டாக்டர் ஜி.ஜான்சன்
பங்கஜம் எல்லாருக்கும் தெரிந்தவள் . அவளைக் கண்டாலே போதும், ” பங்காஜாம் சூடா மறிலா! ” என்று மலாய்க்கார ஊழியர்கள் கேலி செய்வதுண்டு. தாதியர்களும், இதர பணியாளர்களும் அவளை விடுவதில்லை. ஏன்? நான்மட்டுமென்ன? ” வந்துவிட்டாயா பங்கஜம்? ” என்றுதானே ஒவ்வொருமுறையும் அவளைக் கிண்டல் செய்துள்ளேன்?
அவளைக் காணும்போதெல்லாம் எனக்கு சில வேளைகளில் கோபம் வந்தாலும் உடன் பாவ உணர்வே மேலிடும். அதற்குக் காரணம் ஒருவேளை அவள் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் இருக்கலாம். அனால் அதைவிட அவளின் பின்னணியும் முக்கிய காரணம் என்றே கருதுகிறேன்.
அவள் காஹங் செம்பனைத் தோட்டத்தில் சாதாரண கூலிவேலை செய்பவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். கணவன் அவளுடன்தான் இருந்தாலும் அவன் ஒரு ஊதாரி. குடியிலும் கூத்தடிப்பிலும் காலத்தை வீணடிப்பதோடு குடும்பத்தில் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் பெரும் சுமையாகவே இருந்தான். அவனை நான் ஒருமுறைகூட பங்கஜத்துடன் பார்த்ததில்லை.மனைவியை மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லவேண்டுமே என்ற அக்கறை இம்மியளவும் இல்லாத இருதயம் கொண்டவன் அவள் கணவன். அவனைப் பற்றிய இத்தனைத் தகவல்களையும் என்னிடம் விவரித்தவள் பங்கஜம்தான்.
நோயாளியாக வருபவளிடம் குடும்பக் கதையெல்லாம் கேட்பது அவசியமா என்றால் அதுவும் தேவையே. சில நோய்கள் மனம் தொடர்புடையது. மன அழுத்தத்தால் ( DEPRESSION ) பல நோய்கள் உடல் ரீதியில் வருவதுண்டு. முன்பே உள்ள நோய்களை மன அழுத்தம் மேலும் சீர்கெடச் செய்வதுமுண்டு.
பங்கஜம் வரும்போதெல்லாம் ,” என்ன பங்கஜம்? இப்போ எப்படி இருக்கே ? ” என்றுதான் நான் கேட்பது வழக்கம்..
” வணக்கம் சார். அதே வலிதான் .வேலைக்கு போகலை சார். ”
” மருந்து சாபிட்டுமா இன்னும் வலிக்குது? ”
” கொஞ்சம் குறையுது. மருந்து தீர்ந்ததும் திரும்பவும் வலிக்குது சார். ”
” சரி படு பார்ப்போம் .”
அவள் கட்டிலில் படுத்துக்கொள்வாள் வயிற்றை நான் அழுத்திப் பார்ப்பேன். வயிற்றின் மேல்பகுதியில்தான் அதிகம் வலி என்பதுபோல் முகம் சுழிப்பாள் .
பொதுவாக அந்தப் பகுதியில் வலிப்பதை இரைப்பை அழற்சி ( gastritis ) என்றே முடிவுசெய்து அண்டாசிட் மருந்துகள் தருவோம். இந்த மருந்துகளில் பலரகங்கள் உள்ளன. Omeprazole , Ranitidine போன்ற விலை உயர்ந்த மருந்துகள்தான் அவளுக்குத் தருவேன். திரும்பத் திரும்ப அவள் வந்ததால், வலி உள்ளது உண்மைதானா என்பதில் சந்தேகம் எழுந்தது. ஆனாலும் மருத்துவ விடுப்பு கொடுத்துதான் அனுப்புவேன்.
அன்றும் அவள் வழக்கம்போல்தான் வந்திருந்தாள். அதற்குமுன் நான் பார்த்த ஒரு சீனப் பெண்மணியுடன் நீண்ட நேரம் வாதித்துவிட்டு
” என்ன பங்கஜம்? அதே பிரச்னையா? ” என்று கேட்டுவிட்டு, ” இனிமேல் நான் உனக்கு எம். சி தரமுடியாது. இங்கு எல்லாரும் உன்னை எம்.சி.வாங்கதான் வருவதாகக் கூறுகிறார்கள்.” என்று கூறினேன்.
பரிதாபமாகப் பார்த்த அவள், ” நான் பொய் சொல்லலை டாக்டர். இந்த வலியோடு என்னால் வேலை செய்ய முடியலை டாக்டர்.கொஞ்சம் மனசு வையுங்கள் டாக்டர். ” என்று கெஞ்சினாள்.
” இல்லை! இந்தமுறை நான் உனக்கு உதவ முடியாது. உன்னை படுக்கையில் சேர்க்கப் போறேன். எல்லா பரிசோதனையும் செய்துவிட்டு ஸ்பெஷலிஸ்ட் பார்க்க ஜோகூர் பாரு அனுப்பப்போறேன். பல மாதங்கள் மருந்து சாப்பிட்டுவிட்டாய்.கொஞ்சம்கூட வலி குறையலை என்கிறாய்.” உரக்கக் கூறியவாறு வார்டில் சேர்வதற்கான குறிப்புகளை எழுதலானேன்.
அடிப்படையான இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஹெலிக்கோபேக்டர் பைலோரி கிருமி ( Helicobacter Pylori ) பரிசோதனை செய்ய உத்தரவு இட்டிருந்தேன். இந்தகிருமிகள் இரைப்பையில் நீண்ட நாட்கள் இருந்தால் தொடர்ந்து இரைப்பையில் புண் உண்டாகி வலியும் தொடரும். இதை சரிசெய்யாவிடில் புற்றுநோய் உண்டாகும் ஆபத்தும் உள்ளது.
வெளிநோயாளிப் பிரிவில் வேலை முடிந்து மாலையில் மருத்துவ வார்டு செல்வது வழக்கம். அவள் சோகமாக எதையோ யோசித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவளின் இரத்தப் பரிசோதனைகளின் முடிவுகளைப் பார்த்தேன். எல்லாமே சரியாகத்தான் இருந்தன. ஹெலிக்கோபேக்டர் பரிசோதனையின் முடிவு இன்னும் வரவில்லை.
அவளுக்கு கேஸ்ட்ரோஸ்கோப் ( gastroscope ) பரிசோதனை செய்யுமாறு ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை சிறப்பு நிபுணருக்கு ( specialist ) பரிந்துரை செய்தேன். அதன்படி அவள் மறுநாள் காலை அங்கு கொண்டுசெல்லப்படுவாள்.
காலையில் சென்றவள் திரும்பிவிட்டாள். கேஸ்ட்ரோஸ்கோப் ரிபோர்ட் உடன் கொண்டுவந்திருந்தாள். இரைப்பையில் புண் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.
” பங்கஜம். உன் வயிற்றில் புண் இல்லை. நீ வீடு செல்லலாம். இனிமேல் வயிற்று வலி என்று சொல்லி இந்தப்பக்கம் வராதே! ஒழுங்காக வேலைக்கு போ. இனி இங்கு வந்தால் உனக்கு எம். சி . தரமாட்டேன்.” சற்று கடுமையாகவே எச்சரித்து அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்.
அதன்பிறகு சில மாதங்கள் அவளைக் காணவில்லை. வலி இல்லை, வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்துக்கொண்டேன்.
நான் தினமும் பல நோயாளிகளைச் சந்திக்க நேர்ந்தாலும், ஒருசிலர் அவ்வப்போது நினைவில் வருவதுண்டு.அதுபோன்றவர்களில் பங்கஜமும் ஒருத்தி.
ஒரு நாள் மாலையில் அவசரப்பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஜோகூர் பாரு மருத்துவமனையின் மருத்துவ துரித வாகனம் ( ambulance ) வந்து நின்றது ஒரு நோயாளியை வெளியில் கொண்டுவந்து சக்கரநாற்காலியில் ( wheel chair ) அமர்த்தி என்னுடைய இடத்துக்கு தள்ளி வந்தனர்.
நான் அதில் அமர்ந்திருந்த நோயாளியின் முகத்தைப் பார்த்தேன்.கரிய நிறத்தில் எலும்புடன் தோல் ஒட்டிய நிலையில், மூக்கு நீண்டு, பழுத்த எலுமிச்சம் பழ மஞ்சள் நிற விழிகளியுடைய ஒருத்தி என்னை வைத்தவிழி மாறாமல் உற்று நோக்கினாள்.
” என்னைத் தெரியலையா டாக்டர்? ” சோகமே உருவான மெல்லிய குரலில் கேட்டாள்.
தெரிந்தவள்போல் கேட்கிறாளே என்று மீண்டும் அவளை உற்று நோக்கினேன். அடையாளம் தெரியவில்லை. அவளைக் கொண்டுவந்த ஊழியர் தந்த குறிப்பேட்டைப் பார்த்தேன்.
” பங்கஜம் ” என்ற பெயரைப் பார்த்து பதறிப்போனேன்!
” பங்கஜமா? நீயா? என்ன ஆயிற்று உனக்கு? இப்படி அடையாளம் தெரியாமல்போனாயே! ” பதட்டத்துடன் கேட்டேன்.
” ஆமாம் டாக்டர்…பங்கஜம்தான்.இனிமேல் வரக்கூடாது என்று சொன்னீர்களே ..இப்போ கடைசியா வந்திருக்கேன்..உங்கள் கையில் உயிர் விட.” மூச்சு இறைக்கக் கூறினாள்.
அவசர அவசரமாக குறிப்புகளை படித்துப் பார்த்து அதிர்ந்துபோனேன்!
” Advanced Liver Cancer for palliative care .” என்று அதில் கண்டு திடுக்கிட்டேன்!
” முற்றிய கல்லீரல் புற்றுநோய் – வலி தணிப்பி கவனிப்புக்காக ” என்று இதைக் கூறலாம்.
மேற்கொண்டு சிகிச்சை செய்யமுடியாத கைவிடப்பட்ட நிலையில்தான் இதுபோன்று குறிப்பிடப்படும்.
ஜோகூர் பாரு மருத்துவர் எழுதிய கடிதத்தைப் படித்தபின்பு அனைத்தும் விளங்கியது. அவள் அன்று வீடு திரும்பியபின்பும் வலி தொடர்ந்ததால் நல்லுள்ளம் கொண்ட தோட்டத்து கண்காணிப்பாளரான மலாய்க்காரர் தோட்டத்துச் செலவில் அவளை ஜோகூர் ஸ்பெஷெலிஸ்ட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கும் அவளுக்கு ஸ்கேன், கேஸ்ட்ரோஸ்கோப் பரிசோதனைகள் செய்துள்ளனர். வேறு வழி தெரியாமல் காரணத்தைக் கண்டறிய வயிற்றைத் திறந்து பார்க்கும் அறுவை முறையைக் ( laparotomy ) கையாண்டுள்ளனர்.அப்போதுதான் அவளின் கல்லீரல் முற்றியநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.உடன் வயிற்றை மீண்டும் மூடிவிட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அவளை எங்களிடம் அனுப்பிவிட்டனர்.
அவளைப் பார்க்கவே முடியாத நிலையில் வெட்கித் தலைகுனிந்தவண்ணம் வார்டுக்கு அனுப்பினேன். அன்றாடம் அவளிடம் அன்பாகப் பேசியும் நன்றாகக் கவனித்தேன். அங்கு அவளால் ஒரு வாரமே இருக்க முடிந்தது.
அவள் கூறியபடியே அவளின் உயிர் என் கைகளில்தான் பிரிந்தது! பங்கஜத்தின் மஞ்சள் விழிகள் என்னைப் பார்த்தபடியே பிரியாவிடைப் பெற்றன!
( பின் குறிப்பு மருத்துவம் என்னதான் இமாலய அளவில் முன்னேறியிருந்தாலும் அவ்வப்போது இதுபோன்ற வினோதமான வகையில் நோய்கள் ஒளிந்துகொள்வதும் உண்டு! )
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’
- திருக்குறளில் மனித உரிமைகள்!
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12
- கரிகாலன் விருது தேவையில்லை
- காலம்
- நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
- எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- மூன்று அரிய பொக்கிஷங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
- சுத்தம் தந்த சொத்து..!
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
- மெல்ல நடக்கும் இந்தியா
- மஞ்சள் விழிகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)
- வாலிகையும் நுரையும் – (15)
- யாதுமாகி நின்றாய்….. !
- மூக்கு
- தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
- விட்டில் பூச்சிகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)
- “தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
- புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.
- அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
- நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி