ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூய வருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறார்.
மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.
பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.
பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.
**********************
நாடக உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.
************************
மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்
(மூன்றாம் அங்கம்)
அங்கம் -3 பாகம் -7
இடம்: ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
பொழுது : அடுத்த நாள் காலை
அரங்க அமைப்பு: பாதிரியார் மாளிகைப் பூந்தோப்பு. உதய சூரியன் முகிலற்ற வானில் தனியாட்சி செய்கிறான். ஃபிராங்க் ஒரு நாற்காலில் அமர்ந்து மர நிழலில் காலையில் வந்த செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறான். தந்தை பாதிரியார் மெல்லத் தள்ளாடிய வண்ணம் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார். கண்கள் சிவந்துள்ளன. தந்தையும் மகனும் தர்க்கம் புரியும் போது வில்லியம் வருகிறார். எதிர்பாராத விதமாய் மேடம் மோனிகா, மிஸ். விவியன், ஜார்ஜ் வாலஸ் மூவரும் வருகிறார். மிஸ். விவியனும் ஃபிராங்க்கும் தனிமை நாடி உல்லாசமாக இருக்கிறார். அப்போது ஜார்ஜ் வாலஸ் விவியனை மயக்கித் தன்னை மணந்து கொள்ளும்படி ஆசை காட்டி வலை விரிக்கிறார். வாலஸ் மேடம் மோனிகா நடத்தி வரும் இன்ப விடுதிகளைப் பற்றி மிஸ். விவியனுக்குச் சொல்ல நேர்கிறது. விவியன் கோபம் கொண்டு வெளியேறுதை வாலஸ் தடுக்க, ஃபிராங்க் தோன்றித் தன் வேட்டைத் துப்பாக்கியை நீட்டுகிறான்.
(சென்ற வாரத் தொடர்ச்சி)
ஜார்ஜ் வாலஸ்: ஏன் இப்படி என்னைத் துண்டிக்கிறாய், உன் அன்னைக்கு நான் நிதி உதவி செய்து வந்ததாலா ?
மிஸ். விவியன்: என் தாய் சிறு வயது முதல் வறுமையில் வாடியவள். அவளுக்கு அப்படிச் செய்ததைத் தவிர வேறெந்த வழியில்லை, வாழ்வில்லை, வாய்ப்புமில்லை ! நீ பரம்பரைச் செல்வந்தக் கோமகன் ! உன் தொழில் வாகனத்துக்கு என் அன்னை ஐந்தாம் சக்கரம் ! அது துருப் பிடித்ததுப் போனதும் என்னைப் பிடித்துக் கொள்ள முயல்கிறாய். உன்னைப் போல் உலுத்தர் பலர் பெருகி விட்டார் இப்போது. அது என் தனிப்பட்ட கருத்து உன்னைப் பற்றி.
வாலஸ்: (சிரிக்கிறார்) ஹா, ஹா, ஹா, ஹா ! அப்படிச் சுட்டுத் தள்ளி விடாதே என்னை என் கண்மணி ! அந்தச் சுடு சொல் எல்லாம் என்னைக் காயப் படுத்தாது. ஆனந்தம் உண்டாக்குது எனக்கு. நான் என் அழுக்குக் கரத்தை தொழிலுக்குள் புகுத்துவேன் என்று நீ நினைக்காதே ! நீ நினைப்பது போல் நான் பொல்லாதவன் இல்லை. நீயும் எனக்குத் தொல்லை தருபவள் இல்லை. நமக்குள்ளே பிளவு எதற்கு ? உன் விருப்பம் போல் நீ எவனையும் திருமணம் செய்து கொள். ஆனால் அந்த தெருச்சுற்றி ஃபிராங்கை மட்டும் மணந்து கொள்ள கூடாது ! நீ மணக்கவும் முடியாது ! நேர்மையுள்ள மனிதருடன் மட்டும் நீ உறவாட விரும்பினால் பெருத்த ஏமாற்றம் அடைவாய் ! நேர்மையான மாந்தரைக் காண்பது அபூர்வம் இந்தக் காலத்தில் ! நான் நேர்மையாய் இருக்க முயல்கிறேன்.
மிஸ். விவியன்: நான் செலவுக்குப் பெற்ற பணம் எங்கிருந்து வந்தது என்று என் தாயைக் கேட்ட தில்லை ! இன்ப விடுதியில் சம்பாதித்த நாணயம் என்றால், நானும் உம்மைப் போல், என் தாயைப் போல் ஓர் உலுத்தவள் தான் !
வாலஸ்: (மகிழ்ச்சியோடு) அப்போது நான் உலுத்தன் இல்லை என்று சொல்வாயா ? அதை நான் ஏறுக் கொள்ளப் போவதில்லை. நான் உன்னை அப்படி அழைக்க மாட்டேன், நீயும் என்னை இனிமேல் அப்படி அழைக்காதே.
மிஸ் விவியன் : உன் தொழிலும் என் தாய் புரியும் தொழிலும் ஒன்றாக உள்ள போது, எனக்குதவிய உங்கள் பணமும் கறை பிடித்தது தானே !
வாலஸ்: மனிதர் தான் கறை பிடித்தவர். பணத்தில் கறை பிடிப்ப தில்லை. மனிதரின் குணம் பணத்தின் நிறத்தை மாற்றுவ தில்லை. உன் தாய் தொழிலுக்கு நான் கூட்டாளி ஆயினும் சில வினைகளில் நான் சிறிது நேர்மையானவன் தெரியுமா ? என்னை நம்பு விவியன் கண்மணி.
நான் உலவி வரும் நாகரீகச் சமூகத்தில் என் தொழிலைப் பற்றியோ, உன் தாய் தொழிலைப் பற்றியோ யாரும் பேசிக் கொள்வதில்லை. யாரும் உனக்கோர் பாதுகாப்புத் துறைமுகம் கட்டப் போவதில்லை ! நீயாக தேடிக் கொள்ள வேண்டியதுதான்.
மிஸ். விவியன்: நான் உன்னோடு சுமுகமாக இணங்கி வருவதாய் எண்ணி மனப்பால் குடிக்கிறாயா ? நான் எப்போதோ உன்னை என்னிடமிருந்து அற்று விட்டேன் தெரியுமா ? ஏன் வீணாய் என்னைக் கவர்ந்து விடலாம் என்று கனவு காண்கிறீர் ?
வாலஸ்: நீ என்னை அற்று விட்டாலும் உன்னை நான் வெறுக்கப் போவதில்லை ! எனக்கு நீ இணங்கா விட்டாலும் நீ என்னை வெறுக்கக் கூடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் என்னோடு நீ வாழ விரும்பலாம் ! நான் பாதுகாப்பான ஒரு துறைமுகம் உனக்கு. நான் அங்கே உனக்காகக் காத்திருப்பேன் விவியன் கண்மணி !
மிஸ். விவியன்: உமது பேச்சில் தேன் துளிகள் சொட்டுது மிஸ்டர் வாலஸ் ! நான் அவற்றைச் சுவைத்து மயங்கும் மங்கையில்லை. உம்மைப் போன்றோரைச் சமூகம் பொறுத்துக் கொண்டு ஏன் சகித்துக் கொள்கிறது ? அரசாங்கச் சட்டங்கள் உம்மைப் போன்றவரை ஏன் பாதுகாத்து வருகின்றன ? உமது தீய கைகளிலும், என் கடூரத் தாய் மாளிகையிலும் சிக்கிக் கொள்ளும் பத்தில் ஒன்பது அப்பாவி இளமங்கையர் படும் பாடு யாருக்குத் தெரியும் ? உம்மைப் போன்ற தீயச் செல்வச் சீமான்கள் வாலிபப் பெண்களுக்குப் பாதுகாப்பு துறைமுகங்களா ? பள்ளியறைச் சிறைக் கூடங்களா ? நீங்கள் எல்லாம் சமூகத்தின் தொத்து நோய்கள் !
வாலஸ்: [கோபத்துடன்] நாவை அடக்கிப் பேசு ! பேசும் உரிமை கொடுத்தால் நீ என்னை ஏசுவதில் ஆனந்தம் அடைகிறாய் !
மிஸ். விவியன்: நான் வாய் மூடி இதை மறைக்கப் போவதில்லை ! வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஓயாது புகார் செய்யப் போகிறேன் ! செல்லம் கொடுக்கும் தாயாக இருந்தால் என்ன ? செல்வீகக் சீமானாய் இருந்தால் என்ன ? நான் அஞ்ச மாட்டேன். யாரும் என்னைத் தடுக்க முடியாது ! நான் போகிறேன் !
[வாசல் கதவுகளைத் திறந்து கொண்டு கிளம்ப முயல்கிறாள்]
வாலஸ்: [கோபத்துடன்] வாலிபப் பிசாசே ! நான் உன்னைச் சும்மா விடப் போவதில்லை ! போகாதே ! நில் !
[விவியன் கையைப் பிடித்து தடுக்கிறார். அவள் திமிறிக் கொண்டு போய் அங்கிருந்த ஆலய மணியை அடிக்கிறாள்]
மிஸ். விவியன்: யாராவது என் உதவிக்கு வராமல் போவாரா ?
[மாளிகைக் கதவைத் திறந்து, நீண்ட கைத் துப்பாக்கியுடன் ஃபிராங்க் விரைந்து உதவிக்கு வருகிறான்]
(தொடரும்)
***************
தகவல் :
Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/
(f) http://www.enotes.com/mrs-
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 , 2012)
http://jayabarathan.wordpress.
- தப்பிப்பு
- திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்
- நினைவுகளின் சுவட்டில் (102)
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33
- பஞ்சதந்திரம்
- மீந்த கதை!
- நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -7
- கதையே கவிதையாய்! (10)
- நான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.
- வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்
- மொழிவது சுகம் அக்டோபர் -20
- கம்பன் விழா அறிக்கை
- கவிதையாக ஒரு கதை
- அனுராக் பாசுவின் “ பர்·பி ‘
- வானவில் வாழ்க்கை
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவு
- தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?
- அக்னிப்பிரவேசம் – 6
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.
- உண்மையின் உருவம்