ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)

This entry is part 19 of 32 in the series 3 பிப்ரவரி 2013

stefanzwieg
தமிழில் லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த ஜெர்மானிய குறுநாவல் ‘ராஜவிளையாட்டைப்’ பற்றிய என் கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்கிறேன்.   ‘ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் (1881-1942) என்ற எழுத்தாளரின் குறுநாவலை ஆங்கில வழி தமிழாக்கி இருக்கிறார்.

லதா ராமகிருஷ்ணன், 1957ல் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில்  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  1983 முதல் கவிதை சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்- என்று பல தளங்களில் இயங்கி வருபவர். நவீனக் கவிதைகளை பிரெயில் முறையில் புத்தகமாக்கி, நவீன இலக்கியத்தை வாசிப்போரின் பரப்பை விரிவடையச் செய்திருக்கிறார். பல கவிஞரின் தொகுப்புக்களை ஒருங்கிணைத்து தொகுப்புக்களும் கொணர்திருக்கிறார். இன்று வரை தொடர்ந்து நவீன இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

‘ரிஷி’ என்ற பெயரில் கவிதைகளும், ‘அநாமிகா’ என்ற பெயரில் சிறுகதைகளும், லதா ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரில் மொழிபெயர்ப்புகளும், கட்டுரைகளும்  எழுதி வருகிறார். தொலை பேசித் துறையில் பணி புரிந்த இவர், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, தற்போது முழு நேர எழுத்தாளராக இலக்கியப்பணி ஆற்றி வருகிறார். தற்போது ‘என்.சி.பி.ஹெச்’இல் நிறைய மொழிபெயர்ப்புகள், குழந்தை இலக்கியம்  போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவைகளும் எண்ணிக்கையில் 30க்கும்  அதிகமாகவே இருக்கும்.

நவீன இலக்கியம் சார்ந்த 30க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்து-இரு மொழிகளிலும்- உள்ளார்.மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியம் இரண்டிலும் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாதவர். தன் மனதிற்கு உகந்த நூல்களை மட்டுமே மொழியாக்கம் செய்வது என்ற உறுதி கொண்டவர். தவம் போல தொடர்ந்து இயங்கி வருபவர்.

இதுவரை எட்டுக் கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுதிகள்  வெளியாகி இருக்கின்றன.

லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு, மூல நூலின் உயிரோட்டத்தோடு ஒட்டிச் செல்லும் வகையில் அமையப் பெற்றிருக்கும். அதே நேரத்தில் ரிஷியின் கவிதை மொழியின் செறிவான சொற்கள் கொண்டு அவருக்கே உரித்தான சொற்பிரயோகத்தோடும் விளங்கும். (மொழி பெயர்ப்பில் இப்போது பலவிதமான சொற்கள் மூலத்தோடு கொஞ்சமும் தொடர்பில்லாமல் வெளியாகி, புகழ்  அதிகம்பெறும் காலமாக இருக்கிறது.)  எந்த நூலையும் மொழிபெயர்க்கும் முன்னதாக அந்தத் துறை சார்ந்த சில துணை நூல்களையும், அந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் இன்னமும் சில நூல்களையும் படித்து முடித்த பின்பே மொழிபெயர்க்கப் போகும் நூலுக்குள் இறங்குவார். இதனால் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை இன்னமும் புரிந்து கொள்ளவும், எழுத்தாளரின் நடையை இன்னமும் உள்வாங்கிக் கொள்ளவும் இது உபயோகமாக இருக்கும்.

தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதை  விரும்பாதவர். தன் சாதனைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லாதவர். எந்தக் குழுவுடனும் தன்னை இணைத்துக் கொள்வதை விரும்பாதவர். எந்தப் பரிசுக்கும் தன் பெயரை பரிந்துரைப்பதை அறவே வெறுப்பவர். பதிப்பாளர்களிடம், தன் நூல்களை பரிசுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்று அன்போடு தெரிவித்து விடுவார். பெண் என்ற தனித்த அடையாளத்தை மறுப்பவர். ஆனால், பெண்ணிய சிந்தனைகளும் கருத்துக்களும் கொண்டவர். பெண்களுக்கு உதவியும் செய்து வருபவர். எல்லா உயிர்களிடத்தும் நேசமும், உதவி தேவைப்படுவோருக்குத் தன்னை வருத்திக்கொண்டு கூட உதவி செய்வார். ஆனால், அதை எல்லாம் பெரிதாக சொல்லிக்கொள்ளவோ, நினைத்துக் கொள்ளவோ கூட மாட்டார். பணி நிறைவேறியதும், அடுத்த பணிக்காக சென்றுவிடுவார். வெற்றுச் சொற்களோடு நின்றுவிடாமல் இலக்கியம் சார்ந்த பலருக்கும், உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவார்.

நான் சொல்லும் இத்தனையும் ஒரு ஒற்றைச் சொல்லில், ‘ஒன்றுமில்லை க்ருஷாங்கினி’ என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார். ‘என் மறைவுக்குப் பின் எந்தத் தடயமும் இருக்க வேண்டியதில்லை. அதற்கான தேவை ஏதும் அதில் இல்லை’ என்பார்.

நான் அவரைப் பற்றி எழுதுவதை அவரால் தடுக்க முடியாது.

இந்த நூல் முழுக்க முழுக்க சதுரங்க விளையாட்டை உள்ளடக்கியதாக இருக்கிறது. மற்ற விளையாட்டுகளுக்கும், சதுரங்கத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, உடல் இயக்கம் அற்ற அறிவு, அறிவு மட்டுமே கொண்டு விளையாடுவதுதான். மற்ற விளையாட்டுக்களில், அது புறத்தில் விளையாடுவதாக இருந்தாலும், (கிரிக்கட் போன்று) உள்ளிடத்தில் விளையாடுவதாக இருந்தாலும், (கேரம் போன்றவை) உடலுக்கான இயக்கம் அந்த விளையாட்டுகளுக்கு தேவையாக இருக்கும். எண்ணம், மனதில் தோன்றும் உடல் விளையாட்டில் ஈடுபடும். சதுரங்கத்தில் எண்ணம் இயக்கம் எல்லாமே அறிவுதான். எனவே, கருப்பு, வெள்ளை 64 கட்டங்களிலிருந்து கண்களையும் மனத்தையும் மீட்க இயலாமல் கட்டிப் போட்டுவிடுவதால், சதுரங்கம் விளையாடும் பலரும், கண்களுக்கும் மேலாக, புருவத்தில் கைகளைக்கொண்டு, பலகை, பலகை மீதான காய்கள், அதன் நகர்வுகள்  அது பற்றிய எண்ண ஓட்டம் என்று தங்களைக் குறுக்கிக் கொள்வார்கள். புறச்சத்தம், புறக்காட்சி எதுவும் அவர்கள் அறிவில் புகாது. இந்த நூலில் அது மிக அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டம் முடிவிற்கு வந்தபின் கப்பலின் மேல் தளத்தில் நடமாடும் ஓசை, சிறு காற்றின் அசைவுகள், மனிதர்களின் பேச்சு, கடலின் ஓசை என எல்லாமே ஆட்டக்காரனுக்கு புலனாகிறது.

சதுரங்க விளையாட்டுக்காரர்களுக்கு பொதுவாகப் பேச்சுக் குறைவு. சிந்தனையும், வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையும் கூட ஆட்டம் போல இருக்கும். எந்தச் செயலையும் தனியாகப் பார்க்காமல், முன்னும் பின்னும் இணைத்துப் பார்ப்பது, எட்டி நின்று செயல்களை அணுகுவது போன்றவை இருக்கும். கேள்விகளுக்கு அல்லது உரையாடல்களுக்கு ஓரிரு சொற்களில் பதில் அமையும்.  வாழ்க்கையின் சம்பவங்களை, ஏற்ற தாழ்வுகளை விலகி நின்று கணக்கிடுவார்கள். மூளை கொதித்துக் கொண்டிருந்தாலும், உடலில் மிகுந்த நிதானமும், கட்டுப்பாடும் அழுத்தமும் கொண்டு இருப்பார்கள். எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்ற முடியாவிட்டாலும் இதில் பல குணங்களும் அவர்களிடம் இருக்கும். இவை என் அனுபவங்கள்.

யுகோஸ்லாவியாவைச் சார்ந்த ஏழையின் மகனான ஜ்ஸெண்டோவிற்கு பனிரெண்டு வயதாகும் பொழுது அவனின் தந்தை இறந்துவிட மதகுருவால் வளர்க்கப்படுகிறான்.

ஜ்ஸெண்டோவைப் பற்றிய வர்ணனை இது:

‘படிப்பில் நாட்டமில்லாத, பேசவைக்கவே பெரும் பாடு படச் செய்யும், அகலமான நெற்றியை உடையவன் அவன். பள்ளியில் கற்றுக் கொடுக்கும் எதையும் அவனால் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை. மதகுரு தொடர்ந்து முயற்சித்தும், அவன் தொடர்ந்து எழுத்துக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். பார்த்தே இராதது போல.  எளிய பாடத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவன். பதினான்கு வயதான பின்பும் கூட ஏதும் தெரியாமல் வளருகிறான்.

‘தண்ணீர் மொண்டு வைப்பான், சமையல் அறையைச் சுத்தம் செய்வான். ஆனால், எல்லாமே சகிக்க முடியாத அளவிற்கு நிதானமாய்.’

இந்த வர்ணனைகள் எல்லாம் பிற்காலத்தில் சதுரங்கத்தில் உலக சாம்பியன் ஆகப் போகும் ஒரு சிறுவனைப் பற்றியது என்றால் நம்புவது கடினம். ஆனால், மிர்க்கோ ஜ்ஸெண்ட்டோவின் மூளையில் ஏதோ ஒரு இழையில் விளையாட்டு இருந்திருக்கிறது.

இப்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் சதுரங்க வீரர்கள் சிலரும் கூட படிப்பில் சூட்டிகையாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால், இந்த அறுபத்திநாலு கருப்பு வெள்ளைக் கட்டங்களின் பல நகர்வுகளை மனதினுள் அடுக்கிவைத்துக் கொண்டு, கணக்கிட்டு விளையாடுபவர்களாக இருக்கிறார்கள். முதல் மதிப்பெண் பெறும் மாணவனால், இந்த அறுபத்திநான்கு கட்டங்களின் ஓரிரு நகர்வுகளைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு ஆட முடியாமல் போவதும் நடைமுறையில் உள்ளது. ஏன் எனில் இது அறிவு சார் விளையாட்டு என்பதால் மக்களின் கணிப்பு வேறாக இருக்கிறது. சதுரங்கம், சிலவகையில் ஊனமுற்றோர்க்கு மிகுந்த தன்னம்பிக்கை தருவதாகவும், வாழ்க்கையில் நம்மாலும் சாதனை செய்ய முடியும் என்ற உறுதியைத் தருவதாகவும் கூட இருக்கிறது.

ஜ்ஸெண்டோவின் தோற்றம், நடை உடை எல்லாமே ஒரு கனவானைப் போல, அவன் சதுரங்கம் ஆடத்தொடங்கி வெற்றிகள் பெறப் பெற மாற்றம் கொள்கிறது.  ஆனாலும், அவன் உள்ளுக்கு இன்னமும் படிப்பறிவில்லாத ஓர் ஏழை மந்த புத்தி மனிதனாக தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறான். சதுரங்கத்தில் நூற்றுக் கணக்கான நகர்வுகளை அவனால் மனதினுள் பதிய வைத்துக் கொண்டு, ஆட்டத்தின் போக்கையும், முடிவுகளையும் அது சார்பான கணக்குகளையும் விரல் நுனிக்குள் கொண்டு வந்துவிட முடிகிறது.

இந்த நூலில் பக்கம் 43 இல்

‘ஒரு மனிதன் தன் மொத்த வாழ்வையும் அறுபத்தி நான்கு கருப்பு வெள்ளைக் கட்டங்களைக் கொண்ட ஒரு சிறு வெளியில் கழித்துவிட முடியும் என்றால்…

மனிதனால் கண்டிபிடிக்கப்பட்ட வல்ல விளையாட்டுக்களில் எல்லாம் வல்ல விளையாட்டாக விளங்கும், தற்செயல் என்பதன் எல்லாவித மேலாதிக்கத்தையும் முறியடித்து முன்னேறுவதாய், இறுதியில் வெற்றி வாகை ஒரு அதி சிறந்த அறிவுசாலிக்கே வழங்குவதாய், ஒரு பிரத்யேக வகையில் உளத்திறன் கொண்டோருக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த விளையாட்டு…;’

என்ற தொடர் இதன் உள் அர்த்தத்தை முறியடிக்கும் விதமாக இரு நபர்களின் கூட்டாக உருவாகி உள்ளது இநூலில்.

பக்கம் 44 இல்

‘சதுரங்கம்- ஒரு அறிவியல்- அது ஒரு கலை. எண்ணற்ற அணிச் சேர்க்கைகளாலும், வரிசை  மாற்றங்களாலும், வரையறைக்குள்ளிருந்து விடுபடுவது’ என்று கதை சொல்லியின் சதுரங்க மூளையும், வியப்பும் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டு இருக்கிறது.விளையாட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல் இத்தகைய குறுநாவல் எழுதுவது சாத்யமற்றது.நூறுபக்கங்களே உடைய இந்த குறு நாவலில் மிக அற்புதமாக இரு வெவ்வேறு வகை மனிதனுடைய விளையாட்டு அறிவுத் திறன் வேறுபாடும், நேர்த்தியும் பதிவாக்கப்பட்டு இருக்கிறது.

சதுரங்கம் என்பதே போர் அல்லவா? உயிருள்ள உடைமைகளை வைத்து விளையாடி வெட்டிச் சாய்த்து உயிருடன் விளையாடிய விளையாட்டல்லவா?

டாக்டர் ‘பி’ ஹிட்லரின் நாஜிப் படையினரால் தனிமைச் சிறைக்கு தள்ளப்படுகிறார்.வதை முகாம்களில் பார்க்க மனித முகங்கள் இருக்கும். கேட்க மனிதக் குரல்கள் இருக்கும்.தனிமைச் சிறையில் இவை ஏதும் கிடையாது.விசாரணைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப் படுகிறான் டாக்டர் ‘பி’.  ஷ¥க்களின் காலடி ஓசைக்காக ஒரு தனிமை அறையில் இருப்பவன் மனப்பிறழ்வுக்கு உள்ளாகாமல் இருக்க, தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வழியாக சதுரங்கத்தைக் கையிலெடுக்கிறான்.ஒரு காவலாளியின் கோட்டுப் பயில் இருந்த புத்தகத்தை திருடி அறைக்குச் சென்று பார்க்கும் போது அதில் 150 சதுரங்க விளையாட்டுக்களின் நகர்வுகள் மட்டுமே அச்சடிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். வேறு வழியின்றி சதுரங்கத்தை ஆடத் துவங்குகிறான். சுமாரான 64 கட்டங்கள் கொண்ட பலகையாக தனது படுக்கை விரிப்பை மடித்து, அதில் ரொட்டித்துண்டுகளைக் காய்களாக்கி ஆடத் துவங்குகிறான்.அந்த கைதிக்குள் அந்த விளையாட்டு ஸ்திரமாக ஊன்றத் துவங்கி விடுகிறது. ரொட்டித்துண்டுகள் காய்களாக ஆக்கப்பட்டு விளையாடப்பட்ட அந்த விளயாட்டை பின்னாளில், போர்வையின் கட்டங்களும் இல்லாமல், காய்களும் இல்லாமலே விளையாட ஆரம்பிக்கிறான்.

வெட்டவெளியில், கட்டங்களற்ற அந்தத் தனி அறையில் டாக்டர்’பி’  தன்னையே இருகூறுகளாகப் பிளந்து கருப்புக் கட்டங்களுக்கும், வெள்ளைக் கட்டங்களுக்கும்  இட்டு, எதிரெதிர் ஆட்டக்காரனாகி கட்டங்களைக் கட்டி ஆளத் துவங்குகிறான்.  ஆனால், அந்த தொடர் ஆட்டமும், தொடர் வெற்றி தோல்வியும் தொடர் வெறியும் டாக்டர் ‘பி’யை மனப் பிறழ்வுக்கு தள்ளுகிறது. மன நோயிலிருந்து தப்பிக்க துவங்கப்பட்ட ஆட்டமே அவனை நோயாளியாக மாற்றிவிடுகிறது.

சதுரங்க ஆட்டக்காரன், தன் கண்ணெதிரில் நிகழும் தவறான நகர்வுக்கு பெரும் பதட்டமடைவான். இருபத்தி ஐந்து ஆண்டுகள் சுதந்திரமான மனிதனாக வலம் வரும் டாகடர்  ‘பி’ , கப்பலில் அது போன்ற ஒரு சூழலில் மாட்டிக் கொள்கிறான். தவறான ஆட்டத்திலிருந்து ஒரு சாதாரண விளையாட்டுக்காரனைக் காப்பாற்ற எதிராளியுடன் விளையாடத் துவங்குகிறான். அவனை வெற்றியும் கொள்கிறான்.தான் வென்றது உலக சாம்பியன் என்ற தகவல் அவனைப் பதட்டமடையச் செய்கிறது. உலக சாம்பியனுக்கோ, முன் பின் தெரியாத ஒரு கற்றுக்குட்டியிடம் தோற்ற வலி உடல் முழுவதும் நிரம்புகிறது.

தொடர்ந்து விளையாட வற்புறுத்தும் உலக சாம்பியன், தன் தோல்வியை  மறுக்க  திரும்பத் திரும்ப ஆடுகிறான், தோற்கிறான். விளையாட்டால் தோற்க அடிக்க முடியாத போது எதிராளியின் பலவீனத்தால் வீழ்த்தப் பார்க்கிறான். டாக்டர்’பி’க்கு காய் நகர்வுக்கு ஏற்படும் காத்திருத்தல் பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. மந்த புத்திக்காரனான உலக சாம்பியன் ஜ்ஸெண்ட்டோ  இதை உணர்ந்து கொள்கிறான். அந்த பலவீனத்தையே ஆயுதமாக்கி மிக மிகத் தாமதமாக காய் நகர்த்தல்களை கொடுக்கிறான்.  டாக்டர்’பி’க்கு காத்திருப்பு என்பது சதுரங்கக் கட்டங்களிலிருந்து, விசாரனைக்காக காத்திருந்தது, அதன் இறுக்கம், தனிமைச் சிறையின் உணர்வு மறுபடியும் எல்லாம் மேலோங்குகிறது. தான் சதுரங்கம் ஆடத்துவங்கிய சூழலை உணரத்தொடங்குகிறான். அது உடல் மனம் இரண்டையுமே ஆக்கரமிக்க, ஆடமுடியாமல் மனப் பிறழ்வுக்கு மறுபடியும் உள்ளாகி விடுவோம் என்று உணர்ந்த அந்தக் கணத்தில் தன்னையும் ஆட்டத்தையும் வேறுபடுத்தி தன் சுயநிலையை அடைகிறான்.

குறுநாவல் முழுக்க மனம் சம்பந்தப்பட்டதாகவும், மனிதர்களின் அற்பத்தன்மை நிறைந்த உலகமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ராணியின் ஒட்டகம், ராணியின் யானை, ராஜாவின் சேவகன் என்று விளையாட்டு நகர்வுகளாக சொல்லப்பட்டிருக்கிறது. விளையாட்டின் தோல்வி, மன பாதிப்புகுள்ளாகும் விதம் பற்றியும் சொல்லப்படிருக்கிறது.

குறு நாவல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சிறு சிறு அத்யாயங்களாக சொல்லப்படும் அதே வேளையில், சதுரங்க விளையாட்டைப் போலவே தளர்வான நகர்தல்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இறுக்கமும், தீவிரமும், அடுத்த அடுத்த நகர்வுகளுக்கு நீண்ட நேரம்  கோரும் சதுரங்க விளையாட்டைப் போலவே அத்யாயங்கள்  பிரித்து அடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த குறு நாவல் வெறும் சதுரங்கம் என்ற விளையாட்டுத் தளத்திலிருந்து பெயர்ந்து, தனிமனித சண்டை, நாடுகளுக்கு இடயேயான போர், உலக யுத்தம், ஹிட்லரின் படை என மாறி பயணிக்கிறது. விளையாட்டின் உத்திகள் கூட போரின் தந்திரமாக மாறிப் போகிறது. போர்+ சதுரங்கம் என நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

130 பக்க  நூலில் ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் 30 பக்கங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆசிரியர் மறைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நாவல் இன்னமும் புதியதாகவே உள்ளது.

இந்த நூலின் முகப்பு அட்டை பற்றிய பதிவும் செய்யப்பட வேண்டும். விஸ்வரூப ராஜா, மங்கலான பின்புலத்தில் ஒரு சில சதுரங்களில் இடையில் ராஜாவின் இருப்பு, சில நகர்வுகளுக்குப்பின் ராஜாவின் சரிவு மெல்ல மெல்ல, முற்றிலுமாக சரிந்து கட்டங்களில் வீழ்ந்து கிடக்கும் ராஜா என அட்டை வடிவமைக்கப்பாட்டிருக்கிறது. சதுரங்கப்பலகையில் ராஜா ‘டிக்’ என்ற ஒலியுடன் வீழ்த்தப்படும் ஒவ்வொரு நொடியும் ராஜாவைச் சார்ந்தவன் மன அதிர்ச்சியும், ராஜாவை சாய்த்தவனின் பேருவகையும் உலகில் எதோ ஒரு மூலையில் எப்போதும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நமக்கோ மக்கள் சூழ இருந்தும், தற்காலத்தில் மன மாற்றத்திற்கும், தனிமைக்குமாக எல்லோரிடமிருந்தும் மனத்தளவில் விலகி கைப்பேசியில் விளையாட்டு, கணனியில் சீட்டாட்டம் என்று பொழுது சென்று கொண்டிருக்கிறது.
புதுப்புனல் வெளியீடாக ‘ராஜ விளையாட்டு’ பதிப்பாக்கம் பெற்று இருக்கிறது.
க்ருஷாங்கினி

Series Navigationவிஸ்பரூபம் : புரியத்தான் இல்லைசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6
author

க்ருஷாங்கினி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *