கரிகாலன் விருது தேவையில்லை

This entry is part 4 of 26 in the series 17 மார்ச் 2013

கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் போன்று நானும் மகிழ்கிறேன்.
கரிகாலன் விருது குறித்து என் கருத்தைக் கூற விழைகிறேன். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சைப் பல்கலைக்கழகம் இவ்விருதினை வழங்குவதில்,எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக விளைந்ததே இந்த விருது. இதற்காகச் சங்கத்தையும் தொலைநோக்காகச் செயல்படும் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.
உலகத்தின் முதல் தமிழ்ப் பல்கலைக்கழகமான தஞ்சாவூர் பல்கலைக்கழகம் விருதுடன் பணமுடிப்பும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் எழுத்தாளர்களுக்கு மிகுந்த கௌரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்.இருபது இலட்சம் உரூபாயில் தமிழ்நெஞ்சர் மதிப்புமிகு திரு.முஸ்தபா தொடங்கிய அறக்கட்டளை இப்போது முப்பத்தெட்டு இலட்சமாக அதன் சொத்து உயர்ந்துள்ளது என்ற கணக்கு மகிழ்ச்சியைத்தந்தாலும் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு வெறும் கையைக்காட்டியுள்ளது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.அறக்கட்டளையின் பெயருக்கு இது மாசு ஏற்பட்டதாகவே கருதப்படுகிறது.மனமிருந்தால் மார்க்கமுண்டு.எழுத்தாளர்களுக்குச் சிறப்பு செய்வதென்றால் தக்க முறையில் செவதே சிறப்பு.அதுதான் முறையும்கூட.
விருது பெற்ற எழுதாளார்கள் அனைவரும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக நீண்டகாலமாக எழுதி வருபவர்கள்.அவர்களில் பலர் எழுபது வயதையும் தாண்டி எத்தனையோ சிரமங்களுக்கிடையில் இன்றும் தொய்வின்றி எழுதிக் கொண்டுவருபவர்கள்.தமிழன்னைக்கு அழகு சேர்ப்பவர்கள். எனினும், அவர்கள் பொருளாதாரத்தில் தளர்நடைப் போடுபவர்களே.இந்தச் சூழலில் அவர்களின் பொருளாதாரத்தை எண்ணியாவது, வலுவுடனும் மிடுக்குடனும் திகழும் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ஒரு கணிசமானத் தொகையைக் கொடுத்து அவர்களின் வயிற்றில் பால்வார்க்கலாமே? இதைவிடுத்து சினமூட்டும் காரணங்களைக் கூறுவது ஏற்புடையதா?
எதிர்காலத்தில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை எழுத்தாளர்களுக்கு முறையான அங்கிகாரம் வழங்க முன்வராதப் பச்சத்தில்,மலேசிய எழுத்தாளர் சங்கம் கரிகாலன் விருதினைப் புறம் தள்ளிவிட்டு,நாமே நமதுஎழுத்தாளர்களுக்குச் சிறந்த பரிசுகளைக் கொடுக்கலாமே.தமிழ் நாட்டு அங்கிகாரம் நமக்குத் தேவையில்லை.நம் நாட்டுச் சிறந்த எழுத்தாளர்களுக்கு, ‘தேசிய இலக்கியவாதி’ (Sasterawan Malaysia) எனும் விருதை மலேசிய அரசு, மலாய் எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் பணமுடிப்புகளையும் வழங்கி வருகிறது. இவ்விருதைத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரசு வழங்கும் வகையில் சங்கம் தீவிர முயற்சியில் இறங்க வேண்டும்.

வே.ம.அருச்சுணன் – மலேசியா .

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12காலம்
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *