6
சீனுவிடம் சங்கரனுக்குக் கடிதம் கொடுத்து அனுப்பிய பிறகுதான் தயாவின் மனத்தில் சற்று நிம்மதி ஏற்பட்டது. சங்கரனால் என்ன செய்ய முடியப்போகிறது எனும் ஆயாசம் அவளுக்கு இருந்தாலும். முக்கியமான நபருடன் – அவருக்கும் தொடர்புள்ள – தனது பிரச்சினையைப் பகிர்ந்து கொண்ட நிம்மதிதான் அது என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை.
சீனு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த போதே, “ என்னடா, இந்த வெயில்ல ஊர் சுத்தப் போயிட்டே? சொல்லாம கொள்ளாம பிசுக்னு நகந்துட்டே?எங்க போயிட்டு வறே?” என்கிற கேள்வியுடன் அவன் அம்மா அவனை எதிர் கொண்டாள்.
“என் ·ப்ரண்ட் ஒருத்தன் கிட்ட நோட்ஸ் வாங்கறதுக்காகப் போனேம்மா.”
“அப்ப வெறுங் கையோட வந்திருக்கே?”
“என்ன கேள்வின்னும்மா கேக்கறே? அவன் இல்லே. வெளியே போயிருக்கான். கொஞ்ச நேரம் காத்திண்டிருந்தேன். வரல்லை. திரும்பிட்டேன். மறுபடியும் ஒரு தரம் போய்ப் பாக்கணும்,” என்ற சீனு சைக்கிளை இரேழியில் நிற்க வைத்துவிட்டு உள்ளே போனான்.
சீனு அடுக்களைக்குச் சென்று குடத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தபடியே பார்வையைச் சுழற்றினான். தயா அங்கே ஓர் ஓரத்தில் உட்கார்ந்து பூத் தொடுத்துக் கொண்டிருந்தாள். கன்னங்களில் கண்ணீர்க் கறை தெரிந்தது. கண்கள் இடுங்கி யிருந்தன.முகமே அதைத்துக் கிடந்தது.
சற்றுப் பொறுத்து, யாரும் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து, “அக்கா! குடுத்தேன். படிச்சார். படிச்சுட்டு, ‘அழறதை நிறுத்திட்டு அந்தாளுக்கு உன்னைச் சரின்னு சொல்லச்சொன்னார். ‘ அக்கா ஒத்துக்க மாட்டா’ ன்னு சொன்னேன். ‘ ‘ஒத்துண்டுதான் ஆகணும்.வேற வழியே இல்லே’ ன்னுட்டு விடுவிடுன்னு போயிட்டார். ஆனா, அக்கா, கண்ணெல்லாம் கலங்கிடுத்து அவருக்கு,” என்றான்.
குபுக்கென்று பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்ட தயா, “சீனு! அவரைப் பத்தி நீ இங்கே யார் கிட்டவும் சொல்லிட மாட்டேதானே?” என்றாள்.
“இல்லேக்கா. அப்பா கூட என்னைக் கேட்டா. ‘தயாவோட ஆ·பீசுக்கு நீ அடிக்கடி போயிருக்கியே, அங்க இருக்கிற ஆளா¡, உனக்குத் தெரியுமா?’அப்படின்னு.”
“நீ என்ன சொன்னே அதுக்கு? ஒண்ணும் சொல்லிடல்லியே?”
“என்னக்கா இது? சொல்லுவேனா? அக்கா எந்த ஆம்பளையோடவும் பேசி நான் பாத்தது கிடையாதுன்னு சொல்லிட்டேன்.”
“தேங்க்ஸ், சீனு.”
“அவர்தான்கிறது இவாளுக்குத் தெரியக் கூடாதுன்னு ஏங்க்கா சொல்றே?”
“எங்க ஆ·பீஸ்ல என்னோட வொர்க் பண்றவர்னு நான் ஆத்திலே சொல்லல்லே. அப்பா திருப்பித் திருப்பிக் கேட்டப்ப, வெளியாளுன்னு சொல்லிட்டேன். ஒரே ஆ·பீஸ்னு தெரிஞ்சா அப்புறம் அவரை என்னால பாத்துப் பேச முடியாம போயிடும்டா, சீனு! ஏன்னா, என்னை ஆ·பீசுக்குப் போகப் படாதுன்னு தடுத்துடுவா. அதான்.”
“ஆ·பீசுக்குப் போறதாச் சொல்லிட்டுப் போய் அந்த வெளியாளோட உன்னால பேச முடியுமேக்கா? அதை அப்பா யோசிக்க மாட்டாளா என்ன?”
“நீ கெட்டிக்காரண்டா, சீனு. அப்ப வெளியூர்னு சொல்லிட்றேன். எனக்குத் தோணவே இல்லே பாரு.”
“எந்த ஊர்னு சொல்லப் போறேக்கா?”
“டில்லின்னு சொல்லிட்றேன்.”
கூடத்தில் இருந்த ஈசுவரன், தமது நாற்காலியிலிருந்து, “அப்பனே, ஷண்முகா” என்றபடி எழுந்தது தெரிய, சீனு தண்ணீரை எடுத்துக் குடிக்கலானான். குடித்துவிட்டுத் திரும்பியவன் அவர் அடுக்களைக்குத்தான் வருகிறார் என்பது தெரிந்ததும், சட்டென்று பாய்ந்து தயாவுக்கு அருகே உட்கார்ந்துகொண்டான்.
“அக்கா! அந்தத் திருநெல்வேலி ஆளைப் பண்ணிண்டியானா என்னோட வருங்காலம் கூட நன்னாருக்கும், அக்கா. ஓரொரு வீடுகள்ளே இப்பல்லாம் பொண்ணுகள் எப்படியெல்லாம் தியாகம் பன்றா! நீ கொஞ்சம் விட்டுக் குடுக்கக்கூடாதா, அக்கா?” – சத்தமாய்ப் பேசியபடி சீனு அவளுக்கு மட்டும் தெரியக் கண் சிமிட்டினான்.
“சரிதான், போடா. வாயை மூடிண்டிரு. இதிலே யெல்லாம் நீ தலை யிட வேண்டியதில்லே.”
“சே! ஆனாலும் உன்ன மாதிரி ஒரு சுயநலவாதி இருக்க மாட்டாக்கா. . . அப்பா! பாருங்கோப்பா!” என்று அவர் ஏற்கெனவே பின்னால் வந்து நின்றது தெரிந்தும்தெரியாதவன் போன்று பேசிய அவன், அப்போது தான் திரும்பியவன் போல் திரும்பிப்பார்த்து இவ்வாறு கேட்க, அவர் கசப்புடன் புன்னகை செய்தார்.
“உன் தம்பிக்கு இருக்கிற அறிவு கூட உனக்கு இல்லியே! அவன் எவ்வளவு புத்திசாலித்தனமாப் பேசறான், பாரு.”
“அவன் இந்த ஆத்திலே இருக்கிற இன்னொரு சுயநலவாதிப்பா. அதான் இப்படிப் பேசறான்.”
“ஆமாம்மா. நாங்க எல்லாருமே சுயநலவாதிகள்தான். பெத்த பொண்ணுகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வர்றச்சே அவாளுக்குக் கல்யாணத்தைப் பண்ணிக் கடனைக் கழிக்கணும்னு நினைக்கிற தாயும் தகப்பனும் சுயநலவாதிகள்தான்! பெத்து, வளத்து, படிக்க வெச்சு, உத்தியோகமும் வாங்கிக் குடுத்துச் சொந்தக் கால்ல நிக்கற தகுதியைப் பெத்துக் குடுத்த தகப்பன் சுயநலவாதிதான்!”
“அவன் யாருன்னாவது சொன்னா தேவலை. அதுவும் சொல்ல மாட்டேன்றே!” என்று அப்போது அங்கு வந்த அம்மா ரேவதி சலித்துக்கொண்டாள்.
“சரிம்மா. சொல்லிட்றேன். டெல்லியிலே டி·பென்ஸ் டிபார்ட்மெண்ட்லே அக்கவுண்டண்டா இருக்கார்.”
“அவனோட உனக்குப் பழக்கம் எப்படி ஏற்பட்டது?”
“அவர் என் ·ப்ரண்ட் ஒருத்தியோட அண்ணா. விடு. அதை யெல்லாம் தெரிஞ்சுண்டு இப்ப என்ன பண்றதா யிருக்கே? உங்க இஷ்டப்படிதான் என்னைப் பலி குடுக்கப் போறேள். அப்படி இருக்கிறச்சே எதுக்கு இந்த அநாவசியக் கேள்வியெல்லாம்கேக்கறேள்?”
“அம்மா, தயா! இத பாரும்மா. பெத்தவா கெடுதல் பண்ணுவாளா? அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா. கண்ணைத் தொடச்சுக்கோ. நாலு மணிக்கெல்லாம் அவா வந்துடுவா. அழுதது தெரியாம கொஞ்சம் பளிச்னு இரும்மா!”
அப்பாவின் குழைவும் கொஞ்சலும் காதுகளுக்கு நாராசமாக இருந்தாலும், கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. ‘கல்யாணம் என்கிற அத்தியாவசியமான உறவை வியாபாரமாக்கி விட்டதால்தானே இத்தனை சோகம், சண்டை, சொல்லிக்காட்டல், வாக்குவாதம் எல்லாமே? சே. என்ன மனிதப் பிறவிகள்! தங்களையே தங்களுக்குச் சுமையாக்கிக்கொண்ட – ஆறறிவு படைத்ததாய்ப் பீற்றிக் கொள்ளுகிற – அறிவிலிகள்! பறவைகளும், மிருகங்களும், ஏனைய ஜீவராசிகளும் இப்படியா தங்கள் வாழ்க்கையைச்சிக்கலாக்கிக் கொண்டுள்ளன? என்ன வேண்டிக் கிடக்கிறது ஆறாம் அறிவு!’
தயா மெதுவாக எழுந்தாள். பின்கட்டுக்குப் போய்ச் சோப்புப் போட்டு முகம் கழுவிக்கொண்டாள்.
துண்டால் முகத்து ஈரத்தை ஒற்றியபடி அவள் கூடத்துக்கு வந்த போது, அவள் அக்கா சாம்பவி ஈசுவரனுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள்.
“அப்பா! நீங்களும் அம்மாவும் சேந்துண்டு அவளைக் கட்டயப் படுத்தறது கொஞ்சங்கூட நியாயமே இல்லே. என்னைத் தள்ளி விட்றதுக்காக அவளை அவ இஷ்டத்துக்கு விரோதமா அவளுக்குப் பிடிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்கிறது சரியே இல்லே. . .”
“ஆமாண்டி. ரொம்பத்தான் நியாயத்தைக் கண்டுட்டே! ஸ்கூலுக்கு அனுப்பினா சரியாவே படிக்கல்லே. பாஸ் மார்க் வாங்குவே. அவ்வளவுதான். எட்டாவதோட நிறுத்தி வேற ஆச்சு.”
“அதுக்கு என்ன பண்றது? வம்சம் அப்படி!” – கடைசி இரண்டு சொற்களையும் முனகலாய்ச் சொல்லிக்கொண்டாள்.
ஈசுவரன் படிக்காததால் சர்க்கார் வேலைக்குப் போகாமல் சின்னதாய் ஓட்டல் வைத்திருந்தார்.அவருடைய மூதாதையர்களும் படித்தவர்கள் அல்லர். ஓட்டல் வைப்பதுதான் அவர்களது பரம்பரைத் தொழில்.
“வாய் இருக்குடி உனக்கு! இந்த வாயை வெச்சிண்டு அசலாத்துகுப் போய் நீ எப்படித்தான் குப்பை கொட்டப் போறியோ தெரியல்லே,”என்று ரேவதி இடைமறித்தாள்.
“அதனாலதான் கல்யாணம் வேண்டாம்கறேன்.”
“அப்புறம் ஊரும் உலகமும் எங்களைத் தூத்தறதுக்கா? நாளைக்கு நீயே சொல்லிக் காட்டுவே – கல்யாணம் பண்ணிவைக்கல்லேன்னு.”
“ஒருநாளும் மாட்டேன். எழுதி வேணும்னாலும் குடுக்கறேன். . . எனக்குத் தெரிஞ்ச அரைகுறைத் தமிழ்லதான். ஒரே கல்லால ரெண்டு மாங்கா அடிக்க முடியறதுன்றதுக்காக நீங்க ரெண்டு பேரும் தயா மனசை நோகடிக்கக் கூடாது. பாவம் அவ! அவளுக்கு இருக்கிற அழகுக்கு வரதட்சிணை வேண்டாம்னு இன்னும் எத்தனையோ பேரு வருவா. அதுக்கு அவசியமே இல்லாதபடி அவளே ஒருத்தனைத் தேடிண்டாச்சுன்னும் சொல்லிட்டா. அதுக்கு அப்புறமும் அவா என் கல்யாணச் செலவுக்கு முப்பதாயிரம் தர்றேன்றாங்கிறதுக்காக அவளைப் பலி குடுக்கிறது நியாயமே இல்லே.”
“சரிதாண்டி. நிறுத்து உன் லெக்சரை. சொன்னதையே சொல்லிண்டு. எங்களுக்கும்வயசாயிண்டிருக்கு. உனக்கும் இருபத்தெட்டு வயசு ஆயிடுத்து. இனிமேலும் உன்னைஆத்துலே வச்சுண்டு இருக்க முடியாது. வயித்துல நெருப்பைக் கட்டிண்டிருக்கிற மாதிரி இருக்கு எனக்கு!” என்று ரேவதி இடைமறித்தாள்.
“நீ வயித்துல நெருப்பைக் கட்டிக்கும்படியான வயசையெல்லாம் நான் தாண்டியாச்சும்மா. இருபத்தெட்டு வயசு வரைக்கும் என்னால இந்தக் குடும்பத்துக்கு ஏற்படாத மானப் பிரச்னையா இனிமே ஏற்படப் போறது?”
தான் பேசியதற்கும் மேலாகவே புரிந்துகொண்டு பதிலடி கொடுத்த சாம்பவியின் சொற்கள் ரேவதியின் வாயைக் கட்டிப் போட்டன.
இருந்தாலும், சமாளித்துக்கொண்டு, “இத பாருடி, இது மாதிரி ஒரு அதிருஷ்டம்கதையிலயோ சினிமாவிலயோ கூட வராது. நம்பவே முடியாத பெரிய அதிருஷ்டம்டி இது. பொண்ணைப் பெத்தவாளுக்கு வரதட்சிணை வருது! இதை வேணாம்கிறவ அறிவு கெட்டவளாத்தான் இருக்கணும்,” என்றாள், ரேவதி.
“சரிம்மா. நம்ம தயா அறிவுகெட்டவளாவே இருக்கட்டும். அது உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணப் போறது? அவளுக்குப் பிடிச்சவனைத்தான் அவ கல்யாணம்பண்ணிக்கணும்.”
“அப்ப, உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே ஆகாதுடி. பூமிக்குப் பாரமா, சோத்துக்குக் கேடா நீ என்னென்னிக்கும் கன்னி கழியாம இப்படியே இருக்க வேண்டியதுதான்.”
“ஆகாட்டாப் போறது, போ! ஆனவாள்ளாம் என்னத்தைக் கிழிச்சா, நான் என்னத்தைக் கிழிக்காம இருக்கப் போறேன்? அதுக்காக நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்!.”
கூடத்தில் நடந்துகொண்டிருந்த காரசாரமான வாக்குவாதம் தயாவின் செவிகளில் புகுந்து அவள் கண்களைச் சிவக்கச் செய்தது.
சாம்பவி அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்தாள்: “என்னை இந்த பூமிக்குப் பாரமா பூமாதேவி நினைக்க மாட்டா. சோத்துக்குக் கேடான்னு சொன்னியே, அதை வேணும்னா ஒத்துக்கறேன். ஆனா, இப்ப சத்தியா என் தங்கைதான் எனக்குச் சோறு போட்டுண்டிருக்கா. நீங்கள்ளாம் அவளுக்குப் பாரமில்லைன்னா, நானும் பாரமில்லே!”
“என்னடி, பேசிண்டே போறே?”
“இரு, இரு. நான் இன்னும் பேசி முடிக்கல்லே. அப்படி ஒரு வேளை தயா எனக்குச் சோறு போட முடியாத நிலைமை ஏதோ காரணத்தால ஏற்பட்டாலும், சேல்ஸ் கேர்ள், அது இதுன்னு இப்பல்லாம் எத்தனையோ வேலைகள் இருக்கு. அதுவும் இல்லேன்னா, யார் வீட்டிலயாவது வாசல் தெளிச்சுக் கோலம் போட்டோ, சமையல் வேலை பண்ணியோ என் வயித்தை கழுவிக்க எனக்குத் தெரியும். என் தங்கையோட கண்ணீர்லஎன் வாழ்க்கப் படகை ஓட்றதை விட அது எவ்வளவோ மேல்!”
தயாவின் கண்களில் மேலும் கண்ணீர் பெருகிற்று. ‘சாம்பவி ரொம்ப சுமாராத்தான் படிச்சாங்கிறது மட்டுமேவா அவ படிப்பு நின்னதுக்குக் காரணம்? இல்லையே. அப்பாவுக்குப் பக்க வாதம் வந்துடுத்து. அவரைக் கவனிக்க வீட்டில ஒரு ஆள் தேவையா யிருந்தது. அம்மாவும் ஹார்ட் பேஷண்ட். கூட மாட வேலை செய்யறதுக்குன்னு ஆத்தோட வெச்சுண்டுட்டா இவளை. பத்து வகுப்பாவது படிக்க வெச்சிருக்கலாம். அப்ப நான் சின்னவ. எனக்கும் தோணல்லே. .படிப்பு சுமாரா வந்தாலும் பாஸ் பண்ணமுடிஞ்சிருக்கும். எஸ்.எஸ்.எல்.ஸி. வரைக்குமாவது. . அப்பா மேலதான் தப்பு.. அம்மா மேலயுந்தான். . . .’
ஆத்திரத்துடன் கத்திவிட்டுத் திரும்பிய சாம்பவி, கலங்கிய கண்களுடன் தன்னையே பார்த்துக்கொண்டு சிந்தனையுடன் நின்றிருந்த தயாவைப் பார்த்ததும், தலையைத் தாழ்த்திக்கொண்டாள். ஆனால், மறு நொடியே அவளருகே வந்து, “தயா! இந்தக்கட்டாயக் கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கவே கூடாது. எனக்காக நீ உன் தலையிலமண்ணை வாரிப் போட்டுக்காதே. அப்படியானும் எனக் கொண்ணும் கல்யாணம் வேண்டாம். இருபத்தெட்டு வயசு வரைக்கும் ஒரு தப்புத் தண்டா பண்ணாம இருந்தாச்சுஇனிமேய¡ தப்புப் பண்ணிக் குடும்பத்துக்கு அவமானத்தைத் தேடி வெச்சுடப் போறேன்நான்?. . . இத பாருடி. இவா காலமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான். ஆனா நீ சின்ன வயசுக்காரிடி. இன்னும் எத்தனையோ வருஷம் வாழப் போறவ. இவாளோட நிம்மதிக்காக நீ உன்னோட சந்தோஷத்தைக் கெடுத்துக்காதே. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”
ஈசுவரனும் ரேவதியும் ஒருவரை மற்றவர் பார்த்துக்கொண்டார்கள். பார்வைகளில்ஒரு குற்ற உணர்வும் சினமும் கலந்திருந்தன. ஆனாலும் ஈசுவரன் மறு விநாடியே சுதாரித்துக்கொண்டார்.
“ஏய்! இத பாரு. நீ போய் உன் ஜோலியைப் பாரு. உன் தங்கையைச் சமாதானப் படுத்தி அவளை இதுக்கு ஒத்துக்கச் சொல்லுவியா, அதை விட்டுட்டு அவளுக்குஜால்ராவா போட்றே? போடி உள்ளே. இன்னொரு தரம் அவளுக்குப் பரிஞ்சு பேசினே, பல்லையெல்லாம் பேத்துடுவேன், பேத்து. தெரிஞ்சுதா?”
அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்ததன் பின்னர், சாம்பவி அங்கிருந்து அகன்றாள்.
“இத பாரு, தயா. மறுபடியும் சொல்றேன். அவா உன்னைப் பாக்க வர்றச்சே பளிச்னு இருக்கணும். இப்படி அழுத கண்ணும் சிந்தின மூக்குமா யிருந்தா, உனக்குப் பிடிக்கல்லைன்னு நினைச்சுப்பா.”
“நினைச்சுப்பான்னு சொல்லாதங்கோப்பா. புரிஞ்சுப்பான்னு சொல்லுங்கோ. ஏன்னா, அதுதானே உண்மை?” என்று சாம்பவி சமையலறையில் இருந்தபடியே குரல் கொடுத்தாள்.
தயா ஈசுவரனின் பக்கம் திரும்பினாள்: “ சாம்பவியை நீங்க எஸ்.எஸ்.எல்.ஸி. வரைக்குமாவது படிக்க வெச்சிருந்திருக்கணும். உங்க சவுகரியத்துக்காக அவளை ஆத்தோட வெச்சுண்டுட்டேள். இப்பா நீங்க சரியாயிட்டேள். ஆனா இவளுக்கு வயசாயிடுத்தே! அம்மாவுக்கும் ஹார்ட் சரியில்லே. உங்க சுயநலத்துக்காக இவளையும்தான் நீங்க பலிகடா ஆக்கிட்டேள். . . இப்படி உங்க பக்கம் ஆயிரம் தப்பை வெச்சுண்டு, இவ ஒரு தலைவலின்ற மாதிரி பேசினா என்ன அர்த்தம்?”
ஈசுவரனின் தலை தாழ்ந்தது. ஆனால் ரேவதி விரைந்து வந்து தயாவை எதிர்கொண்டாள்: “ஆமாண்டி. ஒரு தப்பு நடந்து போச்சு. ஒத்துக்கறேன். அதைச் சரி பண்ணத்தான் பாக்கணுமே தவிர, இன்னொரு தப்பையுமா பண்ணுவா?”
“எதைம்மா இன்னொரு தப்புன்றே?. . . என்ன பதிலைக் காணோம்? எனக்குப்பிடிச்சவனை நான் கல்யாணம் பண்ணிக்கிறது இன்னொரு தப்பா?”
“சாமர்த்தியமாப் பேசறதா நெனப்பாடி? அது தப்பு இல்லேடி. ஆனா, இருபத்தெட்டு வயசை முழுங்கிட்டு, இன்னும் கன்னி கழியாம இருக்கிற அக்காவைப் பத்தின மனச்சாட்சியே இல்லாம அவ எக்கேடுங் கெட்டுப் போகட்டும்கிற மாதிரி பேசறியே, அந்த சுயநலந்தாண்டி தப்பு! அந்த சுயநலந்தான் தப்பு!”
அப்போது வாசல் பக்கம் செருப்போசை கேட்க, எல்லாரும் பார்வைகளைத் திருப்பினார்கள்.
– தொடரும்
jothigirija@live.com
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!
- வெளியிடமுடியாத ரகசியம்!
- மீள்பதிவு
- நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?
- பிறவிக் கடல்.
- ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
- மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…
- சற்று நின்று சுழலும் பூமி
- புலி வருது புலி வருது
- அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
- மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை
- தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !
- குருஷேத்திர குடும்பங்கள் 6
- நீர்நிலையை யொத்த…
- கவிதை
- உன்னைப்போல் ஒருவன்
- கடல் நீர் எழுதிய கவிதை
- புகழ் பெற்ற ஏழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏழை – கலைவாணர்
- நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1
- ஆதாமும்- ஏவாளும்.
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2
- அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
- ஒரு காதல் குறிப்பு
- இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.
- தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5