 

 • ஒவ்வொத்தருக்கு எப்படியெல்லாம் மூளை வேலை செய்கிறது, என்னென்னவெல்லாம் யோசித்து தம் நேரத்தை ஒரு உல்லாசத்துடன் கழிக்கிறார்கள் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். தாஸ் (இது அவன் பெயரில்லை. இங்கு ஏதாவது பெயர் கொடுக்க வேண்டுமே) எங்கள் எல்லாரிலும் வித்தியாசமான மனிதன் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

கோவை மாவட்டத்திலோ என்னவோ ஒரு கிராமத்து விவசாயி, பள்ளிக்கூடமே கண்டிராத விவசாயி, வித விதமான சவுக்கு மரங்களை, வித விதமான மற்ற தாவர வகைகளை, பயிர்செய்து இருக்கிறார். எல்லாம் தன் முயற்சியில், யாரிடமும் கேட்டு பயின்று என்றில்லை. அவர் செய்துள்ள காரியங்களை வேளாண்மை முதுகலை பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் கூட செய்திருப்பார்களா சந்தேகம் தான். அவருக்கு ராஷ்டிரபதியின் ஏதோ கிருஷி அவார்டு கூட ஏதோ கிடைத்துள்ளது.

 

ஐம்பதுகளில் நான் தில்லி போனதும் எனக்குக் கிடைத்த ஒரு நண்பனைப் பற்றிச் சொல்ல வேண்டும். என்னை விட மூன்று நான்கு வயது மூத்தவன், வேலூர்க்காரன். ஏ. ஆர். ராஜாமணி என்று பெயர். இந்த வருஷம் தான் (2012-ல்) சில மாதங்கள் முன், தில்லியில் அவனது 82 அல்லது 83வது வயதில் காலமானான். அதிகம் படிப்பு கிடையாது. யாரோ ஒரு தெரிந்தவர் அழைத்து தில்லி வந்தவன், 1956-ல் எனக்கு அவன் பரிச்சயம் முதலில் ஏற்பட்ட போது பாலம் விமான தளம் கட்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இருந்த கரோல் பாகிலிருந்து ரொம்ப தூரம். ஏதோ பணம் கிடைக்கும். என்ன வேலை என்று கேட்டது கிடையாது. மனம் வருந்தும். வேலை செய்பவர்களை கணக்கு வைத்துக்கொள்வது போன்று ஏதோ. அதிகம் அவனுக்குச் செலவு டீக்கும் சிகரெட்டுக்கும். இதிலேயே ஒருத்தன் வாழ்முடியுமா? அவனால் முடிந்தது. இது எல்லாத்தையும் விட ஆச்சரியம் ஒரு தமிழ் எழுத்தாளனாகத் தான் எங்களுக்கு அவன் முதலில் அறிமுகம்  ஆனான். என்ன எழுதினான் என்பதெல்லாம் இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அமுதசுரபி இதழோடும் விக்கிரமன் என்னும் பழம்பெரும் எழுத்தாளரோடும் அவனுக்கு நெருங்கிய பழக்கம். மன்னிக்கவும். விக்கிரமன் ஆசிரியராக இருந்தது அமுதசுரபி தானே? இல்லையென்றால் வேறு எதுவோ அது. 1958லோ என்னவோ அகில இந்திய தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னையில் நடந்தது. அது இரண்டாவது மாநாடு என்று நினைப்பு. அந்த மாநாட்டுக்கு தில்லி எழுத்தாளர் பிரதிநிதியாக சென்றது எங்கள் ஏ.ஆர். ராஜாமணி தான். அந்த சமயத்தில் நானும் என் பழைய தில்லி நண்பர், ஹோட்டலில் அறைத் தோழன், துரைராஜும் விடுமுறையில் சென்னையில் இருந்தோம். தேனாம்பேட்டை மைதானத்தில் நடந்த அந்த மாநாட்டைப் பார்க்கப் போனோம். ஒரு அமர்வு முடிந்திருந்தது. எல்லோரும் வெளியே சிறு சிறு குழுக்களாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். க.நா.சு. தி.ஜானகிராமன் முதலிய பெருந்தலைகளோடு ஏ.ஆர். ராஜாமணியையும் பார்த்தோம். எங்களைப் பார்த்ததும் ஏ. ஆர். ராஜாமணி எங்கள் பக்கம் ஓடி வந்து “இப்போ நான் ரொம்ப பிஸி, சாயந்திரம் சாவகாசமாகப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுப் போனான். மாநாட்டுப் பிரதிநிதி என்று அடையாளம் காட்ட பாட்ஜ் ஒன்று அவன் சட்டையில் குத்தியிருந்தது. ஒரு கட்சி மாநாட்டில் பெரிய தலைவர்களை தூர இருந்து தரிசனம் செய்த திருப்தி கொள்ளும் கட்சித் தொண்டர்கள் போல, நாங்கள் அங்கிருந்து நகர்ந்து ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

 

நான் 1956 கடைசியில் தில்லி வாசியானபோது, ராஜாமணி

தில்லித் தமிழரிடையே ஒரு பிரமுகர். தில்லி வந்து

வருஷங்கள் பலவான அந்தஸ்து. அனுபவம். நிரந்தர வேலை ஏதும் கிடையாது. முதலில் வேலை கிடைத்த பாலம் விமான தளத்தைத் தவிர வேறு எங்கும் வேலை செய்ததாக செய்தி இல்லை. எப்போதாவது ஆல் இந்தியா ரேடியோவில் எதையாவது மொழிபெயர்க்கச் சொல்லி அழைப்பு வரும். நிரந்தர வருமானம் இல்லாததால் நிலையான இருப்பிடமும் கிடையாது. நிலையான சாப்பாடும் கிடையாது. அவ்வப்போது நண்பர்கள் கொடுக்கும் காசு டீக்கும் சிகரெட்டுக்குமே பத்தாது.

 

ஆனால், விக்கிரமனுக்கு வேண்டிய ஆள். தில்லியில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களையும், தமிழ்ப் பிரமுகர்களையும் தெரியும்.  அனேகமாக எழுத்தாளர் சந்திப்புகளில், கூட்டங்களில் ஏ.ஆர். ராஜாமணியைப் பார்க்கலாம். க.நா.சு தில்லிக்கு முதலில் வந்திறங்கியதும் அவர் சந்தித்த முதல் தமிழ் எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி தான். என்னை க.நா.சு இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியதும் ராஜாமணி தான்.

 

ராஜாமணிக்கு இருக்க இடம் இல்லாத போது, நானும் கரோல் பாகில் இருந்த போது என் அறைக்கு ராஜாமணியை அழைத்து வந்தேன். ஒரு வருடமோ என்னவோ இருந்திருப்பான், எங்கள் மூன்று பேரோடு நாலாவதாக. நான் இரண்டரை வருடம் ஜம்மு கஷ்மீருக்கு மாற்றலாகி திரும்பி வந்த போது எல்லோரும் இடம் மாறியிருந்தனர். ராஜாமணி அந்த அறையை (அது பர்சாதி எனச் சொல்லப்படும் மொட்டை மாடியின் அறை) ஒட்டிய மாடிப்படியின் அருகில் வாசம். அந்த வீட்டுச் சொந்தக் காரர் அருள் கூர்ந்து வாடகையின்றி இருக்க அனுமதித்த இடம். நாலடி அகல நீளம் கொண்ட சதுரம். அதில் தான் சுருட்டி வைக்கப் பட்டிருந்த படுக்கை, அடுக்கிய புத்தகங்கள் எல்லாம். நான் இருந்த அறையில் இப்போது பெண்கள் கூட்டம் ஒன்று காணப்பட்டது.

 

ஆச்சரியாமன விஷயம் அந்த இடத்தில் ராஜாமணிக்கு இரானிய தூதரகத்திலிருந்து கட்டுக்கட்டான புத்தகங்கள், ஆர்ட் பேப்பரில் நிறைய புகைப்படங்கள் ஓவியங்கள், வரலாற்று பதிவுகள் அடங்கிய நிறைய புத்தகங்கள். இராணிய அரசர் ரேஸா பஹ்லவியின் புகைப்படம் கொண்ட ஒரு மிக ஆடம்பரமாக அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ். இராணிய தூதரகத்திலிருந்து. அப்போது இரானிய ஷா, ரேஸா பஹ்லவி தன் மூதாதையர் என்று உரிமை கொண்டாடும், சைரஸின் 2500 வது நினைவு விழாவோ என்னவோ அது மிக ஆரம்பரமாக, பெரும் பொருட் செலவில் கொண்டாடினார். அதற்கான அழைப்பிதழ், புத்தகங்கள், எல்லாம் அங்கு சில அடுக்கப் பட்டும் சில அங்குமிங்கும் சிதறிக்கிடந்தும் இருந்தன. சைரஸ், இரானிய சரித்திரத்தில் மிகப் பெரும் சக்கரவர்த்தி. இரான் நாட்டையே உருவாக்கியவர் கி.மு ஆறாம் நூற்றாண்டில் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். தன் மூதாதையராயிற்றே. மிகப் பெரும் அளவில் பிருமாண்ட விழாவாக ஷா கொண்டாடினார் அப்போது.

 

என்ன ராஜாமணி, ஷா வே கூப்பிட்டிருக்கார். தெஹ்ரன் பயணம் எப்போது என்று கேட்டேன். ராஜாமணியின் உதடுகளில் ஒரு வெற்றிப் புன்னகை தவழ்ந்தது. .

——————————-

Series Navigationதமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்முள்வெளி அத்தியாயம் -21
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  punaipeyaril says:

  அந்த நாட்களில் இது ஒரு அற்புத அனுபவம். பகிர்ந்ததற்கு நன்றி… மிக்க நன்றி…

 2. Avatar
  balaiyer says:

  Your writings are simply superb. They are very informative and takes us back to our own days. But our days are not that worthmentioning as yours. I also share with my family members about you and your writings. Long live Shri. Venkat Swaminathan.

 3. Avatar
  punaipeyaril says:

  அந்த வீட்டுச் சொந்தக் காரர் அருள் கூர்ந்து வாடகையின்றி இருக்க அனுமதித்த இடம். நாலடி அகல நீளம் கொண்ட சதுரம்.— திரும்ப திரும்ப படிக்க வைக்கும் அனுபவத் தொடர்.

Leave a Reply to punaipeyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *