கோப்பெருந்தேவியின் ஊடல்

This entry is part 23 of 30 in the series 17 பிப்ரவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com

காப்பிய நூல்களுள் காலத்தால் முற்பட்டது சிலப்பதிகாரம் என்னும் காப்பியமேயாகும். சிலம்புக் காப்பியம் தமிழகத்தின் மூவேந்தர்களாகிய சேரர், சோழர், பாண்டியர் என்பார் மூவர்க்கும் உரியதாகும். காப்பியத் தலைவியாகிய கண்ணகி சோழநாட்டில் பிறந்தாள். பாண்டிய நாட்டில் தன் கற்பின் பெருமையை நிறுவினாள். சேரநாடு சென்று வானகம் அடைந்தாள். இதனால்தான் காப்பிய ஆசிரியர் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்த மூன்று நாடுகளின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார். இதனை சீத்தலைச் சாத்தனார்,

‘‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது

அடிகள் நீரே அருளுக”

என்று இளங்கோவடிகளை நோக்கிக் கூறுவதன் வாயிலாக இனிது உணரலாகும். தமிழக மூவேந்தர் நாடுகளின் நிலைகளின் நிலைகளையும் ஒருங்கே எடுத்துரைக்கும் முதல் நூலாகவும், முதல் தமிழக் காப்பியமாகவும் சிலப்பதிகாரம் அமைந்து விளங்குவது புலனாகும். சிலப்பதிகாரப் கதைமாந்தர்களுள் மிகச் சிறந்த மாந்தராக பாண்டிய மன்னனின் அரசி கோப்பெருந்தேவி விளங்குகின்றாள். அவளது முல்லை சான்ற கற்பின் கடப்பாடு அனைவரையும் நெகிழ வைத்துவிடுகின்றது.

கலை மணம் கமழும் சிலம்பு

சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம்; ஆடல் கலைக் களஞ்சியம். அதன் கதையில் ஒரு முக்கிய பாத்திரம் மாதவி; ஆடல், பாடல், அழகு மூன்றிலும் சிறந்தவள். அவளது அரங்கேற்றம் அரங்கேற்று காதை என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ் இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோர்க்கு உரிய தகுதிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆடலரங்கத்தின் நீளம், அகலம், உயரம் பற்றிக் கூறும் கலை நூல் இதுவே.

அழகு மிக்க பெண்களுக்கு ஐந்தாவது வயது தொடங்கி ஏழாண்டுகள் ஆடல் பாடல் பயிற்றுவிப்பர். பயின்று முடித்தபின் மன்னர் காண அரங்கேற்றம் நிகழும். இவ்வகையில் பயின்று அரங்கேறிய மாதவி ஆடும் பதினொரு ஆடல்கள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன.

சிறப்பியல்புகள்

சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகள் பல. இது தமிழ்நாட்டின் முப்பகுதிகளைப் பற்றியும், மூவேந்தர்களைப் பற்றியும், மூன்று தலைநகரங்களைப் பற்றியும், விரிவாகக் கூறும் நாட்டுக் காவியம் ஆகும். அரச மரபுகள் பற்றிய நூல்போல் தோன்றினாலும் காவியத்தின் தலைவன் தலைவியாக உள்ளவர் சோழநாட்டு வாணிகக் குடும்பத்து மக்களே ஆதலின், இது குடிமக்கள் காப்பியம் ஆகும். அவ்விருவருள்ளும் கண்ணகியாகிய தலைவியே சிறந்து விளங்குவதால், பெண்ணினத்திற்குப் பெருமை தரும் காவியமாக இது அமைந்துள்ளது. அக்காலத்தில் விளங்கிய சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய ஒன்றையும் பழிக்காமல் பொதுமை போற்றுதல் இதன் சிறப்பாகும். காவியத்தின் இன்னொரு சிறப்பு நாடாளும் வேந்தனை எதிர்த்துப் பெண் ஒருத்தி நீதியை எடுத்துரைத்துப் புரட்சி செய்த பெருமையாகும். தன் ஆணைக்குக் குறுக்கே வாய்திறப்போர் இல்லாத வகையில் நாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெரும்படை உடையவனாய் அரசு நடத்திய வேந்தன், நங்கை ஒருத்தியின் துயரக் கண்­ரால் கலங்கிச் சோர்ந்து மடிந்த காட்சி, துன்புறுவோரின் சி?று கண்­ர்த் துளிகளால் துன்புறுத்துவோரின் இணையிலா ஆற்றலும் தேய்ந்து மாய்வதைக் காட்டுகிறது. ஆயினும் அந்த வேந்தனின் பெருமை உயர்கிறது.

சிலப்பதிகாரமே முதலில் தமிழகத்தை ஒன்றாகக் கண்டது;
தமிழன் என்ற இன உணர்ச்சிக்கு வித்திட்டது; பிறவிப்
பகைவர்களாகத் தம்முள் போரிட்டழிந்தனர் தமிழ் மன்னர்கள்.
அடிகளோ பாண்டியன் அவல முடிவைக் கேட்டுச் சேரன்
வருந்துவதனைக் காட்டியுள்ளார். தமிழரசர் வீரத்தை இகழ்ந்த
ஆரிய மன்னரை அடக்க ஒன்றுபட்ட தமிழ் இனத்தின்
சார்பாளனாக வடநாடு சென்றான் சேரமன்னன். வாழ்த்துக் காதையில் சேரநாட்டுப் பெண்கள் சோழநாட்டுப் பெண்களோடு கூடிநின்று மூவேந்தர் புகழையும் பாடி மகிழ்கின்றனர். இவ்வாறு, தம் காப்பியத்தைக் கருவியாகக் கொண்டு ஒன்றுபட்ட தமிழகத்தை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்த இளங்கோவடிகள் பாராட்டுக்கு உரியவர்.

சிலம்புக்குள்ள இன்னொரு சிறப்பாவது அது
சமயங்களுக்கிடையே சகிப்புத் தன்மையை வற்புறுத்துவதாக
அமைந்துள்ளது. அடிகள் சமணர். ஆனால் பிற சமய வெறுப்பை
ஓரிடத்தும் காட்டவில்லை. சமணத் துறவி கண்ணனை வழிபடும்
மாதரியிடம் மதிப்புக் கொண்டுள்ளார். மாதரியும் சமணத்
துறவியைக் கண்டு காலில் வீழ்ந்து பணிகின்றாள். குன்றக்
குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும்,
ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் அடிகள் வாழ்த்துகிறார்.
அவ்வக் கடவுளையும் பாடும்பொழுது சமமான பக்தி
கொண்டவராக அடிகள் தோன்றுகின்றார். சாவக நோன்பியான
கோவலன் வைதீக அந்தணர்களிடம் பரிவு காட்டுகிறான்;
அவர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்குகின்றான். மாடல
மறையோன் என்ற அந்தணன் கோவலனை உளமார
வாழ்த்துகின்றான். இங்ஙனம் பல நிலையினரும் பகையின்றிக் கூடி
வாழும் இனிய நிலையினை ஒரு சமரச ஞானியைத் தவிரப் பிறர்
யாரும் காட்ட முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிலப்பதிகாரம் பண்டைத்
தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் உணர உதவும்
பெட்டகமாக விளங்குகின்றது. சேர சோழ பாண்டிய மரபினர்
பலருடைய போர் வெற்றியும், அவர் தம் தலைநகர்களின்
அமைப்பும், வளமும், தமிழரின் வணிகச் சிறப்பும், சமய
வாழ்க்கையும், கலைமரபும், நம்பிக்கையும், பழக்க வழக்கங்களும்
மிக விரிவாக விளக்கப்பட்ட ஒரு தலைசிறந்த காப்பியமாகச்
சிலப்பதிகாரம் விளங்குகின்றது. தமிழர் திருமணத்தில் நான்மறை
அந்தணர் சடங்கு செய்தலைச் சிலப்பதிகாரமே முதலில்
கூறுகின்றது. இந்திரவிழாவைத் தமிழர் கொண்டாடியது பற்றிய
விரிவான செய்தி இந்நூலில் தான் முதன்முதல் சொல்லப்படுகிறது.
தமிழரின் இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய முழுமையான
செய்திகளை விரிவாகத் தருவதும் இந்நூலேயாகும். சுருங்கச்
சொன்னால் சிலப்பதிகாரம் தமிழர் தம் அரசியல், மற்றும்
பண்பாட்டு வரலாற்றுப் பெட்டகம் ஆகும்.

குன்றக்குரவையில் குறிஞ்சி நில மக்கள் வாழ்வும், ஆய்ச்சியர் குரவையில் முல்லை நில மக்கள் வாழ்வும், நாடுகாண் காதையில் மருதநில மக்கள் வாழ்வும், வேட்டுவவரியில் பாலைநில மக்கள் வாழ்வும் விரிவாகப் பேசப்படுகின்றன. இங்ஙனம் ஐவகை நிலங்கள், அங்கு வாழும் மக்கள், அவர்களது வாழ்க்கை, அந்நிலத்திற்குரிய ஆடல் பாடல்கள் ஆகியன பற்றிய குறிப்புக்கள் ஆகியவை அமையப்பெற்று சிலப்பதிகாரமானது ஒரு சமுதாய இலக்கியமாகத் திகழ்கின்றது.

‘மங்கலவாழ்த்தில்’ தொடங்கும் சிலம்பு அவலத்தில் முடிகிறது. இவ்வகையில் இது ஓர் அவலக் காப்பியமாகத் திகழ்கின்றது. அடைக்கலக் காதைக்கு (காப்பு) அடுத்துக் கொலைக்களக் காதை(அழிவு)யும், நாடுகாண்காதைக்கு (நாடு) அடுத்துக் காடுகாண்காதையும் (காடு) அமைந்து காப்பியத்தில் முரண்சுவையை மிகுவிக்கின்றன. சிறப்புகள் பலபெற்ற ஒப்பற்ற காப்பியமாகச் சிலம்பு திகழ்கின்றது.

பெண்ணின் பெருமை பேசும் நூல்

சிலப்பதிகாரம் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம் என்றே கூறலாம். அது காட்டும் பண்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது பத்தினி வழிபாடாகும். சங்க காலத்தில் இறந்த வீரனுக்குக் கல்லெடுத்து வழிபடுவதற்குக் கூறப்பட்ட செயல்களெல்லாம் சிலம்பில் கண்ணகிக்குக் கூறப்படுகின்றன.

கல்லைக் காணுதல், அதனைத் தேர்ந்து கொள்ளுதல், நீரில் ஆட்டுதல், கோட்டத்தில் நிலை நிறுத்துதல், வாழ்த்துதல் ஆகியன வீரர்க்கே என்றிருந்தன. இவற்றைக் கண்ணகிக்குரியனவாக ஆக்கிப் பத்தினி வழிபாட்டை அக்காலத்தவர் போற்றியிருக்கின்றனர். பத்தினி மழையைத் தரக் கூடியவள் என்ற கருத்து மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் கடவுளாக உயர்த்தப்பட்டதைக் காணுகிறோம். கண்ணகியை மட்டுமல்லாது, மாதவி, தேவந்தி, கவுந்தியடிகள், மாதரி, ஐயை, கோப்பெருந்தேவி ஆகிய பெண்களின் பெருமைகளையும் பேசும் நூலாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையவர்களாகத் திகழ்கின்றனர். காப்பியத் தலைவியான கண்ணகி வணிகர் குடியில் பிறந்தவள். கண்ணகியின் தோழியான தேவந்தி பார்ப்பனப் பெண். மாதவி மடந்தை கணிகையர் குலத்தில் பிறந்தவள். கவுந்தியடிகள் சமணத்துறவி. மாதரியும் ஐயையும் இடைக்குலப் பெண்கள். கோப்பெருந்தேவி பாண்டியனின் மனைவி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிலப்பதிகாரத்தில் படைக்கப்பட்டுள்ளனர். காப்பியத் தலைவியின் தலைமைத்துவத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றவர்களாக இப்பெண்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இவர்களுள் கண்ணகி காப்பியம் முழுவதும் வருகின்றாள். அவளைச் சுற்றியே கதை நிகழ்கின்றது. தேவந்தி புகார்க்காண்டத்தில் வந்து பின்னர் வஞ்சிக் காண்டத்தில் வருகின்றாள். மாதவி புகார்க்காண்டத்தில் வருகின்றாள். ஆனால் அவளைப் பற்றிய செய்திகள் மதுரைக் காண்டத்திலும், வஞ்சிக்காண்டத்திலும் குறிப்பிடப்படுகின்றன. கவுந்தியடிகள் புகார்க்காண்டத்தின் இறுதியிலும் மதுரைக்காண்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் இடம்பெற்று கதையில் ஏற்படும் திருப்பங்களுக்கு உறுதுணையாக விளங்குகிறார். மாதரியும், ஐயையும் புகார்க்காண்டத்தில் மட்டும் இடம்பெறுகின்றனர். கோப்பெருந்தேவி மதுரைக்காண்டத்தில் கொலைக்களக் காதையிலும், வழக்குரை காதையிலும் வருகின்றாள். சிறுபகுதியில் மட்டுமே இடம்பெற்று அனைவருடைய உள்ளங்களிலும் நீங்கா நினைவாகப் பதிவாகிவிடுகின்றாள்.

பாண்டியனின் தேவி

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தால் போற்றப்பெறும் பாண்டிய மன்னன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் ஆவான். இப்பாண்டிய மன்னன் ஆரியப் படையினை வெற்றி கொண்ட காரணத்தால் அவனை ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் என்று ஆன்றோர் போற்றினர். நீதிவழுவாமல் கல்விக்கேள்விகளுடன் மிகவும் சிறப்பாக நாட்டை ஆண்ட பாண்டிய மன்னனின் தேவியாகக் கோப்பெருந்தேவி விளங்கினாள்.

ஊடலும் ஊழும்(விதி)

சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவானதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஊடல்தான் முதன்மையாக இருந்திருக்கிறது என்று ஆழ்ந்து நோக்குங்கால் தெளிவாகும்! முதலில் மாதவி ஊடல் கொண்டாள். விளைவு கோவலனும், கண்ணகியும் வாழ்வாதாரம் வேண்டி மதுரை வீதிகளில் அலைய வேண்டியதாயிற்று! கோவலன் கள்வனாக்கப்பட்டுக் கொலைப்பட்டான். அதேபோன்று மதுரை அரண்மனையில் அரசி கோப்பெருந்தேவி அரசனிடம் ஊடல் கொண்டாள்! அதன் விளைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறின.

இளங்கோவடிகள், புறஞ்சேரியிறுத்த காதையில் பாண்டிய மன்னனின் செங்கோன்மைச் சிறப்பினை,

‘‘கோள்வ லுளியமும் கொடும்புற் றகழ

வாள்வரி வேங்கையும் மான்கண மறலா

அரவும் சூரும் இரைதேர் முதலையும்

உருமும் சார்ந்தார்க்கு உறுகண் செய்யா

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என

எங்கணும் போகிய இசையோ பெரிதே!’’

(புறச்சேரியிருத்தகாதை 5-10)

என்று எடுத்துரைக்கின்றார். இத்தகைய சிறந்த நாட்டின் அரசன் நெடுஞ்செழியன். முறைசெய்தே ஆட்சி நடத்தியவன். இத்தகையவனின் உள்ளத்துள் ஊழ் புகுந்தது. இந்த நிலையில் அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் நடந்த ஆடலை அனுபவித்த வகையில் அரசியின் ஊடல் தோன்றிவிட்டது. கோப்பெருந்தேவி காவலனோடு ஊடினாள். தனக்குத் தலைநோய் வருத்தம் என்று கூறி அந்தப்புறம் சென்றாள். ஒருபுறம் ஊழ் மறுபுறம் அரசியின் ஊடல். தவறு செய்யாத தன்னைத் தவறாக நினைத்துக் கெண்டு அரசி ஊடியிருக்கின்றாளே என்ற கவலை மன்னனை வருத்தியிருக்கின்றது. அதனால் அரசி தன்மேல் கொண்ட ஊடலைத் தீர்க்க வேண்டும் என்ற வேட்கை அவனுள் எழுந்தது.

நாம் நடனப் பெண்களின் கலையை ரசித்ததைத் தேவி தவறாக உணர்ந்து கொண்டாளே! அவளை எவ்வாறேனும் சமாதானப் படுத்துதல் வேண்டும் என்று கருதினான் பாண்டியன். அதனால், ‘‘கோப்பெருந்தேவி கோயில் நோக்கிச்’’ (சிலம்பு, மதுரை, கொலைக்களக்காதை, 139-வது வரி) சென்றான்.

அப்போது, ‘‘காப்புடை வாயிற் கடைகாண் அகவையின்’’ (சில.,கொலைக்.,140-வது வரி) கண்டு பொற்கொல்லன் அரசனை வணங்கினான்.

அரசியின் ஊடலைத் தீர்க்கச் சென்ற மன்னனைப் பார்த்து, ‘‘அரசே நம் அரண்மனையிலிருந்த சிலம்பைத்திருடிய கள்வன் என்னுடைய சிறுகுடிசைக்கு வந்திருக்கிறான்’’ என்று கூறினான். காணாமற்போன சிலம்பு தன் கைவசம் வந்தால் அரசியின் ஊடலைத் தீர்த்துவிடலாம் என்று மன்னவன் கருதி,

‘‘தாழ்பூங்கோதை தன்காற்சிலம்ப

கன்றிய கள்வன் கையதாகிற்

கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு’’

என்று ஆணையிடுகின்றான். பாண்டியன் உள்ளத்தில் கோப்பெருந்தேவியின் ஊடலைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததாலும், பிறவற்றைச் சிந்தித்துக் காலந்தாழ்த்தக் கூடாது என்று கருதியதாலும், ஊழ்வினை விளையும் காலமாதலின் சிறிதேனும் சிந்தியாது காவலரைக் கூவி அழைத்து, ‘‘தேவியின் சிலம்பு இவன் கூறும் கள்வனிடத்தே இருக்குமாயின் அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க’’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு அந்தப்புரம் நோக்கிச் சென்றான்.

தவறு செய்யாத நிலையில் அரசி தவறெனக் கொண்டமையாலும், அரசியின் மீது ஏற்பட்ட காதல் மிகுதியினாலும் நிலைமாறி அரசனின் வாய் உமிழ்நீர் வற்றி, ‘‘கொன்று அச்சிலம்பு கொணர்க’’ என்று கூறி சொற்சோர்வுபட்டுவிட்டான். இது பொருட்சோர்வுக்கு வழியேற்படுத்தி கோவலனின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. ஊடலும் ஊழும் இணைந்து செயல்பட்டன. பாண்டியன் செங்கோல் வளைந்தது.

பொற்கொல்லன் தனது எண்ணம் நிறைவேறியது என்று எண்ணி காவலருடன் கோவலன் இருந்த இடத்தை அடைந்தான். கோவலனிடம் வஞ்சகமாகப் பேசி சிலம்பைக் காட்டுமாறு கூறினான். காவலர்கள் அதனைப் பார்த்தவுடன் அவர்களைத் தனியே அழைத்துச் சென்ற பொற்கொல்லன் அச்சிலம்பை கோப்பெருந்தேவியின் சிலம்புடன் ஒப்புமை கூறிக் கள்வனாகிய கோவலனைக் கொலைசெய்யுமாறு கூறினான். கோவலன் கொலையுண்டான். இங்ஙனம் பாண்டிமாதேவியின் ஊடல் பல்வேறு நிகழ்வுகளுக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

களவுபோன காற்சிலம்பு

கோப்பெருந்தேவியின் காற்சிலம்பில் ஒன்றே காணாமல் போனது. இரண்டும் களவாடப்பட்டிருக்குமானால் கோவலனைக் கொன்று ஒரு சிலம்பைக் கொண்டு வந்தபோது, மற்றொரு சிலம்பு எங்கே என்று ஊர்க்காப்பாளரைப் பாண்டியன் கட்டாயம் வினவியிருப்பான். அவ்வாறு பாண்டியன் கேட்டிருந்தால் கண்ணகி வந்து வழக்குரைக்க வேண்டாமலேயே தன் கொடுங்கோன்மையை உணர்ந்து உயிர்விட்டிருப்பான். தானே உணர்ந்து கை குறைத்துக் கொண்ட செங்கோன் முறைமையைப் பொற்கைப் பாண்டியன் வரலாற்றில் அறிகின்றோம்.

காவலர்களை வினவாமையாலும், காவலன் உயிர் விடாமையாலும், தேவியின் தொலைந்த சிலம்பு ஒன்றேயாகும். கோவலன் சிலம்பு இரண்டையும் விற்க எடுத்துச் சென்றிருப்பினும், கதை வேறு வகையாக முடிந்திருக்கவம் கூடும். இரண்டு சிலம்பு வைத்திருக்கக் கண்டாரேல், கோவலனைக் கொல்ல ஊர்க்காவலர்கள் மறுத்திருப்பர். ஊழ்வினையால் கோவலன் ஒரு சிலம்மை மட்டும் கொண்டு சென்றான். ‘‘காவலன் தேவிக்கு ஆவது ஓர்காற்கணி நீ விலையிடுதற்கு ஆதியோ (16;111) என ஒரே ஒரு சிலம்பு விற்பனை குறித்தே கோவலன் பொற்கொல்லனிடம் பேசுகின்றான். மேலும், ‘அவ்வொரு சிலம்பு காவலன் தேவிக்குத் தகுதியுடையது என்றும் மொழிகின்றான். பொற்கொல்லன் அரசியின் ஒரு சிலம்பு கவர்ந்த கள்வனாதலின், கோவலன் கூறியவற்றைக் கேட்டதும், அவனைக் கள்வன் எனக் குற்றம் சாட்டிவிடும் சூழ்ச்சி அவனுக்கு மனதில் உடன் எழுந்தது. கோவலன் தன் கூற்றால் கெட்டான்.

தேவியின் கனவும் மன்னனின் ஆறுதலும்

கோவலன் கொலையுறுவதற்கு முந்திய நாள் இரவில் பாண்டியின் தேவியானவள் கொடுமையான கனவொன்றைக் கண்டாள். அக்கனவில் மன்னனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் இற்றுத தரையில் விழுந்தன. கொற்ற வாயிலிற் கட்டிய மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. கதிரவனைக் காரிருள் விழுங்கியது. இரவில் வானவில எழுந்தது. பகலில் விண்மீன்கள் எரிந்து விழுந்தன. எட்டுத்திக்கும்அதிர்ந்தன. இங்ஙனம் அவள் கண்ட கனவினைத் தனது தோழியிடம் கூறினாள்.

நான் கண்ட கனவினால் நம் நாட்டிற்கும் அரசனுக்கும் வரப்போகும் துன்பம் ஒன்று உண்டு. அதனை யாம் அரசனிடம் அறிவிப்போம் என்று கோப்பெருந்தேவி அரசவை சென்று அரியணையில் அமர்ந்திருந்த பாண்டியனின் பக்கம் சாய்ந்து அவனருகில் அமர்ந்து தான் இரவி் கண்ட கனவினை அரசனிடம் அறிவித்து என்னுறுமோ? என்று நெஞ்சம் நடுங்கினாள். அரசியின் நடுக்கம் கண்ட மன்னன் அவளுக்கு ஆறுதல் கூறினான்.

கண்ணகி வழக்கும் மன்னனின் அழிவும்

இவ்வேளையில் வாயிற் காவலன் ஒருவன் அரசவை புகுந்து வணங்கி வாயிலில் நிற்கும் கண்ணகியின் வரவை அரசனுக்கு அறிவித்தான். அரசவை வந்த கண்ணகி மன்னவனைக் கண்ணீருடன் பார்த்தாள். இதனைக் கண்டு துணுக்குற்ற மன்னன்,

‘‘நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?

யாரையோ நீ மடக்கொடியோய்’’

என்று வினவினான். கண்ணகி கொதிப்புற்று, ‘‘சிலம்பினை விற்கச் சென்று நின்னால் கொலைக்களப்பட்ட கோவலனின் மனைவியாவேன். என்பெயர் கண்ணகி’’ என்று கூறினாள்.

இதனைக் கேட்ட மன்னவன், ‘‘கள்வனைக் கொல்லுதல் கடுங்கோலன்று அஃது அரச நீதியே’’ என்று கூறினான். அது கேட்ட கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதை அறித்தற் பொருட்டுத் தன் சிலம்பிலுள்ள பரல் மாணிக்கம் என்றாள். உடனே அரசன் தன் தேவியின் சிலம்பிலுள்ள பரல் முத்தென்று மொழிந்து கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பைக் கொணரச் செய்தான்.

கண்ணகி அதனைக் கையில் எடுத்து ஓங்கித் தரையில் எறிந்தாள் அப்பொழுது அதனுள் இருந்த மாணிக்கப் பரல்கள் மன்னவன் ‘வாய்முதல் தெறித்தது’. மன்னன் பெரிதும் கலங்கினான். அவனது செங்கோல் வளைந்தது. வெண்கொற்றக் குடை தாழ்ந்தது. ‘‘பொற்கொல்லனின் இழிசொற்கேட்ட நானோ அரசன்! நானே கள்வன்! அரும்புகழ் வபடைத்த பாண்டியர் பெருங்குலம் என்னால் ஆறாத பழியுற்றதே! இன்றோடு என் வாழ்நாள் முடிவதாக!’’ என்று கூறித் துயரால் மயங்கி அரியணையிலேயே விழுந்து உயிர் துறந்தான்.

கோப்பெருந்தேவி உயிர்நீத்தல்

தன் கணவன் பண்டியன் மயங்கி விழுந்து இறந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி உள்ளம் குலைந்தாள். உடல் நடுங்கினாள். அலறினாள். துடித்தாள். ‘‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்’’ என்று அவன் இணையடி தொழுது தானும் வீழ்ந்து மாய்ந்தாள். தந்தை, தாய், உடன்பிறந்தார் போன்றவர்களை இழந்தால் அம்முறையினையுடைய பிறரைக் காட்டி ஆறுதல் கூறலாம். கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் கூற இயலாதன்றோ? ஆதலின் கோப்பெருந்தேவி கணவனுடன் உயிர்நீத்துக் கற்பின் கனலி என்று அனைவராலும் போற்றப்பட்டாள்.

ஊடலால் விளைந்த விளைவு

கோவலன் வெட்டுப்பட்டான்; கண்ணகி சூரியனை சாட்சிக்கு அழைத்தாள்; இராஜசபையில் பாண்டியன் ஒரு கேள்வி கேட்டான்; சிலிர்த்த கண்ணகி ஒரு தேர்ந்த வழக்கறிஞர் ஆனாள்; பாண்டியன் குற்ற உணர்ச்சியால் இறந்தான்; பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவியும் இறந்தாள்; மதுரை தீக்கிரையானது; வடக்கு தேசத்து ராஜாக்களான கனக, விசயரைக் கல் சுமக்க வைத்தது; தமிழக, கேரள எல்லையில் கண்ணகிக்குச் சிலை எழுப்பியது; சிலப்பதிகாரம் என்ற காப்பியம் எழுந்தது.

சாதாரணமாக ஒரு பெண்ணின் ஊடலால் ஏற்பட்ட எதிர்வினைகள் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்துவிட்டது! ஊடல் வீட்டில் ஏற்பட்டாலும், அது நாட்டிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது! இதிலிருந்து, ஒரு பெண்ணின் கண்ணீர் மட்டும் ஆயுதம் அல்ல, அவள் ஊடலும் ஆயுதம்தான் என்பதை சிலப்பதிகாரம் நமக்குப் புலப்படுத்துகின்றது.

கற்பின் கனலி கோப்பெருந்தேவி

காதல் வாழ்க்கை கண்ணகிக்கு மட்டுமா சொந்தம் ? அன்பு அவளுக்கு மட்டுமா சொந்தம்? காதலனுடன் அருமந்த நட்பு அவளுக்கு மட்டுமா வாய்த்தது?
குலைந்தனள்! நடுங்கினள்!; கோப்பெருந்தேவி.
என் இதயத்தின் மன்னவன் போன பின் யான் வாழ்வேனா? யான் வாழ்ந்துதான் என்ன? எங்கே கணவனைக் காண்பேன் நான்? தேம்பினாள் பாண்டிமாதேவி!
தவறை உணர்ந்த உடன் உயிர் விட்ட என் காதலனுக்குத் துணை செல்வேன் யான்! கோவலக் கொலைப்பழியை ஏற்று உயிர் விட்ட என் மன்னவனின் இதயத்தில் இடம் பெற்ற நானும் வாழேன்!

என் சிலம்பை எவரோ பறிக்க, உயிர்விட்டான் கண்ணகியின் கணவன்!
கண்ணகி சிலம்பை காவலன் பறிக்க, உயிர்விட்டான் என் கணவன்! அறம் பிழைக்கப் பழியை ஏற்றுக் கொண்டான் என் கணவன்! என் சிலம்பால் நேர்ந்த பிரிவிற்கு ஆறுதல் சொல்ல அவனொடு சேர்வேன்! என்று கோப்பெருந்தேவி நினைத்திருக்க வேண்டும்! வீழ்ந்தனள் பாண்டியன் மேலே! மாண்டனள் தேவி!
உயிர்..! யார் சொன்னார் கைகளில் இல்லை என்று?

வாழ வேண்டியபோது வாழ்ந்தும், வீழ நினைத்த போது காற்றைப் பிடுங்கி விட்டாற்போல் உயிரைத் தூக்கி எறிந்த இந்த மனித சக்தி ஒழுக்கம் நிறைந்தது! நேரிட்ட வாழ்வையும் மனஉறுதியையும் கொண்டது! கற்பென்ற இந்த மனத்தின் உறுதி கோப்பெருந்தேவிக்கு மட்டுமல்ல வழுவிய போது உயிர் விலகிய பாண்டியனுக்கும் தான்! மென்மையாள் கண்ணகி, கணவன் துயர் அறிந்து
வன்மையாள் ஆகி தன் மனத்திண்மையால் வென்றாள் மன்னனை!

சில வினாடிகளுக்குள் அரசனை வென்றாள்! அரச மன்றத்தை வென்றாள்! நீதியை வென்றாள்! இறந்து கிடந்த பாண்டியனையும் பாண்டிமாதேவியையும் நின்று நிலைத்துப் பார்த்தாள் கண்ணகி! பாண்டியன் மேல் பிணமாய் பாண்டிமாதேவி! சாவிலே ஒன்று சேர்ந்து விட்ட அவர்களின் காதல் வாழ்க்கை கண்ணகியையும் ஆட்கொண்டிருக்க வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் எரியுண்டதைத் தொடர்ந்து
நிகழ்ந்த சில நகர்வுகள் மிக முக்கியமானவை. கண்ணகி பாண்டிய மன்னனை வெல்கிறாள். பாண்டியனும் அவன் தேவியும் வரலாற்றிலும் பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கிற மரணத்தை எய்துகிறார்கள். அதைக் கண்டபோதும் கூடகண்ணகிக்கு ஆற்றாமை தாழவில்லை. அதற்குக்காரணம் பாண்டிய அரசன் மற்றும் அரசியின்உயிர் அவளுடைய குறிக்கோள் அல்ல. தன்னுடையஉற்ற துணையின் உயிர் பிரிந்ததை அவளால்தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கோப்பெருந்தேவி பாண்டியன் மேல் கொண்ட காதல் உயர்ந்தது; ஆம் கோப்பெருந்தேவி கற்பின் கனலியாக அனைவராலும் போற்றப்பட்டு வணங்கும் நிலைக்கு உயர்ந்தாள்.

தலைமை சான்ற பத்தினித் தெய்வம்

கற்பு என்பது ஒழுக்கத்தின் மறு பெயரே. பெண்ணின் ஒழுக்கத்தைச் சிறப்பித்துச் சொல்லும்பொழுது கற்பு என்று குறிப்பிடுவது இலக்கிய வழக்கில் வந்திருக்கின்றது. எந்த வாழ்க்கைக்கும் அன்பே அடித்தளம். அன்பில்லாத எந்த உறவும் பயனற்றது. அதிலும் ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடி நெடிய நாள்கள் வாழ வேண்டுமானால் அவர்களுடைய அன்பு ஆழமானதாக அகலமானதாக இருக்க வேண்டும்.கற்பைத் தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்று மூன்றாகச் சான்றோர் பிரிப்பர். இதில் தலைக்கற்பு என்பது கணவன் இறந்தவுடன் அவனுடன் அந்த நிமிடமே இறக்கும் பெண்ணின் தன்மையைக் குறித்தது. இதற்குச் சான்றாகக் கோப்பெருந்தேவியின் வாழ்வு அமைகிறது.

கணவன் இறந்த பிறகு அவனது சிதையில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது இடைக்கற்பு என்னும் தன்மையுடையது. இதற்குச் சான்றாகச் சிலம்பில் பாத்திரம் இல்லை. கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பு நோற்று விதவையாக வாழ்பவளின் கற்பு கடைக்கற்பு எனப்பட்டது. இதற்குச் சான்றாக மாதவியின் வாழ்வு அமைகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று கற்பு நெறிகளில் எதிலும் அடங்காத ஒரு தன்மையைக் கண்ணகியின் வாழ்வு காட்டுகிறது. இக்கற்புக் கோட்பாட்டின்படி நோக்கினால் கோப்பெருந்தேவியே பத்தினித் தெய்வமாகக் காட்சியளிக்கின்றாள். கோப்பெருந்தேவி தலைமைசான்ற பத்தினி தெய்வமாக விளங்குகின்றாள்.

குடிமக்களை எந்தக் குறையும் இல்லாமல் காக்கும் பொறுப்பு மன்னனுடையது என்றும், மண்ணகத்து உயிர்களுக்கெல்லாம் ஆதரவாய் நன்மைகள் செய்து துன்பத்தைப் போக்குவது தெய்வத்தின் கடமை அல்லது அருள் என்றும் மக்கள் நம்புகின்றனர். தன் அரசாட்சிக்கு உட்பட்ட நாட்டில் தனது தவறான தீர்ப்பினால் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவன் இறப்பதற்குத் தாம் காரணமாகி விட்டதை அறிந்த பாண்டிய மன்னன் உயிர் துறந்து சிறப்புப் பெறுகிறான். கணவன் இறந்தவுடன் தனது வாழ்வையும் முடித்துக் கொள்கின்றாள் கோப்பெருந்தேவி. இருவரும் பொன்னுடல் நீங்கி புகழுடல் எய்துகின்றனர்.

மதுரைக்காண்டத்தின் இடைப்பகுதியில் வந்தாலும் அனைவருடைய இதய ஆசனத்தில் அமரும் உயர் தெய்வமாகக் கோப்பெருந்தேவி விளங்குகின்றாள். தன் கணவனின் தவறான முறைமைக்குத் தானும் தன்னை அறியாது ஒரு காரணமாகவி விட்டோமோ? என்று கூட நினைத்தே தென்னவன் சீர்காக்கத் தன்னுயிரையும் விடுகின்றாள். கோப்பெருந்தேவியின் உள்ளம் நெக்குறுகி முடிவில் மன்னனுடன் இறந்து நில்லா உலகில் நிலைத்து நின்றுவிட்டாள். சிலப்பதிகாரத்திற்குக் கோப்பெருந்தேவியும் அவளது சிலம்பும், அவள் மன்னவனுடன் கொண்ட ஊடலும் காரணங்களாக அமைந்து காப்பியக் கதையில் பெருந்திருப்பங்களை ஏற்படுத்திவிட்டன என்பது நோக்கத்தக்கது.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    மேகலா இராமமூர்த்தி says:

    சிலம்பை நுணுகிக் கற்றுப் பல புதிய சிந்தனைகளை ஆய்வு நோக்கில் கட்டுரையில் வழங்கியுள்ள ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.

    -மேகலா இராமமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *