ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு

This entry is part 13 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சிறகு இரவிச்சந்திரன்.

முகநூலில் மாலை 5 மணி என்று அறிவிப்பு. இடம் டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர். வழமை போல 6 மணிக்கு ஆரம்பித்தார்கள். அதற்குள் சொற்பக் கூட்டம் தேங்கியது. விழா முடியும்போது 50 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள். விழா மேடையில் சா. கந்தசாமி, ( 7 மணிக்கு வந்த ) பாரதி கிருஷ்ணகுமார், தி.பரமேசுவரி, கவின்மலர், ஆழி செந்தில்நாதன். உட்கார மறுத்த ஜாகீர்ராஜா!
21ம் நூற்றாண்டுச் சிறுகதைகளை வெளியிட்டுப் பேசினார். சா. கந்தசாமி. புதுமைப்பித்தன் தொடங்கி, அழகிரிசாமி, பிரபஞ்சன் என, ஜாகீர் வரையிலான காதல் கதைகளின் தொகுப்பான ‘அழியாத கோலங்களை’ வெளியிட்டவர் பாரதி கிருஷ்ணகுமார்.
ஒரு முன்னோட்டம் போல முதலில் பேசினார் ஜாகீர்.
“ இதுவரை 5 நாவல், 3 சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. எதற்கும் நான் வெளியீட்டு விழா நடத்தியதில்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஒரு பதிப்பகத்தில் வேலை செய்கிறேன். ‘புத்தகம் பேசுது’ இதழில் பிழை திருத்தும் வேலை செய்கிறேன். இன்னும் எனது 14 நூல்களை ஆழி வெளியிடப்போகிறது. தஞ்சை ப்ரகாஷின் படைப்புலகம் எனும் நூலை வெளியிட்டேன். அதற்குச் சரியான வரவேற்பு இல்லை. ஆனாலும் என் காலத்திற்குள் 1000 பக்கங்களில் அதை மீண்டும் கொண்டு வருவேன்.
என் பெயர் ஜாகீர் ராஜா. ஆனால் நான் முஸ்லீம் அல்ல. ஒரு படைப்பாளி என்பவன் இந்துவோ முஸ்லீமோ அல்ல. அவன் எல்லோருக்கும் பொதுவானவன். என் பெயரில் முதலில் இருப்பது என் ஊர். என் அப்பாவின் இனிஷியல் அல்ல. சிறுகதைகளின் திருமூலர் என்று மௌனியை சொல்வார்கள். அவர் 24 கதைகள் தான் எழுதியிருக்கிறார். எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. சா. கந்தசாமி தொகுத்த 2000 ஆண்டு சிறுகதைகளைப் பார்த்துதான், எனக்கு தொகுப்பு போடும் எண்ணமே வந்தது.
நூலை வெளியிட்டு சா. கந்தசாமி பேசுகிறார்:
வெளிநாட்டில் பேராசிரியர்களே தொகுப்புகளைச் செய்கிறார்கள். ஆனால் தமிழில் படைப்பாளிகள் தான் செய்கிறார்கள். அதை ஆரம்பித்து வைத்தவர் க.நா.சு. யாரால் நல்ல இலக்கியத்தை இனம் கண்டு கொள்ள முடிகிறதோ அவனே சிறந்த தொகுப்பாளன். உலகத்தில் கடினமான காரியம் படிப்பது. படித்ததைப் புரிந்து கொள்வது, புரிந்து கொண்டதைத் திருப்பிச் சொல்வது. ரைட்டர்களில் மூன்று வகை. clever writer, intellectual writer, genius writer. Clever writer is a borrowed writer. தான் பேசமுடியாததை, தானே பேச்¢யதாக எண்ணி புளகாங்கிதப்படும் படைப்பாளிகள் intellectual writer. எழுதிய வரிகள் பொன்மொழிகளாகும்போது, அவர்கள் genius writer. அவர்கள், காந்திஜி, வள்ளலார் போன்றவர்கள்.
பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சுக்கு ஏகத்துக்கு சிரிப்பலைகள்.
ஜேகே ஒரு புத்தக முன்னுரையில் – ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – எழுதுவார். ‘காதல் என்பது மிக அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும், அற்பமான காரணங்களே போதுமானது. ஆனால் அது மேன்மையுறுவதற்கு, சம்பந்தப்பட்டவர்களின் மேன்மையே காரணமாகிறது.’ பாரதி கூடச் சொல்லியிருப்பான்: ‘ கல்லாகப் பிறந்தால் காந்தக்கல்லாகப் பிற. செடியாகப் பிறந்தால் தொட்டாச்சிணுங்கிச் செடி. மனிதனாகப் பிறந்தால், காதல் செய்ய வேண்டும். ஆதலினால் காதல் செய்வீர். ‘ லா.ச.ரா. சொல்கிறார் காதலர்களைப் பற்றி: ‘ ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிப் பேசினால், ஞாபகம் இருக்கும். பேசுவதற்காகவே விசயங்களை உற்பத்தி செய்தால், ஞாபகம் இருக்காது.’ சமீபத்தில் நான் ஒரு படித்த ஒரு கவிதை தான் சிறந்த காதல் கவிதை. “ என் தெய்வம் கோவிலுக்குப் போய் / கல்லை வணங்குவதை / கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தேன் “
விழா முடிவில் ஜாகீர் எல்லோருக்கும் நன்றி கூறினார். வந்தவர்களுக்கு சுக்கு டீயும், மேடைப் பிரபலங்களுக்கு குட் டே பிஸ்கெட்டும் கொடுக்கப்பட்டது. பிஸ்கெட் இல்லாமலே பார்வையாளர்களுக்கு அது குட் டே ஆனதுதான் நிகழ்வின் விசேசம்.
0
கொசுறு
மேற்கு கே.கே. நகரில் ‘ அப்பா ‘ என்றொரு ஓட்டல், ‘நளசுவை ‘ இருந்த இடத்தில் வரப்போகிறது. அதுவரை, டிஸ்கவரி புக் பேலஸ் எதிரில் இருக்கும், தள்ளு வண்டிக் கடைதான் இரவு டிபனுக்கு. சுடச்சுட கல் தோசையும், கொதிக்கும் சாம்பாரும் உள்ளே போனால், அடுத்த நாள் காலை வரை பசிக்காது.
0

Series Navigationகடவுளும், கலியுக இந்தியாவும்தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *