“காப்பி” கதைகள் பற்றி

This entry is part 10 of 26 in the series 30 டிசம்பர் 2012

 

ஜோதிர்லதா கிரிஜா

 

    திண்ணையில் ஜெயஸ்ரீ ஷங்கரின் கடிதத்தை இன்று படித்தேன். (கடந்த ஒரு வாரமாய்த் திண்ணை படிக்கக் கிடைக்கவில்லை.) ரொம்பவும் குமுறாமல் அடக்கி வாசித்திருக்கும் அவரது பண்பு போற்றுதற்குரியது. எனக்கும் இது போன்று ஓர் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு விந்தையான – நம்பவே முடியாத – அனுபவம் ஆகும்.

 

    பல்லாண்டுகளுக்கு முன்னால், ஒரு பிரபல வார இதழ் குட்டிக்கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்று ஓர் அறிவிப்பை விடுத்தது. “இங்கிலீஷ் தெரியாத இருசம்மா” என்னும் தலைப்பில் நானும் ஒரு குட்டிக் கதையை எழுதி அனுப்பினேன்.  அதை அஞ்சலில் சேர்த்த அதே நாளில் வெளிவந்த அவ்வார இதழில் என் கதையின் மையக் கருத்தைத் தாங்கிய, வேறொருவர் எழுதிய, ஒரு குட்டிக்கதை வெளியாகியிருந்தது. மையக்கருத்து ஒன்றாக இருந்தது கூட வியப்புக்கு உரிய ஒன்றன்று. ஆனால் மூன்றே கதை மாந்தருள் நிகழ்ந்த சம்பவங்களும், கதைக்களமும், உரையாடல்களும் கிட்டத்தட்ட அப்படியே நான் எழுதியிருந்தவற்றை ஒத்திருந்த வியப்பைத்தான் என்னால் தாங்கவே முடியவில்லை.

    உடனே அவ்விதழின் ஆசிரியருக்குக் கீழ்க்கண்டவாறு ஒரு விரைவு அஞ்சல் கடிதத்தை அனுப்பிவைத்தேன்: “… நேற்று நான் அஞ்சலில் அனுப்பிய குட்டிக்கதையின் கருத்துடன் இன்று வெளிவந்த தங்கள் வார இதழில் ஒரு கதை இடம் பெற்றுள்ளது. கதை மாந்தரின் பெயர்கள் மட்டுமே வேறாக உள்ளனவே தவிர, கருத்து, நிகழ்வுகள்,கதைக்களம், உரையாடல்கள் யாவுமே என் கதையுடன் அப்படியே ஒத்துப் போகின்றன! அவ்வியப்பினின்று இன்னும் மீளாத நிலையில், இக் கடிதத்தை எழுதுகிறேன். எனது அக்கதையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் எனக்கு அதை உடனடியாய்த் திருப்பி யனுப்பிவைத்துவிடக் கோருகிறேன்.

சில நாள்கள் கழித்துச் சாவகாசமாய்த் தங்கள் ஆசிரியர் குழு அதைப் பரிசீலனைக்கு எடுத்ததுக் கொண்டால் – அது தங்கள் அலுவலகத்தில் வந்து சேர்ந்த தேதியும் குறிக்கப்படாதிருந்து விட்டால் – தங்கள் வார இதழ்க் கதையையே நான் காப்பியடித்து அனுப்பிவிட்டதாய் என்னைப் பற்றிய தவறான கருத்து எழக்கூடும். எனவே மறு அஞ்சலில் அதைத் திருப்ப வேண்டுகிறேன்….’

    அவர்களும் அதை உடனே திருப்பி யனுப்பிவிட்டார்கள்.  அந்தக் கதையை நானும்  கிழித்துப் போட்டுவிட்டேன். அந்தக் கதை இதுதான் –

    அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் எசமானிகள் இருவர் தங்கள் இருவர் வீடுகளிலும் வேலை செய்யும் பணிப்பெண் தங்கள் வீடுகளில் வேலைக்குச் சேருவதற்கு முன்னால், ஓர் ஆங்கிலோ-இந்தியக் குடும்பத்தில் சில ஆண்டுகள் வேலை செய்ததன் விளைவாக ஆங்கிலம் பேசவும், நன்கு புரிந்துகொள்ளவும் வல்லவள் என்பதை யறியாமல், அவள் அருகில் இருக்கும் போதே அவளைப் பற்றியும் தங்களைப் பற்றியும் பொய்யும் புளுகுமாய் இரு வீடுகளுக்கும் பொதுவான சுற்றுச் சுவரின் இரு புறங்களிலும் நின்றுகொண்டு பேசிக்கொள்ளுகிறார்கள்.  அவர்களது அபாண்டப் பேச்சு முழுவதையும் பொறுமையாய்க் கேட்டு முடித்துவிட்டு, அந்தப் பணிப்பெண், “மேடம்ஸ்!” என்று அவர்களை விளித்து, ஆங்கிலத்திலேயே பதிலடி கொடுத்து இருவர் முகங்களிலும் அசடு வழியச் செய்கிறாள் என்று அந்தக் கதை முடியும்.

 

    சிலர் காப்பியடிப்பதும், அங்கும் இங்குமாய்ச் சில மாற்றங்களைச் செய்துவிட்டு வேறு கதை என்பது போல் தோற்றம் கொடுப்பதும் உண்டுதானென்றாலும், கதைப் போக்கும், உரையாடல்களும், இது காப்பிக்கதை என்று நினைக்கவைக்கும்படியாய் நூறு விழுக்காட்டுடன் அப்படியே பொருந்தும் வண்ணமாகவும் சில கதைகள் அமைந்துவிடும் என்பதை இந்த நிகழ்விலிருந்து நான் புரிந்துகொண்டதைத் திண்ணை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

 

    இந்த எனது அனுபவ வெளிப்பாடு ஜெயஸ்ரீ ஷங்கருக்கு நிச்சயம் ஆறுதல் அளிக்கும்.

 

    நிற்க. அண்மையில் குமுதம் இதழில் யாராலும் காப்பியடிக்கவே முடியாத ஒரு கதையை ராஜேஷ் குமார் சொல்லியிருந்தார். ‘ஒரே வார்த்தையில் ஒரு க்ரைம் கதை சொல்லுங்கள்’ எனும் வேண்டுகோளுக்கு, “ராஜபக்‌ஷே!” என்கிற ஒற்றைச் சொல்லை அவர் பதிலாய்க் கூறியிருந்தார்!

jothigirija@li

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)இரு கவரிமான்கள் – 3
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *