இரு கவரிமான்கள் – 2

This entry is part 4 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஒரு வாரம் கழித்து மாதவியின் நாட்டிய நிகழ்ச்சிக்கு ரமேஷுடன் சேர்ந்து சென்று திரும்பிய பைரவி அவனிடம் வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் மனசுக்குள் ” கல்யாணத்தைப் பற்றிச் சொன்னேனே எந்த முடிவு எடுத்திருப்பானோ…தெரியலையே…நான் சொன்னதை மறந்து விட்டவன் போல ..ஒன்றுமே சொல்லாமல் கல்லுளி மங்கன் மாதிரி இருக்கறதப் பாரேன்…” அப்ப அவன் நினைக்கும்படி தான் நடக்கணும்னு நினைக்கிறான் போல….இருக்கட்டும்….இருக்கட்டும்..ரமேஷ்…நீ நினைப்பது எந்தக் காலத்திலும் நடக்காது. நானாவது உன் இழுத்த இழுப்புக்கு “லிவிங் டுகெதர்ன்னு” வருவதாவது… அதுக்குப் பேசாம “துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு” விலகி விடுவதே மேல்…நான் பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டுன்னு இருந்தேன்…குளத்தில் கல்லெறிந்து கலக்கியது போல என் மனம் இப்போ கலங்கிப் போயிருக்கு.

ஒரே படத்தில் ஒரே பாடலை இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மாற்றிப் பாடறேன்..ரமேஷ் என்னைக் கல்யாணம் செய்துக்க மறுத்தால் ஒருவேளை என் மனசும் சோக கீதம் பாடும். .நல்லவேளையா என் மனசின் ரகசியம் வெளியில் இன்னும் யாருக்கும் தெரியலை மாதவிக்குக் கூடத் தெரியாதது நல்லதா போச்சு. இப்ப நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனதே மாதவி தன நிகழ்ச்சியைப் பார்க்க ரமேஷ் வரணும்னு ரொம்பக் கேட்டதால் தானே. அவளுக்கு நேரம் வரும்போது சொன்னால் போகிறது. அவள் மனத்திலே இருக்கும் ரணம் ஆறணும் .

இத்தனை வருஷப் பழக்கத்தில் இந்த முறைதான் மனசு விட்டுப் பேசியிருக்காள் . அவளுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கணும். நினைத்ததும் நினைவுக்கு வந்தவர் ஆதித்தன்.இளையராஜா சார் க்ரூப்ல வயலின் வாசிக்கும் அவர் தான் மாதவிக்கு பொருத்தமாயிருப்பார் என்று தோன்றியது பைரவிக்கு .

ஒரு தடவை டைரக்டர் விளையாட்டாக ஆதித்தனை அழைத்து உங்க பாட்டுக்கு சோலோவா அவ்வளவு அழகா வயலினாலயே அழுதது இவர் தான் மேடம்…என்று பைரவிக்கு அறிமுகப் படுத்தியவர் அப்படியே கால்கட்டுக்குத் தப்பிச்சுண்டு இருக்கான்…யாருகிட்ட மாட்டப் போறாரோ..? என்று சொன்னதும்..முகமெல்லாம் வெட்கத்தோடு அவர் வணக்கம் சொன்ன கம்பீரம் பிடித்திருந்தது பைரவிக்கு. அதன் பின்பு அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாலும் மனசெல்லாம் அலை அலையாய் எண்ணங்கள் வந்து மோதிக் கொண்டிருந்தது…உறக்கத்தைத் தவிர.

“பைரவி, பைரவி …அதுக்குள்ளேத் தூங்கியாச்சா? கையில் பாலோடு வந்த அம்மா….இந்தாச் சூடாப் பால் சாப்பிடு, மாதவி நன்னா ஆடினாளா? எங்களுக்குத் தான் வர முடியாமல் போச்சு….ஆனால் நல்லவேளை..நாங்க வீட்டில் இருந்தோம்..நான் போனில் சொன்னேனே, நாளை பர்ஸ்ட் ஃப்ளைட்டில் நீ மும்பை கிளம்பணும்னு . சாம்பசிவம்.வந்து டிக்கெட் கொடுத்துட்டு போனார், உன் . கூட விஜய் ஜேசுதாஸ் ஏர்போர்ட்ல ஜாயின் பண்ணிப்பாராம்.இன்னொருத்தரும் வராராம். ஏதோ ஒரு ஹிந்திப் படமாமே…”வாரிஸோ ….பாரிஸோ …என்னதது….?

வாரிஸ் ……வாரிசுன்னு அர்த்தம்.

ஓ ….அனுராதா பௌட்வால் தான் உன்னை ரெக்கமண்ட் செய்தாராம். நாளைக்கு கார்த்தால ரெகார்டிங்காம்….அவங்க பிக்கப் பண்ணிப்பாங்க….உன் மேஜை மேலே கவர் வெச்சேன்…பார்த்து எடுத்துக்கோ பத்திரம். கார்த்தால டிரைவர் ரத்தினத்தை மூணு மணிக்கே வரச் சொல்லியிருக்கேன். நீயும் சீக்கிரமாத் தூங்கு..நான் அலாரம் வெச்சுடறேன்….அடிச்சதும் எழுப்பறேன். முடிஞ்சா இப்பவே டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ…ரெண்டு நாட்கள் தானாம்.

பைரவிக்கு அம்மாதான் பர்சனல் செக்கரட்டரி. இதே இசையமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான் இசையில் பாடணும்னா நட்ட நாடு ராத்திரிதான் போகணும். விடியற்காலை திரும்பணும் .அதுவரை அம்மாவும் முழிச்சுண்டு இருப்பாள். இந்தக் கலைத்துறைக்கு நேரம் காலமே கிடையாதே.

சூரியன் எழுந்திருக்கும் முன்னமே எழுந்து பர பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பைரவி..

மனதுக்குள் ரமேஷிடம் இந்த முறை சொல்லவே இல்லையே…என்று உணர்வு மேலோங்கி நின்றதும்….நேற்று நாட்டியக் கலையரங்கில் அம்மாவின் ஃபோன் வந்து விஷயம் தெரிந்ததும்…..சொல்வதற்காக ரமேஷைப் பார்த்ததும்…அவன் தன்னை மறந்து மாதவியைக் கண் இமைக்காமல் பார்த்து விழுங்கிக் கொண்டு இருந்ததும்..தனக்குள் எழுந்த கோபத்தில், பார்வையே சரியில்லையே என்ன வேண்டியிருக்கு….ஆள முழுங்கற பார்வை…..சொல்லாட்டாலும் தப்பில்லை…என்ற எண்ணத்தில் சொல்லாமல் கிளம்பினாள் .

நாட்டிய அரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் கூட ரமேஷ் தன் நிலையில் இல்லை…ஏதோ மயக்கத்தில் இருந்தது போலிருந்தது பைரவிக்கு. சரியாகப் பேசாமலே காரை ஒட்டிக் கொண்டு வந்து “கடனே” என்று விட்டுவிட்டுப் போனது புரிந்தது அவளுக்கு.

சரி, அதனால் என்ன..? இந்த முறை மும்பை தானே ..? சொல்லாமல் போகலாம்…என்னாகிறதுன்னு பார்க்கலாம்.அவசரமாக் கிளம்பினேன்னு கேக்கும்போது சொல்லிக்கலாம்…மனதை சாமாதானப் படுத்திக் கொண்டாள் பைரவி.

டிக்கெட் கவரை பார்த்து எடுத்துண்டியா? அம்மா நினைவு படுத்தினாள் .

விஜய் ஜேசுதாசும் ரொம்ப தங்கமான மனுஷர். அவரோட சேர்ந்து போவது சந்தோஷமாத் தான் இருக்கு.என்று மகிழ்ச்சியில் சொன்னவள் . அம்மா… மாதவி ஃபோன் செய்தால் சொல்லிடு. அங்க நான் ரெகார்டிங்ல இருக்கும் போது ஃபோன் எடுக்க முடியாது. நான் முடிச்சதும் உங்களுக்கு கால் பண்றேன்.. என்று கிளம்புகிறாள். காரில் அவளது சூட்கேஸை எடுத்து டிக்கியில் வைத்துக் சார்த்திய டிரைவர்…. கார் கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க, பைரவி காருக்குள் ஏறிக்கொண்டதும் கார் மீனம்பாக்கம் விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது .

கண்களை மூடிக் கொண்டு சீட்டின் பின்னால் சாய்ந்து கொள்கிறாள் பைரவி.
பின்னால் குழலிசையோடு ….வீணையும்…..சேர…சுசீலாம்மா பாடவும்….

“கலை வாணி நின் கருணை தேன்மழையே…
விளை யாடும் என்நாவில் செந்தமிழே…
அலங்கார தேவதையே வனிதா மணி…
இசையாவும் தந் தருள்வாய் கலை மாமணி..”

இந்தப் பாடலைத் தான் பைரவி காலை எழுந்ததும் கேட்பாள்…இதை நன்கு அறிந்தவர் டிரைவர் ரத்தினம் .

அம்மா அமைதியா பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது தொல்லை பண்ணக் கூடாது…பாட்டு முடியட்டும் மெல்லப் பேச்சை ஆரம்பித்துச் சொல்லி விடலாம்.என்று காத்துக் கொண்டிருந்த ரத்தினம்….இந்த நேரத்தை விட்டால் தன்னால் சொல்ல இயலாமல் போய்விடும் என்று….ஒரு இருமல் சத்தம் கொடுத்து முதலில் பைரவியை எழுப்பிவிட்டு..பின்பு மெதுவாக…

“அம்மா… ஒரு விஷயம் சொல்லணும் உங்ககிட்ட….என்று தயக்கத்துடன் ஆரம்பிக்கிறார் லேசாகத் திரும்பிப் பார்த்தபடியே.

சொல்லுங்க ரத்தினம்…என்ன விஷயம்…? ஏதாவது பண உதவி தேவையா ? நான் வர ரெண்டு நாளாகும் …அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கங்க என்கிறாள் பைரவி.

அதெல்லாம் இல்லீங்கம்மா….அந்த “வானவில் தொலைக்காட்சி ” ரமேஷ் சார் கூட நீங்க நாட்டிய அரங்கேற்றத்துக்கு போனதை வெச்சு அரசு புரசலா ஒரு மாதிரி நேத்து பேச்சு வார்த்தை நடக்குதும்மா…என் காதுல விழுந்துச்சு.. அதான் உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். என்னடா இவன் இதைச் சொல்றானேன்னு தப்பா நினைச்சுக்கிடாதீங்க.

ஓ …அப்படியா .சரி…அதை நான் பார்த்துக்கறேன்…! என்று சொல்லிவிட்டு எவ்வளவு பிரபலமானால் என்ன…? இந்த கிசு கிசுலேர்ந்து யாரும் தப்ப முடியாது போல..அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..கூடவே ரமேஷ் கேட்டதும் நினைவுக்கு வந்து…அவளுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அவனிடமிருந்து மெல்ல மெல்ல விலகியாகணும் …இந்த பாம்பே பிரயாணம் கூட ஒரு விதத்தில் கொஞ்சம் மனசுக்கு மாறுதலா ஆறுதலா இருக்கும் என உணர்ந்தவள்…..ரமேஷ் நல்லவன் தான்..கண்ணியமானவன் தான்..ஆனால் வெளிநாட்டில் படித்ததாலோ என்னவோ திருமணத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலிருக்கிறான். முதலில் அதை அவனுக்கு உணர்த்த வேண்டும்…என்றெல்லாம் யோசித்துக் கொண்டே பறந்து சென்றாள்.

அருகில் அமர்ந்திருந்த விஜய் ஜேசுதாஸ் கூட….”என்ன மேடம் உடம்பு சரியில்லையா…? வாய்ஸ் ஒகே தானே….எனி ப்ராப்ளம் என்று கேட்டார். நம்ம கூட வயலினிஸ்ட் ஆதித்தனும் வந்திருக்கார்……தெரியுமா உங்களுக்கு…? என்று கேட்டதும்…பைரவிக்கு நெஞ்சுக்குள் குபுக்கென்று ஒரு குமிழ் வெடித்தது ! மனசுக்குள் கூடவே மாதவியும் வந்து நின்றாள் .

ஓ …அப்படியா…ஐம் ஆல்ரைட் என்று வாய் முணு முணுத்தாலும் மனது மட்டும் ரமேஷிடம் சென்றுவிட்டு வந்தது…ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறாள்…பஞ்சுப் பொதியாக…ஏதோ சினிமாவில் தேவலோகக் காட்சிக்கு செட்டிங் போட்டது போல….மேகப் பொதிகள்..மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தும்.. வழக்கம் போல தன்னை மறந்து மனது பாடியது..

வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்…
மண் தொட்டதால் இங்கே
செவ்வானம் போலாச்சே
விண் சொர்க்கமே பொய்…பொய்…
என் சொர்க்கம் நீ பெண்ணே…
சூடிய பூச்சரம் வானவில் தானோ…ஓ …

எத்தனை இனிமையான பாடல்…இந்தக் காலத்தில் ஏன் இப்படி ஒரு இனிமையான பாட்டு தனக்குக் கிடைப்பதில்லை…பாடகி ஜானகியம்மா கொடுத்து வெச்சவங்க…யோசித்துக் கொண்டே பிரேக் ஃ பாஸ்ட் சாப்பிட லாமா வேண்டாமா என்று கையில் சாண்ட்விச்சை எடுப்பதற்குள் மும்பை வந்து விட்ட அறிவிப்பும் வந்து விட்டது..

மும்பையில் தரையிறங்கி செக் அவுட் ஆகி….”ஃ ப்ளாக் கார்ட்” பார்த்து காரில் ஏறி அமர்ந்ததும்…அதற்காகவே காத்திருந்தவன் போல ரமேஷின் அழைப்பு மணி அடித்து அவளைத் தொடர்ந்தது.

விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தவள் அருகில் இருந்த விஜயைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் திரும்புகிறாள்.. அடுத்த நொடி விஜய்க்கும் அவரது கைபேசி மணி….

“அம்மாவென் றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி …….”

அவரது அப்பாவின் குரலில் அழைக்கிறது. புன்னகைத்தபடியே மெலிதான குரலில் இவளுக்குக்கேட்டுவிடாத படி பேசுகிறார். மனைவியாய் இருக்கும் என்று பைரவி நினைத்துக் கொள்கிறாள்.

முன்சீட்டில் அமர்ந்திருந்த ஆதித்தன் அமைதியாக வந்து கொண்டிருந்தார். ஏதாவது பேசலாமா என்று நினைத்து இவளும் வாயை மூடிக் கொண்டாள் . சரியான அழுத்தக் காரர் போல..வாயைத் திறந்தாள் முத்து உதிர்ந்திடுமோ… இவரோட நமக்கு என்ன பேச்சு.? சமாதானம் அடைந்து கொண்டாள் .

பைரவி ஊரில் இல்லாத இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் ரமேஷ். மாதவியை எப்படி சந்திக்கலாம் என்ற ஆழ்ந்த யோசைனையில் இருந்த ரமேஷுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்து போல மாதவியே ஃபோன் செய்தாள் . ஒரு கலைமான் ஓடி விட்டதென்றாலும் அடுத்த கலைமான் இருக்கவே இருக்கிறது என்று சீட்டியடித்தபடியே ஃபோனை எடுக்கிறான்.

நான் மாதவி…பேசறேன்.. என்னோட நாட்டிய நிகழ்ச்சிக்கு நான் பைரவி கிட்ட சொன்னதை மதித்து நீங்களும் பைரவி கூட வந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அதுக்கு தேங்க்ஸ் சொல்லத் தான் ஃபோன் செய்கிறேன் என்றும் சொன்னாள் .

அடடா,….நானே உங்களை ஃ போன் செய்து பாராட்டணும்னு நினைச்சேன் ….அதுக்குள்ளே ஆச்சரியமா உங்க கிட்டேர்ந்து ஃ போன் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு இன்ப அதிர்ச்சி. மாதவி நீங்க மயில் மாதிரி நளினமா நாட்டியம் ஆடினீங்க…நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.. உங்களுக்கு விளம்பரத்தில் ஆவல் இருந்தால் சொல்லுங்கோ…என் வானவில் தொலைக் காட்சி காத்திருக்கு…மறந்துடாதீங்க….என்று அவளுக்கு வலை விரித்தான்.

மாதவி அவனது சகஜமான பேச்சில் மனதுக்குள் ” பைரவி ரொம்பக் கொடுத்து வைத்தவள்..” நல்ல நண்பன் எதிர்காலக் கணவனாகக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கனணும்..அவளுக்கு ஏற்றவர் தான் இந்த ரமேஷ்.. என்று மனதில் நினைத்துக் கொள்கிறாள். கண்டிப்பாக பைரவி மும்பையி லிருந்து வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்தாள் .

ரமேஷுக்கு என்னைப் பிடித்திருக்கா என்று பலமுறை மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் மாதவி ! நான் அழகியா ? பைரவி அழகியா ? எனக்குள்ள எடுப்பான தோற்றம் அவளுக்கில்லை. ரமேஷ் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்….ஒண்ணுமே புரியலையே…சரி பார்ப்போம். எனக்கு இருக்கு ஆயிரம் வேலைகள் இதுவா முக்கியம்?

அவள் ஃபோனை வைத்து விட்டாலும்..ரமேஷ் அந்த மொபைலைப் பார்த்தபடியே… அமர்ந்திருந்தான் . மாதவியிடம் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாள் பைரவி என்று தெரியவில்லையே. அவன் தலைக்குள் கேள்விகள் மின்னி மின்னி உலுக்கி எடுத்தன.

மனதில் குழப்பம் இருந்தாலும், மாதவிக்கு ஃபோன் செய்து பார்க்கலாம்… என்ற எண்ணத்தில் நம்பரைத் தட்டியதும்…

ஹலோ….மாதவி ஹியர்….இன்னிசையாய் குரல் கேட்க..

ஹை..மாதவி நான் ரமேஷ் பேசறேன்….இப்ப நீங்க…நீ…நீ…ப்ரீயா..இருக்கீங்களா…?

குட் மார்னிங்…இல்லையே…எனக்கு இன்னைக்கு ஒரு கான்செர்ட் இருக்கு….ஏன் ?. ஏதாவது சொல்லணுமா?

எஸ்….உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா…ஒரு தடவ என் ஆபீசுக்கு வர முடியுமா?

எங்கே…வானவில்லுக்கா…? சாரிங்க. இன்னைக்கு முடியாது…நாளைக்கு ஃபோன் பண்ணிச் சொல்றேனே. என்கிறாள் குரலில் குதூகலத்தை கேட்கத் தவறவில்லை ரமேஷ். ஆனால் முகம் வாடுறது ரமேஷுக்கு ! என்னைத் ஆரம்பத்திலே தட்டிக் கழிக்கிறாளா மாதவி ? அவள் பிறந்த நாளுக்குப் பெரிய கிஃப்டா என்ன தரலாம் ? தீவிரமாக யோசித்தான் ரமேஷ். அஞ்சு லக்ஷம்…காஷ் ப்ரைஸ்..!

கொடுக்கலாம்….ஆனால் என்ன காரணம் சொல்லிக் கொடுப்பது ? மூளையின் செல்கள் அவசர அவசரமாக பக்கங்களைப் புரட்டியது.

எஸ்….எஸ்…ஐம் வெய்டிங்…..!

ஃபோனை வைத்ததும் “யார்கிட்டயிருந்து மாதவி இந்தக் கால்…? அம்மா கேட்கிறாள்.

மிஸ்டர்.ரமேஷ்.நம்ம பைரவியோட ஃ பிரெண்ட்…..லாஸ்ட் வீக் என் நிகழ்ச்சிக்கு வந்தார். ஐ திங்க்…அனேகமா பைரவியைக் கல்யாணம் பண்ணிப்பார்னு…. நினைக்கிறேன். ‘ வானவில்’ டிவி ஓனர் . மாதவிக்கு ஏத்த ஜோடி. சுருக்கமாகச் சொல்லி நிறுத்திய மாதவியைப் பார்த்து வருத்தமுடன்..

நீயும் அப்படி ஒருத்தரைக் . கல்யாணம் பண்ணிக் கோன்னா வேண்டான்னு பிடிவாதம் பிடிக்கறே ..எத்தனை நல்ல நல்ல வரனெல்லாம் அமையாமப் போச்சு…உன் பிடிவாதத்தால.

அம்மா..ப்ளீஸ்..என் மூடைக் கெடுக்காதே…இத விட்டுட்டு வேற என்ன வேணாப் பேசு. நான் இப்படி இருக்கும்போது தான் தைரியமா இருக்கேன். நான் உண்டு என் நாட்டியம் உண்டுன்னு. நான் கத்துண்ட இந்த பரதம் அந்தக் கல்யாணத்தை விட மிகவும் புனிதமானது. என்னால் இதை இந்த ஜென்மத்தில் விட முடியாது.எனக்குக் கல்யாணத்தில் ஆசையும், கனவும் கிடையாது.

உன்னைத் திருத்தவே முடியாது…என் கவலையே எனக்குத் தீரலை…. அம்மா சலித்துக் கொள்கிறாள்.எப்படியோ போ…நீயும் உன் பரதமும்.எனக்குப் பிறகு தனியா நிக்கும்போது தான் நான் சொன்னதன் அருமை புரியும்.

ட்ரை பண்ணாதேம்மா விட்டுடு..என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போலிருந்தது ரமேஷுக்கு. மாதவி தரிசனம் வேண்டும்…என்று சதா ஜபம் செய்து கொண்டிருந்தான் மனதுக்குள்.

அடுத்தநாள் சொன்னபடியே மாதவியும்…ஃபோன் செய்து இன்று வரேன்… ஷ்யூரா …வரேன்…என்றவள் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு தயாராகிறாள்.

புடவையை கட்டிக் கொண்டு அழகு பார்த்தவள்……ச்சே…இது சரிப்பட்டு வராது…என்று சூடிதாருக்கு மாறினாள் .

மாதவி தன் மெர்ஸிடஸ் பென்ஸ் புதுக் காரில் ஏறியதும் அவளது பிடிக்கு அடங்காமல் கார் பறந்தது. எப்பவோ பார்த்த ஞாபகம் இந்த வானவில் டிவி ஆஃபீஸை என்று நினைவு படுத்திக் கொண்டே பொறுமையில்லாமல் சந்துகளில் புகுந்து ஒரு வழியாக மந்தவெளி வந்து அங்கிருந்து இரண்டு வீதிகள் கடந்து ஒருவழியா வந்தாச்சு….என்று காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைகிறாள்.

இவளுக்காகவே காத்திருந்தவன் ரிசெப்ஷன் அழகுப் பெண்ணிடம் ஏதோ சொல்லியபடி “இதோ அவங்களே வந்துட்டாங்க” என்றபடி…
வாவ்… வாங்க வாங்க மிஸ் மாதவி….ப்ளீஸ் கம் இன்….பை த பை…யு லுக் ஸோ….கார்ஜியஸ்…! என்றவன் மெல்லிய சீட்டியடித்தபடியே தன் அறைக்கு அழைத்துச் செல்கிறான் ரமேஷ்.

அவனைப் பின் தொடர்ந்தவளாக கண்களை அங்கும் இங்கும் ஓட விட்ட மாதவி ….பார்த்த இடமெல்லாம் அழகான பெண்கள் வேலையில் மும்முரமாக இருந்ததையும் கவனித்தாள் . அந்தப் பெண்களின் ஆடைகளை கவனித்தவள்…இங்கும் .ஏன் இப்படி? என்றும் யோசித்தாள் . அனைவரும் ஒரே மாதிரியான கர்நாடகா சில்க் புடவை உடுத்தியிருந்தது தான் இவளின் ஆச்சரியத்துக்குக் காரணம்.

வர்ணச் சுவர்களில் அழகழகான இசைக் கருவிகளின் படங்களும், பாரத நாட்டியம் ஆடும் பெண்களின் படங்களும், தஞ்சாவூர் வெண்ணை கிருஷ்ணன் படமும் புன்னகையுடன் அழகாக அலங்காரமாக இருந்தது. அவனது கலா ரசனையைப் பெருமையும் பார்த்தவண்ணம்…குட் டேஸ்ட் …என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் மாதவி.

உள்ளே நுழைந்ததும் ஜில்லென்று குளிர்…மெல்லிய சந்தன வாசனை….ஒரு சுவர் முழுக்க பெரிய வானவில்லின் வண்ண ஓவியம் பளீரென்று கண்ணைப் பறிக்க, ஒரு கண்ணாடி பீரோ நிறைய கேடயங்கள், பரிசுகள் என்று அழகாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. சுவரில் தொங்கிய எல்.இ .டி ஸ்கிரினில் மெல்லிய குரலில் வானவில்லை விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தது.

வீணையோடு சரஸ்வதி சிலையும், நடராஜர் சிலையும், தாமரைப் பூவில் அமர்ந்த லக்ஷ்மி சிலையும் தெய்வீகத்தை மணக்க மணக்க சொல்லிக் கொண்டிருந்தது.

முகத்தில் இழையோடிய புன்சிரிப்புடன் யு ஆர் கிரேட்…வெரி நைஸ் டு பீ ஹியர் …என்கிறாள் மாதவி. வெரி நைஸ் பிக்சர்ஸ் ! வெரி ப்ளசென்ட் இன்டீரியர். என்று சொல்கிறாள்.

ரமேஷ்….” என்ன சாபட்றீங்க..” ன்னு கேட்குமுன்னே கைபேசி மணி அடித்தது… அதில் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு கைபேசி அழைத்தது…. அதைத் தொடர்ந்து இண்டர்காம்……என்று அவன் ஒரு அஷ்டாவதானியான காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள் மாதவி.

அவளது கண்கள் நடராஜர் சிலையைப் பார்த்துக் கொண்டே கால்கள் தாளம் போட ஆரம்பித்தன..மனமோ…

“சபாபதிக்கு வேறு தெய்வம்…

சமான மாகுமா…. தில்லை….”
கிருபா நிதி இவரைப் போல

கிடைக்குமோ”

என்று பாடிக்கொண்டிருக்க…. .”கூல் ட்ரிங்க்ஸ்” என்ற ரமேஷின் குரல் பூமிக்கு இழுத்து வந்தது மாதவியை..

நோ…தேங்க்ஸ்…என்ன விஷயமா கூப்பிட்டேள்?….உங்களைச் சொல்ல விடாமல் ஃபோன் கால்ஸ்…என்று புன்னகைத்தாள் .

ஹோ….ஐ ஆம் சாரி….! மார்னிங் கொஞ்சம் இப்படித்தான்….என்ற ரமேஷ்.. .கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசும் தொனியில் தொண்டையைச் செறுமியபடியே “தில்லானா… தில்லானா …” ன்னு ஒரு ப்ரோக்ராம் எவெரி சண்டே காலையில் பத்து மணிக்கு நம்ம தொலைக் காட்சியில் அடுத்த வாரத்தில் இருந்து வரப் போறது….அதுக்கு நீங்க ஜட்ஜா வரணும்….அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன். ஸ்பான்சர் ப்ரோக்ராம் இது..யாரு தெரியுமா? என்று சொல்லி நிறுத்தினான்

ம்ம்…நோ கெஸ்……நீங்களே சொல்லுங்கோ…என்றாள் மாதவி…மனசுக்குள் தேடல் படலத்தோடு…யாராயிருக்கும்?

ஏ வி ஆர் தங்க மாளிகை…..இப்போ ப்ராண்ட் அம்பாசடர் காஜல் அகர்வால்ன்னு நினைக்கறேன்..கொஞ்சம் பொறுங்கோ..அடுத்து மாதவி தான்….! அதுக்கு நான் காரண்டி…என்று சிரிக்கிறான்.

சொன்னதும் உட்கார்ந்திருந்த மாதவிக்கு இறக்கை முளைக்கிறது…..கடலும் வானமும் மலையும் , மழையும் ஒன்றாகக் காட்சி தர தான் இருப்பது எங்கே என்று புரியாத சந்தோஷ மயக்கத்தில் பறக்கிறாள். அவளுக்குள் நான் பைரவியின் தோழி என்ற ஒரே காரணத்துக்காக ரமேஷ் எவ்வள வெல்லாம் செய்கிறார். பைரவி நீ கொடுத்து வெச்சவள்டீ என்று யோசித்த படியே…இந்த விஷயம் பைரவிக்குத் தெரியுமா?

என்ன…நம்ப முடியலையா? இல்லை கனவா….? என்று கனவைக் கலைத்த ரமேஷ்….உங்களுக்கு சம்மதமாயிருந்தால் ஒரு அக்ரீமெண்ட் போடணும்.. .இதெல்லாம் பார்மாலிட்டி தான்…உனக்கு…உங்களுக்கு என்று நிறுத்தவும்.

பரவால்ல …பரவால்ல …. நீங்க என்னை வா…போ என்றே அழைக்கலாம்.. .என்று பத்துப் படி தாவி இறங்கி வந்தாள் மாதவி.

முயலுக்குப் போட்ட வலையில் கலைமான் சிக்கிக் கொண்டதை எண்ணி மகிழ்வோடு சிரித்தான் ரமேஷ். இந்த வானவில்லில் பூட்டிய அம்பில் நான் வெச்ச குறிக்கு தப்பாத மானே இல்லை. மாதவி என்னமோ ரொம்ப ஸ்பெஷலா நினைச்சேன்….ஒரே ப்ரோக்ராம்மில் சிக்கிகிட்டா. ஆனால்… எனக்கு மாதவி ரொம்ப ஸ்பெஷல் தான். மனசுக்குள் நினைத்த படியே அவளையே பார்க்கிறான்.

அப்போது மாதவியின் கைப்பையிலிருந்த கைபேசி அழைத்தது….ஒன் செகண்ட் என்று ரமேஷிடம் மன்னிப்புக் கேட்கும் தொனியில்
சொல்லியபடியே கைபேசியை கையில் எடுத்து யாரென்று பார்க்கிறாள்….”பைரவி…காலிங்….” என்று மின்னிக் கொண்டிருந்தது.

எடுப்பதா…? வேண்டாமா ? என்ற யோசனையில் தயங்கினாள் மாதவி.

(தொடரும்)

Series Navigationதிரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகுழந்தை நட்சத்திரம் … ! .
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *