எழுத்துலக வேந்தர் இளம்பாரதி

This entry is part 8 of 27 in the series 23 டிசம்பர் 2012

சந்திப்பு:ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர் பற்றிய விபரம்:
[Raaja Rudra is the pen name of Prof. Rudra.Tulasidas (1933- ****). A polyglot, he translates into Tamil and English from various Indian languages. He has several published volumes of translations. Recipient of the Sahithya Akademi Award for translating Telugu Poems into Tamil. He is also called as ILambharathi, a well known name in the world of Tamil Poetry.]

நான்கு வருடங்கள் முன்பு எனக்குள் எழுந்த ஏழாம் அறிவின் உந்துதலால் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பாண்டிச்சேரியில் கிடைத்தது. இந்த முறை என் அன்புக்கும், மதிப்புக்கும் உரிய சீதாம்மா அவர்கள் “நீ பக்கத்து ஊர் தில்லையில்தானே இருக்கிறாய், என் அண்ணன் துளசிதாஸ், அவரைப் பாண்டிச்சேரியில் சந்தித்து ஆசி பெற்றுக்கொள் ” என்று சொன்னதிலிருந்து அந்த சமயத்திற்காக காத்திருந்தேன். எந்த ஒரு விஷயமும் நான் இன்று முடித்து விடுவேன் என்று மனத்தால் நினைத்தாலும் என்னால் செய்துவிட முடியாது. அந்த நேரம் வரும்போது தான் தானாக அந்தக் காரியம் முடியும்.அது வரை பொறுமை காக்க வேண்டும்.

முதலில் சீதாம்மா அவரது தொலைபேசி எண்ணும் , முகவரியையும் அனுப்பித் தந்தார்கள்…அதன் பிறகு நேரம் பார்த்துக் காத்திருந்தேன். பெரிய எழுத்தாளர்…நேரத்தின் அருமை புரிந்தவர். முதலில் அவரிடம் கேட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று தயக்கத்துடன் காத்திருந்தேன். அதுவே பல நாட்கள் கடந்து விட்டது. சென்ற வாரம் அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னதும். ‘என்னிடமும் சீத்தாம்மா சொன்னார்கள்.. அவசியம் வாருங்கள்” என்று ஒப்புதல் அளித்தார். மிகுந்த மகிழ்வோடு அடுத்த நாளே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறுநாள் வெள்ளிகிழமை மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு..நான் பாண்டி வந்திருக்கிறேன்….. தங்களைச் சந்திக்க வரலாமா? என்று கேட்டதும்…தனது முகவரியும், எப்படி வரவேண்டும் என்று பாதையும் எளிமையாகச் சொல்லி வரச்சொன்னார்.

அடுத்த அரை மணி நேரத்தில் நான் கிளம்பியதும் என் சகோதரியின் பெண் காயத்ரியும் என்னோடு கூட வருவேன் என்று அடம் பிடிக்க, வேறு வழி யில்லாமல் அழைத்துச் சென்றேன். நேராக அவரது வீட்டின் முன்பு இறங்குகையில்…அவரது வீட்டின் வெளியில் காத்து நின்றார் எளிமையான தோற்றத்தில்.

நான் அதீத கற்பனையில் “பெரிய எழுத்தாளரை சந்திக்கப் போகும் பயத்தில்” இருந்தேன். தானாடாவிட்டாலும் தன தசையாடும்..என்பது போல் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருந்தது நிஜம். ஆனால் அதைத் தூக்கிப் போடும் விதமாக அவர் என்னை வரவேற்ற விதம் , சௌஜன்யமாக இருந்தது..என் மனசுக்குள் நிற்கும் மாணவி குறிப்பெடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

உள்ளே சென்று அமர்ந்ததும், சற்று இறுக்கம் தளர்வது போல உணர்ந்தேன். பிரம்மாண்டமான வீடு, மிகவும் எளிமையாக இருந்தது அவரது மனம் போல. ஆரம்ப உபசரிப்புகள், வீட்டில் உள்ளவர்களின் அறிமுகங்கள் முடிந்ததும்…. காயத்ரியுடன் அன்பாகப் பேசிகொண்டிருந்தார்…குழந்தையோடு குழந்தையாக..!

அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு நளினப் பூனைக் குட்டிகளைக் கண்ட மாத்திரத்தில் அவளும் அத்தோடு நட்போடு விளையாட உற்சாகமாகக் கிளம்பிவிட்டாள்.

இத்தனை நாட்கள் என்னை ஏன் இங்கு அழைச்சிட்டு வரலை…..என்று கோபம் வேறு அவளுக்கு. நானே இப்போ தான் முதல் தடவை இங்கு வந்திருக்கேன்.. இதுல நீ வேற.? இப்போல்லாம் சிறியவர்களின் வேகத்துக்குப் போட்டி போட்டு பெரியவர்களால் சமாளிக்க முடியலை…அத்தனை ஆர்வம் குழந்தைகளிடம்.

அவரது வீட்டிலேயே ஒரு பக்கத்தில் தனியாக ஒரு பெரிய அச்சகம் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு இருந்த அவரது உறவினருக்கும் என்னை அறிமகம் செய்து வைத்து விட்டு. மாடிக்கு அழைத்துச் சென்றார்.

“இது என் தனி அறை.” பூட்டிய அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றதும் வரவேற்றன வித விதமான புத்தகங்கள். சோபா செட், பெரிய டேபிள், அலமாரி எங்கும் புத்தகங்களின் அணிவகுப்பு.

நாங்கள் அமர்வதற்காக சுத்தமாக இருந்த சோபா எதிரெதிராக தனக்குண்டான புத்தகத்தை மற்றொரு சோபாவுக்கு இரவல் தந்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன். மேஜை மீது தயாராக வைத்திருந்த அவர் எழுதிய புத்தகங்கைளிருந்து மூன்று புத்தகங்களை ஏற்கனவே கைழுதிட்டு வைத்திருந்தமையால் எடுத்துக் கொடுத்தார். “ராஜ ருத்ரா”, “இளம்பாரதி”, ‘ருத்ர.துளசிதாஸ்’ என்னும் புனைப் பெயர்களில் படைப்புகள் இருக்கும் என்றும் சொன்னார். மிக்க நன்றியோடு வாங்கிக் கொண்டேன் .

அதே சமயம் ஒரு மாதப் பத்திரிகையில் ஒரு கதையைக் காண்பித்து இது நீங்கள் எழுதியதா..? இதில் உங்கள் பெயர் இருக்கிறதே..என்றார். பார்த்துவிட்டு இல்லையே என்றேன். அதில் இனிசியல் கூட எஸ்.ஜெயஸ்ரீ என்று இருந்ததைப் பார்த்ததும் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. இந்தப் பெயருக்கு எழுதும் ராசி இருக்கு போலிருக்கு என்று.

அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்த என்னிடம்…என்ன…புத்தகங்களெல்லாம் இப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா ? என்று கேட்டார்.

ஒரு படிப்பாளியின், எழுத்தாளரின் அறை எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது என்றேன்.

நீங்கள் தான் கொஞ்சம் மரியாதையாச் சொல்கிறீர்கள்.என்று சிரித்தார்.. மேலும்….”மாணிக்கக் குப்பைகள் ” என்று இதைத்தான் பாரதியார் சொல்லுவார்… என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார்.

நிஜம் தான் என்றேன்.

பெரிய கண்ணாடி அலமாரி.. அதில் அடுக்கு அடுக்காக புத்தகங்களின் ராஜாங்கம். அதைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தவளிடம்…அவர் சொன்னதை கேட்டதும் உள்ளுக்குளிருந்த எனது மாணவி மயக்கம் போட்டு விட்டாள்….பாவம்.

ஒவ்வொரு புத்தகமும் எனக்குள் எத்தனை விஷயங்கள் இருக்கு உனக்குத் தெரியுமா? என்று போட்டி போட்டுக் கொண்டு கியூவில் நிற்பது போலிருந்தது எனக்கு.

அவர் சொன்னது இது தான். மேலடுக்கில் தனது ஆங்கிலப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள்.அடுத்தது ஹிந்தி மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் கவிதைத் தொகுப்புகள், அதற்கும் அடுத்தது கன்னட மொழிபெயர்ப்புகள், புதினங்கள், அதையும் அடுத்து மலையாள மொழியாக்க புத்தகங்கள், அதனினும் அடுத்து தெலுங்கு மொழிபெயர்ப்பு புத்தகங்கள், கவிதைகள். அதன் அருகில் தமிழ்ப் படைப்புகள் என் மாநிலம் வாரியாக புத்தகப் பிரஜைகள். அதிலும் ராஜா,ராணி,மந்திரி, தளபதி, சேனாதிபதி, சிப்பாய்கள் , காவலர்கள் என்று ஒரு ராஜாங்கம் நடப்பது தெரிந்தது.

அவரை அவரது புத்தகங்கள் அன்பாக அரவணைத்து இருப்பது போல ஒரு காட்சி. நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்..புத்தகங்கள் வேடிக்கை பார்த்த மாதிரி இருந்தது எனக்குள்.

இதைத் தவிர சாகித்ய அகாடமிக்காக குழந்தைகள் பாட புத்தகங்கள் தற்போது ஹிந்தியில் அவர் எழுதிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சொன்னார். எழுத்துக்கு வயதே இல்லை…என்பதும எழுத்தாளருக்கு வயதே ஏறாது என்பதும் அவரைப் பார்த்ததும் கண்கூடாகத் தெரிந்தது.

அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாக அவரோடு கை கொடுத்த வண்ணம் அவரது புகழ் கோடியை ஓங்கிப் பிடித்திருப்பது புரிந்ததும் என் மாணவி உள்ளம் மயக்கம் போட்டது நியாயமாகப் பட்டது எனக்குள்.

இத்தனை மொழிகளில் தங்களது படைப்புகளா…? என்று என் முகம் ஆச்சரியத்தில் விரிய , அவரோ “எனக்கு ஒரே ஒரு வருத்தம்… “பாண்டிச் சேரியில் இருந்து கொண்டு எனக்கு இன்னும் பிரெஞ்சு தெரியாது..” எப்படியும் அதைக் கற்றுக் கொண்டு பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் சில ஆக்கங்கள் படைக்க வேண்டும் ” கண்டிப்பாகச் செய்வேன் என்றார். அவரின் உறுதி என்னக்குள்ளும் எழுந்தது.

என்னைப் பற்றி விசாரித்தார். நான் பிறந்து வளர்ந்த மதுரை, திருமணமாகி சென்றது செகந்திராபாத், தற்போது இருப்பது சிதம்பரம் என்று கூறினேன் .

நானும் மதுரையில் தான் இருந்தேன்…பின்பு செகந்திராபாத் சென்றேன்…. அங்கும் ஒரு வருடம் இருந்திருக்கிறேன்..அங்கு தான் தெலுங்கு எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன் என்றார். கூடவே அவரது தாய் மொழி தெலுங்கு…தமிழில் மிகவும் சரளமாகப் பேசுகிறார். என்னிடமும் கேட்டார் தெலுங்கு பேச வருகிறது உங்களுக்கு, எழுதவும் கற்றுக் கொள்ளுங்கள் என்றார். மேலும்.. “இந்த சந்திப்பின் பலனாக” நீங்கள் கண்டிப்பாக தெலுங்கு எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அன்புக் கட்டளை விடுத்தார்.

ஆந்திராவில் ஒரு வருடம் இருந்தவர் தெலுங்கு எழுதக் கற்றுக் கொண்டு அதில் இருந்து நல்ல படைப்புகளைத் தமிழுக்கு அள்ளித் தந்திருக்கிறார். நான் இருபத்தி இரண்டு வருடங்கள் அங்கு இருந்தும் சுந்தரத் தெலுங்கை….விவேக் ஸ்டைலில் “ஜிலேபியைப் பிச்சிப் போட்டுருக்காங்க “ன்னு கேலி செய்து காலத்தை வீணடித்தேன் என்பது புரிந்தது.

என்னால் இனிமேல் தெலுங்கு படிக்க முடியுமா? என்ற என் சந்தேக மனதை அவரது “பிரெஞ்சு படித்து எழுதுவேன் ” என்ற வார்த்தை உள்ளுக்குள் கேலி செய்தது.

இணையம் பற்றியும் ‘திண்ணை’ இணைய வார இதழ் பற்றியும் வாழ்வியல் கட்டுரைகள் பற்றியும், திருமதி.சீதாம்மாவைப் பற்றியும், தெலுங்கு மொழியி லிருந்து தமிழாக்கம் செய்யும் திருமதி.கௌரி கிருபானந்தனின் தொடர் கதைகள் பற்றியும், திருமதி.பவள சங்கரியின் தொடர் கதைகள் பற்றியும் திரு.ஜெயபாரதன் அவர்கள் எழுதும் பல கவிதைகள், விண்வெளிக் கட்டுரைகள், நாடகங்கள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.

திரு.ஜெயபாரதன் அவர்கள் எழுதிய ‘சீதாயணம்’ நாடகம் பற்றிச் சொன்ன போது, அவரும் திரு.சேதுபதி எழுதிய ‘சீதாயணம்’ கவிதை நடையில் எழுதிய புத்தகத்தை எடுத்துக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்.

திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களின் ‘சீதாயணம்’ படிக்க வேண்டும். என்று தனது ஆவலைச் சொன்னார். வல்லமையில் எழுதும் வையவன் அவர்கள் தான் சீதாயணம் புத்தகம் வெளியிட்டார்கள். அவரும் எழுத்தாளர் தான், மேலும் ஜோதிர்லதா கிரிஜாம்மா அவர்களும் திண்ணையில் எழுதுகிறார்கள்.. என்று சொன்னபோது,

அப்படியா, இவர்களெல்லோரும் எனது சம கால எழுத்தாளர்கள் என்று பெருமையாகச் சொன்னார்.

அதற்குள் பக்கத்து போர்ஷனில் இருந்து வீடு பூட்டியிருக்கு தாத்தா… எல்லாரும் எங்க போயிருக்காங்க என்று கேட்டுக் கொண்டு அறை வாசலில் நின்றான் சிறுவன்.

அவன் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பாசத்தோடு.

இத்தனைக்கும் அவரது வீட்டில் இணைய இணைப்பு இல்லை…என்று தெரிந்ததும்…ஆச்சரியமாய் இருக்கிறது என்றேன்….” இணையம் இதயத்தையும் நேரத்தையும் இழுத்து விடும்…” என்று சொன்னதும்… உண்மை… உண்மை என்று மயக்கதிலிருந்து தெளிந்து எழுந்தாள் என் மாணவி.

சீத்தாம்மா நான் தாயாகப் போற்றும் என் அம்மா. அவர்கள் சொன்னதால் தான் உங்களிடம் ஆசி வாங்கவென்று நான் வந்தேன் என்றேன்….!

“ஆமாம்…கருத்துக்கள் தாங்கியவர்களை அம்மா என்று சொல்லலாம். சீத்தா எனக்கு பெண் என்பேன்..அப்போ நீ என்னோட பேத்தி” என்றார்.

மனதுக்கு அன்றைய சந்திப்பு நிறைவாக இருந்தது. நிறைய விஷயங்கள், பல வருடங்கள் பின்னோக்கியும், சென்றது பேச்சு..

“அப்போ…உங்களோட குடோனில் நிறைய விஷயங்கள் இருக்கு. எழுதுவதற்கு” என்று சொன்னார்.

“எழுதுவதை விடாதீர்கள்” என்று ஆசி வழங்கினார்.

நான் நான்கு வருடங்கள் முன்பு எழுத்தாளர் திரு.பாலகுமாரன், அவர்களை இங்கே பாண்டியில் எதிர்பாராமல் சந்தித்தேன் அவரும் இதைத் தான் சொன்னார் என்று நினைவு கூர்ந்தேன். அவர் நல்ல நண்பர் என்று சொல்லிக் கொண்டார்.

அவரது படைப்புகள் கோபுரமாக உயர்ந்தாலும் அவர் மிகவும் எளிமையாக யதார்த்தமாக தனது மணியான நேரத்தைப் பகிர்ந்து கொண்டார். உயர்ந்த எழுத்தாளர், இலக்கிய சிந்தனையாளர், பல அறிய விஷயங்களைச் சொல்லி, நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார்.ஒரு பேனாவுக்குள் இருக்கும் பொறுப்பும், பெருமையும், புகழும் கண் முன்னே கண்ட திருப்தி எனக்கு.

அவரது வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் வாழை மரங்கள் , தென்னை மரங்கள் நடுவே ஒரு பெரிய சிமென்டால் உட்காரும் திண்ணையைக் காண்பித்து,

“இந்த இடத்தில் தான் எத்தனை பெரிய பெரிய எழுத்தாளர்கள் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடம்….நேரம் போவதே தெரியாமல் டிஸ்கஷன் செய்வோம்.. என்றார். அந்த இடத்தைப் பார்த்த எனக்குள் பொங்கும் அதிர்வலைகள் ஏற்பட்டன. விடை பெற்றுக் கிளம்பும்போது தோட்டத்துப் பழங்கள் என்று ஒரு பை நிறைய பழங்கள் தந்து விடையளித்தார்.

கண்டிப்பாக சீத்தாமாவிடம் சொல்லுங்கள்..அடிக்கடி வாருங்கள் என்று சொல்லி வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

வீடு வந்து சேரும் வரையில் கூட மனத்தில் தாக்கம், எழுத்தின் மேல் ஆர்வம் என்னுள் எழுந்தது.

எதையும் சிறிதும் பெரிது படுத்தாமல், எமக்குத் தொழில்…. எழுதுவது எழுதுவது…எழுதுவது….ஒன்றே ! என்று எழுதுகோலைச் செங்கோலாக்கி எழுத்து ராஜ்ஜியத்தை எழுத்தாளர் இளம்பாரதி அவர்கள் ஆண்டு வருவது புரிந்து கொண்டபோது…”தனக்குக் கிடைத்த வாழ் நாட்களை மிகவும் அர்த்தமுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பலரில் இவரும் ஒருவராய் இருக்கிறார் ” என்று என் மாணவி உள்ளிருந்து பேசினாள்.

இந்த இனிய அனுபவத்தை நான் அடையக் காரணமாயிருந்த அன்பு சீதாம்மாவிற்கு எனது உளங்கனிந்த நன்றியை இத்தோடு சமர்ப்பிக்கிறேன்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. பேரெழுத்தாளர் இளம்பாரதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த மகிழ்ச்சி பார்த்த பின்னும் பல நாட்கள். நீடித்தது.

இந்த சந்திப்பை இணையத்தில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் திண்ணை வாசகருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

============================================================

Series Navigationசாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)நெத்திலி மீன்களும் சுறாக்களும்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    seethaalakshmi says:

    அண்ணன் ருத்ர துளசிதாஸும் நானும் வாடிப்பட்டியில் வேலை பார்த்தோம். சிறுவயது முதல் ஏற்கனவே ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். ஆனால் பத்திரிகை உலகில் நான் நுழந்த்தற்கு இவர்தான் காரணம். அதுமட்டுமல்ல எனக்கும் அருள்சுடர் அவர்களுக்கும் மரபுக் கவித எழ்தக் கற்றூக் கொடுத்த ஆசானும் இவரே. நாங்கள் ஆறு பேர்கள் வாடிப்பட்டி வட்ட்த்தில் இருந்த எழுதாளர்கள். எங்களீல் சீனியர் திரு. சோம மகாதேவன். நாங்கள் தேனாறு என்ற கையெழுத்து பத்திரிகை ஒன்றையும் வைத்திருந்தோம். மதுரை வட்டம் என்றால் மறைந்த திரு நா.பார்த்தசாரதி அவர்களும் எங்களில் ஒருவர்.. அவர் எழுதிய குறிஞ்சி மலரில் வரும் பெயர்கள், பூரணியும் அரவிந்தனும் அருள் சுட்ரின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். எங்களில் ஆன்ந்த விகடனில் அதிகமாக எழுதியவர் அருள்சுடர். ஒரு முறை ஒரே வாரத்தில் அவருடைய இரு கதைகள் வந்தன. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டோம். நா.பா அவர்கள் அப்பொழுது பதிரிகயில் உன்னத நிலைக்கு வந்து கொண்டிருந்தாலும் அருள்சுடரின் கதையின் தலைப்பு “பஞ்சும் நெருப்பும்” எங்கள் புத்தகத்தின் தலைப்பு. அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி நேற்று வந்தது வாடிப்பட்டி வேலையை விட்டு கல்லூரி வேலைக்குச் சென்றார் துளசி அண்ணன். அங்கு போகவிட்டு நிறைய எழுத ஆரம்பித்துவிட்டார். எங்கு சென்றாலும் என்னை எழுத்த் தூண்டிக் கொண்டே இருப்பார். எங்கள் குழுவில் தொடர்ந்து எழுதி வருகின்றவர் அவர்மட்டும்தான். இன்று இணைய இதழ்களில் நான் எழுதுவதற்குக் கிடைக்கும் சக்தி அவரின் அன்பும் தூண்டுதலும் காரணம். அவரை “காந்தி என்று நானும் என் அம்மாவும் பேசிக் கொள்வோம்.
    இன்டெர்னெட் வைத்துக் கொண்டால் கவனம் மாறும், நேரம் வீணாகும் என்று அவரது கணினியில் அதனை வைத்துக் கொள்ளவில்லை. அவர் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நிறைய பாராட்டுதல்கள் வருகின்றன. என் அண்ணான் இன்னும் நீண்ட காலம் இருந்து எழுதட்டும். இதுவே என் பிரார்த்தனை. மகள் ஜெயஶ்ரீ வளர என் வாழ்த்துக்கள்
    சீதாம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *