“ஆம் ஆத்மி”

This entry is part 7 of 42 in the series 25 நவம்பர் 2012

ருத்ரா

ஆம்.
இது இனிமேல்
குப்பன் சுப்பன்களின் பார்ட்டி.
தாத்தா அப்பா பேரன் பூட்டன்
என்று
எத்தனை நாளைக்கு
“நூல்”பிடித்துக்கொண்டிருப்பது?

ரத யாத்திரை போகும்
அந்த ரதத்தில்
ராமனை இறக்கிவிட்டு
(ஊழல் பழி சொன்ன)
சலவைத்தொழிலாளிக்குத் தான்
இனி தூப தீபமா?

எப்படியிருப்பினும்
பொது ஜனம் என்றாலும் சரி
மகா ஜனம் என்றாலும் சரி
சாமான்யன் என்றாலும் சரி
பொத்தான் அமுக்கும் போது..இந்த‌
“பொது உடைமையை”
ம‌ன‌தில் வைத்துக்கொண்டால் ச‌ரி.

வெள்ளைக்குல்லாய்க‌ளின்
கும்ப‌மேளா போல் தெரிந்தாலும்
ஊழ‌ல் ந‌ர‌ம்புக‌ள்
அற்று விழுந்தால் ச‌ரி.

இந்தியின் கார‌மும்
கூட‌வே இருந்தாலும்
இந்தியா பிழைத்துக்கொண்டால் ச‌ரி.

வறுமையின் நிறம் சிவப்பு என்றால்
அலர்ஜி ஆகி விடுகிறவர்கள்
இந்தியாவை ஆட்டிப்படைக்கும்
பணத்தின் நிறம்
கருப்பா? காவியா?
என்று கவலைப்படாமல்
இருந்தாலும்
ஊழல் கறை ஒழிந்தால் சரி.

ஈழ‌த்துள்ளே
த‌மிழ‌ன் ர‌த்த‌த்து வேர்த்தூவிக‌ள்
வெட்டப்ப‌ட்டிருக்கும் வேளையிலும்
த‌மிழ‌ன் இத‌ய‌த்துள்ளேயும்
இந்த‌ தீ எரிய‌த்தான் செய்கிற‌து.
அது
அனுமார்க‌ளின் வாலில் வைத்த‌
தீயாக‌ இருக்க‌க்கூடாது.

யார் முகமூடி
யாரிடம் இருக்கிறது?
ராமனிடமா? ராவ‌ண‌னிட‌மா?

அந்த முப்ப‌து சொச்ச‌ம் கோரிக்கைகள்
நிறைவேற‌
அர‌சிய‌ல் சாச‌ன‌மே இனி
வேத‌ங்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும்.
வேத‌னை த‌ரும்
நான்கு வ‌ர்ண‌ங்க‌ளின்
வேத‌ங்களே
அர‌சிய‌ல் சாச‌ன‌ம் ஆகும்
“புழ‌க்க‌டை”அர‌சிய‌ல் அபாயமும்
அல்லவா
புதைந்து கிடக்கிறது இங்கே!

ஆத்மி என்றால்
ஆத்மா உள்ள சாதாரண மனிதனா?
ஆத்மா என்றால்
என்னவென்றே தெரியாத‌
சாதாரண மனிதனா?
இது ஒரு ஆத்மீக பார்ட்டியின்
ஆரம்ப அறிகுறி தானோ
என்னும் ஐயமும்
தலை காட்டத்தான் செய்கிறகிறது.

பாருங்க‌ள்.
“ம்ருத்யுஞ்ஜெய‌” ஹோம‌ம் ந‌ட‌த்தி
டெங்கு கொசுக்க‌ளை
ஒழிக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ள்
நாளை
ஊழ‌ல் ஒழிக்க‌
இதே ஹோம‌ம் ந‌ட‌த்தினாலும்
ந‌ட‌த்துவார்க‌ள்.
ம‌த‌ சாம்ராஜ்ய‌ங்க‌ளின்
சாம‌ர‌ங்க‌ளை ம‌டியில் க‌ட்டிக்கொண்டு
“ஆம்னிப‌ஸ்” ஓட்ட‌ நினைத்தால்
அதில் க‌ட்டித்தொங்க‌விட்டிருக்கும்
“க‌ட்காரி” எலுமிச்ச‌ம்ப‌ழ‌ங்க‌ள்
வெறும் திருஷ்டிக்க‌ழிப்பு என்று
புரிந்து போகும்
இந்த‌ “பொது ஜ‌ன‌”த்துக்கு.

நான்கு வர்ணத்தில்
முதல் வர்ணம் தவிர‌
மற்றவை இங்கே
“அந்நியம்”ஆன பின்
இத்தாலிய வர்ணம்
மட்டுமா
இங்கே அந்நியம்?

ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு
ஊதிய பலூனைக்கட்டிக்கொண்டு
தேர் இழுப்பவர்களே
இதற்கு காற்று ஊதியவர்களின்
பட்டியல்
அமரர் பிரமோத் மகாஜன்
காலம் வரைக்கும்
நீள்கிறதே.
ஆம் ஆத்மி என்றால்
வெறும் “ஆ(மா)ம் சாமி”களா?
கிராமத்துக்குள்
“ராம”இருக்கலாம்.
ராமனுக்குள்
கிராமம் இல்லை.
அவனை
உப்பரிகை வர்க்கமே
பாராயணம் செய்கிறது.
உப்புக்கரிக்கும் வர்க்கம் அல்ல.

இருப்பினும்
ஊழ‌ல் தோற்க‌
ஆம் ஆத்மி ஜெயிக்க‌ட்டும்.

=========ருத்ரா

Series Navigationஓடிப் போனவள்ஒரு ரத்தக்கண்ணீர்

3 Comments

  1. Avatar paandiyan

    பின் குறிப்பு : காசு கொடுத்தால் இதை போல 100 மடங்கு கூவுவோம் .
    பின் குறிப்பு 2 : மீட்டருக்கு மேல போட்டு கொடுத்தால் நீங்கள் சொல்லும் இடத்தில எல்லாம் போயி கூவி விட்டு வருவோம் .

  2. Avatar e.paramasivan ruthraa

    இப்ப‌டிக்கூவுவ‌தும் அப்ப‌டித்தானா?

  3. Rudraa,only socially conscious people will realise their follies.Our media is full of vested interests.Like in Manu needhi,here criticism will be based on one”s varnam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *