உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3

This entry is part 2 of 26 in the series 30 டிசம்பர் 2012

கண்ணன் ராமசாமி

விமர்சகர்களின் முக்கிய குற்றச் சாட்டு பாசிசத்தை பற்றியது. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள வெறுப்பில், இவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்று அடிக்கடி சொல்கிறார் என்ற ஒரு குற்றச் சாட்டு நாயகன், இந்தியன், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களை பார்த்த பிறகு பலரது மனங்களில் எழுகின்றது.
இதே விமர்சனத்தை கமலின் முன்பு உன்னை போல் ஒருவன் டாக்       
ஷோவில் ஒரு பெரியவர் முன்வைத்தார். மும்பை சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப் பட்ட தன்னால், தீவிரவாதத்திற்கு தீர்வு தீவிரவாதம் தான் என்று நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொன்னார். ஒரு இளைஞர், ‘பத்து வருடங்களுக்குப் பிறகு, கமல் இப்படி(காமன் மேன்) இருப்பாரா?’ என்று கேட்டார்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் கமல் என்ன பதில் அளித்தார் என்பதை படித்துவிட்டு குற்றச் சாட்டை விரிவாக பார்க்கலாம்.
‘தீவிர வாதத்திற்கு தீர்வு தீவிரவாதம் தான் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவன் தான் நான். இந்த படத்துடைய கருத்தை பல பேர் அப்படி புரிஞ்சிட்டு இருக்காங்க. வேலு நாயாக்கராக நடித்த போது, ‘எல்லோரும் சமக்ளர் ஆக வேண்டுமா?’ என்று யாரும் என்னை கேட்கவில்லை. நான் சொல்ல வர்றது ஒரு பாத்திரத்தின் கோபம். அதை முழு மெசேஜ்-ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இது மாதிரி ஆகக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. என்ன மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வரணும்-னா ரொம்ப கோவமானா தான் வருவாங்க. இல்ல-ன்னா நடக்குற படி நடக்கட்டும்; நம்ம மாறுதல்களை ஓட்டுப் போட்டு ஏற்படுத்திக் கொண்டிருப்போம்-னு நினைப்பாங்க. நாங்களே வரிஞ்சு கட்டிக்கிட்டு இறங்கும் போது கையில துப்பாக்கி இருக்க வாய்ப்பு உண்டு! அதை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற அபாயச் சங்கு ஊதும் படம் தான் உன்னை போல் ஒருவன்.
காணொளி இணைப்பு: http://www.youtube.com/watch?v=8s-I54t11F0 (2.21 min, 4.30 min)
இனி விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை பார்க்கலாம்.
ஹே ராம்-ல் வெளிப்படையாகத் தெரிந்த பாசிச எதிர்ப்பை வேண்டும் என்றே கண்டு கொள்ளாமல் விட்ட இவர்கள், இந்தப் படத்தில் இருந்த பாசிச எதிர்ப்பையும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். ஒரு பாத்திரத்தின் கோபத்தை காண்பித்த அதே கமல், நானும், காமன் மேனும் ஒன்றல்ல என்ற கருத்தையும் இந்தப் படத்திலேயே சொல்லி இருக்கிறார். இருந்தாலும், காமன் மேனையும் கமலையும் தனித் தனியாக பார்க்க இவர்களால் முடியவில்லை.
‘எந்த வித குறுக்கீடும் இல்லாத அதிகாரத்தை’ கோரும் மோகன்லால், அரசியலில் நுழைய விரும்பும் நடிகர், முதலமைச்சர், பப்பட் ஷோ, இவை எல்லாம் தான் படத்தின் அடிப்படை கருவாம். ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக சித்தரிக்கப் படும் இவர்களை முன்னிலை படுத்துவதால், பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்தும் ஒரு படமாக இது இருக்கிறதாம்.
இது உண்மை என்றால், மோகன் லாலுக்கும், பாசிசத்தை கொண்டு காமன் மேன்-களை அடிமையாக வைத்திருக்கும் அரசியல் அமைப்பிற்கும் எதிராக இந்த காமன் மேன்(கமல்) ஏன் எழுந்து வரவேண்டும்? பாசிசத்தை வலியுறுத்தும் காமன் மேன், கீழ் கண்ட வசனங்களை ஏன் பேச வேண்டும்?

‘தன்னையும், தன்னுடைய உடமையையும் பாதுகாக்க ஓடோடி வருவான் ஒருவன்; அவனையே நீங்க குற்ற வாளி மாதிரி நடத்துவீங்க. ஞாபகம் இருக்கா? அந்த ஒருத்தன் தான் நான். நீங்க வெத்து வெட்டு-ன்னு நெனச்சிட்டு இருக்குற காமன் மேன்’
‘ஓட்டுப் போடும் போது கையேந்தி எங்களை தேடி வரும் அவர்கள், இப்போது நான் கூப்பிடும் போது மட்டும் ஏன் வர மாட்டேன் என்கிறார்கள்?’ (முதல்வரை பேச்சு வார்த்தைக்கு அழைத்த காட்சியில் பேசிய வசனம்)

‘என்னோட பேரு என்ன-ன்னு கேட்டீங்க இல்ல? இப்போ குண்டு வெடிச்சு செத்து போனானே கரம் சந்த் அவனுடைய பேரு தான் எனக்கும்-னு வெச்சுக்குங்க. உங்க வாசலுக்கு எதிரே ஒரு கரம்சந்த்(காந்தி) கல்லா… நின்னுட்டு இருக்காரு. அவருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? தெரியாது..நான் சொல்றேன்..தீவிரவாதத்துக்கு எதிரான ஒரே ஆயுதம் தீவிர வாதம் தான்!”
“நானே ஒரு காமன் மேன் தான் என்று தெரிந்துவிட்ட பிறகு உங்களுடைய குரலில் அதிகார திமிர் தெரியுது. இவன் டெரரிஸ்ட் எல்லாம் கிடையாது. ஈசியா புடிசிடலாம். Is that not what you think?” (போலீஸ் கிட்ட மாட்டினா சாவு நிச்சயம் என்கிற பயம் நெனப்புல இருக்கட்டும் என்று பாசிசம் பேசிய மோகன்லாலுக்கு எதிரான வசனம்)
இந்த வசனங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன? ஜனநாயகத்தை மறந்துவிட்டு போலீஸ் காரரும், அதிகார வர்க்கமும், காமன் மேன்-ஐ அடிமை போல் நடத்துவது ஏன் என்று கேள்வி கேட்கிறார் இந்த காமன் மேன்! அதாவது விமர்சகர்கள் கேட்கும் அதே கேள்வியைத் தான் இவரும் கேட்கிறார்.
ஓட்டுப் போட்டு ஜனநாயகத்தில் மாற்றத்தை உண்டு செய்ய காத்திருந்த காமன் மேன், ஓட்டர்ஸ் லிஸ்ட்-ல் பெயர் இல்லை என்று தெரிந்ததும் கோபம் கொள்வதும் உண்மை. சட்டம் தன் கடமையை செய்யவில்லை என்று முடிவெடுத்து, தீவிரவாதிகளை கொல்வதும் உண்மை. அதே நேரம், கமிஷனர் அலுவகத்தின் வெளியே கல்லாக மட்டும் நின்று கொண்டிருக்கும் கரம்சந்த்-ற்கு(காந்தி) பதில் சொல்ல கேட்பதும் உண்மை.
அஹிம்சையை பழகச் சொன்ன காந்திக்கு கொடுக்க வேண்டிய பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. அதனால் தான் நான் தீவிர வாதத்தை கையில் எடுத்திருக்கிறேன் என்பது தான் அவர் சொல்கிறார். இந்த வசனங்களின் மூலம் காமன் மேனின் கோபத்தை காட்டிய அதே கமல், ‘இந்தக் கோபம் மேலும் வளர கூடாது என்றால், உடனே திருந்துங்கள்’ என்று அரசுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறார்.

தீவிரவாதிகளையும், சாதாரண பிட் பாக்கெட்-ஐயும் கூட்டாக கரப்பான் போல் சுட்டுத் தள்ளி, சட்டத்தை பின்னுக்குத் தள்ள நினைத்திருந்தால், போலீஸ் ஸ்டேஷனின் வைத்த குண்டை வெடிக்க விடாமல் செய்ய காமன் மேன் உதவும் காட்சியை ஏன் வைக்க வேண்டும்? அதோடு, அப்பாவிப் பொது மக்கள் புழங்கும் பகுதிகளில், காலிப் பைகளை மட்டும் வைத்துவிட்டு போக அவர் ஏன் நினைக்க வேண்டும்?
இந்தப் படத்தில் பாடல்களே இல்லை என்றாலும், ஆடியோ ட்ராக்-ல் ‘நிலை வருமா?’ என்ற ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாட்டை எழுதியவர் கமல். பாடியவரும் அவரே. அழகுப் பதுமையான சுருதி பாடிய பாடலை பலர் கவனித்திருப்பார்கள். ஆனால், இந்த பாட்டின் வரிகளை கவனித்திருக்க மாட்டார்கள். அந்தப் பாடலிலும் அவர் பாசிசத்தை எதிர்த்திருக்கிறார்.
“நிலை வருமா? உடன் வருமா?
தலைமைகள் வர வரத் திருந்திடுமா?
நின்றே கொல்லும் தெய்வங்களும்,
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே செய்யும் என உணரும்,
நன்றே செய்யும் நிலை வருமா?’

இதற்குப் பின்னும், நாங்கள் படத்தை மேலோட்டமாகத் தான் பார்ப்போம். பாடலை கேட்டு விமர்சனம் செய்ய எங்களுக்கு நேரம் இல்லை. எல்லா வசனங்களையும் உன்னிப்பாக கவனிக்க முடியாது. நாங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவே மாட்டோம் என்று விமர்சகர்கள் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
(தொடரும்)

Series Navigationகமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

3 Comments

 1. Avatar
  தங்கமணி says:

  //தீவிரவாதிகளையும், சாதாரண பிட் பாக்கெட்-ஐயும் கூட்டாக கரப்பான் போல் சுட்டுத் தள்ளி, சட்டத்தை பின்னுக்குத் தள்ள நினைத்திருந்தால், போலீஸ் ஸ்டேஷனின் வைத்த குண்டை வெடிக்க விடாமல் செய்ய காமன் மேன் உதவும் காட்சியை ஏன் வைக்க வேண்டும்? அதோடு, அப்பாவிப் பொது மக்கள் புழங்கும் பகுதிகளில், காலிப் பைகளை மட்டும் வைத்துவிட்டு போக அவர் ஏன் நினைக்க வேண்டும்?//
  ஏனென்றால், இந்தகாட்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த படமே வெட்னஸ்டே படத்திலிருந்து எடுக்கப்பட்டது.
  கமலஹாசனையோ அல்லது திரைக்கதை எழுதியவரையோ விமர்சிக்க வேண்டுமென்றால், வெட்னஸ்டே படத்திலிருந்து எந்த புள்ளிகளில் உன்னைப்போல் ஒருவன் விலகுகிறது என்பதை வைத்துத்தான் விமர்சிக்க வேண்டும்.

 2. Avatar
  கண்ணன் ராமசாமி says:

  அந்த வகையில் கூட கமல் ஹாசனை விமர்சிக்க முடியாது. காரணம், இந்தி படத்தின் முக்கிய கதா பாத்திரம் ஒரு முசுலிம். அவர் முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால் யாராலும் எதிர் கேள்வி கேட்க முடியாது. ஆனால் கமல் என்ற இந்து முசுலிம் தீவிரவாதத்தை எதிர்த்தால், மத வெறி, காழ்ப்புணர்ச்சி என்று பல்வேறு குற்றச் சாட்டுகள் ‘கண்டுபிடிக்க’ படும். அதனால் தன்னுடைய சுய கருத்தை படத்திலும் அவர் கூடுதலாக சுமப்பது தவறென்று கொள்ள முடியாது.

 3. Avatar
  தங்கமணி says:

  //கமல் என்ற இந்து //
  போச்சுடா சாமி. எந்த காலத்தில் கமல் தன்னை ஒரு இந்து என்று கூறிக்கொண்டிருக்கிறார்?

  படத்தில் நசிருத்தீன் ஷா நடித்தாலும், படத்தில் இந்துவா அல்லது முஸ்லீமா என்று சொல்லப்படுவதில்லை. மேலும் அந்த படத்தில் அவர் நடிகர் மட்டுமே. அவரே இயக்கி சூத்ரதாரியாக இருந்து உருவாக்கிய படம் அல்ல.

  ஆனால், கமல் இந்த தமிழ்படுத்தப்பட்ட படத்தின் முக்கிய சூத்ரதாரி.

  அவர் ஒரு நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும் என்னும்போது, ஏன் இந்துவாக தன்னை பார்ப்பார்கள் என்று அஞ்சி கதையை மாற்ற வேண்டும்?

  ஆகவே கதை எந்த வகையைல் கமலாலும், திரைக்கதை எழுதியவராலும் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே விமர்சனம் நடக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *