தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் கணத்திலும் தமது சித்தாந்தங்களுக்கு எதிராகச் செல்லும், அதாவது முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளம்பும் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவுள்ளது. அவர்கள் யுத்தம் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனிதர்களையும் சுரண்டித் தின்பதற்கேயன்றி, பொதுமகனுக்கு நன்மையைக் கொண்டு வருவதற்காகவல்ல. அதனாலேயே இம் மாபெரும் சக்தி படைத்தவனின் குறிக்கோளை பூலோக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உலகத்தில் உண்மையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் அமெரிக்காவானது தனது அணுசக்தியை கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம்வாய்ந்த கருத்துவேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களை துரோகிகளாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.
அமெரிக்க யுத்த சாஸ்திரங்கள் குறித்த இவையனைத்தும் உண்மையே. இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் இடம்பெற்ற அனேக யுத்தங்களுக்கு அமெரிக்கா பதில் கூற வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து கொடுமைகளுக்கும் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும் என்பதைப் போன்றது அது. எனினும் அமெரிக்காவில் மானுடவியல் கல்வித் துறையில், தமது எதிரிகளென அடையாளம் கண்டுகொண்டவர்களைப் புரிந்து கொள்ளவும் குறிப்பிடத்தக்க முயற்சியொன்றை மேற்கொள்வர். ஐரோப்பாவைத் தாண்டிய புறவுலகத்தை மனித நேயத்துடன் புரிந்துகொள்வது சம்பந்தமாக இலக்கியத் துறையில் ஏற்பட்ட தேவையின் காரணமாகத்தான் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒப்பீட்டு இலக்கியம் எனும் விடயம் வளர்ச்சி கண்டது.
யுத்தம் கடந்து சென்ற இலங்கையின் இலக்கியத் துறையிலும் எம்மால் இதுபோன்ற ஒன்றைச் செய்ய இயலும். அந்த எண்ணத்தில்தான் எனது மானுடவியல் முதுகலைமாணி கற்கைநெறி வகுப்புக்களில் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழிலக்கியங்கள் குறித்து அடிக்கடி உரையாடி வருகிறேன். எண்ணத்தின் பிரதிபலனாக எனக்குக் கிடைத்த அபூர்வமான தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஒருவர் சுதாராஜ். அவரது ‘காட தொஸ் பவரமுத?’ மற்றும் ‘நொபெனென பெதி’ எனும் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டிலும் யுத்தம் நிலவிவந்த முப்பது வருட காலத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்க்கை குறித்த பொதுவான ஊடக அறிக்கைகளிலும், அரசியல் கண்ணோட்டங்களிலும், இராணுவ அறிக்கைகளிலும் எமக்குக் கிடைத்திராத தமிழர் வாழ்க்கை குறித்து யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் கிடைக்கும் ‘யதார்த்தம்’ என்பது அனேக தகவல்களைக் கொண்டதல்ல. ஆயுதம் தாங்கிய குழுக்கள் சிலவற்றால் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் வாழ்ந்த மக்கள் மிகவும் கடினமான தீர்மானமொன்றையெடுத்து, தாம் நேசிப்பவர்களையும், நேசிப்பவைகளையும் பாதுகாப்பதற்காக சில தசாப்தங்கள் துயருற்ற விதம் குறித்து இலக்கியங்களில் மட்டுமே செய்யப்படக் கூடிய நேரடி வர்ணனைகளோடுதான் சுதாராஜின் சிறுகதைகளில் எழுதப்பட்டிருக்கிறது.
நான் இத் தொகுப்புகளிலுள்ள கதைகளை எனது மாணவ மாணவிகளிடம் வாசிக்கக் கொடுத்து இக் கதைகளில் உள்ள தமிழ் மக்களுக்கு இலங்கை எனும் நாடு தென்படும் விதம் குறித்து தமது அவதானத்தைச் செலுத்தும்படி கூறினேன். சிங்களம் மற்றும் தமிழ் எனும் இரண்டு இனங்களுக்கிடையே இலங்கையின் யதார்த்தநிலைமையானது உணரப்படும் விதம் குறித்து ஆய்வு செய்வதே எமது பயிற்சியின் நோக்கமாக இருந்தது. இது ‘உலகிலேயே உன்னதமான நாடு இலங்கை’ என சிறுவயதிலிருந்தே எண்ணி வரும் சிங்களப் பிள்ளைகளுக்கு தம்மைப் பற்றிய சுய தெளிவொன்றைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு அனுபவமாக அமைந்தது. யுத்தத்தை ஆட்கொண்டிருந்த இரு தரப்பினருக்கும் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், கிளிநொச்சியிலிருந்து திரும்ப யாழ்ப்பாணத்துக்கும், மீண்டும் இன்னும் பிற இடங்களுக்கும் சென்று வாழ முயற்சித்த சாதாரண தமிழ் பொதுமகனின் வாழ்க்கையானது, சுதாராஜின் அனேகக் கதைகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தத்தமது குடும்பங்களில் படித்த குடும்ப உறுப்பினர்கள் உலகின் வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்து சென்ற பிற்பாடு, அழிந்து கொண்டு வரும் கலாசாரத்தைக் காப்பதற்கு முயற்சிக்கும் மக்களை இக் கதைகளில் எமக்கு சந்திக்கக் கிடைக்கிறது. உதாரணமாக புத்தாண்டு சம்பிரதாயங்களைக் குறிப்பிடலாம். அச் சம்பிரதாயங்களின் படி உறவுகள் ஒன்றாக இருக்க வேண்டும். இங்குள்ள ஏழைத் தமிழ் மக்களால் அவுஸ்திரேலியாவிலோ கனடாவிலோ வசிக்கும் பிள்ளைகளிடம் புத்தாண்டுப் பயணம் செல்ல முடியாது. பிரிந்து போயுள்ள மக்களுக்கிடையே புத்தாண்டு எதற்கு? சுதாராஜின் ‘வேரும் விழுதுகளும்’ கதையை வாசித்தபோது எனக்கு இவ்வாறுதான் தோன்றியது.
அவரது கதைகள் குறித்து இன்னும் எழுத வேண்டும். சிறிய பத்திக் கட்டுரையொன்றுக்குள் எழுதி அடக்கமுடியாத பெறுமதியொன்று சுதாராஜின் சிறுகதைகளில் உள்ளது. எனவே இப் பத்திக் கட்டுரையின் நோக்கமானது பெறுமதியான ஒன்றை இன்னுமொரு முறை வாசிப்பதற்காக வாசகர்களை அழைப்பதாகும். பத்திக் கட்டுரை எனும் கட்டுரை வடிவத்தில் செய்ய முடிவது அழைப்பது மாத்திரமேயாகும்.
சுதாராஜ் எனும் பெயரில் எழுதி வரும் சிவசாமி ராஜசிங்கம் ஒரு விருது பெற்ற எழுத்தாளர் எனவும், அவர் இலங்கையின் எந்தவொரு இனத்தையும் ஓரக் கண்ணால் நோக்காது, இலங்கையின் இனப்பிரச்சினையை நடுநிலைமையில் நின்று பார்க்கும் எழுத்தாளர்களில் ஒருவர் எனவும் ‘நொபெனன பெதி’ தொகுப்பை சிங்கள மொழியில் மொழிபெயர்த்த திரு. முஹம்மத் ராஸூக் கூறுகிறார். அக் கூற்று ஒரு உண்மையான அளவீடு.
‘நொபெனன பெதி’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘வெள்ளைக் கோழி’ எனும் கதையானது ஒரு அற்புதமான படைப்பு. கொழும்பில் தொழில் புரியும் மூத்த அண்ணன் ஊருக்கு வருகிறார். அது பெயரொன்றற்ற வடக்கின் ஒரு கிராமம். யாழ்ப்பாணத்துக்கு அருகிலிருக்கக் கூடும். ‘கொழும்பில்’ கலவரம் என்பதனால்தான் மூத்த அண்ணன் அவசரமாக வந்திருக்கக் கூடும். இது எண்பத்து மூன்று கலவரத்துக்குச் சிலகாலத்துக்குப் பின்னர் என்பதனை அனுமானிக்க முடிகிறது. மூத்த அண்ணன் ஊருக்கு வருகையில் விதவிதமான இனிப்புகள், விளையாட்டுச் சாமான்களைக் கொண்டு வருவார் என்பதால் அவ் வீட்டிலிருக்கும் சின்னத்தம்பிக்கு மிகவும் சந்தோஷம். மூத்த அண்ணன் ஊருக்கு வரும் நாளில் பொதுவாக இரவுணவுக்கு ஒரு கோழி பலியிடப்படும். அக் குடும்பம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறது.
