மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி

author
4
0 minutes, 17 seconds Read
This entry is part 2 of 29 in the series 12 மே 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்

பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

* காரணமற்ற மாதவிலக்கு வலி – Primary Dysmenorrhoea

50 சதவிகிதத்தினருக்கு இந்த ரக வலிதான் உண்டாகிறது.இவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு வலி கடுமையாக இருக்கும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு இந்த ரக வலிதான் ஏற்படுவதுண்டு. இவர்கள் திருமணமாகி கர்ப்பம் தரித்தபின் இந்த வலி இல்லாமல்கூட போகலாம்.

இந்த வலி உண்டாக முக்கிய காரணமாகத் திகழ்வது புரோஸ்டகிலண்டின் ( Prostaglandin } எனும் ஹார்மோன். இது மாதவிலக்கின் போதும், பிரசவத்தின் போதும் கருப்பையின் தசைகளை அழுத்தி சுருங்கவைப்பது ‘.

 

கருப்பை இவ்வாறு அழுத்தி சுருங்கும்பொது அதன் சுவற்றின் தசைகளின் தமனிகளில் இரத்த ஓட்டம் குறைவு படுவதால் இந்த வலி உண்டாகிறது.

மாதவிலக்கின்போது சினை முட்டை ( ovum ) வெளியேறும் போதும் சிலருக்கு வலி உண்டாகும்.

மாதவிலக்கின்போது இரத்தமும் ,உடைப்பட்ட கருப்பையும் உட்சுவரின் பகுதிகளும் குறுகலான கருப்பை வாயின் ( cervix ) வழியாக வெளியேற நேர்ந்தால் வலி உண்டாகும்.

கருப்பை பின்னோக்கி சாய்ந்து அமைந்திருந்தால் ( retroverted uterus ) வலி உண்டாகும்.

போதுமான உடற்பயிற்சி இல்லையெனினும் வலி ஏற்படும்.

அதிகமான மன உளைச்சலினாலும் ( stress) வலி ஏற்படலாம்.மாதவிலக்கு வந்தபின் வலி, அசதி காரணமாகவும் மனஉளைச்சல் அதிகமாகி எரிச்சல், கோபம், படபடப்பு போன்றவையும் பெண்களிடம் காணப்படலாம்.ஒரு சிலருக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் ஒரு சில நாட்களிலேயே அதிகே கோபம், ஆத்திரம், ஆவேசம் , சோகம் , அழுகை போன்ற மனநிலை மாற்றங்கள் உண்டாகி மாதவிலக்கு வந்தபின் குறையும். இதை மாதவிலக்கு முன் தொன்றும் நோய்க்குறியம் ( premenstrual syndrome ) எனலாம்.

 

* வேறு காரணத்தினால் ஏற்படும் மாதவிலக்கு வலி – Secondary Dysmenorrhoea .

இவற்றில் முக்கிய காரணங்கள் வருமாறு:

* தசைநார்க் கட்டிகள் – ( Fibroids )

இந்த கட்டிகள் கருப்பைக்குள் வளர்பவை. இவை புற்று நோய் வகை அல்ல. இந்த கட்டிகள் இருந்தால் அதிகமான இரத்தப் போக்கும், அதிக வலியும் உண்டாகும். அதோடு அடி வயிறு வலி , அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல், இடுப்பு வலி போன்ற இதர பிரச்னைகளும் எழும். இந்த கட்டி உள்ளதை ஸ்கேன் பரிசோதனை மூலமாகக் கண்டறிந்த பின்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படவேண்டும்.

* பாலியல் நோய்கள் தொற்று – ( sexually transmitted infection ).

இவற்றில் கொனோரியா ( gonorrhoea ), சிபிலிஸ் ( syphilis ), ஹெர்ப்பீஸ் ( herpes ) , எச். ஐ . வி .,( H.I.V.)போன்ற நோய்கள் அடங்கும். இந்த நோய்கள் கருப்பையிலும், கருப்பை வாயிலிலும் அழற்சியும் புண்ணும் உண்டாவதால் வலி ஏற்படும்.இவற்றை இரத்தப் பரிசோதனைகள் மூலமும், வெள்ளைப் போக்கு பரிசோதனை மூலமாகவும் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள லாம். இவை அனைத்துமே உடல் உறவின் மூலம் பரவுபவை என்பது குறிப்பிடத் தக்கது.

* புற கருப்பை வளர்ச்சி – ( endometriosis ).கருப்பையின் உட்சுவர் போன்ற திசுக்கள் கருப்பைக்கு வெளியில் வேறு பகுதிகளில் வளர்வதை புற கருப்பை வளர்ச்சி என்கிறோம். இவை கருப்பை உட்சுவர் போலவே வளர்ச்சியுற்று மாதம் ஒரு முறை உடைந்து இரத்தப் போக்கை வெளியேற்றும் ..இந்த இரத்தம் அப் பகுதிலேயே தங்க நேரிடும்.இதனால் கடும் அடி வயிற்று வலி உண்டாகும். கரு தரிக்காத பெண்களில் 20 முதல் 80 சத விகித பெண்களுக்கு இப் பிரச்னை இருக்கும். நீண்ட நாட்கள் அடி வயிறு வலி உள்ள பெண்களில் 80 சத விகிதத்தினருக்கும் இதுவே காரணமாகலாம். லேப்பரோஸ்கோப்பி ( laparoscopy ) கருவி மூலம் இதைக் கண்டு பிடித்து அக் கருவியின் உதவியோடு இவற்றை அகற்றலாம்.

* கருப்பை ,சினைப்பை கருப்பை நுழைவாயில். சினைக் குழாய் ஆகிய உறுப்புகளில் அழற்சி. – ( Pelvic inflammatory disease )

இந்த உறுப்புகளில் கிருமிகள் தொற்றினால் அழற்சி உண்டானால் அதனால் வீக்கம் உண்டாகி வலியை உண்டுபண்ணும்.

* சினைப்பைக் கட்டிகள் = ( Ovarian cyst )

சினைப் பையில் நீர்க் கட்டிகளும் இதர புற்று நோயற்ற கட்டிகளும் வளரலாம்.இதனாலும் வலி உண்டாகலாம்.இவற்றை ஸ்கேன் மூலம் கண்டு அறுவை சிகிச்சை மூலம் அப்புறப் படுத்தலாம்.

* கருத்தடைச் சாதனங்கள் ( intra uterine devices )

கருத்தடைச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ள சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது கடும் வலி உண்டாகலாம். இது தவிர்க்க இயலாதது.

மாதவிலக்கு வலியின் இதர அறிகுறிகள் :

* குமட்டல்

* வாந்தி

* வயிற்றுப்போக்கு

* உடல் வலி

மாதவிலக்கு வலி தொடங்கியதும் 24 மணி நேரத்தில் வலி அதிகமாகி 3 நாட்களில் குறையும். இரத்தம் கட்டியாக வெளியேறினால் வலி அதிகரிக்கும்.

மாதவிலக்கு வலிக்கான சிகிச்சை முறைகள் :

* ஸ்டீராய்ட் இல்லாத வலி நிவாரணி மாத்திரைகள் – non – steroidal anti – inflammatory drugs )

celebrex , ibuprofen , indocin . diclofenac , aspirin , naproxen போன்ற மாத்திரைகள் வலி நிவாரணம் தரும்.

 

* ஒரு சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் பயன் படலாம்.இதை மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது நல்லது.

* அதிகமான இனிப்பு, காப்பி ,தேநீர் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

* வயிற்றுப் பகுதியில் சூடான ஒத்தடம் தரலாம்.

* வலியை உண்டுபண்ணும் காரணம் கண்டுபிடித்தபின் அதை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தலாம்.

( முடிந்தது)

Series Navigationபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    வாணிஜெயம் says:

    தெளிவான விளக்கம்.பயனான தங்களது கட்டுரைகள் தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள வாணி, பாராட்டுக்கு நன்றி. உங்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். மருத்துவக் கட்டுரைகள் தொடரும்…அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    மார்கிரேட் சின்னப்பன் says:

    கலைசொற்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிறைய புதிய அருஞ்சொற்களைக் கற்றுக் கொண்டேன். தொடரட்டும் உங்கள் தமிழ் மருத்துவத் தொண்டு…வாழ்த்துக்கள் ஐயா.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள மார்கிரெட் சின்னப்பன் அவர்களுக்கு வணக்கம்.கூடியமட்டும் தமிழ்க் கலைச் சொற்களை மருத்துவக் கட்டுரையில் எழுதி அவற்றை வழக்கில் கொண்டுவரவேண்டும் என்பது என் அவா. அதைக் கண்டுபிடித்து பாராட்டியுள்ள உங்களுக்கு நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *