‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.

This entry is part 12 of 29 in the series 18 நவம்பர் 2012

 

    சிலர் தங்கள் கடிதங்களில், “நீங்கள் எப்படி சார் ‘பிரம்மோபதேச’த்தையும் எழுதி விட்டு, ‘உன்னைப்போல் ஒருவ’னையும் எழுத முடிகிறது?” என்று கேட்டிருந்தனர்.

எல்லா மட்டத்திலும் (standards) உயர்த தரம்(levels)  தாழ்ந்த தரம், வளர்ச்சி வீழ்ச்சி, ஆக்கம் அழிவு, என்ற இரண்டு பகுதிகள் உண்டு. எந்த மட்டத்திலிருந்தாலும்,  (இந்த மட்டங்களின் இடையே எவ்வளவு
பேதங்களிருப்பினும்) வளர்ச்சி ஆக்கம் ஆகிய குணப்பண்புகள் உடைய உயர்ந்த தரம் அனைத்தும் ஒரினமாகும். அதே போல் வீழ்ச்சி அழிவு ஆகிய பண்புகள் படைத்த தாழ்ந்த தரங்களும் எவ்வளவு பேதங்கள் மிகுந்த மட்டங்களில் தோன்றினாலும் ஒரே இனமாகும். ஆகவே எதையும் கணிக்கும்போது (standars) மட்டத்தை வைத்துக் கணிப்பது சரியான விடையைத் தருவதில்லை. அதிலுள்ள (levels) தரத்தை வைத்துக்கணிப்பதே சரியென்றாகும்.

அப்படிப் பார்த்தால்தான் ‘பிரம்மோபதேசமும்’ ‘உன்னைப்போல் ஒருவ’னும் மட்டத்தில் பேதப்பட்டிருப்பினும் தரத்தில் ஓரினத்தவை என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.

வாசகரான உங்களுக்கு இதைத் தெரிவித்தால் போதும் – புரிந்து கொண்டு விடுவீர்கள். இப்படிப் பார்க்கப் பழகிவிடுவீர்கள்.

ஆனால், நமது’விமர்சகர்கள்’ என்று சொல்லப்படும் பெரியோர்கள் இருக்கிறர்களே அவர்கள் விஷயமே வேறு. அவர்கள், என்ன எழுதியவனோ படித்தவனோ ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வதற்கா விமர்சகராகியிருக்கிறார்கள்?  இல்லை ஐயா! இல்லை! எவன் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பதற்காகத்தான் விமர்சகாகவதாரம் எடுத்துள்ளார்கள்.

‘நயம்பட உரை’ என்ற பாலபாடமே படிக்காத அல்லது அதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளாத மேதாவிகள்! நான் விமர்சகர் என்று குறிப்பிடும்போது பழைய இலக்கணம் என்று ஒன்று இருப்பதை முற்றாக
அழித்துக் கலைத்து விட்டு (அதற்குக் காரணம் அதில் பயிற்சியின்மையே) ஒரு புதிய இலக்கணத்தை மூங்கில் சட்டத்தால் கட்டி அதன் சட்டாம்பிள்ளைகளாகத் தங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும, என்று கஜகர்ணம் கோகர்ணம் போட்டு வரக்கூடியவர்களைத்தான்நான் நினைக்கிறேன் (இதற்குக் காரணம் ‘இந்தப் புதிய இலக்கணத்திலாவது பயிற்சி பெற முடியுமா என்று தாங்களே பார்த்துக் கொள்வதற்குத்தான்). மற்றபடி வேறு சில பயந்த சுபாவ விமர்சகர்கள் இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு ஆங்கில தினசரிக்குத் ‘தமிழ்ச் சிறுகதை’ என்று ஒரு கட்டுரை வரையும்போது எவரும் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்று சகட்டுமேனிக்கு எல்லாப்
பெயரையும் நாமாவளி செய்வார்கள். அவர்களை நான் சொல்லவில்லை.

இப்படியெல்லாம் சொன்னால் உடனே இவர்கள் என்ன கேட்பார்கள் தெரியுமா?  விமர்சனமில்லாமல் இலக்கியம் வளர்ந்து விடுமோ? – என்ற ஒரு பிரம்படிக் கேள்விதான்.

இதே பிரம்படிக் கேள்வியைத் தமிழ்ப் பண்டிதர்கள் இலக்கணம் குறித்துக் கேட்டால் மட்டும் இவர்கள் ‘ஆஊ’ என்று சிரித்து ஆர்ப்பரிப்பார்கள்.

நமக்குத்தெரியும்; இலக்கணத்தால் இலக்கியம் உருவாகவில்லை. இலக்கணத்தால் இலக்கியம் செழுமையுற்றது; செழுமையுறும் என்று.

அதே போல் நவீன இலக்கியமும் நவீன விமர்சனத்தால் உருவானதல்ல, நவீன விமர்சனத்தால் செழுமையுறும்; செழுமையுற வேண்டுமென்பதே.

ஆனால் விமர்சனம் என்ற லேபிலை ஒட்டி எதைச் செய்தாலும் அது விமர்சனம் என்றாகிவிடாது. எப்படி இலக்கியம் என்ற லேபிளால் ஒன்று இலக்கியமாவதில்லையோ அதேபோல – நமது விமர்சனக்காரர்கள பல புதிய சிந்தனைகளுக்கு வழி வைத்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க மாட்டேன். இருப்பினும் (ஒதுக்கப்பட்ட காரணத்தாலோ என்னவோ) ஓதுங்கி இருப்பதே கவுரவம் என்று எண்ணி ‘வெளிச்சத்தில் நடப்பது எல்லாமே வேஷம்’ என்று இவர்கள் கூறி வருகின்றனரே, இது எவ்வளவு பேதமை!

முப்பது ஆண்டுகளுக்கு முன்  ஒரு சில ஆண்டுகள் புது அலையாய்த் தமிழ் நாட்டில் வீசிய – எவ்வளவு அழுக்கும் குப்பையும் கலந்து வந்தாலும் புது வெள்ளம் புனித வெள்ளம் தான் என்று ஏற்றத்துக்கும் போற்றுதலுக்கு முரிய மணிக்கொடி பிரலாபத்தோடு இன்னும் எத்தனை ஆண்டுகள் காலம் கழிப்பது? இப்படி நான் கேட்டவுடன் ‘ஆ! மணிக்கொடியைப் பழித்து விட்டானே’ என்று sentimental கூச்சல் போடவேண்டாம்!

அது மகத்தான வருகை என்பதை நானும் அறிவேன். அது மகத்தானது என்றால் அதன் விளைவு எங்கே? விளைவு இப்படியென்றால் விதைப்பும் அப்படித்தானே? பதரைக்காட்டிப் பேச வேண்டாம். பதரும் இயல்பே! பதர் மட்டும் விளைவதில்லை.

தமிழ் இலக்கியக் குடும்பத்தில் பண்டிதத் தாத்தாக்கள் முனகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முனகிக்கொண்டு மட்டுமில்லை, ஒருகாலத்தில் அவர்கள் தமிழுக்கு நிறையச் செல்வம் சேர்த்ததுண்டு. முப்பது
வருஷத்துக்கு முன் வாழப்போய்….. வீட்டோடு வந்துவிட்ட இந்த ‘விமர்சன அத்தைகள்’ இருப்பதும் குடும்பத்துக்கு ரொம்ப ஒத்தாசைதான். ஆனால் ‘முப்பது வருஷத்துக்கு முன் வாழ்ந்தேனே… அதுதான் வாழ்கை! இதெல்லாம் என்ன…..ம்’,  என்று அடிக்கடி பீத்திக் கொள்ளும் தொணதொணப்பும் மொறுமொறுப்பும்தான் தாங்க முடியவில்லை.

விஷயம் இதுதான். நவீனத் தமிழ் இலக்கிய ‘ஸ்டாண்டர்டு பொதுவாகவே ரொம்ப உயரமில்லைதான். முப்பது வருஷத்துக்கு முன்னே கூடத்தான்! ஆனால் ‘தரம்’ என்று ஒன்று இருக்கிறதே அது உண்டு அல்லவா, இரண்டு விதத்திலும்? அதில் உயர்வை எப்படி வளர்ப்பது? அதன் மூலம் ‘ஸ்டேண்டர்டை’யே  எவ்விதம் உயர்த்துவது என்பதே பிரச்சினை. ‘உருப்படவே மாட்டோம்’ என்று சொல்ல ஒரு விமர்சகன் வேண்டுமா, என்ன?

எல்லாம் ‘பத்திரிகைக் கதைகள்’ என்று ஒதுக்கிவிடுவதும் சரியில்லை. எல்லோரும் பத்திரிகையில் எழுதினார்கள்; எழுத முயன்றார்கள்! மணிக்கொடியும் பத்திரிகைதான்.

ஒவ்வொரு சிறிய எழுத்தையும் கூர்ந்து பார்த்து அதன் தனமையை அறிபவனே விமர்சகன். புருவத்துக்கு மேலே அபிப்பிராயங்களை வைத்துக்கொண்டு அலட்சியப்படுத்தும் இயல்பு கொண்டோர் அந்தப் பீடத்துக்குத் தகுதியற்றவர்கள். திரும்பிக்கூடப் பார்க்காமல் காலம் அவர்களை ஒதுக்கிவிட்டுப் போய்விடும்.

இவ்வளவும் நான் சொல்வது இதற்குத்தான். இந்தக் கதை ஏதொ பெரிய சாதனையென்றெல்லாம் எனக்கு எவ்வித நினைப்பும் கிடையாது.

நான் பெரிதினும் பெரிதையே நாடுபவன். எனக்குத் திருப்தி ஏற்படவே முடியாது.

ஏப்ரல், 1964.                                                                 – ஜெயகாந்தன்.

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்புஎனது குடும்பம்
author

வே.சபாநாயகம்

Similar Posts

7 Comments

 1. Avatar
  Nagarathinam Krishna says:

  “ஒவ்வொரு சிறிய எழுத்தையும் கூர்ந்து பார்த்து அதன் தனமையை அறிபவனே விமர்சகன். புருவத்துக்கு மேலே அபிப்பிராயங்களை வைத்துக்கொண்டு அலட்சியப்படுத்தும் இயல்பு கொண்டோர் அந்தப் பீடத்துக்குத் தகுதியற்றவர்கள். திரும்பிக்கூடப் பார்க்காமல் காலம் அவர்களை ஒதுக்கிவிட்டுப் போய்விடும்.”

  எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார். சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர். தார்மீக கோபத்துக்குச்சொந்தக்காரர். அவருக்கிணையாக ஒரு எழுத்தாளரை இன்றைக்குச் சொல்லமுடியவில்லை. தமிழில் நடுநிலையான விமர்சர்கள் பொதுவிலில்லை. இதில் தற்போதைக்கு ந.முருகேசபாண்டியனும், பாவண்ணனும் விதிவிலக்கு.

  நா.கி

 2. Avatar
  admin says:

  Kavya’s comments have not been published as they are not based on facts. Please check up on facts before writing the comments about anyone.
  Thanks

 3. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  // அது மகத்தான வருகை என்பதை நானும் அறிவேன். அது மகத்தானது என்றால் அதன் விளைவு எங்கே? விளைவு இப்படியென்றால் விதைப்பும் அப்படித்தானே? பதரைக்காட்டிப் பேச வேண்டாம். பதரும் இயல்பே! பதர் மட்டும் விளைவதில்லை.//

  இதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. விதைப்பு இருந்தால் மட்டும் போதுமா ? என்னதான் வீரிய விதைகளாக இருந்தாலும் களர் நிலத்திலும் களைகள் மண்டிய நிலத்திலும் விதைத்தது எவ்வளவுதான் விளைந்துவிட இயலும் ?

  சான்று வேண்டுமென்றால், இதோ ஜெயமோகன் சொல்கிறார் :

  “செல்லப்பாவைப்பற்றி நாகர்கோயில் பேராசிரியர் ஒருவர் ஒரு சித்திரத்தைச் சொன்னார். நாகர்கோயிலில் அவரது கல்லூரிக்கு வெளியே இரு பைகளிலும் எழுத்து பிரசுர நூல்களுடன் செல்லப்பா வந்து நின்று அவ்வழியாக சென்ற அவரிடம் தமிழ்த்துறைத்தலைவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார். மெலிந்து நீண்ட வற்றிய முகம். நரைத்த தலைமுடி. ஒருவாரத்தாடி. பேருந்துநிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர்தூரம் வியர்வை வழிய வெயிலில் நடந்து வந்திருந்தார். அவரிடம் ‘என்னவேணும்?’ என்று கேட்டபோது ‘புத்தகங்கள் விக்கணும்’ என்றார். போகும் வழியில்தான் அவர் சி.சு.செல்லப்பா என்று சொன்னார். நண்பர் அவரது சில கதைகளை தினமணியில் படித்திருந்தார்.

  கல்லூரித் தமிழ்த்துறை அவரை வரவேற்கவில்லை. ”புக்ஸெல்லாம் வாங்குறதில்லீங்க” என்று சொல்லிவிட்டார்கள். “சரீ நீங்க வாங்குங்கோ…எல்லாம் முக்கியமான புக்ஸ். நவீன தமிழிலக்கியத்திலே புதிய அலை பிறந்திருக்கு.படிச்சுப்பாருங்கோ” என்று செல்லப்பா நூல்களைப்பற்றிப் பேசினார். ஆனால் அவர்கள் அகிலனுக்கு அப்பால் நகர முடியாதவர்கள். ஒருவர் மட்டும் இரண்டு நூல்கள் வாங்கிக்கொண்டார். மொத்தவிலை நான்கு ரூபாய். அவ்வளவுதான். செல்லப்பா துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி கிளம்பினார். ‘வாங்க கேண்டீன்ல டீ சாப்பிடலாம்” என்று நண்பர் அழைத்தார். ‘பணம் நானே குடுத்துடறேன்” என்று வந்த செல்லப்பா அவர் டீ குடித்ததற்கான முப்பது பைசாவை அவரே கொடுத்தார். வெயிலில் கனக்கும் பைகளுடன் செம்மண் படிந்த வேட்டி தரையில் இழுபட நடந்து அடுத்தக் கல்லூரிக்கு நடந்து சென்றார்”

  தமிழுக்கு செல்வம் சேர்க்கவேண்டிய பண்டிதர்கள் எதை சேர்த்தார்கள் என்பது இலக்கியம் வாசிப்பவர்கள் அறிவர்.

 4. Avatar
  punaipeyaril says:

  நான் பெரிதினும் பெரிதையே நாடுபவன். எனக்குத் திருப்தி ஏற்படவே முடியாது— நன்றி ஜெ…

 5. Avatar
  admin says:

  அன்புள்ள காவ்யா
  உங்கள் கருத்துகளை ஒழுங்கு படுத்தி கட்டுரை வடிவில் அனுப்பித் தரவும். பரிசீலிப்போம்.
  ஆசிரியர் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *