தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு

This entry is part 2 of 30 in the series 20 ஜனவரி 2013

முனைவர் மு.பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை


தமிழிலக்கிய மரபுகளுக்கும், நெறிகளுக்கும் தொடக்க மூலமாக அமைவது தொல்காப்பியம் ஆகும். இத்தொல்காப்பியத்தின் கருத்துகளை, கோட்பாடுகளை அறிவிக்கின்ற மூலங்களாக மூல நூல்களும், திறனாய்வு நூல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இணையப் பரவலால் தொல்காப்பியம் சார்ந்த கருத்துகள், மூலங்கள் இணையம் வழியாக  பரவி வருகின்றன. அவை பற்றிய தகவல்களையும் மதிப்பீடுகளையும் அளிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களை, உரைகளுடன் படிக்க  வாய்ப்பாக தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் நூலக இணையதளப்பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பொருளதிகாரத்தின் நூற்பாக்களையும், உரைகளையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. இளம்ப+ரணர், பாவலரேறு ச.பாலசுந்தரனார் ஆகியோரின் உரைகள் இணைப்புகளாக விளங்குகின்றன. இருப்பினும் நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகியோரின் உரைகள் அளிக்கப் பெற்றிருந்தால் இன்னும் வளமை பெற்றிருக்கலாம்.
பிராஜக்ட் மதுரை இணையதளத்தில் n;தால்காப்பிய மூலம் மட்டும் கிடைக்கின்றது. இம்மூலம் மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்த உதவும். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வாயிலாக அளிக்கப்பெற்றுள்ள தொல்காப்பிய முற்றோதல் என்ற ஒலிக்கோப்பு மாணவர்களுக்கு தொல்காப்பியத்தைச் செவிப்புலன் வழியாக நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகின்றது. இருப்பினும் இவ்வொலிக்கோப்புகள் இணைய வழியாக கிடைக்கவில்லை. குறுவட்டு வடிவில் இது கிடைக்கின்றது. இதனை இணைய வழியாக அளிப்பது பலருக்கு நன்மை தரும்.
தொல்காப்பிய உரைவளங்களும் இணையப் பகுதியில் கிடைக்கின்றன. ஆர்ச்சிவ். ஓஆர்ஜி என்ற தளத்தில் தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலுக்கும் உரை வளப்பகுதி கிடைக்கின்றது. இது மதுரைப் பல்கலைக்கழக வெளியிடாக அமைந்த உரைவளப்பகுதியின் நூல் வடிவம் மின்படியாகத் தரப்பெற்றுள்ளது. புத்தக வடிவின் படியாக இது அமைந்துள்ளது. இதனையும் இணைய பதிப்பாக தருவது நல்லது. இவ்வுரைவளம் வெள்ளைவாரணார் அவர்களால் உருவாக்கப் பெற்று மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத்துறையால் வெளியிடப் பெற்றுள்ளது. இவ்விணையதளம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப் பெற்றுள்ளது. ஆராய்;ச்சியாளர்களுக்கும், வரலாற்றறிஞர்களுக்கும் உதவுகின்ற வகையில் இணைய தள நூலகமாக, எவ்வித பயனும் கருதாது உருகாக்கப் பெற்றுள்ளது. சான்பிரான்ஸிஸ்கோ என்ற இடத்தில் இருந்து இயங்கும் இந்நிறுவனம் ஒலிக்கோப்புகளையும், ஒளிக் கோப்புகளையும், நூல்களையும் உலக அளவில் சேமித்து வைத்துள்ள இத்தளத்தில் தொல்காப்பியம் இடம்பெற்றிருப்பது தொல்காப்பியத்தின் உன்னதத்தை உலகம் உணர்ந்து கொண்டதன் அடையாளமாகும். இதனுள் அகப்பொருள் புறப்பொருள் சார்ந்த உரைக்களஞ்சியங்கள் கிடைக்கின்றன.
மேற்காட்டியவை தொல்காப்பியம் சார்ந்த பொதுப் பதிவுகள் ஆகும். அகம் மற்றும் புறம் சார்ந்த பதிவுகள் தனிப்படவும் கிடைக்கின்றன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.
அகமரபு சார்ந்த இணையப் பதிவுகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டப் பகுதியில் அமைந்துள்ள பி.ஏ பட்டப் பாடப் பகுதியல் பொருள் இலக்கணம் சார்ந்த பாடப்பகுதி வைக்கப் பெற்றுள்ளது. நம்பி அகப்பொருள் சார்ந்து இப்பாடம் அமைக்கப் பெற்றிருப்பினும் தொல்காப்பியத்தின் மரபுகளையும் இது அவ்வப்போது எடுத்துரைக்கின்றது. எளிதில் அக இலக்கணத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பகுதி உதவுகின்றது.

தமிழ்மரபு அறக்கட்டளை  அமைத்துள்ள தமிழ் மரபு வி;;க்கிப் பிரிவில் சங்க இலக்கியம் பட விளக்க உரை என்றொரு இழை காணப்படுகிறது. இதுவும் அக மரபு சார்ந்த பதிவுகளை அளிக்கின்றது.
விக்கிப்பீடியா தளத்தில் அக மரபுகள் சார்ந்த பல பதிவுகள் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் உள்ள அகம் சார்ந்த பதிவுகள் இங்கு நூற்பா தரும் செய்திகளாகக் கிடைக்கின்றன. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சார்ந்த செய்திகள் இங்கு பல்வகை வண்ணத்துடன் காட்சியளிக்கிறது. எனவே இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தமிழ் அக இலக்கணத்தைக் கற்பிக்க இயலும். அகத்திணை மாந்தர், அகத்திணை மரபுகள், அத்திணை நிலங்கள் பற்றிய அளவுக்கதிகமான குறிப்புகள் விக்கிப்பீடியா தளத்தில் தரவேற்றம் செய்யப் பெற்றுள்ளது. தமிழ் அக இலக்கணத்திற்கான தனித்த இடத்தைத் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
வேர்களைத் தேடி என்ற வலைப்ப+வில் இளவழகனாரின் பண்டைத் தமிழரின் வாழ்க்கை என்ற நூலின் சில செய்திகள் தரப்பெற்றுள்ளன. அறத்தொடு நிற்றல் என்ற துறையின் விளக்கக் கட்டுரை இதனுள் இடம்பெறச் செய்யப் பெற்றுள்ளது. இந்நூல் முழுமையும் இணையத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும்.
தமிழ் கூடல் இணைய தளத்திலும் பல அக இலக்கணம் சார்ந்த செய்திகள் இடம்பெறச் செய்யப் பெற்றுள்ளன. இளமை என்ற பகுப்பில் ஆய்வுச் சிந்தனைகள் என்ற பிரிவில் தொல்காப்பியரின் களவியல் கோட்பாடு என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. அகவாழ்வில் தோழி பரிணாம வளர்ச்சி நோக்கில் தமிழர் திருமணம் போன்ற பல  கட்டுரைகள்  இப்பகுப்பினுள் அமைந்து அக இலக்கணத்திற்கு விளக்கம் தருகின்றன.
தமிழ்த்தொகுப்புகள் என்ற தளத்தில் தொல்காப்பியம் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. அக இலக்கிய மரபுகளும், தமிழ் நாட்டுப்புறப்பாடல்களும், தொல்காப்பியர் காலத்திய திருமணமுறைகள் போன்ற பல கட்டுரைகள் இதனுள் இடம் பெற்றுள்ளன. இன்போ அதியமான் வலைப்பூவில் கற்பியலைக் கற்பிக்கும் முறைகள் காட்டப் பெற்றுள்ளன. மரபியல், மெய்ப்பாட்டியல் செய்திகள் பலவும் விக்கிப்பீடியா தளத்தில் காணக்கிடைக்கின்றன.
புறம் சார்ந்த பதிவுகள்
இணைய நிலையில் புறம் சார்ந்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. விக்கிப்பீடியா தளம் புற இலக்கணச் செய்திகளைத் தருவதில் முன்னிற்கிறது. திணை, துளை விளக்கம் பெரும்பான்மையும் இதனுள் கிடைக்கின்றது. தமிழ் இணையப்பல்கலைக்கழக இணைய தளத்தில் பாடத்திட்டப் பகுதியில் உள்ள புறப்பொருள் வெண்பாமாலை பற்றிய பாடத்தில் தொல்காப்பிய மரபுகள் உணர்த்தப் பெற்றுள்ளன. தமிழ்த்தொகுப்புகள் தளத்திலும் ;புறத்திணை சார்ந்த கட்டுரைகள் காணப்பெறுகின்றன. கம்பராமாயண முதற்போர்புரிபடலமும், புறத்திணைகூறுகளும், தொல்காப்பிய புறத்திணையியலும், தொல்சமூகமும் போன்ற பல கட்டுரைகள் இத்தளத்தில் காணப்பெறுகின்றன.

அகம் புறம் சார்ந்த விக்கிப்பீடியா தளத்தில் தொல்காப்பிய நூற்பாக்கள் இடம் பெறுவதில்லை. அவற்றின் செய்திகள் மட்டும் உள்ளன. தொல்காப்பிய நூற்பாக்களுடன் கூடிய ஆய்வுச் செய்திகளை வழங்கத் தனித்த தளங்கள் ஏற்படுத்தப்படுவது தேவையாகும். தொல்காப்பிய அகப் புறப் பதிவுகள் அடிப்படை நிலையில்தான் இணைய அளவில் இடம்பெ ற்றுள்ளன. இவற்றை ஆய்வு நோக்கில் அமைக்க வேண்டிய தேவை இனி வரும் காலங்களில் ஏற்படும். இணைய அளவில் உள்ள அகம், புறம் சார்ந்த செய்திகள் அடிப்படை தகவல்களை வழங்குவன என்ற போதிலும் தொல்காப்பிய நெறிகளைத் தருவன என்றபோதிலும் தொல்காப்பிய செய்திகளை முன்னிறுத்தி வரலாற்று நோக்கு, சமுதாய நோக்கு, பெண்ணிய நோக்கு போன்ற பல்வகை நோக்குகளுக்கு இடமளிப்பனவாக இல்லை. மேலும் தொல்காப்பிய அக, புறச் செய்திகளை மொத்தமாக அளிப்பதற்கு தனியாக ஒரு தளம் தேவை என்பதை இக்கட்டுரையின் தயாரிப்பின்போது உணரமுடிந்தது. இதற்காக தமிழாய்வாளர்களும், தமிழறிஞர்களும், திறனாய்வாளர்களும், பேராசிரியர்களும் முன்வரவேண்டும்.
இவைதவிர தொல்காப்பிய மரபுகளை முற்றாகப் புறம் தள்ளும் போக்கும் தமிழ்ப் பரப்பில் தமிழ் இணையப் பரப்பிலும் சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான எதிர்வினைகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது.
நாகர்கோவிலைச் சார்ந்த வழக்கறிஞர் நா. விவேகானந்தன் என்பவர் தொல்காப்பியத்தின் பொருளதிகார நூற்பாக்களுக்கு காமக்கலை சார்ந்த உரையினை வழங்கியுள்ளார். இதனைத் தமிழறிந்த சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவரின் உரையைக் கல்லூரி மாணவர்களும் கற்க வேண்டும் என்றும் தரப்பெற்றுள்ளது.   அவரின் உரைப்பகுதி பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். எக்ஸ், எக்ஸ், எக்ஸ் தொல்காப்பியம் என்ற தலைப்பின்கீழ் அவர் தந்துள்ள பதிவு கேலியும் கிண்டலும் மிக்கது என்றாலும் ஜெயமோனும் இவ்வுரையை வரவேற்றிருப்பதாகவே அறியமுடிகின்றது.  உரையின் சிலபகுதிகளைத் தந்துள்ள ஜெயமோனின் ; விமர்சனப் பக்கத்தில் உள்ள பின்வரும் பகுதி தொல்காப்பியத்தி;ற்கு எவ்வாறு மரபு பிறழ்ந்து உரை வரையப் பெற்றுள்ளது என்பதைக் காட்டும்.
இனி இக்கட்டுரையில் பழமைவாதிகள் தொல்காப்பியப் பாக்களுக்கு அளிக்கும் பொருளும் நம் நூலாசிரியர் அளிக்கும் புதுப்பொருளும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் காட்டப் படுகின்றன.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
அகத்திணையியல்
பழைய உரை
மாயோன் மேவுவது காடுடைய நிலம். சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம். தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம். இந்த நான்கு நிலங்களும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும்.
புது உரை திரு விவேகானந்தன் அருளியது
மாயோனின் குணமுள்ளவன் மேய ஜபுணர்ந்து அனுபவிக்கஸ விரும்பும் பெண் காடு போன்ற இளமைப்பொருள் உடையவள். சேயோனின் குணம் உள்ளவன் மேய்வதற்காக மலைபோன்ற இளமைப்பொருள் உள்ள பெண். வேந்தனைபோன்றவர்கள் மேய வயல் போல ஊற்று உள்ள இளமைப்பொருள் உள்ள பெண். வருணனை போன்றவர்கள் மேய மணற்பாங்கான நிலம் போன்ற இளமைப்பொருள் உள்ள பெண் என்று பெரியோர் சொல்லியுள்ளனர்.
இவ்வுரை மாற்றம் ஓரளவிற்குப் படிக்கும் நிலையில் உள்ளது கை;கிளை என்பதற்கு கை வழிப் புணர்ச்சி என்று பொருள் காட்டும் உரையாளரின் அர்த்தமற்ற அபத்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. அதுபோன்று வாயில் மறுத்தல் என்பதற்கு வாய்வழிப்புணர்விற்கு மறுத்தல் என்றெல்லாம் கண்டபடி பொருள் கொள்ளும் உரையாசிரியரின் தமிழ் மரபுப் பிறழ்ச்சி கண்டிக்கத்தக்கது.
இவ்வுரையைப் பரவவிடாமல் செய்வது நம்கடன். இதற்கு எதிர்ப்பு தருவது நம் தமிழர் உயர்விற்கு வழிவகுக்கும். விவேகானந்தன் அருளியது என்று ஜெயமோகன் கேலித்தன்மையுடன் உணர்த்தினாலும் இவ்வுரை மறுக்கப்பட வேண்டிய உரை என்பதைக் குறிக்காது விட்டது அவரின் பெருந்தன்மை. அவர் தமிழுக்குச் செய்த சிறிய தன்மை.
இதுபோன்று பற்பல மட்டங்களில் நடைபெறக் கூடிய தமிழ் மரபுச் சிதைவுகளில ; இருந்துத் தமிழை மீட்டெடுக்கவேண்டிய கடமை தமிழர்கள் அனைவருக்கும் உண்டு..

————

Series Navigationபேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *