சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

This entry is part 12 of 29 in the series 12 மே 2013

imagesbeshi2

தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள் தொடர்பான செய்திகளே சவூதி அரேபிய ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அமைந்தன. தாம் இந்தளவுக்குப் பிரபலமாகப் போகிறோமென கிஞ்சித்தேனும் நினைத்துக் கூடப் பார்த்திராத இப் பெண்கள் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.

90 வயது முதியவரைத் திருமணம் முடிக்க நேர்ந்த சிறுமியின் பெயர் ஊடக தர்மத்தின் காரணமாக எந்த ஊடகங்களாலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவரது வயது பதினைந்து எனக் குறிப்பிட்டுள்ளது. சவூதியரான தாய்க்கும், யெமனைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்தச் சிறுமியின் குடும்பம் மிகவும் வறியது. வறுமையிலிருந்து மீளும் வழியை, 90 வயது முதியவரொருவர் இவரது தாயிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். அதாவது 17,500 அமெரிக்க டொலர்கள் தந்து அப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியதும், வேறு வழியின்றி பெற்றோர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. தனது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ள வேண்டாமென பெற்றோரிடமும், உறவினர்களிடமும் அழுது புலம்பிய சிறுமியின் கதறல்கள் பலனற்றுப் போயின. பணத்தினைப் பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் சிறுமியை முதியவரின் வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.

இனி அழுது புலம்பிப் பயனில்லை என்பதனை உணர்ந்த சிறுமி, மணமகன் வீட்டு அறைக்குள் நுழைந்து உட்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். கதவுக்கு வெளியே நின்று கெஞ்சியும், மிரட்டியும் பார்த்த முதியவரின் வேண்டுகோளுக்கு சிறிதும் மசியாமல், இரண்டு நாட்களாக உள்ளே இருந்த சிறுமி, முதியவரும், அவரது உறவினர்களும் அசந்த நேரம் பார்த்து அவ் வீட்டை விட்டுத் தனது வீட்டுக்குத் தப்பிப் போய்விட்டார். கோபத்துக்குள்ளான முதியவர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று தான் தந்த பணத்தைக் கேட்டு வாதிட, விடயம் சூடு பிடித்துக் கொண்டது. ஊடகங்களினூடாக இத் திருமண விடயம் முழு உலகத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட, மகளிர் உரிமைகள் சம்பந்தமான செயற்பாட்டாளர்கள் முதிய மணமகனுக்கும், அச் சிறுமியின் பெற்றோருக்கும் எதிராக தமது குற்றச்சாட்டை நிறுவினர்.

இந் நிகழ்வைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் இருக்கும் சிறுமிகளின் பாதுகாப்பற்ற நிலைமை மூடப்பட்ட திரைகளினுள்ளிருந்து ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. சில ஆசிய, ஆபிரிக்க நாடுகளைப் போல சவூதி அரேபியாவிலும் சில சந்தர்ப்பங்களில் பழைய சம்பிரதாயங்களுக்கு அமைய இன்றும் பால்ய விவாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆண் மகனுக்கு தனது சம வயதில் அல்லது தன்னை விடக் குறைந்த வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிகிறது. ஆனால் அனேக சிறுமிகளுக்கு தம்மை விடவும் வயதில் அதிகம் கூடிய ஆண்களையே திருமணம் செய்ய நேர்கிறது. மனித உரிமைகள் சம்பந்தமான சவூதி தேசிய நிறுவனமொன்றின் உறுப்பினரான சுஹைலா ஸெய்னுல் ஆப்தீன், சவூதி அரேபிய சிறார்களைக் காப்பாற்றும்படி அதிகாரிகளைக் கேட்டிருக்கிறார் எனும் போது இந் நிகழ்வுகளின் தீவிரம் உறைக்கிறது.

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற ரிஸானா நபீக் எனும் இளம்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டமையானது, கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயமாக அமைந்திருந்தது. இலங்கையைச் சேர்ந்த ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் பின்பற்றப்படும் ‘குற்றங்களுக்கான தண்டனைகள்’ குறித்த சட்டங்கள் தொடர்பான தேடலும், வாதப் பிரதிவாதங்களும் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தவர்களிடத்திலும் இன்று வரையிலும் நடைபெற்று வருகின்றன. ரிஸானாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையானது, உண்மையாகவே இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துக்குள் அடங்குகிறதா? அல்லது நிறைவேற்றப்பட்டது சவூதி அரேபிய அரசாங்கத்தின் சட்டமா? என்பது குறித்த பல விவாதங்களை இணையத்திலும் பொதுவெளியிலும் காணக் கூடியதாக உள்ளது.

மஹ்ரமான ஆணின் துணையில்லாமல் எந்தவொரு பெண்ணும் எங்கும் பயணிக்கக் கூடாது என்று இஸ்லாமிய ஷரீஆ சட்டம் கூறுகையில், அவ்வாறான மஹ்ரமான ஆண் துணையற்ற பெண்களுக்கு இஸ்லாமிய மதக்கடமைகளுக்காக வருவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகையில், முஸ்லிம், முஸ்லிமல்லாத இலங்கை உட்பட ஆசிய தேசங்களின் பெண்களுக்கு மட்டும் மஹ்ரமேதுமின்றி, சவூதி அரேபிய வீடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்ல சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது எனில் அங்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பது இஸ்லாமிய ஷரீஆ சட்டமா? அல்லது சவூதி அரேபிய சட்டமா? எனக் கேட்கப்படும் கேள்வியானது பதிலேதுமின்றித் தொக்கி நிற்கிறது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்கள் பல உள்ளன. கொலைக் குற்றவாளியாகக் காணப்படல், துர்நடத்தையில் ஈடுபடல், இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு இன்னுமொரு மதத்துக்கு மாறுதல், ஆயுதந் தாங்கிக் கொள்ளையடித்தல், போதைப்பொருள் வியாபாரம், பாலியல் வல்லுறவில் ஈடுபடுதல், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்ற பல குற்றங்களுக்குத் தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. சிரச் சேதம் செய்தல், கற்களாலெறிந்து கொலை செய்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத் தண்டனைகளுக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் எவ்வளவுதான் குரல் கொடுத்து வருகின்ற போதிலும், அதற்கு இன்னும் எந்தவொரு பலனும் கிட்டவில்லை.

2007 – 2010 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பகிரங்கமாக சிரச்சேதம் செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 345 எனவும் இக் காலப் பகுதியில் எவரும் கற்களாலெறிந்து கொல்லப்படவில்லை எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டின் இறுதி சிரச்சேதமானது, மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபட்டாரெனக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதே நிகழ்த்தப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நபரது சடலமானது பொது மக்களின் பார்வைக்காகவும் வைக்கப்படும். 2009 ஆம் ஆண்டு ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவரொருவர் கற்களாலெறிந்து கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பிற்பாடு, அவரது சடலத்தை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும்படி சவூதி நீதிமன்றம் கட்டளையிட்டிருந்ததாக ‘சவூதி கெஸட்’ எனும் ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அஸீர் எனும் பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றைக் கொள்ளையிட்டிருந்த அக் கொள்ளைக் கூட்டத்தின் ஏனைய ஆறு பேரையும் சிரச் சேதம் செய்யும்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு மரண தண்டனை நியமிக்கப்பட்ட பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டு அத் தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் சிரச்சேதம் செய்யும் முறைமை நடைமுறையிலிருந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் 82 பேர் மரண தண்டனைக்குள்ளானதாக அம்னெஸ்ட் இயக்கம் கூறுகிறது. அவர்களுள் பெண்கள் எத்தனை பேர், அவற்றுள் சிரச்சேதம் மூலமாக தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எத்தனை பேர் போன்ற தகவல்கள் இல்லை. ஆனாலும் தண்டனைக்குள்ளானவர்களில் அனேகமானவர்கள் ரிஸானா நபீக் போன்ற வறிய ஆசிய நாட்டவர்கள் என்பது நிச்சயம் என அம்னெஸ்ட் இயக்கம் மேலும் கூறுகிறது.

சிரச்சேதமானது, சம்பந்தப்பட்ட சிறைச்சாலையை அண்மித்துள்ள நகரத்தின் மத்தியிலேயே பிரசித்தமாக நடைபெறுகிறது. அலுகோஸுவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரும் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு வெண்ணிற ஆடையிலேயே அழைத்து வரப்படுகின்றனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர் விலங்கிடப்பட்டும், கண்கள் மறைக்கப்பட்டும் அவ்விடத்துக் கொண்டு வரப்பட்டு முழங்காலில் இருத்தப்படுவார். பிறகு அலுகோசுவினால் அவரது தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவார்.

சவூதி அரேபியாவின் பிரதான அலுகோசு முஹம்மத் சாத்-அல்- பேஷி (45 வயது) ஆவார். இவர் சவூதி அரேபியாவிலிருந்து வெளிவரும் ‘அறப் நியூஸ்’ பத்திரிகைக்கு அரிய நேர்காணலொன்றை வழங்கியதன் மூலம் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், தான் நிறைவேற்றும் சிரச் சேதங்கள் குறித்தும் பல விடயங்களை முதன்முறையாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

“இரு கரங்களும், இரு கண்களும் கட்டப்பட்டு, முழங்காலில் இருத்தி வைக்கப்பட்ட குற்றவாளியின் தலையை ஒரே வெட்டில் வேறாக்குவதே எனக்கிடப்பட்டுள்ள கட்டளையாகும். வெட்டப்படும் தலையானது, நிலத்தில் வீழ்ந்து சில மீற்றர்கள் தூரம் உருண்டோடும். சில நாட்களில் எனக்கு பத்துப் பேரளவில் இவ்வாறாகக் கொல்ல நேரும். துப்பாக்கியால் சுட்டோ அல்லது சிரச்சேதம் செய்தோ நான் அவர்களுக்குரிய தண்டனையை நிறைவேற்றுவேன். பெரும்பாலான நேரங்களில் சிரச்சேதம் செய்வதையே நான் செய்கிறேன்.” என அல்-பேஷி தெரிவித்திருக்கிறார்.

தனது வாளை கூர்மையாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு தனது பிள்ளைகள் உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுதல் தொடர்பான தொழிற்பயிற்சியைப் பெற்றிருக்கும் இவர் கை, கால் போன்ற உறுப்புக்களை வெட்டுவதன் மூலமும் தண்டனைகளை நிறைவேற்றி வருகிறார்.

“பிரசித்தமாக சிரச்சேதம் செய்யும்போது அங்கு பலர் ஒன்றுசேர்வர். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டதும் அங்கிருக்கும் சிலர் மயங்கி விழுவர். அதனைப் பார்க்க முடியாவிடில், அவர்கள் ஏன் அங்கு வரவேண்டும்?’ எனக் கேட்கும் அல்-பேஷி,

“குற்றவாளியை மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்குக் கொண்டு வரும்போதே அவனது அல்லது அவளது தைரியம் சிதைந்து போயிருக்கும். அனேகமானவர்கள் முழங்காலிலிருத்தப்படும்போது அசையாதிருப்பது எக் கணத்திலும் தமது கழுத்துக்களை ஊடறுத்து வாள் இறங்கும் என்பதைத் தெரிந்திருப்பதனாலாகும். நான் ஆரம்பத்தில் குற்றவாளிக்கும், கூடியிருக்கும் மக்களுக்கும் கேட்கும் விதத்தில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பான கட்டளையை சத்தமாக வாசிப்பேன். அதன்பிறகு உயரதிகாரியின் சமிக்ஞை கிடைத்ததுமே நான் உடனடியாக வேகமாக வாளைச் சுழற்றுவேன்.” எனவும் கூறுகிறார்.

சவூதி அரேபியாவின் பிரதான அலுகோசுவுக்கு நல்ல சம்பளமும், வேறு கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

“ஒரு நாளைக்குக் கொல்லப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை. நான் இறைவன் எனக்கு வழங்கியிருக்கும் கடமையையே நிறைவேற்றுகிறேன். குற்றவாளிக்கு விலங்கிட்டு, கண்களைக் கட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்குக் கொண்டு வருவதே முதலில் எனக்கு வழங்கப்பட்டிருந்த கடமையாகவிருந்தது. எனக்கு முன்பிருந்த அலுகோசுவிடமிருந்து நான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். அலுகோசுப் பதவி காலியானதும், அப் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. நானும் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். இப் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.” என கடந்த காலத்தை நினைவுகூரும் அல்-பேஷி,

“1998 ஆம் ஆண்டு, ஜித்தாவில் வைத்து எனக்கு முதன்முறையாக ஒரு நபரை மரண தண்டனைக்குள்ளாக்க விதிக்கப்பட்டது. நான் ஒரே வெட்டில் அவரது தலையை கழுத்திலிருந்து வேறாக்கினேன். அன்று எனக்குள் கொஞ்சம் கலவரத்தையும், படபடப்பையும் உணர்ந்தேன். இப்போதெனில் என்னால் அமைதியாக எந்தவொரு குற்றவாளியையும் சிரச்சேதம் செய்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொலை செய்யமுடியும். என்னால் இரவில் நன்றாக உறங்க முடியுமா எனச் சிலர் கேட்கின்றனர். ஆமாம். எனக்கு நன்றாக உறக்கம் வருகிறது.” எனத் தொடர்கிறார்.

ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நியமித்திருக்கும் தினத்துக்கு முன் தினம், அக் குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து இறைவனின் கட்டளையின் பேரில் தான் நிறைவேற்றப்போகும் இச் செயலுக்கு அவர்களிடம் மன்னிப்புக் கோருவது தனது வழக்கம் என அல்-பேஷி கூறுகிறார். சவூதி அரேபியாவில் எவருமே தன்னை ஒதுக்கி வைப்பதோ, அச்சத்துடன் பார்ப்பதோ இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“நான் நிறைவேற்றுவது இறைவனின் கட்டளையைத்தான் என்பதை சவூதி அரேபியாவில் எல்லோரும் அறிவர். எவருமே என்னைப் பற்றி அச்சப்படுவதோ, அறுவறுப்படைவதோ இல்லை. எனக்கு நிறைய உறவினர்களும், நண்பர்களும் இருக்கின்றனர். நான் அவர்களுடன் சாதாரணமானதொரு வாழ்க்கையை வாழ்ந்துவருகிறேன். எனது பொது வாழ்க்கையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”

எனக் கூறும் அவர், சவூதி அரசாங்கம் தனக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு எனத் தெரிவிக்கவில்லையாயினும் அது மிக உயர்ந்த சம்பளம் என்பதை மட்டும் அவர் தெரிவிக்கிறார்.

“எனது வாள் 20000 சவூதி ரியால் அளவு பெறுமதியானது. அது எனக்கு சவூதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பரிசு. அடிக்கடி அதன் கூர்மையை பரிசீலிப்பேன். அதில் இரத்தக் கறை படியாமலும் நான் பார்த்துக் கொள்வேன். ஒரே வெட்டில் தலை துண்டாகி விழுவது குறித்து பலரும் வியந்து கூறுவது அதன் கூர்மையைப் பற்றித்தான்.” எனக் கூறும் அல்-பேஷி, சிரச்சேதம் செய்யப்படுவது ஆணா, பெண்ணா என்பது தனக்கு முக்கியமல்ல எனவும் கூறுகிறார்.

“பெண்களைத் துன்புறுத்துவதை நான் பொதுவாழ்க்கையில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்ணொருத்திக்கு மரண தண்டனை நியமிக்கப்பட்டால் அது இறைவனின் கட்டளை என்பதை நான் அறிவேன். அந்தக் கட்டளையை நான் நிறைவேற்றுவேன்.”

பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகையில், அதற்கான ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அல்-பேஷிக்கே உள்ளது.

“நான் அப்பொழுது அப் பெண்ணிடம் துப்பாக்கியால் சுடட்டுமா அல்லது கழுத்தை வெட்டட்டுமா எனக் கேட்பேன். அவர்களில் சிலர் துப்பாக்கியால் சுடச் சொல்வார்கள். அனேகமானவர்கள் கழுத்தைத் துண்டிக்கச் சொல்வார்கள்.” எனக் கூறும் அல்-பேஷி தனக்குப் பின்னர், அலுகோசு பதவியில் ஈடுபடுத்துவதற்காக தனது மூத்த மகனான முஸாத்தை (22 வயது) பயிற்றுவித்திருக்கிறார். வாளை பொருத்தமான விதத்தில் பிடித்தல், கழுத்தில் சரியான இடத்தில் இறக்குதல், அதற்கேற்ற வேகம் போன்ற பயிற்சிகள் அதனுள் அடங்குகின்றன.

கை, கால் போன்றவற்றை வெட்ட தான் வாளுக்குப் பதிலாக கூரிய கத்தியைப் பயன்படுத்துவதாக அல்-பேஷி கூறுகிறார்.

“அந்தக் கத்தியின் கூர்மை குறித்தும் நான் அடிக்கடி கவனத்தில் கொள்வேன். கைகளையும், கால்களையும் எவ்விடத்தில் துண்டிக்க வேண்டுமென்ற கட்டளையானது எனக்கு உயரதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறும். அதற்கிணங்க நான் செயற்படுவேன்.” எனத் தொடர்ந்தும் கூறும் அல்-பேஷி திருமணம் முடித்து, ஏழு பிள்ளைகளின் தந்தையாவார். தான் அலுகோசு உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளும்போது, அதற்கு தனது மனைவி மறுப்புத் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“உத்தியோகத்தைப் பொறுப்பேற்க முன்பு, அத் தொழில் குறித்து நன்கு சிந்தித்துப் பார்க்கும்படி மட்டுமே அவர் என்னிடம் கூறினார். ஒருவருக்கு மரண தண்டனை அளித்துவிட்டு நான் வீட்டுக்குப் போகும்போதும் வழமை போலவே அவர் என்னை வரவேற்பார். எனது பிள்ளைகளும் என் மேல் மிகுந்த அன்பு கொண்டவர்கள். எனது மகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அப் பேரனின் பெயர் ஹாஸா. அவன்தான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய உத்வேகம். இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எனக்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்.”

இவ்வாறாக முதன்முறையாக சவூதி அரேபிய பிரதான அலுகோசு ஒருவரினால் ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் பேட்டியானது, பல அறியப்படாத தகவல்களை சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறது. இத் தகவல்களைக் கொண்டே இன்னும் பல வாதங்கள் பல நாடுகளிலும் கிளர்ந்திருக்கும் நிலையில், பாரம்பரியமான அடிப்படை வாத தண்டனைகளால், சமூகத்தில் நிகழும் குற்றங்களைக் குறைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எவ்வாறாயினும் யாரும் எதிர்த்துக் கேள்வியெழுப்ப முடியா அரண்களைத் தம்மைச் சுற்றி எழுப்பி நிலைநிறுத்தியிருக்கும் சவூதி அரசானது, தனது சட்டங்களின் மூலம் உலகெங்கிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிரிகளையும் சம்பாதித்தே வைத்திருக்கிறது என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும்.

– எம். ரிஷான் ஷெரீப்,

இலங்கை

mrishanshareef@gmail.com

Series Navigationநீங்காத நினைவுகள் – 2வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

3 Comments

 1. Avatar
  புனைப்பெயரில் says:

  உலகின் மிக மிக மோசமான மனிதர்களையும், சிந்தனைகளையும் கொண்ட நாடு சௌதி அரேபியா. எதையும் திமிராலும், தீவிரவாதத்தாலும் வெல்ல முடியும் எனும் நாடு. எக்சிட் விசா எனும் எக்ஸார்சிஸ்ட்டால் எதேசிக்காரமாக பிறரை துன்புறுத்தும் நாடு. இணையத்தால் இந்த நாட்டின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்.

 2. Avatar
  கவிஞர் இராய. செல்லப்பா says:

  இத்தனை கொடூரமான நாடா சவுதி அரேபியா? இந்த நாட்டிலும் மக்கள் வசிக்கிறார்கள் என்று நம்புவதற்கே மனம் சங்கடப்படுகிறதே! யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிகளின் இடைப்பட்ட பகுதி தான் பழங்கால நாகரிகம் வளர்ந்தோங்கிய பகுதி என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. அந்த நாகரிகம் இன்று எங்கே போனது? சின்னச்சின்ன ஆஃப்ரிக்க நாடுகளில் மனித உரிமை பாதிக்கப்பட்டால் உடனே குரலெழுப்பும் அமெரிக்க அறிவுஜீவிகள், சவுதி விஷயத்தில் அமைதி காப்பதன் காரணம் என்ன? சவுதியின் எண்ணை வளத்தை அமெரிக்கா நம்பியிருக்கும் வரை, இந்தியத் துணைக்கண்டத்து ஏழைகள் 20 லட்சம் பேர் தஙகள் வாழ்க்கையை சவுதியில் மேற்கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற கொடூரங்கள் இறைவனின் பெயரால் நடைபெறுவதை யாரும் தடுக்கப்போவதில்லை.

 3. Avatar
  Dr.A.Anburaj says:

  பாவம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பழக்கவழக்கங்களை இன்னும் விடாப்பிடியாக பிடித்து வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். அரேபிய வாகாபிசம் என்ற கொள்கையை உலககெங்கும் பரப்பி வருகின்றனர்.அரேபியர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கை உடையவர்கள். அரேபிய கிணற்றுத்தவளைகளாக வாழ்ந்து வருகினறனர்.உலகில் இஸ்லாம் மதம் என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கு சவுதி அரசோ அல்லது சவுதி மக்களில் ஒருசிலரோ உதவிக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *