முஷர்ரப்( முஷாபி ) இலங்கை
வாழ்வில் எம்மை அசௌகரியத்துக்குள்ளாக்குகின்ற எத்தனையோ சம்பவங்கள் எம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவசரமாக வேலைக்குச் செல்லும் போது வீதியில் ஏற்படும் வாகன நெறிசல், அமைதியாக தியானம் பண்ணும் போது மட்டும் ஆங்காங்கே ஊறிச் செல்கின்ற கட்டெறும்பு, அழகழகாய் கட்டிக்கொண்டிருக்கும் மணல் கோட்டையை ஒரே நொடியில் அழித்துவிடும் கடலலை என எம்மை அசௌகரியப்படுத்தும் ஏகப்பட் சமாச்சாரங்கள் எம்மோடும் எம்மைச் சூழவும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வகை சின்ன சின்ன அசௌகரியங்கள் எமக்கு உயிராபத்தை விளைவிக்காவிட்டாலும், எம் ஆழ்மனதில் அரிப்பை ஏற்படுத்தாமலில்லை. இறவற்றுள் சிலவகை அசௌகரியங்களிலிருந்து நாம் எம்மை மெதுவாக விடுவித்துக் கொள்ளலாம். உதாரணமாக எப்பொழுதும் எரிஞ்சு விழும் உறவுகளிடமிருந்து ஒதுங்கியிருக்கலாம். நாம் விரும்பாத உணவை உண்போர் சபையில் உட்காராமல் விடலாம், புத்தம் புதிதாய் தான் வாங்கிய ஏதோ ஒரு பொருளைக் காண்பித்துப் பெருமைப் பீத்தலடிக்கும் நண்பர்கள் வீட்டிற்குச் செல்லாது விடலாம்…. இப்படியாக பல விடயங்களிலிருந்து நாம் தவிர்ந்து கொள்ளலாம். ஆனால் சில அசௌகரியங்கள் எம்மோடு நங்கூரமிட்டு அமர்ந்து கொள்ளும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் என்னதான் பண்ணினாலும் அது விடாது தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். கவுண்டமணியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் செந்தில் போல..
இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் நாம் செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம். என்னுடைய வாழ்விலும் இத்தகைய பல அசௌகரியங்களை நான் சந்தித்திருக்கின்றேன். சில பேர் சாப்பிடும் போது அதிக சத்தத்துடன் ‘சப்பு சப்பு’ என்று சாப்பிடுவார்கள். சிலர் தூங்கும் போது ஏதோ இயந்திரங்கள் போலவும், மிருகங்கள் போலவும் பலத்த சத்தத்துடன் குறட்டை விடுவார்கள். இத்தகைய சந்தர்ப்பத்தில் தனியாக மாட்டிக் கொண்டு நான் பட்ட அவஸ்தைகள் அப்பப்பா…
இத்தகைய சந்தர்ப்பங்களில் எனக்கு அடக்க முடியாதளவிற்குக் கோபம் வந்துவிடும். இப்படித்தான் ஒரு முறை நான் அயலூரிலே தங்கியிருந்து உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு வீட்டிற்கு விருந்திற்காகச் சென்றிருந்தேன். எனது நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் என அறிமுகமானவர்களும், அறிமுகமில்லாதவர்களும் அமர்ந்திருந்த அந்தச் சபையில் என்னருகிலும் அறிமுகமில்லாத ஒரு நண்பர் வந்தமர்ந்திருந்தார். எனது நண்பனின் நணபனாக அவர் இருக்க்கூடும். அதுவரை மெல்லிய புன்னகையோடு இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தோம். சாப்பிடும் நேரம் வந்தது. சாப்பிடத் தொடங்கினார் அந்த நண்பர். அதுவரை பார்த்த அந்த நபர் வேறொரு பரிமாணத்தில் எனக்குத் தெரிந்தார் . தொலை தூரத்திலிருக்கும் அவரது வீட்டிற்கும் கேட்குமளவிற்கு அதிக சப்தத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் இருக்கும் எங்களைப் பொருட்படுத்தவேயில்லை. அவர்பாட்டில் சாப்பிட்ட கையால் கரண்டியைப் பிடிக்கின்றார். தண்ணீர்க் குவளையை எடுக்கின்றார். அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். எனக்கு மாத்திரமன்றி அங்கிருந்த பலருக்கும் ஒரு வித எரிச்சலுணர்வு ஏற்பட்டது. நான் அவரிடம் முதலில் மெதுவாக சத்தமிட்டு சாப்பிட வேண்டாமென சமிக்ஞை செய்தேன். அப்போதும் அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் மெதுவாகச் சொல்லிப்பார்த்தேன் ம்{ஹம் அப்போதும் அவர் அவராகவே இருந்தார். தொடர்ந்தும் அதிக சப்தத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற நான் அவரைத் திட்டிக்கொண்டே அவர் தலையில் குட்டிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன். பின் வந்த நாட்களில் அவர் என் நல்ல நண்பர் ஆனார் என்பது வேறு கதை.
இதே போல் ஒரு முறை எனது இன்னுனொரு நண்பருடன் கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அவர் குறட்டை விடுவதில் மகா கெட்டிக்காரன் என்பது எனக்கு ஏற்கனவே தெரியுமென்பதால் அவருக்கும், எனக்கும் தனித்தனி அறைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஹோட்டல் வரவேற்பாளரிடம் இரண்டு அறைகள் கேட்டேன். உடனே இவர் வழி மறித்து ‘இல்லை ஒரு அறை போதும். ஏன் வீணாகக் காசை வேஸ்ட் ஆக்க’ என்று கூறி ஒரு தனியறைக்கான சாவியோடும், நண்பணின் பணத்தை சேமித்துவிட்டேன் என்ற பெருமையோடும் வேகமாக குறிப்பிட்ட அறைக்குச் சென்றார். பின்னால் சென்ற எனக்குத்தான் தெரியும் பின்னால் என்ன நடக்கப் போகின்றது என்று. நான் எதிர்பார்த்தது போலவே அன்று இரவு சிங்கமாகவும், கரடியாகவும், சில தருணங்களில் புலியாகவும் நண்பர் உறுமிக் கொண்டிருந்தார். இல்லை உறங்கிக் கொண்டிருந்தார்.
அன்றிரவு முழவதும் எனக்கு சிவராத்திரிதான். என்ன செய்வதென்று புரியாமல் பெல்கனிக்குச் சென்று ரொம்ப நாள் தொடர்பு கொள்ளாத எனது பால்ய நண்பர்களுக்கெல்லாம் அழைப்பை ஏற்படுத்தி பேசிக் கொண்டிருந்தேன். அப்படிச் செய்தும் முழு இரவையும் கடத்த முடியாமல் போய்விட்டது. ஈற்றில் நிம்மதியான உறக்கம் வேண்டி இன்னுமொரு அறையை எடுக்க வேண்டியாகிவிட்டது.
இவ்வாறாக அசாதாரண சூழலில் நிலை குலைந்த போன எனக்கு அண்மையில் ஏற்பட்டதொரு ஆச்சரியமான அனுபவம்தான் இந்தப் பதிவை எழுதத்தூண்டியது. மனம், அன்பு, அமைதி, இறைவன், நிம்மதி உள்ளிட்ட விடயப் பொருட்கள் தொடர்பாக அதிகதிகமாக வாசித்தும், அதிகமாக தியானித்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் சம காலத்தில் இத்தகைய அசௌகரியங்களோடு என்னால் ஆனந்தமாக இருக்க முடிகின்றது. எத்தகைய உணர்வாயினும் எம் உணர்தலில்தான் தங்கியிருக்கின்றது என்கிறார்கள் ஞானிகள். ஐஸ் கட்டியின் மேல் ஒரு கையையும், தீச்சுவாலையின் மேல் மற்றொரு கையையும் சிறிது நேரம் வைத்துவிட்டு அவ்விரு கைகளையும் தண்ணீருக்குள் வைக்கும் போது அந்தத் தண்ணீரானது முதல் கைக்கு சூடானதாகவும், மற்றைய கைக்கு குளிரானதாகவும் இருப்பதைப் போன்றுதான் நம் மனமும் தொழிற்படுகின்றது. ஒன்றைப் பிரச்சினையாக உணர்வதும், அதனையே மகிழ்ச்சியானதாக உணர்வதும் எம் உணர்தலில்தான் தங்கியிருக்கின்றது. நாம் எப்படி எடுத்துக் கொள்கின்றோம் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எமது அனுமதியின்றி எந்தவொரு உணர்வும் எம்மைத்தாக்காது எனும் உளவியல் தத்துவத்தை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு வாய்ப்பு அண்மையில் ஏற்பட்டது.
என்னுடைய நண்பரொருவரின் அழைப்பின் பேரில் கடந்த வாரம் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். பசுமை நிறைந்த அவ்வீட்டுச் சூழலும், பாசம் மிகுந்த அவ்வீட்டார்களின் பணிவிடைகளும் என் மனதிற்கு பலத்த சந்தோசத்தைத் தந்தன. இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சந்தோச உணர்வுடனே தூங்குவதற்குச் சென்றிருந்தோம். எதிரெதிர் மெத்தைகளில் உறங்கியவாறே இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் பேச்சில் ஆன்மீகத்தின் கதவுகளை மெதுவாகத் திறந்தேன். விருப்பத்தோடு கேட்டுக்கொண்டிருந்தவரிடமிருந்து சிறிது நேரத்தில் பலத்த குறட்டைச் சத்தம் கேட்டது. எத்தனை தத்துவத்தை ஆன்மீகவாதிகள் பிழிந்து தெளித்தாலும் பாமரனின் உறக்கத்தை பல ஞானவான்களுக்கே தடுக்க முடியாது போகும் போது நான் எம்மாத்திரம்? என் பேச்சை நிறுத்திவிட்டு அவர் மூச்சை அவதானித்தேன் கோயம்புத்தூர் அனுபவம் பரவாயில்லை போல் இருந்தது. முன்பெல்லாம் இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருந்தால் வராண்டாவில் சென்றேனும் தூங்கியிருப்பேன். இப்போதுதான் ஆத்ம பலமும், அன்பு மனமும் அமையப் பெற்றிருப்பதால் இந்தக் குறட்டையை சந்தோசமாக அனுபவிப்பது என்று முடிவு கட்டினேன். ஒரு சில மூச்சு விடுதலின் பின்னர் அந்தக் குறட்டை சப்தத்தை ஆழமாக அனுபவிக்கத் தொடங்கினேன். இரைச்சலாகக் கேட்ட அந்தக் குறட்டைச்சத்தம் குறித்த நேரத்திற்குள் இசையாகக் கேட்பதை உணர்ந்தேன். என்னவொரு ரிதம்.. என்னவொரு ஒழுங்கு.. ஒவ்வொரு வாத்தியக் கருவிகளும் என் ஞாபகங்களை வந்து தாலாட்டிவிட்டுச் சென்றன. அந்தக் குறட்டையின் ரிதத்திற்கேற்றாற் போல் நானும் மூச்சு விடத் தொடங்கினேன். என் நண்பர் எழுப்பிய ஒலியின் வழியே அவர் ஆழ்மனதின் அங்கலாய்ப்புகளையும், சந்தோசங்களையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த என் நண்பனின் நல் வாழ்வுற்காய்ப் பிரார்த்தித்தவாறே நானும் தூங்கி விட்டேன். எப்படியான பேரிரைச்சல் கேட்ட போதும், அசராமலும், திரும்பிக் கூடப் பார்க்காமலும் தன் காரியமே கண்ணென இருந்த மாவீரன் நெப்போலியனின் மனத்திடத்தையும், உலகப் பேரிரைச்சல்களுக்கெல்லாம் செவிசாய்க்காது தன் உள்ளத்துள் பேரின்பத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் ஞானிகளின் அகத்தெளிவையும் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். கூடவே கணவனின் என்னாம் பெரிய குறட்டைச் சத்தத்திற்கும் அசராமல் அனுதாபம் காட்டும் எத்தனையோ மனைவிகளின் அன்பு உள்ளத்தை நினைத்து வியப்புற்றேன்.
——————-
- ரிஸானாவிற்கு சவுதிஅரசின் மரணதண்டனை
- அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை
- இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை
- ‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்
- எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே
- அங்கீகரிக்கப்படாத போர்
- ‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -7
- டப்பா
- குறட்டை ஞானம்
- துளித்துளியாய்…
- சுழலும் நினைவுகள்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9
- பல
- வால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5
- அக்னிப்பிரவேசம்-24
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1
- ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.
- அமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”
- தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை
- சிலம்பில் அவல உத்தி
- தாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.
- நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்