சுத்தம் தந்த சொத்து..!

This entry is part 10 of 26 in the series 17 மார்ச் 2013

வெய்யில் சுளீரென்று முகத்தில் பட்டதும் தான் விழிப்பு வந்தது கருப்பாயிக்கு. வயது அம்பது ஆயிருச்சு. என்ன ஆயி என்னா …?  இன்னிக்கும் வேலைக்கிப் போயி சம்பாதிச்சால் தான் தான் வீட்டில் உலை பொங்குங்குற நிலைமை.  இதுல பெத்த மவள் வெள்ளையம்மாளும் அவள் பெத்த மவன் முருகனும்  பாரமாகத் தான் தோன்றினார்கள் கருப்பாயிக்கு . ஒருத்தி ஓடா உழைச்சு குடும்பமே குந்தித் திங்கணுமுன்னா எப்படி முடியும்? அலுப்புடன் நினைத்துக் கொண்டவள் போர்வையை விலக்கினாள். வாசல் திண்ணையில் படுத்திருந்தவளின் உடல் மொத்தம் இள வெய்யிலின் சூடு பரவ….இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக் கெடந்தா நல்லாருக்கும் என்றெண்ணிக் கொண்டே ஒருக்களித்துப் படுத்தபடி வீட்டு வாசலை பார்க்கிறாள்.

வெள்ளையம்மாள் பொழுதோட எழுந்து வாசல் மொழுகி வெள்ளிக் கம்பியாய் சங்கிலிக் கோலம் போட்டிருந்தாள். இதுக்கொண்ணும் குறைச்சலே இல்லை….சிறுக்கிமவ ….! வாழ்க்கைக் கோலத்தைத் தான் அலங்கோலமா ஆக்கிகிருச்சே…?நெனைக்க நெனைக்க ஆற மாட்டேங்குதே….என்று புரண்டு படுத்த்துக் கொண்டு சோம்பல் முறித்துக் கொண்டாள் .நெட்டி முறித்தவளின் கைகளிலிருந்து “சொடக் சொடக் “கென்று சத்தம் வந்தது.

இன்னைக்கு என்ன நாளு ….திங்கக்கிளமையா ..? பள்ளியோடம் போகணுமில்ல …நா பாட்டுக்கு இன்னிக்கும் லீவு கணக்கால்ல உறங்கி போயிருக்கேன்….எனக்கு அலுப்பும் சலிப்பும் வரலாமா? எந்திரி எந்திரி….என்று தனக்குத் தானே உசுப்பிக் கொண்டாள் கருப்பாயி….குளிக்கிலாமா..?  வேண்டாமா..? இந்தக் கேள்விக்கு…மனசே பதில் சொல்லியது…நீ பாக்குற வேலைக்கு நீ குளிக்காம போயிட்டு வேலை முடிச்சு வந்து குளியேன்…..என்னாத்துக்கு இப்போ குளியல்?…ச்சே…ச்சே…செய்

யும் தொழிலே தெய்வம் என்ன வேலை செஞ்சாத்தான்  என்ன..? செய்யிறத மனசு சுத்தமா உடம்பு சுத்தமா செஞ்சின்னாத் தான் பலன் உடம்புல ஓட்டும். சுத்தம் தான் சோறு போடும்…ன்னு பள்ளியோடத்துப் புள்ளங்க படிக்குதில்ல….அங்குட்டுப் போயி நானே குளிகாமக் கொள்ளாம நிண்டா நல்லாவா இருக்கும்…..என்று எண்ணியவள் உடனே எழுந்திருக்க முயன்று தோற்றாள். இந்த முட்டி வலி வேற வந்து உசுர வாங்குதே….மெல்ல சுவரைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நிமிர்ந்தவள்….வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு பாயைச் சுருட்டி வைக்கிறாள் கருப்பாயி. இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளியோடத்துல இருக்கணும்..மனசு ஆணையிட்டது அவளுக்கு.

எலேய்….கையக் கால வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தேன் என்னா ஒனக்கு, கேடு…நானே வெறகடுப்புல வெறகு கணக்கா  எரிஞ்சுக்கிட்டு கெடக்கேன். இதுல நீ வேற கையக் கொண்டாந்து அடுப்புல நீட்டுற….? கொதிக்கிற உலை உன் கையில கொட்டிச்சுன்னா என்னாவுறது..? வாலு …வாலு ….என்று சொல்லிக் கொண்டே தன் ஆறு வயது மகன் முருகனின்  சட்டை போடாத வெற்று முதுகில் தொப்…தொப்..பென்று ரெண்டு அடி  வைத்தாள் வெள்ளையம்மாள்.    தான் பாட்டுக்கு குழம்புக்குத் தாளிக்க ஆரம்பித்தவளாக மிளகாயைக் கிள்ளி  எண்ணையில் போடுகிறாள் . கடுகு வெடிக்குதோ இல்லையோ இவள் முகம் மட்டும் சிடு சிடு வென்று இருக்க, எண்ணையில் போட்ட மிளகாய் கமறல் அவள் தொண்டையைக் கமறவும் “ஹச்…ஹச்….ஹச்…என்று தும்மிக் கொண்டு செருமுகிறாள்.

முதுகில் எதிர்பாராமல் ‘சுளீர்’ என்று விழுந்த அடியில் துடி துடித்துப் போன முருகன் உடம்பெங்கும் வலி பரவ  துள்ளித் துள்ளி ….தன் கைக்கு எட்டுமட்டும் முதுகில் கையைக் கொண்டு சென்று எட்டி எட்டித் தொட்டபடியே….”ஐயையோ வலிக்கிதே …ஆயா….ஆத்தா அடிக்கிது …” என்று ஓங்கிக் குரல் கொடுத்தவனாக கருப்பாயியைத் தேடிக் கொண்டு அங்குமிங்கும் ஓடுகிறான். இது அடங்க இன்னும் அரை மணிநேரமாவது ஆகும் என்பதை ஏற்கனவே புரிந்து வைத்திருந்தாள் வெள்ளையம்மாள்.

கழுதைக்கு ஆறு வயசாகுது..பள்ளியோடத்துல கொண்டு போயி விட்டுப் போட்டு வந்தா…நீம்பாட்டுக்கு கெளம்பி எம்பின்னாடியே மறுபடியும் ஊட்டாண்டே வந்து நிக்குறே….? ஏன்னேன்..? இங்க வந்து என் எளவ எடுக்கவா? முதுகுத் தோலை  உரிக்காம இருக்கேன் பாரு….என்னைச் சொல்லோணும் ,,,அதுக்குத்தேன்…நாளிக்கி மட்டும் நீ இப்படி செஞ்சீன்னா அம்புட்டுத்தேன்….கால்ல சூட்டக் காய்ச்சி இளுத்துப்புடுவேன் ..இளுத்து ….வெள்ளையம்மாள்  குழம்பில் மீன் கொதிப்பது போலக்  கொதித்தாள் .

எனக்கு அந்தப் பள்ளியோடம் பிடிக்கலை….நம்ம ஆயா போற பள்ளியோடத்துக்குத் தான் போவேன்..அங்கன  கூட்டிட்டு போ…நீ..கண்ணைக் கசக்கிக் கொண்டே காரைச் சுவற்றில் தன முதுகைத் தேய்த்துக் கொண்டே விசும்புகிறான்  முருகன்.

நெனப்புத் தான் பொழப்பக் கெடுக்கும்பாய்ங்க…….அதே தான்  இங்கியும்  நடக்குது.   கார்பரேசனுக்கே  வக்கில்லையாம்  இவனுக்கு கான்வென்டு கேட்குதோ?  இங்கிலிபீசு பேசணுமாம்ல  இவனுக்கு….நல்ல பிள்ளை !  எல்லாம் என் தலை எளுத்து …!
என் புத்திய ஜோட்டால அடிச்சுக்கோணும்….இப்ப விளங்கினாப்புல  எனக்கு அப்போ வெளங்கலே …..இப்பக் கெடந்து தவிக்கிறேன். என் கண்ணீரே எனக்கு சரியா இருக்கு இதுல இவன் வேற என் உசுர எடுக்கன்னு வந்து எந்நேரமும்  மென்னியப் புடிக்கிறான். இதுக்கெல்லாம் எனக்கு என்னிக்குத்  தான் விடிவு காலம்  வரப் போவுதோ?

என்னதிது….வாயை மூடிட்டு சோறாக்கிட்டு போவியா…? பெலாக்கினம் படிக்கிற நீ…மூஞ்சைப் பாரு எள்ளும் கொள்ளும் வெடிக்குது.! நீ இம்புட்டு கடுப்போட ஆக்கிக்  கொட்டினா  எவடீ தின்கிறது ..? அப்படியே வெக்கங்கெட்டு போயி கொட்டிக்கிட்டேன்னு வெய்யி…அப்படியே புடுங்கிக்கும்ல….வாய் கூசாமல் பேசிய கையோட வாய்க்குள் நிறையப் புகையிலையை அள்ளித் திணித்துக் கொன்னு வாசல் திண்ணையில் கால் நீட்டி உக்கார்ந்து கொண்டு கச்சேரி செய்யாத குறையாக உள்நோக்கி பார்க்காமலேயே குரல் கொடுத்தபடி இருந்தாள்  கருப்பாயி.

இந்தா….சும்மாரு…..நீ ஒண்ணும் நான் செஞ்ச கருமத்த…திங்க வேணாம்…அடுப்பில் எரியும் வெறகை  பிடுங்கி தண்ணீரில் அழுத்தி அணைத்தவளாக அங்கிருந்த பதிலுக்கு ஈட்டியைத் தூக்கி அம்மாவின் மீது எரிபவள் போல சுள் என்று விழுந்தாள்  வெள்ளையம்மாள்.

ஆத்திரம் புடிச்சளவே …! புள்ளைய ஏண்டி இந்த அடி அடிச்சுக் கொல்லுற? நான் தான் அன்னிக்கே சொன்னேனே…அப்பவே நீ கேட்டிருக்கோணும் கேட்டியா..? ஏட்டிக்குப் போட்டி பேசினே…இப்ப வருத்தப் பட்டு அத்தப்போட்டு மொத்தினா….? சரியாப் போச்சா? வாடி…கருமாத்தூருக்குப் போயி காதும்….. காதும் வெச்சாப்புல வேலம்மாவைப் பார்த்து வவுத்தைக் கழுவிப்புடலாம்னு சொன்னேனே….கேட்டியா..? இப்பக் கெடந்து அளுவு…..! எனக்கென்ன?  என்று எகத்தாளமாக கேட்டவளை  உள்ளிருந்தபடியே முறைத்துப் பார்க்கிறாள் வெள்ளையம்மாள்.

ஏண்டா…என் மவளைக்  கட்ட மாட்டேன்னு சொல்லுறே நீ? ன்னு கேட்டதுக்கு அந்தப் பொறம்போக்கு.என்ன பதில் சொன்னான் தெரியுமில்ல…?

மூணு முடிச்சுப் போடுறேன்னு சொன்னதுக்கே என்னிய  நம்பி மோசம் போனவ தானே உன் மவ வெள்ளையம்மாள்…ன்னு என் மூஞ்சிலக் காறித் துப்பிட்டு போனவன் தானே அந்தக் கட்டையில போறவன்…எனக்கு வேணும்,,,நல்லா வேணும்…அன்னிக்கே உன்னிய அந்தாளோட சேர்த்து தொரத்தி விட்டிருக்கோணும் . பாசம் அடிச்சுக்கிடுச்சு. காப்பாத்தி வெச்சிருக்கேன்.கண்டவனுக்குப் பொறந்ததைக் காப்பாத்தணுமுன்னு என் தலை எளுத்து .

அதுமட்டுமா? பள்ளியோடத்துல கக்கூஸ் களுவுறவ தானே  நீ…உன் மகளைக் கட்ட நான் என்ன மாங்கா மடையனான்னு எம்புட்டுத் தெனாவெட்டா பேசினான் தெரியுமா? நான் இந்த வேலை செய்யிறவள்ன்னு தெரிஞ்சிருந்தால் தொர உன்னிய தொடிருக்கவே மாட்டாராம்ல…!

ஏலு வருஷமா என் நெஞ்சுக்குள்ளாரவே நெருப்புக் கங்கைத் தூக்கி போட்டுட்டு போயிட்டான் அந்த வண்டிக்காரன் மகன்…வெறும்பயல்.எப்பிடியெல்லாம் வளர்த்தேன் உன்னை…..இப்படி சிதைஞ்சு போயி நிக்கிறியே..

எனக்குத் தான் என் ஆத்தா ஏதோ நேர்த்திக் கடன்னு சொல்லி என் பேரை ‘கருப்பாயி’ன்னு வெச்சு அலங்கோலப் படுத்தினாள்ன்னு
உனக்குப் பார்த்து பார்த்து வெள்ளையம்மாள் ன்னு  பேர  வெச்சு பெருமப் பட்டேனே…அதுல மண்ணள்ளி வீசிபுட்டியே…இப்படி..!
நானும் இதுக்கு முந்தி பூ வாங்கிக் கட்டி வித்துக்கிட்டு இருந்தவ தான். அது மனத்தது..இது வீசுது….எல்லாம் தல எழுத்துப் படி தான நடக்கும்….என் கத தான் இப்படிக் கந்தலாக் கெடக்குன்னா உன் நெலமையுமா இப்படிப் போவணும்…என்று மூக்கைச் சிந்தி தூர வீசினாள் .

ஆத்தா இப்ப என்னாத்துக்கு இப்படி வாசல்ல உக்கார்ந்துகிட்டு என்னிய  ஏலம் வீசுறே ? நீ அங்கன ஒக்காந்து என்னியப் பத்தி பேசுறது அம்புட்டு சரியில்லை சொல்லிப்புட்டேன்…வெள்ளையம்மாளும்  பதிலுக்குக் கத்துகிறாள்.

ஆமாடி…நீ சேத்து வெச்ச மானம் மருவாதி எல்லாம் இப்பதத்தான் ஜன்னலைத் தாண்டிப்  போகப் போகுது…பாரு…அதான் தெருவு கடந்து சிரிப்பாச் சிரிச்சு சாக்கடையா வீசி ……! எனக்குப் போட்டியா வந்து நின்னியே…! நானாச்சும் அறுத்தவ …! வெத்தலைக் காம்பைக் கிள்ளி  எறிந்து விட்டு வெத்தலையை அடுக்கி தனது சுருக்குப் பையில் அடைத்து இடுப்பில் சொருகிக் கொண்ட கருப்பாயி முடியை ஒன்று கூட்டிச் சிலுப்பி கோடாலிக் கொண்டைப் போட்டு  திணித்தபடியே திண்ணையை விட்டு  எழுந்திருந்தாள் .

“அடியே….இவளே…நா பள்ளியோடம் போறேன்..ஆத்தாளும் மவனும் கொட்டிக்கிட்டு உறங்குங்க “…என்று பிய்ந்து போன ரப்பர் செருப்பில் பின்னூசியைக் கோர்த்து ஒரு தட்டு தட்டி விட்டு காலில் போட்டு அழுத்திவிட்டு விறு விறுவென்று பள்ளிக்கூடம் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள் கருப்பாயி.

அவளது நடையில் அவசரம் இருந்தது. இத்தனை நேரம் மனதை அரித்துக் கொண்டிருந்த மகளைப் பற்றிய கவலை வீட்டை விட்டு வெளியில் வந்ததும் அடங்கி விட்டார் போலிருந்தது கருப்பாயிக்கு . இருந்தாலும் தனது மகளை சிதைத்தவனை  மனம் தொடர்ந்து சபித்தது.

ஆமாடா…நான் இந்த வேலை செய்து தான் என் மவளை அவ பெத்ததை  காபந்து பண்ணுறேன். குடிக்கிறது அரை வவுத்துக் கஞ்சி தான். இருந்தாலும் அது அம்புட்டும் உழைச்சி வந்தது.  யாரையும் ஏமாத்தாம, திருடாம, பொய் பேசாமல் கிடைச்சது.  பச்சப் புள்ளயக் கெடுத்துப்போட்டு போனியே….துப்புக் கெட்டபய…நீ மட்டும் என் கையில சிக்கின உன்னிய இழுத்தாந்து அவளுக்குக் கட்டி வெச்சுப்போட்டுத் தாண்டா மறுவேல. நீ செஞ்ச பாவத்துக்குத் தான உங்கப்பன் வண்டியில லாரி மோதி நடுரோட்டில செத்துக் கெடந்தான். தெய்வம் நின்னு கொல்லும்டா .

மனச் சுமையை வார்த்தைகளாக வழிநெடுக இறக்கி வைத்துக் கொண்டே சென்றவள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும் சாந்தமானாள்.

பட்டாம்பூச்சிகளாக குழந்தைகள் யூனிஃபாரம் உடுப்பில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார்கள். இவளும் பெரிய டீச்சர் ரூமுக்கு வெளியே இவளுக்காகக் காத்திருக்கும் ரிஜெஸ்தர் நோட்டில் தனது கைநாட்டை பதித்து விட்டு பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்.  காத்திருந்த நாற்றம் அவளை வரவேற்றது.  வாடிக்கையான வேலை.  அவளுக்கு நாற்றமில்லை !

இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் கருப்பாயிக்கு  அந்த நாற்றத்தோடு போராடிப் போராடி அந்த இடத்தை சுத்தம் செய்து மணக்க வைப்பதற்கு.  இந்த மாதிரி வேலைகள் அவளைத் தவிர வேறு யாரும் செய்ய வருவதில்லை.  ஊராட்சி அவளுக்குச் சம்பளப் பணம் அதிகம் தரவேண்டும்.

ஒரு நாளைக்கு நான்கு வேளைகள்  இதே வேலை தான். மாசம் பொறந்தால் நாலாயிரம் சம்பளம். பின்னே சும்மாவா? அறுநூறு குழந்தைகள் படிக்கும் கான்வென்ட் பள்ளியிலே இவள் ஒருத்தி தான் இந்த வேலை செய்பவள்.

இந்தப் பள்ளியோடத்துல இந்த வேலை பார்க்குறதையே என் சொந்தக்கார சனங்க பொறாமை வந்து என்னியப் பத்தி எக்குத் தப்பாப் பேசி நாறடிக்கிறானுவ. இந்த லச்சணத்துல இந்தச் சிறுக்கி வேற கண்டவனை நம்பி களுத்த நீட்டுறதுக்கு முந்தியே வவுத்த நீட்டிட்டு வந்து நின்னவள். அமாவாசையில பொறந்தவ…..சாக்கிரதையின்னு அம்புட்டுப் பேரும் சொன்னது தப்பா எங்க போச்சு. வாளவே இன்னும் ஆரம்பிக்கலை…. அதுக்குள்ளாரவே முடிஞ்சு போச்சுன்னு மூலையில் உக்காந்து மூக்கை சீந்திக்கிட்டு …பேரு கெட்டுப் போனா பொம்பளைக்கு பொளப்பு ஏது ?

நாலு வார்த்தை அதுவாச்சும் படிச்சுச்சா? என் மக தான்… ரெண்டாங்கிளாசு  கூடத் தாண்டலை. இப்பக் கேக்குது என்னிய  ஏன் ஆத்தா படிக்க வைக்கலையின்னு …! நான் ஒரு கைனாட்டுச் சிறுக்கி…நாம் பெத்தது எப்படி இருக்கும்? இப்போ அது பெத்தது என்னிய இந்தப் பள்ளியோடத்துல சேருன்னு சொல்லி தெனம் அளுவுது . முடியுமா?  பொழுது விடிஞ்சா ஊட்டுல  இதே அக்கப்போரு…கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பியூனிடம் சொல்லி புலம்பித் தீர்த்தவள்….மறுபடியும் பாத்ரூமை நோக்கி நடக்கிறாள்.

குடம் குடமாக தண்ணீரைப் பிடித்து ஊற்றி விளக்குமாற்றால்  பெருக்கி விட்டு நிமிரும்போது அருகிலிருந்து விசும்பல் ஒலி கேட்கவும்….”யாரும்மா உள்ளே.அழுவுறது…..? வெளியே வா….” என்று கதவைத் தட்டுகிறாள். அந்த அறைக்குள் இருந்து தான் அந்த விசும்பல் சத்தம் வந்து கொண்டிருந்தது.

ம்ம்…மாட்டேன்….என்ற முனகலோடு கதவை கெட்டியாக இழுத்துப் பிடித்துக் கொண்டு இன்னும் சற்றுப் பெரிதாகவே அழ ஆரம்பிக்கிறது குரல்.

யாரும்மா…உள்ளே….பேரையாச்சும் சொல்லு…!

காவ்யா….சிக்ஸ்த் “ஏ “….ஆயாம்மா..!

என்னாப் பாப்பா.? ஏன் அங்கன உள்ளார இருந்துக்கிட்டு அளுவுற ? வெளிய வா…நான் தான் இருக்கேன்ல…துணைக்கு…குரலில் கனிவை வரவழைத்தாள் கருப்பாயி.

மெள்ள  கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியில் தெரியுமாறு எட்டிப் பார்த்தவள் அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டு…யாருமில்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டபின்பு …ஆயாம்மா…பயம்மாயிருக்கு…என்று சொல்லிக் கொண்டே மெல்ல வெளியில் வருகிறாள்.

இன்னிக்கு கேம்ஸ் பீரியர்ட்…இப்பத் தான் கிரௌண்டில் விளையாடிட்டு வரேன். நான் எங்கியும் விழலை…பட் ..என் டிரஸில்  ஒரே…..! இங்க பாரேன்….எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு ஆயா…என்னிய எங்கம்மாட்ட கூட்டிட்டு போறியா?  மெல்லிய குரலில் விசும்பலினூடே கெஞ்சினாள் காவ்யா.

நீ அளுவாதே ….இது ரொம்ப சகஜம்…நீ பெரிய பிள்ளை  ஆயிட்டே…அம்புட்டுத்தேன்…எல்லாம் நல்ல சமாசாரம் தான். இந்தக் காலத்துல தான் பன்னெண்டு வயசுல அறியாத வயசுல சமஞ்சு நிக்குதே….தங்கம்…நீ வா  நா கூட்டிட்டு போய்  உங்கம்மட்ட சேக்குறேன். நான் கூட என்னவோ ஏதோன்னு பதறிப் போனேன். இது ஒண்ணுமில்ல தாயி..உங்கம்மா ஓடி வந்துரும்…அக்கறையோடு சொல்லிக் கொண்டே அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்கிறாள்…கருப்பாயி.

அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பெண்ணின் அம்மா வந்து கையோடு காவ்யாவை அழைத்துப் போகும்போது….அந்தப் பெண் கருப்பாயியைப்  பார்த்து பாசத்தோடு சிரித்து விட்டுச்  சென்றது. அந்தக் குழந்தையின் கண்களில் நன்றி தெரிந்தது.

ஏன் ஆச்சி….நீ ஒரு நா கூட லீவே எடுக்காமல் வந்து ஆஜராகுரியே….உனக்கு சீக்கு போக்கு ஏதும் வராதா ? பியூன் இவளைப் பார்த்து கேட்கவும்.

அது சரி..உனக்கேத்துக்கு இம்புட்டு பொறாமை…அதான் முட்டி வலி வந்து நேதம் அவதிப் படுறேனே…என் முட்டிவலியை கண்டு நா பாட்டுக்கு வீட்டில இருந்துப்புட்டா அங்க சட்டி ஒலி  கேக்காது….தெரியுமா? அதோட இல்லாம ..வேலை இல்லாம நான் சும்மா வீட்டில் கிடக்க முடியாது.   வேலை யில்லாம இருந்தால் தான்  எனக்கு நோவு நொடி வந்துடும்.  நான் லீவு போட்டால் பள்ளியோட கழிப்பறை நாறிப் போயிடாதா? அதான்…என்னிய நான் ஆரோக்கியமா வெச்சுக்கிடுவேன் . அரை வவுத்துக்கு சோறு..சரியாப் போகும்….தெனம் ரெண்டு டீ ..அம்புட்டுத்தேன் ..!

அப்போ நீ போடுறியே அந்தப் பொகயிலை…?

அது கெரகம்…..என்ன விட்டுத் தொலையாமல் கூடக்  கெடக்கு..இருந்துப்புட்டுப் போகட்டும்..

அடுத்த வாரம் நம்ம பள்ளியோடத்துல பெரிய ஆண்டுவிழா, தெரியும்ல ஆச்சி…! என்று பியூன் கேட்டதும்.

வருசா வருசம் வாரது தானே….அது.?   ஆனால் எனக்குதான் வேலை அதிகமாகும்.  கூட்டம் ரொம்ப வருமில்லே !   கழிப்பறைச் சுத்தம் செய்ய நான் ஒருத்தி போதாது !   உதவிக்கு ஆள் போட மாட்டாங்கா.

ஆமாம்…..ஆண்டு விழா….பரிசு தரும் விழா…..அன்னிக்கு உலக மகளிர் தினம் வேறயாம்…டீச்சர் எல்லாப் பேரும்  ரூமுல பேசிக்கிட்டாங்க…..என்றவன் மணியடிக்க விரைகிறான்.

ஆண்டு விழா நாளும் வந்தது.

பள்ளி இறுதியாண்டு மகளிர் தினத்தன்று பிரம்மாண்டமான முறையில் விழாக்கோலம் பூணத் தோரணங்களோடு பெரிய மேடை அலங்கரிக்கப் பட்டு குழந்தைகளின் நிகழ்ச்சிகாகக் காத்திருந்தது.

சிறிது நேரத்தில் அரங்கமும் நிறைய ஆரம்பித்தது. படிக்கும் மாணவியோடு அவர்களது பெற்றோர்களும்…வந்து கொண்டிருந்தார்கள்.

நெறைய டான்ஸ் எல்லாம் இருக்கு நீயும் முருகன அளச்சிட்டு வா என்று சொன்னதால் வெள்ளையம்மாளும் மகனை அழைத்துக் கொண்டு வந்து ஒரு மூலையில் அமர்ந்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனசில் தன் மகன் இந்தப் பள்ளியில் படித்தால் எப்படி இருக்கும்?  என்று  எண்ணிக் கொண்டது.

நடன நிகழ்சிகள், நாடகங்கள், பாட்டுக்கள், பாரத நாட்டியம், குரூப் டான்ஸ், பாரதியார் பாடல் என்று ஒவ்வொன்றும் அருமையாக நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் முடிந்ததும்…பங்கு பெற்ற ஒவ்வொருவருக்கும், அந்த ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவ மாணவியர்க்கு பரிசுகள், கேடயங்கள், விளையாட்டு வீராங்கனைகளுக்கு பெரிய கப் என்று பெயர்கள் வாசிக்கப் பட்டு சிறப்பு விருந்தினர் கையால் தரப் பட்டது அரங்கத்தில் மகிழ்ச்சி ஆரவாரம், பலத்த கரகோஷம், கைதட்டல்கள்..என்று குதூகலமாக இருந்தது.இறுதியாக தலைமை ஆசிரியர் “பெண்கள் தினத்தின் சிறப்புப் பேச்சாக பெண்களின் முன்னேற்றம் பற்றியும், பெண்களின் பலம் பற்றி எல்லாம் பேசி முடித்ததும் அனைவரும் பலமாகக் கைதட்டி அவரது பேச்சை வரவேற்றார்கள்.

ஓரத்தில் நின்றபடியே அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கருப்பாயிக்கு இது நாள் வரையில் புரியாத விஷயங்கள் கூட புரிய ஆரம்பித்தது. படிப்பு எம்புட்டு முக்கியம் என்று சொல்லிக் கொண்டவளாக அறிஞ்சோ அறியாமலோ நம்ம வூட்டுல மகனா வந்து பொறந்துடுச்சு …அவன கண்டிப்பா இதே பள்ளிக்கூடத்துல எப்பாடு பட்டாச்சும் சேர்த்துடணும் என்று எண்ணினாள் .

வெள்ளையம்மாளுக்கும் முருகனுக்கும் ஏதோ புது உலகத்தில் வந்து மாட்டிக் கொண்ட வியப்பு….தனக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லாவிட்டாலும் இதை எல்லாம் பார்த்ததும்….தன் மகனை எப்பாடு பட்டாவது இந்தப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் .முருகன் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது சின்ன  மனசுக்குள் பல ஆசைகள் வந்து மோதின.

வெள்ளையம்மா வீட்டுக்குப் போக எழுந்து மகனுடன் வெளியே போகும் போது வாட்சுமேன் முத்துச்சாமி ஓடிவந்து  “கொஞ்சம் நில்லம்மா”  என்று தடுத்தான்.

இறுதியாக…மேடையில் ஓர் அறிவிப்பு வந்தது !

” ஆறு வருடங்கள் இந்தப் பள்ளியில் ஜானிடராக பணி புரியும் கருப்பாயி – ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் தனது வேலையைச் சுத்தமாக செய்து சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்கிறார்… இந்த மகளிர் தினத்தை ஒட்டி அவருக்கு இந்தப் பள்ளியின் சார்பாக ரூபாய் ஆறாயிரம் ரூபாயை அன்பளிப்பாக அளிக்கிறோம்…..ஜானிடர் கருப்பாயி மேடைக்கு வரவும்…” என்று ஒலி பெருக்கியில் தன பெயர் அழைக்கப் பட்டதும்.

அதிர்ச்சி அடைந்து மூச்சுத் திணறி  கருப்பாயி சிலையா நின்றாள்.   கால்கள்  தடுமாறின  கூட்டத்தில் பெரும் கைதட்டலும், ஆரவாரமும் காதைப் பிளந்தது.சந்தோஷத்தில் கால்கள் கிடுகிடுக்க மேடையை நோக்கி மெல்ல நடந்தாள்  கருப்பாயி .

அதே நேரத்தில் காவ்யாவின் அம்மா தன் மகள் காவ்யாவுடன் மேடைக்கு விரைந்து வந்து ” நல்ல நேரத்தில் இவங்க குழந்தைகளுக்கு உற்ற துணையா இருந்து பாதுகாப்பு தந்தாங்க…அதற்க்கு என் நன்றி ” என்று சொல்லி பிரின்சிபால் முகத்தைப் பார்த்ததும்..அவர்கள் தலையாட்டவும்…” இதையும் வாங்கிக்கங்கம்மா…ரொம்ப நன்றிம்மா…உங்க உதவிக்கு.” என்று சொல்லி கையில் இன்னொரு கவரைத் திணிக்கிறார்கள்.

அவர்கள் கொடுத்த கவரைப் பெற்றுக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டு நகரவும் பயங்கர கரகோஷம்,அவளைத் தொடர…இந்த புது அனுபவத்தில் தான் எங்கேயோ ஜிவ்வென்று பறப்பது போல உணர்ந்தாள்..

விழா நிறைவு பெற்று கூட்டம் மெல்லக் கலைகிறது.

கருப்பாயிக்கு தன் மகள் வெள்ளையம்மாளும்  பேரன் முருகனும் எங்கிருக்கிறார்கள்  என்று ஆவல் மீற பார்க்கிறாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

நான் செய்யும் இந்த வேலைக்கே இந்தப் பரிசும், பணமும்…இதே மேடையில் படித்த புள்ளைங்க எத்தனை பேரு பரிசு வாங்கிட்டுப் போனாங்க…. அவங்களுக்கு எம்புட்டுப் பெருமையா இருந்திருக்கும்….ஆஹா புகழின் உச்சி….எம்புட்டு இனிமை….கை தட்டினா மனசு பறக்குது….பரிசு கெடைச்சா அது இம்புட்டு சுகம்மா இருக்குமா?  அவசியம் முருகனை எப்பிடியாச்சும் இங்க சேர்க்கோணம் .அதுக்கு இப்ப என்ன செய்யிறது என்று .நினைத்துக் கொண்டவளாக.. பிரின்சிபாலிடம்  சென்று தயங்கி நிற்கிறாள்.

அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்டவராக…..” ம்ம்…சொல்லுங்கம்மா…என்ன விஷயம்…என்ன வேணும் உங்களுக்கு  ? என்று அமைதியாகக் கேட்கிறார் அவர்.

“மேடம்…ரொம்ப நன்றி மேடம்….அப்படியே இன்னொரு வேண்டுகோள்…என் குடும்பத்துல யாருமே படிக்கலை…வசதி இல்லை..இப்போ என் பேரனுக்கு ஆறு வயசாவுது..இங்க தான் படிப்பேங்குறான் ..எங்களால தோத்துப் படாது…இப்போ நீங்க கொடுத்த பணத்தை அப்படியே தாரேன்.நீங்கள் தயவு செய்து என் பேரனுக்கு இந்தப் பள்ளிக்கூடத்துல சேர்த்துகிடுங்க  மேடம்….உங்களை தான் நான் ரொம்ப நம்பி இருக்கேன். சொல்லும்போதே கண்கள் குளமானது நா தழுதழுத்தது….கருப்பாயிக்கு.என் மவ இருபது வயசுல எவனையோ நம்பி ஏமாந்தவ இந்த ஒத்தப் மவன வெச்சுக்கிட்டு வெளிய தல காட்டாமல் ஊட்டுக்குள்ளயே அமுங்கிக் கெடக்குது. நான் உசுரோட இருக்கக்குள்ள அதுக்கு ஒரு நல்லது செஞ்சுப்புட்டுப் போவணும்னு மனசு கெடந்து தவிக்குது. நீங்க மனசு வெச்சா…..நீங்க மேடையில பேசினதக் கேட்டப்பத் தான் எனக்கு கண்ணு திறந்துச்சு மேடம்…அவரின் காலைப் பிடிக்கக் குனிகிறாள் கருப்பாயி.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…எந்திரிங்க …எந்திரிங்க ….நீங்க  இவ்ளோ நல்லா ஒரு முனைப்பா வேலை செய்யுறீங்க …அதுக்குக் கெடைச்ச சன்மானம் இந்தப் பணம். இதை நீங்களே  வெச்சிக்கங்க .நாளைக்கு உங்க   பேரப் புள்ளைய அழைச்சிட்டு வாங்க ….ஒரு சின்ன டெஸ்ட் வெக்கிறேன்…..இந்தப் பள்ளியே உங்க  பேரனுக்கு இலவசமாக சேர்த்துக் கொண்டு படிப்புச் செலவை ஏத்துக்கும்….நல்லாப் படிச்சாப் போதும்….அதே மாதிரி உங்க  மவளுக்கும் கிண்டர் கார்டன் …அதான் மழலைகள் பள்ளியில் குழந்தைகளைப் பார்த்துக்குற வேலை ஏதாச்சும்  போட்டுத் தரேன்…கவலைப்  படாதீங்க…..சரி தானேம்மா என்று புன்னகையோடு சொல்லிவிட்டுப் போன பிரின்சிபாலை பக்தியோடு பார்த்தவள்….”என் கஷ்டம் எல்லாம் விடிஞ்சு போச்சு” என்று கைகூப்பினாள்.அவள் மனசுக்குள் “தெய்வம் இருப்பது எங்கே…..அது இங்கே…வேறெங்கே? என்ற பாடல் வரி வந்து போனது  வழிந்த கண்ணீரை புடவைத் தலைப்பால் துடைத்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள்  கருப்பாயி.

எனக்கும் அந்தக் கப்பு வேணும்…..நானும் பள்ளியோடம் போகணும்….என்று  தனது தாயின் சேலைத் தலைப்பைப் பிடித்து இழுத்தபடி தொந்தரவு செய்த படி இருந்தான் முருகன்.

நீ அதிர்ஷ்டக் கார பயபுள்ளடா முருகா..! என்று ஓடி வந்து பேரனை அணைத்துக் கொண்ட கருப்பாயி…இந்தாடி….பெரிய டீச்சரைப் பார்த்து அம்புட்டையும் சொல்லிப்புட்டேன்…அவுக மனசு எறங்கி…இவன இங்கனயே சேர்த்துக்கிறேன்னு சொல்லிப்புட்டாக..அப்படியே உனக்கும் ஒரு வேலையைப் போட்டுக் கொடுத்துபுடறேன்னு சொன்னாக…இனி நம்ம கஷ்டம் எல்லாம் விடிஞ்சு போச்சு…என்று முக மலர்ச்சியோட மகளைப் பார்க்கிறாள் பரவசமான கருப்பாயி.

ஆறு வருஷம் முந்தி நானும் பூக்கட்டி வித்துக்கிட்டு இருந்தவ தான்…இந்தப் பாழாப் போன சமூகம்….என் கையால பூ வாங்க யோசிக்கும் போது…மனசு ஒடுங்கிப்  போவும்…! இந்தப் பாழாப் போன சனங்க மத்தில நாம எப்பவும் தல நிமிர்ந்து வாழ  இயலாதுன்னு தெரிஞ்சு போச்சு.! இனிமேட்டாவது முருகன்  படிச்சு பெரியவனாகி நம்மள நிமிர்த்தினாத் தான் நமக்குன்னு  ஒரு வாழ்க்கை….என்கிறாள் வெள்ளையம்மாள்.

அதுக்கு நான் வளி  பண்ணிப்புட்டேன்…உனக்கும் சேர்த்துத்தேன்….என்கிறாள் கருப்பாயி.

கண்கள் குளமாக தாயைப் பார்த்தவளாக வெள்ளையம்மாள்….” ஆத்தா….உன் மனசு தான் வெள்ளை ..என்னிய மன்னிச்சுரு தாயி .” என்று  .கண்கள் கலங்கிய மகளை ஆதரவோட அணைத்துக் கொள்கிறாள் கருப்பாயி.

மகளிர் ஆண்டு விழாவில் பணமுடிப்பு வாங்கியது கருப்பாயிக்கு பெரிதுதான் !   அந்த ஆண்டு “மிஸ் புதுச்சேரின்னு” பேப்பரிலே அடுத்த நாள் பாராட்டும் வந்தது.  பண முடிப்போட பேரனுக்கு பள்ளிக்கூடத்தில் இலவசப் படிப்பு கிடைத்தது அதைவிடப் பெரிதாக தன் மகள் வெள்ளையம்மாளுக்கும் ஒரு வழி பிறந்தது தான் கருப்பாயிக்குப்  பெரிது !

[புதுச்சேரில் மெய்யாக நடந்த 2013 ஆண்டு நிகழ்ச்சியை அடிப்படையாகக்  கொண்டது]

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ஜெயஸ்ரீ சங்கரின் ” சுத்தம் தந்த சொத்து ” ஒரு குப்பத்தின் பின்னணியில் அவர்கள் பேசும் மொழியில் மிகவும் தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது பாராட்டுதற்குரியது. இந்த மொழி ஆளுமை அவருக்கு எவ்வாறு கிட்டியது என்று வியந்தேன். கொஞ்சமும் நடை பிறழாமல் கடைசி வரை அதே மொழியில் கருப்பாயியும் வெள்ளையம்மாளும் பெசுவது சிறப்பாக உள்ளது.

    இருபது வயதிலேயே ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட வெள்ளையம்மாள், ஆறு வயதுடைய முருகனுடன் கருப்பாயியின் உழைப்பில் வாழும் அவலமும் ஏழ்மையும் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    கார்ப்பரேஷன் பள்ளி பிடிக்காமல் உள்ளூர் காண்வென்டில் படிக்க அடம் பிடிக்கும் முருகன் எவ்வாறு கருப்பாயியின் நேர்மையான வேலையின் மூலமாக அதை அடைந்தான் என்ற கதைக் கரு அழகாகவே காக்கப்பட்டுள்ளது.

    துப்புரவு பணி செய்தாலும் அதை தாழ்வாகக் கருதாமல் அவர் சுத்தமான வேலை செய்து சுகாதாரத்தைப் பேணிக் காத்துள்ளதால் பள்ளி ஆண்டு விழாவில் பணமுடிப்புத் தந்து பலர் மத்தியில் கருப்பாயி கௌரவிக்கப்பட்டது நல்ல முடிவாகும்…நல்ல சமுதாய நோக்குடைய கதை இது….வாழ்த்துகள் ஜெயஸ்ரீ சங்கர்….டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் ஜெயஸ்ரீ,

    ஒரு உணமைச் சம்பவத்தை அழகான புனைவாக மாற்றியமைத்ததற்கு பாராட்டுகள். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *