வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்

வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
This entry is part 8 of 29 in the series 12 மே 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

seetha
(சில பிரச்சனைகளால் என் தொடரின் கடைசி அத்தியாயம் எழுதி அனுப்ப முடியவில்லை. அதற்காக என் வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறைப்பிரசவம் நல்லதல்ல. எனவே தொடரின் கடைசிப் பகுதி இப்பொழுது அனுப்புகின்றேன். இடைவெளி அதிகமாகிவிட்டதால் இதற்குத் தலைப்பு கொஞ்சம் மாற்றியிருக்கின்றேன். தலைப்பு “ வாழ்வியல் வரலாறு – கடைசிப் பக்கம் “ இதில் வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல கடமைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் சில உண்மைச் சம்பவங்களூடன் எழுதி இருக்கின்றேன். இதனைப் பிரசுரிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். இதுவரை எனக்கு உதவி செய்தவர் திரு ஜெயபாரதன் அவர்கள். இதுவும் அவர் மூலமாகவே அனுப்ப விழைகின்றேன்.

இனி என்னால் எங்கும் தொடர் எழுத முடியாது. நண்பர்களும் மருத்துவர்களூம் என்னை முடங்கக் கூடாது என்று சொல்கின்றர்கள். சொல்ல வேண்டிய செய்திகள் இன்னும் நிறைய இருப்பதாகவும் எனவே அந்தச் செய்திகளையாவது அவ்வப்பொழுது எழுத வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திரன் அறிவுரை கூறுகின்றார். எல்லாம் இறைவன் சித்தம்.

திண்ணை ஒரு அருமையன இதழ். பல வருடங்களாக சீரிய பணிகள் ஆற்றிவரும் ஓர் இதழ். எல்லாம்வல்ல இறைவன் அதனைக் காக்கட்டும். மேலும் மேலும் மேலும் வளரட்டும்..)

அன்புடன்

சீதாம்மா
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

வாழ்வியல் வரலாறு ஓர் நீண்ட பயணம். பல திசைகள்.! .எத்தனை சோதனைகள்! ஓர் இலக்கை நோக்கிச் சென்றேன். அந்த எல்லையை அடைந்தவுடன் நின்றிருக்க வேண்டும். ஆசை யாரைவிட்டது?! சமுதாயப் பந்தத்தில் மேலும் தொடர்ந்தேன். பல இடர்ப்பாடுகள். உதவியாய் இருந்த நண்பன் கணினி உயிரை விட்டது. என் இயக்கமும் தடைபட்டு நின்றது. வெளி நாட்டில் பயணம் முடித்து மகன் வரத் தாமதம். வந்தாலும் உதவிக்கு ஓர் மடிக் கணினி கொடுத்தான். கணினியில் எனக்கு எந்த அனுபவமும் கிடையாது. அவனுடைய நண்பர் ஒருவர் வந்து அழகியை கணினியில் அமர்த்தினார். பழக்கமில்லாதவள். அ, ஆ முதல் பயிற்சி. உடல்நிலை பாதிப்பு. நான் எழுதி வந்த தொடரில் கடைசி அத்தியாயம் முடிக்க முடியவில்லை. குறைப் பிரசவம் நான் விரும்பாதது. எப்படியும் முடிக்க விரும்பிக் கடைசிப் பக்கத்தை எழுத முயற்சி. தடங்கலுக்கு மனம் வருந்துகின்றது. எடுத்த கடமையை முடிக்க வேண்டும். இப்பொழுது இங்கு வந்து நிற்கின்றேன். பயணம் தொடர்கின்றது. இடைவெளி அதிகமானதால் கொஞ்சம் தலைப்பு பெயரை மட்டும் மாற்றினேன். சொல்ல நினைத்ததைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்க முயல்கின்றேன் இதனைத் தொடரின் கடைசி அத்தியாயம் என்று நினைத்தாலும் சரி. இனி என்னால் தொடர் எழுத முடியாது. மூளைக்கு வேலையின்றி படுத்துவிட்டால் உடல் அவயவங்களும் சுருண்டுவிடும் என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள். அதனால் ஏதோ எப்பொழுதாவது கிறுக்குவேன் வலைப் பூ, குழுமங்கள் இருக்கின்றன. காட்சிக் களன் பார்க்கலாம்.

முருகன் போட்ட பிச்சை அவள்

பிள்ளைப் பருவத்தில் அவள் முருகனின் பிச்சியானாள். அவள் பார்த்த சினிமா “மீரா” வின் தாக்கம். பூக்களால் அர்ச்சனை செய்து சூடம் ஏற்றி ஓர் சத்தியம் செய்தாள். இனி முருகன் தான் அவளுக்கு எல்லாம். முருகனும் ஒப்புக் கொண்டு உறுதியளித்தது போன்று ஓர் உணர்வு. முருகனுக்கும் அவளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம். பின்னர் தந்தச் சிலையாய் வந்தான். எப்பொழுதும் தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவள்தான் கற்பனை உலகில் சஞ்சரிப்பவளாயிற்றே. முருகனுடன் பேசுவாள், விளையாடுவாள். சண்டையும் போடுவாள். அதற்கும் சோதனை வந்தது.

சென்னையில் பயிற்சி பெறப் போன இடத்தில் ஓர் இல்லத்தில் மாடியறை அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இருப்பாள். ஒரு நாள் திடீரென்று ஓர் காகம் வந்து அவள் முருகனைக் கவ்விக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. ஓ என்று கத்திக் கொண்டு புத்தகத்தை வீசி எறிந்தாள். காகம் முருகனைக் கீழே போட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட ஓர் நிகழ்வு. சிலை விழுந்த இடம் குப்பைக் குவியல். மாடியில் விழும் இலைகள் முதற்கொண்டு கூட்டிப் பெருக்கிக் குவித்து வைத்திருந்தனர். அழுது கொண்டே தன் முருகனைத் தேடினாள். அவன் கிடைத்தான் ஆனால் வேல் இல்லை. முருகன் கிடைத்ததே மகிழ்ச்சி.

நடந்த நிகழ்ச்சி அவள் மனத்தில் ஓர் உறுத்தலை தோற்றுவித்துவிட்டது. சில மாதங்கள் கழித்து ஓர் கனவு கண்டாள். முருகன் அவளை விட்டுப் பிரிந்து செல்கின்றானாம். சத்தியம் அவ்வளவுதானா? அழுகை ஆரம்பித்துவிட்டது. கனவு கண்ட சிறிது காலத்திலேயே அவள் வாழ்க்கையில் ஓர் திருப்புமுனை கண்டாள். அவளால் மீள முடியவில்லை. இதைத்தான் கனவு அவளுக்கு அறிவுறுத்தியதா?

அவளுக்குத் திருமணம் நடந்தது. துறவியாக நினைத்தவளுக்கு இல்லற வாழ்க்கை. அவள் கணவர் நாகூரில் வேலை பார்த்து வந்தார். அவளும் அடிக்கடி நாகூர், வேளாங்கண்ணிக்கும் செல்வாள். பின்னர் அவருக்கு குன்னூருக்கு மாறுதலாயிற்று. இவளும் மாறுதல் கேட்டாள். ஆனால் அவளுக்குக் கோவைக்கு மாறுதல் கிடைத்தது. கோவைக்குச் செல்லும் பொழுது ஏழு மாத கர்ப்பம். இறைவனின் திருவிளையாடலுக்கு அவள் தப்பவில்லை எட்டு மாத கர்ப்ப காலத்தில் அவளுக்கு அம்மை போட்டது. சிக்கன் பாக்ஸ், பெரியம்மை முத்துக்கள். வயிற்றில் குழந்தை தங்காது அல்லது அப்படித் தங்கினாலும் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றார் டாக்டர். அவள் மனம் உடைந்து போனாள். ஊனமுற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு அவள் அதிகாரி. அந்தக் குழந்தைகள் படும் துயரை நேரில் கண்டவள். அப்படிப்பட்ட ஒரு குழந்தை பிறக்கக் கூடாது என்று நினைத்தாள். அம்மை வந்து போய்விட்டது. குழந்தை தங்கிவிட்டது. குழந்தையை மட்டும் கொல்ல மனம் வரவில்லை. தானும் உடன் மரிக்க விரும்பினாள் பிரசவ நாள் வரைக்கும் சாப்பிடாமல் இருந்து பிரசவ நேரத்தில் இயலாமையால் தாயும் சேயும் சாக வேண்டுமென்று நினைத்தாள். உண்ணா விரதம் ஆரம்பித்து விட்டாள். அவளுடைய தாயார் உடன் இருந்தார்கள். அவர்கள் கண்ணிர்கூட அவள் மன உறுதியை மாற்ற முடியவில்லை

அவள் வீட்டிற்கு அவளுடைய உறவினர் ஒருவர் வந்தார். அவருக்கு அவளைப் பிடிக்காது. குடும்பத்தில் அவளை ஓர் கள்ளிச் செடி என்று கூறியவர் அவர்தான். அவள் தாயார் மகளின் நிலையைக் கூறி அழுதார்கள். அவர் அவளை உற்றுப் பார்த்தார். உடனே அவர் சொன்னது :

“நீ சாக நினைத்தாலும் அது நடக்காது. நீ உனக்காகப் பிறக்கவில்லை.மற்றவர் கஷ்டங்களைப் போக்க, ஊர்ப்பணி செய்யப் பிறந்தவள். உனக்கு பிள்ளைக் குழந்தை பிறக்கும். ஊனம் கிடையாது என்பது மட்டுமல்ல நன்றாகப் படித்து ஓஹோ என்றிருப்பான். எதுவும் உன் கையில் இல்லை. உன்னை ஆட்டி வைப்பவன் அவன். சாப்பிடு.”

அவள் வேறு யாருமல்ல. நான் தான். என்னைப் பிடிக்காதவர் எப்படி வந்தார், ஏன் இப்படி சொன்னார் என்றெல்லாம் அதிக நேரம் சிந்திக்கவில்லை. அவர் குரலில் என் முருகனை உணர்ந்தேன். சாப்பிட ஆரம்பித்தாலும் மனம் சமாதானமடைய வில்லை. எங்கள் வீட்டிற்கெதிரே ஓர் மாரியம்மன் கோயில் இருந்தது. அங்கு சென்று என் குழந்தைக்காக வேண்டினேன். கடவுளுக்கு உருவம் கிடையாது. முதலில் முருகன் வடிவில் மனம் ஒன்றியது. இப்பொழுது மாரியம்மனையும் உடன் சேர்த்துக் கொண்டது. காஞ்சிக்குச் சென்ற காலத்தில் காமாட்சியும் சேர்ந்தாள். என் தாயாரால் கோயிலுக்குப் போக முடியவில்லை என்றாகவும் அவர்களுக்காக பிள்ளையாரையும் கும்பிட ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன் கதையால் தஞ்சை பிரகதீஸ்வர ஆலயம் சென்று அவர் சன்னிதியில் மெய்மறந்து நின்ற முதல் அவரையும் வணங்க ஆரம்பித்தேன். மனிதனுக்கு இசையில் பல ராகங்கள் பிடிக்கும். உணவில் பல சுவைகள் விரும்புவான். அவனுக்கு இஷ்ட தெய்வம் ஒன்றிருப்பினும் பல உருவங்களில் கடவுளைக் கண்டு மகிழ ஆரம்பித்தான். படைத்தவனுக்குப் பல உருவங்கள், பல பெயர்கள் கொடுத்து மனிதன் மகிழ்வது இயல்பானதே. அனுபவங்களால் படிப்பினைகள்.

பிரசவக் காட்சிக்குச் செல்வோம். டாக்டர் குறித்து கொடுத்த தேதி 12. இடுப்பு வலி வரவில்லை. என் பொறுப்பில் இருந்த திருமதி எஸ்தர் பிச்சை பார்க்க வந்தார்கள். மறுநாள் திரும்ப வருவதாகக் கூறிச் சென்றர்கள். சொன்னபடி அவர்கள் திரும்ப வரும் பொழுது வெறும் கையுடன் வரவில்லை. என் நன்மைக்காக, சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் வந்திருந்தார்கள் அவர்கள் கையில் ஓர் காலண்டர். சென்னிமலை முருகன். அதைப் பார்க்கவும் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். யாருக்கும் விளக்கம் கூறவில்லை. “திரும்ப வந்து விட்டாயா” என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். எனக்காக இந்துக் கோயிலுக்குச் சென்றவர் ஓர் கிறிஸ்தவப் பெண்மணி. என் இஷ்ட தெய்வம் பற்றி எல்லோருக்கும் தெரியும். என் வாய் எப்பொழுதும் “முருகா” என்று அடிக்கடி சொல்லும். மேடைக் கச்சேரி ஆரம்பிக்கையில் கூட முருகன் பாட்டுடன் தான் ஆரம்பிப்பேன். அந்தம்மாள் சென்ற அரை மணி நேரத்தில் எனக்கு இடுப்புவலி எடுத்தது. ஆஸ்பத்திரிக்குச் செல்லும் பொழுது அந்தக் காலண்டரை உடன் எடுத்துக் கொண்டேன். பிரசவ டேபிளுக்கு என்னை எடுத்துச் செல்லும் பொழுது கூட காலண்டரை உடன் வைத்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் எனக்குத் தெரிந்தவர்கள். குழந்தை பிறந்து விட்டது. டாக்டர் குழந்தையைப் பார்க்கச் சொல்லும் பொழுது முதலில் காலண்டரில் முருகனைக் காண விரும்பினேன்.. அவர்கள் அதனை எடுத்துக் காட்டினார்கள். அவனைப் பார்த்த பின்னர்தான் நான் பெற்ற பிள்ளையைப் பார்த்தேன்.. ஆண் குழந்தை. அம்மை நோயால் குழந்தை பாதிக்கப்பட வில்லை வீட்டிற்கு வந்த உறவினர் சொன்னவைகளில் ஒன்று பலித்து விட்டது.

எனக்கு ஊட்டிக்கு மாறுதல் கிடைத்தது. குழந்தைக்கு ஒரு வயதானவுடன் என்னுடைய கணவருக்கு வெளி நாட்டில் பணி கிடைத்து அவர் சென்று விட்டார். அவருடை ஆசை அவளுக்குத் தெரியும். அவளை நம்பி அவள் தாயும் மாமன் குடும்பமும் இருந்தது. எனவே வேலையைவிட முடிய வில்லை. என் கணவர் மிகவும் நல்லவர். கணவன் மனைவி என்ற பிணைப்பைவிட நல்ல நண்பர்கள் என்று கூறலாம். இருவருக்கிடையிலும் நல்ல புரிதல். என் குழந்தையை என் தாயார் பார்த்துக் கொண்டார்கள். கணவர் உலகம் சுற்றிக் கொண்டிருந்தார். நானோ இந்த நாட்டைச் சுற்ற ஆரம்பித்தேன். சமுதாயம் என்னை இறுகப் பற்றிக் கொண்டது.. பெரியவரின் அடுத்த கூற்றும் பலித்தது.

முருகனின் கதை முடியவில்லை. காஞ்சியில் இருக்கும் பொழுது அவன் சிலையை என் அறையில் வைத்திருந்தேன். ஒரு நாள் அவனைக் காண வில்லை. காகம் அங்கு வர முடியாது. தேடினேன் தேடினேன் அவன் கிடைக்க வில்லை. என்னால் எந்தப் பணியும் செய்ய முடியவில்லை. அழுது கொண்டிருந்தேன். ஒரு வாரம் கடந்த பின்னர் என் தாயார் அவனைக் கொண்டு வந்தார்கள். நாங்கள் முதலில் குடியிருந்தது ஓர் பழைய வீட்டில். வீட்டுக்குள் ஊர் மூலையில் எலிப்பொந்து இருந்தது. எலி தோண்டிப் போட்ட மண் குவியல் கிடந்தது. என் தாயார் அந்த மண்ணை அள்ளும் பொழுது முருகன் தென்பட்டிருக்கின்றான். உடனே எடுத்து வந்து கொடுத்தார்கள். அவனைப் பார்க்கவும் கையில் வாங்கி முதலில் முத்த மழையால் நனைத்தேன். பிறகுதான் அவனை உற்றுப் பார்த்தேன். தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டத்தில் சிறிது கடித்திருந்திருக்கின்றது. முருகனின் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த சிறு ஊனத்தை அவன் யாருக்காக ஏற்படுத்திக் கொண்டான்? தெரியாது. கோயில்களில் உபன்யாசம் செய்ததற்குக் கிடைத்த பணத்தை ஆண்டவனுக்குச் செல்வழிக்கச் சேர்த்து வைத்திருந்தேன். அந்தப் பணத்திலிருந்து என் முருகனுக்கு ஓர் தங்க வேல் செய்து பொருத்தினேன். தந்த வேலன் இப்பொழுது தங்க வேலனானான். அதன் பின்னர் முருகனை ஓர் கண்ணடி பாட்டிலில் வைத்துக் கொண்டேன். வெளியூர் சென்றாலும் எடுத்துச் செல்வேன். என்னுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உடன் இருக்கின்றான். இது கதையல்ல எல்லாம் நிஜம். சத்திய வாக்கு. அகத்தில் முருகனைச் சுமந்து கொண்டு புறத்தில் துன்பபடுகின்ற வர்களைச் சுற்றி வந்தேன். என்னுடைய வாழ்க்கைப் பயணம் நந்தவனத்தில் இல்லை. பல கொடிய விலங்குகளும் இருந்த கானகத்தில் அமைந்தது. என்னைக் காத்து நின்றது என் முருகன்தான். என் உறவினர் கூறியது போல் என்னை இயக்கியவர் என் முருகன்தான்.

இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கத்தான் செய்கின்றது. நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை. கஷ்டம் வரும் பொழுது “கடவுளுக்கு இரக்கம் இல்லையா?” என்று கேட்கின்றோம். வாழ்க்கையில் கடந்து சென்ற சில நல்ல நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். அதிலும் திணறடித்த சில சோதனைகளிலிருந்து மீண்டு வந்த நிகழ்வுகளை எண்ணிப் பாருங்கள். அங்கே கடவுள் ஏதோ வடிவில் வந்து உதவியிருப்பார். நல்லது நடக்கும் பொழுது நாம் அவரை ஆத்ம பூர்வமாக நினைத்துப் பார்ப்ப தில்லை பிரபஞ்ச சக்தி உருவாக்கியதுதான் எல்லாம். படைத்ததுடன் நிற்கவில்லை. அவ்வப்பொழுது சிலர் மூலமாக நம்மைக் காப்பாற்ற முயல்கின்றார். அவர்களை ஞானிகள் என்று சொன்னாலும் சரி, இறைத் தூதர்கள் என்று அழைத்தாலும் சரி, தெய்வக் குரலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேடல் முயற்சியில் தெரிந்து கொண்டால்மட்டும் போதாது. தெளிவுடன் புரிந்து கொள்ளும்வரை தேடல் தொடர வேண்டும். என் ஆன்மீக வினாக் களுக்குக் காஞ்சியில் இருக்கும் பொழுது விளக்கங்கள் கிடைத்தன. என் வீட்டருகில் ஓர் உபநிஷத மடம். அங்கு ஓர் பெரியவர் இருந்தார். அந்த மடத்தில் கூட்டமும் இருக்காது. அங்கு அடிக்கடி சென்று அவருடன் பேசுவேன். தெளிவு பிறந்தது பல ஆன்மீகப் பெரியவர்களின் தொடர்புகள் – பல புத்தகங்கள் படித்தல் – எடுத்துக் கொண்ட பயிற்சிகளும் பல. யோகாப் பயிற்சி தந்து குண்டனி எழுப்பியவர் பரஞ்சோதி அடிகளார். வேதாத்ரி மகரிஷியின் குருநாதர். ரேய்கி பயிற்சி, ப்ராணிக் ஹீலிங் பயிற்சியும் முறைப்படி பெற்றவள். என்னால் தியான நிலையில் முழுமையாக இருக்க முடியவில்லை. தொடர்ந்து சில மணி நேரங்களாவது ஒதுக்கியிருக்க வேண்டும். ஒவ்வொருவர் ஆழ்மனத்திலும் சக்தி அமர்ந்திருக்கின்றது. அதனை உயிர்ப்பிக்க நாம் முயல வேண்டும். தெரிந்தவர்களுக்குக் கூட முடியவில்லையே, ஏன்? சிலருக்கு சம்சார பந்தம். எனக்கு சமுதாய பந்தம். எல்லையில் இருப்பதால் சுருக்கமாக எழுத வேண்டிய நிலை. கவனமாக, ஆழ்ந்து மனத்தைச் செலுத்திப் படிக்க வேண்டிக் கொள்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

நம்மைப்பற்றி சிந்திப்போமா? நமக்குச் செய்திகள் படிக்கும் ஆர்வம் உண்டு. அதில் வரும் செய்திகள் நம்மை உணர்ச்சிப் பட வைக்கின்றன. ஆத்திரத்தை அதிகமாக்குகின்றது. தரம் கெட்டவர்களின் விளையாடல்களும், சுயநலத்தின் பேயாட்டங்களும் நம்மிடையே கோபத்தையும் வெறுப்பையும் அதிகமாக்கி, எண்ணத்திலும், எழுத்திலும் பேச்சிலும் கசப்பை தோற்றுவித்து நாம் அவற்றை ஏதாவது ஒருவித்தில் வெளிப்படுத்துகின்றோம். அவைகள் நச்சு விதைகளாகி நம் ஆத்ம சக்தியின் மேல் அர்ச்சனைப் பூக்களாக விழுகின்றன. அன்பைப் பாலாக ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டியவர்கள் சாக்கடைத் தண்ணீரால் அந்த சக்தியைக் குளிப்பாட்டுகின்றோம். அந்த சக்தி எப்படி இயங்கும்? வீட்டில் மின்சார விளக்கு வேண்டுமென்றால் ஸ்விட்ச் போட வேண்டும். அதற்கும் மின்சாரம் வேண்டும். அந்த மின்சாரமும் உற்பத்தியாக வேண்டும். இல்லையென்றால் இருள்தானே!. ஆத்ம சக்தி அடங்கி இருப்பதும் நம்முடைய வேண்டாத பல செய்கைகளால்தான் .ஒவ்வொருவர் ஆழ் மனத்திலும் சக்தி இருக்கின்றது.

கண்ணப்பநாயனார் ஓர் வேடன். லிங்கத்தை அவர் கல்லாகப் பார்க்கவில்லை. அவர் கொண்ட உறவை விளக்க வார்த்தைகள் கிடையாது. லிங்கத்தில் வடியும் இரத்தம் காணவும் துடித்துப் போய் தன்னுடைய ஒவ்வொரு கண்ணையும் கொடுத்துக் கடவுளின் கண்களைக் காப்பாற்ற துடித்தார். சிவனை உயிரினும் மேலான ஒன்றாக உணர்ந்தார். இந்த ஒன்றிய சக்தியை நினைத்துப் பார்க்கவும்.

அடுத்து அனுமனை நினைத்துப் பார்க்கலாம். ராமனுடன் அவர் ஐக்கியமாகி மோட்சம் போவதைவிட ஸ்ரீராமனை தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டு அவர் புகழ்பாடி அலைவதை விரும்பினார். அவர்கள் அளவு பக்தியில் மூழ்க நம்மால் முடியாது. ஓரளவாவது பக்தியின் சக்தியைப் புரிந்து கொண்டு நம் மனச்சிமிழில் அந்த மாபெரும் சக்திக்கு இடமளித்தால் நம் மனநிலையில் அமைதியையும் ஆனந்தமும் காணலாமே! புராணங்கள் கதையாக இருக்கலாம். அதன் உட்பொருளை உணர்ந்தால் அமைதி தேடி அலைய வேண்டியதில்லையே!

உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் நம் சக்தியை இழப்பதற்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். புராணத்தில் இரு முனிவர்கள். வசிஷ்டர் ஒருவர் இந்னொருவர் விஸ்வாமித்திரர். வசிஷ்டர் ஓர் ப்ரம்ம ரிஷி. அமைதியனவர். விஸ்வாமித்திரர் ஓர் கோபக்காரர். அவர் முன் கோபத்தால் யாரையாவது சாபமிட்டு விடுவார். உணர்ச்சி வயப்பட்டதால் அவர் சக்தி குறைந்துவிடும். மீண்டும் தவம் செய்யப் போவார். வசிஷ்டரைப் போல் ஆக வேண்டும் என்று விரும்பி தவமிருந்தவர். அமைதிக்கு வலிமை அதிகம். உணர்ச்சிக்கு அதிக இடமளிப்பது இழப்பை ஏற்படுத்தும். புராணங்கள் கதைகளாகத் தெரிந்தாலும் அங்கே புதைந்திருக்கும் தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அர்த்த முள்ள வாழ்க்கைக்கு அங்கே படிப்பினைகள் காணலாம்.. திருவள்ளுவரைப் புகழ்கின்றோம். அறத்துப்பால், பொருட்பாலை விட்டுக் காமத்துப்பால் மட்டும் சுவைத்தால் சரியாகுமா?

“கண்ணுக்குத் தெரியாத ஒன்று, கூப்பிட்ட குரலுக்குப் பதில் கொடுக்காத ஒன்று, அதனை இருக்கின்றது என்று எப்படி சொல்ல முடியும். அப்படிப்பட்ட “ஒன்று” இல்லை” இது பல மனிதர்களின் கூற்று. காணும் சக்தி நம்மிடம் இல்லை. குரலை உணரும் திறனும் நம்மிடம் இல்லை. விலை உயர்ந்த பொருள் ஒன்று அங்கிருக்கின்றது என்றால் அது கிடைக்கும் வரை தேடுவோம். அது இருக்காது என்று ஓடமாட்டோம். ஒரு பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பைக் கூட உன்னைப் படைத்த சக்திக்குக் கொடுக்காமல் புலம்புவது யார் குற்றம்? ஒவ்வொருவரும் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. சந்திரமண்டலத்துக்குப் புறப்படும் முன்னர் சர்ச்சுக்குப் போகின்றான். நாமோ ”பகுத்தறிவு” என்று கூறிக் கொண்டு சக்தியைக் கல் என்று சொல்லிவிட்டு, நம்மை மயக்கும் சக்திகளுக்கு மாலை சூட்டி மகிழ்கின்றோம். நமது பகுத்தறிவு பாசம் பிடித்து ஒளி மங்கிக் கிடக்கின்றது. மூடப் பழக்கங்களுக்கு எப்பொழுதும் நான் வக்காலத்து வாங்க மாட்டேன். அர்த்தமுள்ளவைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். அசட்டை செய்ய மாட்டேன். இன்றைய பிரச்சனைகளுக்கு ஒவ்வொருவரும் பொறுப்பான வர்கள். பின்னால் ஓடுவதும் தவறு. ஒதுங்கி நிற்பதும் சரியல்ல. ஒவ்வொருவரும் முடிந்தளவு கடமையைச் செய்தல் வேண்டும்.

ஒரு சம்பவம் பார்க்கலாம். எனக்குத் தெரிந்த ஓர் கன்னியாஸ்த்ரீ. அவர்கள் முகத்தில் மட்டுமல்ல குரலிலும் கூட அமைதியை உணரலாம். அவர்களுக்குப் புற்று நோய் வந்தது. எட்டு மாதத்தில் இறந்துவிடுவார்கள் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அவர்கள் தான் இருக்கும் மடத்தை விட்டு வேளாங்கண்ணிக்குப் போக முடிவு செய்துவிட்டார்கள். மடத்தில் இருந்தால் செய்து வந்த பணிகளைத் தொடரந்து செய்ய வேண்டும். அவர்களைக் காணச் சென்றேன். என்னுடன் வந்த ஊர் பணியாளரின் கேள்விக்கு அவர்கள் கொடுத்த பதில் அற்புதமானது. “சேவைப் பணியை விட்டு கர்த்தரையே நினைத்துப் பிரார்த்தனை செய்தால் சொர்க்கம் போகலாம்” என்று என் சக ஊழியரின் கூற்றுக்கு அவர்கள் கொடுத்த விடையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“கர்த்தரிடம் எந்த வேண்டுகோளையும் வைக்கப் போகவில்லை. அவரின் நினைவுகள் மட்டும் போதும். எந்தக் கவனச் சிதறல்களும் கூடாது.”

“தனைமறந்தாள், தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்ற நாவுக்கரசரின் பாடலின் பொருளும் அதுவேதான். இறைவன் நினைவிலே சங்கமமாக வேண்டும்.. அந்த துறவிப் பெண்மணி தன் கர்த்தரைத் தேடிச் சென்றார். ஒரு வருடம் பறந்தோடியது. ஆனால் மரணம் வரவில்லை. அதுமட்டுமல்ல உடல் நிலை சரியாகி மீண்டும் மடத்திற்கு வந்து சேவைப் பணி தொடங்கிவிட்டார் .இந்தத்தகவலை நான் அறிந்த பொழுது வியப்பு ஏற்படவில்லை. அவர்களின் தவ வலிமையில் ஆழ்மன சக்தி இயங்கி உடல்முழுவதும் அலைகள் பரவ, தங்கியிருந்த நோய்க் கிருமிகள் மரித்துப் போயின. இது கதையல்ல நிஜம்.

நம் சித்தர்களை எண்ணிப் பாருங்கள். விமானமின்றி அவர்களால் பழனியிலிருந்து சீன நாட்டிற்குப் போக முடியும். அவர்கள் எண்ணங்கள் நினைத்த இடத்திற்குப் போய்த் திரும்ப முடியும். பார்வையின் சக்திகளால் மனிதர்களை இயக்கமுடியும் என்பதுடன் நோய்களையும் விரட்ட முடியும். மூச்சடக்கி மண்ணுக்குள் புதைந்தால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் வெளியில் உயிருடன் வர முடியும். பல நூற்றுக்கணக்கன வருடங்கள் வாழ முடியும். இன்றைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு கொஞ்சம்தானே. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் இவர்களின் வாழ்க்கையை அலசிப்பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து நல்லவைகளைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதுதான் இன்றைய தேவை. நமக்கு அமைதி வேண்டாமா?

புராணங்களை ஒருகாலத்தில் கேலி பேசியவள்தான் நானும். பல நல்ல புத்தகங்கள், பல பெரியவர்களின் சந்திப்பால் தெளிவு பெற்றேன். பாரதத்தில் ஒர் காட்சியைப் பார்ப்போம். சகாதேவனிடம் கிருஷ்ணன் ஓர் கேள்வி கேட்கின்றார். “பாரதப் போரை நிறுத்த என்ன செய்யலாம்?” என்பதுதான் கேள்வி. சிறிதும் தயங்காமல் சகாதேவன் பதில் கூறுகின்றான் : “திரொளபதியின் கூந்தலை மழிக்க வேண்டும், அடுத்து கண்ணனைக் கட்டிப் போட வேண்டும்” என்கின்றான்: “என்னைக் கட்டிப் போடுவது சுலபமா?” என்று கண்ணன் சிரித்துக் கொண்டே கேட்கின்றார். அதுதான் எளிதென்று கூறிவிட்டு கண்ணனை உடனே அவன் கட்டிப் போடுகின்றான். ஆம் அன்பு வலைக்குள் ஆண்டவன் கட்டுப்பட்டாக வேண்டும். கோயில்களுக்குச் செல்கின்றோம். பொங்கல் வைக்கின்றோம். பரிகாரங்கள் செய்கின்றோம். “போதாதா” என நினைக்கலாம். ஆண்டவனுக்கு வேண்டியது தன்னலமற்ற அன்பு. நம் சுற்றுலாக்களும் கொண்டாட்டங்களும் அல்ல. பக்தியை நாம் வியாபாரமாக்கி விட்டோம். பல இடங்களில் அரசியலும் ஆய்விட்டது. ஆண்டவன் கல் இல்லை. நாம்தான் கல்லாக்கி விட்டோம். இறைவன் மீது கோப்படுவதை விடுத்து நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல்வோம். அமைதி கிடைக்கும்.

அடுத்தும் ஓர் எடுத்துக் காட்டு. என் நண்பர்கள் வட்டம் மிக மிகப் பெரிது. என் தோழிகளில் ஒருவர். அவர்கள் குடும்பம் கோயில்களைக் கட்டிய குடும்பம். அந்தத் தோழியின் மகளுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் தரிக்கவில்லை. மருத்துவம் பார்த்தார்கள். அவர்கள் நியூஸிலாண்ட் நாட்டில் இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை கிடைத்து அங்கு சென்றார்கள் ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கு சென்ற ஒரு வருடத்தில் அந்தப் பெண் கர்ப்பவதியாகி ஓர் ஆண் மகவுக்கும் தாயானாள். குடும்பத்தில் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி . என் தோழி என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அவர்கள் பிறந்து வளர்ந்தது முதல் ஓர் நம்பிக்கையில் இருப்பவர்கள். எனவே எண்ணத்தில் ஓர் தள்ளாட்டம். என்னிடம் எதையும் மறைக்காமல் கேட்டார்கள். இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்திருக்கும்? விருப்பு வெறுப்பின்றி, தெளிவான சிந்தனையுள்ளவர் களுக்குப் பதில் எளிது.

ஒவ்வொரு வருடமும் ஹஜ் பயணத்தில் உலகத்தில் பல இடங்களிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து ஓரிடத்தில் செய்யும் கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி வெளிப்பட்டு இயற்கையுடன் ஒன்று கலக்கும் இடம் அது. இதைச் சொல்லும் பொழுது உங்களையும் சிந்திக்க வேண்டுகின்றேன். வானொலியில் வெட்ட வெளியில் பரப்பும் ஒலியலைகளை நாம் வானொலி பெட்டியில் கேட்கின்றோம். தொலைக் காட்சிப் பெட்டியிலும் பல சானல்கள் பார்க்கின்றோம். நாம் பேசுவது, நாம் எண்ணுவது, எதுவும் மரணிப்பதில்லை. வெட்டவெளியில் அவைகளும் இருக்கின்றன. ஒருவர் எண்ணங்களுக்கே சக்தி யென்றால் லட்சக் கணக்கானவர்கள் கூடி தங்களை மறந்து “அல்லா” ஒருவரையே நினைத்துத் தொழுகை செய்வது மாபெரும் சக்தியை உருவாக்கக் கூடியது. இறை சக்தியை மதச் சட்டங்களுக்குள் போட்டுப் பார்த்து மதி மயங்குகின்றோம். பிரபஞ்ச சக்தி ஒன்றுதான. பல பெயர்கள் இருந்தாலும் அந்த சக்தி ஒன்றுதான். ஒருமித்த உணர்வுகளால் சக்தி பிறக்கின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு எம். ஜி. ஆர் அவர்கள் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது எல்லா மதத்தினரும் பிரார்த்தனை செய்தார்கள். காசு கொடுத்தோ அல்லது அரசியல் நிர்ப்பந்தமோ இல்லை. ஒவ்வொருவரும் விரும்பி செய்த பிரார்த்தனை. நாம் சொந்தக் கோரிக்கையுடன் கடவுளை அணுகுகின்றோம். அவரை அவருக்காக நினைக்க வேண்டும். ஆழ்மன சக்தி உயிர்ப்பிக்கப்படும்.

கடைசிப்பக்கம் எல்லைக்கருகில் வந்துவிட்டேன். எனவே அதிக விளக்கங்கள் எழுதப்போவதில்லை. சொல்ல நினைப்பதைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்க விழைகின்றேன்.

எங்கும் பிரச்சனைகள் ! எதிலும் குழப்பங்க்கள். மனம் ஒரு நிலை கொள்ளாது அலைபாய்கின்றது. அதனால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. பொறுமை பறக்கின்றது. இதனால் இல்லத்தில் இனிமை போய்விட்டது. இனி மீள முடியுமா? எப்படி?தன்னம்பிக்கையிலும் தள்ளாட்டம் ! மனச் சுமை குறைய,, வாழும் நாட்களில் ஓரளவாவது சீருடன் வாழ சில எளிய வழிகள் சொல்கின்றேன். சொல்வது மட்டும்தான். செயலில் இறங்க வேண்டியது. நீங்கள்தான்.

குழந்தையைப் பார்க்கவும். முதலில் குப்புறவிழும் பொழுது முகத்தில் அடிபடும். அழும். ஆனால் மீண்டும் மீண்டும் குப்புறவிழும். தவழ ஆரம்பிக்கும் முன்னர். அது. நடக்க ஆரம்பிக்கும் பொழுதும் தள்ளாடி தள்ளாடி நடக்கும் விழும் அழும். பின்னரும் நடக்கும். யாரும் சொல்லிக் கொடுத்து அது செய்ய வில்லை. ஓர் உந்துதல். முயற்சி தொடர்ந்து செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்.

தாவிக் குதிக்கும் மனக் குரங்கை அடக்கும் முன்னர் உட்கார ஓர் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.. வசதிக்கேற்ப அமைக்கவும். மரம்செடி கொடிகள் இருக்கும் பகுதி, அதாவது பச்சை நிறக் காட்சிகள் உள்ள பகுதி மேன்மை யானது. நாம் சாதாரணமானவர்கள். வீட்டுக்குள்ளேயே ஓர் இடம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தினமும் அதே இடத்தில் பயிற்சியைத் தொடர்ந்து செய்வது முக்கியம். அங்கே சில காட்சிப் பொருட்கள் வைத்துக் கொள்ளவும். நல்ல சிந்தனைகளைத் தூண்டும் புத்தகங்கள், ஆரோக்கியமான, மகிழ்வான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் சில பொருட்கள் இருக்கட்டும்.

உட்கார்ந்தவுடன் முதலில் உடலைத் தளர்த்தவும், ரிலாக்ஸ் என்று சொல்லிச் செய்யவும். உட்கார்ந்தவுடன் மனக் குதிரை பறக்க ஆரம்பிக்கும். அதனை அடக்க வேண்டாம் ஆனால் முன்னால் வைத்திருக்கும் காட்சிப் பொருட்களைப் பார்த்து புத்தகங்களில் படித்த செய்திகளை நினைத்துப் பார்க்க முயலவும். மற்ற காட்சிப் பொருட்களையும் பார்த்து மகிழ்வான சம்பவங் களை நினைத்துப் பார்க்கவும். ஒருபக்கம் மனக்குதிரையின் ஓட்டம். இன்னொரு பக்கம் பசுமையான நினைவுகள். ஒரு உதாரணம் கூறுகின்றேன். வேகமாகக் கார் ஓட்டுபவர்களுக்காக வேகத்தை மட்டுப் படுத்த தெருக்களில் சில மேடுகள் அமைத்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம். சுற்றி இருக்கும் காட்சிப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனக் குதிரையை வழிப்படுத்தும். தொடர் முயற்சி தேவை.

அடுத்து மூச்சு விடுவதைப் பார்க்கவும். மூச்சு விடும்பொழுது காற்று உள்ளே செல்வதும் பின்னர் வெளியே வருவதும் அதற்கேற்ப வயிறும் மேலெழுவதும் கீழிறங்கவும் செய்யும். அச்செயல்களைப் பார்க்கவும். ஏற்கனவே மனத்தை ஒரு நிலைப் படுத்தும் பயிற்சியும் தொடங்கிவிட்டதால் இந்தப் பழக்கத்திலும் சில நாட்களில் ஒன்றிவிடுவோம். மூச்சுப் பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும். இரத்த அழுத்தமும் குறையும். இரு கைகளிலும் பத்து விரல்கள் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும் பொழுதெல்லாம் சில முத்திரைகள் செய்யலாம். நமக்குள் இருக்கும் பல வியாதிகளின் கடுமை குறையும். இவற்றுக் கெல்லாம் சில நிமிடங்கள் போதும். முழு மனத்துடன் முயற்சி செய்வது, அதிலும் தொடர்ந்து செய்வது முக்கியம்.

ஆழ்மன சக்தி, தியானம் பற்றி பல புத்தகங்கள் இருக்கின்றன. கணினியை வலம் வந்தாலும் கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் கிடைக்கின்றன. நான் வழக்கமாக ஒரு வலைப் பக்கம் போவேன். எளிய முறையில் ஆழ்மன சக்தி, வாழும் கலை, முத்திரைகள் , அறிவியல் கலந்த ஆன்மீகச் சிந்தனைகளைப் பார்க்கலாம்.

WWW.ENGANESHAN.BLOGSPOT.COM.

என் கணேசனின் படைப்புகள் விகடன் முதல் பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. இப்பொழுதும் கூட தினத்தந்தியில் ஒவ்வொரு செவ்வாயன்றும் அறிவியலும் ஆன்மீகமும் என்ற தொடர் எழுதி வருகின்றார். இவர் ஒரு நாவல் ஆசிரியரும் கூட. இவர் எழுதிய அமானுஷயன் மூலம் பலரைக் கவர்ந்து விட்டார். ஓர் துப்பறியும் தொடரில் மனோசக்தியின் வலிமையைத் தொடர்ந்து காட்டி, சாதனை புரியும் நாயகனை எல்லோரும் வியக்குமளவு படைத்திருக்கின்றார். எந்தசூழலிலும் நிதானம் தவறாமல், சக்தியை வீணாக்காமல் இருந்தால் ஒருவனுடைய சக்தியால் பல சாதனைகள் செய்யமுடியும் என்பதைக் காட்டுகின்றார். இப்பொழுதும் அவர் வலைப் பூவில் சித்தர்களின் சக்தியைக் காட்ட ஓர் தொடர் வருகின்றது.. அதுவும் துப்பறியும் திகில் தொடர்தான் அதற்குள் காட்டும் ஆன்மீகச் சிந்தனைகள் பிரமிக்க வைக்கின்றது. படித்துப் பார்த்து பலனடையவும். வாரத்தில் ஒரு நாள் இவருடன் தவறாது பேசுவேன். இவருக்கு சோதிடமும் தெரியும். தன் திறமைகளை இவர் வியாபாரச் சந்தையில் கடை வைத்து தொழில் நடத்தவில்லை.

அடுத்து ஒரு நண்பர். சிறூவயது முதல் ஆன்மீகப் பாதையில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வருபவர். இவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றார். வேதாத்ரி மகரிஷியுடன் நேரில் பழகி பயிற்சி பெற்றவர். இப்பொழுது உலகில் நடமாடும் பல தியான முறைகளையும் அறிந்தவர். இவருடன் தினமும் சில நிமிடங்களாவது பேசுவேன். உடனுக்குடன் சில வழிகள் கூறுவார். அவைகளைச் செய்து பலன்பெற்றவள் நான். அவருடைய மெயில் ஐடி தருகின்றேன். உங்கள் பிரச்சனைகளை எழுதிச் சுமை குறைய வழி கேளுங்கள். வேலை கிடைக்கவில்லை, பணம் அதிகம் சம்பதிக்க வேண்டும் போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்

rishiraveendran@gmail.com

என் வீட்டிற்கெதிரில் புத்தமதத்தைச் சேர்ந்த ஒர் குடும்பம் இருகின்றது. அவர்கள் எனக்கு ஓர் புத்தகம் கொடுத்தார்கள். அந்த ஆசிரியர் பெயரைத் தருகின்றேன். தேடலில் அவர் பெயரைப் போட்டால் நாம் சீரான பாதையில் நடக்க பல செய்திகள் காணலாம்.” THICH NHAT HANH “. நம் மண்ணில் வாழ்ந்த ஞானிகளை -நினைத்துப் பாருங்கள். சுவாமி விவேகானந்தரின் ஞான முழக்கத்தை மனம் செலுத்திப் படிக்கவும் .என்னிடம் பலருடைய ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகங்கள் இருக்கின்றன. மனம் குதிக்கும் பொழுது அவைகளைப் படிப்பேன். யாரையும் துறவியாகச் சொல்லவில்லை. இல்லறம் அமைதியாக நடக்கத்தான் இத்தனையும் கூறுகின்றேன். எப்பொழுதும் விழிப்பு நிலையில் இருக்கப் பழகிக் கொள்ளவும்.

முதலில் நம்மைச் சீராக்கிக் கொண்ட பின்னர் உங்கள் ஆழ்மன சக்தியால் உங்கள் மனைவியை உங்கள் வழிக்கு ஈர்க்கலாம். உங்கள் பாதையில் இசைந்து பயணம் செய்வார்கள்.தாம்பத்தியமும் அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளிடம் கவனம் செலுத்துங்கள். தினமும் இரவில் ஒன்றாக உட்கார்ந்து உணவுண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். உணவருந்திய பின்னர் சேர்ந்து அமர்ந்து அன்று பள்ளிகளில், கல்லூரிகளில் நடந்தவைகளைக் கேளுங்கள். பெற்றோர்கள் என்ற அதிகாரத்தில் பழகாதீர்கள் நண்பர்களைப் போல் பழகுங்கள். புத்திமதிகள் யாருக்கும் பிடிக்காது. சொல்ல வேண்டிய வைகளை கதை வடிவிலோ, சம்பவங்களைப் போலவோ சுவைபடக் கூறுங்கள். அவர்கள் எளிதில் புரிந்து கொளவதுமட்டுமல்ல, அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் குழந்தைகள். அவர்கள் வருங்காலத்தில் பெருமைபட, அமைதியுடன் வாழ உங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். அலங்காரப் பொருட்கள் போன்ற பரிசுகளைவிட எதிர்காலத்திற்கு தேவையான, சரியான பாதையைக் காட்டுங்கள். தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் அமைதியும் தானே வந்து சேரும்.

சிறிது சிறிதாக நுண் அலைகள் வலிமை பெற்று வீட்டிலே பரவும். அங்கு வரும் உறவுகளும் மற்றவர்களூம் நல்ல அலைகளின் சூழலில் பண்படுவார்கள். பழகும் பொழுது பாசிட்டிவ் எண்ணங்களுடன் பழகவும். பின்னர் உங்கள் எல்லையை விரிவாக்கலாம். அண்டை அயலார், அலுவலகத்தில் பழகுகின்றவர்கள் இவர்களிடமும் உங்கள் மனோ சக்தியால் நல்ல விதைகளாய் விதைக்கவும். எல்லாவற்றிற்கும் முதலில் உங்களைப் பண்படுத்திக் கொள்ளவும் .ஒன்றிலிருந்து பல தொடரும்.

நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.

எண்ணங்களுக்கு சக்தி அதிகம். பல மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் சூரியனின் ஒளியை ஒரு காகிதத்தில் லென்ஸ் மூலம் அணுகும் பொழுது எப்படி நெருப்பு வருகின்றது? ஆன்மீகமும் அறிவியல் தொடர்பு கொண்டதுதான். எண்ணங்களுக்கு இருக்கும் வலுவைக் காட்டத்தான் பல உண்மைச் சம்பவங்கள் கூறப்பட்டன. கவனச் சிதறல்கள் வேண்டாம். அமைதியான வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள்.

அரசியல் ஆர்ப்பாட்டங்கள் வெறுப்பைக் கொடுக்கும். தேர்தல்நேரத்தில் உங்கள் வெறுப்பைக் காட்டலாம். உங்களுக்குத் தெரிந்நவர்களிடமும் கூறலாம். மற்ற நேரங்களில் புலம்பி மனத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சினிமா பார்க்கலாம். ஆனால் சினிமா பைத்தியமாகக் கூடாது. எப்பொழுதும் விழிப்பு நிலையில் இருக்கப் பயில வேண்டும். பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். மாணவர்களாக இருக்கும் பொழுது அரசியல் கைப் பாவைகளாக மாறுவதைச் சாமர்த்தியமாகத் தவிர்க்க முயல வேண்டும். கல்வி கற்றபின் இந்த உலகமே அவர்கள் கையில். அவர்கள் வளமான எதிர்காலத்தை உறுதியாக்க அப்பொழுது முயலலாம். பெற்றவர்களின் முதல் கடமை அவர்கள் பிள்ளைகளை சரியான பாதையில் செல்ல கவனத்துடன் பயிற்றுவிக்க வேண்டும்.

பணிசெய்தவர்கள் ஓய்வு பெற்றபின் ஓய்ந்து உட்கார வேண்டாம் என் தங்கை சரசா செய்ததைக் கூறுகின்றேன். அரசுப் பணியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றாள். பின்னர் தினமும் மாலையில் கோயிலுக்குச் செல்வாள். அங்கே உட்கார்ந்துவிடுவாள். முதலில் மெதுவாகப் பாட ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக கோயிலுக்கு வருகின்றவர்கள் பிரார்த்தனை முடியவும் இவளருகில் வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். வீட்டுப் பிரச்சனைகள் கூறும் பொழுது கவுன்ஸ்லிங்க் செய்தாள். கோயிலில் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வைத்தாள். அவளால் முடிந்த சமுதாய நலப் பணியை ஆண்டவன் சன்னிதியில் செய்தாள். ஒரு காலத்தில் தமிழகம் தென் பகுதியில் கிராமங்களுக்குச் சென்று உபன்யாசம் செய்தவள். அங்கு அவள் பெயர் மணிமகள் பாரதி. பக்தி இலக்கியப் பாடல்கள் மனப்பாடம்.

வயதானவர்கள் ஒதுங்கி இருப்பதைவிட தங்களால் முடிந்த நற்பணிகளைச் செய்யலாம். அவர்கள் வசிக்கும் பகுதியில் அருகில் இருக்கும் சில தெருக்களில் உள்ளவர்களையாவது நற்பாதையில் திருப்ப முயற்சி செய்யலாம். இன்று இளைஞர்களுக்குச் சரியான வழிகாட்டிகள் இல்லை. அவர்களைக் கவர்ந்திழுக்கும் மாய வலைகள் நிறைய உண்டாகிவிட்டன. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கலாம். படிப்பில் பின் தங்கி இருப்பவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மனிதனின் அதிகாரப் பிடியில் அடிமட்டம் வீழ்த்தப்பட்டு அல்லல்படும் தலித் மக்களுக்கு அவர்கள் நிலை உயர ஆவன செய்யலாம். கோயில்கள், சர்ச்சுகள், மசூதிதிகள் இவைகள் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்தலாம். மனிதனைத் துன்பத்திலிருந்து மீட்டெடுக்க ஞானிகள் தோன்றினர். மதங்கள் அன்பை வளர்க்க வேஎண்டும். பிரிவினைகள் என்ற பெயரில் மனிதன் வதைபடக் கூடாது. அன்பே கடவுள்

அரசுக்கு கடமைகள் அதிகம். முதலில் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். இந்தியக் கல்வி முறையை காப்பி அண்ட் பேஸ்ட் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அறிவிலும் ஆற்றலிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல. பள்ளிகளில் யோகா வகுப்பு, நற்சிந்தனைகளை வளர்க்கும் வகுப்புகள் சேர்க்கப்பட வேண்டும். விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். இளைஞர்கள் சக்தி பல வகையிலும் வீணாக்கப்படுகின்றது. ஒரு நாட்டின் மூலதனமே இவர்கள் தான். இவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் கெட்ட சக்திகளை வளரவிடக் கூடாது. பிரிவினைகள் எண்ணம் பேச்சில் கூட வரக் கூடாது

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.

ஆழ்மன சக்திபற்றி கூறூம் பொழுது சிலர் பெயர்களைக் கூறினேன். அதேபோல் வாழ்வியல்பற்றி பல விஷயங்களை அலசுகின்ற எழுத்தாளர் ஜெயமோகன் பற்றியும் கூறவேண்டும். நிறைய படிக்கின்றார். படித்ததுடன் பார்க்கின்றார். சிந்திக்கின்றார். அவருடன் கடிதம் மூலமாக எளிதில் தொடர்பு கொள்ள முடிகின்றது. இன்னும் தேடலை அவர் நிறுத்தவில்லை.

மனிதனுக்குள் ஓர் தவிப்பு. விடை தேடி அலைகின்றான். அப்படிப்பட்ட வர்களைச் சந்தித்து உரையாடுகின்றார். நம்மிடையே ஞானிகள் இருந்தனர். அறிஞர்கள் இருக்கின்றார்கள். பல சிந்தனையாளர்களும் இருக்கின்றார்கள். மனிதர்களுக்கிடையில் எளிமையுடன் பழகி நம் மனக் குழப்பத்தை நீக்குகின்றவர்களில் என் மனத்தில் முக்கியமான இடம் பெற்றிருப்பது எழுத்தாளர் ஜெயமொகன். தற்காலத்தில் அவர் ஓர் வாழ்வியல் வாத்தியார். சாதாரணமானவன் கடிதம் முலமாகக் கேள்வி கேட்டாலும் பதில் தருகின்றார். எளியவர்களுக்கும் இனிய நண்பர். வாழ்வியல் சிக்கல்களை அவரிடம் பேசவும்.

மாற்றுக் கருத்து என்பது பொதுவானது. ஒருவருடைய எல்லாக் கருத்துக் களையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதல்ல. ஆனால் ஒரு எண்ணத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு அதற்கு ஆதரவு தராமல் பேசுபவர்களை, எழுதுகின்றவர்களை அதிகமாக விமர்சிக்கின்றோம். இது ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியதைக் கூடத் திட்டி ஒதுக்குகின்றோம்.

வரலாறுபற்றி அறிய ராமச்சந்திரன் – ஆழ்மனசக்திபற்றி படித்துப் புரிந்து கொள்ள கணேசன், வாழ்வியலைப் புரிந்து கொள்ள ஜெயமோகன் இவர்கள் பெயர்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். இவர்கள் மட்டும்தான் சிறந்தவர்களா என்ற முணுமுணுப்பு கேட்கின்றது. மாற்றுக் கருத்துக்கள் எப்பொழுதும் உண்டு. இன்னும் பலர் இருப்பது தெரியும். எளிமையாக தொடர்பு கொள்ள முடிந்தவர்களைப் பற்றி என் எண்ணங்களைத் தெரிவித்தேன். எழுத்தாளர் ஜெயமோகனுடன் நான் பேசியதில்லை. அது எனக்கு ஓர் மனக்குறைதான். என் வாழ்நாளில் இனி புதியவர்களின் சந்திப்பு கிடையாது. உலக உறவுகளிலிருந்து விரைவில் விடுதலை பெறப் போகின்றவள். இவ்வுலகில் எல்லோரையும் நான் நேசிக்கின்றேன். ஒரு பெண்ணின் பயணம் முடிகின்றது.

காவி உடை உடுத்தியவர் எல்லோரும் துறவியல்ல. வெள்ளைத் துணி உடுத்திய பல சம்சாரிகள் மத்தியிலும் துறவிகளைக் காணலாம். நம் தேடல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். தெரிந்து கொண்டால் போதாது. தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். நாம் முயன்றல் அமைதியும் கிடைக்கும். மனோசக்தியும் கிடைக்கும். முயன்றால் நம்மால் முடியும். தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவும்.

எல்லாம்வல்ல இறைவனிடம் ஓர் வேண்டுகோள்.

எங்கும் பிரச்சனை. எதிலும் பிரச்சனை. இறைவா, எங்களைக் காப்பாற்று. எங்களுக்கு நல்ல வழி காட்டு. திருத்த முடியாத நிலைக்கு நாங்கள் சென்று விட்டோமா ? போதும் துன்பம்.

புது உலகைப் படைத்துக் கொள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

Series Navigationஒரு கவிஞனின் நாட்குறிப்புமுனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

6 Comments

  1. Avatar Adaikalaraj

    சீதாம்மா,

    தங்கள் கட்டுரைத் தொடரை ஆவலுடன் தொடர்ந்து படித்தவன் நான். முடிவுப் பகுதி வரை தங்கள் எழுத்தில் நேர்மை பளிச்சிட்டதையும் சமூக அக்கறையையும் என்னால் உணர முடிகிறது. முடிவில் சிலரை வழிகாட்டியாகக் காட்டி இருக்கிறீர்கள். அதில் என்.கணேசனும், ஜெயமோகனும் அறிந்தவர்கள்.

    என்.கணேசனின் எழுத்துக்கள், அறிவு பூர்வமானவை இதய பூர்வமானவை. அவர் எழுத்துக்கள் படித்து கிடைக்கும் மனப்பக்குவம் அலாதி. கீதை பற்றி எழுதும் தொடரில் குரான், பைபிள் மேற்கோள்கள் கூட சகஜமாய் வரும். மதங்களைக் கடந்த ஆன்மிகவாதி அவர். அவருடைய அமானுஷ்யன் நாவலை நான் பல முறை படித்தவன். தாங்களும் அதைக் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.

    ஜெயமோகன் எழுத்துக்கள் வலிமையானவை. சினிமா வரை சென்று பிரபலமான எழுத்துக்கள். எனக்கு அவர் எழுத்துக்களும் பிடிக்கும்.

    இந்த நல்ல அறிமுகங்களுக்கு நன்றி. மற்றவர்கள் அறியாதவர்கள் என்றாலும் தாங்கள் கூறினால் சரியானவர்களாக தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

    தங்கள் எழுத்துக்கள் இத்துடன் நின்று போகக் கூடாது என்று ஆசைப்படுகிறேன். மருத்துவர்கள் கூட ஆலோசனை கூறி உள்ளதால் இடை இடையே எழுதுங்கள். தாங்கள் நலமுடன் நீண்டு வாழ இந்த எளியவனின் பிரார்த்தனைகள்.

  2. Avatar Sundaram

    சீதாலட்சுமி அம்மாவின் எழுத்துக்கள் இத்துடன் நின்று விடுதல் கூடாது. மேலும் எழுத அவருக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இறைவன் தருவானாக. டிவி சீரியல்களில் மூழ்கி விடும் வயதான பெண்களுக்கு மத்தியில் தன் அனுபவங்களை வரலாற்றுப் பதிவாக எழுதியதற்குப் பாராட்ட அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

  3. அன்புள்ள சீதா, வாழ்வியல் வரலாறு கடைசிப் பக்கம் படித்து மகிழ்ந்தேன் என்று கூறுவதைவிட மனமுருகினேன் என்று சொல்வதே மேல். அவ்வளவு உருக்கம் ! உங்களின் வாழ்கையின் முக்கிய பகுதியை எடுத்துச் சொல்லி அதன் மூலம் பல்வேறு உண்மைகளை எடுத்தியம்பியுள்ள விதம் பயன்மிக்கது. குறிப்பாக நம் ஒவ்வொருவரின் ஆழ் மனத்தில் இறைவனின் சக்தி உள்ளது என்று சொல்லி அதைக் கண்டு கொண்டு செயல்படுவததே மனிதப் பண்பு என்பது முற்றிலும் உண்மையே. துன்பம் நேரும் போதெல்லாம் இறைவனின் வழிகாட்டுதல் ஏதாவது ரூபத்தில் வந்து நம்மைக் காக்கின்றது என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுதல்கள் மூலமாக நன்கு விளக்கியுள்ளீர்கள் இறைவன் பற்றி நீங்கள் சொல்லியுள்ளது உண்மையே. ஒரே இறைவனைதான் .நாம் வெவ்வேறு பெயர்களில் போட்டி போட்டுக்கொண்டு வழி பட்டு வருகிறோம்.ஆனால் இந்த உண்மையை உலக மதங்கள் ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் நிச்சயமாகக் கிடையாது. ஏன் தெரியுமா ?

    அப்படிச் செய்தால் பலரின் பிழைப்பு கெடும்! கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவரின் முகத் திரை கிழியும்! மூடத் தனமான சமய சாங்கியங்களை வைத்து வியாபாரம் நடத்துவோரின் வருமானம் கெடும்!

    இன்று ஒரே மதத்தில் பல பிரிவுகள் உள்ளதற்கும், பற்பல விளக்கங்கள் தரப்படுவதும் அனைத்துமே முழுக்க முழுக்க வியாபார நோக்குடன்தான்!

    திருவிழாக்கள், பூஜைகள், சடங்குகள், சாங்கியங்கள் அனைத்துமே இன்று வியாபாரமாகிவிட்டன! அப்போது பேரங்காடிகளில் வியாபாரங்கள் பெருகுகின்றன! எதற்குக் கொண்டாடுகிறோம் என்றுகூட தெரியாமல் விழாக் காலங்களில் புத்தாடைகளிலும், விருந்துகளிலும், குடியிலும், கொண்டாட்டங்களிலும் களித்து மகிழ்கிறோம்.
    இன்று உலக மக்களுக்கு இன்றியமையாதது கல்வி ஒன்றே. முறையான கல்வி கற்றால்தான் நம் மக்களின் நிலை உயரும். இல்லையேல் அறியாமையில்தான் நாம் இன்னும் மூழ்கிப்போவோம்.

    ” தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

    கற்றனைத்து ஊறும் அறிவு . ” என்றாரே வள்ளுவர்.

    அதுபோல் , ” அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

    என்னுடைய ரேனும் இலர் .” என்பதற்க்கேற்ப அறிவு இருந்தால்தான் ஆன்மீகமும் வளரும் .இல்லையேல் வெறும் ஆட்டு மந்தைகள்தான்!
    நீங்கள் கற்ற கல்வியும், பெற்ற அனுபவங்களும், இன்று எண்ணங்களும் எழுத்துகளாகவும் திண்ணையில் வெளிவந்து பலருக்குப் பயன்படுகின்றது.

    திண்ணையில் கடந்த சில மாதங்களாக உங்களுடன் பிரயாணம் செய்தது பயன்மிக்கதாய் அமைந்திருந்தது.

    இத்துடன் எழுதுவதை நிறுத்தப் போவதாகச் சொல்லியுள்ளது வேதனை தருகிறது.

    மருத்துவர்கள் சொல்லியுள்ளபடி மனதாலும் உடலாலும் வயது காரணமாக முடங்கி விடாமல் என்றும்போல் சுறுசுறுப்பாகவே நீங்கள் இயங்கி தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் உங்களின் எழுத்துக்கள் மூலமாக தொடர்ந்து சேவை புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன். நன்றி! …டாக்டர் ஜி.ஜான்சன்.

  4. சீதாலட்சுமி அம்மாள் அவர்கள் நலம்பெற்று நீண்டநாள் வாழ்ந்திட எல்லாம் வல்ல அன்னை-அரவிந்தரை வேண்டுகின்றேன். அவருடைய எழுத்து கனமுள்ள எழுத்து. அரிதான எழுத்து. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா

  5. Avatar Muruganandham

    இறைவன் அருளை மறந்து விட்டு பணத்தின் பின் ஓடுகிறது உலகம். அதனால் தான் இவ்வளவு பிரச்னைகள். தங்களைப் போன்றோர் எழுத்துக்கள் மனிதகுலத்திற்கு வழி காட்டட்டும். கட்டுரைகள் மூலம் சொல்வது புரிவதை விட கதைகள் மூலம் எளிதாக மக்களுக்கு புரிகிறது. தாங்கள் பரிந்துரை செய்த இரண்டு எழுத்தாளர்களும் அதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். எப்படியோ மனிதன் மாறினால் சரி.

    எழுதுகிற கை நிற்காது என்பார்கள். நீங்கள் முடிந்த வரை நல்லதை எழுதிக் கொண்டே இருங்கள். நன்றி.

  6. Avatar IIM Ganapathi Raman

    இப்படிப்பட்ட தலைப்பு வைக்கப்படக்கூடாது. On first seeing it, I was shocked.

    இசை நிகழ்ச்சியில் கூட இறுதியில் மங்களம்தான் பாடுவார்கள். Why? No one should leave the hall with the feeling of something has ended never to return.

    கடைசிப்பக்கம் என்பதெல்லாம் அபசகுனம்.

    Euphemisms are generously used in Tamil language. The author could have traced one such euphemism for her title.

    //“நீ சாக நினைத்தாலும் அது நடக்காது. நீ உனக்காகப் பிறக்கவில்லை.மற்றவர் கஷ்டங்களைப் போக்க, ஊர்ப்பணி செய்யப் பிறந்தவள். உனக்கு பிள்ளைக் குழந்தை பிறக்கும். ஊனம் கிடையாது என்பது மட்டுமல்ல நன்றாகப் படித்து ஓஹோ என்றிருப்பான். எதுவும் உன் கையில் இல்லை. உன்னை ஆட்டி வைப்பவன் அவன். சாப்பிடு//

    Very important instructions. Pl take note again.

    Madam Seethalakshmi, the alumni of St Marys College, Tuticorin, the friend of great spiritualists like Rev Bishop Fr Thomas Fdo., and the Rishi Sivananda, and came from the same soil where the towering Tamil poet walked and got inspired – has more and more to pass on to us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *