நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .

author
1
0 minutes, 9 seconds Read
This entry is part 5 of 30 in the series 20 ஜனவரி 2013

          அர.வெங்கடாசலம்

 

இந்தமாதம் பதினைந்தாம் தேதி ஜான்பென்னி குய்க் என்ற ஆங்கிலேயே பொறியாளருக்கு முல்லைப்பெரியார் அனைக்கட்டில் தமிழக அரசு கட்டியுள்ள மணிமண்டபம் திறப்பு விழா கண்டது. 2011 டிசம்பர் மாதம் அப்போதைய மதுரை ஆட்சியர் சகாயம் தேனி மாவட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த அறுபத்து மூன்று வயது விவசாயி வி.மாதவன் என்பவர் எழுதிய பத்து பக்கங்கள் கொண்ட ஜான்பென்னி குய்க்கின் வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்தச் செய்தி பிறகு விகடனின் நிருபருக்கு சகாயம் (25.1.12) அளித்த பேட்டி விக்கிபீடியா ஆகியவை தரும் தகவல்கள் முல்லைப்பெரியார் அனையின் வரலாற் றினைக் கூறுகிறது. அவ்வீர வரலாற்றின் நாயகன் ஒரு ஆங்கிலேயர். ஜான்பென்னி குய்க் என்ற அந்தப் பொறியாளர் பட்ட துன்பங்களையும் அவற்றை எதிர்கொண்டு வென்ற அவருடைய  சரித்திரத்தையும் ஒரு நிலையில் அவர் தளர்ந்து விட்டபோது அவர் மீண்டும் பணியைத்தொடர தன்னுடைய நகைகள் அத்துனையையும் பிற சொத்துக்களையும் விற்று ரூ42 லட்சம் திரட்டித் தந்து அவருக்கு உறுதுணை யாக அவருடைய மனைவி இருந்திருக்கிறார் என்பதையும் அறியும்போது உடம்பு சிலிர்க்கிறது. தம்பதியரை மானசீகமாக நினைத்து கைகூப்பி தொழத் தோன்றுகிறது.

 

இவ்வனையின் சரித்திரம் 1789 ஆம் ஆண்டு துவங்கியது எனலாம். அந்த ஆண்டு ராமநாதபுர அரசர் முத்துராமலிங்க சேதுபதியின் அமைச்சர் முத்திருளப்ப பிள்ளை மேற்கு நோக்கி பாய்ந்து கொண்டிருந்த பெரியார் நதியை கிழக்கு நோக்கி திருப்பிவிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால் அரசின் நிதிநிலைமைக்கு மீறிய திட்டம் என்பதால் அரசர் அதை கிடப்பில் போட்டு விட்டார். 1850 ஆம் ஆண்டு அத்திட்டம் திரும்பவும் ஒரு முறை தொழிலாளிகள் அதிக கூலி கேட்கின்றனர் என்ற காரணத்தினால் ஆங்கிலேய அரசினால் கைவிடப்பட்டது. அதன் பிறகு பல முறை அனைக்கான திட்ட வரைவு அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டபோதிலும் 1862 அம் ஆண்டு கேப்டன் ஜெ.ஜி.ரைவ்ஸ் அவர்களால் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு 1867 ஆம் ஆண்டு 62 அடி உயர கல் அனைக்கான திட்டவரைவுக்கே மெட்ராஸ் அரசாங்கம் அனுமதி அளித்தது ஆனால் திட்டப்பணிகள் 1876-77ல் பெய்த பேய் மழைகளினால் நின்று போனது. இறுதியாக 1882ல் திட்டம் அரசின் ஒப்புதலுடன்  இராணுவ மேஜர் ஜான் பென்னி குய்க்கிடம் விடப்பட்டது. அவர் இறுதி செய்த திட்டம் 1884 ஆம் ஆண்டு அவருடைய உயர் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டது.

 

மெட்ராஸ் ரெஜிமெண்ட் ஒன்று மற்றும் நான்காவது பெட்டாலியன்களைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். கொச்சினில் வசித்து வந்த போர்த்துகீசிய தட்சர்களால் செய்யப்பட்ட மரத் தடுப்புகளைக் கொண்டு ஆற்றினை தற்காலிகமாக திசை திருப்பி அனையின் கட்டுமானத்தை மேற்கொள்ள பென்னி குய்க் முயன்றார் ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து பெய்த மழையினால் தடுப்பு அனைகள் தகர்ந்த போயின. ஆங்கில அரசு திட்டம் சாத்தியம் அற்ற ஒன்று என்று கூறி அத்திட்டத்தை இறுதி செய்த பென்னியிடம் குற்றம் கண்டதுடன் திட்டத்திற்கான நிதி வழங்கலை நிறுத்திவிட்டது. அந்த காலகட்டத்தில்தான் அவருடைய மனைவி அவருக்கு தோள் கொடுத்தார்.

 

அனைகட்டுவதென்பது துவக்கத்திலிருந்தே பிரம்ம பிரயத்தினமாகத்தான் இருந்துள்ளது. பாதையே இல்லாத காடுகள், கொடியமிருகங்கள், நச்சு அரவங்கள்  உள்ளிட்ட பல விஷ ஜந்துகளிடைய இரவு பகல் வாசம் ஆகிய சூழலால் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் இறந்து போயினர். (அவர்களுடைய கல்லறைகளை அனைப்பகுதியில் இன்றும் காணலாம்.)

 

குறிப்பாக இரண்டு நிகழ்வுகள் எவ்வளவு மனத்திடம் இருப்பவரையும் நிலைகுலையச் செய்யக்கூடியவை. 18.06.1890 ல் பெய்த கடும் மழையில் கழுதைகள் மீதும் மனித தலைச்சுமையாகவும் மலைமீது கொண்டு செல்லப்பட்டு சேமித்துவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனல் மூட்டைகள் ஒரே நாள் பெய்த மழையில் கரைந்துபோயின. 1893ல் காலரா பரவியதால் இந்திய மற்றும் ஆங்கில பொறியாளர்கள் மற்றும் தொழிலாள்கள் நூற்றுக்கணக்கில் இறந்தனர் (அதில் ஆங்கிலேயே பொறியாளர்களும் உயர் அதிகாரகளும் அடங்குவர்)

 

இருப்பினும் பென்னி குய்க் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி கண்டார். அதனை சகாயம் இ.ஆ.ப. நன்றியுடன் இவ்வாறு நினைவு கூர்கிறார் விகடனுக்குத் தான் தந்த பேட்டியில்: ”இன்று தென் தமிழகத்தில் நாங்கள் பாசனம் பெற்று பசியாறுவது மட்டும் அல்ல, தவித்த வாய்க்குத் தண்ணீர் அருந்துவதும் அந்த தவப்புதல்வனின் தியாகத்தால்தான்” (விகடன்:25.1.12)

 

ஐயா! தாங்கள் தந்துள்ள தகவல்கள் போதும். இனி தலைப்பில் உள்ள குறளுக்கும் பென்னி குய்க்கும் என்ன சம்பந்தம் என்று கூறுங்கள் எனக் கேட்கத்தோன்றுகிறதா?

 

“திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை” என்ற புத்தகத்தை நான் எழுதிக்கொண்டிருந்தபோது நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் // வித்தகர்க் கல்லால் அரிது என்ற குறளுக்கு விளக்கம் காணத் திணறிக் கொண்டிருந்தேன். இது புகழ் அதிகாரத்தில் வரும் ஐந்தாவது குறள்.

”கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் // கோடாமை சான்றோர்க் கணி என்ற குறளை நான் ஏற்கனவே விளக்கி இருந்ததால்  ”நத்தம் போல் உளதாகும் கேடு” என்பதற்கு ஆக்கமும் கேடும் மாறி மாறி வருவன என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றியது.  அடுத்து சாக்காடு என்றால் இறந்துபடுதல் என்று பொருள் அல்லவா? அப்படியானால் அதன் இன்னொரு முனையான பிறத்தலைக் கூறாமல் கூறி உள்ளார் திருவள்ளுவர் என்று எடுத்துக்கொண்டேன். இரண்டையும் சேர்த்தால் செழிப்பும் கேடும் பிறப்பும் இறப்பும் உலகின் இயற்கை அதை யாராலும் மாற்ற முடியாது  இதை உணர்ந்துள்ள வித்தகர்களுக்கு அல்லாது மற்றவர்க்கு அது அரிது என்று பொருள் கிட்டுகிறது ஆனால்  அரிது என எதைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்?

 

விடை அதிகாரத்தின் அதிகாரத்தின் முதல் குறளான ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல // தூதிய மில்லை உயிர்க்கு என்ற குறளில் உள்ளது. மேலே செல்லும் முன்பு புகழ் என்று திருவள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார் என அறிந்துகொள்வது நலம். இசை என்ற சொல்லால் இவ்வதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சொல் புகழ் புகழ்ந்தவை, புகழ்மை என்றெல்லாம் பிற குறள் பாக்களில் வருகின்றது. எல்லா இடங்களிலும் அச்சொல் மனிதன் சகமனிதன் சக உயிரிகள் ஆகியோருக்கு நலம் தரும் வகையில் அற வழியில் நின்று செய்யப்பட்ட செயல்களையே குறிக்கிறது. எங்கும் ஒரு குறிப்பிட்ட மனிதன் எல்லாரும் அறிந்தவர், பேரும் புகழும் உள்ளவர், பெரும் மக்கள் பலத்தினை தன் பின்னால் கொண்டுள்ளவர் அல்லது பெரிய அரசியல் தலைவர், அதிகாரம் மிக்கவர், கலை/விளையாட்டு நட்சத்திரம், போன்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படவில்லை. நிச்சயம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ள எவரையும் திருவள்ளுவர் புகழடைந்தவர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன். வசையில்லாத புகழ் என்று புகழுக்கு கணம் ஏற்றுகிறார் அதிகாரத்தின் கடைசி இரண்டு குறள் பாக்களில்.

 

இப்போது முதல் குறளுக்கு செல்வோம். அக்குறளுக்கு என்னுடைய புத்தகத்தில் நான் தந்துள்ள பொருளைக் கீழே தந்துள்ளேன்.

 

“மனித வாழ்க்கையின் ஊதியம் ஆன்ம மேம்பாடடைதல் மட்டுமே. ஆகவே ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல் என்று கூறியபடி நத்தம்(செழிப்பு/வாய்ப்பு) மற்றும் கேடு (வறுமை/இடர்பாடு) பிறப்பு/இறப்பு ஆகியனவற்றிற்கு இடையேயும் convert the probleme into prosperity என்று கூறிய படி ஈகை/ஒப்புரவுப்பனியிலிருந்து பின்வாங்காமல் செயல்படும் வித்தகர்களுக்கு (கெட்டிக் காரர்களுக்கு/smart persons) அல்லாது மற்றவர்களுக்கு ஆன்ம மேம்பாடு என்னும் ஊதியம் கிட்டாது”

 

திருக்குறள் ஆன்மிகமும் உளவியலும் கலந்த அற்புதக்கலவை. எவனொருவன் தன்னுடைய நலத்தைப்பேணும் அதேவேளையில் அதனை பிறருடைய நலத்தையும் பேணும் வகையில் அமைத்துக்கொள்கிறானோ அவனே மன நலம் கொண்டவன் என்பது வள்ளுவத்தின் திரண்ட  கருத்து. அது ஈகோவிலிருந்து நீங்கி ஆன்மாவில் நின்று செயல்படும்போதே இயலும். இதை உணர்ந்தவன்தான் வித்தகன்.

 

கடவுள் உலகில் குடியேறும் அளவுக்கு ஆன்மா செம்மையுறுவதற்கு பல பிறவிகள் பிடிக்கலாம். ஆனால் மேம்பட மேம்பட ஈகோவின் பிடி தளர்வதும் ஆன்மாவின் ஆளுகை அதிகரிப்பதுவும் உணர்ந்து மகிழத்தக்கது.

 

பென்னி குய்க் தன்னுடைய  நாட்காட்டியில் எழுதி வைத்து இருப்பதாக விக்கிபிடியாவில் கீழ் கண்ட வாசகங்கள் காணப்படுகின்றன:

 

”நான் ஒரே முறைதான் இந்த மன்னுலகில் வாழவிருக்கிறேன் இங்கே நல்லதைச்செய்வது என்னுடைய தேவையாக உள்ளது. அதனை நிறுத்தி வைக்கவோ அல்லது அசட்டை செய்யவோ கூடாது. ஏனெனில் நான் இவ்வுலகில் திரும்பவும் பிறக்கப்போவதில்லை”

 

    இப்படிப்பட்ட வாசகத்தை ஒருவர் தன்னுடைய ஈகோவிலிருந்து கூறமுடியுமா? தன்னுடைய ஆன்மாவை தான் என்ற ஈகோவை அறுத்து கைவசமாக்கியவர் அல்லவா பென்னி குய்க்? அதனால் தான் மன்னுயிரெல்லாம் அவரைத் தொழுகிறது. அவருடைய படத்தை தென் தமிழகத்தில் மக்கள் தெய்வங்களோடு தெய்வமாக வைத்து இன்றும் வணங்கி வருகின்றனர். பல பேர் தங்களது குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து மகிழ்கின்றனர். முத்தாய்ப்பாகத் தமிழக அரசு மணி மண்டபம் எழுப்பியுள்ளது தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய // மன்னுயி ரெல்லாம் தொழும் என்ற குறட்பாவிற்கு சாட்சி ஜான் பென்னி குய்க்கின் வாழ்க்கைச் சரித்திரம் என்றால் மிகையாகாது.

 

அர.வெங்கடாசலம் பிஎச்டி                             தொடர்புக்கு prof_venkat1947@yahoo.co.in  9886406695

Series Navigationபேசாமொழி – வீடு சிறப்பிதழ்..பிசாவும் தலாஷ் 2டும்
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    வால்மார்ட் நிறுவனம் இந்தியா வர விரும்புவது மக்களுக்கு சேவைசெய்யவா, இல்லை இங்கு லாபம் பெறவே.கிழக்கிந்திய கும்பனிக்காரனும் இந்தியா வந்ததும் சில வசதிகளை மக்களுக்கு செய்ததும் தனது வர்த்தக நோக்கத்திற்காகவே.ஏராளமான செல்வங்களை இங்கிருந்து கொண்டும் சென்றனர்.
    ஆனால் பென்னி குயிக் ஏன் இங்கிலாந்திலிருந்து தன் செல்வங்களை அந்நிய மண்ணில் கொட்டவேண்டும்.அதனால் அவன் அடைந்த பயன் என்ன?ஒன்றும் இல்லை.ஏனென்றால் அவன் பிரிட்டிஷ்காரன் அல்ல.உலக மாந்தன்.தன்னுயிரை மண்ணுயிராய் நினைத்தவன்.

    “நான் ஒருமுறைதான் இந்த மண்ணுலகில் வாழவிருக்கிறேன்.இங்கே நல்லது செய்வது என்னுடைய தேவையாக உள்ளது.”

    பென்னி குய்க் தன் தேவையை நிறைவு செய்து பிறவிப்பயனை அடைந்துவிட்டார்.ஆனால் நாம் இன்னும் தமிழனாகவும் இல்லை,இந்தியனாகவும் இல்லை. உலக மாந்தனாவது எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *