வெள்ளம்

This entry is part 17 of 41 in the series 23 செப்டம்பர் 2012

: சுப்ரபாரதிமணியன்

 

தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன்  அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில்  யாருடனாவது களைத்து  விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு  பெண்கள்  தன்னிடம்  அகப்பட்டுக்கொள்வார்கள் என்று அவன் நினைத்துப்பார்த்ததுமில்லை.அய்ந்து வருடம் முன்பெல்லாம் அவன் தனித்து விடப்பட்ட போது அவனுக்கு சாவு பற்றிய எண்ணம் தான் மிகுந்திருந்தது. சரவணன் பெரியப்பாவிடம் ஒருநாள் கூட கேட்டுவிட்டான். “ எனக்கு எப்ப சாவு வரும்” அவர் சொன்னார்:

“ எனக்கே எப்ப வரும்ன்னு தெரியலே.. இதுலே உனக்கு நான் ஜோஸ்யம் சொல்ல முடியுமா .. என்ன..”  எல்லாவற்றுக்கும் கடுமையான முயற்சி வேண்டும்  என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அதற்கு விதிவிலக்க்காக   பெண்கள் தன்னிடம் வந்து சேர்ந்து விடுகிறார்கள் என்றும் தோன்றியது.” சுலபமாக எப்படி சாவது “

“ தூக்குக் கயிறு, தண்டவாளம், எலிமருந்து..”

“ எலி  மருந்தெல்லா வேலை  செய்யாதப்பா..”

“ சாணிப்பவுடர்..” 

2.

“ அது சரிதா.”

நகரத்தில் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானப் பெண்கள் சாணிப்பவுடரில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்களின் பட்ஜெட்டில் அதுதான் சுலபமாகிறது. “ எனக்குத்தெரிஞ்ச  ஒருத்தருக்கு எள்ளுன்னா அலர்ஜி .. இது ரொம்ப வருசமா.  ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கற ஆளுதா.. என்னமோ திடிர்ன்னு  எங்கையோ போன எடத்திலே  எள்ளுரைண்டை ஒன்னு சாப்புடக் குடுத்திருக்காங்க.  சாப்புட்டுட்டார். அலர்ஜியாயி செத்துப் போயிட்டார். அதுமாதிரி உனக்கு அலர்ஜி              

என்னன்னு  கண்டுபுடி..  சீக்கிரம் செத்துப் போலாம்”  ரொம்ப நாள் பெண்கள் தான் அவனுக்கு  அலர்ஜியாக இருந்தார்கள். அவர்கள் தூரமாக இருக்கும் போது அலர்ஜிதான். பக்கத்தில் நெருங்கிவிட்டபின்பு அலர்ஜியெல்லாம் தொலைந்து போய் விட்டது. இப்போது சாவுக்கு பயப்படுகிறவர்கள் அவனிடம் அடைக்கலமாகிறார்கள், பெண்களுக்குத்தான் எவ்வளவு கஷ்டம். சுலபமாக அடைக்கலமாகிறார்கள்.

வெள்ளம் நதிகரையில் இருப்பவர்களையெல்லாம் அழுக்காக்கி விட்டது. அழுக்கை விட வேண்டித்தான் பெண்கள் அடைக்கலமாகிறார்கள்.  வெள்ளம் இப்படி வந்து எல்லாவற்றையும் அழுக்காக்கிப் விட்டுப் போய்விடும் என்பது பெரிய ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வீடெல்லாம் சக்தியும் மண்னுணுமாகி விட்டது. எல்லாம் இடங்களிலும் பூத்திருந்த ஈரம் காய்வதற்கு முன்னமெ பெண்கள் அடைக்கலம் தேடுகிறவர்களாகி விட்டார்கள். நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைத்தும், சூடாக எதையாவது சமைத்துப் போட்டும் ரொம்பநாள்

3

நீடிக்கவில்லை. அழுக்கும், ஈரமும் படிந்திருந்தாலும்  வீட்டிற்குப் போவதுதான் எல்லோரின் குறிக்கோளாக இருந்தது.

வெள்ளை எருக்கம் பெரிய மரமாகவே கிளைத்திருந்தது. அதை கட்டிப்போட்டு நிற்க வைக்கும் முயற்சிகளெல்லாம்  தோற்றுப் போனது போல் தரையில் கிடந்தது. எப்போது மஞ்சள் வெயில் பட்டாலும் பூத்துக்கிடக்கும் எருக்கம் பூக்கள் மின்னி ஒளிவிடும். வெள்ளை எருக்கையை வெட்டி தூரப்போட்டு விடும்படி யசோதாவிற்கு பலர் சொல்லி இருக்கிறார்கள். ஏதோ தெய்வக்குத்தம் என்பதைத்தான் அவள் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வெள்ளை எருக்கம் செடி போன இடம் மழையில் தெரியவில்லை.   சேறு மூடிப்போய் விட்ட்தா, இல்லை மண்ணிலிருந்து பெயர்ந்து போய் விட்டதா என்பது பற்றி யசோதாவிற்குத் தெரியவில்லை.

என்னாவாகியிருக்கும் என்று அவனிடம் தான் கேட்டாள் 

“ எனக்கென்ன தெரியும்..”

“ என் வீட்டை வாங்கப் போற ஆளு நீங்க.. தெரிஞ்சுக்க வேண்டாமா வெள்ளம் வடிந்தபின்னும் வீடுகளில் சேறும் கசடும் எங்கும் நிறைந்திருந்த்து. யாரும் வீட்டிற்குள்  போகவும் சங்கடப்பட்டார்கள். என்ன வியாதி வரும் என்று யூகிக்க முடியவில்லை.  பொதுவாக காய்ச்சல் என்று ஏதோ வந்தது. செத்துப்போனவர்களும் இருந்தார்கள்.  அவளுக்கு ஏதோ முடி கொட்டிப்போகும் என்று தோன்றியது. பதினெட்டு வயதில் அப்படித்தான் முடி கொட்டிப்போனது. வீட்டில் கோழி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் கூண்டைத்திறந்து கோழிகளை விரட்டுவது அவளது வேலையாக இருந்தது.  கோழிப்பீயின் நாற்றம் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. சட்டென சின்னச் சின்ன சொட்டைகள் தலையில் விழ

4

ஆரம்பித்தது. ஏதோ வெட்டுப்புழுவின் சாகசம் என்று சொன்னார்கள்.  அந்த சொட்டை பளபளவென்று மினுங்கிக் கொண்டிந்ததாகச் பலர் சொன்னபோது அவளுக்கு அழுகையாக இருந்தது.  பல இடங்களில் அந்த சொட்டை  ஆக்கிரமித்தது.  இனி கல்யாணக் கனவெல்லாம் அவ்வளவுதான் என்றிருந்தது அவளுக்கு. ஏதோ டிஞ்சர் ஒன்ரை தம்மணன் கொண்டு வந்து கொடுத்தார். அதை மூன்று நாட்கள்  சொட்டை விழுந்த இடத்தில்   தடவிய போது  சொருசொருவென்று ஏதோ தட்டுப்பட்டது.  மெல்ல மயிர் முளைத்து வளர்ந்த போது நம்பிக்கை ஏற்பட்டு விட்ட்து.

“ அப்புறமும் ஏன் உனக்குக் கல்யாணம் நடக்கலே “

“ அதுதா எனக்கும் தெரியலே”

அவளுடன் படுத்து முயங்கிக் களைத்து விழுந்தபோது குழி தோண்டும்போது பாறையிலோ, பெரும் கல்லிலோ கடப்பாரை பட்டு நங்கென்று எழும் சப்தம் அவளுக்குக் கேட்டது

“ சத்தம் கேட்டயா.. கடப்பாரை வுழுகறச் சப்தம்”

“ கடப்பாரை அப்பிடி சப்தம் போடாதே.                                       

 

நம்ம கடப்பாரைச் சத்தம்  வேற மாதிரியல்லவா இருக்கும்.”  ஒரு வகை சிரிப்புடன் அவன் சொன்னான். “ ஓ .. நீ அங்க வர்றியா.. உன் கடப்பாரை  இன்னம் ரெண்டு நாளைக்கு முனை மழுங்கியதுதானே. “ ”அவ்வளவு களச்சுப் போயிட்டனாக்கும். எந்த நேரம் கடப்பாரையா மாறும்ன்னு யாருக்குத் தெரியும் . உனக்குத் தெரியும் ”

” ஆமா.. நாங்கதா அலையறம். அலையற ஆளு சொல்றதெப்பாரேன்”

5

“ எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது . இல்லீன்னா இதெல்லாம் அமையுமா.லோலோன்னு அலையறவங்க எவ்வளவு   பேரு இருக்காங்க..”

“ உலகமே இதுலதா  சுத்துதுன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. சுத்தட்டும் ..சுத்தட்டும்..”. அவள் சொன்னபின்பு அவனுக்கும் கடப்பாரைச் சத்தம் கேட்கிறமாதிரி இருந்தது.. செத்துப்போனவர்களைப் புதைக்க எங்காவது குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்களா. இப்போதெல்லாம் மின்மயானம் சுலபமாகப் போய் விட்டது. ஒன்றுக்கு இரண்டாக மின் மயானங்கள் வந்து விட்டன.யுனிவர்சல் திரையரங்கு  கல்லறைத்தோட்டத்தில் குழிதோண்டிப் புதைக்கிற மாதிரித் தெரியவில்லை. அடுத்த காம்பவுண்ட் மின்மயானம் என்பதால் யார் வந்தாலும் அங்குதான் கை நீட்டிவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் சிலை பக்கம் இருக்கிற கிறிஸ்துவ வேதகாரர்களுக்கான சுடுகாட்டை இடித்து  வேறு ஏதோ  பெரிய கட்டிடம் கட்டுகிறார்கள். அப்படி கட்டும் கட்டிடத்தில் ஏதாவது ஆவிகள் அலைந்து கொண்டிருக்குமா. பக்கத்தில் இருந்த  அடுக்குமாடிக் கட்டிட்த்தில்  அவனின் நண்பன் ஒருவன் குடியிருந்தான். அங்கே ஆவிகள் நடமாடுவதாய் கண்டுபிடித்து அலறிக்  கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவன் குடிப்பதை நிறுத்தியிருந்தான். தூக்கமும் கெட்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் ஆவிகள் நடமாட்டத்தைத் தவிர்ப்பதற்காக குடிக்க  ஆர்ம்பித்தான். எவ்வளவு        

குடித்தாலும்  நடு ராத்திரிக்குப்பின் தூக்கம் கலைந்து விட்டது அவனுக்கு. ஆவிகளிடமிருந்து தப்பிப்பதற்காக  அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு இடம் தேடிப் போய் விட்டான்.அதை விட்டால் சுடுகாடு என்று  சட்டென நினைவில் எதுவும் வரவில்லை .புதிதாய் இன்னொரு மின் மயானம் வருவதாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

6

அதற்கு அவனிடமும் நன்கொடை கேட்டார்கள்: “ என்ன அட்வான்ஸ் தொகையா..” என்றான்.

“ எங்க பெரியம்மா பொண்ணு ஒண்ணு செத்துப் போனது கொடுமையா இருந்துச்சு. அவ புருசன் அடுச்சு கொன்னு  புதச்சுட்டான். ரொம்பநாளா ஊர்ல காணம்ன்னு கம்ப்ளெயிட் வேற கொடுத்தா சந்தேகம் வந்து தோண்டிப்பாத்திருக்காங்க. எலும்புகதா கெடச்சுது.  அதுக்கும் மரியாதை பண்ணி அடக்கம் பண்ணுனாங்க.”

“ அது பண்றதுக்குன்னு சில பேர் இருந்தாங்களே. என்னையெல்லாம் கேட்கறதுக்கு ஆளில்லதா..”

“  அப்புறம் பாக்கியவான்னு சொல்லிகிட்டிருந்தே.”

“ பாக்கியவான்..  ஆனா பாக்கியம் இல்லாத பாக்கியவான்..”

வெள்ளம் வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிப் போய் விட்டது. நொய்யலின் கரையோரங்களில் காசுள்ளவர்கள் சாய்ப்பட்டறை போட்டு சாயத்தண்ணீரை நொய்யலில் விட்டு சம்பாதித்தார்கள். சின்னதாய் இருந்த இடங்களெல்லாம் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி  சிறுசிறு வீடுகளாகிவிட்டன. உள்ளூரில்  அவ்வளவாய் மழையில்லை. மேற்கே பெய்த மழை வெள்ளத்தைக் கொண்டு வந்து  விட்டது. சங்கிலிப்பள்ளம் பகுதியில் இருந்த வீடுகளெல்லாம் வெளளத்தில் மூழ்கி  எல்லோரையும் துரத்திவிட்டது.   இடிந்து போன வீடுகளில் குடி புக முடியாது. கார்ப்பரேசன்கார்ர்களும் கரையோர வீடுகளை இடித்து விடப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாலம் கட்டுகிற வேலையில் பல வீடுகள் கார்பரேசன்காரன்களின் புல்டோசரின் இடிபாடுகளில் சிதைந்திருக்கிறது. லட்சுமி நகர்  முக்கில் அப்படித்தான் பல வீடுகளில்  இருந்து அழுகையும், அரற்றலும்

7

இருந்தது. “ ஒரே நாள்லெ இவ்வளவும் செய்யறீங்களே அய்யா. அவகாசம் தரக்கூடாதா.  வேலைக்குப் போன் புருசனும், பள்ளிக்கூடம் போன கொழந்தைகளும் வந்து வூடு எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்.” என்று கத்திக்கொண்டு உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி  கொளுத்திக் கொண்ட பெண் ஒருத்தியை காவல்துறை கைது செய்தார்கள். கரையோர வீடுகளை அடித்து நொறுக்கும் புல்டோசர்கள் பிரமாண்டமானதாகத்தான்  இருக்கும்.    சோமன்  கிடைக்கிற வீட்டைப் பார். எவ்வளவு சகாயமா முடியுமோ  அவ்வளவுக்கு ஆட்டையைப் போடப் பாரு. கெடைக்கற வரைக்கும் லாபம்தா.” என்று பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்து பார்க்கச்    

சொல்லியிருந்தான். . கார்ப்பரேசன்காரர்கள் இடிக்கப்போவதாய் சொல்லி மிரட்டிதான் இரண்டைப் பேசி முடித்திருந்தான்.

அப்படி ஒரு வீட்டைப் பார்க்கப் போனபோதுதான்  சியமளாவைப் பார்த்தான். அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து போனான். பனியன் கம்பனி வேலைக்கு போன் போது அறிமுகமான சுப்ரவைஸ்சர் பரமசிவத்தோடு  விடுமுறை நாட்களில் வெளியூர்களில் அறை எடுத்து சுற்ற ஆரம்பித்தாள். அப்புறம் கல்யாணம் என்று முடிவாகி முதல் கணவனுக்கு ஒரு பெண்ணும், பரமசிவனுக்கு ஒரு பெண்ணும் என்று ஆகிப்போயிற்று. மூத்த பெண்ணை தன் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைத்தாள். இரண்டாவதை எங்கு எந்த ஜாதிக்காரனிடம் தள்ளுவது என்பது அவளின் புதிராக இருந்த்து. வெள்ளத்திற்கு முன்பே பரம்வம் கொஞ்ச நாளாய் காணவில்லை. சியமளாவை மூத்த பெண்ணின் கணவனோடு சம்பந்தப்படுத்தி ஏதோ கோபத்தில்

 

8

பேச அவள் துரத்தி விட்டாள். சியாமளா  வீட்டைப் பார்க்கப் போன போது வீட்டு முகப்பில் அரை அடி உயரத்திற்கு  சேறு படிந்து கிடந்தது. ” இதியெல்லா க்ளின் பண்றதுக்கு வீட்டு விலை செரியாப் போகும் ” என்றான்.   ஈரம் பூத்து விழ தயாராகும் நிலை போல் இருந்தது. நடு அறையில் அரை அடி உயர தடுப்பு ஒன்று அமைந்து  சேற்றின் அளவைக்குறைத்திருந்தது. சியாமளா ஒத்துழைப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை.  வழுக்கலில்  விழப்போனவளைப் பிடித்தபோது எதுவும் சொல்லவில்லை. அவனும் வழுக்கி விழுவது போல் அவன் மீது பிறகு விழுந்தான்.  ஈரம் பூத்த சுவற்றில் அவளின் உடம்பு தகதகத்து சாய்ந்த்து. எங்கும் வீசிய துர்நாற்றத்தின் மத்தியில் அவளின் உடம்பின் வாசனை அவனை கிரங்கடித்தது.

” தேக்கு மரம்ய்யா  நீ. “ என்றாள் அவள்.

