கவிதைகள்

This entry is part 15 of 26 in the series 30 டிசம்பர் 2012

இடப்பெயர்ச்சி

கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன்
குளிர்க்கண்ணாடிகள் மூலம்
வன்முறைகள் நிரம்பிய உலகில்
இரக்கம் பறவையின் இறகுகளாய்
உடலை மென்மையாய் வருடியது
கரங்களை நனைத்த தண்ணீர்
குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது
பீழை தான் வாழ்வு
சுமக்கும் பாரத்தை
கைத்தாங்கலாக இறக்கி வைப்பார்
யாருமில்லை
வியர்வை நெடி
விலகி ஓடத் தோன்றும்
நெருங்கி வருபவர்களையும்
தலையை அனுசரணையாய்
கோதுபவர்களையும்
அவயங்களை
காமத்தின் வடிகாலாக
கருதுபவர்கள்
ஸ்படிக நீரில்
சகதியைத் தேடுவர்
கருவறையின்
புனிதத்தை கெடுத்தவர்
உறவுக்கு அவப்பெயர்
கொடுத்தவர்
சத்யநெறி குன்றினாலும்
நீருக்குள் பூக்காது நீர்ப்பூ.

லயம்

உதிரத்தை பரிசோதனைச் சாலையில்
சோதிக்கிறார்கள்
எவரிடத்திலிருந்து எழும்பியது
புரட்சி என்று
விடுதலை வேண்டுகிறது
உயிர்
இயற்கை
முள்கிரீடம் தரிக்க
தேவகுமாரனைத் தேடுகிறது
சுவாசத்தை இழுப்பதற்கும்
விடுவதற்கும் இடையே
ஓய்வு கொள்கிறது தேகம்
மீட்டாத வீணை
லயம் தவறிய மூச்சு
இங்கே சாஸ்வதம் எதுவுமில்லை
கங்கையில் கலந்தாலும்
காவிரியில் மிதந்தாலும்
இகம் பரம் மறந்து
உயிர் பயணிக்கிறது
வாழும் முன்பும் பின்பும்
சூன்யத்தில் நிலை கொள்ள
எதுவும் இங்கே நிலையில்லை
என்று காற்றில் பிணவாடை
அடிக்கிறது.

————–

யாரோ சில பேர்

இப்போது தெரிந்துவிட்டது
கையில் விலங்கில்லை
ஆனால் கைதி
எல்லோருடைய முகங்களிலும்
வெவ்வேறு முகமூடி
கடல் உவப்பு
கலக்கும் நதியோ கசப்பு
மினுமினுக்கும் ஜரிகைக்குள்
சிரங்கும்,சீழ் வடியும்
நினைவுச் சுழல்
தேர்ந்தெடுத்தது தவறானால்
தண்டனை மட்டுமே
தீர்வு
கூர் வைரக்கற்கள்
கிழிக்கும் போது
குருதி வடியும்
நினைவு நீரோடை
கரையைப் புணரும் அலை
குற்றப் பின்னணி
கற்பைச் சூறையாடும்
சமூகத்தின் பாதுகாப்பில்
சில சாத்தான்கள்
அரிதாரம் கலைந்தது
அரசாங்கத்தின் நிஜ
நரிமுகம் தெரிந்தது
ஓநாயின் பாதுகாப்பில்
மந்தை ஆடுகள்
குடிமக்கள்
நிராதரவாய்
குடியேற்றம்
பேரலையின்
சிறுபொறியாய்
அரியணைக்குத்
துளிக் கூட
அக்கறையில்லை
தூரத்தில் பரிதி
உதிப்பதாயில்லை.

———————-

ஈரம்

ஜில்லிட்டுவிட்டது உடல்
சுவாசம் கூட நின்றுவிட்டது
உள்ளூர் தொலைக்காட்சி சேனலில்
இயற்கை எய்தினார் என்று
விளம்பரம் கொடுக்க
வாரிசுமில்லை அவருக்கு
தூக்க கூட நாலு பேர்
இல்லை என்பதால்
சடலத்துக்கு
வாடகை இல்லா
அமரர் ஊதி
அவர் இறந்ததற்கு
துக்கப்பட யாருமில்லை
சிதையில் நாயொன்று
விழுந்து எரிந்தது
ஏனென்று தெரியவில்லை.

————————————–

அஸ்தி

எப்போதும் போல்
வானம்
முற்பகலிலேயே
வெக்கை தாங்கமுடியவில்லை
எந்த வெளிச்சத்தைப்
பார்த்தாலும்
கண் கூசுகிறது
பூதக் கண்ணாடி
வைத்துத் தான்
நாவல் படிக்கிறேன்
உப்பு, உறைப்பின்றி
ஆகாரம்
ருசிக்கவே இல்லை
மாத்திரைகள்
எனது வாழ்வின்
சாபக்கேடு
ஃபிராய்டு போல்
எனக்கும்
மரணம் என்று சொன்னால்
மயக்கம் வந்துவிடுகிறது
சகலரும் இறுதியில்
சாம்பல் தான்
என்று உணரத்தான்
திருநீறா?

————————————–

அறுபது

பெண் ஆண்
சம்மந்தத்தைத் தவிர
வேறு ஒன்றுமில்லை
பிறர் படுக்கையில்
புலம்பும் போதும்
மரணத்தின் நிழல்
கவியும் போதும்
உடல் வியர்க்க
மனம் தமக்கும் சேர்த்து
இரக்கப்படுகிறது
நியாயத்தீர்ப்பில்
எண்ணத்தைக் கூட
எடை பார்க்கும் போது
ஒருவனுக்கும் இங்கு
சுவர்க்கமில்லை
காரியம் ஆக
கால் பிடித்தவர்கள்
பாடையின் முன்பு
பூ தூவுவார்கள்
எத்தனுக்கும்
பித்தனுக்கும்
அஸ்தி கரைப்பது
எந்த நதியிலோ
ஆகாரம் தான்
கடவுளென்றால்
இன்னும் எத்தனை
அரிசியில்
எந்தன் பெயரோ.

mathi2134@gmail.com

Series Navigationசங்க இலக்கியங்களில் அலர்நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *