முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பிறவிகளில் உயர்ந்த பிறவி மனிதப் பிறவியாகும். புல்லாகிப் பூடாகி புழுவாகி, மரமாகி பல்மிருகமாகி, பேயாகி, கணங்களாகி மனிதராகப் பிறந்திருக்கும் பிறப்பே உயர்வானது. இம்மனிதப் பிறவியில் செய்யும் செயல்களைப் பொறுத்தே அடுத்த பிறவி என்பது அமைகிறது. நல்லது செய்கின்றபோது பிறவி முடிந்து இறைவனோடுமனிதன் இணைந்து விடுகின்றான். தீயது செய்கின்றபோது அவனது பிறவிப்பிணி முடியாது மீளவும் தொடர்கிறது. அதனால்தான் ஔவையார்,
‘‘அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது’’
என்று மானிடப் பிறவியின் பெருமையைக் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய மனிதப் பிறப்பினை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாமல் தீய செல்களுக்கே பயன்படுத்துகின்றனர். இறைவனது புகழையோ, மனிதர்களுக்குரிய நல்லனவற்றையோ குறித்துப் பேசாது பிறரைப் பற்றி அவதூறு கூறுவதிலேயே கிக்கின்றனர். பிறரைப் பற்றிப் பழி தூற்றிக் கொண்டு இருத்தலைப் புறங்கூறுதல் என்று கூறுவர். இப்புறங்கூறுதலை வழக்கில் ‘‘பொரணி பேசுதல்’’ என்பர். புறங்கூறுதல் குறித்து பல்வேறுவிதமான பழமொழிகள் மக்களிடையே வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னேவிட்டுப் பின்னே பேசுதல்
புறங்கூறல் தீய பழக்கமாகும். இது அறிவுச் செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துவிடும். ஒருவரைப் பற்றிய குறைகளையோ நிறைகளையோ பேசவேண்டுமெனில் நேருக்கு நேராக அவர்முன் சென்று அவரைப் பார்த்துக் கூற வேண்டும். மாறாக அவரை முன்னே செல்லவிட்டு அவரது முதுகுக்குப் பின் எதனையும் கூறுவது கூடாது. இத்தகைய கருத்தினை,
‘‘முன்னே விட்டுவிட்டுப் பின்னே பேசாதே’’
என்ற பழமொழி வலியுறுத்துகிறது. இப்பழமொழியானது,
‘‘ஆள முன்னாடி போகவிட்டு விட்டுப்
பின்னாடி பேசக் கூடாது’’
என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
ஒருவரைப் பற்றி அவரது நிறைகுறைகளைப் பேச வேண்டுமெனில் அவரிடமே நேரடியாகப் பேசவேண்டும். அவர் போன பின்னர் பேசுதல் கூடாது. அங்ஙனம் பேசுவது இழிந்த பண்பாகும். அவ்வாறு பேசுபவர் அனைவராலும் இகழப்படுவார். அதனால் பிறரைப் பற்றி மற்றவரிடம் எத்தகைய குறைநிறைகளையும் கூறிக் கொண்டிருத்தல் கூடாது. இப்பழமொழியின் கருத்து,
‘‘கண்ணின்று கண்ணரச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்’’
என்ற திருக்குறட் கருத்துடன் ஒத்திருப்பது சிறப்பிற்குரியதாகும். இத்தகைய புறங்கூறுதல் என்ற இழிகுணத்தை மனிதன் கைவிட்டு வாழ வேண்டும் என்ற உயரிய சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
நாரவாயன் – நச்சுவாயன்
மனிதர்கள் பலவித குணமுடையவர்கள். சிலர் யாரைப் பற்றியும் பேசாது தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பர். சிலர் தங்கள் நண்பர்களின் நிறைகளைக் கூறிக் கொண்டிருப்பர். ஆனால் சிலரோ பிறரைப் பற்றி வாய் ஓயாது எப்போதும் புறங்கூறிக் கொண்டே இருப்பர். அவரால் யாரைப் பற்றியாவது புறங்கூறாதிருந்தால் அவரது தலையே வெடித்துவிடும். யாரும் இல்லாவிட்டாலும் தானாகவேகூட அவர் புலம்புவார். இத்தகையவரின் பண்பினை,
‘‘நாரவாயன் வீட்டிலப் பொண்ணுக் கொடுத்தாலும் கொடுக்கலாம்
நச்சுவாயன் வீட்டுல பொண்ணு கொடுக்கக் கூடாது’’
என்ற பழமொழி உணர்த்துகிறது.
இதே பழமொழியானது,
‘‘நாராவாயன் கூட இருந்தாலும் இருக்கலாம்
நச்சுவாயன் கூட இருக்க முடியாது’’
என்றும் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.
எதையாவது பேசுபவனை நாரவாயன் என்று குறிப்பர். பிறரைப் பற்றிப் புறங்கூறி பகையை வளர்ப்பவனை நச்சு(நஞ்சு) வாயன் என்று குறிப்பிடுவர். நச்சுவாயர்கள் (புறங்கூறுபவர்) பேச்சிலேயே பிறருக்கு நஞ்சினைக் கலந்து கொடுத்து இன்னல் விளைவிப்பர். இத்தகையவர்களின் புறங்கூறும் செயல் கொடுமையானதாகும். இத்தகைய கொடிய இழிவான குணத்தை உடையவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்ற கருத்தினை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகிறது.
புறங்கூறுபவரின் நிலை
எப்பொழுதும் ஒருவரைப் பற்றிப் புறங்கூறுபவன் இழிவான நிலையையே அடைவான். அவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பின்றிப் போய்விடும். இவர்கள் வாழ்வதைவிட சாதலே நன்று என்பதை,
‘‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்’’
என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
ஒருவரைப் பற்றிப் புறங்கூறி ஆதாயம் பெற்று வாழக்கூடாது. இத்தகையவர்களின் செயல் பிறருக்குத் தெரிய நேரிட்டால் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் நையப் புடைப்பர். அதனால் புறங்கூறல் கூடாது என்ற வாழ்வியல் உண்மையை,
‘‘கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே
காட்டு மரத்துலே அடிபடாதே’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஒருவரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறுதல் கூடாது. பிறர் அரைப் பற்றிஇழிவாகக் கூறினாலும் அதைக் கேட்டுக் கொண்டு, அதனைச் சற்றுக் கூடுதலாக மாற்றிப் பிறரிடம் கூறுதல் கூடாது. இரண்டுமே தவறானதாகும்.
ஒருவரைப் பற்றித் தேவையற்ற கருத்துக்களைக் கூறினால் அவர் பாதிப்புக்குள்ளாவார். அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் புறங்கூறியவரை மரத்தடியால் அடித்துத் துன்புறுத்துவர். அதனலால் புறங்கூறுதல் கூடாது என்று இப்பழமொழி வலியுறுத்துகின்றது.
பொரணி பேசுதல் என்ற புறங்கூறுவதால் பிறருக்கும் தனக்கும் மன அமைதி கெடும். இத்தகைய அமைதி கெடுக்கும் தீ நெறியைப் பின்பற்றக் கூடாது. புறங்கூறுதலே அனைத்து தீங்கிற்கும் அடிப்படையாக அமைந்திலங்குகின்றது என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. புறங்கூறலைக் கைவிட்டு புத்துலகைப் படைப்போம். வாழ்வில் பல புதுமைகள் பெருகும். வாழ்வு வளமுறும். வாழ்வில் மகிழ்ச்சி தங்கும். புறங்கூறலை நீக்கி புதுவாழ்வு வாழ்வோம்.
- இடைச் சொற்கள்
- கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
- பூர்வீகப் பிரபஞ்சத்தின் பூதக் கருந்துளைகள் காலக்ஸிகளின் உள்ளே உதித்தனவா அல்லது அவற்றை உருவாக்கினவா ?
- கள்ளிப் பூக்கள்
- சீதாயணம் நாடக நூல் வெளியீடு
- மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9
- சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’
- கடிதம்
- கதையே கவிதையாய்! (2)
- இது…இது… இதானே அரசியல்!
- கடவுளும், கலியுக இந்தியாவும்
- ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்
- பெய்வித்த மழை
- ஏனோ உலகம் கசக்கவில்லை*
- தகப்பன்…
- முள்வெளி – அத்தியாயம் -23
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40
- சாமி போட்ட முடிச்சு
- பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’
- மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)
- “கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-
- அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்
- பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “
- பூனைகளின் மரணம்
- இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்