பஞ்சதந்திரம்

This entry is part 5 of 21 in the series 21 அக்டோபர் 2012

மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனின் மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்கு விஷ்ணுசர்மன் என்கிற 80 வயதான சாஸ்திர நிபுணர் பாடம் கற்பிப்பதற்காக அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவர் பெயரும் விஷ்ணுசர்மன். அவருக்கு 80 வயதா? முட்டாள் அசரகுமாரர்களுக்குப் பாடம் சொல்லித்தர முதல் கதையை ஆரம்பிக்கிறார் விஷ்ணு சர்மன். அந்த கதை நடக்கும் இடத்தின் பெயர் மகிளாரூப்யம். இதுவே ஒரு  நவீன இலக்கியம் போல ஆரம்பிக்கிறது. எதிர் எதிர் கண்ணாடியின் பிரதிபிம்பம் போல கதையின் நிகழ்வு தொடங்குகிறது.

 

அரசாட்சியில் ஒரு மன்னன் தனக்கான பாதுகாப்பை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்நூலில். ஆரம்பத்திலேயே தலைவன், அவனின் ஆட்சி என்பவை சொல்லப்பட்டிருக்கின்றன. சதுர் மண்டலாவஸ்தானம், நால்வகைப் படை, அரசைக் காக்கும் கவசம் என பிரிந்து நிற்கும் விதத்தைத் தெளிவாக்குகிறது.

 

பிறருக்குத் தலை வணங்கி குழைந்து பேசும் வழக்கம் அதற்குத் தெரியாது. பொறுமையின்மை, கோபம் ஆக்ரோஷம், பரபரப்பு, ஆகியவற்றைக் கொண்டுதான் தன் காரியங்களை சாதித்து வந்தது. பயமின்றி திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவதை வெறுப்பது, மனக்கலக்கமின்றி இருப்பது, இவைதான் அந்த சிங்கராஜனின் அடையாளங்கள். ஒரு தலைவன், அரசன் எப்படி தலை நிமிர்ந்து நேர்மையாக சிங்கம் என்ற விலங்கின் மூலமான அரசியல் தலைவன் பற்றிப் பேசுகிறது. ஆனால், தற்கால அரசியல் இவை எல்லாவற்றிகும் எதிர் நிலையிலிருக்கிறது. அதிலிருந்துதான் ஆரம்பமே ஆகிறது.

 

பஞ்ச தந்திரம் முழுக்க முழுக்க  அரசியல் தந்திரம். இன்றைய அரசியல் கூட்டணிகள்,  துரோகங்கள், பொய்கள், புரட்டுக்கள் இவை இந்தப்புத்தகத்தைப் படிக்கும் போது நினவுக்கு வராமல் போகாது. என்னால் இவைகளின் நினைவு இல்லாமல் படிக்க இயலவில்லை. அதே சமயம் இதிலுள்ள சுலோகங்கள் என்றென்றைக்கும் மனித இனம் அறிந்துணர வேண்டிய பொன் மொழிகளாக இருக்கின்றன. திரு சக்தி. வை.கோவிந்தன்  தனது முன்னுரையில் கூறி இருப்பதைப் போன்று சில இக்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. உள்ளது உள்ளபடி பதிப்பிப்பதுதான் ஒரு பதிப்பாளரின் கடமை.

 

பெண்கள், சாதிகள் ஆகியன பற்றிக் கூறியிருப்பது பொருத்தம் அற்றதாக மட்டுமல்லாமல் சற்றே  கோபம் கொள்ள வைப்பதாகவும் கூட இருக்கிறது. ஆனால், அது சொல்லப்பட்ட காலத்தை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுதியது யார் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. யாருக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும்  பார்க்க வேண்டி உள்ளது.

 

பிங்களன் என்ற சிங்கத்திடம் மந்திரியாயிருந்த நரியின் பிள்ளைகள் இருவர் என்று தொடர்ந்து செல்கிறது கதை. அதில், ‘சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கிறது. புத்திசாலிகள் அநாவசிய விஷயங்களில் தலையிடலாகாது’ என்று ஒரு நரி சொல்வதாய் வருகிறது. இந்த இடத்தில் இரண்டு விதமான விவரங்கள் இருக்கின்றன. அரசன் நேர்மையானவனாகவும், தைரியமானவனாகவும், சுயகௌரவத்துடன் இருப்பவனாகவும் இருந்தாலும், அவரின் அடுத்த வட்டத்தைச் சேர்ந்த மந்திரிகள் அதற்கு எதிர் மாறாக கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ளும் விதமாகச் செயல் படுகிறார்கள் என்பது ஒன்று. நரி சுயமாக வேட்டை ஆடாது. வேட்டையாடிய உணவின் பகுதியை விட்டுச் சென்றதை சாமர்த்தியமாகத் தின்று பசியாறும். இந்த விலங்குகளின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்து அதைப் பயன் படுத்தி வாழ்க்கையைச் சொல்லும் முறை, அரசியலைச் சொல்லும் முறை. இது, இந்த பஞ்சதந்திரத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது.

 

விலங்கினங்கள் பற்றிய ஆவணப்படங்களும் அதன் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களும் அடங்கிய புத்தகங்களும், ஊடகங்களும் இல்லாத  அக்காலத்தில், நாம் கண்டறியும் விலங்கின வாழ்க்கையை மிக அழகாக நுட்பமாக மனித இனத்துடன் தொடுத்து வழங்கி இருக்கிறார், விஷ்ணுசர்மன். ராஜ தந்திரம், ஞானம், விவேகம் மட்டுமல்லாமல் உலக உயிரினங்கள் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டவராய் இருந்திருக்கிறார். இந்த புத்தகத்தின் நெடுகிலும் வரும் விலங்குகளும் மனிதர்களும், அரசர்களும், குடும்பங்களும், எந்த நேரத்தில் (விலங்கு மனிதனாக, மனிதன் விலங்காக) எதுவாக  எந்த தளத்தில் மாற்றம் கொள்ளப்படுகிறார்கள்,  என்பதை இடைவெளிக்கோடிட்டு பிரித்தறியவே முடியவில்லை.

 

‘மித்ரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும் செய்து புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள் .’

இப்போது அரசனின் சத்ருக்களுக்கு உபகாரம் செய்து அரசனின் பயத்தை அதிகரிக்கச் செய்து, அருகில்  அருகில் செல்கிறார்கள் மனிதர்கள்.

 

‘அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கிறதோ அதைப் பற்றிக் கொள்கிறது’ என விலங்கோடு, செடி கொடி போன்ற உயிரினங்களின் தன்மையும் இந்த நூலில் பரவலாகக் காணக்கிடைக்கிறது. விஷ்ணுசர்மன் முட்டாள்களுக்குச் சொன்ன அறிவுரையை விட அதில் விரவிக்கிடக்கிற விஷ்ணுசர்மனின் புத்திசாலித்தனமும், சொல்ல வேண்டியதை மிக எளிய முறையில் சிறு சிறு சொற்களால் சிறு சிறு சம்பவங்களாகக் கோர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் விதமும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருக்கும் இவைகள் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதையும் அதிசயத்தோடும், பிரமிப்போடும் பார்க்க வைக்கிறது.

 

அரசனிடம் நடந்து கொள்கிற மாதிரியே அரசனின் தாயார், ராணி, அரசகுமாரன், முக்கிய மந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடமும் நடந்து கொள்ள வேண்டும். என்கிற இந்த சுலோகத்திலிருந்து அரசனுக்கு அருகாமையிலிருக்கும் மனிதர்களை அனுசரித்துக்கொண்டு நற்பெயர் எடுத்துவிட்டால், மற்ற கதவுகள் விரைவில் திறக்கும் என்பதை அறிய முடிகிறது.

 

‘குத்தலும், ஏளனமுமாக அரசன் பேசும் போது யார் பதிலுரைப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்.’

‘காலத்தில் பெய்த மழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பது போல, (இயற்கைசார் செய்திகள் ஒரு சிறு விதை விருட்சமாகி பல விதைகளைக் கொடுத்து, அதன் மூலம் பல விதைகள் கிளைப்பது போன்ற சிறு உதாரணம் சொல்லி) வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்கள் முளைக்கின்றன.

 

‘அரசன், விடாமல் சங்கடங்களில் மாட்டிக்கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்கு சுகம்’

 

இந்த சுலோகங்கள் முதல் தந்திரமான ‘நட்பு அறுத்தல்’ என்ற பகுதியில் வருகின்றன.

இது போல பரவலாக ஐந்து தந்திரங்களிலும் அதற்கேற்றவாறு கதைகளும், அதனுள் மற்றொரு கிளைக்கதையும், என்று பின்னிப் பின்னி கதை சொல்லும் முறை, இன்றைய பின் நவீனத்துவமும், மாஜிக்கல் ரியலிஸமும் அன்றே கையாளப்பட்டுள்ளது  என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய அரசியல் கூட்டணிகளும் அக்காலத்தியவையே என்றும் சொல்லுவது போல உள்ளது.

 

நாங்கள் பாண்டிச்சேரியில் வசித்த வந்த போது டெல்லியில் வசித்து வந்த சாருநிவேதிதாவும் விசாலாட்சியும் பாண்டிக்கு வேலை மாற்றலில் வந்தனர். அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு நாங்களும் குடும்பத்துடன், அவர்களும் குடும்பத்துடன் சந்தித்துக் கொள்வோம். (1984,85) அருகில் வசித்து வந்தார்கள். அப்போது இந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தார். இந்த நூல் மிக அருமையானது என்றும் அதன் பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி இருக்கிறோம். அப்போதெல்லாம் நூல் வெளியிடுவது என்பதெல்லாம் இல்லை. அந்தப் புத்தகம் அவர்களிடமிருந்து வந்த பின் எப்போதும் எங்கள் வீட்டில் யார் கைகளிலாவது இருந்து கொண்டே இருக்கும். எந்தப் பக்கத்தையும் இஷ்டம் போல புரட்டி எந்தப்பக்கத்திலிருந்தும் படிக்கத் துவங்கலாம். அப்படிப்பட்ட சுதந்திரமும், வெளியும் உடையது பஞ்சதந்திரம், ஆனால் படிக்க ஆரம்பித்தவுடன் அது உங்களை உள் இழுத்துக் கொண்டுவிடும்.

 

இதிலுள்ள சுலோகங்கள் எத்தனை ஆழமானவை என்பதை எப்போதும் உணர்த்தும். அந்த சுலோகம் சார்ந்த அனுபவங்கள் நமக்கு ஏற்படும் போது இன்னமும் நெருக்கமும் ஆழமும் அதிகம் தென்படும்.

 

‘பஞ்சதந்திரம்’ என்பது குழந்தைகள் கதை என்பதாக தவறான தளத்தில் மனதில் பதியவைக்கப் பட்டுள்ளது. அது வெறும் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. அவ்வாறு குழந்தைகளுக்கானதாகப் பார்க்கப்படுவதும் ஆர்வமுடையதாகத்தான் இருக்கும் என்றாலும் கூட, அரசியல் தந்திரங்கள் நிறைந்த இந்த ‘பஞ்சதந்திரம்’ குழந்தைகள் கதையாக சிறு சிமிழில் அடைக்கமுடியாதது. மேலும் குழந்தைகளுக்காக வடிவமைத்த பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நீர்த்துப் போனதாக இருக்கிறது. எளிமைப் படுத்துவது என்பது வேறு, நீர்த்துப் போக வைப்பது என்பது வேறு. எல்லாப் பெயர்களிலும் அந்தந்த சந்தர்ப்பத்திற்கு பொருந்துவதாக அந்த நிகழ்வின் காரணத்தை இன்னமும் அதிகம் அருகில் கொண்டுவருவதாக  அமைக்கப்பட்ட காரணப் பெயர்களாக அமைந்திருக்கின்றன. இடங்களின் பெயர்களும் கூட இப்படியேதான். ஆனால், மனைவி, மகள் அன்னை என்று ஆண்களின்  பெயர்களுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கின்றன.  விலங்குகளில் பெண்ணின் பெயர்களும் கூட இதே போலத்தான். பெண்களின் உணர்வை சொல்கிறதே தவிர, பெண்ணுக்குப் பெயரிட்டு ஓரிடத்தில் கூட அழைப்பதில்லை. ஒரே ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்குப் பெயர் இருக்கிறது. முதலையின் மனைவி, குரங்கின் மனைவி, அரச குமாரி என்பதாகவே வருகிறது.அரசியல், நிர்வாகம் பற்றிப் பேசுவதால் பெண்கள் பெயர் தவிர்க்கப்பட்டு  இருக்கிறதா? இக்காலத்திலும் கூட, நிர்வாகத்திலும், அரசியலிலும் பெண்கள் பங்கு மிகக் குறைவுதான். அன்றைய கால கட்டத்தில் அரசு பரிபாலனத்தில் பெண்களின் பங்கு அறவே கிடையாது. அந்தக்காலத்தில் இவர்களின் பங்கு அந்தப்புரத்துடன் சரி.

 

அதே போல பஞ்சதந்திரத்தில் கடவுள் இடம் பெறவும் இல்லை. காளை மாட்டைப் பற்றி குறிப்பிடும் போது அது சிவனுக்கு வாகனமாயிருந்தது என்று ஓரிடத்தில் உள்ளது.  கடவுள் வாழ்த்து என்ற பாடல்     ஒன்று ஆரம்பத்தில் இடம் பெற்றிருக்கிறது. அது பஞ்சதந்திரத்தின் ஆரம்பப் பாடலாக இடம் பெற்றிருக்கிறது. அந்தக் கால முறைப்படி கடவுள் வாழ்த்துடன் துவங்க அந்தப் பாடல் பயன் பட்டிருக்கிறது. 1910 இல் நூலாக்கப்பட்ட – பண்டிட் ஜ்வாலா ப்ரசாத் மிஸ்ரா என்பவரால்   வெளியிடப்பட்ட முதல் நூல் இது- அதில் சம்ஸ்கிருத மூலத்துக்கு ஹிந்தியில் பொழிப்புரை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக விஷ்ணு சர்மனால் அறிஞர்களுக்கு வந்தனம் சொல்லும் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதையும் ஹிந்தியில் மொழிபெயர்த்து இருக்கின்றனர். தமிழில் இந்த இரு பாடல்களும் இடம் பெறவில்லை. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூல நூலாக அமைந்துள்ளது கடவுள் வாழ்த்தில் விஷ்ணு சர்மா ப்ரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், மழை, காலன், நெருப்பு, இந்திரன், சந்திரன், குபேரன், சூரியன், சரஸ்வதி, கடல், நான்கு வேகங்கள், மலை, காற்று, பூமி, வாசுகி முதலான பாம்புகள், நதி, அஸ்வினி குமாரர்கள், லட்சுமி, காஸ்யபரின் மனைவி, தேவர்கள், புனித நீரிடங்கள், (காசி முதலானவை) ய்க்ஞம்(திதிகள்) வசு( எட்டு திக்கு தேவர்கள், முனி(வியாசர் போன்றவர்கள்) கோள்கள் (ஒன்பது கிரகங்கள்) எல்லாவற்¨றையும் கூறி எங்களைக் காப்பற்றுங்கள் என்று கூறுகிறார்.

 

அடுத்ததாக தனக்கு முன்பாக வாழ்ந்த அறிஞர்களுக்கு வந்தனத்தில் சுயமாய்த்தோன்றிய முனி,  சுக்கிரன், வியாசர், பராசர் போன்ற முனிவர்கள் பண்டிதர்கள், சாணக்கியன் மற்று எனக்கு முன்னால் நீதி சாஸ்திர நூல் எழுதிய அனைத்து முன்னோர்களுக்கும் வணக்கம் என்று இயற்றப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்திலும் இயற்கையையும் கடவுளர்களையும் இணைத்தும் எழுதப்பட்டிருக்கிறது.

 

சிலேடை ஆங்காங்கே காணக்கிடைக்கிறது. தூணுக்கும், மந்திரிக்குமான சிலேடை, பாம்புக்கும் அரசனுக்குமான சிலேடை, சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை, என்று இருக்கிறது. மூல மொழியில் இருக்கும் மொழித்திறமையை நாம் இந்த சிலேடைகளில் உணர முடியாது. பொருள் மட்டுமே அறிய இயலும்.

 

சம்ஸ்கிருதத்தில் சுலோகங்கள் கவிதை நடையில் இருக்கின்றன. மொழி பெயர்ப்பில் உரைநடை வடிவம் உள்ளது. இத்தனை சுலோகங்களையும் ஆங்காங்கே விதைத்து கதைப் போக்கை நடத்திச் சென்ற விஷ்ணுசர்மனின் வாசிப்பு அறிவும் வியப்பூடுகிறது. இவைகள் எதிலிருந்தெடுத்தாளப்பட்டது என்பதும் கண்டறிய முடியவில்லை.

 

பெண்களைப்பற்றி கூறப்பட்டுள்ள பலதும் முன்னமே சொல்லியதைப் போல சற்று வேதனையாக இருக்கிறது.

‘உயர உயரக் குதித்தாலும், பருப்பு வாணலியை உடைக்க முடியுமா?’

‘மேலும் ஸ்திரிகள் விஷயம் தான் தெரிந்ததாயிற்றே’

ஒருவனோடு வம்பளப்பாள். இன்னொருவனைக் கனிவுடன் பார்ப்பாள். மூன்றாமவனை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலித்தாள்’

‘எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்பு திருப்தி இல்லை.

எத்தனை நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்கு திருப்தி இல்லை.

எத்தனை ஜீவராசிகளைக் கொண்டாலும் யமனுக்கு திருப்தி இல்லை.

எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்கு திருப்தி இல்லை.’

இது போன்று பெண்ணை மலினப்படுத்தும் பல சுலோகங்களை விஷ்ணு சர்மன் எடுத்தாண்டிருக்கிறார்.

 

பஞ்ச தந்திரம் முழுக்க முழுக்க நிர்வாக அரசியல் என்று முன்னுரை கொடுத்திருக்கிறார் ஹிந்து ஆர்.  நடராஜன்.  இது அரசியல், நிர்வாகம் இரண்டும் கலந்ததாக எனக்குத் தோன்றியது. நிர்வாக அரசியல், அரசியல் நிர்வாகம் இரண்டும் இருக்கிறது இதில். இந்த இரண்டும் கலந்த வாழ்க்கை முறை முக்கியமாக சாதாரண மக்களுக்கு என்று இல்லாமல் ஆளும் அரசர்களுக்கும், தலைமை ஏற்று நடத்தும் முன் வரிசை மக்களுக்கும் ஆன கதைகள் இவை. நீதி போதனை என்று நேரடியாகக் கொடுக்கப்படாமல் எல்லாமே கதைகள் மூல எளிய முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

‘அரசர்கள் நாடுகளை விழுங்குகிறார்கள்.

வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகிறார்கள்.

வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள்.

பண்டிதர்கள் மூடர்களை விழுங்குகிறார்கள்.’ என்று எத்தனை எளிமையாக ஆனால் கடுமையானதை சொல்லி இருக்கிறது.

இதுதானே வியாபாரம்.

இதுதானே அரசியல்.

 

‘பற்றற்றவன் அதிகார  பீடத்தில் அமர மாட்டான்.’

‘புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான்’

இந்த சுலோகம் சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை.

 

அரசனுக்கும், அவனுக்குக் கீழ் உள்ளவர்களுக்குமான அரசியல் நிர்வாகம்.

அரசனின் அருகில் இருக்க வேண்டிய நபர்களுக்காக, அரசனின் குண தோஷங்கள் கண்டு தனது தூரத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்வாகம்.

கணவன், மனைவியிடையே ஏற்படும் குழப்பங்கள் அதை சீர் செய்யும் நிர்வாகம்.

ஆணுக்குத் தனியாகவும் பெண்ணுக்குத் தனியாகவும் நிர்வாக முறை. பணத்தை சம்பாதிக்க நிர்வாகம்.

பணத்தை இழந்த பிறகு அடையும் வேதனையிலிருந்து வெளியேற நிர்வாகம்.

தனக்குக் கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பராமரிக்கவும் ஆன அரசியல்.

ஒருவன் அடைந்த இடத்திலிருந்து அவனைக் கிளப்பி அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அரசியல்

என்று எதிர் எதிர் துருவங்களுக்குமான அரசியல் தந்திரங்களையும் விஷ்ணுசர்மன் பஞ்சதந்திரத்தில் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். சுலோகங்களுடன்.

 

மொழிபெயர்ப்பு மிக எளிமையாயும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் இருக்கிறது. சம்ஸ்கிருதம்  நன்கு அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் அழகாகவும் மொழிபெயர்ப்பு இருக்கிறது என்றும் தெரிந்து கொண்டேன். அன்னபூர்ணா ஈஸ்வரனின் உரையும் இதில் இருக்கிறது.

 

இந்த விவரங்களை சக்தி.வை.கோவிந்தனின் முன்னுரையிலும் படிக்க முடிகிறது. அதுவும் இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது. 1958 இல் கணினியும், கைப்பேசியும் இல்லாத தொடர்பு சாதனங்களுக்காக அலைந்து, பாடுபட்டு, தகவல்கள் சேகரித்து, ஆதாரங்களை சேர்த்து வெளியிட்டிருக்கும் கோவிந்தன் எப்படி பாடுபட்டு இதைச் செய்திருப்பார்?  அதை எண்ணும் போது அவருடைய பணி தமிழுக்காக நூல்களுக்காக அளவிடமுடியாதது. பஞ்சதந்திரம் எந்த எந்த மொழிகளில் அக்காலத்தில் மொழிபெயர்ப்பு ஆகி இருக்கிறது என தகவல்கள் கொடுத்திருக்கிறார்.

கெட்டி அட்டையில், எழுத்துப் பிழைகளே இல்லாமல், தரமான அச்சில், மலிவு விலையில், நல்ல தாளில் … இது  ஒரு முன் உதாரணம். ஓரிரு நூல்கள் வந்த உடனேயே மிகுந்த தமிழ்ச் சேவை செய்து களைப்படைந்துவிட்டதைப் போலவும், அதற்குத் தகுந்த அங்கீகாரத்தை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் தனக்குக்  கொடுக்கவில்லை என்றும், அடுத்தவர்களின் எழுத்துக்களைக் குப்பை என்றும், பரிசுகள் குவியவில்லை எனவும் கூவி கூவி விற்கும், புலம்பும் நம்மிடையே இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள்.

சக்தி. வை.கோவிந்தனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் நாம்.

 

ஹிந்து நடராஜன் நல்ல நண்பர். அவரிடம் எல்லோரிடமும் எப்போதும் வியந்து சொல்லிக்கொண்டே இருக்கும் பஞ்ச தந்திரம் பற்றி பேசினேன். அதைப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொன்னேன். அவர் தானும் அந்த நூலைமிகவும் மதிப்பதாகவும், அந்த தந்திரங்கள் மேனேஜ்மெண்ட் எனப்படும் நிர்வாகவியல் முறையில் நிறைய ஆராய்ந்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவரிடம் அதற்கு ஒரு அணிந்துரை கொடுக்க முடியுமா? என்று கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை, இரண்டே நாளில் எழுதி கணினியில் பதிவு செய்து அனுப்பிவிட்டார். அணிந்துரைக்காக காத்திருந்த, காக்க வைத்த அனுபவமும் எனக்கு உண்டு.  அவருக்கு என் நன்றி.

 

நூலைப் பதிப்பிக்க தமிழ் வளர்ச்சித் துறைக்கு நிதி உதவிக்காக விண்ணப்பித்திருந்தேன். குழுவினரின் ஆதரவுடன் அது தேர்வாகியது. எனவே எனக்கு ஊக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி.

 

ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (பிப்ரவரி 1958) அச்சடிக்கப்பட்ட பழைய நூல் அது. பழுப்பு நிறத்திற்கு மாறி இருந்தன பக்கங்கள். தொட்டால் உதிரும் நிலை. தட்டச்சுசெய்ய என் தோழி அமுதாவை அணுகியபோது அந்தப் பொடியும் பக்கங்களிலிருந்து புத்தகத்திற்கு சேதாரம் வராத வகையில் அதை சரியான நேரத்திற்கு தட்டச்சு செய்து கொடுத்ததற்கு மிக்க நன்றி.

 

திண்ணையில் பஞ்ச தந்திரத்தைத் தொடராகப் போட முடியுமா? அது நூலாவதற்கு முன்னதாக இன்னமும் சிலரையும் சென்றடைந்தால் நன்றாக இருக்குமே என்று திண்ணை இணைய இதழ் ராஜாராமனைக் கேட்ட போது உடனேயே ஆரம்பித்து அதை ‘திண்ணை’ இணைய இதழில் தொடராக வெளியிட்டுக்கொண்டிருக்கும் ராஜாராமனுக்கு நன்றி.

இன்னமும் சில விஷயங்களை இந்த முன்னுரையில் கூற வேண்டும். கணினியைப் பற்றி சொல்லாமல் எதையுமே சொல்ல முடிவதில்லை. அப்படியான காலம் இது. கணினியில் பஞ்சதந்திரம் பற்றிய குறிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனை அழகழகான ஓவியங்கள். அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து முகப்போவியமாகவும், பின் அட்டை ஓவியமாகவும் உள்ளே சில கருப்பு வெள்ளைப் படங்களாவும் கொடுத்திருக்கிறோம்.

 

எல்லாவற்றையும் பிரமிப்பையே கொடுத்த பஞ்சதந்திரம் எனக்கு ஒரு அதிர்ச்சியையும் கொடுத்தது. கணனியின் மூலமாக. கணினியில் தமிழில் பஞ்சதந்திரம் என்று தட்டினால் கொட்டுவது, கமலஹாசன் நடித்த பஞ்சதந்திரம் சினிமா மட்டுமே. இனிமேல் மொழிபெயர்ப்பு பஞ்சதந்திரமும் தமிழ் என்பதில் இடம் பெற வேண்டும். மற்றபடி ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லாவற்றிலும் விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன. கல்லூரியில் (காசியில்) பாடத்திட்டமாக வைத்திருந்தது. அவை எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன. எத்தனை பதிப்புக்களைக் கண்டிருக்கிறது என எல்லா விவரமும் கிடக்கின்றன.

 

பொருளீட்ட இதை மறு பதிப்பு செய்யவில்லை. தமிழில் நூல்கள்  வெளியிட்டு, தரமான நூல்கள் வெளியிட்டு லாபம் அடைந்ததாக வை.கோவிந்தன் காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி கிடையாது. நூலக ஆணை இருந்தால்தான், நூல்கள் அடுத்தடுத்து வெளியிட பணமும், குடும்பத்தின் அனுமதியும், குழந்தைகளிடம் மரியாதையும் கிடைக்கும்.

 

1910 ஆம் ஆண்டு பதிப்பித்த பஞ்சதந்திரம் (சம்ஸ்க்ருதம்) நூலுக்கு பண்டிட் ஜ்வாலா பிரசாத் மிஸ்ரா எழுதிய முன்னுரைலிருந்து சில பகுதிகளையும் இணைக்கலாம் என்றுஎண்ணினேன்.

அதில் நமது பாரத தேசம்  கல்விகளின் புதையல், இங்கு அரசியல் சாஸ்திரங்களுக்கும் குறைவில்லை. பெரும் அறிஞர்கள் ஞானிகள் இந்த நாட்டில் பிறந்து அரும் பெரும் செல்வங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்று ஆரம்பிக்கிறார்.

 

பஞ்சதந்திரம் படைத்த விஷ்ணுசர்மன் நீண்டகாலத்திற்கும் முன்னதாக நமது நாட்டில் வாழ்ந்தவர். அவரின் அறிஞர்களுக்கான வந்தனத்திலிருந்து அவர் சாணக்கியர் காலத்துக்குப் பிறகானவர் என்று இருக்கலாம் என்கிறார்.

 

வெகு காலத்திற்கு முன்பாகவே பஞ்சதந்திரம் செவி வழிக்கதைகளாய் மக்களிடையே இருந்து வந்திருக்கிறது. காலத்தின் ஓட்டத்தில் இந்த பஞ்சதந்திரம் பல வெளி நாட்டவர்களால் கருப்பொருளின் உயர்வு உணரப்பட்டு ஆசியா, ஐரோப்பியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்கிறார் ஜ்வாலா பிரசாத் சர்மா.

 

மேலும் ஜ்வாலா ப்ரசாத் சர்மா தனது முன்னுரையில் பஞ்சதந்திரம் எழுதிய விஷ்ணுசர்மன் என்பது அவரின் உண்மைப் பெயராய் இருக்க வேண்டியதில்லை. எனவே இவரின் காலத்தை கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் பல நூல்களை எழுதிய அறிஞர்கள் தமது அடையாளத்தை வெளியிடுவதில்லை. எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள், என்ன குலம், எந்தப் பகுதி, எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது, போன்ற எந்த  அடையாளத்தையும் அது விட்டுச் செல்வதில்லை. அது தேவை என்று அவர்கள் கருதுவதும் கிடையாது. மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை எழுதியர்களின் பெயர்கள் கூட காரணப்பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. புற்றிலிருந்தவர் அதனால் வால்மீகி என்றும் வேதத்தை உரைத்தவர், அதனால் வேதவியாசர் என்ற பெயராலும் அவர்களை அறிகிறோம்.

 

‘பஞ்சதந்திரம் மற்றும்’  ‘ஹிதோபதேசம்’ இரண்டும் ஹிப்ரூ, லத்தீன், கிரேக்க, இத்தாலி, சயாரிஜ், ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபி, பாரசீகம், துருக்கி, சீனா, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. (இது 1910 ஆண்டு எழுதப்பட்ட முன்னுரை)

 

இவர்கள் சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், எழுத்தில் தம் அடையாளம் அற்று எழுத்தையே அடையாளமாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தநூலின் மறு பதிப்பு மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன். ஆசைப்படுகிறேன். அரசியலும், நிர்வாகமும், வாழ்வியலும் நிறைந்த இந்த நூல் இன்னமும் வெவ்வேறு தளங்களில் ஆராயவும் இடம் கொடுக்கிறது.

சக்தி வை.கோவிந்தன் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில் இந்நூலைப் பதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

அக்டோபர்-2012

சென்னை-600 047

க்ருஷாங்கினி

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33மீந்த கதை!
author

க்ருஷாங்கினி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *