போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12

This entry is part 3 of 26 in the series 17 மார்ச் 2013

கதைகள்

கூரையில் தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டு முன்பக்கம் ஒரு மயிலின் வடிவமும் பக்கவாட்டில் சிறகுகளை விரித்தது போலவும் சித்தார்த்தனின் ரதத்தின் அமைப்பு நான்கு சிறு தூண்களில் இருந்து நவமணி மாலைகள் நீண்டு தொங்கி அசைந்தன. பக்கவாட்டில் இருந்த பட்டுத் திரைகளை யசோதரா ஓரமாக ஒதுக்கச் சொல்லி ரதத்தில் ஏறினாள். நுட்ப்மான மர வேலைப்பாடுகள் ரதமெங்கும் செய்யப்பட்டிருந்தன. சக்கரங்களில் பதிக்கப்பட்டிருந்த வெண்கலப் பட்டைகள் பளபளத்தன. ராகுலன் அவள் மடியில் அமர்ந்தபடி உற்சாகமாய்ப் புன்னகைத்தான். “குதிரையை வேகமாகப் போகச் சொல் அம்மா” என்றான் மழலையாக. காந்தகன் இருந்த இடத்தில் புதிய ஸாரதி வந்து விட்டான். “சிற்பி மயன் வீட்டுக்குச் செல்” என யசோதரா கட்டளை பிறப்பித்தாள். முன்பக்கம் இரு குதிரை வீரர்கள் சென்றனர். தனது வருகை குறித்து அவர்கள் அறிவிப்பு செய்த படியே செல்லக் கூடாது என யசோதரா ஆணையிட்டிருந்தாள்.

சித்த்தார்த்தனின் மாளிகைக்கு வெளியே வந்ததும் ரதம் வலப்பக்கமாகத திரும்பியது. எதிர்பட்ட பொதுமக்கள் விலகி நின்று யசோதராவுக்கும் வணக்கம் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் இரு கை கூப்பி யசோதரா பதில் வணக்கம் தெரிவித்தாள். ராகுலன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.

தெப்பக்குளத்தை ஒட்டி இருந்த அந்தணர் வாழும் வீதியைத் தாண்டி மறுபடி வலது பக்கம் திரும்பியது. வீட்டின் முன்பக்கம் தோட்டம் இல்லாமல் சிறிதும் பெரிதுமாய் கற்களும் பல வேறு நிலையில் முழுமை அடைந்த சிற்பங்களுமாக அந்தத் தெருவில் நுழைந்ததுமே அது கலைஞர்கள் வாழ்முமிடம் என்பது தெளிவாகத் தெரிந்தது. ரதத்தின் குதிரைக் குளம்பொலிகளின் சத்தம் கேட்டு உளிச் சத்தங்கள் நின்றன. கலைஞர்கள் எழுந்து நின்று வணங்கினர்.

சிற்பி மயன் வீடு பெரியதாக இருந்தது. தெற்கு நோக்கி இருந்த அந்த வீட்டில் நுழைந்ததும் கிழக்கு பார்த்தபடி ஒரு சிறிய கோயில் இருந்தது. அதில் விஸ்வகர்மாவின் ஆறடி உயர சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

ஐந்து முகங்கள், எட்டு கரங்களுடன் தாமரை மலர் மீது வீற்றிருந்தார் விஷ்வ கர்மா. ஒரு கையில் சூலம், மறு கையில் உடுக்கை, மூன்றாம் கையில் சங்கு, நான்காம் கையில் சக்கரம், ஐந்தாம் கையில் வேல், ஆறாம் கரத்தில் வில். மறு கரத்தில் வேல். அனைத்துக்கும் முன்பாகத் தெரிந்த முதல் இரண்டு கரங்களில் யாழும் வீணையும் என கல்வி, கலை வீரம் இவற்றின் கடவுளாக விஷவகர்மா.

யசோதரா அந்தக் கோயிலில் நுழைந்து வணங்கி வெளிவரும் போது பெரியவர் மயன் குச்சியை ஊன்றியபடி மெதுவாக நடந்து வந்து “வர வேண்டும் இளவரசியாரே. இளவரசர் ராகுலனைப் பார்ப்பது சித்தார்த்தரையே பார்ப்பது போல இருக்கிறது” என்றார்.

“தாங்கள் பெரியவர். ஏன் என்னை வரவேற்க எழுந்து வர வேண்டும்?”

“தாங்கள் இளவரசி என்பது மட்டுமல்ல. அதிதி தேவோ பவ என்னும் பாரம்பரியமும் உண்டு தேவி.”அவர் மெதுவாக வீட்டு நடையைத் தாண்டி வீட்டுக்குள் நுழையும் வரை அதே மெல்லடிகளை யசோதராவும் நடந்தாள். வேலையை நிறுத்தியிருந்த இளைஞர்களைப் பார்த்து ” தயவு செய்து பணியைத் தொடருங்கள் சிற்பிகளே” என்றாள். ராகுலன் பிஞ்சு அடிகளின் ஓட்டத்தில் ஒரு சிற்பி அருகே சென்றான். அந்த இளைஞன் கூரான உளியில் சிற்பம் மீது சிறிய சுத்தியலால் பணி புரிவது ராகுலனுக்கு வியப்பாக இருந்தது. ‘அம்மா இங்கே வா… இதைப்பார்” என்றான். விரிந்த புன்னகையுடன் குபேரனின் உருவம் போலத் தோன்றிற்று. “இதற்கு சிற்பக்கலை என்று பெயர் ராகுலா” என்று அவனருகே குனிந்து அவனிடம் பேசி விட்டு யசோதரா வீட்டின் உள்ளே நுழைய பெண்கள் அனைவரும் ஒரே குரலில் “இளவரசி யசோதராவுக்கு வணக்கம்” என்றனர். பதில் வணக்கம் கூறி ஒரு ஆசனத்தில் அமர்ந்தாள் யசோதரா . அதன் பின் பெரியவர் அமர்ந்தார். பெரிய கூடத்தின் மேற்குச் சுவரின் மீது சித்தார்த்தன் கிரீடம், கவசம், உடைவாள், கையணிகள், பட்டுப் பீதாம்பர உடை, கழுத்து நகைகளின் மீது வெள்ளைப் பட்டு அங்கவஸ்திரம் என்னும் பெரிய அளவு ஓவியத்தில் காட்சி தந்தான்.

எழுந்து சென்று அதனருகே நின்று கூர்ந்து வியந்த போது யசோதராவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தாமரை நிற உதடுகள் எத்தனை முத்தங்கள் இட்டிருக்கின்றன. எவ்வளவோ அன்பு மொழிகள் பேசி இருக்கின்றன. கூரிய நாசி. தீர்க்கமான பார்வை. மிளிரும் கண்கள். கம்பீரமான தோற்றம்.

“ஐயா.. தங்களது கைவண்ணம் தானே இது?” பரவசத்துடன் வினவினாள்.

“இல்லை தேவி. என் பேரன்கள் இதை வரைந்தார்கள். நான் இளவரசர் சித்தார்த்தரை சிறு வயது முதலே பார்த்திருப்பதால் அவர்கள் இளவரசருடைய சாமுத்திரிகா லட்சணங்கள் எதைக் குறைத்து மதிப்பிட்டிருந்தாலும் நான் அவர்களை நிறுத்தி சரி செய்து வந்தேன். அவ்வளவே”

“தத்ரூபமாக வந்துள்ளது” என்று கூறி கைகளைத் தட்டினாள். வெளியில் நின்றிருந்த தேரோட்டி வந்து வணங்கி நின்றான். ” அந்தப் பெட்டியை எடுத்து வா”

அவன் கொண்டு வந்த பெட்டியைத் திறந்த போது யசோதரா தங்கக் காசுகளாலான ஒரு மாலையை எடுத்து ” தாங்கள் இதை ஏற்க வேண்டும்” என்றாள்.

“அரசர் எங்களை ஆதரிக்கும் போது வெகுமதிகள் எதற்கு தேவி?”

“இது வெகுமதி அல்ல. ஒரு கலைஞருக்கு என் காணிக்கை”

பெரியவர் தன் பேரன்களை அழைத்தார். இருவரும் யசோதராவை விழுந்து வணங்கினர். அவர்களிடம் மாலையைக் கொடுத்தாள்.

***********************

சிறு குன்றின் மேலிரிந்து சித்தார்த்தன் அமர கலாமவின் ஆசிரமத்தை அவதானித்தான். ஒரு வருடத்துக்கும் மேலாக இங்கே மிகுந்த எதிர்பார்ப்போடும் ஈடுபாட்டோடும் கழித்தேன். நீண்ட வழியில் நிழல் தந்து, உணவு தந்த ஒரு பழ மரம் போல என் சக்திகளை மேம்படுத்தி என் வழியில் என்னைப் போகச் சொல்லி விட்டது. தொலைவும் வலியும் போராட்டமும் ஒரு பொருட்டே இல்லை. இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும். எனக்குத் திறக்கும் கதவு எல்லோருக்கும் விடுதலை உண்டு என்று பறைசாற்ற வேண்டும்.

கீழே செடி மரங்களுக்குள் மறைந்தும் பின் வெளிப்பட்டும் இருவர் வருவது போல் தோன்றியது. கும்ப மேளா முடிந்து தம் மலை நாட்டுக்குத் திரும்புபவர்களாக இருக்க வேண்டும்.

மகத நாட்டில் அடி எடுத்து வைத்தது முதல் தனது பயணம் தன்வயமான ஒரு திசையில் செல்லத் துவங்கி இருந்தது.

மாலை மங்கி இரவின் அரவணைப்புத் துவங்கும் நேரம். சித்தார்த்தன் இரவுகளில் மரத்தின் அடியில் உறங்குவதில்லை. வானம் தெளிவாக இருந்தது. குகை எதையும் தேடாமல் சரிவாயில்லாமல், ஓரளவு சமதளமாக இருந்த ஒரு பாறை மீது படுத்துக் கொண்டான். எண்ணற்ற நட்சத்திரங்கள். ஏதோ ஒரு மூலையில் ஒரு எரிகல் இறங்கியது மின்னல் வேகத்தில். கோள்கள் பழுப்பு, மஞ்சள், சிவப்பு என வெவ்வேறு வண்ணங்கள் காட்டின. எது எந்தக் கோள் எனத் தேடாமல் மனம் லேசாகி அவதானித்துக் கொண்டிருந்தது. சிறுவயதில் அவனுக்கு வான சாஸ்திரம் போதிக்கப்பட்டது.

“தேவர்கள் வானில் தானே இருக்கிறார்கள். ஆனால் ஏன் அவர்களது நடமாட்டம் தென்படுவதே இல்லை?” என்னும் அவன் கேள்விக்கு குருவின் புன்னகையே பதிலாக இருந்தது.

பறவைகளின் இனிமையான சீழ்கை ஒலி சித்தார்த்தனை எழுப்பிய போது, அந்தக் கணம் தான் ஆசிரமத்தில் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. அருகில் தென்பட்ட மரங்களில் உயரமான ஒன்றில் சித்தார்த்தன் ஏறி வலுவான வலுவான கிளை ஒன்றின் மீது நின்று நோட்டம் விட்டான். சிறு ஓடையும் சுனையும் வந்த வழியிலேயே சென்று ஒரு சரிவில் சென்றடையும்படி தென்பட்டது.

சுனையில் நீராடி எழுந்து ஈரத்துணிகளுடன் திரும்ப நடக்கும் போது இரு இளைஞர்கள் அவனெதிர்ப்பட்டு வணங்கி நின்றனர்.

***********

சுத்தோதனர் மாளிகையின் நீராழி மண்டபம். யசோதராவின் மடியை விட்டு இறங்கிய ராகுலன், மண்டபத்தின் அருகே இருந்த அவரது சிம்மாசனத்தில் எக்கி எப்படியோ ஏறி விட்டான். ஆனால் இறங்கத் தெரியவில்லை. தவித்தான். ” அம்மா…என்று அழைத்தபடி இரு கைகளையும் நீட்டினான். ‘சொன்னாலும் கேட்காமல் தாத்தாவின் சிம்மாசனத்தில் நீதானே ஏறினாய்? நீயே இறங்கு” என்றபடி தனது வழக்கமான ஆசனத்தில் அமர்ந்தாள். சுத்தோதனரின் சிம்மாசனத்தில் சித்தார்த்தன் கூட அமர்ந்தது கிடையாது. ஏன்? ராணி கோதமிக்குக்கூட அமரும் துணிவு கிடையாது. இந்தக் குழந்தைக்கு எத்தனை தைரியம்? இளங்கன்று பயமறியாது.

“வணக்கம் மகாராஜா ராகுலரே” என்னும் சுத்தோதனரின் குரல் கேட்டதும் “வணக்கம் மாமன்னரே..” என்று அவர் பாதம் பணிந்தாள். “பலமுறை கூறியிருக்கிறேன் மகளே! நீ என்னை அப்பா என்றே அழைக்கலாம்’.. அவளை ஆசீர்வதித்து வேறு ஒரு ஆசனத்தில் அமர்ந்தார் ” சித்தார்த்தனின் சித்திரத்தை எழுதி உன் மாளிகையை அலங்கரித்திருக்கிறாய் என்று அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. எனக்குத் தோன்றாமலேயே போய்விட்டது”

“ராகுலன் அப்பா முகம் அறியாது வளர வேண்டாம் என எண்ணினேன்”

மன்னர் பதில் எதுவும் கூறவில்லை. கலங்கிய கண்களிலிாருந்து நீர் சிந்தாமல் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

“மயன் என்ற பெயருக்கேற்ப மூத்த சிற்பி தத்ரூபமாக இளவரசரை வரைந்திருக்கிறார். தாங்கள் விஜயம் செய்து காண வேண்டும்”

சுத்தோதனர் பதிலுறைக்கும் முன் ராகுலன் சிம்மாசனத்திலிருந்து பாதி இறங்கியவன் சறுக்கிக் கீழே விழுந்து அழுதான். அவனைத் தூக்க ஓடி வந்த பணிப்பெண்ணிடம் “நில். அவனே எழுந்து என்னிடம் வரட்டும்” என்றாள் யசோதரா. ஓரிரு நிமிடங்கள் உரத்த குரலில் படுத்தபடி அழுத ராகுலன் ஓரக்கண்ணால் பார்த்தான். யாரும் அருகே வராதது தெரிந்த உடன் குரலின் சுருதி குறைந்து அழுதபடியே எழுந்து நின்றான். “வா” என்றாள் யசோதரா. சிணுங்கியபடியே அவளருகில் வந்து ஆடையைப் பற்றியவுடன் “தாத்தாவுக்கு வணக்கம் சொல்” என்றாள். அவன் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.

ஏன் ராகுலனின் ஜாதகபலனைப் பற்றி நீ விசாரிக்கவில்லை என்று வினவ எண்ணியிருந்த சுத்தோதனர் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். குழந்தை வளர்ப்பில் தனித்தன்மையுள்ள யசோதராவின் போக்கு, தான் குழந்தை சித்தார்த்தனை வளர்த்த விதம் பற்றி அவருக்குள்ளே கேள்விகளை எழுப்பியது.

Series Navigationதிருக்குறளில் மனித உரிமைகள்!கரிகாலன் விருது தேவையில்லை
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *