”என்னடி யோசனை? இன்னும் கொஞ்சம் கறி போடட்டுமான்னு ரெண்டு வாட்டி கேட்டுட்டேன். பதில் சொல்லாம பெசஞ்ச சோத்தையே திரும்பத் திரும்பப் பெசஞ்டுக்கிட்டுக் கெடக்குறியே? காலேஜ்ல என்ன நடந்திச்சு?”
தனலட்சுமியின் குரல் மிக இரைந்து ஒலித்த பிறகுதான் ராதிகாவின் எண்ணங்கள் கலைந்தன. அவள், ஒரு திடுக்கிடலுடன் தலையைக் குலுக்கியபடி, “லேசாத் தலை வலிக்குதும்மா. வேற ஒண்ணுமில்லே.
என்று கூறிவிட்டு, “கொஞ்சமாப் போடுங்கம்மா,” என்றாள்.
தலையை இடக்கையால் பற்றியவாறு. மகள் சொன்னது ஒப்புக்காகத்தான் என்றும் உண்மையில் அவளுக்குத் தலை வலிக்கவில்லை என்றும் தனலட்சுமிக்குத் தோன்றியது. கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததிலிருந்தே ராதிகா ஒரு மாதிரியாக இருந்ததை அவள் கவனித்திருந்தாள். தலைவலியாக இருந்திருப்பின் மகள் தன்னிடம் உடனே சொல்லியிருந்திருப்பாள் என்று அவள் நினைத்தாள். ராதிகாவுக்கு எப்போதேனும் தலைவலி வருவதுண்டுதான். அப்போதெல்லாம் உடனுக்குடனாகத் தன்னிடம் சொல்லிவிட்டு அமிர்தாஞ்சனத்தை எடுத்து அப்பிக்கொள்ளும் வழக்கமுள்ள அவள் இரண்டையும் செய்யாததால், அவள் சொன்னது பொய் என்பதாய்த் தனலட்சுமி நினைத்தாள்.
தனது நம்பாமை வெளிப்படையாய்த் தெரிய, அவள் ராதிகாவை ஒரு பார்வை பார்த்தாள்.
“யார் கிட்டடி அளக்குறே? தலைவலி வந்துட்டா, அமிர்தாஞ்சன வாசனை இந்த ஊரையே கூட்டுறாப்ப்ல் இல்லே தடவிக்கிட்டுப் படுத்துடுவே?”
“அமிர்தாஞ்சன பாட்டில் வெச்ச எடம் தெரியல்லே. அதான் தடவிக்கல்லே.”
“ஏண்டி! நேத்துத் தானே எனக்குத் தலைவலின்னு நான் சொன்னதும் பாட்டிலை எடுத்து என்கிட்ட குடுத்தே? அது மறந்தா போயிடிச்சு? நீ பொய் சொல்றே. காலேஜ்;ல என்னமோ நட்ந்திருக்கு. எதுவானாலும் சொல்லுடி!”
சாப்பாட்டு மேசையருகே மகளுக்கும் மனைவிக்கும் எதிரே அமர்ந்து உருளைக்கிழங்குக் கறியை ரசித்து மென்றுகொண்டிருந்த தீனதயாளன். “என்னம்மா, ராதிகா! அம்மா கேக்குதில்லே? நானும் கேக்கணும்னு நினைச்சப்ப உங்கம்மா முந்திக்கிறுச்சு. காலேஜ்ல எதுனாச்சும் அக்கப்போரா? என்ன, பேசாம இருக்கே? அதுக்குத்தான் இந்த கோ-எஜுகேஷன் காலேஜ்ல யெல்லாம் சேரக் கூடாதுன்றது. என்னம்மா, ராதிகா! என்னதான் நடந்திச்சு? எங்கிட்ட சொல்லும்மா. எவன் உன்கிட்ட வாலாட்டினான்? சொல்லு. ஒட்ட நறுக்கிர்றேன்!” என்றார் கறியை விழுங்கிய பிறகு.
அதுகாறும் தட்டில் கண்களைப் பதிததவாறு சோற்றைப் பிசைந்துகொண்டிருந்த ராதிகா தலை உயர்த்தி, தீனதயாளனை ஒரு பார்வை பாத்த்தாள். அந்தப் பார்வை மிகவும் கூர்மையாக இருந்தது. அதனின்று தீப்பொறி பறக்காத குறைதான். மகளின் பார்வையில் தென்பட்ட மாறுபட்டை உணர்ந்து, தாய், தகப்பன் ஆகிய இருவருமே சற்றெ அதிர்ச்சியுற்றார்கள்.
“என்னடி, இது! பதில் சொல்லாம உங்கப்பாவை முறைச்சுப் பாக்கறே?”
ராதிகா சிரித்தாள் : “என்னது! அப்பாவை நான் முறைச்சுப் பாத்தேனா! சரியாப் போச்சு போ. உண்மையை ஓரளவு சரியா ஊகிச்சுட்டீங்களே ரெண்டு பேரும்னு ஆச்சரியமாப் பாத்தேன். அம்புட்டுத்தான்!”
”சரி. உனக்குத் தலைவலி இல்லேன்னு ஊகிச்சமே ஒழிய, இன்ன காரணம்கிறதை எங்களால ஊகிக்க முடியலியே! அதை நீயேதான் இப்ப சொல்றது.”
“அவளை இப்ப தொந்தரவு பண்ணாதே, தனலட்சுமி. சப்பாட்டு நேரத்துல வாக்குவாதம் வேணாம். சாப்பிட்டு முடிச்சதும் அவளே சொல்லுவா!”
அதன் பிறகு அங்கே யாரும் அதைப்பற்றிப் பேசவில்லை. தட்டுகளும் கரண்டிகளும் செய்த ஓசைகளையும், அவசியட்துக்கு மட்டும் அவர்கள் பேசிக்கொண்ட பேசுசுகளின் ஒலிகளையும் தவிர்த்து அந்தக் கூடத்தில் அமைதி நிலவியது.
ராதிகாதான் முதலில் சாப்பிட்டு முடித்துத் தட்டை எடுத்துக்கொண்டு கழுவுதொட்டிக்குப் போனாள். நடந்து சென்ற அவளது முதுகுப்புறத்தை இருவரும் கண்ணிமைக்காமல் பார்த்தார்கள்.
“ஏன், தனலட்சுமி, எதுனாச்சும் லவ் கிவ்னு அந்த மாதிரிப்பட்ட வெவகாரமா யிருக்குமோ?”
“ அந்த மாதிரிப்பட்ட அக்கப்ப்போர்ல யெல்லாம் மாட்டிக்ககூடிய பொண்ணு இல்லே நம்ம ராதிகா! நீங்களா இஷ்டத்துக்குக் கற்பனை பண்ணாதீங்க. முதல்ல சாப்பிட்டு முடிப்போம், அதுக்குப் பெறகு கேப்போம். நாம கேக்காம அவளாவே சொல்லுவா. நம்ம கிட்ட எதையும் மறைக்கப்பட்ட பொண்ணு இல்லே ராதிகா!”
தீனதயாளனுக்குச் சிரிப்பு வந்தது.
“எதுக்குச் சிரிச்சீங்க?”
“எந்த யுகத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்குறே நீ? தவிர, லவ் பண்றதென்ன, செய்யக்கூடாத குத்த்மா? இல்லே, எதாச்சும் அசிங்கமான விஷயமா! …ஆனா, இது வேற எதாச்சுமாக்கூட இருக்கலாம். ஏன்னா, அவ மொகத்துல மலர்ச்சியே இல்லே….”
“பின்ன, மொதல்ல லவ் கிவா யிருக்கலாம்னீங்க?”
“ஏதோ தோணிச்சு, சொன்னேன். அந்த ஊகம் தப்பா யிருக்கலாமோன்னு இப்ப தோணுது.”
“சரி, சரி, அவ வர்றா.”
அம்மாவும் அப்பாவும் தட்டுகளுடன் எழுந்த அவசரத்தை ராதிகா கவனித்தாள். தன்னை அலைக்கழித்துக் கொண்டிருந்ததாய் அவர்க்ள் நினைக்கும் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் சோற்றைக் கடித்து மெல்லாமலே இருவரும் எழுந்து விட்டதாய் அவளுக்குத் தோன்றியது. அவள் தன்னுள் சிரித்துக்கொண்டாள்.
அவள் நேரே தன்னறைக்குச் சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டு கையில் கிடைத்த புத்தகம் ஒன்றைப் புரட்டலானாள். ஆனால் அவள் மனம் அதில் ஈடுபட மறுத்தது.
ஐந்து நிமிடங்கள் கடந்ததும், தனலட்சுமி, “ராதிகா! இங்க கொன்சம் வந்துட்டுப் போ!“ என்று குரல் கொடுத்தாள்.
அவள் வெற்றிலை மென்றுகொண்டிருந்தது குரலின் குழறலிலிருந்து தெரிந்தது. தினமும் இரவுச் சாப்பாடு ஆனதும், கூடத்தில் தீனதயாளன் தமது சாய்வு நாற்காலியில் சொகுசாய்ப் படுத்திருக்க, தனலட்சுமி தானும் வெற்றிலை மென்றபடி அவருக்கும் மடித்துக் கொடுப்பது வாடிக்கை.
‘ஏம்ப்பா? அம்மாதான் வெத்திலை மடிச்சுக் குடுக்கணுமோ? அதென்ன வழக்கம்? இந்தச் சின்னக் காரியத்தைக் கூட நீங்களா செய்துக்கக்கூடாதா?” என்று ராதிகா எத்தனையோ தடவைகள் பாதி உண்மையாகவும் பாதி விளையாட்டாகவும் கேட்டு அவரைச் சீண்டியிருக்கிறாள். ‘அன்னியோன்னியமான கணவந்மனைவியர்’ என்றுதான் எப்போது அவள் அந்த வெற்றிலைப் மடித்துக் கொடுத்தல் நிகழ்ச்சியைப் பார்த்தாலும் தனக்குள் நினைத்து மகிழ்ச்சியோடு சிரித்துக் கொள்ளுவாள். ஆனால் இன்றோ அவளுக்கு ம்கிழ்ச்சிப் புன்னகை வரவில்லை.
புரட்டிக்கொண்டிருந்த புத்தகத்தைக் கட்டிலில் வைத்துவிட்டு, “இதோ வந்துட்டேம்மா!” என்று குரல் கொடுத்தவாறு ராதிகா தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
“வா. இப்படி உக்காரு, சொல்றேன்.”
“உக்காந்து பேசுற அளவுக்கெல்லாம் பெரிய விஷயம் இல்லேம்மா அது!”
“சரி. அப்ப நின்னுக்கிட்டே பேசு. என்ன சங்கதி? காலேஜ்ல என்ன நடந்திச்சு? வீட்டுக்கு வந்ததிலேர்ந்து ஏன் இப்படி எதையோ பறி குடுத்தது மாதிரி உம்னு இருக்கே?”
“இங்கிலீஷ்லயும் கணக்குலயும் நூத்துக்கு நூறு மார்க் எதிர்பார்த்தேன். இந்தத் தடவை ரெண்டுலயுமே குறஞ்ச மார்க்தான் வந்திருக்கு. இங்கிலீஷ்ல எண்பது, கணக்குல எண்பத்திரண்டு. இன்னொரு பொண்ணு ரெண்டுலயும் என்னை முந்திட்டா.”
தனலட்சுமி மகளை நேருக்கு நேராய்க் கூர்ந்து பார்த்தாள். அம்மாவின் நேரடியான பார்வையால் தாக்கப்பட்டு, ராதிகா கணத்துக்கும் குறைவான நேரம் தன் விழிகளைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தாலும், அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டுவிட்டாள். ’அப்பாவைக் காட்டிலும் அம்மா இது போன்ற விஷயங்களில் புத்திசாலி’ என்பது அவள் தன் அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்துகொண்டிருந்த உண்மை. எனவே,கவனமாய் இருக்க முடிவுசெய்து, தன் முகத்துச் சோகம் குறையாதபடி பார்த்துக்கொண்டதோடு, சன்னமாய் ஒரு பெருமூச்சையும் செயற்கையாக உதிர்த்தாள்.
வெற்ற்லை மடிப்பதை நிறுத்திவுட்டு, அதைக் குதப்புவதையும் நிறுத்திவிட்டு, தனலட்சுமி ராதிகாவை ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருந்ததன் உள்ளர்த்தம் புரியாத தீனதயாளன் குபீரன்று பெருங்குரலெடுத்துச் சிரித்தார். சிரித்த சிரிப்பில் அவரது இளந்தொந்தி குலுங்கியது.
“வா, வ. இப்படி அந்த நாற்காலியை இந்தப் பக்கமா இழுத்துப் போட்டுக்கிட்டு உக்காரு. உன்னோட கொஞ்சம் பேசணும்,” என்ற அவர், ”பயித்தியம்! பயித்தியம்! இதுக்குப் போயா மொகத்தை இப்படி உம்னு வெச்சுக்கிட்டு இருக்குறே? சரியாப் போச்சு, போ!” என்று மறுபடியும் ஆதரவாய்ச் சிரித்தார்.
ராதிகா அவ்ர் சொன்னப்டி நாற்காலியை நகர்த்திப் போட்டுக்கொண்டு உட்காராமல், அவரை நெடிய பார்வை ஒன்றால் தாக்கினாள். மகளின் பார்வையில் ஏதோ வித்தியாசம் இருந்ததை அப்போதுதான் அவர் கவனித்தார் சரியாக அந்தக் கணத்தில், தனலட்சுமி அடுத்த வெற்றிலையை எடுத்துக் காம்பிலிருந்து தொடங்கி அதன் நரம்பை நீக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், மகளின் பார்வை ஒரு வித்தியாசத்துடன் தன் கணவர் மீது பதிந்து மீண்டதை அவள் கவனிக்கவில்லை.
எதையும் கணிக்க முடியாததால், “என்னம்மா அப்படிப் பாக்குறே? நெசமாத்தான் சொல்றேன். மொத மொதலா இந்த வாட்டிதானே எண்பதுக்கு மேல ஏறல்லே? அதுத்த வாட்டி உன் வழக்கமான தொண்ணூத்துச் சொச்சத்தை வாங்கி அசத்திட்டாப் போச்சு! இதுக்குப் போய் யாராச்சும் இப்படி முகத்தைத் தூக்கி வெச்சுப்பாங்களா?” என்றவாறு தீனதயாளன் அகலமாய்ப் புன்னகை புரிந்தாரர்
“ஆமாண்டி. உங்கப்பா சொல்றதுதான் சரி. உன்னோட வாடின மொகத்தைப் பாத்ததும், நான் கூட என்னமோ, ஏதோன்னு கொஞ்சம் பயந்துதான் யோயிட்டேன். காலேஜ் பரீட்சையில மார்ர்கு குறையிறது ஒண்ணும் பெரிய விஷயமில்லேடி. வாழ்க்கைப் பரீட்சையிலதான் நிறைய மார்க்கு வாங்கித் தேறணும்! இதெல்லாம் என்னடி? வெறும் சுண்டைக்காய்ப் பரீட்சை!” என்ற தனலட்சுமி மடித்து முடித்திருந்த வெற்றிலையைத் தீனதயாளனிடம் கொடுத்துவிட்டு அடுத்த வெற்றிலையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
அதை அப்பாவின் கையில் கொடுத்த போது அம்மாவின் முகத்தில் மலர்ந்திருந்த சிரிப்பை ராதிகாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ‘அய்யோ! அப்பாவி அம்மாவே! உண்மை தெரிஞ்சா அப்பாவைப் பார்த்து இப்படி அசட்டுச் சிரிப்புச் சிரிப்பீங்களா?’ – இவ்வாறு எண்ணிய அவளது பார்வை இப்போது முறைப்பாகத் தாயின் மீது பதிந்தது.
தனலட்சுமி, “என்னடி என்னமோ முறைக்கிறே? அப்ப அப்பாவை முறைச்சே. இப்ப என்னை முறைக்கிறே! நெசமாத்தாண்டி சொல்றேன். இருபது வயசு ஆகுது உனக்கு, நல்லா யோசிச்சா நான் சொல்றதை ஒத்துக்குவேடி. இதெல்லாம் ஒரு பரீட்சையா என்ன?” என்றாள் மறுபடியும்.
“ஏம்மா? நான் உங்களை ஒண்ணு கேக்கட்டுமா?”
”கேளேண்டி! உங்கப்பா சொன்னபடி அந்த நாக்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உக்காந்துதான் பேசறது.”
“ரெண்டே நிமிஷந்தாமா. அதுக்குன்னு எதுக்கு உக்காந்து எந்திரிக்கணும்?”
“சரி, கேளு.”
“ஆமா?நீங்க எப்படிம்மா? உங்க வாழ்க்கைப் பரீட்சையில தேறிட்டீங்களா? நிறைய மார்க் வாங்கிட்டீங்களாம்? இப்பவும் வாங்கிட்டு இருக்கீங்களா?”
வாயை நோக்கிப் புறப்பசட்ட வெற்றிலை தாங்கிய கையைப் பாதிப் பயணத்தில் நிறுத்திக்கொண்ட தனலட்சுமி, “என்னடி கேக்குறே நீ? புரியலை!” என்றாள் விழிகளை விரித்து.
“வாழ்க்கைப் பரீட்சைன்னு நீங்க எதைம்மா நொல்றீங்க?”
“கொஞ்சம் இருடி. வெத்திலைச் சாறைத் துப்பிட்டு வர்றேன். ஒரு நிமிசம்!” என்றவாறு எழுந்த தனலட்சுமி கழுவு தொட்டி நோக்கிச் சென்று அதை வெற்றிலைச் சாற்றைத் துப்பித் தண்ணீர் கொட்டி வாயையயும் கொப்பளித்த பின் இருக்கைக்குத் திரும்ப முற்பட்டாள்.
இதற்குள், “என்னம்மா கேக்கப்போறே நீ உங்கம்மாவை?” என்று தீனதயாளன் அவளைக் கேட்டிருந்தார். ஆனால் ராதிகா பதில் சொல்லவில்லை. அம்மாவின் வரவுக்குக் காத்திருந்தாள்.
”கேளுடி!” ஏன்றபடி தனலட்சுமி உட்கார்ந்துகொண்டாள்.
“என் கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்கம்மா. வாழ்க்கைப் பரீட்சைன்னு எதைம்மா சொல்றீங்க? இப்ப உங்களையே எடுத்துக்கலாம் – உதாரணத்துக்கு…”
“என்னது! உங்கம்மாவை எடுத்துக்கிறதா! சரியாப் போச்சு, போ. இருநூறு கிலோ இருப்பாளே! சித்தானைக்குட்டி மாதிரி இருக்கா. அவளை எடுத்துகிறதா! என்னால ஆகாது நீ வேணா ட்ரை பண்ணிப் பாரு!”
“”சீ. வாயை மூடுங்க. இன்னதுதான் பேசுறதுன்னு கெடையாது? … சரி,. சொல்லுடி…”
“நான் என்ன கேக்கறேன்னா, உங்களோட வாழ்க்கைப் பரீட்சையில் நீங்க நல்ல மார்க் வாங்கியிருக்கீங்களளான்னுதான் கேக்கறேன்.”
“ஏண்டி? என்னைப் பாத்தா இப்படி ஒரு கேள்வி கேக்குறே? இந்த நிமிசத்துல என்னை விட சந்தோசமான பொம்பளை வேறெ எவளும் இருக்க மாட்டாடி! ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரே பொண்ணு, ஒரே பையன். இப்ப வேணா குண்டாயிட்டேனே தவிர, சின்ன வயசில நான் எம்புட்டு அழகு, தெரியுமா? என்னோட சின்ன வயசு ஃபோட்டோ பாத்திருக்கியில்ல? சாயலுக்கு என்னையும் நெறத்துக்கு உங்கப்பாவையும் கொண்டு நீங்க ரெண்டு பேரும் பொறந்திருக்கீங்க. ரகுவும், நல்லாப் ப்டிச்சு நல்ல வேலையில இருக்கான்.. மாசத்துக்கு மூணு லெட்டர் எழுதிடறான். பொறுப்பான மகனாய் இருக்கான். நீயும் நல்லாப் படிக்கிறே. உங்கப்பா ஆஃபீசரா யிருக்காரு. கை நிறையச் சம்பளம் வாங்குறாரு. முழுச் சம்பளத்தையும் அப்படியே ஏங்கிட்டக் கொணாந்து குடுத்துர்றாரு. என்ன, ஏதுன்னு கணக்குக் கேக்குறதே இல்லே. வீட்டு வரவு-செலவுக் கணக்கைக் கொஞ்சம் பாருங்கன்னாலும் கேக்க மாட்டாரு. அம்புட்டு நம்பிக்கை வெச்சிருக்காரு என்பேர்ல. இது வரையிலெ எங்களுக்குள்ள பெரிசாச் சண்டை கினடை ஏற்பட்டதில்லே. இன்னும் என்னடி வேணும் ஒரு பொம்பளைக்கி? வாழ்க்கையில தாலி கட்டின புருஷனோட நம்பிக்கைதாண்டி ஒரு பொம்பளைக்கிப் பெரிய விஷயம். அதுல தாண்டி அவ மார்க்கு வாங்கணும்!”
ராதிகா புன்னகை காட்டினாள். மேசை விரிப்பின் முனையைப் பற்றி யிருந்த அவள் விரல்கள் சற்றே அதிர்ந்து வியர்த்தன.
“ஏம்ப்பா? அம்மாவுக்கு நிறைய மார்க் குடுத்திருக்கீங்களா?”
“அதுல என்னம்மா சந்தேகம்? உங்கம்மா சொல்றது முழுக்க முழுக்கச் சரிதான். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம பாத்துக்கிடுது உங்கம்மா. அதனால், ஆஃபீஸ்ல என்னால நிம்மதியா யிருக்க முடியுது. எனக்குக் க்ளாஸ் வொன் ஆஃபீசர் ப்ரொமோஷன் கிடைச்சிருக்குதுன்னா, அதுக்கு உங்கம்மாவோட அனுசரணைதான் காரணம். வரிசையா மூணு பரீட்சை எழுதி எல்லாத்துலயும் நல்லாத் தேறி பெரிய அதிகாரியானேன்னா, அதுக்குக் காரணமே உங்கம்மாவோட ஒத்துழைப்பால எனக்குக் கிடைச்சிருக்கிற நிம்மதியான குடும்ப வாழ்க்கையாத்தானே இருக்க முடியும்?” – இவ்வாறு கேட்டுவிட்டு, தீனதயாளன் தம் மனைவியைப் பெருமை ததும்பிய விழிகளால் ஏறிட்டார். தனலட்சுமியின் முகத்தில் ததும்பிய பெருமிதத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். இப்படி ஒரு பாராட்டுக் கிடைத்தது – அதுவும் தன் மகள் முன்னிலையில் கணவரிடமிருந்து கிடைத்தது – தான் பெண்ணாய்ப் பிற்ழ்ந்ததன் பயனைத் தனக்கு அளித்துவிட்டது என்று அவள் நினைத்தாள்.
“அது சரி, அப்பா நிறைய மார்க் வாங்கியிருக்காரா உங்கிட்ட?” என்று கேட்டுவிட்டு ராதிகா சிரித்தாள். சிரித்தபடியே, இருவரையும் மாறி மறிப் பார்த்தாள்.
“அதுலதாண்டி இருக்கு விஷயமே! உங்கப்பா ஏங்கிட்ட வாங்கின மார்க்கு எத்தனைன்னு தெரியுமில்ல? நூத்துக்கு நூறுடி! இது மாதிரி ஒரு குடும்பம் அமைஞ்சிருக்கிறதை விட வேற என்ன பெரிய பாக்கியம் வேணும்?”
“கல்யாணம் ஆனதுலேர்ந்து உங்களுக்குள்ள ஒரு கச்முசப்புக் கூட ஏற்பட்டதில்லேன்றே, உம்?”
“இல்லே. எனக்கு மானார்-மாமியார் இல்லே. அதனாலேயும் குடும்ப வாழ்க்கை அமைதியாப் போச்சு. அந்த விஷயத்துலேயும் நான் அதிருஷ்டசாலிதான்! உன் படிப்பு முடிஞ்சு உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீயும் என்னை மாதிரியே அதிருஷ்டக்காரியா யிருக்கணும்கிறதுதான் என் ஆசை!”
“அம்மா! கல்யாணம்கிறது சுத்த ஏமாத்து வேலைம்மா. நான் நிறையப் பேர் விஷயத்க்துல பாத்தாச்சு.”
“உன்னோட நினைப்புத் தப்புடி. அப்பா மாதிரி உனக்கு வரப்போற புருஷனும் இருந்தா, வாழ்க்கைப் பரீட்சையில் நூத்துக்கு நூற்தான் வாஙுகுவே!” –
ராதிகா விருட்டென்று எழுந்து தன்னறை நோக்கி விடுவிடு வென்று நடந்தாள்.
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது