நினைவுகளின் சுவட்டில் (103)

This entry is part 18 of 31 in the series 4 நவம்பர் 2012

 

சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?

 

காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் லிருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

 

திரும்பி வரவேண்டும் அலாஹாபாதுக்கு. இலவச பாஸ் அலாஹாபாதிலிருந்து சம்பல்பூருக்கு. காசிக்கு டிக்கட் வாங்கி ரயிலில் உட்கார்ந்து கொண்டால், சுற்றி இருப்பவர்கள் ஒரு கூட்டம், ஐந்தாறு பேர், தமிழ் பேசுகிறவர்களாக இருந்ததில் ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும். எல்லாம் நாற்பது ஐம்பது வயசுக்காரர்கள். பெண்கள் யாரும் இல்லை. பேச்சுத் துணையாயிற்று. யார், எந்த ஊர், எங்கே வந்தீர்கள், எங்கே போகணும்? இத்யாதி விசாரிப்புகள் இல்லாதிருப்பது சாத்திய மில்லையே. பேசிக்கொண்டோம். அவர்களும் அதிசயமாக காசிக்குப் போகிறவர்கள் தான். அதுவும் நல்லதாயிற்று. என்னைப் பற்றித் தான் அவர்கள் துருவித் துருவி கேட்டார்களே ஒழிய, அவர்கள் பற்றி அவர்களாகச் சொன்னதைத் தவிர எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

 

மாலை வரை தான் உறவு. பின் பிரியப் போகிறோம். தெரிந்து என்ன ஆகப் போகிறது என்பதற்கு மேல், அப்படி ஒரு சுபாவம் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் பொழுது போயிற்று. சுவாரஸ்யமாகவும் இருந்தது. காசி வந்ததும் இறங்கினோம். அவர்களோடு சேர்ந்ததில் ஒரு லாபம். எல்லா விசாரிப்புகளையும் அவர்களே செய்தார்கள். ஒரு சத்திரமோ மடமோ சரியாக நினைவில் இல்லை. அங்கே தங்கினோம். இதுவும் இதை எழுதும் இச்சமயம் ஒரு சந்தேகம் தட்டுகிறது. தங்கின இடத்தின் முகப்பு, தூண்களும் தாழ்வாரமும் கொண்ட முகப்பு நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அது காசியிலா, இல்லை, பூரியிலா என்று நிச்சயமில்லாது ஒரு மங்கலான நினைவாக இருக்கிறது

 

இதை இடையில் சொல்ல மறந்து விட்டேன். ஒரு சமயம் ஊருக்கு விடுமுறையில் போக, கட்டக் வரை பஸ்ஸிலும் பின்னர் அங்கிருந்து கல்கத்தா மெயிலில் ஊருக்கும் செல்லலாமே என்று தோன்றியது. இரவு பூராவும் பஸ்ஸில். அப்போது என்னுடன் இன்னும் சிலர் ஹிராகுட் வாசிகள் இருப்பது இடையில் தெரிந்து அவர்கள் நண்பர்களாகி, பூரி போய் ஜகந்நாதர் தரிசனம் செய்து விட்டு போகலாமே என்று பெல்லாரிக் காரர், தன் தங்கையுடன் வந்தவர் சொல்ல, சரி என்று எல்லோரும் பூரி சென்றோம். அங்கு தங்கியிருந்த ஒரு மடம், இலவசமாகக் கிடைத்த தங்கல். அது ஒரு மிகவும் மனதுக்கு சந்தோஷம் அளித்த அனுபவம். அதை எழுத எப்படி ஏன் மறந்தது என்று தெரியவில்லை.

 

கூட வந்தவர்கள் சொல்லி, வழியில் ரோடில் பூரி சாப்பிட்டதும், அவ்வளவாக ரசிக்காத பூரி, நிழலாடுகிறது. ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை. குறுகி வளைந்த இருபுறமும் இர்ண்டு மூன்று அடுக்கு மாளிகை போன்ற பெரிய வீடுகள் கொண்ட நீண்ட தெருக்கள் வழி சென்றது ஒரு புதுமையான அனுபவம். இப்படிப் பட்ட குறுகிய, வளைந்து நீளும் சந்துகள் இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் என்பது இது காறும் காணாத ஒன்று. எத்தனை நூற்றாண்டு பழமையான, சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் இது.! அதன் குறுகிய சந்துகளின் ஊடே நடந்து செல்வதே பெருமையாக இருந்தது. தரையில் வெயில் படாத சந்துகளான தெருக்கள்.

 

முதலில் கங்கைக் கரையடைந்தோம். எந்த படித்துறை என்பதெல்லாம் நினைவிலில்லை. நீண்ட விசாலமான படிகள். வெகுதூரம் படிகளில் இறங்கியே ஆழத்தில் கங்கை நதி பாயும் நீர்த்தடத்தை அடைய முடியும். படிகளின் இடையே ஒரு சமதளம். ஒரு பெரிய மரம் பின் மறுபடியும் படிகள். ஆற்றின் அருகே சென்றதும் எதிர்க்கரையைப் பார்த்தால் அது எங்கோ தூரத்தில். எவ்வளவு பிரம்மாண்ட ஆறு. இதற்கு முன் காவிரி எல்லாம் வெறும் வாய்க்கால் தான். எதிர்க்கரையிலும் பெரிய பெரிய மாளிகைகள். கண்ணுக்கெட்டிய தூரம் இரு புறமும், இரு கரைகளிலும் மாளிகைகள். கோயில்கள் போன்ற கோபுரங்கள். நீண்ட விஸ்தாரமான, ஆற்று நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் படிகள்.

 

பார்க்க ஆனந்தமாகத் தான் இருந்தது. இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம். ஆற்றையும் அதில் கண்ட இட மெல்லாம் மிதக்கும் பொருள்களையும் குப்பைகளையும் பார்க்க மிகக் கஷ்டமாக இருந்தது. மேலும் ஆற்று நீரின் கலங்கல் இறங்குமிடத்தில் காணும் சேறு என்னவோ மனத்தைப் புரட்டியது. காவிரி ஆற்றின் நீரும் கலங்கல் தான். ஆனால் அது இப்படி அசுத்தங்கள் மிதக்கும் ஆறு இல்லை. இத்தகைய சேறு நிறைந்த கரையும் அல்ல. உடையாளூரின் ஆற்றில் இறங்க படியில் கால் வைத்தால் படிகளை கலங்கலற்ற  நீரின் அடியில் பார்க்கலாம். மீன்கள் கால்களைக் கடிக்கும். இப்போது தான் ஆற்றில் நீரும் இல்லை. ஒரு வேளை மணலும் இல்லை என்று நினைக்கிறேன்.

 

குளித்துக்கொண்டிருந்தவர்கள் “பயப்பட வேண்டாம் . நாங்கள் இருக்கோம்.” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் பாவாடை அணிந்த பத்து வயசுப் பெண், அவர்களைத் திட்டிக்கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தது. ரொம்ப சூட்டிக்கையான பெண். முகத்தைப் பார்த்தாலே அதோடு விளையாடத் தூண்டும் முகம். “அது ”ஐயோ” என்று இடையில் கத்தியது தமிழ்ப் பெண்ணோ என்ற எண்ணத் தோன்றவே அதன் பயம் நீக்கி அதோடு பேச்சுக் கொடுத்தால், அந்தக் குழந்தை அங்கு கங்கைக் கரையிலேயே வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் பெண் என்று தெரிந்தது. . இங்கு விளையாட வந்திருக்கிறது. கங்கைக் கரையில் குடியிருந்தால் குழந்தைகள் விளையாட கங்கைக் கரைக்கு வருவது பற்றி பெற்றோருக்கு பயம் இல்லை போலும். சகஜமாகியிருக்கும் வாழ்க்கை. சூழல். அப்பா அங்கேயே அருகில் ஏதோ கோயிலில் பூஜை செய்பவர். அதற்கு அதிக நேரம் என்னோடு பேசுவதில் இஷ்டம் இருக்க வில்லை. “ரொம்ப நாழியாயிடுத்துன்னு அம்மா கோவிச்சுப்பா” என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது.

 

”போறும் பேசினது. வாங்க குளிக்க” என்று அழைப்பு தொடர்ந்தது. வெகு தயக்கத்திற்குப் பிறகு இஷ்டமில்லாமல் அரை மனதோடு ஆற்றில் இறங்கினேன். இது நடந்தது 1956-ம் வருடம். அதன் பிறகு கிட்டத் தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி கங்கையைச் சுத்தம் செய்ய ஒரு பெரும் திட்டம் வகுத்து பல ஆயிரங்கோடிகள் செலவழித்த பிறகு, 1990 களில் நான் ஒரு முறை காசிக்கு நாடகக் கருத்தரங்குக்குப் போயிருந்தேன். கங்கையோ இன்னும் 45 வருட அசுத்தங்களைச் சுமந்து கொண்டு பிரவாஹித்துக்கொண்டு இருந்தது. நாங்கள் ஒரு படகில் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றோம். படகில் எங்களுடன் அமர்ந்திருந்த காசி வாசிகள், காசி பல்கலைக் கழக பேராசிரியர்கள் பேராசிரியைகள், மற்றும் பல நகரங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், படகு நதியில் இறங்கியதும் கங்கை நீரைக் கையில் ஏந்திப் பருகினர். பக்தி பரவசத்தோடு தலையில் தெளித்துக் கொண்டனர். எனக்கு அந்த  நீரைத் தொடவே அருவருப்பாக இருந்தது. அன்று 1956-ல் ஆற்றில் குளிக்க இறங்கியவர்கள் வற்புறுத்தியது போல இவர்களும் வற்புறுத்து வார்களோ என்ற பயம் ஏற்பட அவர்களைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். என்னில் பக்தி உணர்வும் புனிதம் பற்றிய சிந்தனையும் அறவே வற்றுவிட்டதோ என்னவோ, தெரிய வில்லை.

 

எல்லோரும் பின் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அதைக் கோயில் என்று சொல்வதா இல்லை ஒரு மடத்தின் அறையில் தரையில் ஒரு தொட்டியில் பதிக்கப் பட்டிருக்கும் லிங்கம் என்று சொல்வதா என்று கேட்கத் தோன்றும். ஒரு பாண்டா லிஙகத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வருபவர்களுக்கு புஷ்பங்கள் எடுத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பான். அவன் ஆசிர்வதிக்கிறானோ என்னவோ, அதை வாங்கிக்கொள் பவர்கள் மிகுந்த பக்தி பாவத்தோடு கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்கிக்கொண்டார்கள். நம் கோயில்களில் காணும் யாரும் அண்டாத கர்ப்பக்கிரஹம், தூர இருந்து சேவிப்பது, மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பது என்று ஏதும் இல்லை. ஜனங்கள் அதிகம் இல்லை. இல்லையென்று இல்லை. பத்திருபது பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இது கோயிலாக, கர்ப்பக்கிரஹமாக, ஒரு புனித ஸ்தலமாக, இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது.

 

அப்போது எனக்குத் தோன்றவும் இல்லை. அது பற்றிய விவரமோ பிரக்ஞையோ இருக்கவில்லை. இந்த கோயில் என்னும் அறை, ஒரு பெரிய மசூதியை ஒட்டி இருப்பது. ஒரு பெரிய மாளிகையை ஒட்டி ஒரு அவுட் ஹவுஸ் என்று ஒரு அறை கட்டியது போலத் தான் இந்த காசி விஸ்வநாதர் ஆலயம். தெற்குக் கோடி யிலிருந்தும் ராமநாதபுரத்திலிருந்து இந்தியாவின் தூர எல்லைகளிலிருந்து நூற்றாண்டு காலங்களாக தம் ஆயுட்கால தவமாக பணம் சேர்த்து, இறுதிக்கால ஏற்பாடுகள் செய்து காசியாத்திரை வருவது விஸ்வநாதரைத் தரிசிக்க இந்த அறைக்குத் தான். ஒரு காலத்தில், பிருமாண்டமாக இருந்த ஆலயம் இது. எத்தனை முறை இது இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டதோ. இப்போது என் பூர்வீக இடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று காசி விஸ்வநாதர் மசூதியின் பின் சுவரை ஒட்டி “தாரணா” வில் உட்கார்ந்திருப்பது போல பட்டது.

 

கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை.  வழியில் ஒரு கடையில் கங்கை ஜலம் நிரப்பி பற்று வைத்து மூடிய செம்பு இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று அப்பாவுக்கு. இன்னொன்று நிலக்கோட்டை மாமாவுக்கு. இரண்டும் அவரவர் பூஜை அறையில் இடம் கொள்ளும்.

 

என்னோடு வந்தவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களூக்கு இன்னும் சில நாட்கள் தங்கும் திட்டம் இருக்கும். நான் அலஹாபாதுக்குத் திரும்பினேன். வேறு எங்கும் போகும் எண்ணமில்லாததால் சம்பல்பூர் வந்து புர்லா போய்ச் சேர்ந்தேன்.

திரும்பி வந்த பயணத்தின் நினைவு எதுவும் இல்லை.

 

யாருக்குத் தெரியும்? நேர்காணலும் தேர்வும் என்னவாகும் என்று?. ஏதும் வேலைக்கான உத்திரவு வரும் வரை, இது போல, தினம் பத்திரிகைகளில்  wanted column –ஐத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை எழுதிய வாக்கியத்தில் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டுவதாகத் தோன்றலாம். இல்லை. இப்படி மனுச் செய்து கொண்டே இருக்கலாம். நேர்காணலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும். நானும் புதுப்புது இடங்களை இலவசமாகப் பயணம் செய்து பார்க்கலாம் என்று ஒரு புதிய வாழ்க்கையும் அனுபவமும் கிட்டத் தொடங்கியிருப்பது நினைக்க எனக்கு உற்சாகமாகத் தான் இருந்தது.

——————————–

Series Navigationநாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.அருந்தும் கலை
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *