அஸ்லமின் “ பாகன் “

This entry is part 8 of 28 in the series 9 செப்டம்பர் 2012

 

சிறகு இரவிச்சந்திரன்.

ஹீரோ சைக்கிளின் கதை ஒன்றும் புதுமையில்லை. ஆனால் ஒரு சைக்கிள் ஹீரோவாகும் கதை புதுமைதானே! பாகனின் அச்சாணியே ஒரு சைக்கிள் தான்.
வாய்ஸ் ஓவரில் கதை நகர்த்தும் உத்தி அரதப் பழசு. ஆனால் அந்த வாய்ஸ் ஒரு சைக்கிளுடையது என்றால் புதுசுதானே! அதுதான் பாகனின் ஸ்பெஷாலிட்டி.
சித்தார்த்தின் “ காதலில் சொதப்புவது எப்படி “ யை, ரீ வைண்ட் பண்ணி, ஓட்டிப் பாருங்கள். அதில் சித்துவுக்கு பதிலாக ஸ்ரீகாந்தைப் போடுங்கள். பேக்கிரவுண்டை கிராமமாக மாற்றுங்கள். நண்பர்களாக பரோட்டா சூரி, ப்ளாக் பாண்டியைச் சேருங்கள். பாகன் டீம் ரெடி. ஒரே வித்தியாசம், அடிக்கடி க்ளோசப்பில் பேசும் சித்தார்த்திற்குப் பதிலாக சைக்கிள். ஹானஸ்ட்லி சைக்கிள் தேவலாம்.
ஸ்ரீகாந்த் இந்திப்பட ஹீரோ போல் இருக்கிறார். தெளிவாகப் பேசுகிறார். பாத்திரத்தை மீறி நடிக்க முயற்சிக்கவில்லை. இதெல்லாம் ப்ளஸ். இன்னொரு ப்ளஸ்: ‘நண்பன்’ கொடுத்த திருப்புமுனையை தக்க வைத்துக் கொள்ளும் படமாக பாகன் அமைந்தது.
பரோட்டா சூரியின் வளர்ச்சி, அவர் தனி காமெடியானதிலிருந்து தெரிகிறது என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதில், இன்னொரு படி மேலே போய், வடிவேலுக்கு மாற்றாக வளர்ச்சி பெற்றுவிட்டார். அப்படி ஒரு உடல் மொழி. சபாஷ். ஒன் லைனரில், சந்தானத்தின் கிராமத்து ஜெராக்ஸ் சூரி என்பதை, அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். சாம்பிளுக்கு ஒன்று.
டி வி எஸ் 50ல் முன்னால் கால் வைக்கும் இடத்தில் ப்ளாக் பாண்டி, நடுவில் போலீஸ்காரர், பின் இருக்கையில் சூரி.
“ மதியம் என்ன சாப்டீங்க? “
“ பிரியாணிதான் “
“ அதான் இந்த நாத்தம் நாறுது “
“ அதிகம் பேசினே, ஒங்கள ரிலீஸ் பண்ணமாட்டேன். “
“ எங்கள ரிலீஸ் பண்ணாட்டி பரவால்ல.. நீங்க ரிலீஸ் பண்ணாம இருங்க. “
ஜேம்ஸ் வசந்தனின் தபேலா சத்தங்களுடன் கூடிய பாடல்களை மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஏன் எப்போதாவதுதான் இசையமைக்கிறார் என்று அவரைக் கேட்கத் தோன்றுகிறது. புலி பத்து குட்டி போடாது என்பது சரிதான்.
வெங்கட் பிரபுவின் ‘கோவா’வை எடுத்து கிராமத்து சாயம் பூசுங்கள். அங்கே, வெள்ளைக்காரியைக் கரெக்ட் பண்ணி வெளிநாட்டில் செட்டில் ஆவது கதை. இங்கே பணக்காரப்பெண்ணைக் கரெக்ட் பண்ணி பங்களாவில் செட்டில் ஆவது கதை. ஒற்றுமை அதோடு ஓவர். பணத்தை உதறிவிட்டு ஓடிவரும் காதலியை, மறுதலிக்கிறான் நாயகன். அவன் காதல் நடிப்பு. அவள் காதல் நிசம். அவன் அதை உணரும்போது, அவள் அவனிடமிருந்து விலகியிருக்கிறாள்.
பேஸ்மெண்ட் போடாமலேயே முதல் மாடி கட்டும் விதமாக, எடுத்தவுடனே லட்சங்களை அள்ளும் பிராஜெக்டுகளில் தோற்கும் நாயகன், தினக்கூலி 40 ரூபாயில் ஆரம்பித்து பணக்காரனாகும் பாசிட்டிவ் கதைப்பின்னல். பேப்பர் போடுவதில் ஆரம்பித்து, பழைய பேப்பர் வியாபாரம் செய்து, அதே பேப்பர்களினால் பைக்களைத் தயாரித்து விற்று, எடைக்குப் போடும் புத்தகங்களை ரகவாரியாகப் பிரித்து பழைய புத்தகக் கடை ஆரம்பித்து, தெருவோர பனியன் கடை முதலாளியாகிறான் நாயகன். ஆனால் இந்தக் காட்சிகளெல்லாம் சில ஷாட்டுகளில் சொல்லப்பட்டவை என்பதுதான் இயக்குனரின் புத்திசாலித்தனம்.
படம் முழுக்க விரசமில்லாத நகைச்சுவை, காட்சிகளிலும் வசனங்களிலும். தனுஷ் படத்தில் கருணாஸின் “ நீ கேளேன் “ காட்சியைப் போல், அந்த பரோட்டாக் கடைக் காட்சி தூள் கிளப்புகிறது. இவர்கள் போதாதென்று ஸ்ரீகாந்தின் அப்பா, அம்மாவாக வரும் கண்மணி குணசேகரனும் கோவை சரளாவும் தனியாக ஒரு காமெடி டி 20யே ஆடியிருக்கிறார்கள்.
பணக்காரனாகிவிட்ட ஸ்ரீகாந்த், புது வீட்டில், தன் பழைய சைக்கிளைத் தேடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. காயலான் கடைக்குப் போகும் அதை, ஒரு தீவிரவாதி வாங்கி, சீட்டுக்கடியில் பாம் வைத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் முன்னே நிறுத்துவதும், தேடி வரும் ஸ்ரீகாந்த் தன்னைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று சைக்கிள் துடிப்பதும், கண்டுபிடித்து அவர் அதை ஓட்டிச் செல்லும்போது பஞ்சராகி நின்று, கழன்று விழுந்த பெல்லின் மேல் பகுதியை ( அதில் அவர் பெயரும் காதலி பெயரும் பொரிக்கப்பட்டிருக்கும் ) தேடி அவர் விலகும்போது வெடிப்பதும், ‘நான் ஈ ‘ க்கு ஒத்த கிளைமேக்ஸ்.
அஸ்லம் நம்பிக்கை வரவாகத் தெரிகிறார். அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கலாம். ‘யோஹன்’ டிராப் ஆனாலும் ‘பாகன்’ பிக் அப்.
0
கொசுறு
ஏவிஎம் ராஜேஸ்வரியில் பால்கனி டிக்கெட் 50 ரூபாய் – •புல். சாமான்னிய ரசிகனுக்கான 10 ரூபாய் டிக்கெட்டும் •புல். எதிலும் நிச்சயமில்லாத மிடில் க்ளாஸ் 40 ரூபாய் டிக்கெட்டுதான் •புல் ஆகவில்லை.
வழக்கமாக ஒரு படத்தை, அரங்கில் பணி புரிபவர்கள், முதல் காட்சியிலேயே பார்த்து விடுவார்கள். மீண்டும் அவர்களே பார்க்கிறார்களென்றால், படம் வெற்றியடைந்து விட்டது என்று பொருள். நான் பார்த்த முதல் நாள் மாலைக் காட்சியில், முதல் வரிசையில், நான்கு நடுத்தர வயது பெண்மணிகள், எல்லோரும் வெளியேறும்வரை உட்கார்ந்திருந்தார்கள். சுவரோரம் அவர்களுக்காக காத்திருந்தன, முறங்களும், துடைப்பங்களும்.
0

Series Navigationமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *