பெருங்கதையில் ஒப்பனை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 26 of 31 in the series 10 பெப்ருவரி 2013

சு. மணிவண்ணன்,

முனைவர்பட்ட ஆய்வாளர்,

தமிழாய்வுத்துறை,

தேசியக் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி.

முன்னுரை

    ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகூட்டுதல் என்பது பொருள். இருக்கின்ற அழகை மிகைப்படுத்திக் காட்டுதல், இருக்கின்ற அழகை வெளிக்கொணருதல், அழகு இல்லாத பொருளையும் அழகாக மாற்றுதல் ஒப்பனையின் பயன்களாகும். இத்தகைய ஒப்பனைக் கலை தமிழிலக்கியங்களில் பழங்காலந்தொட்டு இடம் பெற்றுள்ளது. ஒப்பனைக்கலை பெருங்கதையில் அமைந்துள்ள பாங்கினை விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

பெருங்கதை

    பெருங்கதை என்பது கொங்குவேளிரால் இயற்றப்பெற்ற காப்பியம் ஆகும். இக்காப்பியம் சொற்சுவை, பொருட்சுவை சிறந்து விளங்குகின்றது. குருகுலத்தில் பிறந்தவனும், கௌசாம்பி நகரத்தரசனுமான சதானிகனுடைய புதல்வன் உதயணனது சரிதத்தை விவரித்துக் கூறுகிறது.

    குணாட்டியார் என்பவர் பைசாச மொழியில் இயற்றிய பிருகத்கதா நூலே இதற்கு முதனூல் என்றும், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அல்லது ஆறாம் நூற்றாண்டில் இருந்த துர்விநீதன் என்னும் கங்கமன்னன் பைசாச மொழியிலிருந்து பெயர்த்தமைத்த பிருகத்கதையே இதன் முதனூல் என்றும் கூறப்படுகிறது.

    பெருங்கதையை இயற்றிய கொங்குவேளிர் கொங்கு நாட்டைச் சார்ந்தவர். இவர் விசயமங்கலத்தில் இந்நூலினை அரங்கேற்றம் செய்தார் என்று கூறப்படுகிறது. இவரது நூலே மொழிப்பெயர்ப்பு நூல்களுள் முதல் நூலாகத் திகழ்கிறது. இதன் கண் ஆறு காண்டங்கள் அமைந்துள்ளன. கொங்கு வேளிரது காலம் பல்லவர்காலமாகும்.

ஒப்பனை

    ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகுபடுத்தல் என்று பொருள். இதற்குப் புனைதல், கைசெய்தல், வேய்தல், பொறிபு, அலங்கரித்தல், வனைதல், பூசல், அணிதல், மண்ணல் என்ற பல பொருள்களுண்டு. சங்க காலத்து மக்கள் தங்களை அழகுபடுத்துவதற்குச் சில ஒப்பனை முறைகளைக் கையாண்டுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மேலும் ஒப்பனை செய்வதற்கென்று தனியறைகளும், பணியாட்களும் இருந்துள்ள தன்மையையும் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன.

ஒப்பனை வகைகள்

    ஒப்பனை வகைகளைக் கூறுமிடத்து மகளிர் நீராடல், ஆடை அணிதல், கூந்தலை அகிற்புகையூட்டி அழகுபடுத்தல், தொய்யில் எழுதுதல், அணிகலன்களால் தங்களை அழகுபடுத்தல் என்ற நிலைகளில் அமைந்துள்ளன.

    சங்க இலக்கியங்களில் மேற்கூறிய ஒப்பனைகள் மலிந்துள்ளன. புறநானூற்றில் கூந்தல் ஒப்பனையை வருணிக்கும் பொழுது,

    “நெய்யொடு துறந்த மைஇருங் கூந்தல்

    ஒலிமென் கூந்தல் கமம்புகை கொளிஇ“

என்று சங்ககாலப் புலவர் குறித்துள்ளார்.

பெருங்கதையில் ஒப்பனை

ஒப்பனை மகளிர்

    இடைக்காலத்தில் எழுந்த காப்பியமான பெருங்கதையில் பெண்கள் தங்களை ஒப்பனை செய்து கொண்டு பேரெழிலுடன் விளங்கியுள்ளனர். பெண்கள் தங்களை ஒப்பனை செய்வதற்கு ஒப்பனை மகளிரை அமைத்துள்ளனர். இத்தகைய ஒப்பனை மகளிர்க்கு வண்ணமகளிர் என்று பெயர். இதனைக் கொங்கு வேளிர்,

    “வரிவளைப் பணைத்தோள் வண்ண மகளிர்

    வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்“

என வரும் அடிகள் வாயிலாக எடுத்தியம்பியுள்ளார்.

    மேலும் வண்ணமகளிர், மகளிரை ஒப்பனை செய்யும் பாங்கானது அக்காலக் கோயில்களின் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களில் தோன்றும் பெண்களின் சாயலினைப் பெற்றதாகக் கொங்குவேளிர் காட்டியுள்ளார். இதனைப் பெருங்கதை வத்தவ காண்டத்தில்,

    “அடிமுதல் தொட்டு முடியளவாக

    புடவியின் அறியா புணர்பொடு பொருந்தி

    ஓவியர் உட்டும் உருவக்கோலம்

    தேவியைப் புனைந்த பின்“

என வரும் அடிகள் வாயிலாகக் குறித்துள்ளார்.

ஒப்பனை அறை

    மகளிர்கள் தங்களை ஒப்பனை செய்து கொள்வதற்கென்று தனி அறையொன்றை அமைத்துள்ளனர். அவை அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. ஞாயிற்றின் வெயிலும், வெளிக்காற்றும் உள்ளே புகாதவாறு தடுப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒப்பனை செய்வதற்குரிய மகளிரை வண்ணமகளிர் அழைத்துச் சென்று, அவ்வறையின் கண் அமர்த்தி அழகிய கோலம் அமைத்தனர். மேலும் அழகை மிகுவிக்கும் கோலங்கள் புனையப்பட்டனவாதலின் ஒப்பனை அறை ‘மல்லல் வினையிடம்‘ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இத்தகைய ஒப்பனை அறையை,

    “வெய்யோன் கதிரொளி வீகவளி நுழையா

    கரும்பணி பெற்ற அரும்பணப் படுகால்

    மேற்புறம் அமைந்த விளங்குமணி வேயுள்

    யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரிஇ“

என்ற அடிகளாலும்,

    “வல்லவர் வகுத்த மல்வினை நகர்“

என்ற அடியாலும் கொங்குவேளிர் செவ்விதின் விளக்கியுள்ளார்.

மகளிர் நீராடல்

    காவும், கானும் நிறைந்துள்ளதும், தேன் பொழிகின்றதுமான கொங்கு நாட்டின்கண் பல தடாகங்கள் நிறைந்துள்ளன. இத்தடாகங்களில் மகளிர் நீராடிக் கூந்தலை வாரிமுடித்து அணிபூண்டு ஒப்பனை செய்து கொண்ட தன்மைகளைப் பெருங்கதை விளக்கமுற விவரிக்கிறது.

    மேலும் பெண்கள் மணம் கூட்டிய நெய்யையும் எண்ணெயையும் கூந்தலில் தேய்த்து முழுகிய தன்மையைச் சங்க இலக்கியங்களான குறுந்தொகையும், மதுரைக்காஞ்சியும் பேசுகிறது. இத்தகைய நீராடல் முறையை,

    “எண்ணெய் நீவிய சுரிவளர் – நறுங்காழ்

    தணிநறுந் தகரம் கமழ மண்ணி

    ஈரப்புலர விரல் வளர்ப்பு அவிழா

    காழ் அகில் அம்புகை கொளிஇ – யாழிசை

    அணிமிகு விரிமிஞிறு ஆர்ப்பதேம் கலந்து“

என வரும் அடிகளால் விளக்குகிறது.

கலிங்கம் பூணுதல்

    கலிங்கம் என்ற சொல்லிற்கு ஆடை என்று பொருள். பண்டைக்காலத்தில் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த மக்கள் பூவையும், தழையையும் கோர்த்து ஆடையாக உடுத்தியுள்ளனர்.

    பெருங்கதையில் மகளிர் நீராடியதும், நீராடற்பொருட்டு அணிந்து கொண்ட ஈர ஆடைகளைக் களைந்து, கதிரவனின் ஒளியை விரும்பி நிற்கும் வெண்டாமரையின் நிறத்தினை ஒத்ததும், பலபூக்கள் புனையப்பட்டதுமான புத்தாடைகளை அணிந்தனர். மேலும் மகளிர் ஆடைகளைக் கொய்சகம் இட்டும், விளிம்பிலே உருவியும், அழகுற உடுத்தியும் மகிழ்ந்தனர் என்று கொங்குவேளிர் குறிப்பிட்டுள்ளார். இதனை,

    “நீரணி கொண்ட ஈரணி நீக்கிக்

    கதிர்நிழற் கவாஅப் பதுமறிம் கடுக்கும்

    புதுநூல் பூந்துகில் அருமடி உடீஇ

    கோடிப் பூந்துகில் கொய்த விளம்புரி இச்

    சேடார் அல்குல் சேடுபட உடீஇ“

என வரும் பாடலடிகளால் எடுத்தியம்பியுள்ளார்.

கூந்தல் ஒப்பனை

    சங்க காலத்தில் மகளிர் தங்கள் கூந்தலை நீண்ட நேரம் ஒப்பனை செய்து கொண்டும், அக்கூந்தலுக்குப் பலவகையான வண்ண மலர்களைச் சூடிக் கொண்டும், கூந்தலுக்கு நறுமணப் புகைகள் பல ஊட்டியும் மகிழ்ந்தனர் என்பதைச் சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன.

மகளிர் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக தலைக்கோலம் செய்து கொண்ட பாங்கினையும், நூறு பூக்களுக்கு மேல் கூந்தலில் சூடிக் கொண்ட பாங்கினையும் மதுரைக்காஞ்சி பாடல்களால் உணரலாம். மேலும் குறிஞ்சிப்பாட்டில் பூக்களின் வகைகளை புலவர் எடுத்தியம்பியுள்ள தன்மையை,

    “ஒண் செங்காந்தள் ஆம்பல் அணிச்சம்

    தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

    ……… ………… …………

    வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ“

என வரும் பாடலடிகளால் அறியலாம்.

    பெருங்கதையில் கூந்தல் ஒப்பனையைச் சுட்டும் பொழுது, மழைபெய்து நின்றதும் மயில்கள் தோகையை விரித்த அலகால் கோதி உலர்த்துவது போல, நீராடியதால் நனைந்த தம் கூந்தலைக் கைவிரல்களால் கோதியுள்ளனர்.

    மகளிர் தங்கள் கூந்தலை ஐம்பாலாக வகுத்து அழகுபெற முடிந்தனர். சடையின் அடிப்புறம் கொண்டை மாலையை வளையச் சுற்றி முடித்தனர். வெண்ணிறப் பூவால் சுற்றப்பட்டு நீண்டு தொங்கும் சடை வெண்மையான மருப்பினால் வளைக்கப்பட்டுத் தொங்கிய யானையின் துதிக்கை போன்றிருந்தது. அவ்வாறு வாரி முடிக்கப்பட்ட தலையில், பத்தி முதலிய தலைக்கோலங்கள் ஒழுங்குபட அணி வேண்டிய இடங்களில் சரிவர அணிந்து அழகு சேர்த்தனர் என்று கொங்குவேளிர் குறித்துள்ளார்.

    மகளிரின் கூந்தலை மராட்டிய தேயத்தாருடைய முறையில் ஒப்பனை செய்துள்ளார். இவ்வகை ஒப்பனையாவது கூந்தலை விரித்தும், தொகுத்தும், வகுத்தும், வாரியும், கோதியும், தீண்டியும், நறுமணப் புகையை நிரம்ப ஊட்டியும் அழகுபடுத்துவதாகும். இதனை,

    “பண்கெழு விரலிற் பண்முறை தொகுத்து

    நானமன்னி நீன்றிம் கொண்டவை

    விரித்தும் தொகுத்தும் வகுத்தும் வாரியும்

    உளர்ந்தும் ஊரியும் அளந்து கூட்டமைத்த

    அம்புகை கழுமிய அணிமா ராட்டம்“

என வரும் அடிகள் வாயிலாக அறியலாம்.

 

தொய்யில் ஒப்பனை

    தொய்யில் என்பது தோய்த்தல் என்று பொருள்படும். மகளிரின் நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் சந்தனச் சாந்தைக் குழைத்துப் பூசுதல் தொய்யில் எழுதுதல் எனப்படும். இத்தகைய வழக்கம் சங்ககால மகளிரிடையே இருந்துள்ளது. மேலும் இத்தகைய ஒப்பனைக் கலையை மேற்கொள்வோர் தொய்யில் மகளிர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.

    சங்க இலக்கியங்களுள் ஒன்றான நற்றிணையில்,

    “உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய

    தொய்யில் காப்போர் அறிதலும்“

என்ற அடிகளால் தொய்யில் ஒப்பனை இருந்தமையை அறியலாம். பெருங்கதையில் தொய்யில் எழுதும் முறையைக் கொங்குவேளிர் சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். மகளிருக்கு நெற்றியிலும், தோளிலும் சந்தனத்தாலே நுண்ணிய கோலமெழுதினர். மேலும் சந்தனக் கட்டையைச் சோ்த்து அதனோடு பச்சைக் கற்பூரம் பெய்யப்பட்ட நுண்மையுடைய குழம்பினால் மார்பிலும், தோளிலும் அழகுறப் பூங்கொடி வடிவில் எழுதினர். இதனை,

    “குளிர்கொள் சாதில் சந்தனக் கொழுங்குறப்

    பளிகம் பெய்த பரும்பிற் தேர்வையிர்

    ஆகமும் முலையும் தோளும் அணிபெறத்

    தாரையுங் கொடியுந் தகைபெற வாங்கி“

என வரும் அடிகளால் விளக்கியுள்ளார்.

    மேலும் காண்போர் குறிப்பால் உணரும் வண்ணம் மார்பு, கொங்கை, நுதல் ஆகிய இடங்களில் பூங்கொடி வடிவத்தில் தொய்யில் மகளிர்தங்களது தொய்யிலைப் புனைந்துள்ள தன்மையை,

    “பழுதற அழகொடு புனைநலம் புனையாக்

    குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“

எனவரும் அடிகளால் உணர்த்தியுள்ளார்.

 

ஆடவர் ஒப்பனை

    திருமணக் காலங்களில் ஆண்களை அழகுபடுத்துவதற்கென்று ‘கோல வித்தகர்‘ என்ற பெயர் கொண்ட ஒப்பனை செய்வோர் இருந்தமையைச் சங்க இலக்கியங்கள் வழி உணரலாம். பெருங்கதையிலும், ஒப்பனை செய்யும் ‘கோல வித்தகர்‘ என்பவரை அரண்மனையின் ஒருசார் அமைத்திருந்தனர். இதனைக் கொங்குவேளிர், ‘கோல வித்தகர் வாலணி புனைய‘ என்ற அடியால் குறித்துள்ளார்.

    ஒப்பனை செய்யும் கோலவித்தகர் ஆடவரின் விரல் நகங்களைப் பாதித் திங்கள் போல் வெட்டிக் குறைத்து அழகும் நிறமுடைய கல்லினால் நிறம் பெறும்படித் தேய்த்தனர். மணப் பொடியினை முகத்தில் தடவித் திங்கள் ஒளியினும் மிக்க ஒளிபெறும்படி நன்றாகத் தேய்த்து நேரிய துகிலினால் துடைத்தனர். பெண்களுக்குத் தொய்யில் எழுதியதைப் போலவே ஆடவர்களுக்கும் தொய்யில் எழுதினர். ஆண்களுக்கு வில்வடிவையுடையதாய் தொய்யில் எழுதினர்.

    பெருங்கதையில், உதயணன் மானனீகைக்கு யவன மொழி எழுத்துக்களை முகத்தில் ஒப்பனை செய்துள்ளான். மானனீகைக்கு, ‘அன்புடையோய்!‘ நின் பேரழகிற்கேற்ப யான் அலங்காரம் செய்யும் வகையைப் பார்!‘ என்று உதயணன் தன்னுடைய ஒப்பனையைப் புனைந்துள்ளான்.

அணிகலன் ஒப்பனை

    மகளிர்க்கு ஒளி பொருந்திய பலவகையான அணிகலன்களை உறுப்புக்கள் தோறும் அவற்றிற்குப் பொருத்தமாய் ஒப்பனை மகளிர் அணிவித்து அழகு பார்த்தனர். இதனை,

    “விதிமான் உறுப்பிற்கு வேண்டுவ வேண்டுவ

    கதிர்மான் பல்கலம் கைபுனைந் தியற்றி“

என வரும் அடிகளால் கொங்குவேளிர் புலப்படுத்தியுள்ளார்.

    மேலும், மகளிர் முடிமுதல் அடி ஈறாக அணிகலன்களை அழகுபெற அணிந்து, மணமுடைய நறிய சாந்துகளை வகைபெறப் பூசித் திருமகள் அழகையும் விஞ்சும் வகையில் அழகுபடுத்திக் கொண்ட தன்மையைக் கொங்குவேளிர் எடுத்தாண்டுள்ளார். இதனை,

    “ஓவ வினையாளர் பாவனை நிறிஇ

    வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்

    கட்டளைப் பாவை கடுப்பத் தோன்றி“

என வரும் அடிகள் வாயிலாக அறியலாம்.

    இவ்வாறாக, மானுடர்களிடையே மிகப்பழங்காலந்தொட்டு வளர்ந்த ஒப்பனைக் கலை பற்றி, தமிழிலக்கியங்கள் பலவும் காலந்தோறும் சுட்டிவந்துள்ளன. குறிப்பாக கொங்குவேளிரின் பெருங்கதை படம்பிடித்துக்காட்டிய திறமே ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளன.

Series Navigationமலர்மன்னன் – மறைவு 9.2.2013அக்னிப்பிரவேசம்-22
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *