எப்போதும் சாங் இ, உலகில் மானிடர்களைச் சந்திக்க, சீனாவின் பிரபலமான தய்ஷான் மலைச்சாரலுக்கு வருவாள்.
அப்படி வரும் போது ஒரு நாள் அங்கே ஒரு வயதான மூதாட்டி, ஒரு சிறு பாறையில் தடுக்கி, மூச்சி முட்டி, கீழே விழுவதைக் கண்டாள். உதவி செய்ய அருகே செல்லும் முன்னரே, அதிர்ஷ்டவசமாக, மூதாட்டி விரைவிலேயே ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றார்.
சாங் இ அவரிடம், “மூதாட்டியே.. ஒன்றுமில்லையே.. ஏன் இத்தனை அவசரம்..?” என்று கேட்டாள்.
மூதாட்டிக்கு தன்னுடைய தண்ணீர் குடுவையைக் கொடுத்து, “இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. உங்களுக்கு தாகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தாங்க.. தண்ணீர் குடித்து, சிறிது ஓய்வு எடுங்கள்..” என்றாள் பரிவுடன்.
“ரொம்ப நன்றி.. உன்னுடைய அன்பிற்கு நன்றி. நான் என்னுடைய கிராமத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். இருட்டும் முன் போய் சேர வேண்டுமில்லையா? நீயும் அங்கேயா போகிறாய்?” என்று கேட்டார்.
சாங் இ, மறுக்கும் முகமாக தலையை ஆட்டி, அழகிய புன்னகையை உதிர்த்து விட்டு, வானில் பறக்க ஆரம்பித்தாள்.
“நான் தய்ஷான் மலைக்குப் போய் கொண்டு இருக்கிறேன். பத்திரமாகச் செல்லுங்கள்..” என்று அன்புடன் சொல்லிவிட்டுச் சென்றாள் சாங் இ.
பிறகு அவள் விரைவிலேயே, சூரியன் மறைய ஆரம்பிக்கும் போது மேகக் கூட்டங்களிடையே சென்று மறைந்தாள்.
சூரியனின் ஒளிக்கிரணங்கள் சிவந்த நிறத்தில் அழகிய வெளியை ஏற்படுத்தியிருப்பதை தய்ஷான் மலையின் உச்சியில் நின்று கொண்டு, பார்த்து, சாங் இ, மெய்மறந்து நின்றாள்.
பிறகு சூரியன் மெதுவாக மஞ்சள் நதியைப் போன்ற நீண்ட வாலுடன் தங்க இறக்கைகளைக் கொண்ட நெருப்புப் பறவையாக மாறுவதை, சீன மரபு எரிதழல் பறவை உருவாவதை புரிந்து கொண்டாள்.
சூரியன் மறைவதை ஒரு அழகிய மங்கை பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்த நெருப்பு அரசனான எரிதழல் பறவை ஆச்சரியத்துடன், “இளம் பெண்ணே.. இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய். நான் கீழிறங்கப் போகிறேன்” என்றார்.
தான் இருந்த இடத்தை விரலால் சுட்டி “நான் சூரியன் முழுவதுமாக மறையக் காத்திருக்கிறேன். நான் நிலவின் உதய ஒளியை இங்கே காண ஆவலுடன் இருக்கிறேன்” என்று பதிலளித்தாள் சாங் இ.
“இங்கு நான் தான் நிலவின் ஒளியை உலகில் முதன் முதலாக பார்த்தவளாக இருக்க வேண்டும்” என்று பெருமித்துடன் கூறினாள்.
“ஓ.. நான் என்னைப் பார்க்கத்தான் நிற்கிறாய் என்று எண்ணினேன்..” என்று எரிதழல் சொன்னார்.
பெண்ணின் அழகிற்கும் வசீகரத்திற்கும் மயங்கிய எரிதழல், அவளிடம், “நாளையிலிருந்து நீ நிலவை அதிக நேரம் பார்க்கும் வகையில் நான் உலகிலிருந்து வெகு வேகமாகவே இறங்கி விடுகிறேன்.. ஆமாம் உன்னுடைய பெயரென்ன இளம்பெண்ணே?” என்று கேட்டார்.
“நன்றி எரிதழல் அரசே.. என் பெயர் சாங் இ..” என்று பதிலளித்தாள்.
எரிதழல் சென்றதும் நிலவு பிரகாசமாக உலகத்திற்கு வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு வெளி வந்தது. முழு நிலவு, இருண்ட வானத்தில் மெதுவாக வெளி வந்தது.
நிலவொளியில் மயங்கிய சாங் இ, முறுவலித்துக் கொண்டே, “நிலவிற்குச் சென்றால் எப்படி இருக்கும்?” என்று எண்ணினாள்.
இப்படியே பல நாட்கள் நிலவின் அழகை ரசித்து வந்தாள் சாங் இ. சில நாட்களுக்குப் பிறகு கோடை காலம் இலையுதிர் காலமாக மாறியது. மரங்களிலிருந்து தங்க நிற இலைகள் புல்வெளியில் உதிர ஆரம்பித்தன. ஒரு சிறிய சதுக்கத்தில் திடீரென ஒரு சத்தம். டம்ப்… டம்ப்..
ஒரு வெள்ளை நிற முயல் காட்டிற்குள் ஓடியது.
அந்தச் சிறிய சதுக்கத்தில், ஒரு திடகாத்திரமான அழகிய இளைஞன், ஹெளவ் யீ, தன்னுடைய வில்வித்தையை பழகிக் கொண்டிருந்தான்.
அவனது அபாரமான திறன், பேரரசர் யாவ், சீனாவின் அரசர், அவனுக்கு, “வில்லாளக் கடவுள்” என்ற பட்டத்தைத் தர வைத்தது.
அந்த இளைய வில்லாளனின் அசைவு வேகமாகவும் துல்லியமாகவும் இருந்தன. அவனது அம்பு, தூரமாக வீழும் இலையைக் குத்தி, மரத்தின் தண்டில் சொருகி விடும் தன்மை கொண்டது.
காட்டிற்குள் சென்ற முயல், அவன் இருக்கும் இடத்திற்கு வந்து, அவன் செய்யும் பயிற்சியைக் கண்டு, சற்றே அதிர்ந்து, ஒரு மறைவில் தன்னை மறைத்துக் கொண்டு, அவனது வில் வித்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தது.
அப்போது, திடீரென, ஒரு மிகப் பெரிய புலி ஆக்கிரோஷமாக, அடர்ந்த காட்டின் நடுவிலே முயலை நோக்கி ஓடியது.
சலசலப்பை உணர்ந்த ஹெளவ் யீ, திரும்பிய அதே நேரத்தில், சாங் இ அங்கே தோன்றினாள்.
இவள் கீழே மிதந்து வந்து, முயலை பாதுகாப்பாக எடுக்க வந்தாள். ஆனால், புலி தன்னுடைய திசையை மாற்றிக் கொண்டு, சாங் இய்யை நோக்கி நேரே பாய்ந்தது.
“ஓ.. என்னது?” கத்தினான் ஹெளவ் யீ.
ஹெளவ் யீ சாங் இய்யை பாதுகாக்கும் முகமாக அவள் முன் குதித்தான். கண் இமைக்கும் நேரத்தில், ஹெளவ் யீ, வில்லை எடுத்து, வேகமாக ஒரு அம்பை காற்றில் எய்தினான்.
சாய் இ, முயலை அடையும் முன்பே, அவனது அம்பு குறியை அடைந்தது. புலி மிகவும் கொடூரமாக உறுமிக் கொண்டு நிலத்தில் விழுந்தது.
அழகிய பெண் பத்திரமாக இருப்பதைக் கண்டு, சற்றே ஆசுவாசப்பட்டுக் கொண்டான் ஹெளவ் யீ. நிலத்திலிருந்து அவள் எழ உதவிக்கரம் நீண்டினான். அவர்களது கை கையோடு தொட்ட அந்த நொடி, அவர்களுக்குள் இருக்கும் சிறப்பான பிணைப்பை இருவருமே உணர்ந்தனர்.
“இளம் குருவே.. என்னையும் என் முயல் நண்பனையும் காப்பாற்றியதற்கு நன்றி” என்று மென்மையாகச் சொன்ன சாங் இ, “நீங்கள் நிஜமாகவே மிகச் சிறந்த வில்லாளர். உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.
வெட்கப் புன்னகையுடன் அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “நான் ஹெளவ் யீ.. நான் பேரரசர் யாவ்வின் வில்லாளன்..”
“நான் சாங் இ..” என்று அவள் பதிலளித்தாள்.
சாங் இ தன்னுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவளது கைகளிலிருந்து முயல் தன்னை விடுவித்துக் கொண்டு, காட்டை நோக்கி ஓடியது. சாங் இ, அதைப் பிடிக்க பின்னால் ஓடினாள்.
“சாங் இ..” என்று ஹெளவ் யீ, மிகுந்த ஆதங்கத்துடன் அழைத்தான். “நாம் எங்கே, எப்போது மீண்டும் சந்திக்கலாம்?” என்று கேட்டான்.
“மஞ்சள் ஆற்றிற்கு மேற்கே வாருங்கள்..” சாங் இய்யின் மென்மையான குரல் தொலைவிலிருந்து எதிரொலித்தது. “நான் அங்கு இரண்டு நாட்களில் இருப்பேன்..” என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் எட்டியதும் கரைந்து போனது.
புல்வெளியில், ஹெளவ் யீ நின்று கொண்டு சாங் இய்யை எண்ணிக் கொண்டு இருக்கும் போது, ஒரு தூதுவன் வேகமாக அவனை நோக்கி வந்தான்.
“குருவே.. பேரரசர் யாவ் உங்களிடம் ஒரு அதி அவசரமான வேலையைப் பற்றிச் சொல்ல அனுப்பியுள்ளார். ஒரு அபூர்வமான பயங்கர மிருகம் மேற்குப் பகுதியில் தோன்றியுள்ளது. குன்லுன் மலைவாழ் மக்களைக் காக்க, அதை உடனே சென்று அழிக்குமாறு பேரரசர் கேட்டுக் கொண்டார்” என்று கூறி வணங்கி நின்றான்.
அதைக் கேட்டதும் அவன் அங்கிருந்து உடனே கிளம்பினான். வெகு விரைவிலேயே, ஹெளவ் யீ அவன் அடைய வேண்டிய இடத்தைச் சென்றடைந்தான். அங்கு, கிராமவாசிகள் அனைவரும் தீயில் எரிந்து கொண்டு இருக்கும் வீடுகளை விட்டு ஓடிக் கொண்டு இருப்பதைக் கண்டான். அப்போது தான், தீப்பொறியையே சுவாசிக்கும் பெரும் பன்றி ஒன்று, குன்லுன் மலைக் கிராமத்தை சூரையாடியிருப்பதைக் கண்டான்.
உடனே, அந்த மிருகத்தைத் தொடர்ந்து தேடிச் சென்றான். விரைவிலேயே அதைக் கண்டான். ஹெளவ் யீ சீறிக் கொண்டு நிற்கும் பன்றியை மிகவும் கவனத்துடன் குறி வைத்து ஒரே அம்பால் அழித்தான்.
மக்கள் மகிழ்ச்சியுடன் அவனைக் கொண்டாடினர். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், தன் வேலை முடிந்ததுமே, ஹெளவ் யீ, மஞ்சள் ஆற்றின் மேற்கே சாங் இய்யை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் வேகமாகச் சென்றான்.
மேற்குப் பகுதியை அடைய வேண்டி, ஹெளவ் யீ, நதியைக் கடக்க ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். மிக நீண்ட ஒரு நாள் பயணத்திற்குப் பிறகு, சாங் இய்யைச் சந்திக்கும் இடத்தை அடைந்தான்.
படகை விட்டு இறங்கப் போகும் போது, ஒரு மிகப் பெரிய சிவப்புக் கண்கள் கொண்ட கடல் பாம்பு நதிக்குள்ளிருந்து வெளியே சீறிக் கொண்டு வந்தது. பாவம்.. படகோட்டி.. மிகவும் பயந்து போய், படகை அப்படியே விட்டு விட்டு அந்த இடத்திலிருந்து ஓடிப் போனான்.
கடல் பாம்பு தன் உடலால் படகை வளைத்துத் தூக்கி உடைக்க முயன்றது.
ஒரு நொடியில், ஹெளவ் யீ தன்னுடைய வில்லை எடுத்து, கடல் பாம்பின் கொம்பைக் குறி பார்த்து நேரே அம்பை எய்தான். அந்த ஒரு சரியான குறியில், கடல் பாம்பு அழிந்து, அமைதியாக நதிக்குள் விழுந்து மூழ்கியது.
கடல் அரக்கன் தோற்றோடியதும், ஹெளவ் யீய்யின் எண்ணம், மறுபடியும் சாங் இய்யின் பக்கம் திரும்பியது. பிறகு தொலைவில், அவன் ஒரு அழகிய உருவம் மிதந்து வருவதைக் கண்டான். மிகவும் உற்சாகத்துடன், “சாங் இ.. நீயா?” என்று கூவினான்.
அழகிய வெள்ளை முயலைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு, சாங் இ, இன்முகத்துடன் ஹெளவ் யீய்யை நோக்கி முறுவலித்தாள். அவன் வேகமாக அவளை நெருங்கி, தன் கைகளால் அவளது கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டான். பிறகு ஹெளவ் யீ, தன்னுடைய முழு வீரத்தையும் திரட்டிக் கொண்டு, தன்னுடைய சாசுவதமான காதலை அவளிடம் கூறினான்.
அந்த நொடியில், இருவரும் காலா காலத்திற்கும் பிணைக்கப்பட்டு இருப்பதை தங்களுக்குள் உணர்ந்தார்கள்.
“சாங் இ.. உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். சம்மதமா..?” என்று மணக்க சம்மதம் கேட்டான்.
சாங் இ தன்னுடைய கண்களை வெட்கத்தினால் கீழ் நோக்கி இறக்கி, சம்மதம் என்று சொல்லும் முகமாக, மெதுவாகத் தலையை ஆட்டினாள். இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த முயல், மிகவும் மகிழ்ச்சியுடன் கீழிறங்கி, தம்பதியினரை சுற்றி வந்து குதித்தது.
ஹெளவ் யீய்யின் மேல் தான் கொண்ட மாறா அன்பைக் காட்டும் வண்ணம், மானுடனை மணக்க, தேவலோகக் கன்னி சாங் இ, தன்னையும் மானுடப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள்.
அழகான தேவ திருமணச் சடங்கு பேரரசர் யாவ்வின் அரண்மனைச் சபையில் நடந்தேறியது.
ஹெளவ் யீ, சாங் இ இருவரும், அழகிய சீன திருமண உடையணிந்து, எதிர் எதிராக நின்று திருமண பந்தத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இருவரும் தாங்கள் கொண்ட காதலை சத்தியம் செய்து நிருபித்தனர்.
பேரரசர், நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் இருவரும் வாழ வேண்டும் என்று ஆசி கூறினார்.
மணம் முடித்த பின், தம்பதியினர் இருவரும் சாங் இய்யிற்கு பிடித்தமான தய்ஷான் மலைக்கு அருகே இருக்கும் கிராமத்திலேயே வாழ முடிவு செய்தனர். மனித உருவம் பெற்றாலும், தான் எங்கேயிருந்தாலும், இன்னும் தினம் இரவு, நிலவின் உதயத்தைக் காண விரும்பினாள் சாங் இ. தான் நிலவின் மேல் கொண்ட காதலை கணவனிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினாள்.
புது வாழ்க்கையைத் துவக்கிய அந்த நேரத்தில், பல வேண்டத் தகாத விஷயங்கள் நடக்க ஆரம்பித்தன. ஊரில் மழை பொய்த்தது. பூமி உலையைப் போன்று வெப்பத்தால் கனன்றது. அதிக வெயில் பயிர்களை நாசம் செய்தன. நன்செய் நிலங்களும் நதிகளும் வறண்டன. நாடு முழுவதும், மக்கள் அனைவரும் பயங்கரமான வெப்பத்தால் தவித்தனர்.
ஒரு நாள் மதியத்திற்கு மேல், ஹெளவ் யீ, சாங் இ இருவரும் தய்ஷான் மலை உச்சியை நோக்கி ஏறிய வண்ணம் இருந்தனர். அப்போது அங்கு கிட்டதட்ட பத்து சூரியன்களை வானத்தில் கண்டு அதிர்ந்தனர்.
“எரிதழல் அரசனே.. எங்கே இருக்கிறீர்கள்?” என்று கத்தினாள் சாங் இ.
“நான் இங்கே இருக்கிறேன் சாங் இ. வஞ்சகமான காகங்கள் என்னை சூரியன்களின் மத்தியில் சிறை பிடித்து வைத்து, என்னைக் கீழே இறங்க விடாமல் தடுக்கின்றன” என்று பரிதாபமாக முனங்கினார்.
“இது எப்படி நடந்தது?” என்று கேட்டாள் சாங் இ.
“ஒரு நாள், ஒன்பது மூன்று கால்கள் கொண்ட காகங்கள் கிழக்கிலிருந்து வந்து, ஒன்பது வஞ்சகச் சூரியன்களாக மாறிவிட்டன” என்று வருத்தத்துடன் கூறினார் எரிதழல் அரசர்.
“அந்த வஞ்சகக் காகங்கள் உலகிலுள்ள எல்லாச் சக்திகளையும் உறிஞ்சி, அழிவை ஏற்படுத்துகின்றன. அவை உலகை அழிக்க அழிக்க, அதிக வலுப் பெறுகின்றன” என்று காகங்களின் சக்தி கூடிக் கொண்டே செல்லும் காரணத்தையும் விளக்கினார்.
உடனே ஹெளவ் யீ தன்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்து, சூரியன்களைக் குறி பார்த்தான்.
ஆனால் எரிதழல் அரசன், அதைத் தடுக்கும் வண்ணம், “அம்பை விடுவதால் ஒரு பயனுமில்லை. அந்த வஞ்சகக் காகங்களை சாதாரண அம்புகளால் எதுவும் செய்ய முடியாது..” என்றார்.
“அப்படியென்றால் அவற்றை எப்படித் தோற்கடிப்பது.. அழிப்பது..?” என்று கேட்டான் ஹெளவ் யீ.
“கிழக்குக் கடலில் ஒரு மலைக் கடவுள் இருக்கிறார். அவரிடம் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் உள்ளது. அது நெருப்பைக் கக்கும். அதனால் மட்டுமே, இந்த வஞ்சகக் காகங்களை வீழ்த்த முடியும்” என்றார் எரிதழல் அரசர்.
“அப்படியென்றால் நான் உடனடியாகப் போக வேண்டும்..” என்று அறிவித்தான் ஹெளவ் யீ.
எத்தனைத் தடுத்தும், சாங் இ தானும் உடன் வருவேன் என்று ஹெளவ் யீய்யுடன் கிளம்பினாள்.
சாங் இய்யும் ஹெளவ் யீய்யும், மிகுந்த மனோ தைரியத்துடன் நீண்ட பயணத்திற்குத் தயாரானார்கள். பாலைவனத்தையும் மலைகளையும் கடந்து சுட்டெறிக்கும் வெப்பத்தைப் பொறுத்துக் கொண்டு, கிழக்குக் கடலை நோக்கிச் சென்றனர்.
தன்னிடமிருந்த தெய்வீகச் சக்திகளை இழந்த காரணத்தால், மனித சக்தியுடன் மட்டுமே பயணித்த படியால், சாங் இய்யின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வெகு தொலைவு சென்ற பின், சாங் இய்யின் நிலையைக் கண்டு மனம் வருந்திய ஹெளவ் யீ, “சாங் இ, நீ இங்கேயே தங்கு. இனி, நான் தனியே பயணத்தை மேற்கொள்கிறேன்” என்றான்.
ஆனால் சாங் இ, மிகவும் பிடிவாதமாகத் தன் அன்பான கணவனுடன் இருக்க விரும்பி, உடன் பயணப்பட்டாள்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, ஹெளவ் யீய்யும் சாங் இய்யும் அந்த தெய்வீக மலைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது திடீரென்று மலை பெயர்வது போன்ற சத்தம் கேட்டது. மலை உச்சியிலிருந்து ஒரு பெரிய சக்தி வாய்ந்த ஒளிக்கற்றை தோன்றியது.
பூனையின் முகமும் மனித உடலும் நான்கு கைகளும் கொண்ட ஒரு உருவம் எரிமலை போன்று மலையிலிருந்து தோன்றியது. எரிதழல் அரசன் சொன்னது போன்று தீயாலான வில்லும் அம்பும் தாங்கியிருந்தது.
“ஹெளவ் யீ.. நீ மிகச் சிறந்த வில்லாளன். தீரமானவன். இந்தச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைப் பெற்றுக் கொள்” னஎ;று மலைக்கடவுள் உறுமினார். “இப்போதே வேகமாகப் புறப்படு.. அந்த வஞ்சகக் காகங்களை, சூரியன்களை அழித்து, உன் மக்களைக் காப்பாற்று..” என்று அறிவித்தார்.
தீயாலான வில்லையும் அம்பையும் பெற்றுக் கொண்டு, தய்ஷான் மலைக்குத் திரும்பினார்கள் இருவரும். அப்போது அழிவிலிருந்து உண்டான சக்திகளை உறிஞ்சி உறிஞ்சி, வஞ்சகச் சூரியன்கள் அனைத்தும் இன்னும் பெரிதாகி விட்டிருந்தன.
“மக்களின் நலனுக்காக நான் இந்த ஒன்பது வஞ்சகச் சூரியன்களை இப்போதே அழிக்கிறேன்” என்று அறிவித்தான் ஹெளவ் யீ.
தன் சக்தியை ஒன்று திரட்டி, கத்திக் கொண்டே, ஹெளவ் யீ முதல் கனையைத் தொடுத்தான்.
ஒவ்வொரு முறையும், சரியாக, கவனமாகக் குறி பார்த்து, ஒவ்வொன்றாக ஒன்பது வஞ்சகக் காகங்களை பொடிப்பொடியாக்கினான். அவை எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்தாமல், எரிந்து சாம்பலாயின.
வஞ்சகக் காகங்களின் மறைவால், எரிதழல் அரசன் வெளியே வந்து, எப்போதும் போன்று மிதமான வெப்பத்தைத் தந்து மக்களைக் காப்பாற்றினார். நிலம் மறுபடியும் செழிப்பானது. மரங்கள் பச்சை நிறம் பெற்றன. நதிகளில் நீர் ஓட ஆரம்பித்தது.
ஹெளவ் யீ வானத்தைப் பார்த்தான். ஒரேயொரு சூரியன் இருப்பதைக் கண்டு திருப்தி கொண்டான்.
இவையெல்லாம் நடக்கும் போதே, மிகக் கடுமையான பயணத்தின் காரணமாக, சாங் இ, மயங்கி விழுந்தாள். ஹெளவ் யீ அவளை நோக்கி ஓடினான். அவளருகே சென்ற போது மெலிதாக மூச்சு வந்து கொண்டு இருந்தது. முகம் உயிரற்றுக் காணப்பட்டது.
“அவளது நெற்றியில் இருக்கும் பிறை மெல்ல மெல்ல மங்கிக் கொண்டே வருகிறதே..” என்று அழுதான் ஹெளவ் யீ.
“அவளது சக்தி குறைவதால் தான், பிறை மங்கிக் கொண்டே வருகிறது. அந்த நிலவு முழுவதுமாக மறைந்தால், அவள் இறந்து விடுவாள்” என்று வருத்தத்துடன் எரிதழல் அரசர் கூறினார்.
வில்லாளனாக எத்தனை தான் தன் வீரத்தைக் காட்டிய போதும், இப்போது அன்பின் காரணமாக தன் முழு சக்தியையும் இழந்து, உதவியற்றுத் தவித்தான் ஹெளவ் யீ.
அவனது நிலையைக் காணச் சகிக்காது, எரிதழல் அரசன், “நீ போய் குன்லுன் மலையில் வாழும் மேற்கு அரசுத்தாயைக் போய் பார். அவர் சொர்க்கக் கடவுளின் மனைவி. சாங் இய்யை உயிர்ப்பிக்கும் அதிசய மாத்திரைகள் அவரிடம் தான் இருக்கிறது” என்று கூறி கைக் கொடுத்தார்.
குன்லுன் மலையை ஹெளவ் யீ சென்றடையும் போது, மேற்கு அரசுத்தாய், அவனுக்காகக் காத்திருந்தார். இரண்டு மினுக்கும் மாத்திரைகளை தன் கைகளில் வைத்துக் கொண்டு மேற்கு அரசுத்தாய், “ஹெளவ் யீ.. நீ இங்கே எதற்கு வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்..” என்றார்.
“மேற்கு அரசுத் தாயே.. என் அன்பு மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்..” என்று வேண்டி நின்றான் ஹெளவ் யீ.
அவர் மிகவும் மென்மையாக, “சாங் இய்யைக் காப்பாற்றும் இரண்டு மாத்திரைகள் இதோ. இந்த மாத்திரைகள் அவளது வாழ்வைக் காக்கும். உங்கள் இருவரையும் சாசுவதமாக்கும். நீங்கள் இருவரும் ஒரேயொரு மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் சங்கடமான விளைவிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என்றார்.
“அரசத் தாயே.. என் சாங் இய்யை காப்பாற்றியதற்கு என் இதயப்பூர்வமான நன்றி. ஆனால் சங்கடமான விளைவுகள் என்னவென்று சொல்லுங்களேன்..” என்று கேட்டான் ஹெளவ் யீ.
ஆனால், அவன் கேள்வியை முடிக்கும் முன்பே அரசுத்தாய் மறைந்துவிட்டிருந்தார். காத்திருந்து பதில் பெற நேரமில்லாமல், அவன் கேள்விக்கு பதில் கிடைக்காமல் அங்கிருந்து புறப்பட்டான்.
தய்ஷான் மலைக்கு வேகமாக வந்து சேர்ந்தான். அதற்குள் சாங் இய்யின் நெற்றியில் இருந்த பிறை மிகவும் மங்கலாகத் தெரிந்தது. அவன் தன்னிடமிருந்த மந்திர மாத்திரையில் ஒன்றை எடுத்தான். அதை அவளது வாயில் போட்டான். சற்று நேரம் பொறுத்தான். ஆனால், சாங் இ, ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழவில்லை.
பொறுமையற்று, தன்னிடமிருந்த தனக்கெனத் தந்த மற்றொரு மாத்திரையையும் அவள் வாயில் இட்டான். அதி அற்புதமாக, உடனே, சாங் இ, தன்னுடைய கண்களைத் திறந்தாள். சாங் இய்யைக் காப்பாற்றி மகிழ்ச்சியில், ஹெளவ் யீ குதித்தான். சாங் இய்யின் நெற்றியில் பிறை பிரகாசித்தது.
ஹெளவ் யீ மகிழ்ச்சியில் கூப்பாடிட்டான். அவளைச் சென்று அணைக்க முயன்றான். ஆனால் அச்சமயம் அவள் மிதக்க ஆரம்பித்தாள்.
“ஹெளவ் யீ.. என்னைப் பிடிக்க முயலாதீர்கள்.. நான் மானுடப் பெண்ணாக இனி இருக்க முடியாது. உங்களைப் பிரிவதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றாள் வருத்தத்துடன் சாங் இ.
ஹெளவ் யீ, அரசுத்தாய் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தவனாய், “ஒவ்வொருவரும் ஒரேயொரு மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.. இல்லாவிட்டால் பெருஞ் சங்கடம் வந்து சேரும்” என்று தனக்குள் கூறிக் கொண்டான். எச்சரிக்கை அப்போது தான் அவனுக்குப் புரிந்தது.
“உங்களை பழித்துக் கொள்ள வேண்டாம். விதியை யாராலும் மாற்ற முடியாது..” என்று அழுதாள் சாங் இ. “ஹெளவ் யீ.. நான் எப்போதும் போல் இனியும் உங்களைப் காதலித்துக் கொண்டுதான் இருப்பேன்..” என்று உறுதியளித்தாள்.
சாங் இ அப்படியே அவன் கண்களிலிருந்து மறைந்தாள்.
தனியே விடப்பட்ட ஹெளவ் யீ, முழு நிலவை நோக்கி, தான் இழந்த பொக்கிஷத்தை எண்ணி பெரு வருத்தம் கொண்டான். அவனது மனதில் இருந்த பாரம் அதிகமானதால், மேற்கு அரசுத்தாய் ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளுக்கு எட்டவில்லை.
“ஹெளவ் யீ.. வருந்தாதே.. எல்லோருக்கும் அவரவர் விதி. நீ பேரரசருக்கு எத்தனையோ போர்கள் செய்திருக்கிறாய்.. பல மக்களை வஞ்சகக் காகங்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறாய்.. அதற்காகவும், உன்னுடைய ஆழ்ந்த துயரத்தை ஆற்றவும், நான் உனக்கு ஒரு பரிசு தர விரும்புகின்றேன்..” என்று ஹெளவ் யீய்யை ஆற்ற அரசத்தாய் கூறினார்.
“உன்னுடைய ஒரு ஆசையைக் கூறு.. அதை நிறைவேற்றுகிறேன்..” என்றார்.
சற்றும் யோசியாமல், “எனக்கு ஒரேயொரு ஆசை தான்.. சாங் இயை நான் ஒரேயொரு முறை பார்க்க வேண்டும்” என்றான்.
அரசுத்தாய், உடனே தன் விரல்களை உயர்த்தி, ஹெளவ் யீய்யை நோக்கி, ஒரு ஒளிக் கற்றையைக் காட்டினார். மெதுவாக அவனது முன் நெற்றியில், ஒரு சூரியச் சின்னம் தோன்றியது.
“நீ இனி சூரிய அரண்மனையில் வாழ்வாயாக! இது தான் உன் விதி..”
ஹெளவ் யீ மேலே சென்று, எரிதழல் அரசனின் சூரிய அரண்மனையைச் சேர்ந்தான். சாங் இ, அதற்கு மாறாக, நிலவில் தன்னுடைய முயலுடன் நிலவு அரண்மனையைக் காக்கும் கன்னியாக மாறினாள்.
சாங் இய்யின் இன்முகமும், முயலும் தான் நாம் நிலவின் மேல் காணும் கருப்பு உருவங்கள் என்று கதைகள் சொல்கின்றன.
இன்றும் என்றும், ஒவ்வொரு வருடத்தின் எட்டாம் மாதத்தின் பதினைந்தாம் நாள், ஹெளவ் யீ, சாங் இய்யின் அரண்மனையில் சந்திக்கும் ஏற்பாடானது. அன்று தான் நிலவு தன் முழு உருவத்துடனும் முழு பிரகாசத்துடனும் இருக்கும்.
இந்த இரு காதலர்களின் சந்திப்பைத் தான் சீன சமூகத்தினர் “நடு இலையுதிர் கால நிலவு விழா”வாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
- கமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்
- உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3
- தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்
- ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )
- சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’
- லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்
- தேவலோகக் கன்னி
- வால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)
- “காப்பி” கதைகள் பற்றி
- இரு கவரிமான்கள் – 3
- பதில்
- அக்னிப்பிரவேசம்-16
- சங்க இலக்கியங்களில் அலர்
- கவிதைகள்
- நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….
- மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ
- பெண்களின் விதிகள்
- தண்டனை யாருக்கு?
- வள்ளியம்மை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -9
- அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
- அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்
- தில்லி பாலுறவு பலாத்காரத்துக்கு எதிரான மக்கள் பேரணி
- வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள் -41