மத நந்தன பாபா

This entry is part 26 of 28 in the series 5 மே 2013

– சிறகு இரவிச்சந்திரன்

நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம் நாள் தொடங்கப்பட்டது.

இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு முயற்சி, நந்தன வருட ஆரம்பத்தில் நடந்தேறியது பாபாவின் கருணையினால் அல்லாமல் வேறென்ன.

ஒரு கோயில் உருவாக பல ஆண்டுகள் முயல வேண்டும் என்பது கற்றவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த இடத்திற்கான ஒப்புதல் அரசு வசம் இருந்ததும், அதை கையகப்படுத்த 2002ம் ஆண்டு முதலே, அப்பகுதி வாழ்  ஆன்மீக அன்பர்கள் முயற்சி செய்து வந்ததும், பலரறிந்த உணமை. கடவுள் மறுப்பு கட்சி ஆட்சி காலத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை என்றாலும், முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அடுத்த வாரிசுகள் அப்படியொன்றும் கெடுபிடியான  நாத்தீக வாதிகள் இல்லை என்பதே நிர்வாகிகள் கொண்ட  நம்பிக்கை. அந்திம காலங்கள், ஆத்திக விதையை விதைக்கக் கூடும் ஆட்சியாளர்களிடம், என்றொரு நப்பாசையும் இருந்தது.

கொள்கைப் பிரகடனமாக கோயிலையும் கடவுளையும் கொண்டாடும் அரசு அமைந்த பின்னும் கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஒரு ஊசலாட்டம் இருந்தது. பகுதி வாழ் மக்கள் 75 பேர் கையெழுத்திட்டு மனு கொடுத்த பின் தான் அரசு கொஞ்சம் அசைந்து கொடுத்தது. அந்த மனுவில் முதல் கையெழுத்து ஒரு கிருத்துவருடையது என்றும் தகவல்.

பூங்காக்கள் பூமி சூட்டைத் தணிக்கும். மரங்கள் மழையை வரவழைக்கும் என்று விஞ்ஞானம் சொன்னாலும், அவை என்னமோ சமூக விரோதிகளின் புகலிடமாகவும், குடிமகன்களின் கூடாரங்களாகவும் ஆகிப்போனது யதார்த்த உண்மை. கோயில் இதை  எல்லாம் களையும் என்பதில் யாருக்கும் ஐயம் ஏதுமில்லை. புரள பூங்காக்கள் இல்லையென்றால், குடிமகன்கள் அளவோடு குடித்து, சேதாரமில்லாமல் சொந்த வீடு போய் சேர்வார்கள் என்று ஒரு நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம். எப்படியோ ஊருக்கு ஒரு கோயில் கிடைத்தது புண்ணியம்.

கிட்டத்தட்ட ஏழரை கிரவுண்டில் அமைய இருக்கிறது சீரடி கோயிலைப் போன்ற ஒரு பாபா  ஆலயம். அதற்கு பிள்ளையார் சுழியாக ஒரு தியான மண்டபம் அமைத்து சிறிய பாபா சிலையை நிறுவி இருக்கிறார்கள் மதனந்தபுரம்  சாய்  சமாஜ் நிர்வாகத்தினர். வார நாட்களில் நூறு அன்பர்களும், வியாழக்கிழமைகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட அன்பர்களும் கோயிலின் தியான மண்டபத்தில் கூடுகிறார்கள். ஒலிபெருக்கிகள் வழியாக அப்பகுதி முழுவதும் ‘சாய்ராம்’ என்கிற கோஷம் எதிரொலிக்கிறது.

ஏப்ரல் பதினாலு அன்று திறக்கப்பட்ட பாபா ஆலயம், 48 நாட்கள் மண்டல பூஜை  நியமத்தில் ஆழ்ந்திருக்கிறது. இன்னமும் கோயிலை ஒட்டி நந்தவனம்; கோயிலை சுற்றி வர கூழாங்கல் பாதை; தனியாக பிரசாதம் தயாரிக்கும் அறை என்று தடபுடலாக திட்டமிடப்பட்டிருக்கிறது.

முகவரி : சாய்பாபா தியான ஆலயம். ரதி தெரு, ( சுவாமி பள்ளி அருகில் ), மதநந்தபுரம், சென்னை – 600125.
தொலைபேசி : 9500011277 , 7871·178299.
0

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா. says:

    ஆன்மிகம் எப்போதுமே மக்களை அமைதிப்படுத்தும் சக்தியாகும். பாபா ஆலயங்கள் அன்னதானத்திலும் சிறந்து விளங்குகின்றன. இந்த ஆலயமும் அவ்வாறே திகழும் என்று நம்புகிறேன். தகவலுக்கு நன்றி. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *