அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்

This entry is part 19 of 30 in the series 20 ஜனவரி 2013

இருபது வருடங்களாகப் பிரிந்து கிடக்கும் பெற்றோரைச், சேர்த்து வைக்கும் மகனின் முயற்சியும், அதற்கு உதவும் அவன் காதலியும் தான் கதை.

கே. பாலச்சந்தர் தொடங்கி, விசு, மவுலி, வெங்கட், வியட்நாம் வீடு சுந்தரம், வேதம் புதிது கண்ணன் என்று பல ஜாம்பவான்கள், உறவு சிக்கல்களை நாடகமாக்கி, துவைத்து காயப் போட்ட பின், அதையே கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சந்திரமோகன். முன்னவர்களின் நாடகங்கள், அழுத்தமான காட்சி அமைப்புகளினாலும், ஷார்ப் வசனங்களாலும், நினைவில் அழியா இடத்தைப் பெற்றன. கூடவே நாகேஷ், மேஜர், ஸ்ரீகாந்த், சௌகார், விசு, மௌலி என பண்பட்ட நடிகர்கள் பட்டாளம் வேறு போட்டி போட்டு நடித்தது. ஆனால் லட்சியாவின் பொய் மெய் நாடகத்தில் இது எதுவும் இல்லை. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான்.

நந்தினி ( சுசித்ரா ரவி ) ‘ பெண் மனசு ‘ பத்திரிக்கையின் ஆசிரியை. சுந்தரவதனம் (ராஜ் மதன் ) தனியாக ஓட்டல் நடத்துபவர். இவர்களின் மகன் கௌதம் ( சூரஜ் ). அவன் தன்னோடு படிக்கும் மன்னார்குடி மேகநாதனின் ( சந்துரு ) பேத்தி சுப்ரியாவை (பிரீத்தி – அறிமுகம் ) காதலிக்கிறான். நந்தினி – சுந்தரவதனத்தின் பிரிவுக்குக் காரணம், திருமணத்திற்கு முன்பு, சுந்தர் காதலித்த, போலீயோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக, ஒரு அபலைப் பெண்ணைக் கைவிட்டு, துரோகம் செய்து விட்டார் என்பதால், கணவனைப் பிரிகிறாள் நந்தினி. அந்த செய்தியைத், தன் பத்திரிக்கையிலும் போட்டு, சுந்தரை அவமானப்படுத்துகிறாள். கௌதம் எப்படி இருவரையும் ஒன்று சேர்த்து, தன் காதலிலும் வெற்றி அடைகிறான் என்பது முடிவு.

நாடகத்தில் பாராட்ட வேண்டிய அம்சம் செட்டிங்ஸ். நந்தினி வீட்டில் திண்ணை போன்ற சோபா, சுந்தரவதனம் வீட்டில் சுவரில் ·போர்க், கத்தி கட் அவுட்டுகள், சுப்ரியா வீட்டில் நடுநாயகமாக நடராஜர் சிலை. இவை எல்லாமே மேடையின் மூன்று பகுதிகளாக.. மேடை அமைத்த உஷா ஸ்டேஜுக்கு பாராட்டு. நாடகத்தின் பின்னணியில் இழைந்தோடும் கர்னாடகப் பாடல்கள், மற்றும் இசைக்கருவிகளின் கலவை ( குகபிரசாத் ) தென்றலாக நம் காதுகளை வருடுகிறது. சபாஷ்! தேவைக்கேற்ப ஒளியைக் குறைத்தும் கூட்டியும் மெருகேற்றுகிறார் கலைவாணன்.

எல்லாம் இருந்தும், ஓவர் டோசாக எல்லாப் பாத்திரங்களும் சிலேடை மொழியில், அதுவும் ஆங்கிலத்தில் உரையாடுவது, இது தமிழ் நாடகம் தானா என்று, பார்வையாளர்களுக்கு சந்தேகம் வர வைத்து விடுகிறது. பாலச்சந்தர் நாடகங்களில் ஒரு மேஜர்தான். இதில் எல்லோருமே மேஜர்.

சந்துரு, பூர்ணம் நாடகக் குழுவில் நடித்தவர். இங்கே அவருக்கு தீனி அதிகமில்லை. சன்னக்குரலில், மேடையின் பின்கோடியில் நின்று அவர் பேசுவது, அவருக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகம். நாரத கான சபையில் கேட்கவில்லை என்றால், எங்கேயும் கேட்காது. ராஜ்மதன் இன்னமும் இளமையாக இருக்கிறார், கோமல் நாடகங்களில் பார்த்தது போலவே. மெலோ டிராமா என்கிற பெயரில் அவரை அழவிட்டு கோலம் காட்டியிருக்கிறார்கள். நந்தினியாக நடிக்கும் சுப்ரியா ரவி இயல்பாக இருக்கிறார். ஆடைகளில் காட்டிய வித்தியாசத்தை, நடிப்பில் காட்ட வேண்டாமோ? பிரீத்தி அறிமுகம். நாயகி பஞ்சம் தலை விரித்தாடும் தமிழ் நாடக மேடை இவரை இருகை கொண்டு வரவேற்கும். குறை ஒன்றுமில்லை கோவிந்தா! ‘கௌதம்’ சூரஜ் அடிக்கடி அம்மாவையும் அப்பாவையும் கட்டிக் கொள்கிறார். ஆனால் உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

மேடை நாடகத்தின் முக்கிய விதி, பாவங்களை குரலின் ஏற்ற இறக்கத்தில் காட்டுவது. ஐந்தாவது வரிசைக்குப் பிறகு முகம் தெரியாது. ஆனால் எல்லோரும் கடனே என்று வசனங்களை ஒப்பிப்பது, ரேடியோ நாடகம் தேவலை என்று ஆக்கி விடுகிறது.

பொய் மெய் – இலுப்பைப் பூ சர்க்கரை.

0

Series Navigationகலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *