குரல்வளை

author
0 minutes, 1 second Read
This entry is part 25 of 29 in the series 24 மார்ச் 2013

டாக்டர் ஜி.ஜான்சன்

அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னைத் தட்டி எழுப்பினாள் மாரியாணி. அவரசரத்தை உணர்ந்தவனாக எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கியவாறு, ” என்ன? எமெர்ஜென்சியா? ” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போது அதிகாலை இரண்டு மணி.

” மெல்ல பேசுங்கள். அங்கே வந்து பாருங்கள் . ” என்றவாறு முன் அறை நோக்கி நடந்தாள். நான் பின்தொடர்ந்தேன்.

வெளியில் முனகல் சத்தம் கேட்டது.

என்னவாக இருக்கும் என்று அறிய வெளியே எட்டிப் பார்த்தேன்.

கிளினிக் வராந்தாவில் ஒருவன் படுத்திருப்பது தெரிந்தது அவனைச் சுற்றிலும் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது அவன்தான் முனகிக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய தொண்டையை இருகைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தான்.

நான் உடன் வெளியே செல்ல எத்தனித்தபோது மாரியாணி என் கையைப் பிடித்து தடுத்தாள்

” வெளியே வேறு யார் உள்ளார்கள் என்பது தெரியலை டாக்டர். ஒருவேளை அவனை வெட்டிய கூட்டம் காத்திருக்கலாம். எதற்கும் முதலில் போலீசைக் கூபிடுவோம் . நீங்கள் வெளியே தனியே போகவேண்டாம் டாக்டர். ” அவளின் பயம் எனக்குப் புரிந்தது.

நாங்கள் வேலை செய்த மில்லினியம் கிளினிக் தேசா செமேர்லாங் கடைத்தெருவு பகுதியில் 24 மணிநேரமும் இயங்கியது. இப்பகுதியிலும் ஜோகூர் ஜெயா பகுதியிலும் இரவு நேரங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. சில கிளினிக்குகளிலும் கொள்ளையர்கள் நோயாளிகளைப்போன்று வந்து கத்திமுனையில் கொள்ளையடித்துள்ளனர்.

நாங்கள் இருவரும் மாலை ஐந்துமுதல் மறுநாள் காலை ஏழு மணிவரை வேலை செய்பவர்கள். பெரும்பாலும் இரவுகளில் நள்ளிரவுக்குப்பின் கதவுகளைப் பூட்டிவிட்டுதான் படுப்போம். அவள் முன்னறையிலேயே படுத்துவிடுவாள். நான் பின்புறம் உள்ள தனி அறையில் படுத்திருப்பேன்.

மாரியாணி நிறத்தில் கருப்பாக இருந்தாலும் தன்னை மலாய்க்காரி என்றே கூறிக்கொள்வாள். அவள் பினாங்கில் உள்ள இந்திய முஸ்லீம்கள் வழித்தோன்றல். ஆங்கிலமும் மலாயும் பேசும் அவளுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவளைப் பார்க்கும் பல
தமிழர்கள் அவளை தமிழ்ப்பெண் என்று எண்ணி தமிழில் பேசி ஏமாறுவதுண்டு. கருப்பாக இருந்தாலும் இருபது வயதின் இளமையின் வனப்பும் கவர்ச்சியும் கொண்ட உடல் அமைப்பு பெற்றிருந்தாள் .

வெளியே வேறு யார் உள்ளனர் என்பது தெரியாததுதான் . அனால் அங்கெ ஒருவன் ஊயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். அவனை எப்படியாவது காப்பற்றவேண்டும் என்ற முடிவுடன், ” நீ போலீசுக்கு தெரிவித்துவிடு. நான் அவனைப்போய் பார்க்கிறேன் .” என்று கூறிவிட்டு கதவைத் திறந்தேன். சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன் வீதி வெறிச்சோடிக்கிடந்தது.

அவன் படுத்திருந்த இடத்திலிருந்து இடது பக்க வீதியிலும் இரத்தம் சொட்டுசொட்டாக காணப்பட்டது.

அவனைப் பார்த்தேன். இளமஞ்சள் நிற மேனியுடைய நெப்பாலத்து இளைஞன். அவனைச் சுற்றி இரத்த வெள்ளம். கழுத்துப் பகுதியிலிருந்து இன்னும் இரத்தம் வழிந்தது. தொண்டையை இறுகப் பற்றியிருந்த கைகளை விலக்கிப் பார்த்தேன். அவனின் குரல்வளை குறுக்கே அறுபட்டு பிளந்து வெள்ளை நிறத்தில் தெரிந்தது.அதிலிருந்து சுவாசிக்கும் காற்று பெரும் ஓசையுடன் வெளியேறியது.!

இது ஆபத்தான நிலையாகும்! எந்த நேரத்திலும் இவன் இறந்து போகலாம். உடனடி முதலுதவி செய்தாகவேண்டும்!

நான் மீண்டும் அறைக்குள் ஓடினேன். முதலுதவி சாதனங்களுடன் மாரியாணியுடன் அவனிடம் விரைந்துவந்தோம். கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு பிளவுபட்டுள்ள குரல்வளையை ஒன்றுசேர்த்து, அதன்மேல் துவாரத்துணி ( gauze ) வைத்து இறுக்கி கட்டுபோடும் துணியால் ( bandage ) இறுக்கிக் கட்டினேன். காற்று வெளியேறாததால் அவனின் சுவாசம் ஓரளவு சீர்பெற்றது. அவன் கரங்கள் கூப்பி அந்த வேதனையிலும் நன்றி

சொன்னது மறக்கமுடியாத வியப்பை உண்டுபண்ணியது! அவன் எதையோ கூற முயன்றான். ஆனால் முடியவில்லை. அளவுக்கு அதிகமான இரத்தம் வெளியேறிவிட்டதால் அந்த நிலை!

நான் இரத்த அழுத்தம் பார்த்தேன். மிகவும் குறைவாகவே இருந்தது. மாரியாணி அதைப் புரிந்துகொண்டவளாக உடன் ட்ரிப் செட் ( இரத்தக்குழாய் வழியாக நீர் ஏற்றுவது ) கொண்டுவந்தாள். அங்கேயே அவனின் இரத்தக் குழாயுடன் அதை இணைத்து ஒரு பாட்டில் செலைன் ( saline ) வேகமாக ஓடவிட்டேன்.

கொஞ்சம் உணர்வு பெற்ற அவன் வலது கையை வீதி பக்கம் காட்டினான். எனக்கு ஏதும் புரியலை. அது பற்றி கவலை வேண்டாம் என்ற எண்ணத்துடன் மருத்துவ விரைவு வண்டிக்கு ( ambulance ) தகவல் தரச் சொன்னேன்.

உள்ளூர்க் காவலர்கள் வந்திறங்கினர். நான் நடந்தவற்றைக் கூறினேன் குறித்துக்கொண்டனர். அவனிடம் பேசிப்பார்த்தனர். ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் எதையோ சொல்ல முயன்றது நிச்சயமானது.

அந்தப் பகுதி கடை வரிசைகளின் மாடிப்பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் நிறையபேர்கள் தங்கி இருந்தனர். காவலர் இருவர் அங்கு சென்று சில நெப்பால் இளைஞர்களுடன் திரும்பினர். அவர்கள் அவனுடன் நெப்பாலிய மொழியில் பேசிப்பார்த்தனர். ஆனால் அறுபட்டுள்ள குரல்வளையை பயன்படுத்தி அவனால் பேசமுடியவில்லை,

அவனிடம் பேனாவும் காகிதமும் தரப்பட்டது. அதில் நெப்பாலிய மொழியில் எழுதினான். தன்னுடைய நண்பன் ஒருவன் கடைகளின் சந்தில் கிடப்பதாக எழுதினான். இரண்டு தமிழ் இளைஞர்கள் ஒன்றாக பீர் குடித்ததாகவும், அவர்கள் இவர்களிடம் பணம் கேட்டதாகவும், தர மறுத்ததால் கத்தியால் குத்திவிட்டு மோட்டாரில் ஓடிவிட்டதாகவும் எழுதினான்.

உடன் காவலர்கள் வீதியில் கண்ட இரத்தக்கரையின் உதவியோடு, அந்த சந்துக்கு விரைந்தனர். நானும் முதலுதவி பெட்டியுடன் பின்தொடர்ந்தேன்.

அங்கு சாக்கடையினுள் தலையும் நெஞ்சுப்பகுதியும், வெளியில் வயிறும் கால்களுமாக அவனின் நண்பன் கிடந்தான். நான் அவனை அங்கேயே பரிசோதனை செய்து பார்த்ததில் அவன் இறந்து போயிருந்தான்!

மருத்துவ விரைவு வண்டியும் ஒலி எழுப்பிக்கொண்டு வந்து சேர்ந்தது. குரல்வளை அறுபட்டவன் உடன் கொண்டுசெல்லப்பட்டான்.

காவலர் கொண்டுவந்த வேறொரு வாகனத்தில் இறந்துபோனவனின் உடல் கொண்டுசெல்லப்பட்டது.

ஜோகூர் பாருவிளிருந்து உயர்மட்ட காவல் அதிகாரிகள் வந்தனர். புகைப்படங்கள் எடுத்தனர். என்னிடம் விசாரித்து குறித்துக்கொண்டனர். எதிரே இருந்த ஸ்ரீ முருகன் உணவகத்தில் காலை ஐந்து மணிவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றனர்.

( முடிந்தது )

Series Navigationசெல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7முறுக்கு மீசை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *