அம்மாவின் அங்கி!

This entry is part 24 of 32 in the series 13 ஜனவரி 2013

திங்கள் முதல் வெள்ளிவரை
நெடுந்தொடர்களின்
நாயகிகளின்
குடும்பப் பிரச்சினைகளில்
ஒன்றிப்போன மனைவி

வார விடுமுறையின் துவக்கத்தில்
காரணமின்றி கோபித்துக்கொண்டு
மகளின் அறையில் படுத்துக்கொள்ள

என்னுடன் படுத்துக்கொண்ட
சின்னவன்
நெடுநேரமாகியும்
தூக்கமில்லாமல்
என் தோளிலேயே தவித்திருந்தான்

டைனோஸர் கதை
கேசம் துழாவிய வருடல்
என
எந்த முயற்சியும்
அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க

சட்டென எழுந்து
மேசையின் இழுவரையில்
மடித்திருந்த
மனைவியின்
இரவு அங்கி ஒன்றை
எடுத்துவந்து
அதன்
முன்கழுத்து வளைவில் தொங்கிய
நாடாக்களின் குஞ்சத்தினை
நெருடிக்கொண்டிருந்தவன்
சடுதியில் உறங்கிப்போனான்

புதுமையான வடிவங்களிலும்
எழிலான வண்ணங்களிலும்
எத்தனையோ
நவீன
கவர்ச்சியான இரவு அங்கிகள்
வந்துவிட்டப்போதிலும்
அந்தக்
குஞ்சம் வைத்த
பழைய வடிவத்து அங்கியையே
அவள் தேடித்தேடி வாங்கியது நினைவுக்கு வர
அடுத்த அறைக்குச் சென்று
அவன் அம்மாவின்
ஆழ்ந்த உறக்கத்தை
நெடுநேரம்
பார்த்துக்கொண்டு நின்றேன்.

——————————————-

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்அக்னிப்பிரவேசம்-18
author

சபீர்

Similar Posts

5 Comments

 1. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  சபீர்,

  நன்றாக இருக்கிறது. ஆனாலும் கவிதையை சற்று இறுக்குங்கள். உதாரணமாக கடைசி பத்தி தேவையற்றது. கவிதையில் ‘பேச’ ஆரம்பிக்காதீர்கள், ‘காட்ட’, ‘உணர்த்த’ நினையுங்கள்.

  ஒரு வாசகனாய் எனது இரு சதங்கள், அவ்வளவே, தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)

  1. Avatar
   ali says:

   திரு முத்துக்குமார் .
   உங்கள் கருத்தில் தவறு இல்லை அது வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

   1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள அலி,

    வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதான ஒரு எழுத்து இருக்கவே முடியாது. கவிதை-யின் வடிவமே வேறு. உரைநடையை மடித்து மடித்து (கணினியில் எழுதும்போது சில வார்த்தைகளுக்கு ஒருமுறை Enter விசையை தட்டி) எழுதுவது கவிதையாகாது.

    கவிதையில் வாசகனின் பங்கேற்பு அவசியம். சொன்னவற்றில் இருந்து சொல்லாத பலவற்றை கற்பனை செய்து விரித்துப்புரிந்துகொள்ள இடம் வேண்டும். எல்லாவற்றையும் விளக்கமாக எழுத கட்டுரை போதும். கவிதை தேவையில்லை. ‘சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல்’ கவிதையின் குணங்களுள் ஒன்று.

    உதாரணத்துக்கு ஒரு குறள் :

    கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
    குழாத்துப் பேதை புகல்

    இதில் கழாக்கால், பள்ளி போன்ற வார்த்தைகளை கற்பனை மூலம் விரிவாக பொருள் விளக்கம் கொள்ள இயலும்.

 2. Avatar
  sabeer says:

  அன்பிற்குரிய பொன்.முத்துக்குமார் அவரகளுக்கு,

  தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. கவிதையை இறுக்கி எழுதச் சொல்வதை ஏற்கிறேன். அப்படியே இனி முயற்சிப்பேன். தங்களின் கற்றுத்தரும் பாணி பிடித்திருக்கிறது. மறுபடியும் நன்றி.

  என் பார்வையில் கவிதை என்பது குறைந்தபட்சம் ஓர் உணர்வை அல்லது ஒரு பொருளையாவது உள்ளடக்கி இருக்க வேண்டும். அதைத் தெளிவாக, இலகுவாக வாசிப்பவருக்குள் புகுத்திவிட வேண்டும். அவ்வளவே.

  இந்தப் பதிவில் அம்மா மேலான மகனின் ஈர்ப்பை மட்டும் சொல்லி நிற்க நினைத்திருந்தால் கடைசி பத்தி அவசியம் இல்லைதான். நானோ, அம்மாவுக்கு மகனின்மீதான அன்பையும் மகனின் நிம்மதியான உறக்கத்தின் அவசியத்தையும் சொல்ல நினைத்தேன்.

  நீங்கள் மேற்சொன்ன குறள் ஒரு விதம் எனில், எனக்குப் பிடித்தது “சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை” என்று எதையும் மறைக்காமல், உள்ளடக்காமல், சுவையாகப் பேசிச்செல்லும் இலகுவான கவிதைகள்தான்.

  மாறுபட்ட ரசனை குறைபாடாகாது என்பதைச் சொல்வது என் கடமை.

 3. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  அன்புள்ள சபீர்,

  நன்றி. கவிதையில் எல்லாவற்றையும் சொல்ல தேவையில்லை. அதற்கு கட்டுரை என்ற வடிவம் இருக்கிறது. நீங்கள் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் செறிவாக எழுதலாம் (‘தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் மூழ்கி இருக்கும் என் மனைவி வார இறுதியில் பிரச்சினையில் கோபித்துக்கொள்ள, சின்னவன் என்னுடன் படுத்துக்கொள்ள நேர ….. பலவண்ண நவீன வடிவ அங்கிகள் இருப்பினும் குஞ்சலம் வைத்த பழையபாணி அங்கியை என் மனைவி தேடி தேடி வாங்கியது நினைவுக்கு வந்தது’ என்பது போல)

  கவிதையில் வாசகனின் பங்கேற்பு அவசியம். அவன்மேல் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம் நீங்கள் :) நீங்கள் சொல்லாதவற்றையும் கற்பனை செய்து புரிந்துகொள்ள இயல்பவன்தான் வாசகன். எல்ல்ல்ல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பவன் கவிதை படிப்பவன் மட்டுமே, வாசகன் அல்ல.

  மறுபடியும் சொல்கிறேன், எல்ல்லாவற்றையும் சொல்லி விளக்கி விளக்கி சொல்ல கவிதை தேவை இல்லை. கட்டுரை போதும். எழுத்தின் ஒவ்வொரு வடிவத்திற்கும் அதற்கே உரிய தேவையும், வடிவமும் பேசுபொருளும் உண்டு.

  மறுபடி நன்றி.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *