மட்டக்களப்பில் வைத்து

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 19 of 29 in the series 12 மே 2013

 

மஞ்சுள வெடிவர்தன

தமிழில் – ஃபஹீமாஜஹான்

தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…

 

களப்பில் எப்போதேனும் அலையெழும்.

வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து

நெஞ்சில் அடித்தழுது

தடதடவென்று செட்டைகளை அசைத்து

வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி

நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்

உறுதியான கணமொன்றில் மாத்திரமே

 

தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்

களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

 

கல்லடிப்பாலம்

அரண் போல உயர்ந்து எழுந்தாலும்

தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து

புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்

ஓர் தந்தையைப் போல

 

சிந்தனை மறந்த வாகனங்கள்

பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்

அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை

களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

 

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.

ஆழ்ந்த விழிகளால் மெளனித்து

எல்லாத் துயரங்களையும் தாங்கும்

முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்

எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்

களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

 

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயா கூட – வெறும்

சுண்ணாம்பாய்க் களத்தினுள் கரைகிறது,

புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்

இருளாயே இங்கு விடிகிறது.

வசந்தம் உதயமானாலும் உதிக்க மறக்கிறதா சூரியன்?

இது கிழக்கு!

 

– மஞ்சுள வெடிவர்தன

தமிழில் – ஃபஹீமாஜஹான்

Series Navigationஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    “இந்தக் களப்பு, அம்மாவைப் போன்றது” என்பதிலேயே எல்லாம் அடங்கிவிடுகின்றன. மஞ்சுள வெடிவர்தன-வின் கவிதைக்கு ஃபஹீமா ஜஹானின் மொழிபெயர்ப்பு அழகான ஒன்று. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *