மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40

This entry is part 20 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா

ஹரிணி

49. நீண்ட விஸில் சப்தம். பேருந்து குலுங்கி நின்றது. ஒரு பெருங்கூட்டமே இறங்குவதுபோலிருந்தது. இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளுடன் ஓர் இளைஞனும், கைக்குழந்தையுடன் பெண்ணொருத்தியும் இறங்கினார்கள். அவர்களைத்தொடர்ந்து இறங்கினேன். வேகமாக வந்த சைக்கிளொன்று என்மீது இலேசாக இடித்து நின்றது. நிலை தடுமாறி விழ இருந்தவள் சமாளித்து நின்றேன். சைக்கிளில் பத்துபன்னிரண்டு வயது சிறுவன். சட்டென்று பிரேக் அடித்து பாரில் இறங்கி காலை ஊன்றினான். ‘கோவிச்சுக்காதீங்க அக்கா, பெல்லடித்துக்கொண்டுதான் வந்தேன். நீங்க கவனிக்கலை’, என்றான். பிரச்சினை இல்லை நீ போ என்றேன். பகல் வெள்ளைவெளேரென்று உருகி வழிந்தது.

புதுச்சேரி திண்டிவனம்- திண்டிவனம் செஞ்சியென்று இரண்டு பேருந்து பிடித்து உட்கார்ந்து, எழுந்து, நின்று, உட்கார்ந்து, நின்று, பயணம் செய்திருந்தேன். அலுப்பாக இருந்தது. காலை எட்டுமணிக்கெல்லாம் திண்டிவனம் வந்தாயிற்று. செஞ்சிக்குப் போய்க்கொண்டிருக்கிற தகவலை குறுஞ்செய்தியாக வேணுவுக்குத் தெரிவிக்கலாமென முடிவுசெய்து பின்னர் நேரடியாகவே தொடர்புகொண்டு தகவலைச் சொன்னேன். முதல் நாள் கூறியிருந்ததைப்போலவே சென்னையில் இருப்பதாகவும், மாலை ஐந்து மணிக்குள் செஞ்சிக்கு வந்துவிடமுடியமென்றும் தெரிவித்தான். எத்தனை மணிக்கு செஞ்சியில் இறங்குவாயென்று கேட்டான். அநேகமாக ஒன்பதரைக்கெல்லாம் இருப்பேனென்றேன். எங்கும் போய்விடவேண்டாம் பேருந்து நிலையத்திலேயே இரு, என்றான். எனக்கு வழிதெரியும். போனவாரம் வந்தவள். அதற்குள் மறந்துவிடுமா என்ன? சிக்கலென்றால் ஒரு ஆட்டோ பிடித்து வந்துவிடுவேனென்ற பதிலை காதில் வாங்கவில்லை, தொடர்பைத் துண்டித்துவிட்டான்.

ஒருவாரத்திற்கு முன்பு இதே பேருந்து நிலையத்தில் சந்தித்த மனிதர்களில் பலரை இழந்திருப்பதாக கண்கள் சொன்னது. அநேகர் புதியவர்களாக இருந்தார்கள். தூரத்தில் கூல் டிரிங்க்ஸ்பார் என்று பலகை அறிவித்த கடையில் சென்றமுறை ஓர் வயதான ஆசாமியை கண்ட ஞாபகம். இன்று இளம்பெண் ஒருத்தி நின்றிருந்தாள். மளிகைக்கடையில் மார்பில் தவிட்டு ரோமமும் அழுக்கு பூனூலும், பனையோலை விசிறியுமாக தலை நரைத்த முதியவர் உட்கார்ந்திருந்தார். இந்த ஆள் வெள்ளைச்சட்டையின் காலரை கழுத்துக்குப்பின்னே இழுத்து நிறுத்தி பெரு வயிறும் தங்கச்சங்கிலியுமாக நாற்காலியில் பிணைத்த சினைக் கரடி. புகையிலைக் காம்பை கடைவாயில் அடக்கி கொண்டை ஊசி, ஊக்கு,பாசிமணி விற்ற குறத்தியும் போனவாரத்தில் கண்டவளல்ல. மார்பு உயரத்திற்கு லட்டையும், ஜாங்கிரியையும் அடுக்கிவைத்து ஒதுங்கியிருந்த முகம் சந்தேகமில்லாமல் அதே முகம். கிளி ஜோஸ்யக்கார இளைஞர் வெற்றிலை சாறை இடம்பார்த்து துப்பிய நிறைவுடன், இவளை ஒருமுறை திரும்பிப்பார்த்து வேட்டி புரள விட்டு நடந்தார். ஒரு கரைவேட்டிக்காரரைச் சுற்றி சிறு கும்பல். கால்களில் வெள்ளிக்காப்புகள் தெரிய புடைவை தார்ப்பாய்ச்சிகட்டிருந்த பெண்மணி முகத்தை வெயிலிருந்து காப்பாற்ற முனைந்தவள் போல மடித்த துண்டை முகத்திற்கு நேரே பிடித்திருந்தாள். கறுத்தும், இரவிக்கை மார்புகளென்று எதுவுமற்ற மூதாட்டியொருத்தி தலையிற் தொட்டு உள்ளங்கையைக் குவித்துக் வார்த்தைகளின்றி பிச்சை கேட்டாள். பசுமாடு ஒன்று வாழை இலையை குனிந்து முகர்வதுபோல பாவனை செய்து நடந்தது.

வேணு நண்பன் வந்திருக்கிறானா? கூட்டத்து மனிதர்களில் இதுவரைக்கண்டிராத அந்த முகத்தைத் தேடினேன். பார்த்த பழகிய அறிந்த இளைஞர்களின் முகங்களை இரவல் பெற்று பொருத்தினேன். ஆண்பால். வேணுகோபாலுக்கு நண்பன் என்பவதால் படித்தவன், இளைஞன். நிறம்? செஞ்சியின் வெயிலைப்பார்க்கிறபொழுது கருப்பு நிறமென்பது உறுதி. வேட்டி சட்டையில் இருக்க வாய்ப்பில்லை. மனிதர் கும்பலில் கருத்த படித்த பேண்ட் சட்டை போட்ட இளைஞர்களைப் பிரித்தெடுத்து அவர்களுள் ஏதேனும் இரண்டு கண்கள் ஆச்சரியத்தை நிரப்பிக்கொண்டு, புன்னகை வழிய என்னைத் தேடுகிறதாவென்று பார்த்துக்கொண்டு நடக்கிறேன். ஹலோ’ வென்று குரல். கைத்தொலைபேசியில் அழைப்பதுபோலவிருந்தது. அழைத்தவன் எதிரே வேகமாக என்னைநோக்கி வந்தான். வேட்டி மேலே கதர் ஜிப்பா. கையில் தமிழ் இதழொன்றை சுருட்டி வைத்திருந்தான். நல்ல சிவப்பு, மெலிந்த தேகம். முகத்தில் குறுந்தாடியிருந்தது. அவன் காலில் இரப்பர் செருப்புகள். சடக் சடக்கென்று அடிப்பது கேட்டது.

– வணக்கம்! சாமிநாதன், வேணு நண்பன்

– வணக்கம்! ஹரிணி. !

இருவரும் கைகுலுக்கிக்கொண்டோம். எப்படி வந்தீர்கள்? என்ற கேள்விக்கு, நடந்துதான் வந்தேன். திருவண்ணாமலை ரோட்டைக்கடந்தால் சிங்கவரம் சாலை அதிக தூரமில்லை மிகவும் பக்கம்”, என்றான். சென்ற முறை சரவணாதியேட்டர், காந்திபஜாரென்று அலைந்த ஞாபகம். போகலாமா என்றான். நான் தலையாட்டியதை சம்மதமென்று எடுத்துக்கொண்டவன்போல விடுவிடுவென நடந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அழைத்துசெல்லவந்தவன் இத்தனை வேகமாக நடப்பானென எதிர்பார்க்கவில்லை. பார்த்துக்கொண்டிருக்கும்போதே காந்திபஜாருக்கு தெற்கே நடந்துகொண்டிருந்தான். எனது நடையில் வேகத்தைக் கூட்டினேன், முடியவில்லை. கால் வலிப்பதுபோலிருந்தது. குதி உயர்ந்த செருப்பைத் தவிர்த்துவிட்டு, புதிதாக ஒரு ஜோடி செருப்பு வாங்கவேண்டுமென்று இரண்டுவாரமாக நினைத்து தள்ளிப்போகிறது. கண்ணிற்படுகிறானா எனப்பார்த்தேன். ஏதோ ஒரு சந்தில் நுழைந்து மறைந்துபோனான். சிறிது தூரம் நடந்திருப்பேன் ஒரு கிளினிக் தெரிந்தது, சென்றமுறை பார்த்ததுபோலவிருந்தது. ஆனால் நடக்க நடக்க சாலை கருத்த நதிபோல முன்னே ஓடிக்கொண்டிருந்தது. ம். நாற்பது நிமிடம் கடந்திருந்தது. இரண்டு சிறுவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு ஓடிவந்தார்கள். முதலில் வந்தவனை நிறுத்தி நான் எங்கே இருக்கிறேன் என. கையிலிருந்த முகவரியைக் காட்டி கேட்டபோது, நரசிங்கராயன் பேட்டையில் இருக்கிறீர்கள். கிருஷ்ணபுரம் வடக்கில் இருக்கிறது. வந்தவழியே திரும்பி நடவுங்கள்? என்றான். மிகவும் களைத்து ஒருவழியாக வேணுவின் வீட்டை கண்டுபிடிக்க கூடுதலாக இருபதுநிமிடம் பிடித்திருந்தது.

வீட்டுவாசலிலேயே சடகோபன் பிள்ளையும் பேர்த்தி கலா பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள்.

– மணி பதினொன்றரை ஆகுது. என்னம்மா ஆச்சு? நீ மாத்திரம் தனியாக வருகிறாய். வேணு பிரண்டு ஒருத்தனை அனுப்பி இருந்தோமே பார்க்கலை.

– அக்கா வந்திட்டீங்களா? எங்கே இருக்கீங்க, கலா கையை நீட்டினாள்.

அவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டேன்.

– வேணு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்தார். என்னிடம் அறிமுகமும் செய்துகொண்டார். பிறகு போன இடம் தெரியவில்லை. பெரியவரிடம் கூறினேன்

– ஏன் என்ன நடந்தது?

– எனக்கென்னவோ அவர் என்னை அழைக்கவந்தவர்போல தெரியவில்லை. வீடு பக்கத்தில் இருக்கிறது, ஐந்து நிமிடத்தில் போய்விடலாமென கூறிவிட்டு போனவர் போனவர்தான். நான் பாட்டுக்கு வந்து சேந்திருப்பேன். என்னை அலையவிடவேண்டுமென சபதம் செய்திருப்பாரோ என்னவோ, வேணுவை விசாரிக்கவேண்டும்.

– அப்படிபட்ட பிள்ளை இல்லையே. இந்தப்பெண் வேறு, காலையிலேயே தட்டுத்தடுமாறி அவர்கள் வீட்டுக்குச்சென்று பழியாய்க்கிடந்து, பஸ் ஸ்டேண்டிற்கு அவனை அனுப்பிவைத்தது. வேணுகோபாலும் சாமிநாதனும் பால்யவயதிலிருந்தே நண்பர்கள்.
உள்ளே போய் பேசுவோம், எனக்கூறிய பெரியவர் சடகோபன் முன்னால் நடந்தார். கலாவும் நானுமாக அவரை பின் தொடர்ந்தோம். கலா என்னை அணைத்துக்கொண்டு நடந்தாள். எனது வலது கரம் அவள் கழுத்தைச் சுற்றியிருந்தது.

—–

50. வீட்டிற்குள் நுழைந்தபோது, வேணு அம்மா புன்னகைத்தபடி, முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டே,’வாம்மா என்றாள். பிறகு, ‘பிரயாணமெல்லாம் நல்லா அமைஞ்சுதா?’ பேசிக்கொண்டிருங்கள், ஏதாவது குடிக்க கொண்டு வறேன்”, எனக்கூறிவிட்டு அடுக்களைக்குள் சென்றாள். வாசலை ஒட்டிய கூடத்தில் சென்ற முறை நாங்கள் சந்தித்துபேசிய இடத்தில் சாய்வு நாற்காலியும் இரண்டு நாற்காலிகளும் இருந்தன. சாய்வு நாற்காலி ஒருவாரத்திற்கு முன்பு கண்ட இடத்திலேயே அசையாமற் கிடந்தது. அமர்ந்த பெரியவர் பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டினார். உட்கார்ந்தேன். கலா எனது அருகே தரையில் அமர்ந்தாள் சட்டென்று அவ்விடத்திற்குப் பொருந்துமென்பதுபோல அமைதி சூழ்ந்தது. வலதுகையின் ஆள்காட்டிவிரலும், கட்டைவிரலும் பிரிந்து இடங்கொடுக்க முகவாயை சில நொடிகள் அதில் பெரியவர் நிறுத்தினார். கன்னத்திலிருந்த அழுக்கை விரல்களால் எடுக்க நினைத்தவர்போல அழுந்த இருபக்கமும் தேய்த்தார்.

– ஏம்மா, அவங்க புதுச்சேரியிலே காலையிலே பலகாரம் ஏதாச்சும் சாப்பிட்டுவ்¢ட்டு கிளம்பினாங்களா என்னான்னு தெரியலை. அம்மாவிடம் காப்பி போடசொல்லு அதற்கு முன்னாலே நீ கொஞ்சம் குடிக்க தண்ணீராவது கொண்டுவந்து கொடு. – பெரியவர்

– நேற்று அண்ணன் •பாண்டா வாங்கி வந்திருந்தான். அம்மா அதைக்கொண்டுவருவாங்கண்ணு நினைக்கிறேன். அக்கா உங்களுக்கு காப்பி வேணுமா? •பாண்டா கொண்டுவரச்சொல்லட்டுமா?

– எனக்கு முதலில் ஜில்லென்று கொஞ்சம் தண்ணீர் வேண்டும்;

– ஐஸ் வாட்டரா?

– இல்லை பானை தண்ணீர் கிடைக்குமா? கொஞ்சம் மோர் கொடுத்தால் ரொம்ப சந்தோஷம்.

– நீங்க மோர் குடிப்பீங்களா?

– இதென்ன கேள்வி?

– அம்மா சொன்னாங்க. அண்ணாதான் பிடிவாதமாக நேற்று இரண்டு •பாண்டா வாங்கிட்டு வந்தான். அம்மா, ஹரிணி அக்காவுக்கு மோர் விருப்பமாம்… கொண்டுவாங்க

எனது கவனம் வீட்டின் சுவர்கள் மீதிருந்தது. நான் வந்துபோனதற்குப் பிறகு வெள்ளை அடித்திருக்கவேண்டும். நிழற்படங்களில் முன்பிருந்த நீலாம்படை இல்லை. தாயும் சேயுமாக இருந்தப்படத்தை அகற்றியிருந்தார்கள்..

– இப்படியொரு சம்பவத்தை எதிர்பார்க்கலை இல்லை.

குரல் கேட்டு கவனத்தைக் கிழவர் மீது இறக்கினேன். வேட்டி நுணியை தூக்கிபிடித்தவண்ணம் காலின் கெண்டை சதையை சொரிந்துகொண்டிருந்தார். கூச்சமாக இருக்க சட்டென்று தலையை நிமிர்த்தி என்ன கேட்டீர்களெனக்கேட்டேன்.

– இப்படியொரு சம்பவத்தை எதிர்பார்த்திருக்கமாட்டே இல்லையா? .

– என்ன பதில் சொல்வதென்று தெரியலை. வாழ்க்கையே எதிர்பாராத சம்பவங்களால் வழிநடத்தப்படுகிறதென்று நம்பறேன். எனக்கதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

– சம்பவத்திற்கான காரணத்தைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?

– எனக்கு அவசியமில்லை. உங்க இல்லத்திற்கு இரண்டாவது முறையாக வருகிறேன். சுற்றுலா இடமாக செஞ்சியைப்பார்க்கவந்தேன். புதுச்சேரியில் ஒருவர் வேணுவை அறிமுகப்படுத்தினார். அவர் மூலமா நீங்கள், உங்களுக்குவேண்டியவங்கண்ணு ஒரு சங்கிலி நீளுது. தெரிந்துகொள்ளவேண்டிய தகவல் செஞ்சியோடு தொடர்புடையதெனில் எங்கிட்டே சொல்லலாம்

– செஞ்சிக்கோட்டையோடு சம்பந்தப்பட்டதுதான். இருந்தாலும் எங்கள் பேத்திமேலே உன்னிடத்தில் பிரியமிருக்கிறது. அந்த உணர்வை நீ அமுக்கிவச்சி சிரமப்படற என்பதும் தெரியுது. மல்லிகையை பொத்திவைக்கலாம். அதன் வாடையை ஒளிக்க முடியுமா? நிச்சயமா அது அனுதாபத்தில்பிறந்த அன்பு இல்லை. குருட்டுப்பெண்ணாக இருப்பது பெரிய குறை; நல்லபெண்ணையே கரை சேர்ப்பது எப்படியென்று இருக்கையில் இவள் நிலமையை எப்படி சாமாளிப்பதென்ற கவலை எங்களை மிகவும் வாட்டுது பெரியவரின் குரல் தொண்டையில் ஒட்டிக்கொண்டது. கண்களில் நீர் கோர்த்தது.

– நல்ல டாக்டரிடம் காட்டிபார்ப்பதுதானே?

– காட்டிப்பார்த்துட்டோம் பலனில்லை. வேணுவின் படிப்புக்கு இதுவரை உரிய வேலை கிடைக்கவில்லை. அவனப்பன் ஊர் முழுக்க கடனை வாங்கிவைத்துவிட்டு அகால மரணமடைச்சுட்டான். இந்த லட்சணத்துலே சென்னையில் வைத்தியம் பார்க்கணும்னா எத்தனை லட்சம் தேவைப்படுமோங்கிற கவலை. நாவல் பிடிச்சிருந்ததா? அதைப்பற்றிச் சொல்லு.

– நன்றாக இருந்தது, வேறென்ன சொல்ல. பாதரே பிமெண்டா தமிழைத் தம்மால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையென்று வருந்துவார். அச் சங்கடம் எனக்கும் நாவலைப் படிக்கிறபோது ஆங்காங்கே வருகிறது. சில சொற்கள் புரியவில்லை. அகராதியை அதிகம் புரட்டவைக்கிற நாவலை விரும்புவதில்லை. வாசிப்பு உற்சாகத்தை குறைத்துவிடுமென்பது என்னுடைய அபிப்ராயம். இதற்குத் தொடர்ச்சியாக வேறு இரண்டு பிரதிகளிருப்பதாக வேணு சொன்ன ஞாபகம். இப்போதைக்கு நாம் முதல் பிரதியைக் கொண்டுவந்துவிடலாம். புதுச்சேரியில் ஒருவரிடம் விசாரித்தேன் அவர் நாளை அல்லது மறுநாள் மாலை என்னைச் சந்திப்பதாகச் கூறியிருக்கிறார். இதற்கிடையில் உங்கள் நாவலைக்குறித்து வேறு சில கேள்விகள் இருக்கின்றன.

– கேளேன்?

– நாவலின் முன்னுரையில் ‘கர்நாடக ராஜாக்கள் சவிஸ்த்தார சரிதம்’ எழுதிய நாராயணப்பிள்ளையை கொண்டாடுவதுபோல தெரிகிறது. நீங்கள் சொல்லும் காரணம் அந்நூல் கிருஷ்ணா நதிக்கரையில் ஆரம்பித்து தெற்கே கன்னியாகுமரிவரை உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவல்களைக்கொண்டு எழுதப்பட்டது என்பதாகும். இப்படி ஊர்மக்கள் தகவல்களை வைத்து ஒருவர் சரித்திரத்தை எழுதமுடியுமா, அப்படி எழுதினாலும் அதை நம்புவது எப்படி.

– எழுதிவிட்டார், இனி ஏன் எழுதினாயென்று அவரை விசாரணை செய்ய முடியாது. இந்தியாவில் வேறெங்கேனும் ஒரு கோட்டைப் இதுபோல இனம் மதம் இவற்றால் வேறுபட்ட ஆட்சியாளர்களை கண்டிருக்குமாவென தெரியவில்லை. நாயக்கர்கள், மராத்தியர், பீஜப்பூர் சுல்தான்கள், மொகலாயர் ஐரோப்பியரென பலரை இக்கோட்டையின் வரலாறு சந்தித்திருக்கிறது. இருந்தும் போதிய ஆதாரங்கள் இல்லை. அண்மையில் கிடைத்திருக்கிற ஒன்றிரண்டு ஆதாரங்களும் உருப்படியானவை அல்ல. தஞ்சை நாயக்கர்கள் குறித்தும் மதுரை நாயக்கர்கள் குறித்தும் சொல்லப்படுபவை அனைத்துமே அவரவர் துதிபாடிகளால் சொல்லப்பட்டவை. அவற்றை நான் நம்புவதில்லை. அதனினும் பார்க்க ஒன்றிரண்டு இட்டுக்கட்டியவைகளாக இருந்தபோதிலும் ஊர்மக்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களை நம்புகிறேன். கர்நாடக ராஜாக்கள் சவிஸ்த்தார சரிதத்தின் அடிப்படையில் செஞ்சியின் வரலாற்றை எழுதிய ஸ்ரீனிவாசாச்சாரிகூட சில குறுக்குக்கேள்விகளை எழுப்பியும் ஐரோப்பியர் சிலரின் பதிவுகளோடு ஒப்பிட்டுப்பார்த்தும் பதிவு செய்கிறார். தவிர நான் எழுதியிருப்பது வரலாறு அல்ல வரலாற்று புதினம். எனக்கு ஆதாரங்கள் ஊறுகாய்.

– கதையில் வருகிற பிரதானியார் நந்தகோபால் பிள்ளை ஏதோ புதையலொன்றைத் தேடுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். செஞ்சியில் உலவும் வதந்தியை பயன்படுத்திக்கொண்டீர்களா?

– நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். உண்மையைசொல்லட்டுமா, பிரதானியார் நந்தகோபால் பிள்ளை தேடிய புதையலை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் படும் கஷ்டங்களிலிருந்து நாளைக்கே விடுதலை கிடைத்துவிடும். உள்ளூர் மக்களுக்குப் போட்டியாக புதையலைத் தேடி மலையில் நீயும் அலையமாட்டாயே.

– பயப்படாதீர்கள். புதையலுக்காக நான் இந்தியாவரவில்லை.

– காஞ்சிபுரம் போயிருக்கிறாயா, செஞ்சி நாயக்கர்வம்சத்து முதலாவது ஆசாமி துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் அங்கே ஒரு பூந்தோட்டம் வைத்திருந்தாராம், வரதராஜ சுவாமிக்கு அர்ச்சனைக்கும் பிற அலங்காரங்களுக்கு பூக்களை அனுப்பிவைப்பதை வாடிக்கையாகக்கொண்டிருந்த அவர் பெருமாள் மீதும் அளவுகடந்த பக்திசெலுத்திவந்திருக்கிறார். வரதராஜர், துப்பாக்கி கிருஷ்ண நாயக்கரின் பக்தியை சோதிக்கவிரும்பி பன்றி அவதாரமெடுத்து தோட்டத்தை நாசம் செய்துவிட்டு போய்விடுவாராம். தம்மை சோதிப்பது கடவுளென்று அறியாத நாயக்கர் ஒரு நாள் கையில் வில்லுடன் காத்திருந்தார். எனினும் விலங்கு அவரிடமிருந்து தம்பித்ததோடு வெகுதூரம் அலையவிட்டிருக்கிறது. இறுதியில் காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கில் சிங்கபுரம் குகையொன்றில் வரதராஜ சுவாமி உண்மையான தோற்றத்தில் காட்சிதந்து தமக்கு கோவிலொன்று கட்டவேண்டுமென பக்தனுக்குக்கட்டளை பிறப்பித்திருக்கிறார். மிகுந்த பொருட்செலவாகுமே என பக்தன் சொல்ல, அவசரப்படவேண்டாம், அருகிருக்கும் மலையில் ஒரு பரதேசி இருக்கிறான், அவன் மூலம் உம் எண்னம் நிறைவேறுமென கூறியிருக்கிறார். கடவுள் கூறிய பரதேசி அதிசய செடியொன்றை அறிந்துவைத்திருந்தான். அச்செடியின் இலைகளை எண்ணெய்கொப்பரையில் போட்டு கொதிக்கவைத்து கிடைக்கும் தைலத்தில் ஓர் உத்தமனை தள்ளினால், மறுகணம் உத்தமனின் தேகம் தங்கமாக மாறும். அத்தகைய உத்தமனுக்காகக் காத்திருந்த பரதேசி துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கரை கண்டுவிட்டான். அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட நாயக்கர் முந்திக்கொண்டார், பரதேசியை கொதிக்கும் தைலைத்தில் தள்ளப்போக அவன் தங்கச்சிலையாக மாறினான். நாயக்கர் சிங்கவரம் கோவிலைக்கட்டியதுபோக எங்களூர் கோட்டையையும் வலுப்படுத்தியிருக்கிறார். தங்கமாக மாறிய உடலிலிருந்து வேண்டிய அளவு தங்கத்தை வெட்டியெடுத்தும் அது குறையாமலிருந்ததாம், பின்னர் நாயக்கர் தங்க உடலை செட்டிக்குளமென்று இன்று அழைக்கிற குளத்தில் எறிந்திருக்கிறார். பரதேசியின் தங்கச் சரீர வேட்டையில் இன்றும் செஞ்சிமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிதேசத்திலிருந்து கூட ஆட்கள் வருகிறார்கள்.

– நீங்களும் தேடுகிறீர்கள்.

– மறுக்கலை, ஏற்கனவே சொன்னதுபோல எங்கள் வறுமைதான் இதற்கும் காரணம். இது தவிர வேறொன்றும் இருக்கிறது. அக்கம்பக்கத்திலிருக்கிறவங்க கோட்டைக்குள்ளே ஏதாவது ஒருகாரணத்தை முன்னிட்டு போவதும் தேடுவதுமாக இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்குக் கிடைத்தா நம்ம தூக்கம்போயிடுமில்ல. அதற்காக. -பெரியவர் சிரித்தார்.

மோர் குடிச்சுட்டுக் கொஞ்சம் தெம்பா பேசுங்க, கலா அம்மா தட்டை நீட்டினாள். சிறியதும் பெரியதுமாக இரு தம்ளர்கள். சிறிய தம்ளரை எடுக்கப்போனேன்.

– சின்னது மாமாவுக்கு, நீ பெரிய தம்ளரை எடுத்துக்கொள்.

– ஏன்?

– எனக்கென்ன தினமும் குடிக்கிறேன். நீ வருவதற்கு சித்த முன்னே கூட குடித்தேன். – பெரியவர்.

பெரிய தம்ளரை எடுத்தேன் விளிம்பில் திப்பிபோல ஏடு ஒட்டியிருந்தது, மோர் குடிக்கும் ஆர்வத்தைத் தடுத்தது. மறுப்பது நாகரீகமல்லவென்று தோன்றியது. மடமடவென குடித்து விட்டேன். எதிலிருந்த சுவரை மீண்டும் பார்த்தேன். சுண்ணாம்பு அடித்தவர்கள் எல்லா படங்களையும் திரும்பவும் மாட்டியிருக்கிறபோது தாயும் சேயுமாக இருந்த அப்படத்தைக்காணாதது குறையாக இருந்தது.

– முதன் முறைவந்தபோது இங்கே ஒரு படத்தைக்கண்டேன்.

– என்ன படம்?

– தாயும் மகளுமாக இருந்தப் படம்.

– பெரியவர் தலையைத் திருப்பி எனது பார்வை பதிந்திருந்த இடத்தை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். “என் பேர்த்தியின் படத்தை சொல்கிறாய் என நினைக்கிறேன்.

– எந்த பேர்த்தி?

– வேறு யார் கலா பெண்தான்.

ஆனால் கருப்புவெள்ளை நிறத்தில் நான் பார்த்திருந்த படமும் குழந்தையைத் தூக்கிவைத்திருந்த பெண்மணியின் தோற்றமும் எனக்கு நன்றாக நினைவிலிருக்கின்றன அது கலாவோ அவள் அம்மாவோ இல்லை. பெண்குழந்தையின் முகத்தில் கலாபெண்ணின் சாடைஇருப்பதை ஒத்துக்கொள்ளலாம், ஆனால் அந்த அம்மாள் கலா அம்மா அல்ல. எண்ணத்தில் சட்டென்று ஏதோ மின்னல்போல ஒளிர்ந்தது. அப்படியுமிருக்குமா? மீண்டும் தலையை உயர்த்தியபோது எதிரிலிருந்த சுவர் சுற்றியது, நிழற்படங்கள் சுழன்றன. கிழவர் நின்றபடி சுழன்றார். கலா அம்மா சுற்றினாள்.

(தொடரும்)

Series Navigationமுள்வெளி – அத்தியாயம் -23சாமி போட்ட முடிச்சு
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *