சினிமா தியேட்டருக்குப் போவது கடும் அலர்ஜி தரும் அனுபவமாக எனக்கு முதன் முதலில் ஆனது அன்றைய ஜகன்மோகினி படத்தைப் பார்க்கப்போனபோது. மந்திரவாத மாஜிக் படம் என்று சிறுவர்கள், பெண்கள் பக்கம் கூட்டம் ஒருபக்கம் என்றால், ஜெயமாலினி தரிசனத்திற்காக ஆண்கள் வரிசையில் கைலியை மடித்துக்கட்டி மல்லுக்கட்டும் இளைஞர் கும்பல் இன்னொரு பக்கம் என்று கூட்டம் அலைமோதியது. படம் தொடங்க மணியடிக்கப்போகிறார்கள், டிக்கெட் இல்லை என்று சொல்லி விடுவார்கள் என்றெல்லாம் பேச்சு பரவ ஆரம்பித்தது. அப்போதுதான் அது நிகழ்ந்தது.
ஆண்கள் வரிசையில் கடைசியில் நின்ற ஒருவன் சட்டென்று கைலியை அவிழ்த்துத்தலையில் உருமா கட்டு கட்டிக்கொண்டான். கலர் பாட்டில் ஒன்றை சுவரில் அடித்து கண்ணாடிச்சில்லுகள் சிதற உடைத்தான். உடைந்த பாட்டிலை உயர்த்திக்காட்டி, ”டாய்” என்று கத்திக்கொண்டே ஒரே உந்தலில் மதில் மேல் கால்வைத்து முன்னால் நின்ற ஆளின் தோளில் இன்னொரு காலை வைத்தான், அவர் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கையில் ’குத்திக்குடல உருவிப்புடுவேன், டாய்” என்று கத்திக்கொண்டே க்யுவில் முன்னால் நின்றிருந்தவர்கள் தோளில் கால்வைத்து மிதித்து திபுதிபுவென்று ஓடி டிக்கெட் கவுண்டருக்கு அருகில் போய், நொடியில் கீழிறங்கி டிக்கெட் வாங்கி உள்ளே சென்று விட்டான். ”என்னமா பூந்தான் பார்த்தியா” என்று யாரோ சொன்னது என் காதில் விழுந்தது.
அதே போன்ற ஒரு அனுபவம் பின்னாளில் சென்னையில் பல்லாவரம் தியேட்டர் ஒன்றில் ’ராஜா சின்ன ரோஜா’ படம் பார்க்கப்போனபோதும் கிடைத்தது. இம்முறை ரகளை தியேட்டருக்கு உள்ளே. இளைஞர் கும்பல் ஒன்று தியேட்டரையே கதிகலங்கச்செய்து கொண்டிருந்தது. ரஜினி வரும்போதெல்லாம் காகிதச்சுக்கல்களை எல்லார் மீதும் வாரி இரைத்தார்கள். பெருங்குரலெடுத்து ஆரவாரித்தார்கள். குரங்கு போல இருக்கைமேல் ஏறிக்குதித்தார்கள். படம் பார்க்க விடுங்கப்பா என்று சொன்ன ஆளை கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்கள். ”நாங்களும் காசு கொடுத்துதான் வந்திருக்கோம், பொத்திகிட்டு ஒக்காரு பெருசு” என்று கேலி பேசினார்கள்.
அமெரிக்காவிற்கு வந்தபின் நம் தமிழ்க்குரங்குகளின் தியேட்டர் குதியாட்டத்தை மீண்டும் பார்ப்பேன் என்று எண்ணிக்கூடப் பார்த்ததில்லை- ஆகஸ்டு 10 அன்று ”பனி துளி” என்னும் படத்தைப்பார்க்க கலிபோர்னியா வளைகுடாப்பகுதி சான் ஹோசேவில் உள்ள தியேட்டருக்குப்போகும் வரை.
திரைக்கதை, லாஜிக் என்று எதுவும் இல்லாமல் ஓட்டை உடைசல் காட்சிகளையும், உளுத்துப்போன கதையமைப்பையும் வைத்து எடுக்கப்பட்ட முழுநீள அபத்தக்களஞ்சியம்தான் ”பனி துளி”. ஆனால் அதல்ல இங்கே பேசு பொருள். கலிஃபோர்னியாவில் வாழும் தமிழ் முகங்கள் பல ஒன்றிணைந்து பங்களித்து உருவாக்கிய தமிழ்ப்படம் இது. சிலிகன் வேலி சான் ஹோஸேவில் உள்ள தியேட்டர் ஒன்றில் முதல் ஷோ. தெரிந்தவர் கல்யாணத்துக்குப்போவதுபோல் ப்ரிமியர் ஷோவுக்கு தியேட்டர் நிறைந்து கூட்டம் வந்திருந்தது. உற்றார், உறவினர், நட்பு என்று வந்தவர்கள் பெரும்பாலானோர். படத்தில் பணியாற்றிய அமெரிக்கர் பலரும் கூட குடும்பத்தோடு வந்திருந்தனர்.
படம் தொடங்க பத்து நிமிடம் இருக்கையில் ”ரசிகர்” கும்பல் ஒன்று உள்ளே நுழைந்தது. பின் இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டது. படம் தொடங்கியவுடன் பெருங்குரலெடுத்து தொண்டை கிழியக் கத்தத்தொடங்கியது- பே ஏரியா நடிகர் ஒருவர் வரும்போதெல்லாம் ஆ, ஊ என்று மாபெரும் ஊளைச்சத்தத்தால் தியேட்டரை நிறைத்தது. குரங்குக்கூட்டம் போல் இளித்தது காகிதத்தைக்கிழித்து சுக்கல் குப்பைகளாக்கி எல்லோர் தலை மேலும் தூக்கி வீசியது. முன்னால் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப்பார்த்து முறைத்ததோ, ’அமைதியாக இருங்கள்’ என்று கேட்டுக்கொண்டதோ எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
படத்தில் கவர்ச்சியாய் நடித்த ஒரு பெண் வரும் காட்சிகளில் சத்தமாக ஆபாச கமெண்ட் அடித்தார்கள். உரத்த குரலில் கத்தியும், ஆட்டம் போட்டும், குப்பை எறிந்தும் தங்களது அபார ரசிகத்தன்மையைத் தொடர்ந்து படம் முழுக்க நிரூபித்துக்கொண்டே இருந்தார்கள். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் இந்தக் கும்பலில் பெண்டு பிள்ளைகளுடன் குடும்பத்துடனேயே வந்திருந்தவர்களும் அடக்கம் என்பது.
படத்தின் இடைவேளையில் ப்ரிமியர் ஷோவுக்கு வந்திருந்த நடிகர் ஒருவரை நிற்க வைத்து அவரைச்சுற்றி வந்து, கத்தி இளித்து ஆரவாரித்தார்கள். பெரிய பாப்கார்ன் பைகளை வாங்கி உடைத்து, அவர் தலையில் பாப்கார்னைக் கொட்டினார்கள். எம் தமிழரின் குடிமைப்பண்பு தியேட்டர் நடைபாதை முழுதும் பாப்கார்ன் சிதறல்களாய்க் கொட்டிக்கிடந்தது.
இவர்களில் பலர் அமெரிக்க தமிழ் அமைப்புகளில் முக்கிய உறுப்பினர்கள். அமெரிக்க அரசியல், பொதுவாழ்க்கை என்கிற கனவுகள் கூட இவர்களில் சிலருக்கு உண்டு. நினைத்தபோது ஊர் செல்ல முடியாததால், தனது தமிழகத்தை அமெரிக்காவில் நிறுவ முயல்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது.
படத்தின் தொழில் நுட்ப வடிவமைப்பில் பங்கெடுத்த அமெரிக்கர்கள் பலர், குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் நிலை மிகவும் இக்கட்டாக இருந்தது. அவர்கள் அனுமதி இல்லாமலேயே அவர்களுக்கு முன்னால் சென்று அசிங்கமாய் இடுப்பைத் துருத்திக்காட்டி போட்டோ எடுத்துக் கொண்டார்கள் நம் ரசிக சிகாமணிகள். அந்த அமெரிக்கர்கள் முதலில் சகிப்புடனும் பின்னர் அவர்களுக்கே உரிய கனிவான கேலியுடனும் இந்தக்கும்பலின் ஆட்டத்தைச் சகித்துக்கொண்டிருந்தார்கள். கட்டாயம் ஒரு ஆங்கிலப்படம் என்றால் எழுந்து சென்று தியேட்டர்காரர்களிடம் புகார் செய்திருப்பார்கள். தமிழ்ப்படம் ப்ரீமியர் என்பதால் ”இப்படி ரசிப்பது இவர்களின் கலாசாரம் போலிருக்கிறது” என்று சும்மா உட்கார்ந்திருந்தனர் என்றே எனக்குத் தோன்றீயது. நான் உள்பட யாருமே தியேட்டர்காரர்களிடம் புகார் சொல்லவில்லையே- எனவே அவர்கள் அப்படி நினைத்திருந்தால் அதில் ஓரளவாவது உண்மை இருக்கும்தான். புகார் செய்யாததற்கான பிராயச்சித்தம் இந்தக்கட்டுரை என்று நினைத்துக்கொள்கிறேன், வேறென்ன செய்ய?
கைலியை மடித்துக்கட்டி டாய் என்று கூவிய ஜகன்மோகினி ரசிகனுக்கும், தியேட்டரில் கலாட்டா செய்த சென்னை ரஜினி ரசிகர்களுக்கும், இதோ இந்த அமெரிக்கத்தமிழர்களுக்கும் கல்வியிலும், சமூக அந்தஸ்திலும், வாழ் நிலையிலும் எவ்வளவு வித்யாசம் இருக்கிறது! ஆனால் பொதுப்பிரக்ஞை, குடிமைப்பண்பு என்று வரும்போது தமிழக ஆவேச சினிமா ரசிகனை நகலெடுத்த அழுக்குப் பிரதியாகத்தானே அமெரிக்கத்தமிழ் ஆவேச சினிமா ரசிகனும் இருக்கிறான்!
படம் முடிந்ததும் யாரோ ஒருவர் “டப்பா படம்” என்று கமெண்ட் அடிக்க, ஒருவர் சொன்னார்: ”மனிதர்களுக்குத்தான் இது டப்பா படம். குரங்குகளுக்கு இதுவே அதிகம்தான்”.
இதில், படம் சரியில்லை என்பதால் கத்தியதாக விளக்கம் வேறு தரப்பட்டது. படம் நன்றாக இல்லயென்றால் விமர்சிக்கலாம். சில கமெண்டுகள் அவ்வப்போது எழலாம். அவை வேறு, பொது அரங்கொன்றில் குரங்காட்டம் போட்டு கூச்சலிட்டு ஒட்டுமொத்தமாக அனைவரது திரைப்பட அனுபவத்தையும் ரகளை செய்து கெடுப்பது என்பது வேறு. இந்த வித்யாசம் தெரியாதவர்கள் என்ன படித்தாலென்ன? எவ்வளவு பணம் சேர்த்தால்தான் என்ன? குடிமை உணர்வும் பொது இட ஒழுங்கும் இல்லாதவர்களின் படிப்பும் பணமும், நாய் பெற்ற தெங்கம்பழம்.
இதைப்பற்றியெல்லாம் சக தமிழர்களுடன் பேச முற்பட்டால் “இதுக்கென்ன இவ்வளவு டென்ஷன் ஆகிறீங்க”, ”இதெல்லாம் ஒரு ஜாலி”, ”இதையெல்லாம் கண்டுக்காம போகணும்” என்று அறிவுரைகள் கழுதை லத்தி மாதிரி வந்து விழுகின்றன.
நாஞ்சில் நாடன் இங்கே வந்திருக்கையில் தமிழ் ஊடக ரசனை பற்றி சொல்கையில், “அழுகிய கேக்கின் ஒரு பகுதியை தமிழகத்தில் உள்ள தமிழன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிரான், இன்னொரு பகுதியை அமெரிக்கத்தமிழன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்” என்றார். அது நூறு சதவீதம் உண்மை. ஆனால் இன்னொன்றும் சொன்னார்: ‘இங்கே வாழும் உங்கள் சந்ததிகளைப்பற்றி எனக்குக்கவலையில்லை, அங்கே வாழும் தமிழ்ச்சந்ததிகளை நினைத்தால்தான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது” என்று.
இன்று அவரைப்பார்த்தால் “எங்களுக்காகவும் கொஞ்சம் கவலைப்படுங்கள் சார்” என்பேன்.
- இடைச் சொற்கள்
- கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
- பூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?
- கள்ளிப் பூக்கள்
- சீதாயணம் நாடக நூல் வெளியீடு
- மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9
- சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’
- கடிதம்
- கதையே கவிதையாய்! (2)
- இது…இது… இதானே அரசியல்!
- கடவுளும், கலியுக இந்தியாவும்
- ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்
- பெய்வித்த மழை
- ஏனோ உலகம் கசக்கவில்லை*
- தகப்பன்…
- முள்வெளி – அத்தியாயம் -23
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40
- சாமி போட்ட முடிச்சு
- பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’
- மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)
- “கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-
- அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்
- பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “
- பூனைகளின் மரணம்
- இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்