இம் முறை அண்ணன் ஊருக்கு வருவதன் காரணத்தால், அவ் வீட்டில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி பலியிடப்படும் விதம் குறித்துத்தான் இச் சிறுகதையில் சித்தரிக்கப்படுகிறது. வெள்ளைக் கோழி அழகானது. புத்திசாதுரியமானது. எனவே அதனைப் பிடித்துப் பலியிட அக் குடும்பத்தினர் மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அதன் பின்னால் துரத்திச் செல்வது, அது வரும் வழியை மறித்து நிற்பது போன்றன விரிவாக விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. “கலவர காலத்தில் சிங்களவர்கள், தமிழர்களை துரத்தித் துரத்தி அடித்ததுவும் இப்படித்தான்” என கோழியைப் பிடிக்கையில் கொழும்பிலிருந்து வந்திருக்கும் மூத்த அண்ணன் சொல்கிறார். அது சின்னத்தம்பிக்கு இனரீதியான துன்புருத்தல்கள் குறித்த ஒரு பாடமாகிறது. பிடிக்கப்பட்ட கோழியானது இறைச்சியாகத் துண்டுகளாக்கப்படும் போது உறக்கத்தில் விழும் சின்னத்தம்பிக்கு துன்புறுத்தப்படும் சம்பவங்களுடனான ஒரு கனவு தென்படுகிறது. சோறும் இறைச்சிக் கறியும் வெந்து வருகையில் அவன் உறக்கம் கலைந்து எழுகிறான்.
“அம்மா, பெரியண்ணனை கொழும்புக்குப் போக வேண்டாம் எனச் சொல்லுங்கோ” எனச் சொல்கிறான்.
வெள்ளைக் கோழியைப் பிடிப்பதையும் பலியிடுவதையும் விபரித்த விதத்தில்தான் இச் சிறுகதையின் பெறுமதி தங்கியிருக்கிறது. குடும்பத்திலுள்ள பிள்ளைகள் சிலர் யுத்தமொன்றில் ஈடுபடுவதைப் போலத்தான் கோழியைப் பிடிக்கிறார்கள். இக் கோழி பிடிக்கும் செயற்பாடானது, அரசியல் உரிமைகளற்ற ஒரு அகிம்சைக் குழுவினரிடையே அரசியல் அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டதையும், துன்புறுத்தல்கள் வளர்ச்சி பெற்றதையும் குறிப்பிடும் ஒரு குறியீடாக ஒப்புநோக்கப்படலாம். வெள்ளைக் கோழியின் மரணமானது, அக் குழுவினரிடையே இருந்த அமைதி, இல்லாமல் போனதைப் போன்றது. கதையில் நடைபெறுபவை ஐந்து அல்லது ஆறு வயதேயான சின்னத்தம்பியின் பார்வையில்தான் எம்மிடம் முன்வைக்கப்படுகிறது. எனவே சுற்றிவர நிகழ்பவை குறித்து அவனிடமிருந்து வெளிப்படும் அப்பாவித்தனமும் சிறுபிள்ளைத்தனமும் எமக்குள் உருவாகிறது. 1983-87 காலப்பகுதியில் வடக்கின் தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஆட்கொள்ளப்பட்டு துயர வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளப்பட்டது குறித்த எண்ணமும் இதனால் புலப்படுகிறது.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்று, உலகில் பல்வேறு நாடுகளில் கடமை புரிந்து வந்துள்ள சுதாராஜ், வெளிநாட்டவர்களைப் பின்னணியாகக் கொண்டே தனது கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் சந்தித்து ஒன்றாக வசிக்க முற்படுகையில், தாய்நாட்டிலிருந்து பெறப்பட்ட இனப்பாகுபாட்டை சண்டையிட்டுத் துரத்தியடித்து விட்டு, பொது மனிதாபிமானத்தை உணர்ந்துகொள்ள முற்படும் விதம் பல கதைகளில் வருகிறது. இனவாதத்தால் ஒருவரிடமிருந்து ஒருவர் வெளிப்படையாகவே பிரிக்கப்படும் இந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு கதையில் கராச்சி விமானநிலையத்தில் சந்திக்கிறார்கள். இன்னுமொரு கதையில் ஈராக்கின் சீமெந்துத் தொழிற்சாலையில் சந்திக்கிறார்கள். இச் சந்தர்ப்பங்களில் தாய்நாட்டுக்குச் சொந்தமான விதவிதமான சம்பிரதாயங்களும் இனவாதங்களும் தேசியவாதங்கள் குறித்தான குறுகிய பார்வைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, இம் மனிதர்களுக்கு ஒன்றாய் இணைந்து செயற்பட நேர்கிறது. எனவே படிப்படியாகவேனும் கலாசாரத்தினால் தமக்குத் தரப்பட்ட அடையாளத்தைத் தாண்டி அனைவருக்கும் பொதுவான மனிதாபிமானத்தைத் தேடிக் கொள்ள அவர்களால் முடிகிறது. அது ஒருவர் மற்றவரைப் பிரிந்து வாழும் பெரும்பான்மையான கலாசாரமல்ல. ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழும் சர்வதேச கலாசாரம். தாய்நாடு எனப்படும் சூழலிலிருந்து உடல்ரீதியாகப் பிரிந்து வாழ்ந்தமையே அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு அளித்தது. இந்த சர்வதேச கலாசாரத்தை தாய்நாட்டுக்குள்ளேயே உருவாக்க வேண்டுமெனில், நாம் தாய்நாடென அடையாளப்படுத்தும் பூகோளப் பகுதியை புதியதொரு நாடாக மாற்ற வேண்டும். சுதாராஜின் சில கதைகளில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் மனிதாபிமானத்தை வெளிநாடுகளிலேயே வெளிப்படுத்துவதானது, தாய்நாடு எனும் தேசம் குறித்த வரையறுக்கப்பட்டதோர் பார்வை அந் நாட்டில் வாழும் மக்களது மனிதாபிமானத்தைச் சிதைத்திருப்பதைக் குறிப்பிடுவதற்காகவா? நாம் பிறந்த பூமியானது எதனால் எமக்கு முக்கியமானதாக இருக்கிறதென மீண்டும் எம்மால் சிந்தித்துப் பார்க்க முடியாதா?
– பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
- பொன் குமரனின் “ சாருலதா “
- பயண விநோதம்
- தங்கம்மூர்த்தி கவிதை
- விடுதலையை வரைதல்
- கேட்பினும் பெரிது கேள்! – புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..
- ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -44 (முற்றும்)
- மொழிவது சுகம் 22:. இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்
- இரட்டுற மொழிதல்
- தமயந்தி நூல்கள் அறிமுகம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -3
- சினேகிதனொருவன்
- பாவலர்கள் (கதையே கவிதையாய்)
- ஆகாயத்தாமரை!
- ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்)
- அ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பு
- வெள்ளம்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29
- இந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு
- தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !
- பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
- உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)
- சுபாவம்
- 7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்
- கவிதை
- விசரி
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு
- குரல்
- தலைமுறைக் கடன்
- செல்பேசிகளின் பன்முகத் தாக்கங்கள்
- அவர்கள்……
- அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்
- நாள்தோறும் நல்லன செய்வோம்.
- சுறாக்கள்
- ஜென்ம சாபல்யம்….!!!
- அக்னிப்பிரவேசம் 2 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவு
- முன்குரானிய சமயப்பிரதிகளில் ஏகம்
- பஞ்சதந்திரம் தொடர் 57
- அசிங்கம்..