“ நீ சோப்புக் கட்டி “ அதற்குப்பிறகு அவளைத்தேடி அவன் நான்கு முறை சென்று விட்டான். கடைசியாகப் போனபோது                 

“ வீடு விக்கற அய்டியா இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க “ என்று யாரோ அவனிடம் சொன்னார்கள். ஏமாற்றமாக்த்தான் இருந்தது. அவள் கண்வன் திரும்பி வந்திருப்பானா. வீடு விக்கிற ஆசை எப்படி கலைந்து போனது. தன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட அவளுக்கு வேறு உபாயம் ஏதாவது தெரிந்து விட்டதா  எனப்தைப்பற்றியும் அவன் யோசித்துப் பார்த்தான்.  கைபேசி சிணுங்கி ஓய்ந்தது. தமிழில் குறுஞ்செய்திவரும்படி   அவன் வடிவமைத்திருந்தது ஆறுதல் தந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரச்செய்ய நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. ‘ புரிஞ்சுக்க்கற மாதிரி செய்யணும்ன்னா காசு தந்துதானே ஆகணும் “ வந்த குறுஞ் செய்தி வீடு வாஙக் கடன் வேண்டுமா என்று கேட்டது. இது போல் கடன் குறித்து பல

9

குறுஞ்செய்திகள் வருகின்றன. கடன் வேண்டுமா என்று கேட்டு பல பெண்கள் பேசுகிறார்கள். ” நேரில் வந்து கேட்க்க் கூடாதா “  என்று கேட்டிருக்கிறான். “ ” எங்க வேலை ஆபீஸ்ல இருந்து பேசறததுதா..நீங்க வேண்ணா வாங்க. நேரிலே விளக்கம் சொல்றேன்..” அப்படி தேடிப் போனதில்லை அவன். ஒரு மாதிரி ஒற்றைக் கண்ணும், கறுப்பு நிறமும் யாரையும் தூரம் வைத்தே பேச வைக்கும். ஆனால் வீடு, ரொக்கம் என்று அலைகிறபோது  பேச யாராவது கிடைத்து விடுகிறார்கள். இது அவனை பாக்யவான் என்றே சொல்ல வைத்திருக்கிறது.

அவன் செய்து களைத்த வேலைகளைப் பட்டியலிடுவதில் கூட அவனுக்கு அயற்ச்சியாக இருந்திருக்கிறது.. எதிலும் சுலபமில்லைதான். யாரும் விதிவிலக்காக இருக்கமுடியாது. அவனின் கஷ்டங்களையெல்லாம் அவன் நினைத்துப் பார்த்ததில்லை. கொஞ்சம் பணம்,  கொஞ்சம் லஞ்சம், கொஞ்சம் புகழ்ச்சி, ஒரு ராத்திரி  நேர விருந்து எல்லாவற்றையும் சுலபமாக்கி விடுகிறது.இந்தப் பெண்களுக்கு மலிவு விலை சேலை அல்லது அதற்கு இணையான தொகை. மலிவு விலையில் நியாயவிலைக்கடையில் விற்கும் ஏதாவது பொருளுக்காக கூட அடைக்க்கலமாகிப் போவது அவனுக்கு ஆச்சர்யமே தந்திருக்கிறது.  ’ என் ரசனை அவர்களுக்கு  சுலபமாகப் புரிந்து விடுகிறது.  ருசிக்கு எந்த அடிப்படையும்  தேவையில்லை. ருசி முக்கியம். அவர்களும் ருசிப்பவர்கள்தான்” 

வெள்ளம்  ஒரே நாளில் வடிந்து விட்டது. ப்ருத்திக்காட்டுப்புதூர் நகராட்சிப் பள்ளியில்  தங்கவைக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்தபோது அவனுக்கு இரக்கம் பீறிட்டது. எல்லோரும்  அழுக்காகத்தான் இருந்தார்கள் மோசமானக் கதைகளைச் சொன்னார்கள். எல்லோரிடமும் சொல்வதற்கு அழுகையான கதையொன்று இருந்தது. 

10

இவர்களிடமிருந்து என்னென்ன வியாதிகள் கிளம்பும் என்பதை  நகராட்சி அலுவலர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.  கண்டுபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் இடது கையின் ஆறாம் விரல் தங்கு சதையாய் ஆடிக் கொண்டிருந்தது, அவர் கைகளை அசைத்தசைத்துப் பேசும் போது அது கரகரவென்று திருகி பயமூட்டியது.

கூரைகளின் மேலேறி கடத்திச் சென்று தீயணைப்பு வண்டிகளுக்குள்   பலரை உட்கார வைத்ததை அவன் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்திருந்தான். மாடும் ஒன்று மிதந்து போனது. கட்டில்களும் குப்பைக் கூளமும்  கலவையாக போனது. ஒரு இளம் பெண்ணின் உடம்பு உப்பிய பிணமாய் போனதாக பரவலாகச் சொல்லிக் கொண்டார்கள்.  ஏகதேசம் அது நிர்வாணமாகத்தான் இருந்தது   என்பதுதான் எல்லோரின் கவனிப்பிற்குமான காரணம் என்று நினைத்தான். பய பீதியில் பிணமாக மூர்ச்சையடைந்து போனவர்கள் கூட இருப்பார்கள். தெற்கு முக்கு வீட்டில் வீடு பார்க்கப் போன இடத்தில் அவன் தொட்ட ஒரு பெண் சட்டென மூர்ச்சையாகி விட்டாள். அவள் முகத்தை முத்தத்திற்காய்  நெருக்கிய போதுதான் அவள் கண்கள் கிறங்கி  துவண்டது தெரிந்தது. அது கிளர்சியால் வந்த மயக்கமல்ல;பய பீதியில்தான்   மயங்கி விட்டாள் என்பதை அவன் உணர கொஞ்ச நேரம் பிடித்தது. அவள் கொஞ்ச நேரம் கழித்து கண்களைத் திறப்பதற்குள் அவன் உடம்பு வியர்த்து விட்டது. அவள் கண்களைத்  என்னாச்சு என்று கேட்டபடி திருதிருவென முழித்தாள். எல்லாம் சகஜமாகிவிட்டதைப் போல அவள் வெளியே நடக்க ஆரம்பித்தாள். பயத்துடன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான். அப்பெண் மறுபடியும் வரக் காணோம் என்று விறுவிறுவென்று நடக்க

 

11

ஆரம்பித்தான். அவன் உடம்பு வெள்ளத்தில் மூழ்கி விட்டது போல  ஈரமாகி விட்டது.

கிராமத்தில் காரு மழை பொய்த்துப்போனது. போட்டிருந்த போர்வெல் குழிகளெல்லாம்  காய்ந்து விட்டன.குடிக்கத்தண்ணீர் வேண்டியிருந்த்து. தென்னம்பிள்ளைகளுக்கும் பொய்த்தண்ணீர்  கட்டுவதற்கே சித்தப்பாவால் முடியவில்லை. கறவை மாட்டில் கிடைக்கிற பால் நாலு வீடுகளுக்கு ஊத்தும்படி இருந்தது. கிராமத்துக்குக்காரங்களுக்கு இப்படி வெள்ளம் பார்பதில் குதூகுலம்  இருக்கும். சித்தப்பாவைக் கூட்டிக்  கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் போலிருந்தது.

வெள்ளத்தில் அழுக்கடைந்து போன ஒரு வீட்டை மசூதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பேர் அந்த வீட்டில் வெள்ளம் அடித்துப் போனதில் செத்துப் போயிருந்தார்கள். இனி அந்த வீடு யாருக்கும் பிரயோஜனமில்லை என்பது போல் கிடக்கும் என்று அவசரமாக முடிவெடுத்திருப்பார்களா என்றிருந்தது. கொஞ்சநாள்  வீடு இழந்தவர்களுக்கென்று தங்க வைக்க அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள் அதை விற்கிற யோசனை இருக்கிறதா என்று அவன் கேட்கப் போனபோது குறுந்தாடியோடு இருந்த ஒருவன் அவனை முறைத்துப் பார்த்தபடிக் கேட்டான்: “ மசூதிக்குன்னு முடிவு பண்ணிட்டபோறகு கேட்கறையே.. தைரியந்தா உனக்கு. “

 

” சொர்க்கத்துக்கு  போனவங்க நினைவாவா “

“ அதுக்குப் பேரு வேற  “

“தர்காவா”

 

12

                 நன்கு சுத்தம் செய்யப்பட்டு கழுவப்பட்ட அறையின் வாசம் பெரும்  கனவு போல அவனின் மனதில் இருந்தது.   எப்போது பார்த்தாலும் ஏதோ அழுக்குகளுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம். அழுக்கை தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அழுக்கிலிருந்து விடுபட முடியவில்லையா என்றிருந்தது. அழுக்கடைந்த வீடுகளையே பார்த்து பேசி, விலைக்குக் கேட்டு அதிலிருந்து  மீள முடியவில்லை.சோமனிடம் சொல்லி வேறு இடம் பார்க்கப் போக வேண்டும். அழுக்கின் வாசம் உடம்பைக் உலுக்குவதாக இருந்தது.  கோழ்ப்பீ அடைந்த கோழிக்கூண்டில் அவனை அடைப்பது போலிருந்தது. மூச்சுக்திணறுவதாக  இருந்தது. எங்கோ வெள்ளத்தை நிறுத்துவதற்காக ஒரு பெண் தன் குழந்தையை ஆற்றில் வீசியெறிந்ததாக படித்திருந்தான். அது நடந்ததா.. இல்லை கதையா.. எதுவாக இருப்பினும் அவன் உடம்பு அதை நினைக்க நடுங்குவதாக  இருந்தது. அல்லது ஏதாவது குழந்தையொன்றின் பிணம் இந்த வெள்ளத்தை இங்கும் நிறுத்தியிருக்குமா..

காலருகில் ஒரு பூச்சி விறுவிறுவென்று பரபரத்து ஓடியது. இந்த அழுக்கிலிருந்தும் சேற்றிலிருந்தும் பிறப்பெடுத்திருக்கிற புது  பூச்சியாக இருக்க வேண்டும். புது பூச்சி.  இந்த அழுக்கு கோடிக்கணக்கான பூச்சிகள்  பிறப்பெடுக்கும் இடமாக இருக்கும். பல கால்களைக் கொண்ட பூச்சிகள். உடம்புகள் பெருத்தும் சிறுத்தும் புது புது வடிவங்களில் பூச்சிகள்.  நாலு நாள் கிடந்தாலே பொருட்களீலிருந்து பூச்சிகள் கிளம்பும். உயிர்கள் உற்பத்தியாகும் அபூர்வம் அவனுக்கு ஆச்சர்யமளித்தது. மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த சாப்பாடு கவனிக்கப்படாமல் இருந்து பிளாஸ்டிக் கூடையில் அதைப்போடும் போது புழுக்கள்  நெளிவதாக அவன் கண்டிருக்கிறான். புது பூச்சி. புது உயிர். புது உயி இப்படித்தான் ரகசியமாக உற்பத்தியாகிறதா. இந்தப்

13

பெண்களிடமும் வாரிசு  என்று ஏதாவது பூச்சி உருவாகி விட்டால் பிரச்சினையாகி விடும். அதற்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் எடுத்ததில்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன பண்ணினே.. ஏதாச்சும் கெடச்சுதா என்று சோமனின் முகம் மனதில் வந்து மிரட்டிக் கொண்டிருப்பது போல ஏதாவது புது உயிர் பற்றியக் கற்பனை தன்னை மிரட்டினால் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கலாம் என்ற எண்ணம் மனதில் வந்தது.

யாராவது பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்று  அவன் சட்டையை உலுக்கி கேள்வி கேட்பாள் என்ற கற்பனை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இதற்குக் காரணம் என்ன.. ஏதாவது உறுத்தல் மனதை அக்கிரமித்து விட்டதா.. ஏதோ காரியத்திற்காக ஏதோ செய்து கொண்டிருக்கிறோமா..

 

வெள்ளம்  நிதானமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. நதியின் சலசலப்போடு அவன் அருகில் வந்து நிற்கும் பெண் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறாள்.  அவள்  பாராட்டுவதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. திரைப்படங்களில் ஆற்றின் கரைகளில் கதாநாயகன், நாயகிகள் இப்படித்தான் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். குறும்படகுகள்  ஓடிக் கொண்டிருக்கும் .மெல்லக் காற்று வீசி

14

 

ரம்மியப்படுத்தும்.  தன் அருகில் நிற்கும் முகம் அறியாதப் பெண்ணிடம் அவன் அந்த ரம்மியத்தைப் பற்றி ஏதோ பேச முற்படுகிறான்.

 

வெள்ளம் ஓடி அதன் கறைகளை மட்டும் நிலை நிறுத்தியிருந்தது.

 

subrabharathi@gmail.com

 

Series Navigationஅ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்புவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *