எலி எண்ணிக்கையில் ஒன்றுதான் வீட்டில் இருக்கிறதா இல்லை இரண்டு மூன்று என ஆகி அதற்குமேலுமா என்னால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை. எலிகளின் அந்த மூத்திர நாற்றம் அது அது அவர்கள் அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். வயிற்றைப்பிசைந்து குமட்டிக்கொண்டு வருகிற விஷயம்தான். இது படிக்கும் இந்நேரம் என்ன என்னவோ செய்து உங்களுக்கும் கூட குமட்டிக்கொண்டு வரலாம். வரத்தான் செய்யும். அமெரிக்காவில் ஒருவனுக்கு கண்வலி என்று செல்போனில் பேசி நம்மிடம் சொன்னால் போதும் நமக்கும் இங்கு கண் பிசு பிசுத்து உறுத்துகிறதுதானே இல்லை என்கிறீர்களா இல்லை என்று சொன்னால் அது பச்சைப்பொய். யானைக்கால் வியாதிக்காரனைத்தெருவில் பார்க்கும் போதெல்லாம் நட்டு நட்டு நம் கால்களை யாருக்கும் தெரியாமல் லேசாக ஒருமுறைத்தடவி ப்பார்த்துக்கொள்கிறாமே அப்படித்தான் இந்த விஷயங்கள்..
. எலி ப்புழுக்கை என்னும் பெயர் விளங்கிய எலி மலம் சொல்லவே வேண்டாம். படுக்கை அறையின் கதவு திறந்து விடியற்காலை பார்த்தால் அந்தக்கதவின் இடுக்கிலிருந்து எத்தனை சுறுசுறுப்பாக ஒடுகிறது சுண்டெலி. அறைக்கதவின் கீழாக மூலையில் அது இட்ட நான்கைந்து புழுக்கைகள். அது காய்ந்தும் காயாமலும். சகிக்கவில்லை.
புனுகுப்பூனை இடும் மலம் மணக்கும் என்கிறார்கள். அந்தப் புனுகு என்னும் வாசனைப்பொருள் . நான் பார்க்கத்தான் இன்னும் வாய்க்கவே இல்லை, அப்படியும் நன்மணத்தோடு அது இருக்கலாம். நமக்குத்தெரிந்துதான் இந்த உலகில் காரியங்கள் எல்லாம் நடக்கவேண்டுமா என்ன. ஒருவருக்குத் தெரியாதவைகள் தான் என்றைக்கும் உலகளவு என்கிறார்களே.
இரவு நடு நிசியில் பாத்திரம் உருட்டும் அவலட்சணம். மனிதனுக்கு தூக்கம் வருகின்ற அழகில் அதனையும் கலைத்துக்கொண்டு த்ட்டுத்தடுமாறி எழுந்து பார்த்தால் அங்கே அது மட்டும் இருக்காது. பின் எங்கே சென்றது தேடித்தேடி முயன்றால் காணக்கிடைத்தால்தானே எங்கேனும் ஒரு இடுக்குப்பார்த்து ஒளிந்து கொண்டுவிடும். எப்போதும் ஆவுடையார் தோற்றத்தில் இருக்கும் கிரைண்டருக்கு அடியில் பதுங்கிக்கொள்வது எலிக்கு ரொம்ப சவுகரியம்தான். அந்த முதல் தலைமுறை மின்சார கிரைண்டரை த்தள்ளிப்பார்க்கலாம் என்பது லேசுப்பட்ட காரியமா என்ன. ஆகிறகாரியம் என்றால் அப்படியும் முயன்று பார்க்கலாம். நமக்கு எது எது சித்திக்கும் அதுதான் அந்த எலிக்கும் தெரிந்து இருக்கிறதே.
எலிப்பொறி வாங்கி வைத்து எலிகளைப்பிடித்துவிடலாம். அது விற்பனை செய்யும் கடைக்குப்போய் பார்த்ததில் எலிப்பொறியில் இரண்டு தினுசுகள் இருப்பது தெரிந்தது. ஒன்று எலி விழும் பெட்டியில் உயிரோடு எலியைப்பிடித்துக்கொண்டுபோய் அதனை எங்கேயாவது தூரமாய் விட்டுவிட்டு ஜம்பமாய் வந்து விடுவது. மற்றொன்று எலியின் தலை நசுக்கி அந்தச்செத்த எலியை தூரமாய் கொண்டுச் சேர்ப்பது.. பின்னதின் நடப்புக்காட்சியோ பார்ப்பதற்கு கோரமாய் அனுபவமாகும்.
ஜன்னலுக்கு வலை போடுங்கள் எலி ஏன் வருகிறது என்றார்கள். வீட்டிற்கு ஒசி காபிக்கு வந்துபோகிறவர்கள் சொன்னதுதான். காபி மட்டுமே நன்றாய்ப்போடுவதாய் அவளைத்தான் சொல்கிறார்கள். அது இருந்து எப்படியோ போகட்டும்.
வீட்டில் நான்கு ஜன்னல்கள் பெரிதும் நான்கு ஜன்னல்கள் சிறிதுமாக இருந்தன. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வலை போட்டாயிற்று. வலைபோடும் கம்பெனிக்காரனை ப்பிடித்து அது போட்டு முடிப்பதற்குள் போதும் போதும் என்றாயிற்று. வலை தயாரிக்கும் கம்பெனி கொல்கத்தாவில் இருக்க உள்ளூர் ஏஜண்டுகள் அது வாங்கி வந்து விநியோகித்தார்கள். ஜன்னலுக்கு வலை பொறுத்தும் கான்டிராக்டர்கள் பகுதி பகுதியாய் ஊரைப்பிரித்துக்கொண்டு தம் தொழில் செய்தார்கள். ஜன்னலுக்கு வலை போட்டு இரண்டு நாட்களுக்கு எலிகள் சிறிது யோசனையில் இருந்தன. மூன்றாம் நாள் வலைகள் வட்ட வட்டமாய் கத்தரிக்கப்பட்டு நெளித்துக்கொண்டு நின்றன எலிகள் ஜன்னல் வலைகளை க் கச்சிதமாய் அறுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்து அவை த்ம் பாட்டுக்குத் தொடர்ந்து அதம் செய்தன.
இது ஒன்றும் சரிப்பட்டு வராது. எலியின் பற்கள் லேசா என்ன ஜன்னலுக்கு வலை என்பது தாண்டி வேறு யோசனைக்குப்போனேன். எலியைப்பிடித்துக்கொண்டு போய் தூரமாய் விடுவிக்கும் ஒரு பொறி வாங்கலாம். ஆக அந்த யோசனை செயலானது. எலிப்பொறிப் பெட்டியின் உள்ளே சென்ற எலி வைத்த தின் பண்டத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு கெளரமாய் வெளியே வந்து உலாவியது. என்ன என்னவோ பொறியில் வைத்தாயிற்று. எலி மட்டும் அகப்பட்டால் தானே. வெங்காயம்,தேங்காய்சில்,பஜ்ஜி, மசால்வடை எது வைத்துமென்ன. ஒரு குசுவும் ஆகவில்லை. ராக்கண் விழித்ததுதான் மிச்சம்.
தலையை ந்சுக்கிகொல்லும் அந்த எலிப்பொறி வாங்கி வைக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். சிலர் எலி மருந்து வாங்கி வைக்கலாம் மந்திர ஆலோசனை சொன்னார்கள். தின்கின்ற சோற்றில் விஷத்தைப் பிசைந்து உருண்டை உருண்டையாய். மூலைக்கு மூலை போடலாம். எலிகள் தின்றுவிட்டு இறந்து கிடக்குமாம். தின்கின்ற சோற்றில் விஷம் சேர்க்கத்தான் கொஞ்சம் கூட மனம் இடம் தரவில்லை.
விஷம் அதனை வாங்குவது அதனை ஜாக்கிரதையாய்க்கையாள்வது இத்யாதிகள் சங்கடங்கள் இருக்கவே இருக்கிறது..
‘ இந்த சனியன் இங்க எதுக்கு இந்த எலிப் பொட்டிய அந்த கடைக்காரன்கிட்ட கொடுத்துட்டு அந்த எலிப்பொறிய கேளுங்க அவள் தான் யோசனை சொன்னாள். இந்த யோசனை சொல்லும் வகையறா யெல்லாம் எனக்கும் வந்துவிட்டடால் குடும்பம் உருப்பட்டு விடாதா.
ஒரு சமாச்சாரம் தெரியுமோ அந்த படைப்புக்கடவுள் பிரம்மன் முன்பாக இரண்டுகூடைகள் இருக்குமாம் கூடை என்றதும் .கல்யாண வைபவத்தில் சமையல் கட்டு அருகே அப்பளம் பொறித்து அடுக்கி அடுக்கி வைப்பதற்கு பெரிய மூங்கில் கூடை வைத்திருப்பார்களே அது நினைவுக்கு வரலாம் வந்தால் அது சரியே. ஒன்று ஆணுக்கு மற்றது பெண்ணுக்கு இந்தக்கூடையிலிருந்து கயறு ஒன்றும் அந்தக்கூடையிலிருந்து கயறு ஒன்றும் எடுத்து வைத்துத் தன் இரு கண்களையும் இருக்கி மூடிய பிரம்மன் சேர்த்து சேர்த்து முடி போட்டு முடி போட்டு அப்படி அப்படியேக் கெடாசுவானாம். அந்த பிரம்மனின் இந்த நடப்புக்குத்தான் அவர் அவர் பிராப்தம் என்று பெயர் சொல்வது இந்த விஷய உதவி பெண்ணாகடம் வைத்தா என்கிற கோமுட்டிசெட்டிகள் புரோகிதம் பார்க்கும் வைத்தியநாத சாத்திரி என்றோ என்னிடம் சொன்னது. நீங்களும் தெரிந்துகொண்டால் நல்லது ஆகச்சொன்னேன்.
கடைக்காரனிடம் எலிப்பொறி ப்பெட்டியோடு போனேன். கதையென்றால் அவ்வளவு சுலபமா என்ன.
‘ இத எடுத்துகிட்டு எலித் தலய நசுக்கிற மாதிரிக்கு இருக்குற அந்த பொறி ஒண்ணு கொடுங்க’
‘ அதுக்கென்ன எடுத்துகுங்க மேல அம்பது ரூவா ஆவும் ஒரு அஞ்சி ரூவா தள்ளிகிறன். இத எடுத்துகுங்க’
கடைக்காரன் சொன்னான்.
‘ அஞ்சி ரூவாதான் மேல தருவன் பொட்டிய குடுத்துட்டுத்தானே அது கேக்குறன். இது அம்பது ரூவா கொடுத்து உங்ககிட்டத்தானே வாங்கினது’
‘ அது நீயே வச்சுக உன்ன யாரு கேட்டா’
‘இது என்னா நெயாயம்.னு தெரியல. சரிவுடு இப்ப அது மட்டும் நான் தனியா வாங்குனா என்னதான் வெல’
‘இதே வெலதான் ‘
‘எதே வெல’
‘ அஞ்சி ரூவா தள்ளி நாற்பத்தஞ்சிதான்’
‘ அப்ப இதுக்கு’
‘வச்சிட்டு போ இல்ல எடுத்துகிட்டேதான் போ யாரு கேக்குறா’
கடைக்காரன் தன் வேலையை ப்பார்த்துக்கொண்டே இருந்தான். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. நான் நின்று கொண்டே இருந்தேன்.
‘ மனுஷன் ரவ படிச்சுட்டா ரொம்ப கஷ்டம்’ கடைக்காரன் சொல்லிக்கொண்டே என்னைப்பார்த்தான்.
இனி செய்வதற்கு என்ன இருக்கிறது நாற்பத்து அஞ்சி ரூபாய் கொடுத்து அந்த எலியின் கழுத்து வெட்டி உயிர் முடிக்கும் எலிப்பொறி வாங்கினேன். கொண்டு போன பெட்டி எலிப்பொறியை கடைக்காரன் முன்பாகக்கீழே வைத்துவிட்டு புதிய பொறியை க்கையில் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
பழைய பொறிக்குப் பாதி விலை போட்டுக் கொடுத்தான் வீட்டுக்குப்போய் அவளிடம் பொய் சொன்னேன். அவள் திருப்தி பட்டுக்கொண்டாள். அவளின் பிரகாசித்த முகம் காணக் கண்கள் கோடி வேண்டும் பெண்களுக்கு எப்போதும் பொய் சொன்னால் மட்டும் ரொம்பவும் பிடித்துவிடுகிறது. முயற்சி இது வரை செய்யவில்லை என்றால் முயலுங்கள் பலன் கைமேல். லேசாகச் சற்று அசடுகள் மட்டும் இது தவிர்க்க..
அன்று இரவு மணிலா கொட்டை கேக் ஒன்று வாங்கி பொறியில் வைத்து எலி ப்பொறி ரெடியானது. இரவு எத்தனை மணிக்கு அது விழுந்ததுவோ தெரியாது.. விடியற்காலையில்தான் பார்த்தேன். வாய் பிளந்துகொண்டு எலி கோரமாய்க்கிடந்தது. பொறியில் ஆங்காங்கே சில்லு சில்லாய் ரத்தம். சிவப்பு எறும்புகள் எலியின் உடல் முழுதும்
‘ சுண்டெலி மாதிரி இருக்கு சுண்டெலியேதான் இது என்ன பாவமோ சுண்டெலிக்கு நாம பொறிவச்சிட்டோமே இது என்ன கஷ்ட காலம்’ அவள் புலம்ப ஆரம்பித்தாள்.
‘ எலிப்பொறின்னா எல்லாம் தாம் உழுவும் இதுல என்ன சுண்டெலி இல்ல வேற ஒண்ணு’
பழைய நாளிதழ் ஒன்றின் காகிதத்தில் எலிப்பொறியை எடுத்துவைத்தேன். என்னவோ செய்தது. செய்வது மனதிற்கு உகந்த காரியமாய் ப்படவில்லை. தீதும் ந்ன்றும் பிறர்தர வரா என்பார்கள். இது எல்லாம் நாம் தெரிந்தே தேடிக்கொண்டதுதான். ஆக எலியும் எலிப்பொறியும் பேப்பரில் சுருட்டி எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தேன்.
‘ எலிய கெயட்டி உடு காக்கா தூக்கிகும்’ பால்காரன் தான் சொன்னான். இது இவ்வள்வு சுலபம் என்று அதுவரைக்கும் தெரியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு எலியை பொறியிலிருந்து நீக்கி விட்டேன்.
‘ இது என்னா மூஞ்சுறு ஆச்சே. ரொம்ப நல்ல சீவன் இதப்போய் பொறி வச்சி புடிச்சி கொன்னுப்புட்டீங்க. புள்ளயாருக்கொகந்த சன்மம்ல்ல என்னா பாவமோ’
பால்காரன் சொன்னதைக்கேட்டுக்கொண்ட வீட்டுக்குள்ளிருந்து வந்த அவள் முகம் களை இழந்து
போயிற்று.
‘ இப்ப என்னங்க செய்யறது’ அவள் பாவமாய்க் கேட்டாள். இந்தப்படிக்கு வணக்கமாய் அவள் என்னிடம் பேசி ஒருநாளும் கேட்டதில்லை.
‘ விநாயகருக்கு ஒரு விளக்குப்போடுங்க இல்ல ஒரு செம்பு பாலு வாங்கி அபிசேகத்துக்கு கொடுங்க ஒரு கொழுக்கட்ட சேஞ்சிம் படைக்கலாம் எல்லா பாவமும் சரியாப்பூடும்’
‘ ரொம்ப சரி’ என்றாள். பால் அவனிடமே வாங்கிக்கொண்டாள்.
‘ உங்க நல்ல நேரம் இது ரவ பாக்கி இருக்கு பசும்பாலு அதுவும் சாமிக்குன்னு கேக்குறீங்க’ பால்காரன் பேசினான்.
மூஞ்சுறுவை த்தூக்கிக்கொண்டு போக காகம் ஏதும் வரவில்லை. அதற்கு மக்கள் வாழிடங்களில் எத்தனையோ வேலைகள் இருக்கலாம். கீழே வீசிய எலி கசமுசாவை ஒரு நாய்தான் கவ்விக்கொண்டு தெருமுனைக்கு எங்கோ ஒடியது. நான் எலிப்பொறியை சுத்தம் செய்து கழுவி வைத்தேன்.
கொழுக்கட்டை செய்ய தேவையான மலிகைச் சாமான்களை எழுதிக்கொண்டு போய் எலிப்பொறி வாங்கிய அதே கடைக்கரனிடம் நீட்டினேன் அவனிடம் தேவையானது எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து அவள் வசமாக்கினேன்.. கொழுக்கட்டை செய்யும் முறை அவள் தெரிந்திருந்த ஞானத்தோடு அக்கம்பக்கத்தாரையும் கலந்து ஆலோசித்துக்கொண்டு பின்னரே நிவேதனக் கொழுக்கட்டைகள் தயாராகின.
நல்ல எவர்சில்வர் டப்பி ஒன்றில் கொழுக்கட்டைகளை எடுத்து அடுக்கிக்கொண்டு நாகமணிந்த விநாயாகன் கோவில் நோக்கி இருவரும் புறப்பட்டோம். அவளுக்கு ஒரு ஆறுமுழம் மட்டும் முல்லை ச்சரம் வாங்கிகொடுத்தேன்.
‘ பூ வாங்கறதுல மட்டும் என்ன தரித்திரமோ. என்ன பிசிநாறி வம்சண்டா’ சொல்லிக்கொண்டே அவள் தலையில் வைத்துக்கொண்டாள்..
நாகமணிந்த விநாகருக்கு அபிஷேகம் முடிந்து அய்யர் அலங்காரம் செய்து கொண்டே இருந்தார்.
‘ என்ன கொழுக்கட்டைதானே’
‘ ஆமாம் சாமி’ பாலும் கொண்டு வந்திருக்கேன்’
‘பால மூஷிகத்துக்குல அபிஷேகம் பண்ணிட்டா சாமிக்குப் பிரீதி ஆயிடறது. சரித்தானே’
எலியின் சிலை ஒன்று நாகமணிந்த விநாயகரை மட்டும் பார்த்தபடிக்கு எதிரே பீடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.. அய்யரே தொடர்ந்தார்,
‘ அவனுக்கு த்தெரியும் இன்னைக்கு சதுர்த்தி விசேஷம் யாரு எப்படிக் கொழக்கட்டை பண்ணிக்கொண்டுவருவான்னு ஜடஜன்மம் நேக்குத்தான் அந்த சூட்சுமம் தெரியல. ரொம்ப சந்தோஷம்’
அய்யர் கொழுக்கட்டை பாத்திரத்தை வாங்கி சாமி முன் வைத்து நிவேதனம் செய்து கல்ப்பூரம் காட்டி முடித்தார். கொண்டு போன பால் மூஞ்சுறு மீது அபிஷேகமாயிற்று.
‘ இந்த சதுர்த்திக்குத்தான் உபயம்னு யாரு பேர போடறது யாரும் கிடைக்காம தவிச்சுண்டு இருந்தேன். மற்ற எல்லா சதுர்த்திக்கும் உபயக்காரா பேர் கொடுத்துட்டா. எனக்கு இப்ப பகவான் உங்கள கைய காமிச்சிட்டார்.ரொம்ப சந்தோஷம்’
‘ என்ன செலவு வரும்’ நான்தான் ஆரம்பித்தேன்.
அவள் என்னை முறைத்தபடி இருந்தாள்.
‘ ஏம்மா என்ன தப்பு கேக்கணும்தான். சொல்லதான் என்ன பகவான் இங்க நிக்க வச்சிருக்கான் ஒரு அய்நூறு ரூவா வருஷாந்திரம் செலவு வரும்’
‘ சரி சாமி உபயத்த ஏத்துகறம்’ அவள் சொன்னாள்.
‘ இது செலவு இல்லே ஒரு பேச்சுக்கு சொல்லிட்டேன் இது தான் வரவு. உங்க கஷ்டமெல்லாம் இண்ணயோட தொலஞ்சிடுத்து நன்னா இருப்பீள்’
பெயர் விலாசம் செல் பேசி எண் எல்லாம் தன் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார்.கொழுக்கட்டை சம்படத்தை திறந்து அங்கே நின்று.கொண்டிருந்தவர்கட்கெல்
‘ இப்பத்தான் எனக்கு நிம்மதி” அவள் சொன்னாள். வேறு என்ன வேண்டும் இனி. .
எலி அன்றிரவு தொடங்கி என் வீட்டிற்கு வந்ததா பழையபடி தொந்தரவு செய்ததா என்பதெல்லாம் உங்களுக்கு ஏன்.
————————————————————————————
.
- பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்
- தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’
- பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..
- நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .
- பிசாவும் தலாஷ் 2டும்
- மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8
- எலி
- ஒரு ஆன்மாவின் அழுகுரல்..
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4
- பொம்மலாட்டம்
- கிளைகளின் கதை
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1
- என் அருமைச் சகோதரியே ரிசானா..!
- தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’
- நூல்கள் வெளியீட்டு விழா
- திருப்பூர் அரிமா விருதுகள் 2013
- கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்
- அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்
- புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக
- இரு கவரிமான்கள் – 6
- வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்
- அக்னிப்பிரவேசம்-19
- திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2
- வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)
- தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்
- சொல்லித் தீராத சங்கிலி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !
- சாரல் விருது