‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’

This entry is part 16 of 30 in the series 17 பிப்ரவரி 2013

இலக்கிய விமர்சனம் செய்வது தமிழுக்கே புதிய சரக்கு. தண்டியலங்காரம், ஒப்பிலக்கணம் இவைகளின் ஜீவிதத்தைக்கொண்டு, தமிழுக்கு இலக்கிய விமர்சனம் புதிதல்ல என்று சாதித்துவிடமுடியாது. ஏனைய நாட்டு இலக்கியங்களின் மேதா விலாசத்தோடும் த்த்துவங்களோடும நம் நாட்டின் இலக்கிய தத்துவங்களையும் அசுர சாதனைகளையும் எடை போடுவது இந்த இருபதாம் நூற்றாண்டில் தலையெடுத்திருக்கிறது.

இந்தத் தலைமுறையைத் தொடங்கி வைத்தவர் காலஞ்சென்ற வ.வே.சு அய்யர் என்றே சொல்லலாம். அவருடைய ‘கம்ப ராமாயண ரசனைச்சுவை’யும், ‘கவிதை’யுந்தான் இன்றைய விமர்சகர்களுக்குப் பாதை காட்டிற்று என்றும் சொல்லலாம்.  அதன்பின் தமிழில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சில விமர்சகர்கள் தோன்றினார்கள். இவர்களும் சஞ்சிகைகளின் தேவைக் குட்பட்டு, உதிரியாகத் தமது கருத்துகளைப் பரவ விட்டார்கள். எனினும் சிலர் அந்த உதிரி மலர்களையும் தொடுத்து ஆரமாக்கி இருக்கிறார்கள். அவைகளில்  திரு.அ.சீனிவாசராகவன், எஸ்.வையாபுரிப் பிள்ளை. சொ.விருத்தாசலம் இவர்களின் விமர்சன நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்நூல் அம்மாதிரியான ஒரு முயற்சி. இந்நூலை வாசகர்கள் இலக்கிய விமர்சனமாகவோ, விமர்சன இலக்கியமாகவோ – எப்படிப் படுகிறதோ அப்படி ஏற்றுக் கொள்ளலாம்.

இதிலுள்ள கருத்துக்கள் பல ஆழமும் கனமும் கொண்டவை. கலைகளை – இலக்கியத்தை நான் எப்படிப் புரிந்து கொண்டேன் எனபதற்கு விடையளிக்கும் முயற்சியாகவே இந்நூல் அமைந்திருக் கிறது. கருத்துகளைக கல்யாண வீட்டுச் சாம்பாரைப்போல் தண்ணீர் விட்டுப் பெருக்காமல், கூடியவரை சுயம்பாகவே தந்திருக்கிறேன். ஆதலின் சிலவற்றை மேலோட்டமாகப் படித்தால் மனதில் ஒட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன. இந்த நூலிலுள்ள அத்தியாயங்கள் எல்லாம் அதனதன் தன்மையில் தனிப் பிண்டங்களைப் போலவே அமைந்திருந்தாலும், மொத்தத்தில் ஒரு கூட்டு முன்னணி அமைத்து, ஏகோபித்தே செல்லுகின்றன என்று கருதுகிறேன.

இதிலுள்ள கருத்துக்களை யெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதில்லை. வளமுறையை, மரபை ஒட்டிய விவகாரங்களை, பிறந்த மேனியாகவே தந்திருக்கிறேன். யுத்தகளத்து நிருபனாக, நடந்ததை நபந்தவாறே சொல்லும் சஞ்சயனைப் போலத்தான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறேனே ஒழிய, கீதா போதனை செய்யும் கீதாசாரியனாகத் தோற்றமளிக்கவில்லை. அப்படித் தோற்றமளித்திருந்தால், அந்தக் கருத்துக்களில் என் கட்சியை வலியுறுத்த நான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறேன் என்றே அர்த்தம்.

ரகுநாதன்.
ஏப்ரல் 1948.

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *