கூந்தல் அழகி கோகிலா..!

This entry is part 31 of 31 in the series 10 பெப்ருவரி 2013

 

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர். சிதம்பரம்.
(இந்தக் கதைக்கு விதையாக இருந்த ஒரு ஜோக்கை எனக்கு எழுதி அதைப் படித்துச் சொல்லி என்னைச் சிரிக்க வைத்து இப்படிச் சிந்திக்க வைத்தவருக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.)
கொரியர் போஸ்டில் வந்து இறங்கிய இன்விடேஷன் அரை மணி நேரமாகியும் இன்னும் என் கையை விட்டு இறங்காமல் பசையாய் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது.. எனது பாசமுள்ள தோழி வசந்தியிடமிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த திருமண அழைப்பு அது. அதிலும் மறக்காமல் என் பட்டப் பெயரை எழுதி இருந்தாள் . என் அன்பு ‘சாபிகோலா’…வுக்கு என்று. இத்தனை வருடத்தில் நானே மறந்து விட்டப் என் கல்லூரி நாட்களின் பட்டபேரு அது..சாட்டைப் பின்னல் கோகிலா…அதையும் சுருக்கி ‘சாபிகோலா ‘ என்று கோகோ கோலா வுக்கு சமமா எனக்கு ஒரு அங்கீகாரத்தை தந்தது என் சாட்டைப் பின்னலாக்கும். என் நினைவு வளையங்கள் பின்நோக்கி மதுரை வரை சுழல ஆரம்பிக்கத் தயாரானது.
வசந்தி தான் மதுரையிலிருந்து அனுப்பி இருக்காள். எத்தனை வருஷமாச்சு வசந்தியைப் பார்த்து.வசந்தியைப் பற்றி நினைத்ததுமே கூடவே ஒட்டிக் கொண்டு வந்தது என் பின்னலும். காலேஜில் ஒன்றாகப் படித்த போது, என் அடர்த்தியான கூந்தலை நான் பின்னிப் போட்டிருப்பதைப் பார்த்து அந்த ஒற்றைப் பின்னல் மேலே அவளுக்கு ரெட்டைக் கண்ணு. ஒரே ஒரு தடவை மட்டுமாவது தொட்டுப் பார்த்துக்கறேனே…. கொஞ்சம் விடேன் ..என்று கெஞ்சுவாள்….விடமாட்டேனே…..! நான் தலையை சாய்த்துக் கொண்டு “தொடாதேடீ ..வலிக்கும்னு…”ன்னு சொல்லி வேகமாக பின்னுக்கு நகர்ந்து ஓடுவேன்.
அவள் ஏமாற்றத்தில்….ஏய்…டூப்பா....இருந்தாலும்…ரொம்பப் பிரமாதம்.. அசத்தரே கோகிலா..ன்னு சிரிப்பாள் .
போடீ வசந்தி உன் கொள்ளிக் கண்ணை வைக்காதே..நீ தொட்டுப் பார்க்கறேன்னு சொல்லிட்டு இழுத்துப் பார்ப்பே..வலியை யார் தாங்கறது…? டூப்பு…ஒட்டு….விக்கு…சவுரி….என்ன வேணாச் சொல்லிக்கோ..பக்கத்துல வந்துடாதேன்னு காத தூரம் ஓடுவேன். அவ்வளவு பெருமையா தடவித் தடவி வளர்த்த தலைமயிர்.
என்னைப் பார்த்தவர்களுக்கு என் முகம் கூட சட்டுன்னு மறந்து போயிடும்..முடி மட்டும் எப்பவும் மறக்காது…அவ்வளவு பிரசித்தமாக்கும்..
ஏண்டி..உனக்கு மட்டும் கடவுள் உயிரைக் கொண்டு போய் தலை மயிரோடு பின்னி வெச்சிருக்கான்னு …வசந்தி தான் கேலி பண்ணுவாள் .
ம்க்கும்…உயிரைப் பிடுங்காதே …! ன்னு சொல்லி நானும் பிகு பண்ணிக் கொள்வேன். கடைசி வரைக்கும் அவள் ஆசைப் பட்ட “தொட்டுப் பார்க்கவா…இல்லை இழுத்துப் பார்க்கவா….” என்ற அந்த நிகழ்ச்சி நடக்கவே இல்லை. கடைசி வரையில் தோற்றுப் போனாள் வசந்தி.
ஒரு நாள் சாபம் விட்டது போலச் சொன்னது இன்னும் எதிரொலியாக ” உனக்கு மாப்பிள்ளை பார்க்க வரும்போது ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிடு…அப்போ தான் நீ சீவி முடிச்சி சிங்காரிச்சு ரூமை விட்டு வெளிய வரவும்… மாப்பிள்ளை வீட்டுக் காரங்க பொண்ணு பார்க்க உங்க வீட்டுக்கு வரவும் சரியா இருக்கும்…” என்று கிண்டல் செய்தாள். அதோட மட்டுமா…”பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன் சொல்லிட்டு…அவங்க தலையை ஆசையா கடைசியா ஒரு தடவை தடவிப் பார்த்துப்பாங்க.” தெரியுமா? ஏன்னு சொல்லு பார்ப்போம்….என்பாள்.
ஏண்டி வசந்தி..இப்படிச் சொல்றே…? நானும் அவளை விடாமல் துரத்துவேன்.
வந்துட்டு உன் முடியைப் பார்த்ததும்….அந்தக் குடும்பமே நேராத் திருப்பதிக்குப் போயிரும்…ஜாக்கிரததை …!
அச்சச்சோ…..எதுக்குடி….?
மத்த அத்தனை தலைக்கும் போட வேண்டிய மொத்த எண்ணைக்கு ஆகும் செலவை உன் ஒரே தலைக்கு மொத்தமா எழுதி வெச்சிடத் தான்…என்ன சொல்றே..? சரி தானே…அதோட இல்லாமல்…என்று அவள் இழுக்கவும்.
இன்னும் என்ன..அதையும் சொல்லித் தொலை…? என்று நான் ஆவலாக.
உனக்கு வரப் போறவர் உனக்கு சம்மதம் சொல்றதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை கடைசியா நல்லாக் கணக்குப் போட்டுப் பார்த்துக்கணும்…”தன மொத்த சம்பளத்தையும், மொத்த சொத்தையும் உன் முடிக்கு உயில் எழுதி வைக்கத் தயாரா என்று…? என்று சொல்லிவிட்டு ஒரு இஞ்ச் பின்னாடி நகர்ந்து கொண்டாள் .
சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு…பொய் கோபத்தோட ,அடிக் கழுத…..உனக்குப் பொறாமை.. அதான்… இப்படில்லாம் ஜோக் வருது…”ஆட்டுக்கு வால்” என்று நான் சொன்னதை கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல்… அவளது சின்னக் குதிரை வாலை…இப்படி அப்படி ஆட்டி எனக்கே அழகு காமித்து விட்டுப் போவாள் வசந்தி. எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள அவளுக்குத் தெரியும்.
என்றோ  ஒரு நாள்.கடலையைக் கொறித்தபடியே மரத்தடி கல்லு மேலே அமர்ந்து கொண்டு …ஆற்றாமையில்….டீ …கோகிலா …நீ என்னோட உயிர்த் தோழி தானே…..இந்த ஆட்டு வாலை ஒரு குதிரை வாலா மாத்த ஏதாவது வழி சொல்லேன்..?.எனக்கு வீட்டில் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க….என்று கேட்பாள். என் பின்னலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடியே சொல்வாள்.
நானும் சிரித்துக் கொண்டே….போனால் போகட்டும், சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோ…நேரா கடைக்குப் போ….ஒட்டுச் சவுரி வாங்கு..வெச்சுப் பின்னிக்கோ ப்ராப்ளம் சால்வ்ட்….கல்யாணமும் சால்வ்ட்….என்று கை தட்டுவேன்… என் குரலில் இருக்கும் எகத்தாளம், கர்வம் இரண்டும் அவள் முகத்தை கோபத்தில் வெடிக்கச் சிவக்க வைக்கும்.
உன் மூஞ்சி…! முடியெல்லாம் நம்ம தலையில் இருக்கும் வரை மட்டும் தான் தலைக்கு அலங்காரம்..உதிர ஆரம்பிச்சாத் தெரியும் சேதி…ஒண்ணையும் ஒட்ட முடியாது….”வளர்வதும்… வீழ்வதும்… அவனருளாலே…! ” என்று டி ..எம்.எஸ் குரலில் மாற்றிப் பாடியபடியே .எதுவும் நம் கையில் இல்லை..அவள் குரலும் உயர்ந்து வித்தியாசமாக ஒலிக்கும் எனக்கு.
 சரி…வேண்டாண்டி விடு…நமக்குள்ளே எதுக்கு இப்போ இது….?. கடலைத் தோலைத்  தட்டிவிட்டபடியே..அந்தப் பொட்டலப் பேப்பரை  அழுத்தி விரித்து…ஹேய்…இந்த ஜோக்கைக் கேளேன்…என்றாள் .
ஜோக்கா….? ஆரம்பிச்சுட்டியா….ம்ம்….படி….. படி….

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்..!

 

ஏண்டி….சிரிப்பு வரலையா..? இன்னொரு ஜோக்….!

போதும் வசந்தி போலாம்…நான் எதுவும் உன் மனசு வருத்தப் படும்படியா  தப்பா சொல்லிட்டேனா…? சாரி வசந்தி….என் மனசுக்கு கஷ்டமா இருக்கு.

அத்த விடு….அதெல்லாம் ஆண்டவன் கொடுத்தது….எனக்கு இதுவே தலையில் நின்னாப் போதும் என்று ஆசையாக அவளது அரை அடிக் கூந்தலைத் தடவிக் கொண்டே ..அவளே தரைக்கு இறங்கி வருவாள்.
 
 எங்களது இந்த புரிந்த நட்பை எங்கள் இருவரின் கல்யாணமும் விலக்கி தூரம் வைத்தது. மனசு மட்டும் காலேஜ் வாசலிலேயே நான் வர மாட்டேன் போ….என்று அழிச்சாட்டியம் செய்தபடி அடம் பிடித்து அங்கேயே இடம் பிடித்து நின்று கொண்டது.
கோகிலா…..கண்டிப்பா நான் “மீண்டும்…கோகிலாவை” என் வாழ்வில் நடக்கும் அத்தனை நல்ல நிகழ்ச்சிக்கும் கண்டிப்பாக எதிர் பார்ப்பேன்.. ஒரு சத்தியம் பண்ணிட்டு பிரிஞ்சுடலாம்…! காலேஜின் கடைசி நாளில் வசந்தி என்னை நோக்கி அவளது மருதாணிக் கையை நீட்டுகிறாள் .
என்னால வர முடியலைன்னாலும்…..”ஸ்ரீதேவியை” அனுப்பி வைக்கிறேன்…. சீடீயாகவாவது….”மீண்டும் கோகிலா” வருவாள்…என்று நான் சொன்னதும்….பிரிவின் சோகம் தெரியாமல் இருவரும் சேர்ந்து சிரித்த நாள் அது..அப்படியே…. சிரித்துக் கொண்டே கண்டிப்பா எங்கே இருந்தாலும்…நீ தெரியப் படுத்தினால் ஓடோடி வருவேன்….கையைப் பிடித்துக் கொண்டு சொன்னேன்…முன்பெல்லாம் எனக்கு வசந்தி என்னை மறக்காமல் அனுப்பி வைத்த அவளுடைய அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் தவறாமல் கலந்து கொண்டவள் தான். பல வருடங்கள் கழித்து இப்போது மகளின் திருமணம்….!
இன்றும் பசுமையாக நெஞ்சோடு நிற்கும் இந்த உணர்வுகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது
 இருபத்தி நான்கு வருஷங்கள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. இதோ இன்று கைகளில் வசந்தியின் அதே கையெழுத்து சிநேகமாகச் சிரித்தது.
என் கண்கள் பனித்தன .
 தனது ஒரே மகள் சுஜாதாவின் திருமணத்துக்கு அவசியம் வந்து கலந்து கொள்ளவேண்டும் என்று பத்திரிகையோடு கூடவே தன் கைப்பட அன்பாக எழுதி இருந்தவள் மறக்காமல்…”உன்னைப் பார்க்கணும்னு கூட எனக்கு அவ்ளோ ஆசை இல்லை…ஆனால் நீ பெருமையா அலட்டிபியே…அந்த சாட்டைப் பின்னலைப் பார்க்கணும் போல இருக்குடி… அதுக்காகவாவது நீ கண்டிப்பா முன்னாடியே வந்துடு…” என்று குறிப்பு எழுதி ஸ்மைலி போட்டிருந்தாள் . குறும்புக் காரி…!
 எத்தனை வருஷம் ஆனால் என்ன, மனசுக்குள் பதிந்து போன உருவங்களாக நான் வசந்தியை என் மன அகழியிலிருந்து தோண்டி எடுத்தேன்…அப்போதும் அவள்..” அம்மாடியோ…இது நிஜமா…. சவுரியா…? என்று என் தலைப் பின்னலை இழுப்பது போலவே கண் முன்னே தோன்றினாள்.
 “எண் சாண் உடம்பிற்கு கூந்தலே பிரதானம்… அதுவும் நீண்ட கூந்தல் ! தொடை வரை தொங்கும் கூந்தல் உனக்கு..! இந்திரா காந்திக்கு என் அனுதாபம் ! ஆனால் உனக்கு மட்டும் சிரசுக்குச் சிகரமா “சீப்பே” பிரதானம் ….இந்தா வெச்சுக்கோ…”என்று கவிதையாய்ப் பேசி என் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த ஒரு தந்தச் சீப்பு பரிசளித்தது இன்னும் மனசுக்குள் எட்டிப் பார்த்துச் சிரித்தது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பலமும், சில பலவீனமும் இருக்கும்….தனித்துவமும் இருக்கும். கடவுள் படைபே அப்படித்தான். ஆனால் எனக்கு மட்டும் என் நாலடிக் கூந்தல் தான் பலமும், பலவீனமும்…எனது சந்தோஷமும் கவலையும் எப்பவுமே ரொம்ப வித்தியாசமாய் என் தலை முடி பத்தி தான் இருக்கும்.அதைத் தாண்டி நான் எதற்கும் கவலைப் பட்டதோ, சந்தோஷப் பட்டதோ கிடையாது.
ஒரு தடவை பள்ளியில் என் கிளாசில் தமிழ் பாடம் நடந்துண்டு இருக்கும்போது நான் கவனிக்காமல் என் பின்னலைத் தடவி விட்டுக் கொண்டிருந்ததை கவனித்த “தமிழ் டீச்சர் அம்மா” கோபத்தோடு … கோகிலா எழுந்திரு இதற்கு பதிலைச் சொல்லு….பார்ப்போம்..என்றவர்..கட கட வென்று ஒரு பாடலைப் பாட..என் கால்கள் கிடு கிடு வென்று நடுங்கியது.
 “குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
 மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
 நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையால்
 கல்வி அழகே அழகு..”
 இந்தச் செய்யுள் என்ன சொல்லுது…? தமிழ் டீச்சர் கேள்வி கேட்டுவிட்டு என்னையே பார்த்தபடி பதிலுக்குக் காத்திருந்தார்.
 நான் மெல்ல அங்கிருக்கும் என் சக தோழிகள் முகத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்…எல்லார் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு…”இவள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் பார்ப்போம்…” என்று அவர்களின் கண்கள் என்னை நோக்கி ஏவு கணைகளாகத தாக்கிக் காத்திருக்க.
செய்யுள் சொல்லற எதுவுமே எனக்குக் காதுல கேட்கலை டீச்சர்…! நான் அவர்களது எரியும் மனத்தில் எண்ணையை விட்டேன்.
எனது இந்தப் பதிலை எதிர்பார்க்காத அத்தனை பேரும் ‘குபீர்’ன்னு சிரிக்க…நான் எங்கிருந்தோ தப்பிச்சேன்.. பிழைச்சேன்…..என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே தமிழம்மாவின் கைப்பிரம்பு என் தோளைத் தட்டியது.
ஒரு நாலடியார் பாடலுக்கு உரை சொல்லத் தெரியலை… உனக்கெதுக்கு நாலடிக் கூந்தல்…? அதைத் தான் இந்தச் செய்யுளில் சொல்றார்…..கூந்தல் நீளமாயிருப்பது சிறப்பல்ல…அதைத் தாங்கும் தலைக்குள்ளே என்ன இருக்குன்னு…? அது தான் கல்வியால் வளருவது …இப்படி அவர் மேற்கொண்டு சொல்லிக் கொண்டு போன கருத்துக்கள் எதுவும் என் காதுக்குள் விழவே இல்லை….நான் சக தோழிகள் முன்னே அவமானப் படுத்தப் பட்டு விட்டதால் என் ஐம்புலன்களும் மூடிக் கொண்டன.
பாடம் கவனிக்கிற நேரத்தில் தலை முடியைப் பாராக்கு பார்த்துட்டு இருந்தா….உன் காது கேக்காது…ஆனால் என் பிரம்பு பேசும்…! என்று ஒரு போடு போட்டார். அதே நினைவோடு என் தோளைத் தொட்டுப் பார்க்கிறேன்…அன்று தேம்பித் தேம்பி அழுதேன்…ஆனால் இன்றோ…சிலிர்த்துக் கொண்டு சிரிக்கிறேன்.
எப்பவுமே நமக்கு எது ரொம்ப முக்கியமான விஷயமா ஒரு சமயத்தில் நினைக்கிறோமோ அதே விஷயம் தான் பின்னாளில் மிக மிகச் சாதாரணமாகி விடுகிறது… அப்படியிருக்க..என் தலைமுடி விஷயம் மட்டும் அன்றும் முக்கியமாக இருந்ததை எனக்கு இன்றும் அதே போல் முக்கியமாகவே….இருக்கிறது..ம்ம்…நான் வாங்கிண்டு வந்த வரம் இது தானோ என்னவோ…?
கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அவசியம் சத்தியம் செய்தது போல போயாகணும்.ஒவ்வொரு நாளையும் வயிற்றில் கிலி பிடித்து கரைத்துக் கொண்டிருந்தது. கணவரிடம் சொல்லி “சரி இந்த முறை நீ மட்டும் போயிட்டு வந்துடு ” என்று பெரிய மனத்தைக் கொஞ்சம் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே தாரை வார்த்தார். என் மகனின் பார்வையில்…” என்ன பண்ணப் போறே..? நீ என்ன பண்ணப் போறே? ன்னு கேலிச் சித்திரம் வரைந்து ஒட்டியிருந்தது.
கல்யாணத்துக்குப் போகப் போகிறோம் வசந்தியைப் பார்க்கப் போகிறேன் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்… மனதை முடி முடக்கியது..
இப்போ என்னை வசந்தி பார்த்தால்…. நினைக்கவே என்னமோ மாதிரி இருந்தது.
பேசாமல் போகாட்டா என்ன..?….என் மனக்குரங்கு மொண்டி செய்தது. எப்படி என் தலையை காட்டுவது..?
வசந்தி இப்பவும் இழுத்துப் பார்க்கிறேன், பிடித்துப் பார்க்கிறேன்னு அடம்பிடித்து என்னை பயமுறுத்துவாளே.
இருபது வயதில் எதற்கு அப்படி பயந்தேனோ இப்போ ஐம்பது வயதிலும் அதற்கே பயப்படுவது இந்த உலகத்திலேயே நான் ஒருத்தியாகத் தான் இருக்கும்.
இதே சிந்தனையோடு ஷாப்பிங் சென்றேன்.வழியில் இருக்கும் ஒவ்வொரு கடையாக ஓரக் கண்ணால் பார்த்தபடியே என் கால்கள் அனிச்சையாக நான் நடந்து போய்கொண்டிருக்கும் போதே…இப்படி இரண்டு நாளாக மனத்தைக் குடைந்து கொண்டிருந்த ஒரு பிரச்சனை “அதைப் பார்த்ததும்” சட்டென்று முடிவுக்கு வந்தது போலிருந்தது எனக்கு.
என் கண்களின் முன்னே “ஆரா சில்க்ஸ்” பட்டுச் சேலைகளின் சோலை… கடையே நூறடி உயரத்தில் கம்பீரமாக பள பளவென்று மின்னிக் கொண்டிருந்தது. முகூர்த்த சமயம் என்பதை கடையில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு புடவை வாங்கும் சாக்கில் ஒரு குடும்பமே உள்ளே நுழைந்து கபளீகரம் பண்ணும் மக்கள் தான் இப்போ ஜாஸ்தி. அதிலும் அவர்கள் தரும் சுடச் சுடச் சக்கரைப் பொங்கலுக்கு புடைவையே வாங்காதவர் கூட கடைக்கு உள்ளே நுழைந்து ஒரு தட்டு பொங்கலை ஏந்திக் கொண்டு வெளியேறுவார்.. ஏதோ கோவிலுக்குள் நுழைந்து பிரசாதம் வாங்கிய சந்தோஷத்தோடு.
பிளாட்பாரத்தைக் கடந்து கொண்டிருந்த என்னை தட்டி நிறுத்தி என் கவனத்தை இழுத்தது கண்ணாடிக்குள் இருந்து கவர்ச்சியாய் சிரிக்கும் “டம்மி பெண்கள்” அந்த அழகிய பொம்மைப் பெண் அவள் மேனி நிறத்துக்கு எடுப்பாக கருநீலப் பட்டு உடுத்தி நிமிர்ந்த புன்னகையில் என் மனத்தைச் சுண்டி இழுத்தாள் . ஆஹா அவளுக்குத் தான் எத்தனை நீளத் தலைமுடி.. அதைப் பின்னி அழகாக முன்னால் போட்டுக் கொண்டு..போதாக்குறைக்கு தலை நிறைந்து வழியும் மல்லிகைப்பூ வேறு இருந்தது.பொறந்தாலும் பட்டுப் புடவைக் கடையில் பொம்மையாப் பொறக்கணும்…ஒரு வேலை செய்யாமல் நித்தம் புதுப் பட்டோடு  பூவும் நகையுமா நின்னாப் போதும்….மனசு தன்னை மீறி எண்ணியது.
அத்தனை அழகு பொம்மையைப் பார்த்ததும்
“பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்”
என்று பாடியது மனது.
அடுத்த அரை மணி நேரத்தில் கடைக்குள் நுழைந்து வெளியே வந்ததும் என் மனசே சற்று வானில் பறந்தது..இத்தனைக்கும் நான் ஒரு காட்டன் புடவை கூட வாங்கலை..ஆனால் கையில் இரண்டு தொன்னையில் சுடச் சுட ‘சக்கரைப் பொங்கல்”. சக்கரை நோய்க்குச் சக்கரைப் பொங்கல் ஒண்ணும் செய்யாது.. இதுக்கெல்லாம் யார் பயப்படுவது? நானா..? ஓசிப் பொங்கல் ஏக ருசி தனிதான் ! இரண்டாவது தொன்னையில் ஆவி பறக்க… என்னைப் பார்த்து நானும் உனக்குத் தான் என்றது.
மறுபடியும் வாசலுக்கு வந்து நின்று அந்த கண்ணாடிக்குள் சிலையாக நிற்கும் பொம்மையின் அழகை ரசிச்சுண்டே சக்கரைப் பொங்கலை ஊதி ஊதி முழுங்கினேன்.. யாராவது பார்த்தால் என்னாவது..?..என் கண்கள் லேசாக அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நளினமாக ஒரு பார்வை….என்ன ஒரு அதிசயம்… புடவைக் கடை வாசலை பொங்கல் கடை வாசலாக நம் மக்கள் என்னைப் போலவே மாற்றி யிருந்தார்கள். “நாம தான் உடம்பு அழகுக்கு ஓசியில் ஊசி போடக் கிடைச்சால் உடம்பெல்லாம் போட்டுக்குவோமே..”
பக்கத்துக் கடையிலிருந்து வந்த இனிய பாடல் மனதை வருட கேட்டுண்டே அந்தக் கண்ணாடிக்குள் நிற்கும் பொம்மை ராணியை மீண்டும் பார்க்கிறேன்.” செவிக்கும் , கண்ணுக்கும், வயிற்றுக்கும் விருந்து.. புடவைக் கடையில் தைப் பொங்கல் !
 “கால் முளைத்த பூவே
 என்னோடு பாலே ஆட வா வா!
 ஓல்கா நதி போலே
 நில்லாமல் காதல் பாட வா வா!
கேமமில் பூவின் வாசம் அதை – உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை – உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேனே!…”
யார் யாருக்கு எழுதினாரோ தெரியாது…நான் அந்த கண்ணாடிக்குள் இருந்த அவளை பார்த்து மயங்கிக் கொண்டிருந்தேன்.
அவளது கருங்கூந்தலை என் மனசுக்குள் சுமந்தபடியே….அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன்..
மனசு சும்மா முப்பது வருடம் பின்நோக்கிப் பறந்து சென்றது.
அடர்த்தியான கரு கருவென நீண்ட தலைமுடி என் இடுப்பைத் தாண்டி புரண்டு வழிந்ததில் ஒரு யெளவன ஊர்வசி என்னும் கர்வம் எனக்குள் மிதக்கும். அம்மா…எண்ணெய் தேய்ச்சு விடறேன் வா..இப்படி தினம் தினம் என்ன ஷாம்பூ வேண்டிக் கிடக்கு..? ஷாம்பூ அடிக்கடி போட்டால் முடி எல்லாம் போயிடும்.. பறக்க விடாதே..சொன்னாக் கேளு என்று கையில் எண்ணையை எடுத்துக் கொண்டு என்னைத் துரத்துவாள்.
போனால் போகட்டும் போம்மா …”என்னை விட்டு முடி போகாதும்மா ன்னு ஒரு அசட்டு தைரியத்தில்” எனக்கு இப்படித் தான் பிடிச்சிருக்கு…விடேன்….என்று அம்மாவின் கையில் இருக்கும் என்னைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஓடுவேன். அந்த நாட்களில் என் முடி தான் பாதிக்கும் மேலாக என் நேரத்தை பந்தாடிக் கொண்டிருந்தது. பயிரை வளர்ப்பதைப் போல நான் என் தலையை கண்ணும் கருத்துமா கவனிச்சுண்டு இருந்தேன்.
ஒரு வழியா நான் நுழைந்த அந்தக் கடையில் நான் தேடிய எனக்கு வேண்டியது கிடைத்தது. வாங்கிய திருப்தியில் வீடு வந்து சேர்ந்தேன். அதன் பின்பு தான் ஊருக்கு போவதற்கு என் மனசு ஆவலோடு காத்திருந்தது. பெட்டியில் எல்லாத்தையும் வைத்து பாக் செய்து விட்டு ரயிலுக்குக் கிளம்பக் காத்திருந்தேன்.
கல்யாணப் பரிசு வாங்கியாச்சா கோகிலா…? என்ன வாங்கிண்டு போறே…?
வேறென்ன கல்யாணப் பரிசு தனியா வாங்கி இருக்கேன்.. வசந்திக்குத் தனியா ஒரு பரிசு அவளுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் தான்.
ஒரே மணி நேரத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கியே… என்னவரின் அன்புச் சீண்டல்.காதுக்குள் கோயில் மணியாகக் கேட்டது.
நீங்க மட்டும் என்னவாம்….என்னையே சுத்தி சுத்தி வரேளே…..! என்று பதிலுக்குச் சிணுங்கினேன்..
அம்மா..எண்ணெய் எடுத்துண்டியா ? இந்தா இந்த பெரிய செட்டுச் சீப்பை எடுத்துக்கோ என்று மகன் கை நிறைய சீப்புகளோடு எங்கிருந்தோ ஆஜரானான்.. அவற்றில் வசந்தி அளித்த அந்த தந்தச் சீப்பும் இருந்தது ! அந்து போகும் கூந்தலுக்குத் தந்தச் சீப்பு தேவையா ?
எதுக்குடா இத்தனை சீப்பு..நான் போன இடத்தில் என்ன சீப்புக் கடையா வைக்கப் போறேன்….?
அதுக்கென்னம்மா…கல்யாணத்துக்கு வரவாளுக்கு ஆளுக்கொரு ‘சீப்பு’ கொடேன்…அவா தலை வாரும் போதேல்லாம் உன்னை நினைச்சுப்பா…!சிம்பாலிக்கா இருக்கும்..
அவன் அடித்த ஜோக்குக்கு,
நான் உன்னை ..அடிக் கழுதை…..என்ன பண்ணினாத் தேவலை….இதோ வரேன்னு…. உன் புத்திசாலித் தனத்தை படிப்பில் காண்பி….அதை விட்டுட்டு என்னைக் கலைக்காதே..!அவனை அடிக்கச் செல்லமாகச் சீப்பை ஓங்கினேன்…
(ஆமாமாம்…நான் கரண்டி பிடித்த நேரத்தை விட சீப்பைப் பிடித்த நேரம் தானே அதிகம்….)
என்ன கோகி..! என் மகன் என்ன செய்தாலும் சரியாத் தான் செய்வான்னு சொல்லுவே…மகனைப் பரிந்து கொண்டு கொக்கி போட்டார் இவர்.
கூட்டணிக்கு இப்பவே ஆளும் சேர்தாச்சாக்கும்….!
அது வேற ஒண்ணுமில்லைம்மா.நீ அந்தண்டை மதுரைப் பக்கம் போனாத்தானே நாங்க ரெண்டு பேரும் இந்தப் பக்கம் ‘விஸ்வரூபம் ‘ பார்க்கப் போக முடியும்..!
நன்னாப் போவேளே …..என்னை விட்டுட்டு..அப்படி ஒரு காரியம் பண்ணினால்..நான் வந்ததும் வராததுமா… வீட்டிலேயே என்னோட ‘விஸ்வரூபத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்’ சொல்லிட்டேன்.
ஏண்டா விஜய் இப்பப் போயி அம்மாட்ட இதைச் சொன்னே.. இப்ப வடை போச்சே…!
உங்களுக்கு வடை போச்சு…அம்மாவுக்கு பஸ்சு போயிடப் போறது…அம்மா…நாழியாச்சு…நீ கிளம்பு..!
ஒரு வழியா மதுரை பஸ்ஸில் என்னை ஏற்றி விட்டுட்டு ஆயிரம் ஜாக்கிரதைகளை ‘அட்வைஸா ‘ அள்ளி வீசிட்டு நான் ஏறிய பஸ் நகரும் வரை இருட்டு ஜன்னலைத் துழாவிப் பார்த்த படியே எனக்கு கையசைத்து விட்டு அவர்கள் கிளம்பிய போது….அந்த மெல்லிய வெளிச்சத்தில் கூட அவரது தலை வானில் பிறை வடிவ பின் வழுக்கை என்னைப் பார்த்துச் சிரித்தது போலிருந்தது.
என் பின்னலை மிக மிக ஜாக்கிரதையா முன் பக்கத்தில் எடுத்துப் போட்ட படியே அலுங்காமல் குலுங்காமல் சீட்டில் சாய்ந்து கண்மூடினேன்.
இருளுக்கு விடிகிறது..தேதியும் கிழமையும் மாறியது…சூரியன் “வெல்கம் டு மதுரை ‘ என்று கண் குலுக்கியது.
மதுரை மண் வாசனையோடு மல்லிகை வாசனையும் சேர்ந்து புத்துணர்வோடு கால் பதிக்கிறேன் மதுரை மண்ணில்.
எத்தனை வருடங்கள் நான் ரசித்து நடந்த இடங்கள். என் பழைய நினைவுகள் அனைத்தும் இந்த மதுரை மண்ணுக்கே சொந்தம் .
ஆட்டோவில் அமர்ந்தபடியே தலையைக் குனிந்து கொண்டு தெருக்களை ரசித்துப் பார்த்து ‘இது அப்படியே இருக்கே….. இங்க தானே சாப்பிட்டோம்….அட…இந்த தெரு வழியா நடந்திருக்கோமே …என்று பல ஆச்சரியங்களோட என் மனசு குழந்தையா குதூகலித்தது. உயர்ந்த மதுரைக் கோபுரங்கள் என் கர்வங்களை நசுக்கி என்னை நாலடிச் சிறுமியாக்கின .. !
ஒரு வழியா வசந்தியின் வீட்டு வாசலில் கல்யாணப் பந்தலும் வாழை மரத் தோரணமும் கொலைக் கொத்தோடு நின்று என்னை வரவேற்பது போலிருந்தது.
விரிந்த தாமரையாக முகமெல்லாம் மகிழ்வை ஏந்தியபடி வாசல்வரை ஓடி வந்த வசந்தியைப் பார்த்து நான் ஆச்சரியத்தில் வாய் பிளந்தேன்.
ஏய்…வசந்தி நீயா இது? என்னால் நம்பவே முடியலையே. ஓடிச் சென்று இருவரும் ஒருவருக்குள் அடங்கிப் போனோம்.
ஆட்டோகாரன்….”.நூறு ரூபாய்.”..என்று ஞாபகப் படுத்தினான்.
சாதாரணமாயிருந்தால் பேரம் பேசி இருபது ரூபாய் கழித்திருக்கலாம். மகிழ்ச்சியும் சந்தோஷமும் என்னை ஒன்றுமே நினைக்க விடாமல் கேட்டதைக் கொடுத்தது.
வா…வா…வா…என்று அன்பு மொழிகள் என் பெட்டியை யாரோ எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்தது கூட நிழலைத் தெரிந்தது.
அந்த அவசரத்திலும் வசந்தி என் பின்னலை கவனிக்கிறாளோ என என் உள் மனம் அவள் கண்களையே கவனித்துக் கொண்டிருந்தது.
வசந்தி…! உன்னைப் பார்த்தால் என்னால் நம்பவே முடியலை. எப்படி இது சாத்தியம்? சத்தியமாச் சொல்லு..இது என்ன மாயம்..? மந்திரம்..தந்திரம்..!என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்தேன்.
உனக்கு இவ்வளவு அடர்த்தியா ரெண்டடியில் ஒரு சாட்டைப் பின்னல்…! கலக்குறியே வசந்தி..! என்று மனம் விட்டு மகிழ்ந்தேன்.
ம்ம்..சொல்றேன்…சொல்றேன்…பொறு..மந்திரம்..தந்திரம்..யந்திரம் எல்லாம் இல்லை….ஊசி, மருந்து, மாத்திரை…,தெராபி, ன்னு கொஞ்சம் நஞ்சமா கஷ்டப் பட்டேன் இதுக்காக..! பாவம்.. சுஜாதா…அவள் தான் இத்தனைக்கும் காரணம். அம்மாவோட ஆசையை எப்படியாவது நிறைவேத்தியே தீருவேன்னு சாம, தான, பேத, தண்டம் எல்லாம் பண்ணிப் பார்த்து ஒரு வழியா ஜெயித்தாள் . ..இதைச் சொல்லும்போது வசந்தியின் கண்களில்ருந்து நீர் ததும்பி நின்றது.
வசந்தியின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து நானும் நெகிழ்ந்தேன். சுஜாதாவுக்கு சின்னதுலயே நிறைய தலை முடி அடர்த்தியா இருக்குமே…நீ சொல்வியே “கோகிலா…குழந்தை வயிற்றில் இருக்கும்போது உன்னையும் உன் முடியையும் நினைத்து நினைத்து பிறந்த பெண்… அதான்…உன்ன மாதிரி ஜாடை மட்டுமில்லை உன்னை மாதிரியே அவளுக்கு ஜடையும்” ன்னு. அம்மாவின் ஆசையை நிறைவேத்தும் மனம் கொண்ட மகள் உனக்கு..எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடி வசந்தி…நான் மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு வரலைன்னு வெய்யேன்…நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்…உன் பெண் சுஜாதாவை நினைத்தால் பெருமையா இருக்கு.
நல்ல வேளையா நீ வந்தே…’சாபிக் கோவா, சபிக் கோவா ….’ ஆமா உனக்கு இந்தப் பெயர் நினைவு இருக்கா ? உன்னை நினைத்தால் உன் பின்னாலும் இந்தப் பட்டப் பேரும் தான் நினைவுக்கு வருது. இப்பக் கூட உன் தலை ஜடை அப்படியே தான் இருக்கு..முக ஜாடை தான் ஏனோ மாறி யிருக்கு.. உடம்பும் கொஞ்சமாப் பூசியிருக்கு..!
கொஞ்சமில்லை…கிலோக் கிலோவா கொலஸ்ட்ரால் பூசியிருக்கு…என்று சொல்லிச் சிரிக்கிறேன்.
அதே குறும்பு எங்கள் கண்களில் நெஞ்சத்தில்….’வயது என்றுமே அன்புக்குத் தடையே இல்லை ‘ என்று அங்கு எங்கள் கண்களுள் இறங்கி சத்தியம் செய்தது.
மருதாணி இட்ட கைகளோடு சுஜாதா அறைக்குள் நுழைந்து….’கோகிலா ஆன்ட்டி ..நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்…இத்தனை வருஷம் கழிச்சு அம்மாவைப் பார்க்கறீங்க…எப்படி இருக்காங்க..சொல்லுங்க.என்ற பொது அவளது குரலில் கூட எங்கள் அன்பின் அடையாளம் எட்டிப் பார்த்தது
என்ன சுஜாதா நீ….இப்படி தலை முடியை பாப் வெட்டிகிட்டு…எனக்கு நேர்மாறா…இருந்தாலும் நீ ரொம்ப அழகாயிருக்கே…என்று அசடு வழிந்தேன்.
என் அம்மாவுக்கு எப்பவுமே உங்கள மாதிரியே பின்னல் பின்னிப் போட்டுக்கணும்னு ரொம்ப ஆசை.
ஆமாம்…இப்போ தான் சொல்லிகிட்டு  இருந்தாள் …இத்தனை முடி வளர நீ தான் காரணமாம்…..அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லேன் தேவைப்படும் என்கிறேன்.
வேண்டாம்…ஆன்ட்டி ..இப்போ வேண்டாம்….ப்ளீஸ்….அப்படி நீங்களும் ஆசைப் படாதீங்க எ ன்றவள் அடுத்த நிமிடமே அந்த அறையை விட்டு வெளியேறினாள் .அவளது ‘பாப் வெட்டிய தலை என்னைப் பார்த்து கேள்விக் குறி போட்டது போலிருந்தது. எனக்குள் ஆச்சரியக் குறி.!
ஆமாம்.வசந்தி…கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே…சுஜிக்கு என்னை மாதிரியே முடி ன்னு பெருமையோட சொல்லுவியே…கல்யாண சமயத்துல இப்படி ஓட்ட வெட்டிண்டு பாபப் பண்ணிண்டு இருக்காளே…உனக்குக் கோபமே வரலையா? என்று என்னையும் மீறி நான் கேட்ட படியே திரும்பி வசந்தியின் முகத்தைப் பார்த்து நான் அதிர்ந்தே போனேன் நான்.
பேருக்குக் கூட அங்கே ஒரு முடி இல்லாமல் ‘மொழு மொழு வென்று ‘ மொட்டைத் தலையைப் பார்த்து வாயடைத்து நின்றேன்….சற்று முன்பு நான் பார்த்த வசந்தியா இது..?
இத்தனை நேரமாக கம்பீரமாக வசந்தியை அலங்கரித்து அவளது தலையை ஆக்ரமித்த ‘டோப்பா பின்னல்’ அங்கிருந்த சுவற்று கோட் ஸ்டாண்டில் ஆதாரமில்லாமல் நொந்து தொங்கிக் கொண்டிருந்தது. எனக்குள் ஒரு உணர்வு ‘பகீர்’ என்றது.
என்னடீது வசந்தி….எனது சப்தத்தில் வசந்தியின் கண்கள் குளம் கட்டி வழிந்தது.
கோகிலா…..திணறி விழுந்தது வார்த்தை ஒவ்வொன்றும்….என்னை மன்னிச்சுக்கோடி…உனக்கு நான் ஒன்னுமே சொல்லலை…எனக்கு .. வந்து
எனக்கு வரக் கூடாத நோய் … கான்சர்…இன்னும் புற்றோடு போராடிண்டு தான் இருக்கேன் .. என் ஆயுள் காலம் இன்னும் எத்தனை நாட்களோ ? உடம்பு வலி விட்டு விட்டு வந்து வாதிக்கிறது ! வசந்தி கண்களில் அருவி நீர் மழை .கொட்டுகிறது. ! .இதை வசந்தி சொல்லச் சொல்ல என்னுள் என்னென்னமோ வெடித்துச் சிதறியது. கண்ணீரை என் முந்தானையில் துடைக்கிறேன்.
என்னடீ சொல்றே நீ..தலையில் கல்லைத் தூக்கிப் போடறே? உனக்கு கான்சரா?
நான் என்ன அவ்வளவு புண்ணிய ஆத்மாவா? எனக்கு எதுவும் வரக் கூடாதுன்னு வரம் வாங்கீண்டு வந்திருக்கேனா என்ன? வசந்தியில் குரலில் விரக்தி.
அத்தோடு நிற்காமல் நோயைப் பற்றிப் பேசாமல் வேறு எதையோ தொடர்கிறாள்….” என் ஒரே ஆசையை நிறைவேத்தியே ஆவேன் என்று சுஜாதா அடம் பிடித்தாள் …நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன்னோட தலைமுடியை வெட்டி எடுத்து ‘டோப்பா பின்னல்’ கடையில் பண்ணச் சொல்லி வாங்கிண்டு வந்தாள் ….அதான் இது!
என் முந்தைய ஆசைப்படி எனக்கு சாட்டைப் பின்னலை ஒட்டவைத்து நோயாளியை அழகு பார்த்து சந்தோஷப் படுகிறாள் ….நான் என்ன செய்வேன்… வைப்பதா ? எடுப்பதா ? நீயே சொல்லு?
என்னால உன்கிட்ட மட்டும் நடிக்க முடியலை…அதான்..கழட்டிட்டேன்.!
வசந்தியின் இந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்குள் நானே சாட்டையால் அடித்துக் கொண்டது போல ‘சுளீர்’ என்றது.
என்ன வசந்தி நீ…இப்படி செய்துட்டே? உன் சந்தோஷத்தில் பங்கெடுக்கும் எனக்கு உன் துக்கத்தில் பங்கெடுக்கும் உரிமையைத் தராமல் பண்ணீட்டியே…நம்ம நட்பு அவ்வளவு தானா? இதை நினைக்கும்போது எனக்கு மனசுக்கு எப்படி இருக்கு தெரியுமா?
அப்டில்லாம் நினைச்சு நீ ஃபீல் பண்ணாதே கோகிலா…! நானே விஷயம் தெரிஞ்சதும் எனக்குள்ளே அதிர்ந்து போயிருந்தேன்.
ம்ம்ம்…புரியுது வசந்தி…கடைசியா உன் குழந்தை சுஜாதாவுக்கு மொட்டை அடித்து காத்து குத்தலுக்கு திருப்பரங்குன்றம் வந்தோம் நாங்க…அது தானே நான் உன்னைக் கடைசியாப் பார்த்தது.அதுக்கப்பறமா இப்போ தானே…வரேன்.
ஆமாமாம் கோகிலா…அதுக்குப் பிறகு தான் கான்சருக்கு நான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருப்பேன்னு நினைக்கறேன்…! சரி..வந்தாச்சு..மீண்டாச்சு…அந்த “கீமோ தெரபி” பண்ணிக்கும் பொது தான் நினைப்பேன்…இந்த வழியை விட வேதனைத் தரக் கூடிய விஷயம் இந்த உலகத்தில் வேற ஒண்ணுமேயில்லை……. இதுக்குப் பதிலா ஒரேயடியாப் போனால் கூட  வலியின் வேதனையிலிருந்து தப்பிக்கலாம்.
இல்லையா?
அதுவரையில் வசந்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நான் அருகில் ஓடிச் சென்று அவளது முகத்தை என் இரு உள்ளங்கைகளில் தாங்கிப் பிடித்து ஏந்திக் கொண்டு ‘அந்தக் கடவுளுக்கு இந்த நல்ல மனசு தான் கண்ணுக்குத் தெரிஞ்சுதா…? “புற்றைக் கொடுத்து தன்னோட பற்றித் தீர்த்துக் கொண்டிருக்கிறாரே..’? என்னை மீறி நான் உடைஞ்சு போய் கதறுகிறேன்.
அழாதே கோகிலா…..! நானே எவ்வளவு தைரியமாயிட்டேன் பாரேன்…இந்தக் கல்யாணம் நல்ல படியா முடியணும் . என்னோட இந்த வியாதியை வைத்துக் கொண்டு சுஜாதாவின் வாழ்க்கை, கல்யாணம் எதுவும் பாதிக்கப் பட்டுவிடக் கூடாதேன்னு நாங்கள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்போம் தெரியுமா? அப்போ தான் புரிஞ்சுண்டேன் கோகிலா…இறைவன் இல்லாமல் இல்லை..! என் கவலை எல்லாம் பனி போலத் தீர்ந்தது. நல்ல வரன்.
மனங்களைப் புரிஞ்சுக்கற உறவுகள். நல்ல மனிதர்களும் உலகில் இருக்கிறார்கள் என்பதன் உத்தரவாதம்…தான் சுஜாதாவின் இந்தக் கல்யாணம்.
வசந்தியின் வார்த்தையில் நம்பிக்கையும் நன்றியும் கலந்தே வந்தது எனக்குப் புரிந்தது
மெல்ல…மெல்ல சுயநினைவுக்கு வந்தவளாக வசந்தி என்னிடம்…” கோகிலா நீ லக்கிடீ….இன்னும் உன் பின்னல் அப்படியே….இப்பவாவது நான் தொட்டுப் பார்க்கலாமா? உன் அனுமதியோட….வசந்தி முடிக்க வில்லை..!
ம்ம்ம்ம்….உனக்கில்லாமலா வசந்தி? தொட்டுத் தடவி நீயே வெச்சுக்கோ…! என்றபடியே என் தலையிலிருந்து இது வரை கனத்துக் கொண்டிருந்த பாரத்தை கழட்டி அவளது கைகளில் திணித்தேன்
என்னது ? உனக்கும் ‘டோப்பா பின்னலா’..!
நம்பவே முடியாதவளாக….ஏய்…என்னது இது? உன் சாட்டைப் பின்னலும்…டோப்பாவா?.! உன் முடி இவ்வளவு ‘தின்னிங்’ ஆகி முன்னடியெல்லாம் ‘சொட்டையாகி’ என்னால நம்பவே முடியலை…!
நம்பவே முடியாததெல்லாம் நடப்பதற்குப் பெயர் தான் வாழ்க்கை… வசந்தி..!நானும் அதிலிருந்து தப்பிக்க முடியலை…என்றேன்.
சாட்டை பின்னல் எல்லாம் நான் சட்டை செய்யாமல் அலட்சியமாய் இருந்ததால் தானோ என்னைக்கோ எல்லாம் என்னை உதறி விட்டு டாட்டா காண்பித்து விட்டு எனக்குச் சொட்டையை அறிமுகம் பண்ணிட்டு போயிடுத்தே….அதான் என் டாப்புக்கு டோப்பா..! என்று மெல்லச் சொன்னேன்.
கைகளில் எனது டோப்பா பின்னலைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட வசந்தி “உன்னையும் என்னையும் காலத்தைக் கடந்து இணைத்திருப்பது இந்த சாட்டைப் பின்னல் தாண்டி..கோகிலா’ என்று சிரிக்கிறாள் வசந்தி அவளது பார்வை அங்கிருந்த ஒரு சின்னக் காகிதத்தின் மேல் சென்று அதை இழுத்தாள் .
கோகிலா..இதைக் கேளேன்….ஜோக்….ரொம்ப சிம்பாலிக்கா…இருக்கு. படிக்கவா..?
இன்னும் நீ இதை விடலியா சரி படி….. படி…!
நிருபர் நடிகையிடம்: மேடம், உங்கள் அடர்த்தியான கூந்தலின் ரகசியம் சொல்லுங்களேன்.
நடிகை:                         காலையில் செம்பருத்தி எண்ணெய் பூசுவேன். பள பள ன்னு தெரியும்.
நிருபர்:         ம்ம்…நல்ல ஐடியா .
நடிகை :        மதியம் பன்னீர் கொண்டு அலசுவேன்…குளிர்ச்சியா இருக்கும்.
நிருபர்:      அடடா.. யாருக்குமே தெரியாதே. அப்பறம் என்ன போடுவீங்க..?
நடிகை:     அவசியமில்லை…ராத்திரி கழட்டி கோட் ஸ்டாண்டில் மாட்டி வெச்சுருவேன்.
நிருபர் :    !!!!!!!!
இதைப் படிக்கக்  கேட்டதும்..நானும், வசந்தியும் அடக்கமுடியாமல் ‘குபீர்’ன்னு சிரித்தோம்.
இரண்டு டோப்பா பின்னலும் எங்கள் கண்முன்னே ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு பின்னிக் கிடந்தன நட்பின் சின்னங்களாய்.. ! எங்கள் இருவரின் கண்களிலும் ஆனந்த வெள்ளம்.

==============================

=========================================================================================
Series Navigationபூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ says:

    அன்பின் அருண்,

    சரியான வடிவத்தில் எழுத்துக்கள் இல்லாத போதும் கதையைப் படித்துக் கருத்துச் சொன்ன உங்களுக்கு எனது நன்றி.
    கதையின் நல்ல வடிவத்தை எனது வலைப்பூவில் http://paavaivilakku.blogspot.in படிக்கலாம்.கண்கள் தப்பிக்கும்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ

  2. Avatar
    லோகநாதன் says:

    ஜெயஸ்ரீ அவர்களே.. தங்களின் எழுத்தின் வடிவில் எந்தக் குறையும் தெரியவில்லை.. மிக அருமையாக இருந்தது..!! :)

    லோகநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *