வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
சீதாலட்சுமி
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்களை ஓர் குறிக்கோளுடன் புரட்டிக் கொண்டிருந்தேன். குறியீட்டைஅணுகியவுடன் கடமையை முடித்துவிட்டோம் என்று நின்றிருக்க வேண்டும். ஆசை யாரைவிட்டது? ஒர் நெட்டைக்கனவில் மேலும் நகர்ந்தேன். காலம் என்னைப் பார்த்து சிரித்தது. என் வாழ்க்கையே ஓர் தடகளப் போட்டி.. திடீரென்றுஓர் முட்டுக்கட்டை என்னைத் தடுக்கி விழ வைத்தது. சமாளித்து எழுந்து ஓடலாம் என்று நினைத்தேன். இன்னொருதிக்கிலிருந்து வேறொரு தடைக் கல் பறந்துவந்து என் மேல் வீழ்ந்தது. மனம் புரிந்து கொண்டது. இத்தொடரைவிரைவில் நிறைவு செய்வதே சிறந்தது.
சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் தீய சக்திகள் ஒன்றா இரண்டா? சாதிப்பிரிவினைகளின் சதிராட்டாம், மதங்களின்மயக்கம். அரசியலின் ஓலம். இறைவன் இருக்கின்றானோ இல்லையோ ஊழல் எங்கும் நிறந்திருக்கின்றது.வன்முறை, பித்தலாட்டங்கள், ஊடகங்களின் பக்க வாத்தியங்களுடன் கச்சேரி, அரசியல் முதல் ஆன்மீகம் வரை வியாபாரச் சந்தையின் சத்தங்கள். இதன் வரலாறு நெடியது. வரலாற்றை வளைத்து உண்மைகளைப் புதைத்துவிட்டகூட்டங்கள். என் ஆய்வுகள் ஆழமானவை. விருப்பம் தோன்றிடினும் இத்தொடருடன் இணைப்பது சரியல்ல என்பதைஉணர்ந்தேன்.
அது தனியாக எழுதப் பட வேண்டும். அந்த வரலாற்றுத் தொடர், எரிமலைகள், சுனாமிகள் இன்னும் பலஅதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். எப்பொழுது எழுதுவேன். எனக்குத் தெரியாது. காலம்தான் அதனைக்கணித்து என்னை வழி நடத்த வேண்டும்
நம் நாடு மட்டுமல்ல உலகம் முழுமையும் பல சோதனைகளில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கின்றது.தனியொருவன் எதைச் சாதிக்க முடியும். தோல்வியை ஒப்புக் கொண்டு சுருண்டு போய்விடுவதா?
நமக்கு இப்பொழுது அவசரத் தேவை என்ன?
நாம் என்னதான் செய்ய வேண்டும்?
தனி மனித ஒழுக்கமும் சரிவில் இருக்கின்றது. அதனை ஓரளவு செப்பனிடலாம்.
தாம்பத்யத்தில் கொஞ்சம் அபஸ்வரம். அதனையும் சீராக்கலாம்.
நம் குழந்தைகளின் நிலை பரிதாபகரமாகிவிட்டது. புதுப் புது அனுபவங்கள் மருட்டுகின்றன. அவர்களுக்கு மனம்திறந்து பேசத் தோழமை வேண்டும். பெற்றவர்கள் அப்பொறுப்பை எடுத்துச் செய்யலாம்
உற்றார் உறவினர் சரியில்லையென்றால் வம்புகளும் பிணக்குகளும் வரும் அவைகளையும் நாம் முடிந்த அளவு சீர்ப்படுத்தலாம்
அண்டை அயலார் அமைதியின்றி இருந்தால் நம் வீட்டில் புகை கிளம்பும். நாம் முயன்றால் ஓரளவு வழிகாட்டமுடியும்.
பணி செய்யும் இடத்தில் வரும் பிரச்சனைகளையும் நம்மால் ஓரளவு சரி செய்ய முடியும்.
பின் என்ன பிரச்சனை?
ஆலோசனைகள் கூறுவது எளிது. செயல்படுத்த வழிவகைகள் தெரிய வேண்டாமா?
இது சரியான கேள்வி. இதற்கு விடை கூற வேண்டியது என் கடமை. அதற்கு முன் செய்ய வேண்டிய ஓரிரு பணிகளைமுடிக்க விரும்புகின்றேன்
“இந்தம்மா யாருடைய குறையையும் எழுத மறுக்கின்றார்களே”
இந்த ஆதங்கம் மறைந்த திரு .மலர்மன்னன் உட்பட பலருக்கு உண்டு
உதவி தேடிச் செல்கின்றவர்கள் யாருடனும் பகைமையும் வைத்துக் கொள்ளக் கூடாது. பெண்சமுதாயத்திற்கு வரும்பிரச்சனைகள் ஒன்றா இரண்டா? அவர்களுக்காக எப்பொழுதும் உதவி கேட்கும் நிலையில் இருந்தவள் நான்.பொதுநலச் சேவையில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது. இதற்கு எடுத்துக் காட்டுசொல்ல நினைக்கின்றேன். அதற்கு நம் மறைந்த நண்பர் திரு மலர் மன்னன் தன் இறுதி காலத்தில் ஓர் பணியில்இறங்கினார். அதுபற்றிச் சொல்ல வேண்டும். இந்த வயதிலும் அவரது ஊக்கமும் உற்சாகமும் எனக்கு பிரமிப்பைக்கொடுத்தது. அதைக் கூற வேண்டியது என் கடமை. அதற்கு முன் ஒரு கேள்வி நானும் கேட்க விரும்புகின்றேன்
ஆட்சியில் கொடியவர்கள் இருக்கின்றார்கள் எனத்தோன்றுகின்றதா? உங்களைக் கேட்டு யாரும் அமைச்சர்களைத்தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் தேர்தல் பொழுது ஓட்டுக்கள் கிடைத்தால்தான் வெற்றி பெற முடியும். நல்லவர்கள்அவரவர் இடங்களில் தேர்தல் நேரத்தில் உங்களுக்கு யார் நல்லவர்கள் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு ஓட்டுபோடச் சொல்லுங்கள். சில நாட்கள் வேலையில் முடிக்க வேண்டியதைவிட்டு, பின்னர் அரசியல்வாதிகளைப்பழித்துக் கொண்டிருந்தால் மனத்தில் வளரும் வெறுப்பு உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கெட்டவன்உல்லாசமாக இருப்பான். ஆனால் நீங்கள் வியாதியை வரவழைத்துக் கொண்டிருப்பீர்கள். இது தேவையா?
இப்பொழுது நிகழ்வுக்குச் செல்லலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரில் சித்தர் விடோபா அவர்களின் சமாதி இருக்கின்றது. இது அமைந்த இடம்அரசின் புறம்போக்கு நிலமாகும். சமாதியும் மடமும் ஓர் சிறிய பகுதியில் அமைந்திருக்கின்றது. அதற்கென்றுஒதுக்கிய இடத்தில் இறைச்சிக்கென்று மிருகங்களை அறுக்கும் தொழில் (slaughter house) நடைபெற்று வருகின்றது.பல ஆண்டுகளாக நடந்து வரும் தொழில். இதுவரை மடத்தைச் சேர்ந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நம் அன்பு நண்பருக்கு இதில் அக்கறை வந்தது. எனக்கு முதல் கடிதம் “நான்எழுதுவதை நிறுத்தக் கூடாது “ என்பது.அக்கடிதத்தில் அவர் தொலை பேசி எண் பார்க்கவும் உடனே அவரை அழைத்துப் பேசினேன். பல மாதங்களாகஅவருடன் பேச வேண்டுமென்ற அவா எனக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. எனவே தொடர்பு எண் கிடைக்கவும்உடனே பேசினேன்.
முதல் நாளே வெகு நேரம் பேசினோம். எங்கள் பேச்சில் அதிகம் இடம்பெற்றது அரசியல்.. வெளிப்படையான பேச்சு.மாநிலம், நாடு என்று பல அரசியல்வாதிகளைப்பற்றிப் பேசினோம். எனக்குத் தெரிந்தவைகளைக் கூறிய பொழுதுஅவரே அயர்ந்து போனார். அரசுப் பணியில் இருக்கும் சிலருக்கு, காவலர் பொறுப்பில் உள்ளவர்களுக்குஅரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை தெரியாமல்போகாது. ஆனால் யாரும் அதனை விமர்சிக்கமாட்டார்கள்.அதற்கு நான் கொடுத்த விளக்கத்தில் அவர் முழுச் சமாதானம் அடையவில்லை. ஆதங்கம் உள்ளே இருப்பதை உணரமுடிந்தது. முதல் நாள் உரையாடல்தானே, விரைவில் அவரை உணர வைக்கலாம் என்று இருந்தேன்.
இரண்டாம் மடலில் அவர் ஒரு கோரிக்கை கேட்டு எழுதினார். சித்தரின் சமாதியின் இடப் பிரச்சனையில் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டார். நான் இருப்பது அமெரிக்கா.20 ஆண்டுகளாக அங்கும் இங்கும் இருந்த நான், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தாய்நாட்டு பக்கமே வர முடிய வில்லை. நான் எப்படி உதவ முடியும். வழிகாட்டுகின்றேன் என்று சொன்னேன். அவரும் என் நிலையைப் புரிந்து கொண்டார்.
அவர் கொடுத்த விபரங்களை உடனே திருவண்ணாமலையில் இருக்கும் ஓர் பத்திரிகை நிருபரை அழைத்து இதுபற்றிவிசாரிக்கச் சொன்னேன் மறு நாளே விபரங்கள் கிடைத்தன. அந்த தொழில் மையம் ஆரம்பித்துப் பல ஆண்டுகள்ஆகிவிட்டன. அதை நடத்துகின்றவர் சென்னையில் இருக்கின்றார். மடத்திலிருந்து ஓர் புகார்க் கடிதம் மாவட்டஆட்சியாளருக்குக் கொடுக்கச் சொன்னார்.. இதனை நான் நம் நண்பரிடம் கூறவும் அவரே நேரில் சென்று மாவட்டஆட்சியாளரிடம் கடிதம் கொடுப்பதாகச் சொன்னார். அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன் இந்தப் பயணம்.இன்னொரு தகவலைக் கேட்டார். ஆட்சியாளர் எந்த மாநிலைத்தைச் சேர்ந்தவர் என்று. அதனையும் விசாரித்துச்சொன்னேன். இவரே செல்ல விரும்புவதால் அந்த நிருபரை அழைத்து தடையின்றி இவர் உடனே பார்க்க ஏற்பாடுகள்செய்யச் சொன்னேன்.
இந்த வயதில் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டி வருமே என நினைக்காமல் உடனே அவரே புறப்பட்டதுஅவர்மேல் எனக்கு மதிப்பு கூடியது.
நம் நண்பரை திருவண்ணாமலையில் வரவேற்றது அந்த நிருபர்தான். மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து மனுகொடுத்து திரும்பவும் எனக்கு விபரங்கள் அனுப்பினார். நான் உடனே அந்த நிருபரிடம் சில கேள்விகள் கேட்டேன்.எனக்குத் தகவல்கள் கிடைத்தன.
அரசுப் புறம்போக்கு நிலம் இந்த மடத்திற்கு ஒதுக்கிய அரசின் மூலக் கடிதம் இப்பொழுது இவர்களிடம் இல்லை.இடையில் வரி செலுத்திய சில ரசீதுகள் மட்டும் இவர்களிடம் உள்ளன. இதுவரை தொழில் நடத்துவதுபற்றி எந்தப்புகாரும் கொடுக்கவில்லை. அவர்களும் ஆக்கிரமித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே சட்டப் பிரச்சனைகள்எழும்பலாம்..இந்த விபரங்களை நம் நண்பரிடம் கூறினேன்.
அடுத்த நாளே இன்னொரு மடல். அவர் தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலாபாலகிருஷன் அவர்களிடம் நேரில்சந்தித்து மனு கொடுக்க விரும்புவதாகவும் அதுபற்றிப் பேசலாம் என்றும் எழுதியிருந்தார். அவருடம் பேசினேன்.என்னை அவர்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அவர்கள் எனக்கு இயக்குனராக இருந்தவர். என்னைஅவர்களுக்குப் பிடிக்கும் என்றேன். என் பெயரைக் கூறலமா என்று கேட்டார். தாரளமாகக் கூறலாம் என்றுசொல்லிவிட்டு திண்ணையில் நான் எழுதிவரும் தொடர்பற்றியும் கூறச் சொன்னேன். எங்கள் துறையைப் பற்றி நான்எழுதுகின்றேன்.என்பதை அறிந்தால் மகிழ்வார். நான் ஓய்வு பெற்றபின்னரும் சந்திக்கும் என் மேலதிகாரிகளில்அவர்களும் ஒருவர்.
நண்பரிடம் ஒரு விஷயம் கூறினேன். அதுதான் முக்கியம். என்னைப்பற்றி கூறுவதாலோ அல்லது நேரில் மனுகொடுப்பதாலோ எதுவும் சிறப்புக் கவனம் கிடைக்காது என்றேன். அவர்களுக்குச் சிபாரிசு பிடிக்காது என்றும்சொன்னேன். தலைமைச் செயலளர் பதவி சக்தி வாய்ந்ததுதான். ஆனால் இது போன்ற விஷயங்களுக்கு முதல்அமைச்சரின் ஆதரவு வேண்டும். இதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன, என்றும் கூறினேன்.
மடம் வைத்திருப்பவர் இந்துமதம். தொழில் நடத்துபவர் இஸ்லாமியர். பொருளாதார நிலையிலும் வசதியானவர்.அவர்களால் அரசியல் செல்வாக்கைப் பிடிக்க முடியும்.
இவைகளைச் சொல்லவும் முதலமைச்சர் செல்லுக்கு மனு அனுப்புவதாகக் கூறினார். அது போதாது என்றும்முதலமைச்சருக்குத் தெரிந்தவர்கள் யாருடனாவது அவர்களையே நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கச்சொன்னேன். இப்பொழுது இருக்கும் முதல் அமைச்சருக்கு தெய்வபக்தியுண்டு. எனவே உணர்வுகளைப் புரிந்துசாமர்த்தியமாக இப்பிரச்சனையை அவர்களால் கையாள முடியும் என்றேன். தாய் மண்ணை விட்டுப் பிரிந்து பலஆண்டுகள் ஆகிவிட்டபடியால் அரசியலில் எனக்கு யாருடைய தொடர்பும் கிடையாது என்பதையும் கூறினேன்.அவரையே தகுந்தவர்களைப் பார்க்கச் சொன்னேன். இன்னும் சில நாட்கள் அவர் உயிருடன் இருந்திருந்தால்அதற்கும் வழி கூறியிருப்பேன். முன்பு ஏற்பட்ட ஓர் அனுபவம் கொடுத்த நம்பிக்கை
இந்த உரையாடல் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடந்தது
உடனே அவர் ஒன்று சொன்னார்:
இப்பொழுது உங்கள் கூற்றைப் புரிந்து கொள்ள முடிகின்றது. பிறருக்கு உதவி செய்யும் பணியில் இருப்பவர்கள்யாருடனும் பகைமை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது சரியானதே
நம் நண்பரின் ஆதங்கம் மறைந்தது. அவர் எடுத்த முயற்சி முடியவும் அவரையே அவர் அனுபவங்களை எழுதச்சொல்ல நினைத்திருந்தேன். எங்கள் இருவருக்கும் தோல்வியே கிடைத்தது. அவராலும் முயற்சியைத் தொடரமுடியவில்லை. மரணம் அவரை அழைத்துச் சென்று விட்டது. என் தொடருக்கு மிகச் சிறந்த உதாரணமாகக் காட்டஇருந்த என் முயற்சியும் தோல்வியடைந்தது
இத்தனை விளக்கங்கள் வேண்டுமா? நிச்சயம் வேண்டும். ஒரு பிரச்சனையென்றால் அடுக்கடுக்கடுக்காகப் பலநிலைகள் தாண்ட வேண்டும். பல பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.
எழுதுவது வேறு. ஆனால் களப்பணி வேறு.
இன்னொரு எடுத்துக்காட்டும் விளக்க விரும்புகின்றேன.அதுவும் காரணத்துடன்தான்.
திருமதி ராஜம் கிருஷ்ணன் பற்றியது
சிறந்த எழுத்தாளர். அதிலும் களத்திற்குச் சென்று பல நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்து , வாழ்க்கை முறையைநேரில் கண்டு அவைகளை எழுத்தில் கொண்டு வரும் ஓர் பெண்மணி. குறிஞ்சித்தேன் எழுதும் முன்னர் உதகைசெனறு படகர்களுடன் இரு மாதங்கள் செலவழித்தார். அப்பொழுதுதான் எனக்கு அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அவரின் கணவர் அரசுப் பணியில் இருந்தார். மனைவியின் எழுத்தை ஊக்குவிக்க விரைவில் ஓய்வு பெற்றுமனைவிக்கு ஆதரவாக இருந்தார். சம்பல்பள்ளத்தாக்கு கொள்ளைகாரர்களின் வாழ்க்கைபற்றி எழுத மலைகளில்தேடி அவனைக் கண்டுபிடித்து அங்கும் சில நாட்கள் தங்கியவர். அந்த தலைவனே இவர்களைப்பாராட்டியிருக்கின்றான். அவர்களுக்கு வழிகாட்டிய கொள்ளைக்காரனைக் கொன்று விட்டதையும் அவர்களிடம்சொல்லியிருக்கின்றான். தலைவனின் அனுமதியில்லாமல் யாரும் எதையும் செய்யக் கூடாது. இது அவர்கள் சட்டம்.இந்த அனுபவத்தை அவர்களே என்னிடம் நேரில் கூறியது.
மனிதன் தோன்றிய நாள் முதலாய், தலைமை நிலையில் அமர்ந்தவுடன் அதிகார உணர்வும் அவன் ஆணைகளுக்குஎல்லோரும் கட்டுப் படவேண்டுமென்ற விதிகளும் தொடங்கப்பட்டு விட்டன
நம் எழுத்தாளரின் கணவரின் மறைவுக்குப் பின்,. உறவினர்களை நம்பினார். வங்கிக்குச் செல்வது அவர்கள் தான்உறவுகள் பல வகைகளில் அவரை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார். குடிசையில் இருந்த அவர்களை ஓர்முதியோர் இல்லத்தில் சேர்த்தது. திருமதி. திலகவதி அவர்கள் ஐ.பி.எஸ். போலீஸ் துறையில் உயர் பதவியில்இருந்தார். தன் கசப்பு அனுபவங்களைஅம்மையார் கூற அது தினமலரில் வெளியாகியிருந்தது. அப்பொழுது நான்சென்னையில் இருந்தேன். செய்தியைப் பார்க்கவும் மனம் துடித்தது. அவர்களைக் காணப் புறப்பட்டேன். என்னைவிடஅவர்களுடன் அதிகமாகப் பழகிய திருமதி புனிதவதி இளங்கோவனும் உடன் வந்தார்கள். அந்த இல்லம்பற்றித்தெரிந்த ருக்மணியும் உடன் வந்தார்கள்.
எங்களைப் பார்க்கவும் அவர்களுக்கு மகிழ்ச்சி. புனிதத்திடம் உடனே “பாரதி கண்ட புதுமைப் பெண் சீதாலட்சுமி “என்றார்கள் புனிதமோ என்னைப் புரட்சிப் பெண் என்றார்கள். எங்கள் பல சந்திப்புகளைப் பற்றி முதலில் பேசினோம்.பின்னர் அவர்கள் எங்களை அழைத்துக் கொண்டு தான் தங்கும் அறையைக் காட்டினார்கள். அந்த அறையில் பத்துபெண்களுக்கு மேல் தங்கியிருந்தனர். கட்டில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கழிப்பறை ஒன்றுதான். எழுத்தாளரம்மா என்னிடம் கேட்ட கேள்வி.
“சீதாலட்சுமி, நாங்கள் வயதானவர்கள். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிப்பறை போக வேண்டும். இருப்பது ஒன்று.வரிசையில் நிற்க வேண்டிவரும். அதற்குள் சிலர் நின்ற இடத்தை அசிங்கப் படுத்திவிடுவோம். அது எங்கள் குற்றமா?தண்ணீர் தரையில் தங்கினால் நாற்றமட்டுமல்ல, பின்னால் வருகின்றவர்கள் கீழே விழுந்து கால்கள்முடமாகிவிடாதா? நடக்க முடிந்த பொழுதே இந்தப் பிரச்சனை. அதுவும் போய்விட்டால் எங்கள் கதி என்ன?முதியோர் இல்லங்கள் அமைக்கும் பொழுது இதுபற்றி சிந்திக்க மாட்டீர்களா?”
பதவியிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும் அவர்கள் என்னைக் கேட்ட கேள்விநியாயமானது. நான் ஓய்ந்து போனவள் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்களை ஆண்பிள்ளை ஜெயகாந்தன்என்று கேலி செய்திருக்கின்றேன். துணிச்சலாகப் பேசுவார்கள். யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள்.புனிதமும் நானும் அவர்களைப் பற்றி எங்கள் அனுபவங்களை கூற ஆரம்பித்தால் அது கூட ஒரு நீண்டதொடராகிவிடும்.
என்னுடன் அவர்களைக் கூட்டிச் செல்லச் சொன்னார். நானே மகன் நிழலில் இருக்கின்றேன். அதுவும் வேறு நாட்டில். .
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் புத்தகங்களை நாட்டுடமையாக்கினால் பணம்கிடைக்கும் பின்னர் ஓரளவு வசதியாக பயமின்றி வாழ வழி கிடைக்கும்.
அந்த முதியோர் இல்லத்தின் தலைவி மிகவும் நல்லவர்கள் சமுக நலத் தொண்டர்கள் பாதையில் சிறப்புடனேசெயல்பட்டவர்கள். இப்பொழுது அவர்களும் முதுமைப் பிடிக்குள் இருந்தார். நாமே பணி செய்வது எளிது. ஆனால்பிறரிடம் வேலை வாங்குவது என்பது கடினம். நமக்குத் தேவைகள் அதிகம். அதனால் கிடைப்பதை வைத்துபுனர்வாழ்வில்லங்கள் இயங்குகின்றன. ஓரளவு வசதிகளே செய்ய முடிகின்றது. முதியோர் இல்லத்தில் இருந்தால்என்ன, சொந்த வீட்டிலே இருந்தால் என்ன, முதுமைக் காலம் எழுப்பும் பல பிரச்சனைகளைக் கண்டு மூச்சுதிணறுகின்றது. படுக்கையில் முடமாகி வீழ்ந்துவிட்டால் நரக வாழ்கை. பெற்றமகளால் கூடச் சரிவர கவனிக்கமுடியாது
நானும் புனிதமும் ராஜம் கிருஷ்ணனின் பிரச்சனைகளைப் பற்றி சிந்தித்தோம். அரசு அவர்களிடம் புத்தகங்கள்அரசுடமையாக்குவதுபற்றி விசாரிக்கச் சொன்னோம். சம்பந்தப்பட்ட துறைகளுடன் அவருக்குத் தொடர்புகள் உண்டு.அரசு வேறு யாருமல்ல டாக்டர் ராஜமாணிக்கனாரின் இளைய மகன், என் அண்ணன் இளங்கோவன் அவர்களின்இளவல்.அவர் விசாரித்துவிட்டு இறந்தவராகயிருந்தால்தான் அவர்கள் படைப்புகளை அரசுடமையாக்க முடியும்என்றார். பின்னர் அவரே பழனியப்பா புத்தகப் பதிப்பாளர்களுடன் பேசினார். புத்தங்கள் பட்டியல் ஒன்று வேண்டும். அவர்களுக்கு அச்சுரிமை வழங்க அந்த சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி வேண்டும். உடனே முன்பணமாக ஒருலட்சம் கொடுப்பதகவும், பின்னர் பேசிய தொகையைக் கொடுப்பதாகவும் சொல்லியிருக்கின்றார்
ராஜம் அம்மாவிடம் போனேன். புத்தகப் பட்டியல் அவர்களிடம் இல்லை. அவர்கள் ஒரு விலாசம் கொடுத்தார்.கோட்டுர்புரத்தில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஒன்றில் வாழ்ந்து வருகின்றவரிடம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்என்றார்.
கோட்டூர்புரம் சென்றேன். இரவு நேரம் மழை வேறு. அவர்கள் குடியிருப்பு நான்காவது மாடியில் இருந்தது. லிப்ட்கிடையாது. நான் ஒரு நொண்டி. ஓட்டுனரைக் கூப்பிட்டு அவனைப் பிடித்துக் கொண்டு நான்காவது மாடிக்குப்போனேன். அவரிடமும் பட்டியல் இல்லை.. ஶ்ரீவைகுணடத்தில் வசிக்கும் அவர் சகோதரியிடம் அனைத்துப்புத்தகங்களும் இருப்பதாகவும் பட்டியலும் கிடைக்கும் என்றார். என்னால் வெளியூர்ப் போக முடியாது. ஆனால்கணினிமூலம் எனக்கு நிறைய பிள்ளைகள் உண்டு அவர்களில் ஒருவனான நெல்லை வாசி தேகியுடன் தொடர்புகொண்டேன்.. அவனுடைய தாயார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் எங்கும் பணியாற்றவில்லை. ஆனால்இலக்கியப் பணிகள் செய்து வந்தார்கள் அவர்களுடன் பேசினேன். அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
அமெரிக்கா புறப்பட வேண்டிய நேரம் வந்தது. அப்பொழுது அரசு இன்னொரு ஆலோசனை கூறினார். புனிதவதியைநிலைமையை விளக்கி சூழ்நிலை காரணமாக விதிவிலக்கு செய்து ஓர் வயதான பெண் எழுத்தாளருக்கு அரசு உதவிசெய்ய ஓர் கோரிக்கை கடிதம் வரைந்து தினமணிக்கும் அமுத சுரபிக்கும் எழுதச் சொன்னார். முதல்வர் அதனைப்பார்த்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார். பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டு நான் அமெரிக்கா புறப்பட்டு வந்துவிட்டேன்.
வந்த பின் நடந்தவைகள் இன்னும் மோசமாகிவிட்டது. ராஜம் அவர்கள் கீழே விழுந்து படுக்கையில் கிடத்தப்பட்டுவிட்டார்கள். அவர்கள் என்னிடம் நேரில் சொன்னவைகள் அவர்களுக்கே நடந்தது. சிறுநீர் போக ட்யூப் வைத்தார்கள்.பணியாளர் சரியாகக் கவனிக்காமல் இருந்ததால் புண்ணாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள்.அவர்களின் ரசிகர்ஒருவர் அந்த ஆஸ்பத்திரியில் பெரிய பதவியில் இருந்தார். அவருடைய செலவுகளை அவர் ஏற்றுக் கொண்டார்.
என் சிந்தையில் ஓர் எண்ணம் உதயமாகியது. கலைஞருக்கு நானே ஓர் கடிதம் எழுதி எப்படியாவது அவரிடம் நேரில்கொடுக்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். புனிதமே அதனை எடுத்துப் போய் அவரிடம் கொடுக்கலாம். அதற்குஓர் வழி இருந்தது. கனிமொழியுடன் அவர்களின் மருமகளுக்குத்தொடர்பு உண்டு. முதல் சங்கமம் நிகழ்ச்சிக்குபுனிதத்தின் இளைய மகன் குமுரவேல்தான் டைரக்டர், அப்பொழுது கனிமொழியுடன் குமரவேல், அவரது மனைவிதீபா இருவரும் பழக நேரிட்ட்து. புனிதம் தன் மருமகளையும் அழைத்துக் கொண்டு முதலில் கனிமொழியைச்சந்தித்துப் பேசிவிட்டு கலைஞரைச் சந்தித்து என் கடிதத்தைக் கொடுக்கலாம் கனிமொழி எனக்குப்பழக்கமில்லாவிட்டாலும் அவர்களுக்கும் ஓர் கடிதம் தருவதாகச் சொன்னேன்.. அதைப் பார்த்தால் கனிமொழியே என்கடிதத்தை கலைஞரிடம் சேர்க்கலாம் என்றேன். புனிதமும் ஒப்புக்கொண்டார்கள்.
(குமரவேல்தான் கல்கி எழுதிய பெரும் நாவலை நாடகமாக்கி கதை வசனம் இயக்கம் செய்து சென்னையில்நடத்தியவர். கமலஹாசன், ரஜினி முதல்பல கலைஞர்கள் நாடகத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்கள்சிறப்பு அழைப்பில் வரவில்லை. அடுத்து இன்னொன்றும் கூற வேண்டும். கடிதத்தைத் தபாலில் அனுப்பலாமே என்றுநினைக்கலாம். நிர்வாகப் பிரச்சனைகளில் அவர் பார்க்கலாம் அல்லது பார்க்கமல் போகலாம். மேலும் நேரில்கொடுக்கும் கடிதத்தில் மனம்விட்டு எழுத முடியும். ஒரு காரியம் செய்ய இறங்கும் பொழுது சிந்திக்க வேண்டியதுநிறைய இருக்கின்றன)
என் கடிதம் போவதற்குள் தினமணியில் செய்தி வர அதனைப் பார்த்த கலைஞர் உடனே இதனை ஓர் விதி விலக்காகவைத்து ராஜம் கிருஷ்ணன் புத்தகங்களை நாட்டுடமையாக்கினார். காசோலையையும் நேரில் கொடுத்தார்.
இந்த நினைவுகள் வரவும் நம் நண்பர் மலர்மன்னனுக்கு வேறு ஒர் வழி கூற நினைத்தேன். இப்பொழுது இருக்கும்முதல் அமைச்சர் காலத்தில் நான் பணியாற்றவில்லை. அரசியல்வாதிகள், பத்திகையாளர்கள் இவர்களின் தொடர்பும்நின்று போய் பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் தொடர்புள்ளவர்களைப் பற்றிய விபரங்கள் தோன்றியது.அதற்குள் திரு மலர் மன்னன் இறைவனடி சேர்ந்துவிட்டார். இத்தனையும் 10 நாட்களுக்குள் நடந்தவைகள்.
பொதுநலனுக்காகப் பாடுபடுகின்றவர்கள் யாரிடமும் கசப்பை வளர்க்கக் கூடாது. அது தேவையும் இல்லை. நான்அரசியல்வாதியல்ல. அரசியல் விமர்சகருமில்லை. என்னுடய பணி துயரடைந்தோருக்கு உதவுவது. எனக்காக ஒருபோதும் எனக்கிருந்த செல்வாக்கை உபயோகித்ததில்லை. ஒரு முறை சுயநலமாக நடந்திருந்தாலும் மதிப்பைஇழந்திருப்பேன். நான் பணியாற்றிய காலத்தில் இருந்த எல்லா முதல் அமைச்சர்களுக்கும் என்னைத் தெரியும்எங்களுக்கு இருந்த சமூக நலத்துறை அமைச்சர்களையும் தெரியும் எனக்கு அபொழுது இருந்த செல்வாக்கில்குறுக்கு வழி சென்றிருந்தால் கோடீஸ்வரியாகி இருக்க முடியும்.
எனக்கு அலங்காரம், ஆடை ஆபரணங்கள், ஆடம்பரம் எதுவும் பிடிக்காது. ஆசைகள்தான் தீமைக்கு வித்து. என்இதயத்தில் அன்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முருகன் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்.அவருக்கு நான் ஒரு கருவி.
அடுத்து சமுதாயத்தைப் பார்க்கலாம்.முழுமையாக வரலாற்றைக் கூறாவிடினும் கூறப்போகும் கொஞ்சமும்எதிரலையை ஏற்படுத்தும் என்று தெரியும். அதற்கும் முன்னர் என்னைப்பற்றிய சில விபரங்கள் தரவேண்டியிருக்கின்றது. இது சுய விளம்பரத்திற்கல்ல. நான் ஏன் இப்படி இருக்கின்றேன், என் எண்ணங்களும் என்தேடலும் ஏன் இப்படி அமைந்தன என்று கூறினால்தான் வரலாற்றைப்பற்றிக் கூறி, தொடர்ந்து கூறும்விளக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
“பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களீடம் உள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும்.
தேவை அதிகரிக்கத் தொடங்கினால் மனதில் அமைதி இருக்காது. குறைத்துக் கொண்டால் நிம்மதி தேடிவரும்.
எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். ஆனால் எண்ணியதைஎல்லாம் பேசுவதைக் குறைக்கமுயற்சியுங்கள்.”
மகாப்பெரியவர், காஞ்சி
[தொடரும்]
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது