சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா

This entry is part 5 of 26 in the series 30 டிசம்பர் 2012

கபிலவாஸ்து. பின்னிரவு. மன்னர் சுத்தோதனரின் மழைக்கால அரண்மனையின் இருபத்தைந்து அடி உயரமுள்ள பிரதான வாயிற் கதவின் கீழ்ப்பகுதியில் உள்ள ஏழடி அளவிலான சிறிய பகுதிக்கதவு திறந்தது. அந்த அரண்மனை சேவகரின் தலைவன் பின் நடந்து வர அவனுக்கும் முன்னே ஒரு பணியாள் தீப்பந்தந்தத்தை ஏந்தி நடந்தான். அரண்மனைக்கு எதிரே இந்திரனின் பிரம்மாண்டமான கோயில். இருவரும் வெளியே வந்து வலப்புறம் திரும்பி நடந்தனர். மன்னனின் கோடைக்கால அரண்மனை, குளிர்கால அரண்மனை இரண்டும் முன் வாயிலின் வெளியே எரியும் தழல் விளக்கு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தன. அடுத்து சித்தார்த்தரின் மூன்று அரண்மனைகளையும் கடந்து அட்சயப் பொய்கையை நெருங்கினார்கள். பொய்கையின் நீர் கருமையாகத் தெரிந்தது. அதன் வலப்புறம் அந்தணரின் தெருவும், இடப்புறம் அமைச்சர்கள், படைத் தளபதிகளின் மாளிகைகளும் இருந்தன. நடுநாயகமாக பிரதான மந்திரி ஆருத்திரரின் மாளிகை இருந்தது. அந்தத் தெருவுக்கான பெரிய கல்தூணில் எரியும் தீபம் அவரது மாளிகைக்கு எதிரே ஒளிர்ந்து கொண்டிருந்தது. பத்து அடி உயரமுள்ள முன்வாயிற் கதவின் அருகே இரு படை வீரர்கள் உறங்காமல் காவற் காத்து நின்றனர்.

மன்னரின் தலைமைச் சேவகன் எதுவும் பேசாமல் தன் வலது மணிக்கட்டை உயர்த்திக் காட்டினான். தங்கத் தகட்டின் மீது பொறிக்கப் பட்டிருந்த யானை உருவம் தென்பட்டது. வீரர்கள் மரியாதையாக வழி விட்டு கனத்த கதவுகளைத் திறக்க ஒரு மைதானம் அகன்று விரிந்தது. மத்தியில் செங்கற்கள் வேய்ந்த பாதை. இருபுறமும் மரங்களின் நடுவே மூங்கிலும் நீள் சதுர ஓடுகளுமான, கூம்பான கூரை உச்சியில் வெண்கலக் கலசமுள்ள இரண்டு பெரிய வீடுகள் இருந்தன. ஒன்று உறவில்லா விருந்தினர்களுக்கும். மற்றொன்று பார்வையாளர்களுக்கு. இரண்டு வீடுகளும் இருளில் நிழலுருவாய் நின்றிருந்தன. நடை முடிவில் படிக்கட்டுகளில் ஏறும் வரை வரிசையாய் சீராக எரிந்த தீப்பந்தங்களின் முடிவில் ஒரு சேவகன் தென்பட்டான். மன்னரின் சேவகன் தென்பட்டான். முன்னவன் கூறிய செய்தியைச் சுமந்து அவன் மாளிகையின் நுழைவுக்கு முன்பே உப்பரிகைக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறி மறைந்தான். தலைமச் சேவகன் கீழேயே காத்திருந்தான்.

உப்பரிகையின் உள்ளே திரைச்சீலைக்குப் பின் தமது சயன அறையில் உறங்கிக் கொண்டிருந்த பிரதான அமைச்சரின் உறக்கத்தை “பிரதான அமைச்சர் ஆருத்திரருக்கு வெற்றியுண்டாகட்டும்” என்று ப்லமுறை ஒலித்த சேவகனின் ஓலம் எழுப்பியது. “யாரது?”

“ஐயா.. சேவகன்’

“என்ன?”

“மாமன்னர் தங்களை உடனே காண விரும்பினார்”.

சில கணங்கள் மௌனம்.

“நேரமென்ன?”

“பார்க்கிறேன் அய்யா” சேவகன் உப்பரிகையின் மூலையில் மூன்றடி உயரமுள்ள மர முக்காலியின் மீது வைக்கப் பட்டிருந்த செப்புப் பாத்திரத்தின் மீது தீப்பந்தத்தைப் பிடித்துப் பார்த்தான். அதிலிருந்து சொட்டு சொட்டாக நீர் கீழே தரையில் உள்ள மட்பாண்டத்தில் விழுந்து கொண்டிருந்தது. திரும்ப வந்து “நான்காம் சாமம் தொடங்கி ஒரு நாழிகை ஆனது ஐயா” என்றான்.

“நல்லது. ரதத்தைப் பூட்டச் சொல்”

ஒரு நாழிகை அவகாசத்துக்குப் பின்பு இரண்டு குதிரை வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி முன் செல்ல ஒற்றைக் குதிரை இழுக்க, ரதத்தின் இருக்கையின் நாற்பக்கமும் படுத்துணிகள் படுதாவாக மானரின் மாளிகை நோக்கி பிரதான அமைச்சர் புறப்பட்டார்.மன்னரின் மூன்று மாளிகைகளையும் தாண்டி ரதம் விரைந்த போது ஆருத்திரர் திரையை விலக்கி “மன்னர் அரண்மனையில் இல்லையா?” என்றார்.

“இல்லை ஐயா… சந்தகாராவில் இருக்கிறார்”

ஆருத்திரருக்கு இது அதிர்ச்சியாயிருந்தது. சாக்கிய வம்சத்து மன்னர் பாரம்பரியத்தில் ‘சந்தகாரா’வில் அரசவை கூடும் போது மட்டுமே மன்னனைக் காண இயலும். சந்தகாராவின் பிரம்மாண்ட வளாகம் மிகப் பெரிய திருப்பங்களையும் முடிவுகளையும் விளைவிக்கும் மந்திர ஆலோசனைகளும் விவாதங்களும் நடக்கும் பொது இடம். என்ன நிகழ்ந்தது? என்னை மட்டுந்தான் அழைத்திருக்கிறாரா? சேவகர்களிடம் இதற்கும் மேல் விவரம் கேட்பது அவருக்கு கௌரவக் குறைச்சலாகத் தோன்றியது.

மலர்கள் இருளில் மணத்தை அனுப்பித் தம் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தன. நந்தவனம் கடந்து உயர்ந்த கற்தூண்களும் இடையே கதவே இல்லாமல் கற்தூண் தீபங்களால் ஒளி பெற்ற பெரிய கூடமான சந்தகாராவில் நுழைந்தார். மர ஆசனங்களின் வரிசையைக் கடந்து நடந்தார். ஒரே ஒரு சேவகன் மட்டும் இடைவெளி விட்டு பின்னே வந்தான். தேவேந்திரன் ஐராவதத்தில் கம்பீரமாய் பவனி வரும் பெரிய ஓவியம் பின்னணியாக மன்னர் அமரும் சபை மேடையில் அரசர் இல்லை.கீழே காத்திருந்த பரிசகன் “ஆவண அறையில் இருக்கிறார்” என்றான். மேடைக்குப் பின்னே உள்ள ஆவண அறை பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது. தனது தகப்பனார் திதியன்று மன்னர் அங்கேயுள்ள கேடயங்கள், கவசங்கள், கிரீடங்கள் அனைத்திற்கும் பூஜை செய்வார். பிரதான மந்திரி வெண்கல ஏடுகள் பதித்த கதவுகள் திறந்திருக்க மெதுவாக நுழைந்த படியே “மாமன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்” என்றார்.

கையில் சில ஓலைச்சுவடிகளை வெண்கல் விளக்கு வெளிச்சத்தில் மன்னர் பார்த்துக் கொண்டிருக்க ஒரு அந்தண இளைஞன் பணிவாய் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் ராஜகுரு சான்னித்தியரின் மகன் வித்யும்னன். “பத்து ஏடுகளும் இவைதானே? ” என்றார். “ஆமாம் ஸ்வாமி. அப்பா குறிப்பிட்ட படி இவை யாவும் பாலி மொழியில் எழுதப் பட்ட ஜாதகக் குறிப்புகள்” என்றான்.

மன்னரின் கண்கள் சிவந்து முகம் கருமை படர்ந்திருந்தது. இரவு முழுதும் அவர் உறங்கவில்லை போலத் தெரிந்தது. அவரது உத்தரியம் சரிந்து மெருகேற்றிய தங்கப் பூண்கள் உள்ள ஆசனத்தின் மீது கிடந்தது. மன்னர் கிரீடமின்றி சோபை குறைந்தவராக இருந்தார். ‘பிராமண பாலகனே! நீ சற்று நேரம் வெளியே இரு” என்றார். அவன் தலை வணங்கி வெளியேறினான். மன்னர் தமக்கு எதிரே இருந்த ஆசனத்தைக் காட்டி அமருங்கள் மகா மந்திரி ஆருத்திரரே” என்றார்.

“கோசல நாட்டை எதிரிகள் ஊடுருவி விட்டார்களா மாமன்னரே?”

“சுத்தோதனன் உள்ள வரை அதற்கு வாய்ப்பில்லை ஆருத்திரரே” என்ற மன்னர் குரலில் வழக்கமான பெருமிதமில்லை. என்ன நிகழ்ந்தது என்று மன்னரே மேலும் சொல்லட்டும் என்னும் விதமாக அவரை நோக்கினார் மந்திரி.

“சித்தார்த்தன் கபிலவாஸ்துவை விட்டு வெளியேறி விட்டான் அமைச்சரே.” மன்னர் குரலில் சிறு நடுக்கம் தெரிந்தது. முகத்தில் வியர்வை. கண்கள் சிறிதே கலங்கியது போலத் தோன்றியது.

“இது எப்படி சாத்தியம்? சேவகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். மகாராணியும் இளவரசி யசோதராவும் அனுமதித்திருக்க வாய்ப்பில்லையே”

“நள்ளிரவில் அவன் கிளம்பிச் சென்றிருக்கிறான்”

“தங்களுக்கு வந்த செய்தியில் தவறிருந்திருக்கலாம்.. மன்னா.. இது சாத்தியமேயில்லை”

“நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன்” கையிலிருந்த் ஏடுகளை முன்னே நீட்டி ” இந்த ஜாதகக் குறிப்புக்களையும் நம்பினேன். எல்லாம் வீண்”

ஆருத்திரர் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மௌனமாய் மன்னரை நோக்கினார். மெதுவாக “சாரதி காந்தகனை விசாரித்தார்களா?”

“காந்தகன் இன்னும் திரும்பி வரவில்லை. வெகுதூரம் சென்றிருக்கிறார்கள்”

“அவ்வாறெனில் இருவருமே திரும்பி வரலாமே”

“காந்தகனை ஒற்றர்கள் தனியாக அனோமா ஆற்றுக் கரையில் பார்த்திருக்கிறார்கள். அவன் அக்கரை வனத்துக்கு இளவரசர் சென்றிருக்கிறார் அவர் வரும்வரை காத்திருக்கிறேன் ” என்று சொல்லியிருக்கிறான்”

“அவ்வாறெனில் இளவரசர் திருவுள்ளம் என்னவோ. திரும்பி வந்து விடுவார்”

“எனக்கு நம்பிக்கையில்லை. அந்தப்புரத்தில் நடன மாந்தர் மத்தியில் அவன் இளமை கழிந்தது. நகர விழாக்களுக்கு சேவகர், சேனை புடை சூழாமல் அவன் செல்வதில்லை. சமீப காலமாக விழாக்கள் இல்லாத நாட்களில் அவன் தனியே ரதத்தில் நகரில் வலம் வந்தான்”

“கேள்விப்பட்டேன் மன்னா”

“இருபத்து ஒன்பது வருடங்களாக இந்த ஜாதகங்கள் கூறியபடி அவன் சம்ராட்டாக வருவான் என்றே ராஜசுகங்களை மட்டுமே காட்டி வளர்த்தேன். இப்போதைய தசைப்படி அவன் சன்னியாசி அல்லது மாமன்னாகப் புகழ் பெரும் கிரக நிலை. சம்ராட் ஆக வேண்டுமென்றால் அவன் ஏன் வனம் புக வேண்டும்?”

“இளவரசரின் பாதுகாவலரை மாற்றுவோம் மன்னா. அவரைத் தேடிக் கொண்ருவது என் பொறுப்பு”

“அதே தான் என் விருப்பம் ஆருத்திரரே. நம்பிக்கையான ஆட்களை அனுப்புங்கள். படை வீரர்கள் நாசூக்கான இந்த வேலைக்கு உகந்தவர்கள் அல்லர். அதனால் தான் தளபதியை அழைக்காமல் உங்களை அழைத்தேன்”

“உடனே ஏற்பாடு செய்கிறேன், உத்தரவு கொடுங்கள் என்று எழுந்த பிரதம அமைச்சரைக் கையமர்த்திய மன்னர் “ஒரு செய்தியை நீங்கள் அந்தப்புரம் முதல் எல்லாத் தெருக்கள், சந்தைகள் என்று பரந்து விரிந்து இடையர்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.”

“ஆணையிடுங்கள் மன்னா”

“கோசல நாட்டு ஒற்றர்கள், வேடுவர் மனதை மாற்ற வனத்துக்குள் ஊடுருவியதை அறிந்த இளவரசர் வனவாசிகளிடம் நம்பிக்கை ஊட்ட வனம் புகுந்துள்ளார் என்னும் செய்தியே அது”

“அவ்வாறே மன்னா” என்று வணங்கி விடை பெற்றார் ஆருத்திரர்.

திரும்பி வரும் வழியில் மனதுக்குள் போரோ சவால்களோ வெற்றிகளோ இல்லாத இளவரசனாக சித்தார்த்தரை ஏன் விட்டு வைத்தார் மன்னர் என வினவிக் கொண்டார். மூன்று மாளிகைகளும் இணையும் நிலவறைச் சுரங்க வழி கூட சித்தார்த்தனுக்குத் தெரியாது என்று ஒரு உரையாடலில் அவர் கண்டார்.

சாக்கிய வம்சத்து மன்னர்களில் சுத்தோதனர் மிகவும் மென்மையான அணுகுமுறையுடன் மகனை வளர்ப்பதில் சறுக்கி விட்டார் என்றே தோன்றியது.

தமது மாளிகைக்கு அவர் வரும் போது இந்திரன் கோவிலில் அதிகாலைப் பூசைக்கான மணி ஒலித்தது. தமது சேவகர்களில் நம்பிக்கையான இருவரை அழைத்து அவர்களது மனைவியர் இரு சினேகிதர் மற்றும் அவர்களது மனைவியருடன் சில நாழிகை கழித்து வரும்படி உத்தரவு பிறப்பித்தார்.

Series Navigationஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *